சொப்கா என்று அழைக்கப்படும் பீல் குடிமக்கள் ஒன்றியத்தின் மூன்றாவது வருடாந்தப் பயிற்சிப்பட்டறை சென்ற ஞாயிற்றுக்கிழமை மிசஸாகாவலியில் உள்ள சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. எமது சமூகத்திற்குப் பலன் தரும் நல்ல பல விடையங்கள் பற்றிய கருத்தரங்குகள் ஒவ்வொரு வருடமும் இத்தகைய பயிற்சிப்பட்டறையில் இடம் பெறுகின்றன. அந்த வகையில் இவ்வருடமும் அவை நிறைந்த நிகழ்வாக இந்தப் பயிற்சிப்பட்டறை அமைந்திருந்தது. நிழ்ச்சியின் ஆரம்பத்தில் சொப்காவின் உபதலைவர் திரு. குரு அரவிந்தனின் வரவேற்புரை இடம் பெற்றது. சமூக விழிப்புணர்வைக் கொண்டு வருவதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், சமூகத்திற்குத் தேவையான பல பலனுள்ள விடையங்கள் இந்த நிகழ்வில் ஆராயப்பட உள்ளதாகவும், இத்தகைய நிகழ்வுகளுக்கு ஒவ்வொரு வருடமும் வருகைதந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு ஆதரவு தரும் அங்கத்தவர்களையும், பொதுமக்களையும் பாராட்டுவதாகவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டு, நிகழ்வில் பங்குபற்றி உரையாற்றிய திரு. பொன் பாலராஜன் அவர்களையும், திரு. நடராஜா மூர்த்தி அவர்களையும் பாராட்டி நன்றிகூறி, இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த சொப்கா நிர்வாகசபை அங்கத்தவர் செல்வி. ராகுலா சிவயோகநாதனுக்கும், பல்கலைக் கழகத்தில் தனது முதலாண்டு அனுபவத்தை ஏனைய மாணவ, மாணவிகளுடன் பகிர்ந்து கொண்ட அங்கத்தவர் செல்வி. றுவிங்கா ஸ்ரீசண்முகதாசன் அவர்களையும் வரவேற்று நன்றி கூறினார்.
ராகுலா சிவயோகநாதனின் அறிமுக உரையைத் தொடர்ந்து மக்கள் தொடர்பு சாதனங்களின் நன்மை தீமை பற்றி திரு. பொன் பாலராஜன் உரையாற்றினார். அவர் தனது உரையில் நவீன தொடர்பு சாதனங்களைக் கையாளும்போது குறிப்பாக இளம் தலைமுறையினர் மிகவும் அவதானமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தினார். தெரிந்தோ தெரியாமலோ இணையத்தளத்தில் அல்லது முகநூலில் பதியப்படும் எந்தத் தகவலும் அடுத்த வினாடியே பலரைச் சென்றடைந்து விடும் என்பதையும் அதை அழித்துவிட முயன்றாலும் அது ஏற்கனவே பல இடங்களில் சேமிக்கப்பட்டு விடுமாகையால் அதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதையும் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டினார். சபையோர் கேட்ட கேள்விகளுக்கும் ஆதாரங்களுடன் பதிலளித்தார். அவரைத் தொடர்ந்து உளஎழுச்சியின் தாக்கங்கள் பற்றியும் அதை எவ்வாறு எங்கள் தேவைக்கேற்ப கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியம் என்பது பற்றியும், கோபத்தை அடக்கப் பழகிக் கொண்டால் அதனால் வரும் பல பாதிப்புக்களை எப்படித் தவிர்த்துக் கொள்ளலாம் என்பது பற்றியும் திரு. நடராஜா மூர்த்தி அவர்கள் உரையாற்றினார். சபையோரிடம் இருந்து எழுந்த கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.
தொடர்ந்து திரு. சுப்ரமணியம் மகேந்திரன் அவர்கள் சுமார் அறுபது வருடங்களுக்கு முன் இலங்கைப் பல்கலைக் கழத்தில் தனது அனுபவம் பற்றி வருகை தந்திருந்த மணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். இறுதியாக ராகுலா சிவயோகநாதனின் நன்றியுரையுடன் பயிற்சிப்பட்டறை இனிதே நிறைவு பெற்றது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.