அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நேற்று முன்தினம் சனிக்கிழமை மெல்பனில் நடத்திய அனைத்துலக பெண்கள் தினவிழாவில் இளம் தலைமுறையினரும் மூத்த தலைமுறையினரும் சங்கமிக்கும் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. சங்கத்தின் தலைவர் திரு. லெ. முருகபூபதியின் தலைமையில் நடைபெற்ற இவ்விழா, மெல்பனில் பிரஸ்டன் நகர மண்டபத்தில் நடைபெற்றது. மெல்பனில் வதியும் கலை, இலக்கியம் மற்றும் கல்வி சார்ந்த துறைகளில் ஈடுபட்ட மூத்த பெண்மணிகள் மங்கல விளக்கேற்றி விழாவை தொடக்கிவைத்தனர். திருமதிகள் இந்துமதி கதிர்காமநாதன், கனகமணி அம்பலவாண பிள்ளை, மெல்பன் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், ஞானசக்தி நவரட்ணம், செல்வி கமலா வேலுப்பிள்ளை ஆகியோருடன், இவ்விழாவுக்கென சிங்கப்பூரிலிருந்து வருகை தந்திருந்த எழுத்தாளரும் பெண்ணிய செயற்பாட்டாளருமான திருமதி கௌரி அனந்தனும் விளக்கேற்றி வைத்தனர்.
திருமதி ஞானசக்தி நவரட்ணம் இலங்கையில் உரும்பராயைச்சேர்ந்தவர். தமது தாயாரிடமும் பாட்டியாரிடமும் தையல் நுண்கலையை இளமைக்காலத்தில் பயின்றவர். அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த அவர், தாம் பெற்ற அந்தப்பயிற்சியிலிருந்து, இயற்கை, சுற்றுச்சூழல், வீதிப்போக்குவரத்து, மற்றும் குழந்தைகள், தெய்வங்களின் படிமங்களையும் தையல் பின்னல் வேலைப்பாடுகளில் வடிவமைத்துவருபவர். அவரது கைவண்ணத்தில் உருவான படங்கள் இவ்விழாவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. சங்கத்தலைவரின் தொடக்கவுரையையடுத்து திருமதி மங்களம் வாசன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் அவுஸ்திரேலியாவில் நீண்ட காலம் வாழ்ந்து கடந்த 2015 ஆம் ஆண்டு இறுதியில் மறைந்த எழுத்தாளர் திருமதி அருண். விஜயராணியின் "சமூகம் சார்ந்த வாழ்வும் படைப்புலகமும்" என்ற தலைப்பில் செல்வி மோஷிகா பிரேமதாசவும்- " பாரதியும் பெண்விடுதலையும்" என்ற தலைப்பில் செல்வி மதுபாஷினி பாலசண்முகனும் உரையாற்றினர். இந்த இரண்டு மாணவிகளும் கடந்த ஆண்டு இறுதியில் விக்ரோரியா மாநிலத்தில் நடந்த V.C.E பரீட்சை, தமிழ்ப்பாடத்தில் கூடுதல் புள்ளிகள் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வி மோஷிகா பிரேமதாச அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் தமிழ் ஊக்குவிப்பு போட்டிகளில் தனது ஆறு வயதிலிருந்து தங்கப்பதக்கங்கள் வென்றுவருபவர். இதுவரையில் அவர் பத்து தங்கப்பதக்கங்கள் பெற்றிருக்கும் தகவலை நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய திருமதி மங்களம் வாசன் குறிப்பிட்டார். செல்வி மதுபாஷினி பாலசண்முகன் மெல்பன் நகர இளம் எழுத்தாளர் விருது பெற்றவர். ஆங்கில இலக்கியத்திலும் அதேசமயம் தமிழ் இலக்கியத்திலும் பரிச்சியம் மிக்கவர்.
இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தமிழ்ச் சேவைப்பணிப்பாளராக பணியாற்றி, அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து வாழ்ந்த திருமதி பொன்மணி குலசிங்கம் அண்மையில் மெல்பனில் மறைந்தார். அன்னாரின் வாழ்வையும் பணிகளையும் நினைவுகூரும் உரையை இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்திலும் அவுஸ்திரேலியாவில் சில வானொலிகளிலும் ஊடகவியலாளராகவிருந்த திரு. பொன். குமாரலிங்கம் நிகழ்த்தினார். அவர் தமது உரையில் இலங்கை வானொலியில் பொன்மணி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நிகழ்ச்சிகள் பற்றியும் புதிய கலைஞர்களை உருவாக்குவதில் அவர் காண்பித்த தீவிர அக்கறையையும் விதந்து போற்றினார்.
திருமதி கௌரி அனந்தன், பெண்ணியத்தின் புதியபோக்குகள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இவர் ஈழத்தை பூர்வீகமாக கொண்ட படைப்பாளி. இலக்கிய ஈடுபாடு நிறைந்த தேர்ந்த வாசகி. "கனவுகளைத் தேடி" மற்றும் "பெயரிலி" ஆகிய நாவல்களை எழுதியவர். உளவள ஆலோசகராகவும் "ஹிமாலயா கிரியேசன்ஸ்" மற்றும் "எடர்னஸ்" வரையறுக்கப்பட்ட நிறுவனங்களின் நிர்வாக இயக்குனராகவும் பணியாற்றிவருகிறார்.
