கடந்த நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட காலவோட்டத்திற்கும் அரசியல் சூழ் நிலைகளுக்குமேற்ப தனது புதிய பாய்ச்சலை மேற்கொண்ட ஈழத்து தமிழ் கவிதையானது பதித்த தடங்களையும் பரிமாணங்களையும் மீறி பிறந்துவிட்ட புதிய நூற்றாண்டில் அடைந்த தேக்கநிலை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையானது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின்னர் முற்றுமுழுதாக இதன் வீச்சு அடங்கிவிட்டதா என்று ஐயம் கொள்ளும் வண்ணம் ஒரு நிசப்தநிலையை தோற்றுவித்திருந்தது. தீபச்செல்வனின் ‘போர் தின்ற நகரம்’ நிலாந்தனின் ‘யுகபுரானம்’ இன்னும் பல இனப்படுகொலையின் பதிவுகளை அச்சேற்றிய பல கவிதைத்தொகுதிகள் வெளி வந்த போதும் ‘ஈழத்துக்கவிதை இனி மெல்ல சாகும்’ என்ற நக்கல்களும் ஆருடங்களும் கூட வெளிப்படையாக எழும்பத்தொடங்கின. புகலிடத்தில் இதற்கான முனைப்புகள் முற்றுமுழுதாக அடங்கி விடவில்லை எனினும் அதனை முடக்கும் குரல்கள் ஆங்காங்கே தோன்றின. பல மாதங்களிற்கு முன்பு கவிஞர் குட்டி ரேவதியின் இலண்டன் வருகையின் போது ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலின் போது கணிசமான அளவு வாசகர்கள் கலந்துகொண்ட போதும், அதில் கலந்து கொண்ட ஒரு அறிவு ஜீவி ஒன்று “புகலிடத்தில் இலக்கியக் கூட்டங்களிக்கு அதிகம் பேர் வருவது கிடையாது. அரசியல் கூட்டமானால் மட்டும் கொஞ்சம் பேர் வருவார்கள்” என்று அந்திமழையில் பார்ப்பனத்தின் ஊதுகுழலாய் திருவாய்மலர்த்தருளினார். அதன் பின் குட்டி ரேவதி மீதான சேறு வாரியடிப்பு மிக அதிகமாக நடைபற்றது. ‘அறம்’ பாடிய ஜெயமோகனும் ‘உன்னத சங்கீதம்’ பாடிய சாரு நிவேதிதாக்களும் மிகவும் கொச்சைத்தனமான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டிருந்தனர்.எல்லாவற்றுக்கும் மேலாக கடந்த மாதம் நடைபெற்ற எழுநா குழுவினரால் நடத்தப் பட்ட புத்தக அறிமுக விழாவில் பேசிய கவிஞர் ஒருவர் ‘ நான் இப்போது கவிதைகளே வாசிப்பதில்லை’ என்று பிரகடனப்படுத்தி கவிதைகளை சிலுவையில் அறைய முற்பட்டார். இது பலருக்கும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவமாகும்.
