சென்ற சனிக்கிழமை 22-08-2015 அன்று கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட சிறுகதைப் பயிலரங்கு ஒன்று ஸ்காபறோ சிவிக்சென்ரர் மண்டப அறையில் காலை 9:00 மணி தொடக்கம் மதியம் 12:00மணி வரை நடைபெற்றது. கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் உபதலைவரும் எழுத்தாளருமான திரு. குரு அரவிந்தன், மற்றும் பேராசிரியர் நா. சுப்பிரமணியன் ஆகியோரால் தமிழ் சிறுகதை ஆர்வலர்களுக்காக இந்த சிறுகதைப் பட்டறை வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. எழுத்தாளர் குரு அரவிந்தன் தனது சிறுகதைகளையே உதாரணமாக எடுத்து சிறுகதை பற்றி எல்லோரும் புரிந்து கெனாள்ளும் வகையில் விளக்கங்களைத் தந்தார். பேராசிரியர் நா. சுப்பிரமணியன் அவர்கள் தமிழ் நாட்டில் சிறுகதையின் தொடக்கம், அதன் வளர்ச்சி பற்றி சுருக்கமாக எடுத்துரைத்தார்.
‘லட்சக்கணக்கான வாசர் வியாபத்தைக் கொண்ட, தமிழ் இலக்கிய உலகம் அறிந்த எழுத்தாளர் குரு அரவிந்தன், சிறுகதைகள் பற்றிய தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார்’ என்று எழுத்தாளர் இணையத் தலைவர் கலாநிதி சிவநாயகமூர்த்தி அவர்கள் தனது தலைமை உரையில் குறிப்பிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து உரையாற்றிய குரு அரவிந்தன் சிறுகதை பற்றிக் குறிப்பிடும் போது தனது அனுபவங்களையே முன்வைத்தார்.
சிறுகதை பற்றிச் சுருக்கமாகச் சொல்வதானால், ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை சீரான நடையோடு கற்பனைத் திறன் கலந்து சொல்வதுதான் சிறுகதை என்பது எனது கருத்து என்று குறிப்பிட்ட அவர், சிறுகதை மையக்கருவோடு அதாவது கதையின் நோக்கத்தோடு ஒன்றிப்போனால் மிகவும் சிறப்பாக அமையும். வாசகர்களுக்கு அதை வாசிக்கும் போது அந்தக் கற்பனைப் புனைவு மனதில் ஏதாவது நெகிழ்வை ஏற்படுத்துமானால், அது தரமான ஒரு சிறுகதையாகக் கணிக்கப்படலாம். சிறுகதை எப்படி இருக்கக்கூடாது என்று பார்ப்போமேயானால், கட்டுரைத் தன்மையில் இருந்து மாறுபட்டிருக்க வேண்டும். சிறுகதையில் உபகதைகள் சொல்ல வெளிக்கிட்டால் அது குறுநாவலுக்கான முயற்சியாக மாறிவிடலாம். அதுமட்டுமல்ல, சிறுகதையில் உபதேசத்தைத் தவிர்ப்பதும் நல்லது என்றே எண்ணுகின்றேன் என்றார்.
மேலும் அவர் குறிப்பிடும் போது, ‘எழுத்தாளன் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று புரிந்து கொண்டால்தான் உயிரோட்டமுள்ள சிறு கதைகளைப் படைக்க முடியும். ஐந்தாறு பக்கத்திற்குள் சீரான நடையோடு அடங்கினால் அது மேலோட்டமாக வாசிக்கும் வாசகரைக் கவரக்கூடியதாக இருக்கும். வர்த்தகப் பத்திரிகைகள் அல்லது இதழ்கள் பக்கக் கட்டுப்பாடு காரணமாக அனேகமாக குறைந்த பக்கக் கதைகளையே விரும்பித் தெரிவு செய்கின்றன. லட்சக் கணக்கான வாசகர்களைச் சென்றடைந்து எழுத்தாளனின் வாசக வியாபகத்தை விரிவடையச் செய்வதும் இப்பத்திரிகைகளே. அழகுணர்வும், உணர்ச்சி வெளிப்பாடும் வாசகனிடம் இருப்பதால், வாசகனைக் கவருவதற்குச் சிறுகதையின் தலையங்கமும் கவர்ச்சியாக இருந்தால் நன்றாக இருக்கும். அடுத்ததாகச் சிறுகதையின் ஆரம்பத்தில் வரும் சில வசனங்கள் அவர்களை அறியாமலே வாசகரை உள்ளே இழுத்துச் செல்வதாக இருக்க வேண்டும். அவர்களுக்குப் பிடித்தமான சீரான நடையாக கதை முழுவதும் இருந்தால் வாசகர் கதையோடு ஒன்றிப் போய்விடுவார். கதையை வாசித்து முடித்ததும் அந்தக் கதை வாசகனின் மனத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி மீண்டும் இரைமீட்கப்பட்டால் அதுவே கதையின் வெற்றியாகும். அப்படியான கதைகளை எழுதுபவர்களே சிறந்த எழுத்தாளராகின்றனர். அவர்களின் கதைகளே வாசகர்களின் தேடலில் அதிகம் இடம் பெறுகின்றன. அதிஸ்ட வசமாகச் சிறந்த தளமும் கிடைத்தால், முகம் தெரியாத வாசகர்கள் பலர் இதன் மூலம் உருவாக்கப்படுகின்றனர். திறமை எங்கிருந்தாலும் அதைக் கட்டுப்படுத்த ஏனைய சக்திகள் முனைந்தாலும், அது அணை உடைத்துக் கொண்டு எப்படியும் வெளியே வரத்தான் செய்யும்.’
வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும்போது, ‘சிறு கதைக்கு முக்கியமானது எழுத்தாளனின் எழுத்து நடையாகும். சீரான எழுத்து நடையாக இருந்தால் அது வாசகரைக் கதையின் முடிவு வரை இழுத்துச் செல்லும். சிறுகதையின் கதைக் களத்தை வாசகனே ஊகித்துக் கொள்ள வேண்டும். வாசகனுக்குத் தெரிந்த கதைக் களமென்றால் அதில் உண்மைத் தன்மை இருக்க வேண்டும். கதையில் எதிர்பாராத திருப்பம் இருந்தால், சொல்ல நினைத்ததை முழுமையாகச் சொல்லாமல், கதையின் முடிவு என்னவாய் இருக்கும் என்று வாசகனை ஊகிக்க வைப்பதன் மூலம் கதையை சுவாரஸ்யமாக நகர்த்த முடியும்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
புலம்பெயர்ந்த இந்த மண்ணில் அடுத்த தலைமுறையினரும் ஆர்வத்தோடு வந்து சிறுகதைப் பயிலரங்கில் கலந்து கொண்டதைப் பாராட்டி, அவர்களுடன் கலந்துரையாடச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்த கனடா எழுத்தாளர் இணையத்திற்கும் நன்றி தெரிவித்தார்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.