"ஒருவரை ஒரு நாட்டிலிருந்து வெளியேற்றி விடலாம். ஆனால் அவருள் உள்ள நாட்டை(நாட்டுப்பற்றை-உணர்வை) வெளியேகொண்டு வரமுடியாது." வெளிநாடு சென்றாலும் மண்வாசனை மாறாது எனச் சுருக்கமாகச் சொல்லலாம். சிகாகோ தமிழ் கத்தோலிக்கர்கள் கூட்டாக ஒன்றிணைந்து ஒரு கத்தோலிக்கத் திருப்பலியுடன் பொங்கலைக் கொண்டாடுவதற்காக சன. 20ம்தேதி 2013 அன்று குழுமியபோது மேற் குறிப்பிட்ட வாசகங்கள் சாலப் பொருந்துவதாக இருந்தது. தமிழ் நாட்டிலிருந்து பத்தாயிரம் மைல் தொலைவில் இருக்கிறோம். ஆனால் தமிழும் செழுமையான நமது மரபுகளும் பண்பாடும் நாங்கள் அமெரிக்காவிலிருந்தாலும் நாங்கள் யார் என்ற அடையாளத்தின் ஒரு பகுதியாக உள்ளன. நமது தமிழ் பாரம்பரியத்தையும் கத்தோலிக்கர் என்ற நம்பிக்கையையும் பொங்கல் திருப்பலியோடு கொண்டாட ஒரே கடவுளின் தமிழ்த் தாயின் பிள்ளைகளாய் சேர்ந்து வந்தோம். எங்களின் ஆன்ம வழிகாட்டியும் தலைவருமாக உள்ள அருட்திரு. பெஞ்சமின் சின்னப்பன் எங்களுக்காகத் திருப்பலி நிறைவேற்றினார்.
வினாடி – வினா
பொங்கல் பொருள் விளக்கும் வினாடி – வினா மூலமாக வந்திருந்த குழந்தைகளை நெறிப்படுத்தினார். அமெரிக்காவில் பிறந்த பத்து வயதிற்குட்பட்ட தமிழ்க் குழந்தைகள் பொங்கல் என்பது அறுவடைத் திருநாள் நன்றி தெரிவிக்கும் விழா குடும்பத் திருநாள் என்றெல்லாம் கூறியது நம்மை வியக்கச் செய்தது. அமெரிக்காவிற்கு வந்தாலும் தமிழர்கள் தமிழ்ப்பண்பாட்டையும் குடிபெயரச் செய்துள்ளதற்கும் தங்கள் குழந்தைகளுக்கும் அதைக் கொண்டு சென்றுள்ளதற்கும் வேறு ஏதேனும் சான்று வேண்டுமா?
தனது மறையுரையில் அருள்திரு.பெஞ்சமின் "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற நமது தொன்மையான நம்பிக்கையை சுட்டிக் காட்டி வாழ்நாள் முழுவதும் நாம் நம்பிக்கையோடு வாழ வேண்டியதன் தேவையை வலியுறுத்தினார். குடும்பங்கள் தங்களின் மிகச் சிறந்த உற்பத்தியைக் கடவுளுக்குக் காணிக்கையாக்கிட கோயில்களுக்கும் வழிபாட்டிடங்களுக்கும் எடுத்துச் சென்று அறுவடைத் திருநாளை நன்றி தெரிவிக்கும் திருநாளாகக் கொண்டாடி மகிழ்கின்றனா. இதற்குக் காரணம் நமது பண்பாட்டிலும் நம்பிக்கையிலும் நல்லன அனைத்தும் கடவுளிடமிருந்து வருகின்றன என்று உறுதியாக நாம் நம்புவதால்தான். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே இவ்வாறு நடைபெற்று வருவதை விவிலிய வாசிப்புகள் எடுத்தியம்பின.
நன்றி மறப்பது...
நமக்குள் பல வேறுபாடுகள் நிலவினாலும் மக்கள் பயிர்கள் அறுவடையில் மகிழவும் அனைவரையூம் ஒன்றிணைந்து விழா கொண்டாடவும் பொங்கல் அழைக்கிறது. உழவன் சேற்றிலே கால் வைக்காமல் நாம் சோற்றிலே கை வைக்க முடியாது. வலியில்லாமல் வாழ்வில்லை என்பதையும் அடிக்கோடிட்டுக் காண்பித்தார். நம் வாழ்வில் நாம் பெற்றுக் கொண்ட அனைத்துப் பேறுகளுக்காகவும் நன்றியுணர்வோடு இருப்பதன் தேவையை நன்றி மறப்பது நன்றன்று. நன்றல்லது அன்றே மறப்பது நன்று என்பதை நமது பண்பாடும் நம்பிக்கையும் வலியுறுத்துவதையும் அவர் எடுத்துரைத்தார்.
அழகிய தமிழ்ப் பாடல்களுடன் நடந்தேறிய தமிழ்த் திருப்பலி எமக்கு ஒரு ஆன்ம ஊட்டமாக அமைந்தது. அதன்பின் பல்வேறு வகையான பொங்கலும் வடை சட்னி சாம்பார் வகைகளும் பரிமாறப்பட்டன. இந்தக் குளிர் நாளிலும் இனிக்கும் கரும்பை சுவைத்து பொங்கலோ பொங்கல் என்று கூவி சிகாகோ தமிழ்க் கிறித்தவர்கள் நன்றித் திருவிழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
“ஒவ்வொரு அநீதியின் போதும் அறச்சீற்றம் கொண்டு நீ பொங்குவாயானால், நீ என் தோழர்.”
தகவல் :ஆல்பர்ட்,
விஸ்கான்சின்,அமெரிக்கா.
262-510-2434
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.