2012 ஜனவரியில் செயற்பட ஆரம்பித்த எழுநா ஊடக நிறுவனம், 2012 / 2013ஆம் ஆண்டு பருவகாலத்திற்கான செயற்பாடுகளைப் பூர்த்திசெய்து 2013 / 2014ஆம் ஆண்டு பருவகாலச் செயற்பாடுகளுக்குள் காலடி வைக்கின்றது. எழுநா செயற்பட விரும்பும் வெளிகளில், எழுநாவின் நண்பர்கள் வட்டத்தினூடாக பெற்றுக்கொள்ளப்பட்ட பிரதிகளே கடந்த காலத்தில் வெளியீட்டிற்காக தெரிவு செய்யப்பட்டிருந்தன. தமிழ் சமூகங்களின் பல்வகைமையை உறுதிசெய்யுமுகமாக பிரதிகள் தெரிவுசெய்யப்பட்டிருந்த அதேவேளை, எழுநா வெளியீடுகளின் தரத்தைப் பேணுவதிலும் கவனம் செலுத்தப்பட்டிருந்தது. இப்பொழுது, 2013 / 2014 ஆம் ஆண்டு பருவகாலத்தில், எழுநா வெளியீடுகளுக்கான கோரலை பகிரங்கமாக முன்வைக்கின்றது. இளைய படைப்பாளிகள், அறிமுகமாகியிருக்காத எழுத்தாளர்களின் வெளியீடுகளை எழுநா ஊக்குவிக்க விரும்புகின்ற அதே நேரம், வெளியீட்டு வசதிகளற்ற / வெளியீட்டு வாய்ப்புக்கள் குறைந்த தரமான பிரதிகள் சார்ந்தும் அதிக கவனம் கொள்கின்றது.
இலங்கைத்தமிழ் பேசும் சமூகங்களுடன் தொடர்புடையவாறான பின்வரும் விடயங்களையொட்டிய பிரதிகள் கோரப்படுகின்றன.
1.மீள்பதிப்பு, 19ஆம் நுற்றாண்டைச் சேர்ந்த எழுத்தாளர்களின் தொகுப்புக்கள், பதிப்பிக்கப்பெறாத அரிதான கையெழுத்துப் பிரதிகள்
2.பல்கலைக்கழக இளமாணி, முதுமாணி, கலாநிதி கற்கை நெறிகளுக்காக அளிக்கபட்ட பதிப்பாக்கம் பெறாத ஆய்வுக் கட்டுரைகள்.
3.ஆங்கிலம் – தமிழ், சிங்களம் – தமிழ், மொழிபெயர்ப்புக்கள் (புனைவுகள், அபுனைவுகள்)
4.அரசியல் நோக்கு நிலைசார்ந்து சமத்துவத்தையும் மக்கள் நலனையும் முன்வைக்கும் பிரதிகள் . (தமிழ்தேசிய அரசியல், மலையக அரசியல், முஸ்லிம் அரசியல், இடதுசாரி அரசியல், தலித்தியம், பெண்ணியம் முதலான அரசியல் நோக்கு நிலைகள்)
5.தமிழில் நேரடியான புனைவுகள் (சிறுகதை, கவிதை, நாவல்)
6.துறை சார்ந்து பதிப்புத்துறை செழுமைப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன், துறை சார்ந்த முன்மொழிவுகளையும் எழுநா விரும்புகின்றது. (உ+ம் : சூழலியல், உளவியல்) மேற்குறித்த விடயப்பரப்புக்களில், இதுவரை பதிப்பாக்கம் பெறாத பிரதிகளின் முழுமையான கணனிக் கோப்பினை அல்லது கையெழுத்துப் பிரதியினை எழுநாவிற்கு அனுப்பி வையுங்கள்.
கணனிக் கோப்புக்கள், ஒருங்குறி (யுனிகோட்) தர எழுத்துருவில் வழக்கிலிருக்கும் docx அல்லது odt வடிவில், இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பப்படவேண்டும். கையெழுத்துப் பிரதிகள் தாளின் ஒரு பக்கத்தில் தெளிவான கையெழுத்தில் எழுதப்பட்டு கீழ்வரும் முகவரிக்கு பதிவுத்தபாலிலும் அனுப்பப்படவேண்டும்.
