ஆரம்பக் கூட்டம் ஒக்டோபர் 29.10.2015 திகதி பிஞ் மற்றும் மிடில்பீல்ட் சந்திக்கருகாமையில் உள்ள GTA Square இல் உள்ள விருந்தினர் மண்டபத்தில் பி.ப. 7.0மணிக்கு மன்றத்தின் பேராளர் இ.பாலசுந்தரம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. அவர் மன்றத்தின் நோக்கம் பற்றிய விளக்க உரையை நிகழ்த்தினார். தலைமைச் செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள், நோக்கங்கள், கருத்துக்கள்பற்றிய விளக்கமாக அமைந்திருந்தது அவரது உரை. பிராஞ்சில் இடம்பெற்ற முதலாவது உலகத்தொல்காப்பிய மன்றத்தின் மகாநாட்டிற்குத் தலைமை தாங்கியமைபற்றியும் அங்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.
திரு.சின்னையா சிவநேசன் அவர்கள் இந்த அமைப்பின் நோக்கம் சிறப்பாக அமையவேண்டும் தொடர்ந்து இயங்கவேண்டும் எனவும் வேண்டிக்கொண்டார்.
திரு. த.சிவபாலு அவர்கள் தலைமைச் சங்கத்தோடு ஏற்படுத்திக்கொண்ட தொடர்பினையும் அதனை முன்னெடுத்துச் செல்ல செய்யவேண்டியவைபற்றியும் குறிப்பிட்டு உரையாற்றினார்.
ரொறன்ரோ அனைத்துலக மொழிகள் திட்டஅலுவலர் பொ.விவேகானந்தன் உரையாற்றும்போது தொல்காப்பியத்தின் சிறப்புப்பற்றியும் திருக்குறள் மற்றும் சங்க இலக்கியங்கள் பேசப்படும் அளவிற்கு தொல்காப்பியம் பேசப்படாமைக்கான காரணங்கள் பற்றி விளக்கமளித்தார். அதனை முன்னெடுத்துச் செல்வதால் மட்டுமே தமிழின் பெருமையும் தமிழரின் பெருமையும் பேசப்படமுடியும் என்பதனையும் சுட்டிக்காட்டினார்.
கலாநிதி செல்வநாயகி ஶ்ரீதாஸ் உரையாற்றுகையில் தொல்காப்பியத்தின் தொன்மை அறியப்படவேண்டும் அதனை ஆய்ந்து வெளிக்கொண்டுவரவேண்டும் எனது மிகப்பழமையான இலக்கண, இலக்கிய நூல் தொல்காப்பியம் ஆகும் என்றுரைத்ததோடு ஊடகங்களின் உதவியோடு இதனை முன்னெடுத்துச் செல்லவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
திரு. நாராயணமூர்த்தி உரையாற்றும்போது தொல்காப்பிய மன்றம் எந்த அடிப்படையில் இயங்கப்போகின்றது என்னும் கேள்வியை முன்வைத்து, அதன் செயற்பாடுகள் எவ்விதம் அமையவேண்டும் என்னும் கருத்தையும் முன்வைத்தார். பல்வேறு அறிஞர்கள் தொல்காப்பியரின் காலம்பற்றிய மாறுபாடான கருத்துக்களை முன்வைக்கின்றார்கள். இவற்றிற்கு தக்க ஆதாரங்கள் முன்வைக்கப்படவேண்டும் என்பதனையும் குறிப்பிட்டு உரையாற்றினார்.
முனைவர் பார்வதி கந்தசாமி உரையாற்றும்போது கனடிய பல்கலைக்கழகத்தில் தமிழ்கல்வியை ஆய்வுக்குரியதாகக்கவேண்டும். இலங்கைத்தமிழரின் நிதியில் தமிழ் மொழியில் தகமையில்லாத ஒருவர் தமிழ் மொழிக்கு விரிவுரையாளராக நியமிக்கப்பட்டமைபற்றியும் குறிப்பிட்டதோடு இவற்றில் இவ்வித அமைப்புக்கள் கவனம் செலுத்தவேண்டும் எனவும் வேண்டிக்கொண்டார்.
முன்நாள் பேராசிரியர் நா.சுப்பிரமணியன் உரையாற்றும்போது தொல்காப்பிய மன்றம் முன்வைத்துள்ள செயற்பாடு நடைமுறைப்படுத்தவேண்டும் என்பதில் யாருக்கும் கருத்துவேறுபாடு இருக்கமுடியாது என்பதனை எடுத்துரைத்ததோடு இதனை இரண்டு தளங்களில் இயக்கலாம் எனவும் தனது கருத்தை முன்வைத்து கற்றவர்களுக்கான மட்டத்திலும் மற்றது சாதாரண மக்கள்மட்டத்திலும் இதனை எடுத்துச் செல்லவேண்டும் என்னும் கருத்தை முன்வைத்து இங்கு தமிழ் மொழியை கற்பிப்பதற்குப் போதிய அறிஞர்கள் உள்ளனர் எனவும் குறிப்பிட்டதோடு மாதம் இருமுறை தொல்காப்பிய விளக்கக்கூட்டங்களை ஒழுங்கமைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
திருமதி லீலா சிவாநந்தன், திரு, குமரகுரு, திருமதி மீரா இராசையா, திரு. அருள் சுப்பிமணியம், திருமதி சிவநயனி முகுந்தன்த ஆகியோர் கருத்துக்களை முன்வைத்து உரையாற்றினர்.
பின்வருவோர் பணியாளர் குழு உறுப்பினர்களாக ஏகமனதாக தெரிவானார்கள்.
தலைவர்: தங்கராசா சிவபாலு
உபதலைவர்: பொன்னையா விவேகானந்தன்
செயலாளர்: கார்த்திகா மகாதேவன்
துணைச் செயலாளர்: அருள் சுப்பிரமணியம்
பொருளாளர்: க. குமரகுரு
பணிப்பாளர் குழு:
1. சுகந்தன் வல்லிபுரம்
2. லீலா சிவானந்தன்
3. நா.சுப்பிரமணியன்
4. நாராயணமூர்த்தி
5. ராஜபாலன்
6. குமுதினி பொன்னுத்துரை
பேராளர்: பேராசிரியர் இ.பாலசுந்தரம்
பணிப்பாளர் குழுவின் கூட்டம் கூடப்பட்டு தொல்காப்பியம் பற்றிய கலந்துரையாடலை மேற்கொள்ளுவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.