நல்ல புத்தகம், நல்ல நண்பனைப் போன்றது . நேரம் பொன்னானது. அப்படிப்பட்ட நேரத்தை பயனுள்ள வகையில் செலவு செய்யும் முக்கியமான விசயங்களில் நூல் வாசிப்பிற்கே முதல் இடம் என்றால் அது மிகையாகாது! நம் பொழுதை வெட்டியாகக் கழிக்காமல் வெல்லக்கட்டியாகச் சுவைக்கச் செய்யும் வல்லமை வாசிப்பிற்கு மட்டுமே உண்டு. வாழ்வில் எதிர்பாராமல் ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்வதற்கும், சவால்களைச் சந்திப்பதற்கும் தேவையான சக்தியை நமக்குக் கொடுப்பதில் நல்ல புத்தக வாசிப்பிற்கு பெரும்பங்கு உண்டு. ஒரு இசைக்கருவியை மீட்டுவது மட்டுமே கலை அல்ல. நல்ல வாசிப்பும் ஒரு அற்புதமான கலைதான்! வாசிப்பு நம் வாழ்க்கைத் தரத்தையே உயர்த்த வல்லது. பதவியும் பட்டமும் பெறுவதற்காக மட்டுமல்லாமல் ஒன்றை ஏற்கவோ அன்றி ஒதுக்கவோ, மறுக்கவோ அன்றி விவாதிக்கவோ தேவையான ஆற்றலை நமக்கு நல்ல வாசிப்பு மட்டுமே வழங்க முடியும். தூக்கு மேடைக்குச் செல்ல வேண்டிய கடைசி நிமிடங்களில் கூட புத்தகம் வாசிப்பதை நிறுத்தவில்லை பகத்சிங்! ஆம், தூக்கு மேடைக்குச் செல்ல வேண்டிய சில நிமிடங்களுக்கு முன்னால், லெனின் எழுதிய ‘அரசும் புரட்சியும்’என்ற நூலை வாசித்த பிறகுதான் தூக்குக் கயிற்றை முத்தமிடப் போனான் பகத்சிங்.
எழுத்தாளர்களையும், பதிப்பகத்தார்களையும், நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்து வாசித்து மதிப்புரை வழங்குபவர்களையும் கௌரவிக்கும் விதமாகவே இப்போட்டி நடத்தப்படுகிறது. அனைவரும் கலந்துகொண்டு இப்போட்டியைச் சிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம். இப்போட்டியை நடத்துவதற்கான பரிந்துரையும், பரிசுத் தொகையும் வழங்க, தானே முன்வந்து அறிவித்திருக்கும் கவிதாயினி திருமதி மதுமிதா அவர்களுக்கு நம் மனமார்ந்த பாராட்டுதல்களும், வாழ்த்துகளும். தமிழ் எழுத்துலகை அரை நூற்றாண்டுக் காலமாகக் கவனித்து எழுதி வரும் மூத்த விமர்சகர் திரு. வெங்கட் சாமிநாதன் அவர்கள் வெற்றியாளர்களை தேர்ந்தெடுக்க இசைந்துள்ளார். அவருக்கு நம் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
இந்தப் போட்டிக்கு நாம் எதிர்பார்த்த அளவு மதிப்புரைகள் வரவில்லை என்பதால் ஆண்டு முழுவதும் இந்தப் போட்டியை நடத்துவது கடினம்; எனவே, இதனை மறுசீரமைக்கிறோம்.
பரிசுத் தொகைகளையும் சற்றே உயர்த்தியுள்ளோம். வருடம் முழுவதும் என்று அறிவித்திருந்ததை ஒரே போட்டியாக மாற்றியமைத்திருக்கிறோம். சென்னையில் ஜனவரி 10ம் தேதி தொடங்கி, ஜனவரி 22 (2014) வரை நடக்கவிருக்கிற புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, இப்போட்டிக்கான இறுதி நாளை ஜனவரி 30 என்று அறிவிக்கிறோம். ஜனவரி 30 (2014)ம் தேதி வரை வருகிற படைப்புகள் அனைத்தும் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படும். அன்பர்களின் உற்சாகமான பங்கேற்பை வரவேற்கிறோம்.
முதல் பரிசு ரூ.1000
இரண்டாம் பரிசு ரூ.750
மூன்றாம் பரிசு ரூ.500
மேலும் 3 பேருக்குச் சிறப்புப் பரிசாகத் தலா ரூ.200
போட்டிக்கான விதி முறைகள்:
*ஒருவர் எத்தனை மதிப்புரைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.
*போட்டிக்கு அனுப்பும் மதிப்புரைகள், இதற்கு முன் அச்சிலோ, இணையத்திலோ வேறு எங்கும் வெளியாகாத ஆக்கமாக இருக்க வேண்டும்.
*மதிப்புரைக்குத் தேர்ந்தெடுத்த நூலின் ஆசிரியர் பற்றிய சிறு குறிப்பு, நூல் வெளியான ஆண்டு, பக்க எண்ணிக்கை, விலை, பதிப்பக முகவரி ஆகிய விவரங்களை அளிக்க வேண்டும். நூலின் அட்டைப்படத்தைப் புகைப்படம் எடுத்து அனுப்புதல் நலம்.
*மதிப்புரைகளுக்குப் பக்க எண்ணிக்கை இல்லை.
*மாதந்தோறும் தேர்வான 12 மதிப்புரைகளிலிருந்து, ஆண்டின் இறுதியில் சிறந்த மூன்று ஆக்கங்களைத் தேர்ந்தெடுத்து முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் வழங்கப்படும்.
*பரிசு பெறுவோர், அயல்நாட்டில் வசிப்பவர் எனில், தம் இந்திய முகவரியை அளிக்க வேண்டும்.
*மூல நூல் எந்த மொழியில் இருந்தாலும் அவை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதாக இருக்க வேண்டியது அவசியம். மதிப்புரையும் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும்.
*மதிப்புரைகள் தெளிவான நடையில், யுனிகோடில் இருப்பது அவசியம். திரளாக வந்து போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை வெல்ல வாழ்த்துகள் நண்பர்களே! உங்கள் படைப்புகளை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அன்புடன்
பவள சங்கரி
Pavala Sankari
coralsri.blogspot.com
www.coralsri.com
Erode.
Tamil Nadu
தகவல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.