எதிர்வரும் 14.10.2012 (ஞாயிறு) அன்று ஹட்டனில் உள்ள கிறித்தவ தொழிலாளர் பொழில் மண்டபத்தில்(ஹைலன்ஸ் கல்லூரிக்கு அருகாமையில்) காலை 10.00 மணிக்கு "புதிய பண்பாட்டுத் தளம்" (புதிய பண்பாட்டுக்கான வெகுஜன அமைப்பு) பிரகடனப்படுத்தப்படவுள்ளது. திரு. லெனின் மதிவானம் தலைமையில் நடைப்பெறவிருக்கும் இந்நிகழ்வில், அங்குரார்பண உரையை கலாநிதி. ந.இரவீந்திரன் நிகழ்த்த உள்ளார். இவைத் தவிர புதிய பண்பாட்டு அமைப்புக்கான தேவைக் குறித்து திரு. மோகன் சுப்பிரமணியம், கவிஞர்.சு. முரளிதரன், திரு. அ.ந. வரதராஜ், சிறுகதையாசிரியர் கொ. பாபு, கலைஞர் பிரான்ஸிஸ் ஹெலன், திரு. சு உலகேஸ்பரா முதலானோர் உரையாற்ற உள்ளனர். இந்நிகழ்வில் மூத்த இடதுசாரி தோழர்களான கே. சுப்பையா, நீர்வை பொன்னையன் முதலானோரும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
இன்றைய உலகமயமாதல் சூழலில் பன்னாட்டுக் கொம்பனிகளின் வேட்டைக்காடாக எமது மண் மாற பண்பாட்டுச் சிதைவுகள் முனைப்பாக்கப்பட்டு வருகிறது. சொந்தப் பண்பாட்டை இழக்கும்போது பிறர்க்குப் பூரண அடிமையாதல் தவிர்க்க முடியாது என்றவகையில் பண்பாட்டுத் தளத்திலான இந்தத் தாக்குதல்கள் என்பதறிவோம். இத்தகைய இருள் சூழ்ந்த நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்?
அரை அடிமைத்தனங்களோடு நீடித்துவந்த பண்பாட்டை அப்படியே பாதுகாப்பதில் பொருளில்லை. முற்போக்கு உணர்வோடு தொடர்புடைய புதிய பண்பாடு கட்டியெழுப்பப்படுவதற்காக உழைக்க வேண்டியவர்களாய் உள்ளோம். அதன்பொருட்டு விடுதலை நாடும் அனைவரும் ஒன்றிணந்து இயங்க ஏற்றதாக "புதிய பண்பாட்டுத் தளம்" ஒன்றினை உருவாக்க நண்பர்கள் சிலர் கூட்டு முடிவை எட்டினோம். வெகுஜன அமைப்பாக அமையும் இதன் கட்டமைப்பு, குறிக்கோள்கள், மார்க்கம் என்பவற்றைத் தொடர்ந்து கூட்டுவிவாதங்கள் வாயிலாக எட்டும்.
இந்த அமைப்பு, சமூக மாற்றத்துக்காக உழைக்கும் எந்தவொரு கட்சிக்கும் சார்பானதோ எதிரானதோ இல்லை. அந்தவகையில் எந்தக் கட்சியிலும் உள்ள ஒருவர் தனது கட்சிக்குரிய அமைப்பாக்கும் நோக்கம் இல்லாமல், தனது கட்சிக்கு விரோதமாயல்லாத வெகுஜன செயற்களங்களில் எம்மோடு சேர்ந்து இயங்க இயலும். இது பரந்துபட்ட பண்பாட்டுத் தளம் என்கிறவகையில், வெவ்வேறு கலை-இலக்கிய அமைப்புகளில் உள்ளவர்களும் எம்மோடு சேர்ந்து இயங்கத் தடை இல்லை.
இந்த நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு மேலான கருத்துகளை முன்வைப்பதோடு சேர்ந்து இயங்க வேண்டும் என விருப்பங்கொண்டுள்ளோம்.
லெனின் மதிவானம்
(அமைப்புக்குழு, புதிய பண்பாட்டுத் தளம்)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.