எழுத்தாளர் எஸ்.பொ, எழுத்தாளர் குரு அரவிந்தன், எழுத்தாளர் அகில் ஆகியோருக்கு கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் பாராட்டு விழா ஒன்றை 26-06-2011 ஞாயிற்றுக் கிழமை மாலை 7:00 மணியளவில் ரொறன்ரோ பேர்ச்மவுண்ட வீதியில் உள்ள பார்வையாளர் அரங்கத்தில் நடத்தினர். அவுஸ்ரேலியாவில் இருந்து வருகை தந்திருந்த கனடிய தமிழ் இலக்கியத்தோட்டத்தில் விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை, தமிழகத்தில் இருந்து வெளிவரும் மூத்த சஞ்சிகைகளில் ஒன்றான கலைமகள் சஞ்சிகை நடத்திய சர்வதேச குறுநாவல் போட்டி – 2011ல் விருது பெற்ற எழுத்தாளர் குரு அரவிந்தன், இலங்கையில் இருந்து வெளிவரும் ஞானம் சஞ்சிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற எழுத்தாளர் அகில் சாம்பசிவம் ஆகியோர் இவ் விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.
தமிழ்த்தாய் வாழ்த்து, கனடியதேசியகீதம் ஆகிய இரண்டையும் செல்வி. அ. இராசையா இசைத்தார். அமைதி வணக்கத்தைத் தொடர்ந்து எழுத்தாளர் இணைய செயலாளர் திருமதி இராஜ்மீரா இராசையா வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து தலைமை உரையை இணையத்தலைவர் த. சிவபாலுவும், சிறப்புரையை முன்னாள் மகாஜனாக் கல்லூரி அதிபர் பொ. கனகசபாபதி அவர்களும் நிகழ்த்தினார்கள்.
அடுத்து ‘எழுத்துலகில் அகில் சாம்பசிவம்’ என்ற தலைப்பில் சின்னையா சிவநேசன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தி அவரைப் பாராட்டினார். திரு சண்முகராஜா, கருணாகரமூர்த்தி ஆகியோர் மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்திக் கௌரவிக்க, பாராட்டு விருதை திரு. எஸ்.பொன்னுத்துரை வழங்கினார். அதைத் தொடர்ந்து அகில் ஏற்புரை நிகழ்த்தினார்.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து எழுத்தாளர் குரு அரவிந்தனைப் பற்றி எழுத்துலகில் ‘குரு அரவிந்தனின் எழுத்தாளுமை’ என்ற தலைப்பில் கவிநாயகர் வி. கந்தவனம் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். அதிக வாசகர்களைக் கொண்ட எழுத்தாளர்களில் ஒருவராக இன்று அவர் திகழ்வதற்கு அவரது தன்னடக்கமே காரணம் என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து சட்டத்தரணி மனுவல் ஜேசுதாசன் குரு அரவிந்தனுக்கு மாலை அணிந்து கௌரவிக்க, பண்டிதர். ம.செ. அலெக்சாந்தர் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார். எழுத்தாளர் எஸ். பொன்னுத்துரை குரு அரவிந்தனுக்கு விருது வழங்கிக் கௌரவித்தார். தொடர்ந்து குரு அரவிந்தனின் ஏற்புரை இடம் பெற்றது.
அடுத்து ‘எஸ்.பொவின் இலக்கியப்பணி’ என்ற தலைப்பில் முனைவர் இ.பாலசுந்தரம் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து திரு. எஸ்.பொ அவர்கள் மாலை அணிந்து, பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார். தொடர்ந்து அமரர் ஆ.பொ. செல்லையாவின் மனைவியான திருமதி செல்லையா பாராட்டு விருதை வழங்கிக் கௌரவித்தார். எழுத்தாளர் திரு. எஸ். பொன்னுத்துரை ஏற்புரை வழங்கினார்.
இலக்கிய ஆர்வலர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். பலவேறு துறையைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்ட சிறப்புமிக்க விழாவாகவும் இது அமைந்திருந்தது. இரவு விருந்துடன் பாராட்டு விழா இனிதே முடிவுற்றது.
Malini Aravinthan: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.