எழுத்துவடிவத்திற்கு முன்பாய் மனிதர்களைப் பிணைக்கும் விஷயமாக இருந்துவருவது பேச்சு. உரையாடலினூடாய் ஒரு மனிதரை அவர் மனவோட்டத்தைப் புரிந்துகொள் வதும், பரிச்சயப்படுத்திக் கொள்வதும் என்றுமே அலுக்காத ஒன்று. ஒரு ஆளுமையின் மூலத்தை அறிந்துகொள்ளவும் சரி, சாதாரண மனிதர்களுக்குள் உறைந்துகிடக்கும் அசாதாரணங்களை அடையாளங்கண்டுகொள்ளவும் சரி உரையாடலாய் விரியும் நேர்காணல்கள் பெரிதும் உதவுகின்றன. இத்தகைய பல காராணங் களால் நேர்காணல்கள் பத்திரிகைகளில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கின்றன. நேர்காணலின் அவசியம் பற்றி, அரசியல் பற்றி, நேர்காணல் அமையவேண்டிய விதம் குறித்து, அமைகின்ற விதங்கள் குறித்து என நேர்காணல் என்ற எழுத்துவகையின் பல்வேறு பரிமாணங்களைப் பேசும் களமாக ஜூன் மாத புதுப்புனல் வாசகவட்டம் அமைந்தது. எழுத்தாளர்கள் வேட்டை கண்ணன், கிருஷாங்கினி, திரு, பாலைநிலவன், லதா ராமகிருஷ்ணன், மு.ரமேஷ், தவசி(இவர்கள் இருவரும் தொலைபேசி மூலம் வாசகவட்டத்தில் பங்கேற்றார்கள்), புதுப்புனல் ஆசிரியர் ரவிச்சந்திரன், நிர்வாக ஆசிரியர் சாந்தி கலந்துகொண்டு நேர்காணல் குறித்த பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்கள். பேட்டிகள் தனிநபரைக் குறித்ததாக மட்டும் இருக்கவேண்டுமா? அல்லது, முக்கிய சமூக நிகழ்ச்சிகள் குறித்ததாக இருக்கவேண்டுமா? சிறுபத்திரிகைகளில் யார் பேட்டிகாணப் பட வேண்டும்? யார் பேட்டிகாண வேண்டும்? இவற்றிற்கான அளவுகோல்கள் என்னென்ன? என பல்வேறு கோணங்களில் நேர்காணல் குறித்து கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அவற்றிலிருந்து சில இங்கே தரப்படுகின்றன:
ரவிச்சந்திரன்: நேர்காணலைப் பற்றிய ஒரு தெளிவான பார்வை தேவை. அதன் பொருட்டு இந்தக் கூட்டம். பன்முகம் இதழ்களில் விரிவான நேர்காணல்கள் வந்தது இங்கே நினைவுகூரத்தக்கது.
பால்நிலவன்: • இதுவரை 100 பேர்களுக்கு மேல் பேட்டியெடுத்திருக்கிறேன். தினமணியில் வேலைநிமித்தம் நிறைய பேரை பேட்டியெடுக்கவேண்டியிருந்தது. யாரை வேண்டுமானாலும் பேட்டிகாண எனக்கு சுதந்திரம் அளித்திருந்தார்கள். அதற்கென்று பிரத்யேகமாக ஆர்வத்தை ஏற்படுத்திக்கொண்டு புதுப்புது ஆட்களை சந்தித்துப் பேட்டி காண்பேன். • மழை பத்திரிகையில் எழுத்தாளர் கோபிகிருஷ்ணனின் பேட்டி அற்புதமாயிருந்தது. • பேட்டி எடுக்கிறவர்களுக்கு முக்கியத் தகுதி நேர்மை. பேட்டி என்பது வாசகர்களுக்கு புது வாசல்களைத் திறந்துவிடுமாயின் அது வெற்றியடைந்ததாகும். நேர்காணல். • செய்யப்படுகிற ஆளுமையின் இதுவரை தெரியாத பக்கங்கள் வெளிவருமானால் அதுவே நேர்காணலின் வெற்றியென்று நான் கருதுகிறேன்.
