‘ இத்தாலியின் பலர்மோ நகரில் வாழ்கின்ற செல்விகள் செந்தூரன் சந்தியா, அன்ரன் ரோமன் பிரிஸ்ரிக்கா, ஜெயக்குமார் பிரவீனா, அமலராசா அஸ்வின், சிறிகரன் ஸ்ரெவானியா ஆகியோரின் பரதநாட்டிய அரங்க நிகழ்வு ஒரே மேடையில் இடம்பெறுவது பெரும் மகிழ்வைத் தருகின்றது. சிறந்த குருவான ‘நர்த்தன கலாபவன நடனப்பள்ளி’யின் அதிபரான ஸ்ரீமதி லோஜினி திஷரூபனின் பெருமுயற்சியும்; அரங்க நர்த்தகிகளின்;; பெற்றோர்களின் ஒற்றுமையான செயற்பாடுகளுமே இத்தகைய ஒருங்கிணைந்த வெற்றிக்குக் காரணம். நடன நங்கைகளை டிப்ளோமாவரை பயிற்சியளித்து அரங்கேற்றி அந்த மேடையிலேயே பட்டம்பெற வைப்பது என்பது இலகுவான செயலன்று. யாழ்பல்கலைக்கழகத்தில் நாட்டியத்தில் பட்டம் பெற்ற நாட்டியக் கலைமாமணி லோஜினி திஷரூபன் பதினான்கு வருடங்களுக்கு மேலாக பலர்மோவில் நடனப்பள்ளியை நடாத்திய நீண்ட அனுபவமும் பரதக் கலையை வளர்ப்பதில் அவர் கொண்டிருக்கும் ஆர்வத்தையும் இவை எடுத்துக் காட்டுகின்றது’ என்று பலர்மோ நகரில் உள்ள மிகப் பெரும் அரங்கில் இடம்பெற்ற பரதநாட்டிய அரங்க - பட்டமளிப்பு நிகழ்வில், லண்டனில் இருந்து பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்த லண்டன் கீழைத்தேய பரீட்சை நிறுவனத்தின் தலைவி ஸ்ரீமதி அம்பிகா தாமோதரம் அவர்கள் குறிப்பிட்டார்.
மேலும் அவர் பேசுகையில்: ‘ஐந்து நடனமணிகளும் லண்டனில் நான் நிர்வகித்து செயற்பட்டுக்கொண்டிருக்கும் ழுநுடீடு அமைப்பினால் நடாத்தப்படும்; பரீட்சைகளில் பங்குபற்றி அப்பரீட்சைகளில்; சித்தியடைந்து இன்று அதில் பட்டம் பெறுகின்றனர் என்பது என்னை மட்டற்ற மகிழ்ச்சிக்கு உட்படுத்துகின்றது. இன்றைய அரங்கில் அவர்களின்; தரமான உயர்ந்த நாட்டியத்திறமைகளை என்னால் அவதானிக்க முடிகிறது. உணர்வுகளுடன் சேர்ந்த பாவங்களுடன் அபிநயங்களை வெளிப்படுத்தியமை மாத்திரமன்றி, உடைகள் மற்றும் மேடை அலங்காரம் ஆகியவற்றிலும் வரவேற்கத் தகுந்த மாற்றத்தைப் பார்க்க முடிகிறது. நெதர்லாந்திலிருந்து வருகை தந்திருந்த ஸ்ரீ கேசவன் ஹரிகிருஷ்ணனின் கணீரென்ற குரலால் அமைந்த பாடல்கள்; நடன உணர்வுகளை வெளிக்காட்டி அழகு சேர்த்தன. மிருதங்கக் கலாஜோதி ஸ்ரீ பிரணவநாதன் பிரசாந்தின் மிருதங்க வாசிப்பு தாள லயம்கொண்ட பரதத்திற்கு மெருகூட்டி அலாதியாகவிருந்தது. லண்டனில் இருந்து வருகை தந்திருந்த வயலின் வித்துவான் ஸ்ரீ துரை பாலசுப்ரமணியத்தின் வயலினிசை நாட்டியத்திற்கு உயிர் கொடுத்து நாட்டியக் கலாவித்தகர் லோஜினியின் நட்டுவாங்கத்துடன் இணைந்து அழகாக வெளிப்படுத்தியமை பாராட்டுக்குரியவை’ என்றும் பேசியிருந்தார்.
