கரவை மு. தயாளன் எழுதிய 'சில மனிதர்களும் சில நியாயங்களும்' என்ற நாவலும் எனது பேனாவிலிருந்து என்னும் கதைகள், கட்டுரைகள், கவிதைகள் நாடகம் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கதைகள், கவிதைகள் முதலானவற்றை உள்ளடக்கமாகக்கொண்டுள்ள தொகுப்பு நூலும் அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத்தில் மெல்பனில் Dandenong North Senior Citizens Centre ( 41 A, Latham Crescent, Dandenong North , Victoria 3175) மண்டபத்தில் நாளை சனிக்கிழமை மாலை 3.30 மணியிலிருந்து 7.00 மணிவரையில் நடைபெறும்.
நூலாசிரியர் கரவை மு.தயாளன் லண்டனில் கல்வி, கலை இலக்கிய, சமூகப்பணிகளில் ஈடுபாடுள்ளவர். ஏற்கனவே கடல் கடந்து போனவர்கள் என்னும் நாவலையும் மண்ணில் தெரியுது வானம் என்னும் கட்டுரைத்தொகுப்பையும் வெளியிட்டிருப்பவர். நாளை மெல்பனில் அறிமுகமாகவுள்ள 'சில மனிதர்களும் சில நியாயங்களும்' என்ற நாவல் தொடர்கதையாக லண்டன் தமிழர் தகவல் இதழில் வெளியாகியிருக்கிறது. பின்னர், இலங்கையில் தினகரன் வாரமஞ்சரியிலும் லண்டனில் பார்வைகள் என்னும் இதழிலும் தொடராக வெளிவந்துள்ளது.
"இந்த நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து சென்று லண்டனில் குடியேறியவர்களையும் அவர்களின் வாரிசுகளான அடுத்த சந்ததியினரையும் பாத்திரங்களாகக்கொண்டு இந்நாவல் படைக்கப்பட்டிருக்கிறது. இங்கிருந்து புலம்பெயர்ந்து சென்றவர்களின் மூலவேர், அவர்கள் பிறந்த தாய் நாட்டு மண்ணிலேயே இன்றும் ஆழப்பதிந்திருக்கின்றது. ஆதனால் புலம்பெயர்ந்து வாழும் நாட்டு மண்ணுடன் முழுமையாக ஒன்றிக்க முடியாத அவலங்களுக்கும் ஆளாகின்றனர். அவர்களது வாரிசுகளின் வாழ்வும் சிந்தனையும் புலம்பெயர்ந்த நாட்டு மண்ணுடன் இசைவாக்கம் பெறுகின்றன. அதனால் இரண்டு தலைமுறையிலும் நடவடிக்கையிலும் முரண்பாடுகள் தோன்றுவது இயல்பு. அந்த முரண் நிலையை இந்த நாவல் சித்திரிக்கிறது " இவ்வாறு இந்நாவல் பற்றிய தனது மதிப்பீட்டை ஈழத்தின் மூத்த படைப்பாளி தெணியான் பதிவுசெய்துள்ளார்.
புலம்பெயர் வாழ்வியலோடு கூடிய தொடர்புகொண்ட தமது வாழ்க்கைப் பின்புலத்தில் எழுதத்தூண்டிய கதைகள், கட்டுரைகள், கவிதைகளைக்கொண்ட தொகுப்பாக எனது போனவிலிருந்து என்ற நூலை வரவாக்கியிருக்கும் கரவை மு. தயாளன், அரசியலோடு இணைந்த சமூக வெளிப்பாடும் சமூகத்தோடிணைந்த படைப்புகளின் வெளிக்கொணரலும் இத்தொகுப்பின் உயிர்நாடி எனக்கொள்ளலாம். உலகம் பிரசவித்த பல தத்துவங்களின் உள்வாங்கல் இத்தொகுப்பின் படைப்புகளில் உள்வாங்கப்பட்டுள்ளன. முற்போக்கு வாதம் பிற்போக்கு வாதம் நற்போக்கு வாதம் என்ற வாத நிர்ணயங்களிலிருந்து வேறுபட்டு அப்பாற் சென்று சமூகத்தைப்பற்றிய பார்வைகளை மேலும் அகலமாக்கி அவ்வப்போது இயல்பாகவே சமூகத்தை எவ்வித அழுத்தங்களுக்குள்ளும் அகப்படுத்தாது சுகமே பிரசவிக்கப்பட்ட படைப்புகளாகவே வெளியாகியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்நூல்களின் அறிமுகவிழாவில் மெல்பன் 3 CR தமிழ்க்குரல் வானொலி ஊடகவியலாளர் சண்முகம் சபேசன், எழுத்தாளர்கள் திருச்செந்தூரன், தமிழ்ப்பொடியன் ரமணன், ஜனந்தன் ஆகியோர் உரையாற்றுவர்.நூல்களின் முதல் பிரதிகளை மூத்த கலைஞர் அண்ணாவியார் இளையபத்மநாதன் பெற்றுக்கொள்வார். நூல்களின் ஆசிரியர் கரவை மு. தயாளன் நிகழ்ச்சியின் இறுதியில் ஏற்புரையும் நன்றியுரையும் வழங்குவார். இவ்விழாவை கலை இலக்கிய ஆர்வலர் க. ஸ்ரீபாலன் ஒழுங்குசெய்துள்ளார். கலை, இலக்கிய ஆர்வலர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.