"ஸ்பானிய உள்நாட்டுப் போரின்போது ஜேர்மனிய நாசிப் படைகள் குண்டுவீசி ஐயாயிரம் அப்பாவி மக்களைக் கொன்று ஒழித்த சற்றூரான ‘குவர்னிகா’, குண்டுகளுக்கு இரையான எல்லாத் தேசங்களுக்குமே பொருந்துகின்ற குறியீடாகும். ஈழத்தின் இன்றைய அவலத்திற்கு மிகப் பொருத்தமான முகப்புத் தலைப்பாக ‘குவர்னிகா’ என்ற தலைப்பைத் தாங்கி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 41வது இலக்கியச் சந்திப்பு மலராக இந்த மலர் வெளிவந்திருப்பது ஒரு காலத்தின் தேவையை நிறைவு செய்யும் இலக்கிய முயற்சியாக நோக்கத்தக்கதாகும்" என்று விமர்சகர் மு.நித்தியானந்தன் சென்ற ஞாயிற்றுக்கிழமை(6.10.2013) வால்த்தம்ஸ்ரோவில் நடைபெற்ற ‘குவர்னிகா’ மலர் வெளியீட்டின்போது தலைமையுரை ஆற்றுகையில் தெரிவித்திருந்தார்: "பன்னிரெண்டு நாடுகளில் இருந்து எழுதப்பட்ட எழுபத்தைந்துக்கும் அதிகமான ஆக்கங்களைத் தாங்கி எண்ணூறு பக்கங்களில் மிகப் பாரிய தொகுப்பாக வெளிவந்திருக்கும் ‘குவர்னிகா’ ஷோபாசக்தி, கருணாகரன, தமயந்தி போன்றோரின் மிகப்பெரும் உழைப்பில் உருவாகி உள்ளது. யுத்த மறுப்பையும், ஈழத்தில் நடைபெற்ற இனஅழிப்பு நிகழ்வுகளையும், சாதிய எதிர்ப்பையும், பெண்விடுதலையையும், வஞ்சிக்கப்பட்ட மனிதர்களின் கதைகளையும் பேசும் பெரும் தொகுப்பாக ‘குவர்னிகா’ மலர் அமைந்திருக்கிறது. கடந்த காலங்களில் புகலிட நாடுகளில் இடம்பெற்ற இலக்கிய சந்திப்புக்களின்போது வெளியான சுகனின் ‘இருள்வெளி’, கலைச் செல்வனின் ‘இனியும் சூல்கொள்’ ஆகிய மலர்களை அடுத்து மிகப்பெரும் உழைப்பில் உருவாகியுள்ள ‘குவர்னிகா’ என்ற இந்த மலர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இலக்கியச் சந்திப்பின் மகுடமாக அமைகிறது" என்று அவர் மேலும் பேசுகையில் தெரிவித்தார்.
"'மார்க்சியமும் அடையாள அரசியலும்’, ‘யாழ்ப்பாணத்து சாதிய ஆதிக்க வடிவங்கள்’, ‘அஞ்சுகம்’ என்ற மலையகத்தில் முதல் பெண் ஆளுமை, ‘சீமானின் ஜனரஞ்சக தமிழ்ப் பாசிசம்’ ஆகிய சிறந்த கட்டுரைகள் ‘குவர்னிகா’ மலருக்குக் கனதி சேர்க்கிறது" என்று அவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 41வது இலக்கியச் சந்திப்பு நிகழ்வில் கலந்துகொண்ட நிர்மலா ராஜசிங்கம் “புகலிடத்தில் இடம்பெற்ற இலக்கிய நிகழ்வுகள் போலன்றி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பு உயிர்ப்போடும், துடிப்போடும், கனதியான உரையாடல்களைக் கொண்டதாக அமைந்தது என்று தெரிவித்தார். ஈழத்து எழுத்தாளர்களும், கலைஞர்களும் கடந்த முப்பது ஆண்டுகாலப் பகுதியில் இத்தகையை உரையாடல்களைச் சந்தித்தது இல்லை என்றும், முஸ்லிம் எழுத்தாளர்கள், மலையக ஆய்வாளர்கள், பெண்ணியக் கவிஞர்கள், சிங்கள அறிஞர்கள் போன்ற பல தரப்பிலும் இருந்து ஆற்றப்பட்ட உரைகளும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற ஆக்க பூர்வமான கருத்தாடல்களும், தொடர்ந்தும் இலக்கிய சந்திப்பினை இலங்கையில் நிகழ்த்தவேண்டும் என்ற உணர்வினை இலங்கை எழுத்தாளர்கள் மத்தியில் தோற்றுவித்து உள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.
