அகிலன் வேலைக்கு அவசரமாகப் புறப்பட்டுக் கொண்டிருந்தான். அவன் மெல்பேர்ண் நகரத்திலுள்ள வைத்தியசாலையில் வைத்தியராகப் பணி புரிகின்றான். வழக்கமாக காலை ஆறுமணிக்கெல்லாம் கிழம்பிவிடுவான்.

“கொரோனா காற்றாலை பரவுமா அப்பா?” உறங்கிக் கொண்டிருந்த அக்சரா, விழித்தெழுந்து திடீரெனக் கேட்டாள்.

அக்சரா ஏழாம்வகுப்புப் படிக்கின்றாள். கொரோனா தொடர்பான `கிறியேற்றிவ்’ படைப்பொன்றை எழுதுமாறு பாடசாலையில் கேட்டிருந்தார்கள். அக்சரா தற்போதைய சூழ்நிலையில் பள்ளிக்குப் போவதில்லை. சூம் கல்வித்திட்டத்தின் (Zoom education) மூலம்--- ஆசிரியருக்கும் மாணவருக்குமிடையேயான வீடியோ தொடர்பாடல்--- வீட்டில் இருந்தபடியே கல்வி பயின்று வருகின்றாள். அக்சராவின் கேள்விக்கு விரிவான விளக்கம் குடுக்கப் போனால், வேலைக்குப் பிந்த நேரிடலாம என்பதை உணர்ந்தான் அகிலன்.

“பின்னேரம் வந்து சொல்கின்றேனே!” என்றபடி வாசலை நோக்கிச் சென்றான்.

“நான் கதவை மூடுகின்றேன்” எழுந்து வந்த அப்பா, பின்னாலே நின்று சொன்னார். அப்பாவுக்குப் பின்னால் அம்மா மறைந்து நின்று எட்டிப் பார்த்தார்.

“கவனம்…. அகிலன்…”

அம்மா `கவனம்’ என்று சொன்னது `ஆட்கொல்லி’ கொரோனாவைத் தான். அந்தக் `கவனம்’ அகிலனுக்கு சலிப்பைத் தந்தது.

“அம்மா…. நான் சேவை செய்வதற்காகத்தானே படித்தேன். எல்லாவிதமான முன் எச்சரிக்கைகளோடுதான் நாங்கள் எல்லாரும் வைத்தியசாலையில் வேலை செய்கின்றோம்.”

இந்தக் கடைசி வழியனுப்பும் காட்சி, இப்போது சில வாரங்களாக புதிதாக நடைமுறைக்கு வந்திருக்கின்றது.

அகிலன் வேலைக்குப் புறப்பட்டு சில நிமிடங்களில் வீட்டுத்தொலைபேசி அடித்தது. அது அகிலனின் மனைவி சித்திராவினுடையது. சித்திரா தாதியாக வேலை செய்கின்றாள். இவர்கள் இருக்கும் இடத்திலிருந்து மூன்றுமணி நேரம் கார் ஓடும் தூரமான பெண்டிக்கோவில் இருக்கின்றாள். வெள்ளிக்கிழமை இரவு வீட்டுக்கு வரும் சித்திரா, மீண்டும் திங்கள் அதிகாலையில் வேலைக்குப் புறப்பட்டு விடுவாள். தற்போதைய சூழ்நிலையால் கடந்த மூன்றுவாரங்களாக அவள் வீட்டிற்கு வருவதில்லை. தினமும் தொலைபேசியில் மாமா, மாமியுடனும் அக்சராவுடனும் உரையாடுவாள். அகிலனுடன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அலைபேசியில் உரையாடுவாள். பெரும்பாலும் அவர்கள் இருவரினதும் உரையாடல் தொழில் சார்ந்ததாகவே இருக்கும்.

அகிலனுக்கு 38 வயதாகின்றது. சித்திரா அவனைவிட மூன்று வயதில் இளையவள். இருவரும் விரும்பித் திருமணம் செய்துகொண்டவர்கள். வைத்தியத்துறையில் இருக்கும் ஒருவரினால் தான், தன்னை நன்றாகப் புரிந்து கொள்ளமுடியும் என்பது அகிலனின் நம்பிக்கை. சித்திராவின் நம்பிக்கையும் கூட.