இந்நிலையில் எமது குரல்கள் முற்று முழுதாக அடங்கிவிடவில்லை என்ற தொனியில் தோழர் பௌசரின் சார்பில் “தமிழ்மொழி சமூகங்களின் செயற்பாட்டகம்”ஆனது ஈழத்து தமிழ் பெண் கவிஞர்களின் ஆறு கவிதை தொகுப்புகளின் மதிப்புரையையும் கருத்து பகிர்வுகளையும் நடாத்த தலைப்பட்டது. கடந்த ஞாயிறு 2/௦3/2௦15 அன்று லண்டன் ஈஸ்டஹாம் நகரில் மாலை நான்கு மணியளவில் தொடங்கிய இந்நிகழ்வில் ஆறு கவிதைத் தொகுதிகளான
. *கருநாவு – ஆழியாள்
*இன்னும் வராத சேதி – ஊர்வசி
*பெருங்கடல் போடுகிறேன் – அனார்
*எதை நினைந்தழுவதும் சாத்தியமில்லை -
* நீத்தார் பாடல் – கற்பகம் யசோதரா
*ஒவ்வா - ஷர்மிளா செய்யத்
என்பன தேர்ந்தெடுக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இருபத்தைந்த்திற்கு மேற்பட்ட எழுத்தார்களும் இலக்கியவாதிகளும் ஆர்வலர்களும் பல்வேறு துறை இடங்களிலுமிருந்து வந்து கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க இருந்த மாதவி சிவருபன் தவிர்க்க முடியாத காரணத்தால் வரமுடியாததால் பௌசரின் தலைமையில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. முதலில் மதிப்புரையாற்றிய சந்திரா ரவீந்திரன் அவர்கள் ஆறு புத்தகங்களில் நான்கிற்கு தமது மதிப்புரையை வழங்கினார். கவிதைகள் எழுதப்பட்ட கால ஒழுங்கிற்கமைய தனது பேச்சை வடிவமைத்த அவர் மிகவும் நேர்த்தியானதும் காத்திரமானதுமான ஒரு சிறப்பான உரையை நிகழ்த்தினார். (இவ்வுரையின் எழுத்து வடிவினை ஆர்வலர்கள் எதுவரை இணைய தளத்தில் பார்வையிடலாம்) அடுத்து உரை நிகழ்த்திய தோழர் கோகுலரூபன் அவர்கள் தான் வரித்துக்கொண்ட இடதுசாரிக் கோட்பாட்டிற்கு அமைய அனைத்து புத்தகங்களிளிருந்தும் பல கவிதைகளை மேற்கோள் காட்டி மிகவும் காட்டமான ஒரு விமர்சன உரையை முன்வைத்தார்.
அதனைத் தொடர்ந்து சமூகமளிந்திருந்த பார்வையாளர்கள் பலரும் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டார்கள். அதில் முதலாவதாக தனது கருத்தை தெரிவித்த கவிஞர் நா.சபேசன் அவர்கள் தனக்கும் கவிஞர் ஔவையின் குடும்பத்திற்கும் இடையேயான சிறுவயது முதற்கொண்டு ஏற்பட்டிருந்த உறவைப் பற்றி எடுத்துரைத்தார். ஔவை தனது நூலை
அப்பாவாய் அம்மாவாய் ஆசிரியையாய்
அன்புத்தோழியாய்
எல்லாமாய் என்னுள் இருந்தும் என்னுடனிருந்தும்
இவ்வுலகை எதிர்கொள்ளும் சக்தியை எனக்களித்து வரும்
என் அம்மாவின் நினைவுகளிற்கு---------
என்று தனது தாயாரிற்கு சமர்ப்பணம் செய்திருந்திந்தார். அந்த தாயின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட சபேசன், அந்த தாயார் தனது கணவர் மகாகவியின் இலக்கிய செயற்பாடுகளுக்கு எங்ஙனம் பணியாற்றினார் என்பதினையும் தன் கணவர் இறந்த பிறகும் கூட அவரது எழுத்துப் பிரதிகளை எவ்வாறு பாதுகாத்து அதன் பதிப்பக வேலைகளிற்கு உதவி புரிந்தார் என்பதையும் எடுத்துக் கூறிய அவர் ஔவை, சேரன் இருவரது இலக்கிய பணிகளுக்கு மட்டுமல்லாது தமது அன்றைய புதுசு குழுமத்தின் செயற்பாடுகளிற்கும் அவர் ஆற்றிய பணிகளையும் நீனைவு கூர்ந்தார். மேலும் அவர் ஊர்வவசியின் நினைவுகளைப் பகிரும்போது எண்பதுகளின் ஆரம்பகாலத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினர் தமது பெண் உறுப்பினர்கள் பலரை படுகொலை செய்து மணியம் தோட்டத்தில் புதைத்த சம்பவத்தை ஊர்வசி அவர்கள் கவிதையாக எழுதியதையும், அதற்காக அன்று அவர் கழகத்தினரால் தேடப்பட்டு அதிஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவங்களையும் பகிர்ந்து கொண்டார்.
