கடந்த வெள்ளிக்கிழமை (யூலை 5 இல்) சோனி அரங்கில் ஆயனரும் சிவகாமியும் முதலாம் மகேந்திர பல்லவரும் அவர் மகன் முதலாம் நரேந்திர பல்லவரும் புலிகேசியும் நாகநந்தியும் அப்பரும் உயிரோடு எழுந்து வந்து காட்சி தந்தார்கள். அவையோர் மெய்மறந்து வைத்த கண் வாங்காமல் கடைசிவரை அவர்களைக் கண்டு களித்தார்கள். ஆறாம் ஏழாம் நூற்றாண்டில் காஞ்சிமாநகரைத் தலைநகராகக் கொண்டு கொடி கட்டிப் பறந்த பல்லவர்களது வரலாறு கண்முன் விரிந்தன. மாமல்லபுரம் பல்லவர்கள் சிற்பக்கலைக்கு கட்டியங்கூறி நிற்கிறது. இது 1,500 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பெற்றது. முதலாம் நரேந்திரவர்மனின் இன்னொரு பெயர் மாமல்லன். அவனால் எழுப்பப்பட்ட கலைக்கோயில் அவனது பெயரைத் தாங்கி நிற்கிறது. பெரும் பாறைகளைக் குடைந்து கற்றளி என்று அழைக்கப்படும் கோயில்களை கட்டியவர்களும் பல்லவரே. இங்குள்ள பஞ்சபாண்டவ இரதங்களை அவனுடைய மகன் முதலாம் நரசிம்மவர்மன் என்னும் மாமல்லன் கட்டியதாகவும், வேறு பல கட்டுமானங்களை அவனுடைய பேரன் பரமேசுவரவர்மனும் அவனுடைய மகன் இரண்டாம் நரசிம்மவர்மன் என்னும் இராஜசிம்மனும் கட்டியதாகவும் பல அறிஞர்கள் கூறுகிறார்கள். முக்கியமாக கணேச இரதம், கடற்கரைக் கோயில்கள் ஆகியவை இராஜசிம்மனால் கட்டப்பட்டுள்ளதாகவே அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள்.
ஆடல்கலைக்கு அழகு தேடிக் கொடுத்த ஆயனரின் மகளான சிவகாமி தொடக்க முதல் இறுதிவரை ஆடிக் கொண்டே இருந்தார். அப்பரின் பதிக்கங்களை இசை அமைத்துப் பாடி ஆடியதன் மூலம் கல்கியின் அழியாத காவியத்தை அப்படியே கண்முன் நிறுத்தியிருந்தார்கள்.
திருநாவுக்கரசரின் பின்வரும் பாடல் அரங்கில் கணீரென ஒலித்தது.
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே!
முதலில் அவனது பெயர் என்ன என்று கேட்கிறாள். அவனது உருவ அமைப்புப் பற்றிக் கேட்கிறாள் அவனது சொந்த ஊர் பற்றி கேட்கிறாள். பின் அவன் பொருட்டு பைத்தியமாகிறாள். நாட்டியம், இசை, நாடகம் என்ற மூன்று துறையும் சார்ந்த இளங்கலைஞர்கள், தேர்ந்த கலைஞர்கள் வளரும் கலைஞர்கள் என்று பலரும் பாராட்டத்தக்க முறையில் ஆடியும் பாடியும் நடித்தார்கள்.
மன்னர் நரசிம்ம பல்லவர் அரசி வானமாதேவியிடம் தனது இளமைக் காலத்தில் ஆயன சிற்பியின் மகள் சிவகாமியிடம் கொண்ட காதலை ஒப்புக் கொள்ளும் காட்சியில் தொடங்கி, நரசிம்மர் சிவகாமியின் இளமைக் காலம், புலிகேசியின் சகோதரர் நாகநந்திக்கு சிவகாமி மீது ஏற்படும் காதல், பரஞ்சோதி புலிகேசியிடம் பிடிபடல், புலிகேசியிடம் சிவகாமி சிறைப்படல், வஜ்ரபாகுவாக மகேந்திர பல்லவர் நடித்துப் புலிகேசியின் படையெடுப்பைக் காலதாமதம் செய்தல், நரசிம்மர் புலிகேசி படையை வெற்றிகொள்ளல் உள்ளிட்ட காட்சிகளுடன் இறுதியாக நரசிம்மர் மணம் முடித்துவிட்டார் என்பதறிந்து சிவகாமி இறைவன் ஏகாம்பரேசுரரையையே கணவனாக ஏற்கும் காட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக மின்னல் வேகத்தில் வந்து மறைந்தன.