Ezhuna Media Foundation
No:4, Kettering Road
Isham, Kettering,
NN141HQ
United Kingdom
விதி சார்ந்த குறிப்புக்கள்
◦எழுத்தாளரின் பெயர், முகவரி, தொலைபேசி, மின்னஞ்சல் விபரங்கள் பிரதியோடு இணைப்படவேண்டும்.
◦பிரதிகள், இணையத்தளங்களில் அல்லது பருவ இதழ்களில் தொடர்களாக வெளிவந்திருந்தால் அவை பற்றிய முழுமையான விபரங்கள் இணைக்கப்பட வேண்டும்.
◦பிரதிகள் எழுநாவிற்குக் கிடைக்க வேண்டிய இறுதித்திகதி : 15 மே 2013
நூலாக்க நடைமுறைகள் பற்றிய குறிப்புக்கள்
1. தெரிவு செய்யப்படும் பிரதிகள் தேவைப்படுமிடத்து, மேலதிக செறிவின் நிமித்தம் திருத்தி எழுதுமாறு கோரப்படலாம்.
2. தெரிவு செய்யப்படும் பிரதிகளின் மொழியும் கருத்தும் சிதையாவண்ணம், வாசிப்பமைதி சார்ந்து மட்டும் பிரதிச் செம்மையாக்கம் எழுநாவினால் மேற்கொள்ளப்படலாம். அவ்விடத்து, செம்மையாக்கப்பட்ட இறுதிப்பிரதி எழுத்தாளரின் ஒப்புதல் பெற்றே வெளியாகும்.
3. வெளியீட்டிற்கு உகந்த பிரதியென எழுநாவினால் கருதப்படுகின்ற அதேநேரம், எழுநாவின் பொருளாதார வளத்தின் அடிப்படையில் அது 2013 / 2014ஆம் ஆண்டு பருவ காலப்பகுதியில் வெளியிடப்படக்கூடிய நிலையில் இல்லையெனில், அடுத்த பருவகாலத்திற்கான வெளியீடாக அதனைச் சேர்க்கும் பொருட்டு எழுநா எழுத்தாளருடன் தொடர்பு கொண்டு கருத்தினை அறியும்.
4. தெரிவு செய்யப்பட்ட பிரதியின் எழுத்தாளர் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பதிப்பாளர் – எழுத்தாளர் ஒப்பந்தம், மற்றும் நூலால் தொடர்பான தகவற்திரட்டுக் கையேடு முதலானவற்றை பூர்த்தி செய்து அனுப்புமாறு கோரப்படுவார். (பிரதி செம்மையாக்கபப்டும் காலப்பகுதியில், எழுத்தாளர் தொடர்ச்சியாக எழுநாவோடு தொடர்பிலும், விரைவான செயற்பாட்டிலும் இருப்பதனை எழுநா வலியுறுத்துகின்றது.)
5. வெளியிடப்பட்ட பிரதிகளுக்கான உரிமப்பணம், பிரதியின் இலங்கைக்கான விலையின் 25 வீதமாகும். முதல் ஆறாவது மாதத்திலும், பதினெட்டாவது மாதத்திலும் பின்னர் அதிலிருந்து ஒவ்வொரு வருடத்திலும் விற்பனை செய்யப்பட்ட பிரதிகளின் அடிப்படையில் உரிமப்பணம் கணக்கிடப்பட்டு எழுத்தாளரிடம் சேர்ப்பிக்கப்படும்.
6. எழுநாவின் வெளியீடுகள் அனைத்தும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported (CC-BY-SA 3.0) உரிமத்தின் கீழ் வெளியிடப்படுகின்றன. எழுத்தாளரோ, வேறெவரோ வெளியிடப்பட்ட பிரதியினைப் பயன்படுத்துவதாயின் அதே உரிமத்துடனேயே பயன்படுத்த முடியும். மேலதிக விபரங்களுக்கு http://creativecommons.org/licenses/by-sa/3.0/
இலங்கைத் தமிழ்பேசும் சமூகங்களின் எதிர்காலத்திற்கு, நாம் விட்டுச்செல்லும் அறிவுப் பெறுமதியை மேலும் அதிகரிக்க முயற்சிக்கும் எழுநாவின் செயற்பாடுகளுக்கு தமிழ்ச்சமூகங்களிடமிருந்து நிறைந்த ஆதரவைக் கோரி நிற்கின்றோம்.
www.ezhunamedia.org
www.ezhunamedia.org/blog
நன்றி
தகவல்: எழுநா இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.