பொதுநலவாய மாநாடு நடைபெறுவதற்கு இன்னும் மூன்று நாட்களே எஞ்சியுள்ளது. மாநாடு இந்த வாரம் 15 - 17 வரை கொழும்பில் நடைபெற இருக்கிறது. பொதுநல்வாய மாநாடு சிறீலங்காவில் நடைபெறுவதும் மகிந்த இராசபக்சே தலைமை ஏற்க இருப்பதும் பன்னாட்டு மட்டத்தில் பலத்த எதிர்ப்பு அலைகளை எழுப்பியுள்ளது. மன்னிப்பு சபை, மனித உரிமை காப்பகம், பன்னாட்டு நெருக்கடிக் குழு போன்ற மனித உரிமை அமைப்புக்கள் சிறீலங்காவில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணிக்குமாறு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்த வண்ணம் உள்ளன. நீண்ட நாள் இழுபறிக்குப் பின்னர் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என முடிவு எடுத்துள்ளார். அவருக்குப் பதில் இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்திஷ் இந்திய குழுவுக்கு தலைமை தாங்க இருக்கிறார். பிரதமர் மன்மோகன் சிங் பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணிப்பதன் மூலம் ஏழு கோடி தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளித்துள்ளார் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் நேற்று (திங்கட்கிழமை) பொதுநலவாய மாநாட்டை முழுதாகப் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டசபை ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
ஏற்கனவே கனடிய பிரதமர் பொதுநலவாய மாநாட்டை புறக்கணிகப் போவதாக கூறிவந்தவர் அதனை இப்போது உறுதி செய்துள்ளார். இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை என்பதே அவரது குற்றச்சாட்டாகும். சிறீலங்காவின் உச்ச நீதிமன்ற நீதியரசரை பதவி நீக்கியது, சட்டத்துக்கு அப்பால் நீதிமுறைக்கு முரணாக செய்யப்பட்ட கொலைகள், காணாமல் போதல், அரசியல் எதிராளிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் போன்றோரைச் சிறையில் அடைத்தல் போன்ற குற்றச்சாட்டுகளை கனடிய பிரதமர் காரணம் காட்டியுள்ளார்.
இப்போது மொரிஷியஸ் நாட்டின் பிரதமர் பொதுநவலாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கப் போவதில் என அறிவித்துள்ளார். மாநாட்டை ஏற்பாடு செய்துள்ள இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து திருப்தி அடைய முடியாது என மொரிஷியஸ் பிரதமர் நவின்சந்த்ர இராம்கூலம் (Navinchandra Ramgoolam) குறிப்பிட்டுள்ளார். அவருக்குப் பதிலாக மொரிஷியஸின் வெளிவிவகார அமைச்சர் ஆர்வின் பூஎல் (Arvin Boolell) பங்கேற்க உள்ளார். சுதந்திரம் அடைந்த பின்னர் முதல் தடவையாக மொரிஷியஸ் பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டை பிரதமர் புறக்கணிக்கிறார்.
ஆக மூன்று நாடுகளது தலைவர்கள் பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளார்கள். இந்தியா தனது முடிவை முன்னரே அறிவித்திருந்தால் மாநாட்டைப் புறக்கணிக்கும் நாடுகளது எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம்.
அண்மையில் உயிரோடு பிடிபட்டுப் பின்னர் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் இசைப்பிரியா பற்றி பிபிசி சனல் 4 வெளியிட்ட காணொளி உலகத்தின் மனச் சாட்சியை உலுப்பியுள்ளது. சிறீலங்கா அரசு வழமை போல் அந்தக் காணொளி போலி - அதுவொரு நாடகம் - என்று புறம் தள்ளினாலும் அதனை யாரும் நம்பத் தயாரில்லை.
பொதுநலவாய மாநாட்டின் துவக்க நாள் விழாவில் மட்டும் கலந்து கொள்வதென அய்க்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாநாட்டைப் புறக்கணிக்கப் போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. அத்தோடு நில்லாமல் வடக்கிலும் கிழக்கிலும் இடம் பெற்ற நிலப் பறிப்பை எதிர்த்து கவன ஈர்ப்புப் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.
ததேகூ எதிர்வரும் 15 ஆம் நாள் (வியாழக்கிழமை) வலிகாமம் வடக்கிலும் 16 ஆம் நாள் சம்பூரிலும் பாரிய கவன ஈர்ப்புப் போராட்டத்தை நடத்த இருக்கிறது.