சித்திராவின் இந்த அதிகாலை தொலைபேசி அழைப்பு அக்சராவை நித்திரையில் இருந்து எழுப்புவதற்கானது.

“அக்சராக்குட்டி…. படிப்பெல்லாம் எப்பிடிப் போகுது?” என உரையாடல் ஆரம்பிக்கும். அதன்பின்னர் தனது வைத்தியசாலைப் புதினங்களைச் சுருக்கமாகச் சொல்லி, `சாப்பாட்டைக் கவனித்துக் கொள். வெளியே எங்கேயும் போகாதை’ என்று சொல்லி முடிப்பார்.

சித்திரா தொலைபேசியை வைக்கும்போது, மாமாவும் மாமியும் ஏகதாளத்தில் “பிள்ளை… கொரோனா கவனம். எப்போதும் மாஸ்க், கிளவ்ஸ் எல்லாம் போட்டபடியே இருந்து கொள்” என்று சொல்லிக் கொள்வார்கள்.



மொத்த உலகமுமே இன்று இந்தக் கொரோனாவிற்குள் முடங்கிப் போயிருக்கிறது. இரவுநேர ஊரடங்கு அமுலில் இருந்தது. தெருக்களெல்லாம் வெறிசோடிப் போயிருந்தன. கார்களின் நடமாட்டம் வெகுவாகக் குறைந்திருந்தன. தொழிற்சாலைகள், களியாட்ட இடங்கள், வழிபாட்டிடங்கள், சினிமா, `பப்கள்’, மசாஜ் சென்ரர்கள் போன்றவை தற்காலிகமாக மூடப்படிருந்தன. உணவகங்கள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. முன்பென்றால் பாலத்தைக் கடக்கும்போது சிற்றியில் உள்ள கட்டடங்கள் எல்லாம் மங்கலாக பனிப்புகாருக்குள் இருப்பது போல் தெரியும். அவை எல்லாம் இப்போது துலாம்பரமாகத் தோற்றமளித்தன.

சாதாரணமாக நாட்களில் அகிலன் வைத்தியசாலைக்கு வருவதற்கு குறைந்தது முப்பது நிமிடங்களாவது பிடிக்கும். இப்பொழுதெல்லாம் பதினைந்து நிமிடங்களுக்குள் வந்துவிடுவான்.

வைத்தியசாலையில் குழுக்களாக வைத்தியர், தாதிமார்கள் இயங்குவார்கள். உவார்டைச் சுற்றிப் பார்த்து நோயாளிகளின் ரிப்போர்ட்களை அப்டேற் செய்யவேண்டும். நோயாளிகளுக்கு வேண்டிய மருந்துகள், ப்ளட் / யூறின் ரெஸ்ற் போன்றவற்றை எழுதிக் கொடுப்பது, எவர் எவர் வீட்டுக்குப் போகலாம் எனத் தீர்மானிப்பது போன்ற பல வேலைகள் காலையில் காத்திருக்கும். அதன்பின்னர் தொழில் சூடு பிடித்துவிடும்.

அகிலன் வைத்தியசாலைக்குள் நுழைந்ததும், தாதியர்கள் அவனைப் பிச்சுப் பிடுங்கிவிடுவார்கள். ஒவ்வொரு நோயாளிகள் தொடர்பாகவும் பல கேள்விகள் அவனுக்காகக் காத்திருக்கும். வைத்தியர்கள் தட்டுப்பாடு காரணமாக கூடுதலான நோயாளிகளைக் கவனிக்க வேண்டியிருக்கும். தினமும் 12 மணி நேரத்திற்குக் குறையாமல் வேலை. காலையில் சாப்பிட்டதற்குப் பிற்பாடு, இரவு எட்டுமணி வரைக்கும் சாப்பிடுவதற்கு அகிலனுக்கு நேரம் கிடைக்காது. சிலவேளைகளில் தேநீர், கோப்பி அருந்துவான். ஸ்ரெதஸ்கோப்பைக் சுழற்றியபடி வேகமாக விரைந்து செல்லும்போது, அவனது நடைக்கு ஈடு கொடுக்க முடியாத தாதி எலிசபெத், பின்னாலே `வாத்து ஒட்டம்’ ஓடுவாள். உவார்ட்டிற்குள் எழும் இந்தத் தாள லயங்களினால், நோயாளிகளைத் தவிர்ந்த அனைவரும் உவார்ட்டை விட்டு ஓட்டமெடுப்பார்கள்.