தற்போது சிங்கப்பூரினை நிரந்தர வதிவிடமாகக்கொண்டிருப்பினும் பணிநிமித்தமாகவும் தனது இலக்கிய முயற்சிகளுக்காகவும் அதிக நேரம் இலங்கையிலேயே தனது காலத்தை முதலிட்டிருப்பவர். "48 மணிநேர குறும்படத் திட்டம்" "மனித உரிமைகளும் சமாதானத்துக்குமான சர்வதேச இராஜாங்க அலுவல்கள் குழுமம்" என்பவற்றின் இலங்கைக்கான பிரதிநிதியாகவும் இயங்குகிறார்.
சமூக வலைத்தளங்களிலும் பெண்கள் சார் இலக்கிய அரங்குகளிலும் பெண்களின் இலக்கியம், பெண்ணியம் மற்றும் அது சார்ந்த தனது கருத்தாய்வுகளை பகிர்ந்துகொள்பவர். இரண்டு மாதங்களுக்கு முன்னரும் கேரளாவில் இடம்பெற்ற பெண்ணியத்தின் புதியபோக்கு மற்றும் தமிழகத்தில் நடைபெற்ற "அயலக தமிழ் இலக்கியப்போக்குகள்" என்ற தலைப்பிலான கருத்தரங்குகளுக்கு சிறப்பு பேச்சாளர்களில் ஒருவராக அழைக்கப்பட்டிருந்தவர்.
பெண்ணிய பாடல் மெல்லிசை அரங்கு
அவுஸ்திரேலியாவில் பல அரங்குகளில் சமூகப்பணிகளுக்கான உதவிகளுக்கு மெல்லிசை நிகழ்ச்சிகளை வழங்கிவரும் மெல்பன் இசைக்கலைஞர்கள் அங்கம் வகிக்கும் மெல்பன் சுருதிலயா இசைப்பள்ளியைச்சேர்ந்தவர்களின் பெண்ணிய பாடல் மெல்லிசை அரங்கினை பாடகி திருமதி சுமதி சத்தியமூர்த்தி தயாரித்து வழங்கினார். திரு. வாசவன் பஞ்சாட்சரம், செல்வன்கள் நிரூஜன் விஜயராகவன், ஹரிஸ்வர் நிர்மலன், செல்வி மயூரி குகதாஸ், அனுஷ்கா நிர்மலன் ஆகியோர் மெல்லிசை அரங்கில் பங்கேற்றனர். பின்னணி இசையை வாசவனும் நிரோஷன் சத்தியமூர்த்தியும் வழங்கினர்.
அவுஸ்திரேலியாவில் பிறந்த குழந்தைகள் தமது இனிமையான மழலைக்குரலில் பாரதியாரின் பெண்விடுதலை சம்பந்தமான பாடல்களைப்பாடி சபையினரை வியக்கவைத்தனர். மெல்பன் நிருத்தா இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் நடனப்பள்ளி மாணவர்களின் நடன நிகழ்ச்சிகள் நடன அரங்கில் இடம்பெற்றன. மெல்பனில் சில மாணவர்களின் பரதநாட்டிய அரங்காற்றுகைகளை நடத்தியிருக்கும் நர்த்தகி ஶ்ரீமதி நிருத்தா தர்மகுலேந்திரன் இந்நிகழ்ச்சியை தயாரித்து வழங்கினார். செல்விகள் மினாடி கஜாமன், நெஹா ஜோன்ஸ், ஜோஸ்த்னா ரஞ்சித்குமார், ஸ்ரெஃபனி வீரசிங்ஹ ஆகிய இளம் கலைஞர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். பெண்கள் வேலைக்குச்செல்வது சுமையா...? சுகமா...? என்னும் தலைப்பில் இடம்பெற்ற பட்டிமன்றத்தில் அணி 01 இல் திரு. எம். ருத்ராபதி, திருமதி எம். அபிராமி ஆகியோரும் அணி 02 இல் திரு. ஜெ. ஜெயகாந்தன், செல்வி ஜெ. கீர்த்தனா ஆகியோரும் வாதிட்டனர். திரு. எஸ். பொன்னரசு இந்நிகழ்ச்சியின் நடுவருக்கான உரையை நிகழ்த்தினார். சுவாரஸ்யமான இந்நிகழ்ச்சியில் வாதிட்டவர்கள் தமது வாதத்திறமைய வெளிப்படுத்தியமையால் சபை களைகட்டியது. மூத்த தலைமுறையினரும் இளம் தலைமுறையினரும் தத்தம் பேச்சாற்றல், இசையாற்றல், நடன ஆற்றலை ஓரிடத்தில் சங்கமிக்கச்செய்த நிகழ்வாக இம்முறை அனைத்துலக பெண்கள் தினவிழா நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சிகளை திருமதி பானுஶ்ரீ கௌரிசங்கர் தொகுத்து அறிவித்தார். சங்கத்தின் துணைச்செயலாளர் திரு. இரகுபதி பால ஶ்ரீதரன் நன்றி நவின்றார்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.