'போர்ச்சூழலில் இடம்பெற்ற முக்கிய விடயங்கள் போர் இலக்கியங்கள் மூலமே வெளிக்கொணரப்படுகின்றன. போர் இலக்கியத்தின் முக்கிய பரிமாணம் அவை போரின் சாட்சியங்களாக அமைவதுடன் போரின் நிலைமைகளை, கள நிலவரங்களை வெளி உலகிற்குத் தெரியப்படுத்தி உலகின் மனச்சாட்சியைத் தட்டி எழுப்புவதுதான். 'ஞானம்" சஞ்சிகையின் 150 -வது இதழை, போர் இலக்கியச் சிறப்பிதழாக 600 பக்கங்களில் வெளிக்கொணர்ந்தோம். ஒவ்வொரு காலகட்டத்திலும் எழுதப்படும் இலக்கியங்கள் தொகுக்கப்படல் வேண்டும். சங்க கால புறநானூறுப் பாடல்கள் தொகுக்கப்பட்டதால்தான் நாம் அன்றைய தமிழரின் போர்பற்றி அறிய முடிகிறது. இத்தகைய பாரம்பரியத்தில் தொகுக்கப்பட்டதுதான் 'ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம்" என்ற தொகுப்பாகும்." இவ்வாறு 'ஞானம்" சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் தி. ஞானசேகரன் அண்மையில் பாரிஸ் மாநகரில் நடைபெற்ற 'ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம்" ஞானம் சிறப்பிதழ் அறிமுக நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
பிரான்ஸ் நாட்டில் வாழும் மூத்த எழுத்தாளர் வி. ரி. இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தி. ஞானசேகரன் மேலும் பேசுகையில் குறிப்பிட்டதாவது: 'போர் இடம்பெறும் வேளையில் உள்நாட்டில் இருப்பது தமது உயிர் பாதுகாப்பிற்கு ஏற்றதல்ல என்று அஞ்சி பல்வேறு நாடுகளுக்குச் சென்றவர்கள் தமது நாட்டினைப் பிரிந்து சென்ற ஏக்கத்தினையும், சென்றடைந்த நாடுகளில் தமக்கு ஏற்பட்ட அல்லல் நிறைந்த அனுபவங்களையும் பதிவு செய்யும் இலக்கியம் புலம்பெயர் இலக்கியங்கள் என வகைப்படுத்தப்பட்டன. நாம் தொகுத்த இந்தச் சிறப்பிதழில் போர்க் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறியவர்களின் பயண அனுபவங்கள், தாயக நினைவுகள், புலம்பெயர் வாழ்வின் அவலங்கள், கலாசாரக் கலப்பு மற்றும் முரண்பாடு, அகதி நிலை, நிறவாதம், புதிய சூழல்சார் வெளிப்பாடுகள், பெண்களின் விழிப்புணர்வு, மற்றும் விடுதலை, அனைத்துலக நோக்கு, அரசியல் விமர்சனம் முதலியவற்றைப் பிரதான உள்ளடக்கக் கூறுகளாக அவதானிக்க முடியும். இத்தெகுப்பில் 85 சிறுகதைகளும், 125 கவிதைகளும், 50 கட்டுரைகளும், நான்கு நேர்காணல்களும் அடங்கியுள்ளன. இந்த போர் இலக்கியம், மற்றும் புலம்பெயர் இலக்கியம் இருபதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியத்திற்கு வழங்கப்பட்ட இலக்கிய வகைமைகளாகும்." என்றார்.
நிகழ்வுக்குத் தலைமைவகித்து உரையாற்றிய வி. ரி. இளங்கோவன் குறிப்பிட்டதாவது: 'ஞானம்" 150 -வது இதழ் ஈழத்துப் போர் இலக்கியச் சிறப்பிதழாக 600 பக்கங்களில் வெளியிடப்பட்டது. 175 -வது இதழ் 'ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம்" என்ற மகுடத்தில் சிறப்பிதழாக 976 பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இலக்கியச் சஞ்சிகை வரலாற்றில்; இத்தகைய பாரிய முயற்சி முன்னெப்போதும் மேற்கொள்ளப்படவில்லை. இச்சிறப்பிதழில் புலம்பெயர்ந்துள்ள எம்மவரின் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், பத்திகள், ஓவியங்கள், ஒளிப்படங்கள், நேர்காணல்கள் என்பன இடம்பெற்றுள்ளன. 2000 -ம் ஆண்டு முதல், மாதத்தின் முதல் நாளில் தவறாது வெளிவந்து சாதனை படைக்கும் 'ஞானம்" ஆசிரியர்கள் பாராட்டுக்குரியவர்கள். புலம்பெயர் சந்ததியினர் எதிர்காலத்தில் வேற்றுமொழிச் சூழலில் வாழ நேரிடுமெனினும் தமது மூதாதையரின் இலக்கிய வேர்களைத் தேடும்போது அம்மூதாதையர்களின் இலக்கியச் சாட்சியமாக இத்தொகுதி விளங்கும் எனலாம்" என்றார்.
