உயிர்ப்பு பெண்கள் நாடகப் பட்டறையின் ஜந்தாவது மேடையேற்றம் மார்ச் மாதம் 5ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறுகின்றது. 2006ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட உயிர்ப்பு பெண்கள் நாடகப் பட்டறை இதுவரையில் நான்கு நிகழ்வுகளை நடாத்தி முடித்திருக்கின்றது. ”உயிர்ப்பு” நிகழ்வுகள் விழிம்பு நிலை மக்களின் குரலாய் நாடகங்களின் மூலம் ரொரொன்டோவில் ஒலித்துக்கொண்டிருக்கின்றது. புதிய இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஒரு நாடக அமைப்பாக உயிர்ப்பு நாடகப்பட்டறை அமைந்துள்ளது . சீரிய நாடகங்களை எழுதித் தயாரிப்பதற்கு ஆர்வமுள்ளவர்களை தம்முடன் இணைத்துக் கொள்ள உயிர்ப்பு ஆர்வமாக உள்ளது. மார்ச் மாதம் 5ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறும் உயிர்ப்பின் 5ஆவது நிகழ்வில் மூன்று நாடகங்கள் மேடையேற உள்ளன.
மீராபாரதியின் எழுத்து இயக்கத்தில் - ”கங்கு”
தணலாய்த் தகித்து கொண்டிருக்கும் மனித மனங்கள், உணர்ச்சிகள், உணர்வுகள் என்பவற்றின் பிரதிபலைப்பாய்த் தோற்றம்பெற்றிருப்பதே கங்கு என்னும் இந்த அரங்க அளிக்கை. 'ஒடுக்கப்பட்டவருக்கான அரங்கு' என்ற அரங்க அணுகுமுறையின் அடிப்படையில், பங்களிப்போர் எல்லோரினதும் கூட்டு முயற்சியில் உருவாகியதே இந்தப் படைப்பு. ஈழத் தமிழ் சமூகம் பல்வேறு ஒடுக்குமுறைகளை புறவயமாக எதிர்கொண்டபோதும் அது தனக்குள்ளும் பல்வேறு அக அடக்குமுறைகளை கொண்டிருக்கின்றது. இந்த முரண்பாடுகளின் சிறு துளியாய்க் கனல்கிறது கங்கு.
இளங்கோவின் எழுத்து இயக்கத்தில் - ”சாம்பல் பறவைகள்”
இருப்பிற்கும் இழப்பிற்கும் இடையில் ஒரு பறவையைப் போல அலைகிறது வாழ்வு. வாழ்க்கையின் அர்த்தங்களைக் கண்டுபிடித்துவிடும் எத்தனிப்பில் கழிகிறது காலம். வானமெங்கும் உலாவித்திரியும் பறவையொன்று உதிர்த்துவிடும் சிறகொன்றை வைத்து பறவையின் வாழ்வை அளந்துவிடமுடியாதோ அவ்வாறே மனிதர்களுக்குள் சுழித்தோடும் எண்ணங்களையும் அவ்வளவு எளிதில் கணித்துவிட முடிவதில்லை. இறுதியில் வாழ்வில் எதுவுமே எஞ்சுவதே இல்லையெனினும் ஏன் இவ்வளவு வெறுப்பையும் துயரத்தையும் காவிக்கொண்டு திரிகின்றோம். நேசிக்க மனிதர்களும், நேசிப்பதற்கு இயற்கையையும் இருக்கும்போது கூட நாம் ஏன் இன்னும் தனிமைப்பட்டுப் போனதாய் உணர்கின்றோம். வாழ்க்கையிற்கு உண்மையில் அர்த்தம் ஏதும் இருக்கவேண்டுமா? இலக்குகளை நோக்கி எப்போதும் ஓடிக்கொண்டிருக்க வேண்டுமா? நாம் நம்முடைய வாழ்வை வாழ்கின்றோமா அல்லது யாரோ ஒருவரின் வாழ்க்கையைத்தான் வாழத்தான் எல்லாவற்றையும் தொலைத்து அலைந்து கொண்டிருகின்றோமா? நம் வாழ்வில் ஒருகாலத்தின் குறுக்கு வெட்டிலிருந்து தம் சிறகுகளை அசைத்துப் பறப்பதிலிருந்து விரிகிறது, சாம்பல் பறவைகள் என்கின்ற நாடகம்.
சக்கரவர்த்தியின் எழுத்து இயக்கத்தில் - ”பகைப்புலம்”
பகைப்புலம் நாடகம் மூன்று பாத்திரங்களைக் கொண்டதாக அமைகிறது. அரச அடக்குமுறையின் கீழ் இராணுவ வல்லாதிக்கம் புரியும் கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்கள் அதனை முறியடிக்கவும் பழிவாங்கவும் முற்படுவதை வரலாறெங்கணும் அவதானிக்க முடியும். அவ்வாறான பாத்திரங்களான மாலதியும் குமரனும் கொழும்பில் வைத்து இராணுவ அதிகாரியொருவரைத் தற்கொலைத் தாக்குதல் மூலம் தீர்த்துக்கட்ட விழைகிறார்கள். இத்திட்டத்தைச் சரிவர நிகழ்த்துவதற்கான தயார் வேலைகளை திரையன் என்ற போராளிப் பாத்திரம் நிகழ்த்துகிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் அப்பாவிகள் பாதிக்கப்படக் கூடாது என்ற மனிதாபிமானம் எழுந்து தாக்குதலைச் செய்வதில் சிக்கல்களை ஏற்படுத்தும் வேளையில் போராளிகளுக்கிடையில் அது பற்றிய சர்ச்சை உருவாகிறது. திரையன் தலைமைக்கு விசுவாசமானவனாகவும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதில் குறியாக நிற்கிறான். மற்றவர்கள் குழப்பம் அடைகிறார்கள். முடிவில் அவர்கள் எத்தகைய தீர்மானத்திற்கு வந்தார்கள் என்பதைச் சித்தரிப்பதாக அமைவதே இந்த நாடகமாகும்.
சீரிய நாடகங்களில் ஆர்வமுள்ளவர்களுக்களை உயிர்ப்பு நாடக நிகழ்வுக்கு உயிர்ப்பு பெண்கள் நாடகப் பட்டறை வரவேற்கின்றது.
தகவல்: மீராபாரதி