ஒலிவர் என்ற நோயாளி இருக்கும் அறையை அண்மித்ததும், எலிசபெத் அகிலனைப் பார்த்துச் சிரித்தாள். ஒலிவருக்கும் அகிலனுக்கும் ஏதோ ஒரு பூர்வீகத் தொடர்பு இருக்கவேண்டும். அவர் அங்குள்ள நோயாளிகளில் சற்று வித்தியாசமானவர். பாசமுடன் அகிலனிடம் கேள்விமேல் கேள்விகள் கேட்பார். `இதில் நீங்களா நானா டாக்டர்?’ என்று ஒலிவருடன் சீண்டி விளையாடுவான் அகிலன். ஒரு கதிரையை இழுத்து நெருக்கமாகப் போட்டுக்கொண்டு, சரளமாக உரையாடுவான் அகிலன். ஒலிவர் கடந்த இரண்டுமாதங்களாக வைத்தியசாலையில் இருக்கின்றார். எண்பது வயதை அண்மித்த அவருக்குப் பல நோய்கள். இன்னதுதான் எனக் குறிப்பிட்டுச் சொல்லமுடியாதளவுக்கு எல்லா நோய்களும் அவர் உடம்பில் கேட்டுக்கேள்வியில்லாமல் புகுந்துவிட்டன. இருந்தாலும் அவரின் உற்சாகத்துக்குக் குறைவில்லை. நேரத்திற்கு மாத்திரைகள் போடுவார். நன்றாகச் சாப்பிடுவார். புத்தகம் படிப்பார். உடற்பயிற்சிக்கூடத்திற்குக் கூட்டிசென்றால், நன்றாக உடற்பயிற்சியும் செய்வார். ஞாபகசக்தியும் அபாரம். இருப்பினும் அவருக்குப் பக்கத்தில் ஒருவர் எந்த நேரமும் இருக்கவேண்டும். நடமாடுவதற்கு மிகவும் கஸ்டப்படுவார்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஒலிவர் ஒரு கடின உழைப்பாளி, விவசாயி. எல்லாவற்றையும் காட்டுத்தீ புரட்டிப் போட்டுவிட்டது. இருகோடுகள் தத்துவம் போல - காட்டுத்தீயினால் அல்லல்பட்டு நொந்துபோயிருந்த அவுஸ்திரேலிய மக்களுக்கு, அதன் மேல் பெரிதாகக் கீறப்பட்ட கோடுதான் `கொரோனா’.

2019 செப்டெம்பரில் நாட்டின் சில பகுதிகளில் ஆரம்பித்த நெருப்பு, கிறிஸ்மஸ் காலத்தில் உச்சம் கொண்டிருந்தது. சில மனிதர்கள் மரணம் அடைந்தார்கள். எத்தனையோ பேர்கள் வீடுகளை, பண்ணைகளை, தோட்டங்களை இழந்தார்கள். பல இலட்சம் கால்நடைகளுடன், காட்டுவாழ் அரிய விலங்கினங்களும் மாண்டு போயின.

ஜிப்ஸ்லண்ட் பிரதேசத்தில் மகள், மருமகன், பேரப்பிள்ளைகளுடன் ஒலிவர் அமைதியாக வாழ்ந்துகொண்டிருந்தார். அவரது மனைவி இறந்துபோய் பல வருடங்களாகிவிட்டன. ஜிப்ஸ்லண்டில் அவருக்கு பல ஏக்கர்கள் கொண்ட விளைநிலமும் பண்ணைகளும் இருந்தன. எல்லாம் காட்டுத்தீயினால் நாசமாகிப் போயின. அதன்பின்னர் மெல்பேர்ணில் உள்ள பக்குஸ்மாஸ் என்ற இடத்திற்கு தனது மகன் டேவிட்டுடன் இருப்பதற்காக வந்து சேர்ந்தார்.