'ஞானம்" இணை ஆசிரியர் திருமதி ஞானம் ஞானசேகரன் பேசுகையில் குறிப்பி;ட்டதாவது: 'ஈழத்து இலக்கியச் செல்நெறியைப் பதிவுசெய்யும் நோக்குடன் நாம் இயங்குகின்றோம். ஈழத்து முதலாவது இலக்கியச் சஞ்சிகை 'மறுமலர்ச்சி" வரதரால் ஆரம்பிக்கப்பட்டது. முதலாவது முற்போக்கு இலக்கியச் சஞ்சிகை 'பாரதி" கே. கணேஸ் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. மார்க்சிய இலக்கியத்தின் பிதாமகர்களில் ஒருவராகப் பேராசிரியர் கே. கணேஸ் கருதப்படுகிறார். மலையக இலக்கியத்தில் தெளிவத்தை ஜோசப் முக்கியத்துவம் பெறுகிறார். அதிக புகழ்பெற்ற எழுத்தாளர்களை உருவாக்கிய சஞ்சிகை ஆசிரியராகக் 'கலைச்செல்வி" சிற்பி சரவணபவன் கருதப்படுகிறார். நற்போக்கு இலக்கியக்காரராக எஸ். பொ. கருதப்படுகிறார்; இவர்கள் அத்தனைபேரையும் தொடர்பேட்டிகண்டு ஞானத்தில் பதிவு செய்திருக்கிறோம். இவர்களைவிட 50 -க்கும் மேற்பட்ட முக்கிய எழுத்தாளர்களின் பேட்டிகளும் ஞானத்தில் வெளியாகியுள்ளன. இந்தப் பேட்டிகள் யாவும் ஈழத்து இலக்கிய வளர்ச்சியின் பல்வேறு காலகட்டங்களைப் பதிவு செய்வனவாக அமைந்தன. இவற்றைவிட 100 -க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களை அட்டைப்பட அதிதிகளாகக் கௌரவித்து அவர்களது பணிகளைப் பதிவு செய்துள்ளோம். 50 -க்கும் மேற்பட்ட புதிய எழுத்தாளர்களை இனங்கண்டு அவர்களை வளர்த்தெடுத்திருக்கிறோம். வரதர், கார்த்திகேசு சிவத்தம்பி, தெளிவத்தை ஜோசப், எஸ். பொ. ஆகியோருக்குப் பவளவிழாச் சிறப்பிதழ்களை வெளியிட்டுள்ளோம். சிறுகதைப் போட்டிகளை வைத்து பரிசளித்து வருகிறோம். எழுத்தாளர்கள் அமரத்துவம் எய்தும்போது அவர்களை நினைவுகூர்ந்து அஞ்சலிக் கூட்டங்களை நிகழ்த்துகிறோம். 'ஞானம் பதிப்பகம்" என்ற அமைப்பின் மூலம் 35 -க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் நூல்களை வெளிக்கொணர்ந்துள்ளோம். இவை யாவும் 'ஞானம்" சஞ்சிகையின் பல்வேறு வகைப்பட்ட பணிகளாக அமைகின்றன" என்றார்.
ச. தில்லை நடேசன், சு. கருணாநிதி, இரயாகரன், நாகேஸ் ஆகியோருட்படப் பலர் கருத்துரை வழங்கினர். ஞானம் தம்பதிகள் 'பாரிஸ் முன்னோடிகள் கலை இலக்கிய வட்டம்" சார்பில் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர். டென்மார்க், ஜேர்மனி, சுவிஸ், பிரித்தானியா ஆகிய நாடுகளிலும் 'ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம்" ஞானம் சிறப்பிதழ் அறிமுக நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.