தவசி: • நேர்காணல் வெளியிடும்போது பேட்டிகாணப்படுபவர் குறித்த சுருக்கமான விவரக்குறிப்பு இடம்பெறல் அவசியம். • நேர்காணலுக்கு புகைப்படம் அவசியம்.பேட்டி காணப்படுபவரைப் நேரில் போய்ப் பார்த்துப் பேசினோம் என்பது வாசகர்களுக்குத் தெரியவேண்டும். • செறிவான, அடிப்படையான 10 கேள்விகளை வைத்து கச்சிதமாக நேர்காணல் நடத்தவேண்டும். நேர்காணல் சிறப்பிதழல்ல என்பதால் இந்த கவனக்குவிமையம் அவசியம். • கேள்விகளை நன்கு யோசித்துத் தெரிவுசெய்துகொண்டு ஓரளவு முன் தயாரிப்போடுதான் நேர்காணலுக்குப் போகவேண்டும். திரு: • நேர்காணலை அச்சு ஊடகத்திற்குக் கொண்டுவருவதில் நிறைய சிக்கல் இருக்கு. அவர்கள் சொல்வதை அதேவிதமாய் பதிவு செய்துவிட முடியாது. • இலங்கைப் போர் குறித்து நிறைய பேட்டிகள் படிக்கக் கிடைத்தது. • நேர்காணல்களும் புதினம்போல் மானுடம் சார்ந்து சிந்தனைகளைத் தூண்டுகின்றன. • சமீபத்தில் ஒரு பெரிய ஆளுமையை நேர்காணல் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. ஆறுமணிநேரம் பேசிக்கொண்டிருந்ததை செறிவு குறையாமல் எழுதுவது என்பது ஒரு சவாலாகவே அமைந்தது.
வேட்டை கண்ணன்: • பேட்டி ஓர் ஆளுமையின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்துவதாக அமையவேண்டும். நிறைய தெரிந்தவருக்கு அறிமுகம் தேவையில்லை. • நேர்காணலுக்கு இணக்கமான மனநிலை, விஷயங்களைப் பகிரக் கூடிய மனநிலை மிகவும் முக்கியம். • நான் தொழிற்சங்கவாதி கலியாணசுந்தரத்தைப் பேட்டி எடுத்தேன். ஆறு மணிநேரங்கள் தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டிருந்தார். பிறகு, நான் எழுதியிருப்பதைப் படித்துக் காட்டச் சொன்னார். என் நேர்மையை சந்தேகித்துக் கேட்கவில்லை என்றும் என்ன பேசினோம் என்பது பற்றி தான் இரட்டிப்பு கவனமாக இருக்கவேண்டியது அவசியம் என்றும் கூறினார். • சுபமங்களா இதழில் தான் பல்வேறு முக்கியமான ஆளுமைகளின் அகல்விரிவான நேர்காணல்கள் முதன்முதலில் வெளிவரத் தொடங்கின.
கிருஷாங்கினி: • எழுத்தாளரை நேர்காணல் செய்யும்போது அவருடைய படைப்புகள் குறித்த புரிதலோடு நேர்காணல் செய்யப்பட்டால் நன்றாக இருக்கும். • என்னுடைய சொந்தச் செலவில் பெண் கவிஞர்கள் – பெண் ஓவியர்களின் படைப்புகள் இடம்பெறும் கண்காட்சி ஒன்றை 2000த்தில் நடத்தினேன். அப்படியொரு முயற்சி தமிழகத்தில் அதுவே முதல் தடவை என்பதால் எனக்கே அலுத்துப்போகும் வரை என்னைப் பேட்டியெடுத்தார்கள். • குருவே சரணம் என்ற புத்தகத்திற்காக பல இசைக் கலைஞர்களைப் பேட்டியெடுக்க வேண்டியிருந்தது. அவர்கள் ஆற்றொழுக்காக பேசிக்கொண்டே போவார்கள். அவற்றிலிருந்து நூலுக்குத் தேவையானவற்றைத் தொகுத்தெடுத்துக்கொள்வேன்.
மு.ரமேஷ்: • ஒரு புத்தகத்தைப் படிப்பதைக் காட்டிலும் நேர்காணல் பயனுள்ளது. ஒருவகையில், நேர்காணல் சுய பரிசோதனை (பேட்டி காணப்படுகிறவர்களுக்கு). • நேரடியாகப் பேசுவதன் மூலம் அவர்கள் இயங்கிக்கொண்டிருக்கும் தளம் குறித்து நல்லவிதத்தில் எதிர்வினையாற்றலாம். நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் கேள்விகள் அமையும். • பேட்டி காண்பவர், காணப்படுபவர் – இருவேறு நிறுவனங்கள் – இருவேறு கருத்துமோதல்கள் – புதிய சிந்தனைகளைத் தோற்றுவிக்கும். இது, நேர்காணலின் குறிக்கோள். ஆனால், நடைமுறை வேறாக இருக்கிறது. • நேர்காணப் படுபவருக்கு சாதகமாகவே கேள்விகள் கேட்கப்படுகின்றன. ட்ரெண்டுக்கு ஏற்றார்ப்போல் மோஸ்தர் கேள்விகள் கேட்கப்படுகின்றன. நல்ல ஆளுமை நேர்காணப்படும்போது பத்திரிகைக்கும் நற்பெயர் ஏற்படுகிறது.
27.06.2010
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>