“உண்மையில் அங்கேயே செத்துப் போயிருப்பேன். தீப்பிழம்புகளுடன் புகைமூட்டத்திற்குள் சிக்கி, கால்நடைகளோடு மரித்திருப்பேன். ஏதோ நல்ல காலம். எல்லாவற்றையும் இழந்தும் உயிரோடு இருக்கின்றேன். எப்பொழுது உழைப்பை நான் விட்டேனோ, அன்றிலிருந்து நோயாளியாகப் போய்விட்டேன்” சலித்துக் கொண்டார் ஒலிவர்.

மொட்டை விழுந்த அவர் தலையில் கூட சில தீக்காயங்கள் இருந்தன. காட்டுத்தீ பற்றியும், பழங்குடி மக்கள் எப்படி தீயினால் காடுகள் சேதமடைவதைத் தவிர்த்தார்கள் என்பது பற்றியும் பல சுவையான தகவல்களை அகிலனிற்கு அவர் சொல்வார். அகிலனும் உற்சாகமாகக் கேட்டபடி, அவருடன் சற்றுக் கூட நேரம் மினைக்கெடுவான்.

ஒலிவருக்கு உதவியாக ஒருவர் தங்கி நிற்பதற்கு, வைத்தியசாலை நிர்வாகம் அனுமதித்திருந்தது. ஆரம்பத்தில் ஒலிவருடன் பேரன்---மகளின் மகன்--- நின்றான். ஜிப்ஸ்லண்ட் பிரதேசத்தில் தீயெல்லாம் தணிந்து, மீண்டும் தொடங்கும் மிடுக்காகப் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாரும் பண்ணைநிலம் நோக்கிச் சென்றார்கள். கடந்த வாரம் மகளின் குடும்பம் ஜிப்ஸ்லண்ட் பிரதேசத்தை நோக்கிப் போய்விட, ஒலிவரின் மகன் டேவிட் உவார்ட்டில் வந்து நின்றான். டேவிட் திருமணம் செய்து கொள்ளாத தனிக்கட்டை.

அகிலனும் தாதியும் அறையை விட்டு வெளியேறியபோது, குடுமி வைத்த ஒருவன் `ஙொங் ஙொங்’ என்று இருமியவாறே அறைக்குள் நுழைந்தான். அகிலன் எலிசபெத்தைப் பார்த்தான்.

“அது ஒலிவரின் மகன் டேவிட்.”

“நான் ஒருபோதும் காணவில்லையே! பையன் ஒருவன் தானே முன்பு நின்றான்” சொல்லியவாறு அடுத்த அறையை நோக்கிப் போன அகிலன், மீண்டும் ஒலிவர் இருக்கும் அறைக்குத் திரும்பி வந்தான். வாசலில் மறைந்து நின்று உற்றுப் பார்த்தான். டேவிட் தொடர்ந்தும் விடாமல் இருமிக்கொண்டிருந்தான்.

“எலிசபெத்… நாங்கள் எல்லா நோயாளிகளையும் பார்த்து முடித்துவிட்டு, திரும்பவும் இங்கே வரவேண்டும். டேவிட் மீது எனக்குச் சந்தேகமாக இருக்கு”

“ஓம் சேர்….”

உவார்ட் விசிற்றை முடித்துக் கொண்ட பின்னர், ஒலிவரை மீண்டும் சந்திப்பதற்குத் தயாரானான் அகிலன்.

“எலிசபெத்….. மாஸ்க், கிளவ்ஸ் என்பவற்றை அணிந்து கொள்ளுங்கள்” சொல்லிக்கொண்டே தனது முகமறைப்பையும், நடந்துகொண்டே கையுறையையும் அணிந்து கொண்டான் அகிலன்.

