தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக் கழத்தில் அமைத்துள்ள தமிழவேள் கோ. சாரங்கபாணி இருக்கையின் வழியாக சிங்கப்பூர், மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் சிங்கப்பூரின் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை ”கரிகாலன் விருது” இவ்வாண்டு சிங்கை எழுத்தாளர் திருமதி ஜெயந்தி சங்கருக்குக் கிடைத்துள்ளது. 2012ஆம் ஆணடு முதல் பதிப்பாக வெளியான நூல்கள் பரிசீலனைக்கு எடுத்துகொள்ளப்பட்டன. சிங்கப்பூரிலிருந்து மொத்தம் 15 நூல்கள் வந்ததாகவும் அவற்றில் திருமதி ஜெயந்தி சங்கர் எழுதிய “திரிந்தலையும் திணைகள்” எனும் நாவல் விருதுக்குரியதாகத் தெரிவு செய்யப்பட்டதாகவும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயலகத் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் உதயசூரியன் தெரிவித்தார். அதேபோல் மலேசியாவில் 2012ஆம் ஆண்டுக்கான விருது திருவாட்டி சுந்தராம்பாள் எழுதிய “பொன்கூண்டு” சிறுகதைத் தொகுப்புக்கு வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் அடங்கிய குழு விருதுக்குரிய நூல்களைத் தெரிவு செய்தது. அவர்களின் பரிந்துரை அடங்கிய அறிக்கைகள் இணைக்கப்பட்டுள்ளன.
விருதுகளை வழங்கும் விழா டிசம்பர் மாதம் 14ஆம் தேதி சனிக்கிழமை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் நடைபெறவிருக்கிறது. அதனை ஒட்டி கருத்தரங்கு ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் சிங்கப்பூரில் தமிழ் வளர்ச்சி பற்றிய கட்டுரைகளை முனைவர் சீதாலட்சுமி, முனைவர் சு. கௌசல்யா, திருவாட்டி வீர. விஜயபாரதி ஆகியோர் படைப்பார்கள். கருத்தரங்கிலும் விருது வழங்கு விழாவிலும் கலந்துகொள்ள விரும்புவோர் கலந்து கொள்ளலாம்.
நா. ஆண்டியப்பன், தலைவர், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்
தேர்வுக்குழு அறிக்கை
மக்களை உயர்திணை என்று சுட்டியும் இலக்கிய வாழ்வியலை அக, புறத் திணைகளாகப் பகுத்தும் திணை மரபு கண்ட தமிழினம் அரசியல், சமூக, பொருளாதார நெருக்கடிகளால் உயர்திணை, அஃறிணை கடந்து உணர்ச்சிகளோடு போராடும் எந்திர மயமாகி முதல், கரு, உரிப்பொருள்களும் விரவிக் கலந்து மயங்குமாறு புலம்பெயர்ந்து அகத்தும், புறத்தும் அலைவுறுதலை இரு தமிழ்ப்பெண்களின் ஊடாக ஜெயந்தி சங்கர் தம் புதினத்தில் நுட்பமாகச் சித்திரித்துள்ளார் இப்புதினத்திற்குத் “திரிந்தலையும் திணைகள்” என்று பெயரிட்டிருப்பது ஒன்றே ஆசிரியரின் வாழ்வியல் நோக்கத்திற்கு மொழித்திற நுட்பத்திற்கும் போதிய சான்றாகும். 21-ஆம் நூற்றாண்டின் தலைவாயிலில் தோன்றிய இப்புதினம் ஒரு கால கட்டத் தமிழர் வாழ்வின் உயிர்ப்புள்ள பதிவாக காலத்தை விஞ்சி இலக்கிய வரலாற்றில் நிலை பெறும். எனவே இவர் “கரிகாலன் விருதுக்கு” மிகவும் ஏற்றவர் எனத் தேர்வுக்குழு பரிந்துரைக்கிறது.r
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.