மீண்டும் ஒரு நூல் அறிமுக விழா கடந்த வாரம் சனிக்கிழமையன்று (23.06.2018) ஈஸ்ட்ஹாம் இல் உள்ள Trinity Centre இல் நடைபெற்றது. கௌசல்யா சுப்ரமணியனின் ‘இசைத்தமிழ் சிந்தனைகள்’ ‘தமிழ் இசைப்பாடல் வகைகள்’ என்ற இரு நூல்களே அவை. இசை பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ரசிப்பதுடன் சரி. இப்போது கொஞ்சம் எனது வாசிப்பு எல்லைகளை விரிவு படுத்திய காரணத்தினால் இசையை ரசிப்பது என்பதுவும் அறவே இல்லாமல் போய்விட்டது. எனவே வேண்டா வெறுப்பாகத்தான் அரங்கில் போய் உட்கார்ந்தேன். 4 மணிக்கு ஆரம்பமாக வேண்டிய நிகழ்வு மிகவும் தாமதமாக 6 மணிக்கே ஆரம்பமாகியது. இந்நிகழ்ச்சியின் இறுதியில் பேராசிரியர் நா.சுப்பிரமணியம் அவர்கள் ‘ஒரு கால கட்டத்து நாவல்கள்’ என்ற தலைப்பில் பேசுவதாக இருந்தது. எனவே அவர் உரையைச் செவி மடுப்பதே எனது நோக்கமாக இருந்தது.
நிகழ்விற்கு தலைமை வகித்த திரு.மு. நித்தியானந்தன் அவர்கள் ‘இசை என்பது ஒரு அற்புதமான உலகம். ஆயினும் எனக்கு அதனுடன் எந்த வித பரிச்சயமும் இல்லை’ என்று கூறி விட்டு பல்வேறு விதமான தகவல்களுடன் ஆச்சரியப்படத்தக்க வகையில் இசை உலகின் வெவ்வேறு மூலைகளுக்கு எம்மை இட்டுச்சென்றார். அடுத்து உரையாற்றிய ‘தமிழ்த்திரை இசையில் ராகங்கள்’ நூலின் ஆசிரியரும் ஒவியருமாகிய த.சௌந்தர் அவர்கள் தகவல்களால் நிரம்பி வழியும் இந்நூல் குறித்த உரையினை தயாரிப்பதற்கு தான் பட்ட சிரமங்களை கூறி சிலப்பதிகார காலத்தில் ஆரம்பித்து பக்தி இலக்கிய காலங்களைக் கடந்து இன்றைய காலம் வரையான இசையின் வரலாறு பற்றிய இவ்வளவு தகவல்களையும் சேகரித்து இந்நூலினை எழுதிய கௌசல்யா சுப்ரமணியனின் கடும் உழைப்பினை சிலாகித்துப் பேசினார். இந்த நூல் மட்டும் நான்கைந்து வருடங்களுக்கு முன்பு தனது கையில் கிடைத்திருந்தால் தான் எழுதிய நூலை இன்னும் சிறப்பாக எழுதியிருப்பேன் என்று ஆறேழு தடவைகள் மீண்டும் மீண்டும் உணர்ச்சி வசப்பட்டுக் கூறினார்.
அடுத்து ‘இசைத்தமிழ் சிந்தனைகள்’ நூல் குறித்து த.ஜெகதீஸ்வரம்பிள்ளை ஒரு அற்புதமான நீண்ட உரையொன்றினை ஆற்றினார். இந்நூலின் சிறப்பு குறித்து பேசிய அவர் இங்கு புலப்பெயர் சூழலில் இசைகள் குறித்தும் கலைகள் குறித்தும் இடப்பெறும் அவலங்கள் பற்றி எடுத்துரைத்தார். இங்குள்ள சங்கீத ஆசிரியர்களுக்கே இசை பற்றிய போதுமான அறிவு இல்லையென்றும் நடைபெறும் விழாக்கள் அனைத்துமே கலைத்துவ அர்ப்பணிப்பு எதுவுமின்றி வெறும் ஆடப்பரங்களுக்கும் ஆடை மாற்றுதலுக்குமே முக்கியத்துவம் கொடுப்பதாக கடிந்து கொண்டார்.
அங்கு பேசிய அனைவருமே ஆபிரகாம் பண்டிதர் எழுதிய ‘கர்ணாமிர்த சாகரம்’ நூலின் சிறப்பு குறித்து அதீதமாக சிலாகித்து பேசினர். மு.நித்தியானந்தன் தனது தொடருரையில் விபுலானந்த அடிகளார் தனது யாழ் நூலில் ஆபிரகாம் பண்டிதர் குறித்தும் அவரது ‘கர்ணாமிர்த சாகரம்’ நூல் குறித்தும் எதுவும் குறிப்பிடாமல் இருட்டடிப்புச் செய்துள்ளதாக குறிப்பிட்டார். மேலும் அவர் தமிழிசையின் மும்மூர்திகள் அருணாசலக்கவிராயர், மாரி முத்தாப்பிள்ளை, முத்துத்தாண்டவர் மூவருக்கும் போட்டியாயகவும் நகலாகவும் அவர்களை இருட்டடிப்புச் செய்து கர்நாடக் சங்கீதத்தில் ஷியாமா சாஸ்திரிகள், தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர் என்ற மும்மூர்த்திகள் அறிமுகப்படுத்தப் பட்டனர் என்ற தகவலை வழங்கினார். அத்துடன் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கர்நாடக இசைக்கு எதிராக எழுந்த தமிழிசை இயக்கம் பற்றி நூலாசிரியர் எதுவும் குறிப்பிடவில்லை என்ற விமர்சனத்தை வைத்தார். தனது ஏற்புரையில் அதற்கு பதிலளித்த கௌசல்யா சுப்பிரமணியன் தான் இப்போது ஒரு நூல் எழுதி வருவதாகவும் அந்நூலில் தமிழிசை மீட்பு இயக்கம் குறித்து விரிவாக எழுத உள்ளதாகவும் குறிப்பிட்டார். போதிய நேரமின்மையால் பேராசிரியர் நா. சுப்பிரமணியன் அவர்கள் ‘ஒரு கால கட்டத்து நாவல்கள்’ குறித்து ஒரு சிறிய உரையினை மட்டுமே நிகழ்த்தினார். ஆனால் அவ் உரையினைச் செவி மடுக்கும் நிலையில் நான் இல்லை. இசை உலகின் இருண்ட அறைகளுக்கும் அதன் இரகசிய மூலைகளுக்கும் போய் வந்த பரவசத்தில், அதில் இருந்து இன்னமும் மீள முடியாத நிலையில் நான் இருந்தேன்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.