15 ஆம் நாள் நாட்களில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன், கனடிய வெளிவிவகார துணை அமைச்சர் தீபக் ஒபராய், நியூசீலந்து உட்பட பல வெளிநாட்டு அரசு தலைவர்கள், அமைச்சர்கள், இராசதந்திரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாணத்தில் நிற்பார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. பிரித்தானிய பிரதமர் வலிகாமம் வடக்குப் பிரதேசத்தை சுற்றிப் பார்ப்பார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரித்தானிய பிரதமர் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொண்டாலும் போர்க்குற்றம் தொடர்பாக ஒரு பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் எனக் கேட்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். ஒரு பன்னாட்டு விசாரணைக்கு கோரிக்கை விடுப்பது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
வடக்கிலும் கிழக்கிலும் இடம் பெறும் இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை, பிரதேச சபை மற்றும் பொது மக்கள் பெருமளவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். முப்பதினாயிரம் மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நாட்களில் பிரித்தானிய பிரதமர் உட்பட பல வெளிநாட்டுத் தலைவர்கள், அமைச்சர்கள், இராசதந்திரிகள், ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாணத்துக்கு வருகை தர இருக்கிறார்கள். ஏராளமான ஊடகவியலாளர்கள் ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் குவிந்துள்ளார்கள்.
இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக புலம்பெயர்ந்த நாடுகளிலும் கண்டனப் போராட்டங்கள் நடத்துமாறு ததேகூ அழைப்பு விடுத்துள்ளது.
தாயகத்தில் எமது மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகள் இராணுவத்தினால் பறிக்கப்பட்டுள்ளது தெரிந்ததே.
வலிகாமம் வடக்கில் 7,500 குடும்பங்களைச் சேர்ந்த 25,000 மக்கள் 1990 இல் இருந்து கடந்த 23 ஆண்டுகளாக இடம்பெயர்ந்து 34 நலன்புரி சங்கங்களில் பலத்த அவலங்கள் மத்தியில் வாழ்கிறார்கள். இவர்களுக்குச் சொந்தமான 6,382 ஏக்கர் (102,112 பரப்பு) உறுதிக் காணிகளை இராணுவம் அபகரித்துள்ளது. இந்தக் காணிகள் 16 கிராம சேவையாளர் பிரிவுகளை முழுமையாகவும் 8 கிராமசேவையாளர் பிரிவுகளை அரைகுறையாகவும் கொண்டுள்ளது. இந்தக் காணிகள் 25.8 சதுர கி.மீ நிலப்பரப்புக்கு அல்லது கொழும்பு நகரத்தின் மூன்றில் இரண்டு பங்குக்கு ஒப்பானது. தங்கள் சொந்த வீடுவாசல்களில் மீள் குடியேறலாம் எனக் காத்திருந்த இந்த மக்கள் அரசினால் ஈன இரக்கமின்றி நடுத்தெருவில் விடப்பட்டுள்ளார்கள். அவர்களது கனவு தகர்க்கப்பட்டுள்ளது.
இதே போல் மே 25, 2006 அன்று இராணுவம் கண்மூடித்தனமான எறிகணை, பல்குழல் பீரங்கி, விமானத் தாக்குதல்களோடு மூதூர் கிழக்கைச் சேர்ந்த சம்பூர், கூனித்தீவு, நவரத்தினபுரம், சூடைக்குடா, கடற்கரைச் சேனை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் உடுத்த உடையோடு வீடுவாசல்களை இழந்து ஏதிலிகளாக மட்டக்களப்பு வரையும் ஓடி ஏதிலிக் கூடாரங்களில் சொல்ல முடியாத துன்ப துயரங்களோடு வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் ஏழு ஆண்டுகள் கழித்து 2013 மார்ச்சு 24 ஆம் நாள் நவரத்தினபுரம் மற்றும் கூனித்தீவு மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் எஞ்சிய சம்பூர், கடற்கரைச்சேனை, சூடைக்குடா மக்கள் தொடர்ந்து ஏதிலி முகாம்களில் முடங்கிக் கிடக்கின்றனர்.
சம்பூரில் மட்டும் இராணுவம் 10,000 ஏக்கர் காணியை ஆக்கிரமித்துள்ளது. இதில் 500 ஏக்கர் அனல்மின் உலை நிறுவ ஒதுக்கப்பட்டுள்ளது.
மேற் கூறப்பட்ட மக்களை அவர்களது சொந்தக் காணிகளில் மீள்குடியேற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் (ததேகூ) பொதுமக்களும் உண்ணாநோன்பு, ஆர்ப்பாட்டம் என 2011 ஆம் ஆண்டு தொடக்கம் போராடிவந்தும் அரசும் இராணுவமும் கொஞ்சமேனும் அசைந்து கொடுக்கவில்லை.