காட்சிகள் நகர்ந்த வேகம் ஒரு திரைப்படத்தைப் பார்ப்பது போன்ற பிரமிப்பை ஏற்படுத்தியது.
சங்க கால அகப் பொருளை பக்திப் பாடல்களில் நாயன்மார்களும் ஆழ்வார்களும் புகுத்தினார்கள். அகப் பொருளில் தலைவன் - தலைவி காதலை தங்களை தலைவியாகவும் இறைவனைத் தலைவியாகவும் மாற்றி அமைத்தார்கள். அதன் மூலம் கலைகளை வெறுத்த சமணமதத்தையும் பவுத்த மதத்தையும் புறம்கண்டனர்.
சிவகாமியின் சபதம் பாரதக் கதையில் திரவுபதியின் சபதத்தையும் இறுதியில் நரசிம்மர் மணம் முடித்துவிட்டார் என்பதறிந்து சிவகாமி இறைவன் ஏகாம்பரேசுரரையையே கணவனாக ஏற்பது சூடிக்கொடுத்த நாச்சியார் ஆண்டாள் வரலாற்றையும் நினைவு படுத்தியது.
சிவகாமியின் சபதம் புதினத்தைப் படித்திராதவர்கள் அதன் சுருக்கத்தையாவது தெரிந்திராதவர்கள் கதையைப் புரிந்துகொள்ள வில்லங்கப்பட்டிருப்பார்கள். சிவகாமியைக் காதலிக்கும் நரசிம்மன் தந்தைக்குப் பின் முடிசூடி பாண்டிய இளவரசி வானமாதேவியை மணம்புரிந்தார்.
மகேந்திரவர்மன், நரசிம்மவர்வன், அப்பர், புலிகேசி வரலாற்றுப் பாத்திரங்கள். சிவகாமி அவரது தந்தையார் ஆயனச் சிற்வி, நாகநந்தினி கல்கியின் கற்பனைப் பாத்திரங்கள். சிவகாமியாக நடித்தவரின் ஆடல் மிக நேர்த்தி. உடை, காட்சி அமைப்புக்கள், ஒளி, ஒலி எல்லாமே கச்சிதம்!
தமிழர்களது வரலாறு கூறும் இப்படியான நாட்டிய நாடகங்களை எமது இளைய தலைமுறை பார்ப்பதால் நிச்சயம் எமது வரலாறு பற்றிப் பெருமை அடைவார்கள். தமிழர்கள் பேசும் பழம்பெருமை முற்றிலும் உண்மை என்பதை உணர்வார்கள்.
தமிழ்விழாவில் இயல், இசை, நாடகம் என முத்தழும் அரங்கேறினாலும் சிவகாமியின் சபதத்துக்குத்தான் முதல் பரிசு.
இதனை நெறிப்படித்திய மதுரை முரளீதரன் அவரோடு சேர்ந்து ஆடிப்பாடி நடித்த ஏனைய கலைஞர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். எல்லோரது மனதையும் கொள்ளை கொண்ட இன்னொரு சிறந்த கலைப்படைப்பான தண்ணீர் நடனத்தை இயக்கிய நந்தாவும் இதில் பங்கேற்றிருந்தார். அவருக்கும் பாராட்டுதல்கள். மேலும் வட அமெரிக்கச் சங்கங்களின் பேரவை மற்றும் கனடிய தமிழர் பேரவை ஆகியவற்றின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு இரட்டிப்புப் பாராட்டுக்கள்.
இப்படியான முயற்சியில் இங்குள்ள நடனப்பள்ளிகள் அவற்றின் ஆசிரியர்கள் ஏன் இறங்குவதில்லை? பொன்னியின் செல்வன் கல்கி அவர்களின் இன்னொரு புகழ்பெற்ற வரலாற்றுப் புதினம். சோழப் பேரரசர்கள் முதலாம் இராசராச சோழன் அவன் மகன் முதலாம் இராசேந்திர சோழன் இருவரது வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. அந்தக் காவியத்தை மேடையேற்றலாமே?
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.