நவஜோதி ஜோகரட்னம் “ ‘குவர்னிகா’ என்ற தொகுப்பில் மிகக் கனதியான பகுதியாக ஆறு முக்கிய ஆளுமைகளின் நேர்காணல்கள் திகழ்கின்றன" என்று தெரிவித்தார். ‘லண்டன் தமிழ் வானொலி சண்றைஸில் ‘மகரந்தச் சிதறல்’ என்ற நிகழ்ச்சியினூடாக 300 ற்கும் அதிகமான பிரபல்யங்களை நான் வானொலியில் நேர்கண்ட அனுபவத்தின் பின்னணியில் நோக்கும்போது, இந்த நேர்காணல்கள் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது என்று நான் கூறுவேன். நேர்காணலுக்கு வருபவர்களிடமிருந்து ருசிகரமான தகவல்களை பெறுவது என்பதோ அல்லது அவர்களை இயல்பாக பேச வைப்பது என்பதோ, ஒற்றை வரி பதில்களோடு பதில்களை நிறுத்துக்கொண்டுவிடுகின்ற விருந்தினர்களை எதிர்கொள்வது போன்றவையோ நேர்காணலின் மிகவும் சிக்கலான அம்சங்களாகும்.
‘ஆனால் ‘நடிப்பு என் திறன், கவிதை என் அரசியல், நடனம் என் வேட்கை’ என்று கூறும் யாழினி, "‘சிவப்புச் சால்வைகளின் நிலப்பறிப்பை இன்னும் நாம் இலக்கியத்தின் ஊடாகச் சொல்லவில்லை’ என்று கூறும் ஓட்டமாவடி அறபாத், ‘பாலின மீட்டெடுப்பைத்தான் மாறிய பாலினம் என்கிறோம்’ என்னும் லிவிங் ஸ்மைல் வித்யா, ‘விடுதலைப் போராட்டம் ஆயுத பலத்தை நம்பியிருக்கக்;கூடாது’ என்று கூறும் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம், ‘ஒரு இனம் மட்டும் ஏன் வஞ்சிக்கப்பட்ட இனமாக இருக்கவேண்டும்?’ என்று கேள்வி எழுப்பும் திருக்கோவில் கவியுவன் ஆகியோரின் நேர்காணல்கள மிக விரிவாகவும், நுணுக்கமாகவும் அமைந்திருப்பது நல்ல நேர்காணல்களுக்கு முக்கிய எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது” என்று பாராட்டிப் பேசினார்.
மார்க்சிய விமர்சகர் தோழர் வேலு தனது உரையில் “ஒரு வரலாற்று நிகழ்வு எப்படி இருக்கிறதோ அதனை அப்படியே சித்தரித்துக்காட்டும் ஒரு கலைஞனின் நிலைப்பாட்டைவிட அந்த குறிப்பிட்ட வரலாற்றுத் தருணத்தைக் கடந்து சென்று அடுத்த கட்டத்திற்கு மக்களைத் தட்டி எழுப்பி, நடத்திச் செல்லும் ஒரு அரசியல்வாதி வேறுபட்டவனாகத் தெரிகிறான். அரசியல் நிலைப்பாட்டில் இந்து செயற்படும் ஒரு கலைஞனின் படைப்புக்களால் ஒருபோதும் திருப்தியடைய முடியாது” என்று மாக்சிய சிந்தனாவாதி கிராம்சியின் கருத்தினை மேற்கோள் காட்டி ‘குவர்னிகா’ வில் இடம்பெற்றிருந்த படைப்புக்களை விமர்சனம் செய்தார்.
இராணுவத்திற்கும், விடுதலை இயக்கங்களுக்குமிடையில் அகப்பட்டுக்கொண்ட சாதாரண மக்களின் பிரச்சனைகள் ஒரு போதும் பேசப்படுவதில்லை என்று குறிப்பிட்டு, அத்தகைய மக்களின் ஒரு குரலாக விமல் குழந்தைவேலின் ‘தங்கமலை ரகசியம்’ என்ற சிறுகதை அமைந்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
தமிழகத்திலிருந்து அதிதியாகக் கலந்து கொண்ட டாக்டர். நா. ஜெயராமன் தனது ‘காந்தியின் தீண்டாமை’ என்ற நூலை வெளியிட்டு வைத்துப் பேசினார். “தீண்டத்தகாத மக்களுக்கு இந்து மதத்தின் பெயரால் காந்தி இழைத்த துரோகங்களைக் குறித்து மிகத் துல்லியமாக தனது வாதங்களைத் தனது நூலின் முன் வைத்திருப்பதை அவர் எடுத்து விளக்கினார். இந்து வெறியரான, தலித்தின மக்களின் நய வஞ்சகத் துரோகியான காந்தி என்பவர் இம்மக்களின் ‘ஆபத்பாந்தவர்; அல்ல’ என்ற வரலாற்று உண்மைகளை காந்தி வாழ்ந்த காலத்திலேயே மாமேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் வெளிப்படுத்தியுள்;ளார் என்பதை அவர் விரிவாகக் குறிப்பிட்டார். ‘நீங்கள் எங்களுக்கான பிரதிநிதி இல்லை’ என்று காந்தியைப் பார்த்து டாக்டர் அம்பேத்கர் வட்டமேசை மகாநாட்டில் சொன்னதுதான் இன்னும் நிதர்சனம் என்று டாக்டர் ஜெயராமன் தனது உரையில் குறிப்பிட்டார்.
11.10.2013
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.