கனடாவில் இருந்து வாராவாரம் வெள்ளிக் கிழமை தோறும் வெளிவரும் உதயன் பத்திரிகையின் வருடாந்தம் நடக்கும் பல்சுவைவிழா சென்ற சனிக்கிழமை மாலை (26-10-2013) ரொரன்ரோவில் உள்ள ஆர்மேனியன் இளைஞர் மன்ற மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. முதல் நிகழ்வாக மங்கள விளக்கேற்றப்பட்டு கனடா கீதமும் தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டன. தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் விழாவில் இடம் பெற்றன. கனடிய பிரமுகர்களின் உரையைத் தொடர்ந்து, இந்தியாவில் இருந்து வருகை தந்திருந்த திரு. அரங்க நெடுமாறனின் பாட்டு மன்ற நிகழ்ச்சி முக்கிய கலை நிகழ்ச்சியாக இடம் பெற்றது. இதைவிட கர்நாடக இசை, நடனம், நாடகம் போன்ற நிகழ்ச்சிகளும் உள்ளுர் கலைஞர்களால் மேடை ஏற்றப்பட்டன.
கனடா உதயன் பத்திரிகை 1996ஆம் ஆண்டு மே மாதம் 3ஆம் திகதி முதன் முதலாக வெளிவந்தது. ஆர். என். லோகேந்திரலிங்கம் இதன் பிரதம ஆசிரியராக இருக்கின்றார். 1999ஆம் ஆண்டு நடைபெற்ற பல்சுவை விழாவின் போது கவியரசு வைரமுத்து அவர்கள் தமிழ் நாட்டில் இருந்து வருகை தந்து சிறப்பித்திருந்தார். 18வது ஆண்டு பல்சுவை விழாவான இந்த விழாவில் தமிழ் நாட்டின் பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் திரு. அரங்க நெடுமாறன் அவர்கள் கலந்து கொண்டார். அவரது நகைச்சுவை நிகழ்ச்சி சபையைக் கலகலப்பாக வைத்திருந்தது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வாகப் பல வருடங்களாக உதயன் பத்திரிகையில் எழுதும் தொடர் எழுத்தாளர்கள் இந்த நிகழ்வில் கௌரவிக்கப்பட்டார்கள். பல கனடிய அரசியற் பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ ராதிகா சிற்சபைஈசன் அவர்கள் எழுத்தாளர்களுக்குப் பாராட்டுப் பத்திரம் கொடுத்து, எந்தவொரு பலனையும் எதிர்பாராமல், சமுதாய நலன் கருதி எழுதிக் கொண்டிருக்கும் அவர்களைப் பாராட்டிக் கௌரவித்தார். உதயன் பத்திரிகையில் 'அனுபவம் புதுமை' என்ற பயணக்கட்டுரை எழுதும் எழுத்தாளர் குரு அரவிந்தன், 'சமுதாயம்' தொடர் எழுதும் எழுத்தாளர் த. சிவபாலு, 'அன்பின் தொனி' தொடர் எழுதும் பாஸ்டர் அல்பிரட் செருபிம் ஆகியோர் அவரிடம் இருந்து பாராட்டுப் பத்திரத்தைப் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து உதயன் பத்திரிகை விளம்பரதாரர்கள் கௌரவிக்கப்பட்டனர். பிரதம் ஆசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்களின் நன்றியுரையுடன் பல்சுவை விழா இனிதே முடிவுற்றது.
தகவல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.