அடுத்து பார்வையாளர் வரிசையில் இருந்த ஒருவர் ஒரே நாளில் ஆறு புத்தகங்களின் மதிப்புரை என்பது கொஞ்சம் அதிகமாக இருப்பினும், படைப்பிலக்கியங்கள் கவிதைகள் என்பவை ஒரு தீண்டத்தகாத பண்டங்களாக உள்ள சூழலில் பௌசரின் இத்தகைய முயற்சியானது ஒரு முன்னுதாரணம் என்று கூறியவர், கடந்த மாதம் எழுநா குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தக வெளியீட்டு விழாவில் சபேசன் அவர்கள் தனது உரையில் தான் இப்போது கவிதை எதனையும் வாசிப்பது கிடையாது என்று கூறியதை உதாரணம் காட்டியவர், இது இவர் ஒருவரது கருத்தல்ல இன்றுள்ள சூழலில் கவிதைக்கான இடம் இதுதான் என்று முன்மொழிந்தார்.
அதனைத்தொடர்ந்து கருத்து தெரிவித்த தோழர் யமுனா ராஜேந்திரன் அவர்கள் பாரதி, பாப்லோ நெருடா, மற்றும் உலக மகாகவிஞர்களை முன்னுதாரம் காட்டி, ஈழத்தில் கடந்த முப்பது வருட போராட்ட காலத்தில் இது போன்ற கவிஞர்கள் தோன்றாததின் இயலாமையையும் போதாமையும் எடுத்துரைத்த அவர், இதற்கு தமிழகமும் புகலிடமும் சேரன், ஜெயபாலன், அ.முத்துலிங்கம், போன்றவர்களை மட்டும் தலையில் துக்கி வைத்துக் கொண்டாடுவதும் மற்றவர்களைக் கண்டு கொள்ளமுடியாமல் போவதும்தான் காரணம் என்றுரைத்தார்.
தோழர் சேனன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் சேரன், ஜெயபாலன் போன்றோரின் கவிதைத் தொகுப்புகளில் ஒன்றிரண்டு நல்ல கவிதைகள் கூட தேருவதில்லை என்று கூறி சுகன், தர்மினி போன்ற நல்ல கவிஞர்கள் இலக்கிய உலகில் கவனம் பெறாதது கவலைக்குரிய விடயம் என்றுரைத்தார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் கவிதை என்பது யாரின் கவனத்தையும் பெறுவது இல்லையென்றும் உணமையான பிரச்சினைகளை எடுத்துக் கூற நாவல் ஒன்றே சிறந்த கலைவடிவமென்றும் கவிஞர்கள் நாவல்களின் பக்கம் தமது கவனத்தைத் திருப்பவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். அதனை மறுத்துரைத்த தோழர் பௌசர் அவர்கள் 9௦ களில் ஈழச்சூழலில் கவிதைகள் பதித்த புதிய பாய்ச்சல்களையும் பரிமாணங்களையும் எடுத்துக் கூறி, முக்கியமாக பெண்கள் தமது உணர்வுகளையும் பிரச்சினைகளையும் எடுத்துக் கூற கவிதையே உன்னதமான ஒரு கலை வடிவம் என்றுரைத்தார். தொடர்ந்து மு.புஷ்பராஜா, பத்மநாப ஐயர், கவிஞர் சாம் பிரதீபன் போன்றவர்களும் கவிதை தமது கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். இறுதியாக நன்றியுரை வழங்கிய பௌசர் அவர்கள் இனி வரும் காலங்களிலும் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளதாகவும் அதற்கு அனைவரும் ஒத்துழப்பு நல்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அங்கு வைக்கப் பட்டிருந்த ஆறு கவிதைத் தொகுதிகளின் அனைத்துப் பிரதிகளும் உடனடியாகவே விற்றுத் தீர்ந்ததும் இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விடயம். இது போன்ற நிகழ்வுகளின் மூலமே ஈழத்து கவிதைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியும் என்பது பலரதும் கருத்தாக இருந்தது. ஆறு கவிதைத் தொகுதிகளையும் மிக விரைவான பார்வையை செலுத்திய போது, அதன் வீச்சுக்களையும் பரிமாணங்களையும் பார்த்தபோது என்னுள் எழுந்த உணர்வு “ எங்கே பெண்கள் கவிதை என்னும் சொல்லாடலை மிக விரைவில் தமக்குள் கையகப் படுத்தி விடுவார்களோ” என்பதுதான். எது எப்படியாயினும் ஈழத்துத் தமிழ் கவிதை இனி மெல்ல சாகும் என்பவர்கள் விரைவில் தமது கருத்தினை மாற்றிக் கொள்வார்கள் என்பது திண்ணம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.