ஈழத்து கவிஞரும் ஊடகவியலாளரும் குளோபல் தமிழ்செய்திகளின் எழுத்தாளருமான தீபச்செல்வனின் மூன்று புத்தகங்கள் தமிழகத்தில் சென்னையில் தற்பொழுது நடைபெற்று வரும் 36ஆவது சென்னைப் புத்தகக்கண்காட்சியில் வெளிவந்துள்ளன. ஈழத்து மக்களின்பிரச்சினைகளைப் பற்றிய இந்தப் புத்தகங்கள் முக்கியத்துவம் கொண்டவையாக அமைந்துள்ளன.
கிளிநொச்சி – போர் தின்ற நகரம்
தனது சொந்த நகரான கிளிநொச்சியின் யுத்தத்திற்குப் பின்பானஅழிவு நிலையை உண்மையின் பதிவுகளாக குளோபல் தமிழ்செய்திகள் இணையத்தில் தீபச்செல்வன் எழுதியிருந்தார். அவ்வாறு, கிளிநொச்சியில் சந்தித்த மனிதர்களையும் சம்பவங்களையும் பற்றி வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அவர் எழுதிய பதிவுகள் தொகுக்கப்பட்டு இப்பொழுது 'எழுநா' வெளியீடாக நூலாக்கப்பட்டுள்ளது.
இத்தொகுப்பில், யுத்தம் விழுங்கிய மனிதர்களுடைய இன்றையஅவல வாழ்வைப் பதிவு செய்திருக்கும் அதேநேரத்தில், யுத்ததிற்கு முன்பான அவர்களுடைய செழுமையான வாழ்வும் ஒப்பீடு செய்யப்படுகின்றது. இதன் மூலம் கிளிநொச்சியின்அழிவையும், அழிவின் கோரத்தையும், மனிதர்களின் துயரத்தையும் உணர்ந்து கொள்ள முடியும் .கிளிநொச்சி மண்ணின் வரலாற்றை பதிவு செய்திருக்கிறது இந்த நூல்.
எதற்கு ஈழம்?
ஈழம் என்பது பல பத்தாண்டுகளாக போராடி மாண்ட போராளிகளின் கனவு மட்டுமல்ல முப்பதாண்டுப் போரில், வாழும் கனவோடு கொல்லப்பட்டவர்களுக்கான அஞ்சலியும்தான். களைத்தவர்களும் தோற்றவர்களும் போக புதிய தலைமுறையின் கனவாக ஈழம் இருப்பது தவிர்க்கமுடியாதது. தலைமுறைகள் மாறிக் கொண்டேயிருக்கிற நிலத்தில் எத்தனை அழிவுகளின் பின்னரும் அடக்குமுறைகளின் பின்னரும் கனவு வெவ்வேறு வடிவங்களில் புதுப்பிக்கத்தான் செய்யும்.
தனி ஈழம் ஈழத் தமிழ் மக்களின் கோரிக்கையாக மட்டுமன்றி இலங்கையில் அறுபது ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் இனப்பிரச்சினைக்கான தீர்வாகவும் அமைகிறது என்றுகுறிப்பிடும் இந்நூல் எதற்கு ஈழம் தேவை? என்பதைக் குறித்து விரிவாகப் பேசுகிறது. ஈழம் தொடர்பில் பல்வேறு ஊடகங்களில் தீபச்செல்வன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். ஈழத்திற்குள் நம்மை அழைத்துச் செல்லும் இந்நூல் எதற்கு ஈழம் என்பதைக் குறித்துமக்களின் வாழ்விலிருந்து பேசுகின்றது.
PRAY FOR MY LAND
நான்காம் ஈழப்போர் பற்றிய தீபச்செல்வனின் கவிதைகள் மிகவும் முக்கிய இடத்தை வகிக்கின்றன. போருக்குள் பிறந்துஅதற்குள்ளேயே வளர்ந்த தீபச்செல்வனின் குரல் வலிமையான ஈழக் குரலாக சமகாலக் கவிதைகளில் முக்கியம் பெறுகிறது. ஈழத்துக் கவிதைப் பரப்பிலும் தமிழ்க் கவிதைப் பரப்பிலும் மிகமுக்கியமான கவிஞராக இருக்கும் தீபச்செல்வனின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார் பலமுக்கியமான மொழிபெயர்ப்புக்களை செய்து வரும் லதா ராமகிருஷ்ணன்.
தீபச்செல்வனின் குரல் ஈழ மக்களுடைய குரல். அவரது குரலை ஒரு சர்வதேச மொழியில் மொழிபெயர்ப்பதன் மூலம் அவரது மக்களின் குரலை இந்த உலகப் பரப்பில் ஒலிக்கச் செய்யமுடியும். ஆறாத துயராகவும் தீரா தாகத்தின் குரலாகவும் அரசியல் ரீதியாக முக்கியம் பெறும் தீபச்செல்வன் கவிதைகள் முதன் முதலில் மிக முக்கியமான ஒரு மொழிபெயர்ப்பாளரால் மிக நெருக்கமாக மொழிபெயர்க்கப்பட்டிருகின்றன.
நன்றி: குளோபல்தமிழ்நியூஸ்.நெட்
அனுப்பியவர்: சு.குணேஸ்வரன்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.