ஈழத்தின் அதிமூத்த எழுத்தாளரும் ஓய்வு பெற்ற ஆசிரியருமான குறமகள் என அழைக்கப்படும் வள்ளிநாயகி இராமலிங்கம் அவர்கள் நேற்று செப்டம்பர் 15 ஆம் திகதி ரொறன்ரோவில் காலமானார். புனைகதை எழுத்தாளர் கவிஞர் வானொலி – மேடைப் பேச்சாளர் விமர்சகர் ஆய்வாளர் விவாத அரங்கு மேலாளர் நடிகர் நாடகவியலாளர் இனப்பற்றாளர் சமூக சேவையாளர் என்று பல தளங்களை வெற்றிகரமாகச் சந்தித்த இவர் இலங்கையில் 27 வருடங்கள் பாடசாலை ஆசிரியராகவும் எட்டு வருடங்கள் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். பெண் எழுத்தாளர்களுள் மிக முக்கியமான ஒருவராக மதிப்புப் பெற்ற இவரே கனடாவில் இலக்கிய பொன்விழா கண்ட ஒரேயொரு தமிழ் எழுத்தாளர். 1994 ஆம் ஆண்டு இவரது இலக்கியப் பணிகளை மதித்து தமிழர் தகவலால் விருதுடன் தங்கப் பதக்கம் சூட்டி இவருக்கு சிறப்புச் செய்யப்பட்டது. நான்காண்டுகளுக்கு முன்னர் வைரவிழா கண்ட இவர் காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கடந்த 25 ஆண்டுகளாக கனடாவிலுள்ள பல பொது அமைப்புகளில் பிரதான பதவி வகித்து புகழ் பெற்ற குறமகளுக்கு நான்கு பிள்ளைகள் உண்டு. அவர்களின் ஒருவரான ரோசா மாவீரரானவர். இறுதிச் சடங்குகள் பற்றிய விபரங்களுக்கு 905-274-1136 அல்லது 647-878-2451 தொடர்பு கொள்ளலாம்.
தகவல்: லெ.முருகபூபதி -