வைத்தியசாலையில் அவசரபிரிவில் வேலை செய்பவர்களும், கொரோனா நோயாளிகள் இருக்கும் பிரிவில் வேலை செய்பவர்களும், கட்டாயம் உடம்பைப் பாதுகாத்துக் கொள்ளும் கவசங்கள் அனைத்தையும் அணிந்திருக்க வேண்டும். ஏனையோர் தமது விருப்பப்படி இவற்றை அணிந்து கொள்ளலாம். இந்த அறிவுறுத்தல் சமீபத்தில் வைத்தியசாலை நிர்வாகத்தினால் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது.

ஒலிவர் இருந்த அறையினுள் தொடர்ந்து இருமல் சத்தம் கேட்டது. கதவைத் தட்டி, டேவிட்டை வெளியே வரும்படி கூப்பிட்டான் அகிலன்.

“டேவிட்… உங்களுக்கு எத்தனை நாட்களாக இந்த இருமல் இருக்கின்றது?”

“கடந்த மூன்று நாட்களாக சேர்!”

“வேறு ஏதாவது அறிகுறிகள் இருக்கின்றனவா? தலையிடி, காய்ச்சல், தொண்டை நோ, உடல் உளைவு?”

“வேறு ஒன்றும் இல்லை சேர்!”

“நீங்கள் சமீபத்தில் ஏதாவது வெளிநாடு போய் வந்தீர்களா?”

குடுமியைப் பிடித்து தடவிப் பார்த்துவிட்டு, “இல்லை சேர்!” என்றான் டேவிட்.

“நீங்கள் உடனடியாக அவசரபிரிவுக்குப் போய் அங்குள்ள டாக்டரைச் சந்திப்பது நல்லது.”

“ஏன் சேர்… எனக்குக் கொரோனா வந்துவிட்டது எனப் பயப்படுகிறீர்களா?” சிரித்தபடியே கேட்டான் டேவிட்.

“அப்படியென்றில்லை. ஒரு முன்னேற்பாடுதான். நீங்கள் இருக்கும் இந்த உவார்ட்டிற்குள் பல நோயாளிகள் இருக்கின்றார்கள். பல பார்வையாளர்கள் தினமும் வந்து போகின்றார்கள். பல டாக்டர்கள், தாதிமார்கள் இன்னும் வைத்தியசாலையில் வேலை செய்யும் பலர் வந்து போகின்றார்கள். நீங்கள் உங்களைப் பரிசோதித்துக்கொள்வது உங்களுக்கும் நல்லது. எங்களுக்கும் நல்லது. உங்களை நான் கட்டாயப்படுத்த மாட்டேன். ஆனால் உங்கள் தந்தையுடன் நிற்பதற்கு அனுமதிக்க முடியாது.”

எலிசபெத் மூக்கின்மேல் தன் சுட்டுவிரலை வைத்து, கண்ணைப் பாதி நிலையில் மூடிக்கொண்டு இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்தாள். டேவிட் பதில் சொல்வதற்குள், படபடவென காகிதத்துண்டொன்றை எடுத்து அவசர பிரிவில் உள்ள தலைமைத்தாதிக்கு ஏதோ கிறுக்கினான் அகிலன்.

“எலிசபெத் உங்களை அவசரசிகிச்சைப் பிரிவிற்குக் கூட்டிச் செல்வார். நீங்கள் ஒன்றுக்கும் பயப்படத் தேவையில்லை.

முன்பு இங்கே நின்ற பையனை வரவழைப்பதற்கான முயற்சிகளை நான் செய்கின்றேன்.” அகிலனின் தீர்க்கமான முடிவைத் தட்ட முடியாமல், டேவிட் எலிசபெத்துடன் கூடச் சென்றான்.

அவர்கள் போனதும், அகிலன் ஒலிவரைச் சந்திப்பதற்காக அறைக்குள் போனான். ஒலிவருடன் கதையோடு கதையாக டேவிட் பற்றிய தகவல்களைக் கறந்து கொண்டான். டேவிட் ஐரோப்பிய நாடுகளுக்குப் போய் வந்திருக்கின்றான் என்ற செய்தி அதிர்ச்சியாக இருந்தது. டேவிட் ஏன் அதை மறைத்தான்? அப்படிப் போயிருந்தால் ஏன் அவன் தனிமைப்படுத்தப்படவில்லை? சட்டங்களுக்குள் இருக்கும் ஓட்டையை ஆராயும் எண்ணம் அவனிடம் இல்லை.

