நண்பர்களே இயக்குனர் பாலுமகேந்திரா அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த தினமான மே 19ஆம் தேதி, பாலுமகேந்திரா பெயரில் விருது ஒன்றை நிறுவி ஒவ்வொரு ஆண்டும் குறும்பட கலைஞர்களுக்கு வழங்கி வருகிறது தமிழ் ஸ்டுடியோ. ஐந்தாம் ஆண்டாக இந்த குறும்படப்போட்டி நடைபெறுகிறது.
விருதுத் தொகை: ஒரு ரோஜா பூ மட்டும் /-
(பாலுமகேந்திரா விருது விழாவில் சிறந்த இயக்கம், ஒளிப்பதிவு, ஒலியமைப்பு, படத்தொகுப்பு, நடிப்பு உள்ளிட்ட மொத்தம் பத்து பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும். பாலுமகேந்திரா விருது குறும்படங்களை ஒரு இயக்கமாக, குறும்படங்களை மாற்று சினிமாவிற்கான களமாக மாற்றவே உருவாக்கப்பட்டது. எனவே மற்ற குறும்படப்போட்டிகளை போல் பாலுமகேந்திரா விருது நிகழாது. தொடர்ந்து குறும்படங்கள் எடுக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் குறும்படங்கள் சார்ந்து பணியாற்ற வேண்டும். அதனை ஒரு அலையாக செயல்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும் என்கிற அடிப்படையில் இவ்விருது உருவாக்கப்பட்டுள்ளது. எனவே தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாலுமகேந்திரா விருது விழாவில் பங்கேற்று ஏதேனும் ஒரு பிரிவிலாவது பரிசு பெரும் திரைக்கலைஞர், நான்காவது ஆண்டும் பங்கேற்று ஏதேனும் ஒரு பிரிவில் விருது பெற்றால் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்படும். ஆனால் இடையில் ஒரு வருடம் இடைவெளி ஏற்பட்டாலும் பரிசுத்தொகை கிடைக்காது. தொடர்ந்து குறும்படத்துறையில் இயங்க வேண்டும் என்கிற எண்ணத்தை உருவாக்கவே இத்தகைய விதிமுறை உருவாக்கப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கும் சிறந்த குறும்படத்திற்கு பாலுமகேந்திரா பெயரிலான கேடயமும், பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும்.
கலந்துக்கொள்ளும் குறும்படங்களில் இருந்து முதல் சுற்றில் தெரிவு செய்யப்படும் பத்திற்கும் மேற்பட்ட குறும்படங்கள் விருது வழங்கும் நிகழ்வில் திரையிடப்பட்டு ஒரே ஒரு குறும்படம் மட்டுமே விருதுக்குரியதாக தேர்ந்தெடுக்கப்படும். மிக முக்கியமாக விழாவில் திரையிட தேர்வு செய்யப்படும் பத்து குறும்படங்களும் தமிழ் ஸ்டுடியோ ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் நடத்தும் சென்னை சுயாதீன திரைப்பட விழா 2019 க்கு நேரடியாக தகுதி பெரும். சென்னை சுயாதீன திரைப்பட விழா நடைபெறுவதற்கு முன்னரும் குறும்படங்கள் சமர்ப்பிக்க அறிவிப்பு வெளிவரும். ஆனால் அப்போது பாலுமகேந்திரா விருது விழாவில் பங்கேற்று திரையிட தெரிவான பத்து குறும்படங்களை அனுப்ப வேண்டிய தேவையில்லை. அந்த குறும்படங்கள் நேரடியாக IFFC யில் பரிசுக்குரிய பிரிவில் திரையிடப்படும்.
விதிமுறைகள்:
* பாலுமகேந்திரா விருதுக்கு குறும்படங்களை அனுப்ப நுழைவுக் கட்டணம் ரூபாய் 250/- "PADACHURUL" என்கிற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க DD யாக, கீழ்க்கண்ட முகவரிக்கு படங்களோடு சேர்த்து அனுப்ப வேண்டும். காசோலை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. நேரில் பியூர் சினிமா புத்தக அங்காடியில் படத்தை கொடுக்க விரும்புபவர்கள், 250 பணத்தை கொடுத்து அதற்கான ரசீதை பெற்றுக்கொள்ளலாம்.
* குறும்படங்கள் (Short Films) எந்தக் கருப்பொருளிலும் எடுக்கப்பட்டிருக்கலாம்.
* குறும்படங்கள் 30 நிமிடங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
* குறும்படங்கள் டி.வி.டி அல்லது வி.சி.டி. யில் தரமாகப் பதிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.
* இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரம், இணைத்து அனுப்பப்படுதல் வேண்டும்.
* குறும்படத்தின் கதைச் சுருக்கம் (Synopsis), முக்கியக் காட்சிகளின் ஒளிப்படங்கள் (Still Photos) மற்றும் இயக்குநரின் ஒளிப்படம் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.
* முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்படும் குறும்படங்கள், திரைப்படக் கலைஞர்கள் முன்னிலையில் சென்னையில் திரையிடப்பட்டு விருதுக்குரிய குறும்படங்கள் தேர்ந்தெடுக்கப்படும்.
* குறும்படங்கள் 01.01.2013 க்குப் பிறகு எடுக்கப்பட்டனவாக இருத்தல் வேண்டும். ஒருவர் எத்தனை குறும்படங்கள் வேண்டுமானாலும் அனுப்பலாம். ஆனால் ஒரு குறும்படத்திற்கு 250 ரூபாய் நுழைவுக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
* விருது தொடர்பாக நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது. போட்டி தொடர்பாகக் கடிதப் போக்குவரத்துகள், அலைப்பேசி அழைப்புகள் அனுமதிக்கப்படமாட்டாது.
* ஆவணப்படங்கள் (Documentary Films) ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
* தேர்வு செய்யப்படாத குறும்படங்களைத் திருப்பி அனுப்புதல் இயலாது.
* விருது விழா பாலுமகேந்திரா பிறந்த தினமான மே 19ஆம் தேதி நடைபெறும்.
* விருதுக்கு குறும்படங்களை அனுப்ப வேண்டிய கடைசித் தேதி : மே 03, 2018
* குறும்படங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
பியூர் சினிமா புத்தக அங்காடி, எண் 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, சென்னை 600026. விக்ரம் ஸ்டுடியோ எதிரில், வாசன் ஐ கே அருகில்.
குறும்பட விழா தொடர்பாக எவ்வித கடிதப்போக்குவரத்தும், அலைப்பேசி அழைப்பும் தேவையில்லை. படங்களை அனுப்பும்போது உங்கள் முகவரி, அலைப்பேசி எண்களை சரியாக எழுதி அனுப்புங்கள். விருது விழா பற்றிய அறிவிப்பு தமிழ் ஸ்டுடியோ இணையதளத்திலும், முகநூலிலும் வெளிவரும். தவிர படங்களை அனுப்பும் அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் தகவல் தெரிவிக்கப்படும்.
அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
www.thamizhstudio.com
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.