இன்று காலை (செவ்வாய்க்கிழமை) தொடக்கம் வலிகாமம் மேற்கு பிரதேச சபை இராணுவம் கையகப்படுத்தியுள்ள 6,382 ஏக்கர் பொதுமக்களின் காணிகளை மீளவும் அம்மக்களிடம் கையளிக்க வேண்டுமென வலியுறுத்தியும் உயர்பாதுகாப்பு வலையங்களை அப்புறப்படுத்துமாறு கேட்டும், இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியமர அனுமதிக்கப்பட வேண்டுமெனக் கோரியும் யாழ்ப்பாண மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலின் முன்பாக தொடர் உண்ணா நோன்புப் போராட்டம் தொடங்கியுள்ளது. இந்தத் தொடர் போராட்டம் நொவெம்பர் 16 ஆம் நாள் வரை நீடிக்கும். இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்த வலிகாமம் வடக்கு பிரதேச சபைத் தலைவர் சோமசுந்தரம் சுகிர்தன் அவர்களுக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
வீடுவாசல்களையும் காணிகளையும் இழந்து அகதி முகாம்களில் அவல வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கின்ற மயிலிட்டி, பலாலி, காங்கேசன்துறை உள்ளிட்ட வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தம்மை தமது சொந்த இடங்களில் மீள்குடியமர அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த உண்ணாநோன்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும் வழிபாட்டுத்தலங்கள் அழிப்பு, பெண்கள், சிறார்கள் மீதான பாலியல் வன்முறை, காணாமல் போனோரைக் கண்டு பிடித்தல், ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல், சிறையில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாத அரசியல் கைதிகளை விடுவித்தல் போன்ற 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டுள்ளன.
இராணுவம் கடந்த பல வாரங்களாக வலிகாமம் வடக்கில் உள்ள வீடுகளை இடித்து தரைமட்டமாக்கி வருகிறது. இது தொடர்பாக சனாதிபதி மகிந்த இராஜபக்சே அவர்களிடம் ததேகூ இன் தலைவர் முறையிட்டும் பலன் கிடைக்கவில்லை. சனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கா வீடுகள் இடிக்கப்படுவது நிறுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தாலும் இராணுவம் அப்படியான கட்டளை எதுவும் வரவில்லை என்று கைவிரித்துவிட்டு வீடுகளைத் தொடர்ந்து இடித்துத் தரைமட்டமாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த உண்ணா நோன்புப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு மக்களுடன் ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச சபைத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர். இதன்போது பெருந்திரளான உள்ளுர் மக்களும் மற்றும் பன்னாட்டு செய்தியாளர்களும் செய்தி சேகரிப்பதில் ஈடுபட்டுள்ளனர்.
கனடாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இங்குள்ள நான்கு பொது அமைப்புக்களோடு கைகோர்த்து எதிர்வரும் நொவம்பர் 14, 2013 வியாழக் கிழமை மாலை 3. 30 தொடக்கம் 6. 30 மணிவரை சிறீலங்கா அரசின் துணைத் தூதரகத்தின் முன்பாக (ரொறன்ரோ, 36 எக்லிங்ரன் அலெனியூ மேற்கு ( Yonge / Eglinton) கண்டனப் பேரணி நடத்துகிறது.
கனடியத் தமிழ் காங்கிரஸ், நாம் தமிழர் - கனடா, கனடாத் தமிழர் இணையம், நாடு கடந்த தமிழீழ அரசு ஆகியனவே அந்த நான்கு அமைப்புக்களாகும்.
இந்தக் கண்டனப் பேரணியில் கலந்து கொள்ளுமாறு மண்ணையும் மக்களையும் நேசிக்கும் பொதுமக்கள், தமிழ் உணர்வாளர்கள், ஊர்ச்சங்கங்கள் அனைவரும் அணி திரண்டு வருமாறு அழைக்கப்படுகிறார்கள்.
சுதந்திரம் மக்களது பிறப்புரிமை! காணிச் சொத்துரிமை மக்களின் அடிப்படை மனித உரிமை!!
அவற்றை மறுப்பது அநீதி! நீதிகிடைக்கும் வரை போராடுவோம்!
சிங்கள - பவுத்த இனவாதி மகிந்த இராசபக்சேயின் பாசீச முகத்தை அம்பலப் படுத்துவோம்!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.