ஒலிவரைச் சந்தித்துவிட்டு வெளியே வந்தபோது, எலிசபெத் வாசலில் கவலையுடன் நின்றாள்.

“டேவிட்டை மாஸ்க் போட்டுக் கூட்டிவரவில்லை எனத் தலைமைத்தாதி என்னுடன் சத்தம் போட்டார்.”

“ஓ அப்பிடியா? தவறுதான். அவர்கள் என்ன சொல்கின்றார்கள்? டேவிட் இப்போது எங்கே?”

“உங்கள் கடிதத்தைப் பார்த்ததும், உடனடியாக டேவிட்டை உள்ளே எடுத்துவிட்டார்கள். கோவிட் – 19 ரெஸ்ற் செய்வதற்காகக் காத்திருக்கின்றான் டேவிட்.”

“நல்லது. பிறகு சந்திபோம்.” விடைபெற்றுக் கொண்டான் அகிலன்.



வீட்டிற்கு வந்து, குளித்துவிட்டு, உணவருந்திக் கொண்டிருந்தான் அகிலன். அவனைச்சுற்றி, சுயதனிமைப்படுத்தல் இடைவெளியைப் பேணியபடி, பெற்றோரும் அக்சராவும் இருந்தார்கள். அன்று புதிதாகத் தான் சந்தித்த டேவிட் என்ற நோயாளி பற்றி அவர்களுக்குச் சொன்னான்.

“அப்ப அவனுக்கு உண்மையாகக் கொரோனா இருந்ததா?” அக்சரா பயந்து போனாள்.

“நாளைக்குத்தான் தெரிய வரும்.”

“இன்னும் சுப்பர்மாகற்றுகளில் மா, பால்மா பவுடர், எண்ணெய், ரொயிற் ரிஸ்யூ தட்டுப்பாடாகத்தான் உள்ளது. இன்று `அல்டி’ ஷொப்பிங் சென்ரரை பதினொருமணிக்குத்தான் திறந்தார்கள். ஒரு நீண்ட கியூ நின்றது. 200பேர்கள் வரை இருக்கும். என்னால் தொடர்ந்து நிற்க முடியவில்லை. நான் திரும்பிவிட்டேன்” என்றார் அப்பா.

“பார்மசியில் கூட மருந்துகள் தட்டுப்பாடாகத்தான் இருக்கு. வென்ரோலின் பம், பனடோல் ஒன்றும் இல்லை” என்றார் அம்மா.

“அப்பா…. மாஸ்க் ஒரு இடத்திலும் இப்ப எடுக்க முடியாது” என்றாள் அக்சரா.

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தாலும், அகிலனின் நினைப்பு வைத்தியசாலையை சுற்றிச் சுழன்றடித்தபடி இருந்தது. வைத்தியச்சாலையில் இப்போது எல்லோரும் சுழற்சிமுறையில் வேலை செய்யவேண்டியிருந்தது. அடுத்த வாரம் முதல் தான் கொரோனாப்பிரிவில் வேலை செய்ய வேண்டும் என்ற செய்தியை அவர்களிடத்தில் அகிலன் சொல்லவில்லை. சொன்னால் பதறிப் போய்விடுவார்கள். சித்திராவிடமும் அந்தச் செய்தியை இப்போது ஒருவரிடமும் சொல்ல வேண்டாம் என்று கேட்டிருந்தான் அகிலன். அதன் பின்னர் மகளின் படிப்பிற்காக சில உதவிகள் செய்தான் அகிலன்.



அடுத்தநாள் காலை வைத்தியசாலை ஒரே களேபரமாக இருந்தது. எல்லோருக்கும் செய்தி பரவியிருக்க வேண்டும்.

“டேவிட்டுக்கு கொரோனா தொற்று உள்ளது. இன்று காலை எல்லோருக்கும் அவசர மீற்றிங் இருக்கின்றது” உடன் பணிபுரியும் மருத்தவர் ஒருவர் நடந்துவிட்ட விபரீதத்தை அகிலனுக்குச் சொன்னார்.