லண்டனிலிருந்து கௌரவ விருந்தினராக வருகை தந்திருந்த ஊடகவியலாளர் நவஜோதி ஜோகரட்னம் உரையாற்றும்போது "இசையும் நடனமும், எழிலும் இனிமையும்; உறவாடும் இந்த இத்தாலியத் திருநகரில் 2வது தடவையாக நான் வந்திருப்பது எனக்கு மிக மகிழ்ச்சியைத் தருகின்றது. இரண்டுமே ஸ்ரீமதி லோஜினி திஷரூபனின் நடன அரங்குகளாக இருந்தது சிறப்பு மிக்க அம்சமாகும். ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் உலகெங்கும் தமது கலாச்சாரம், பண்பாடு, நாகரீகத்தினை செழுமையாக முன்னெடுத்துச் செல்வதில் மிகுந்த அர்ப்பணிப்போடு செயற்பட்டு வருகின்றார்கள். இந்தியாவில் தலைசிறந்த நர்த்தகிகளும், இசைவாணர்களும் லண்டனில் தங்களின் கச்சேரிகளை நடத்துவதில் பெருமை கொள்கிறார்கள். கலைப்பெரும் நகரான பாரீசிலும், ஸ்கன்டிநேவிய நகரான நோர்வேயிலும், ஜேர்மனி, ஹொலன்ட் போன்ற நாடுகளிலும் நடன, இசை நிகழ்வுகள் மிகச் சிறந்த முறையில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இத்தாலியும் இந்த உன்னதர்களுக்குத் தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதைத் தொடர்ந்து நிரூபித்து வந்திருக்கிறார்கள். உலகெங்கும் வியாபித்து பரதநாட்டியம் கீர்த்தி பெற்று வரும் இந்த நிலையில், இந்த மாபெரும் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட நாட்டியமேதை பாலசரஸ்வதியை இங்கு நினைவுகூர விரும்புகிறேன். நடன மரபில் உதிர்த்த பாலசரஸ்வதி பரதநாட்டியத்திற்கு ஒரு செவ்வியல் வடிவம் கொடுத்து உலகெங்கும் அதைப் பரப்பிய நடன அரசியாகத் திகழ்ந்தார். ஆனால் லோஜினி திஷரூபன் போன்றவர்கள் இங்கு தமிழ் இனத்தின் அசல் நடன வாரிசுகளை உருவாக்கி எதிர்காலத்தின் தலைமுறையினர்களின் கைகளில் அழகாக கையளிக்கின்றனர் என்பது பெருமையைக் கொண்டு செல்லும் செய்தியாகும். மிகச் சிறந்த நடன ஆசிரியர்கள் ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளிலும்; பரதநாட்டியத்தைப் பயிலுவித்து வருகின்றனர். இங்கிலாந்தில் மாத்திரம் 50 இற்கும் மேற்பட்ட நடன ஆசிரியர்கள் காணப்படுகின்றனர். பெரும்பாலான ஆசிரியர்கள் இந்தியாவின் நடனப் பள்ளிகளிலே பயின்றவர்கள் ஆவார். நேர்த்தியான ஒரு நடன நிகழ்வை மேடையேற்றுவதில் இந்த நடன ஆசிரியர்கள் காட்டும் அக்கறையைக் குறைத்துக் கூற முடியாது. இதேபோன்று பெற்றோர்கள் தமது குழந்தைகள் நடனப் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்ற பேராவலில் பணத்தையும், உழைப்பையும் செலுத்தி மேற்கொண்டு வரும் பெரும் பணியை மனதாரப் பாராட்டுகின்றேன். தங்களின் அன்றாட பாடசாலை சார்ந்த கல்விச் சுமைகளோடு இந்த பரதநாட்டியப் பயிற்சியையும் அயராது மேற்கொண்டு வரும் மாணவ மணிகளுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டுப் பேசியிருந்தார்.
‘பலர்மோ நகரில் பெற்றோரின் ஒத்துழைப்போடு பெரும் சிரமங்களின் மத்தியில் லோஜினி திசரூபன் இசை நடனக் கலையை வளர்ப்பதில் ஆற்றி வரும் பங்கு அளப்பரியது. பலர்மோவில் மூன்று தமிழ்ப் பாடசாலைகள் இயங்குகின்றன. இதுவரை 36 நடன மணிகளை உருவாக்கி அரங்கேற்றி இருக்கிறார்கள். அதில் ஸ்ரீமதி லோஜினி திஷரூபன் அவர்கள் 14 பரதநாட்டிய அரங்கேற்றங்கள் மூலம் சிறந்த நடன நர்த்தகிகளை பலர்மோவில் உருவாக்கிய பெருமைக்குரியவராகத் திகழ்கின்றார்;. அவரது கண்ணியமான நெறிப்படுத்துதலிலும்; மாணவர்களை ஓர் நுட்பமான சிற்பிபோன்று செதுக்குவதிலும், அவர்களது எண்ணங்களைப் புரிந்துகொண்டு அவர்களோடு உடன் பயணிப்பதிலும், துணைநிற்பதிலும் கைதேர்ந்தவர். ‘நர்த்தன கலாபவனம்’ என்ற அவரது நாட்டியப் பள்ளியினூடாக அவர் செய்யும் பணி சிறப்பானது, பாராட்டுக்குரியவை’ என்று இத்தாலியில் தமிழ் வளர்ச்சியிலும், ஆன்மீகப் பணியிலும் ஆர்வம் கொண்டவரும், ‘பாறை’ என்ற சஞ்சிகையை நடாத்திவரும் இளம் துறவியாகத் திகழும் அருட்பணி விமல் ராஜன் அவர்கள் தனது சிறப்புரையில் குறிப்பிட்டார்.
லண்டன் கீழைத்தேய நுண்கலை அமைப்பின் தலைவி ஸ்ரீமதி அம்பிகா தாமோதரம் அவர்களும் அந்த நுண்கலை அமைப்பின்; அங்கத்தவாரன நவஜோதி ஜோகரட்னமும் ஐந்து மாணவிகளுக்கும்; பட்டமளித்து கௌரவித்திருந்தனர். பலர்மோவின் மிகப் பெரிய மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திரளான மக்களால் அரங்கம் நிறைந்து மிகப் பெரும் கலை விருந்தாக அமைந்ததென்றே கூறவேண்டும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.