‘
யாழ்ப்பாணத்தில் நெருக்கடியான நிலைமைகள் இருந்த போதிலும் ஒரு மாணவன் அல்லது மாணவி எத்தகைய கல்வி நெறியையும், எத்தகைய தொழில்கல்வியையும் கலந்து முன்னேறுவதற்கான சகல வாய்ப்புகளும் நிறையவே உள்ளன. யாழ்ப்பாணத்தின் வறிய நிலைமையிலுள்ள பெண்கள் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்று வருவதே விசேஷமாகக் குறிப்பிடவேண்டும். அத்தகைய ஏழைக் குடும்பங்களிலிருந்து வருகின்ற மாணவர்களின் கல்விக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் உதவ முன்வருவது அவசியமாகும். யாழ்ப்பாணத்துப் பாடசாலைகளைப் பொறுத்தவரையில் பின்தங்கிய பகுதிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை விஞ்ஞானக் கல்விக்கான ஆய்வுகூடங்களின்மை, ஆசிரியர்கள் நியமனத்திலும் அவர்களைப் பாடசாலைக்கு நியமித்தலிலும் காணப்படும் பாரபட்சமான தன்மைகள், வடக்கு மாநிலத்தின் கல்வி வளர்ச்சியில் பின்னடைவுகளை ஏற்படுத்தியுள்ளது. திருகோணமலை, மூதூர், மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் தமிழ் மாணவர்களின் கல்வி நிலைமை மிகவும் கவலை தருவதாகவே உள்ளது. மலையகக் கல்வித் துறையிலும் விஞ்ஞானக்கல்விக்கான வளங்கள் மிக மிகக் குறைவாகவே காணப்படுகின்றன’ என்று யாழ் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை லண்டன் உயர்வாசற்குன்று முருகன் ஆலய மண்டபத்தில், கடந்த மூன்றாம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலங்கைத் தமிழ் மாணவர்களின் இன்றைய கல்விநிலை பற்றி சிறப்புரை ஆற்றுகையில் தெரிவித்தார்.
‘அவர் மேலும் பேசுகையில் மாணவர்களின் தூயகணித அறிவு வலுவான தளத்தில் இடம்பெறுவது அவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு மிகவும் அடிப்படையானதாகும். எனவே சகல பாடசாலையிலும் தூய கணிதத்தை முறையாக மாணவர்களுக்குப் படிப்பிப்பதில் ஆசிரிய சமூகம் கவனம் செலுத்துவது அவசியமானதாகும். சில பாடசாலைகளில் தூய கணிதத்தில் சித்தி பெறாமல் முழு மாணக்கர்களுமே தங்கள் கல்வியைத் தொடராமல் இடைவிலக வேண்டிய நிலைமையை நாம் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. தூயகணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களைப் போதிப்பதற்கான ஆசிரியர்களின் பற்றாக்குறை முழு இலங்கையிலும் காணப்படுகிறது’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.‘இலங்கையில் காணப்படும் 9765 பாடசாலைகளில் 30 வீதமான பாடசாலைகள் நூற்றுக்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட சிறு பாடசாலைகளாகத் திகழ்வது இன்றைய கல்வியாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறைவான ஆசிரியர்கள், போதிய வளங்கள் இன்மை, குறைவான மாணவர்கள், மாணவர்களின் வறிய சூழல் போன்றன மலையகத்தின் கல்வித் துறையில் மகிப் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. நுவரேலியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் ஆங்கிலம், தூயகணிதம், விஞ்ஞானம் போன்ற பாடங்களில் மாணவர்களின் பெறுபேறுகள் கவலையளிக்கும் வண்ணமே உள்ளது’ என்று இக்கருத்தரங்கிற்குத் தலைமை வகித்த யாழ் பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர், விமர்சகர், எழுத்தாளர் மு.நித்தியானந்தன் தனது தலைமையுரையில் தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில் புலம்பெயர்ந்த தமிழர்களின் பல தன்னார்வ அமைப்புக்களும், பழைய மாணவர்கள்; சங்கங்களும், சைவ ஆலயங்களும் இலங்கையின் வறிய தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தங்களால் இயன்ற பணியினைச் செய்து வருகின்றனர். அவுஸ்திரேலியாவின் இலங்கை மாணவர்களுக்கான கல்வி நிதியம் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக இந்தப்பணியில் சிறப்புடன் செயற்பட்டு வருவதைப் பாராட்டியாகவேண்டும். இலங்கை மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பிப்பதில் புலம்பெயர்ந்துவாழும் தமிழ்ச் சமூகம் மிகப் பெரும் பங்கினை வழங்க முடியும்’ என்று மேலும் அவர் தெரிவித்தார்.
‘கொழும்புப் பல்கலைக்கழக முன்னாள் புவியியல் விரிவுரையாளர் கலாநிதி புவனராஜன் கருத்துத் தெரிவிக்கும்போது இந்த கலந்துரையாடல் இலங்கைத் தமிழ் மாணவர்கள் எதிர்நோக்கும் இன்றைய கல்விப் பிரச்சனைகளைப் பற்றி மிகவும் துல்லியமான கருத்துக்களை முன்வைத்திருப்பது பாராட்டுக்குரியதாகும்’ என்று தெரிவித்தார்.
‘வழக்கறிஞர் செ.சிறீக்கந்தராசா அவர்கள் பேசும்போது இலங்கையின் பாடசாலைகளில் மட்டுமல்ல பலவகைக் கல்லூரிகளிலேயே ஆங்கில அறிவு மிகவும் விசனிக்கத்தக்கவகையில் தரம் குறைந்து காணப்படுகிறது. மாணவர்கள் மட்டுமன்றி ஆசிரியர்களும் ஆங்கில மொழியின் அறிவினை விரிவாக்கிக் கொள்ளவேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது’ என்று தெரிவித்தார்.
‘ஈலிங் துர்க்கையம்மன் கோயில் பிரமுகர் சட்டத்தரணி ரட்னசிங்கம் அவர்கள் பேசும்போது ஈலிங் துர்க்கையம்மன் ஈழத்து அனைத்து மாவட்டங்களிலும் பயிலுகின்ற வறிய மாணவர்களின் தேவைகளை அனுசரித்து உதவிகளை வழங்கி வருகின்றது’ என்று குறிப்பிட்டார்.
‘லண்டன் செல்வ விநாயகர் கோயில் முகாமையாளர் செல்வராஜா பேசும்போது வறிய மாணவர்கள் விடுதிகளில் தங்கி பயில்வதற்கான ஒரு திட்டத்தினை இலங்கைக் கல்வியியலாளர்கள் முன்வைத்தால் அதற்கான உதவியைத் தான் வழங்கமுடியும்’ என்று தெரிவித்தார்.
‘சட்டத்தரணி சிறீகாந்தலிங்கம் அவர்கள் உரையாற்றும்போது இலங்கையில் ஆங்கிலம் போதிப்பதற்கு லண்டனில் பயின்ற இளைய தலைமுறைப் பட்டதாரிகள் ஆர்வத்தோடு இருக்கிறார்கள் என்றும் அதற்கான ஒழுங்குகளை இலங்கையில் மேற்கொள்வார்களாயின் அதற்கான முழு ஒத்துழைப்பையும் தாங்கள் வழங்கவிருப்பதாகத் தெரிவித்தார்’
‘திருமதி சாவித்திரி நவரட்னம் உரையாற்றுகையில் கிளிநொச்சியில் வசதி குறைந்த எந்த மாணவரும் தன்னுடன் தொடர்புகொண்டால் அவர்களுக்கான கல்வி வசதிகளை செய்து கொடுப்பதில் தான் உறுதுiணாக இருப்பேன்’ என்று குறிப்பிட்டார்.
‘திருமதி நிர்மலா விஜயகுமார் உரையாற்றும்போது லண்டனில் தான் பணியாற்றும் திறந்த பல்கலைக்கழகத்தினூடாக கல்விக்கான பல்வேறு வழிகளை இலங்கைப் பாடசாலைகளுக்கு வழங்க முடியும் என்று குறிப்பிட்டார்’
‘மகாஜனாக் கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தின் தலைவர் திரு. நா. சிறீகெங்காதரன் அவர்கள் பேசும்போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் எதிர்ப்புக்கு மத்தியிலும் சிறீமாவோ பண்டாரநாயக்கா அரசாங்கம் கொண்டுவந்த அரசாங்கப் பல்கலைக்கழகம் இன்று இலங்கைத் தமிழ் மக்களின் உன்னத கல்விக் கூடமாகத் திகழ்கின்றது. பீற்றர் கெனமன் போன்ற இடதுசாரி தென்னிலங்கை அரசியல்வாதிகளின் முயற்சியினாலேயே யாழ் பல்கலைக்கழகம் உருவானதென்பதை மறுப்பதற்கில்லை என்று குறிப்பிட்டார்’
‘வறுமை நிலையிலுள்ள மாணவர்களின் கல்வி வளர்ச்சியினையே நாம் முதன்மைப்படுத்தவேண்டும் என்று திரு. வைரவமூர்த்தி அவர்கள் குறிப்பிட்டார்’
‘மாணவர்களின் தற்க ரீதியான கல்வி வளர்ச்சிக்கு கணித அறிவு மிக அடிப்படையானது என்று யாழ் பல்கலைக்கழக மருத்துவப்பீட விரிவுரையாளர் டாக்டர் புவனேந்திரன் பேசும்போது குறிப்பிட்டார்’
‘குறித்த நேரத்திற்கு திரண்ட கூட்டத்துடன் இந்த நிகழ்வு ஆரம்பமாகி மிகுந்த பொறுப்புணர்வோடு நான்கரை மணித்தியால நேரம் நடைபெற்றமை அறிவு பூர்வமான கருத்துப் பரிமாற்றத்திற்கு அனுகூலமாக அமைந்துள்ளது என்று நன்றி உரையாற்றிய நாழிகை ஆசிரியர் திரு.எஸ்.மகாலிங்கசிவம்(மாலி) குறிப்பிட்டார்’
இத்தகைய பயன்மிக்க கலந்துரையாடல்களை நடாத்துவதற்கு உயர்வாசற்குன்று முருகன் ஆலயம் தங்கள் மண்டப வசதிகளை வழங்கி உதவுவதாகத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
5.1.2016