கூட்டத்திற்குப் போவதற்கு முன்பதாக, மெடிக்கல் லேபுடன் தொடர்பு கொண்டு டேவிட் தொடர்பான றிப்போர்ட்டைப் பெற்றுக்கொண்டான் அகிலன். அந்த றிப்போட்டை மேலோட்டமாகப் பார்வையிட்டான்.

கூட்டத்தில், அகிலன் அவசரமாக எடுத்த நடவடிக்கையை நிர்வாகம் பாராட்டியிருந்தது.

`ஒலிவரின் அறையில் இருக்கும் நோயாளிகளுக்கும், மற்றும் அங்கு போய்வந்த வைத்தியச்சாலையைச் சேர்ந்த அனைவருக்கும் கொரோனா ரெஸ்ற் செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு மறைமுகமாக தொற்று ஏற்பட்டிருக்கக் கூடும்’ என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. எல்லார் முகத்திலும் பயம் அப்பிக் காணப்பட்டது. தலைமைத்தாதி காளி உருவங்கொண்டு டேவிட்டைத் திட்டித் தீர்த்தாள்.

கூட்டம் முடிவடைந்த சற்று நேரத்தில், ஒலிவரின் மகள், மகனுடன் அங்கு வந்து சேர்ந்தாள். டேவிட்டுக்கு கொரோனா தொற்று இருப்பது பற்றி ஏற்கனவே அவளுக்கு அறிவித்திருந்தார்கள்.

“சேர்… டேவிட்டுக்கு இப்போ எப்படி?”

“பயப்படாதீர்கள்… ஒன்றும் ஆகாது” சமாதானம் கூறினான் அகிலன்

“அப்பாவுடன் நிற்பதற்காக மகனைக் கூட்டி வந்தேன்.”

“இன்று முதல் உவார்ட்டில் தங்குவதற்கு ஒருவருக்கும் அனுமதியில்லை. எல்லா நோயாளிகளையும் நிர்வாகமே பார்த்துக் கொள்ளும்.”

“அப்படியா? அப்பாவை ஒருதடவை பார்த்துச் செல்லலாமா?” ஏமாற்றத்துடன் கேட்டாள் அவள்.

“தற்போதிருக்கும் சூழ்நிலையில் பார்க்கமுடியாது. நாங்கள் உங்களுக்கு அறிவிக்கும்போது வாருங்கள்.”

நிலைமையின் தீவிரத்தைத் திசை திருப்புவதற்காக,

“உங்கள் பண்ணை, தோட்டம் எல்லாம் இப்ப எப்படிப் போகின்றது?” என்று விசாரித்தான் அகிலன்.

“மழை பெய்ததால், இப்போ காடுகள் எல்லாம் மீண்டும் துளிர்த்துவிட்டன” என்றவள், தன் மகனையும் கூட்டிக்கொண்டு போய்விட்டாள்.

அன்று மாலை எல்லோருக்குமான கொரோனா முடிவுகள் வந்திருந்தன. ஒலிவருக்கு மாத்திரம் பொஷிட்டிவ். ஏனைய யாவருக்கும் கொரோனாத் தொற்று இருக்கவில்லை. ஒலிவர் உடனடியாக கொரோனா உவார்ட்டிற்கு மாற்றப்பட்டார்.

`ஒலிவரின் முதுமை கொரோனாவைத் தாக்குப்பிடிக்குமா?’ அகிலனின் மனதில் பூதாகரமாக ஒரு கேள்வி எழுந்து நின்றது.



அகிலன் வேலை முடித்து வரும்வரைக்கும் விழித்திருக்கும் அக்சரா, இன்று செற்றியில் சரிந்தபடி உறங்கிப்போயிருந்தாள். கீழே ஒரு கொப்பி விழுந்து கிடந்தது. தன் உடலைச் சுத்தம் செய்துவிட்டு, கொப்பியைத் தூக்கி பிரித்துப் பார்த்தான் அகிலன். `மரணத்தின் கடவுள் வந்திருக்கின்றார்’ என்று தனது கிறியேற்றிவ்’ படைப்பிற்குத் தலைப்பிட்டிருந்தாள் அக்சரா. `

`2025 ஆம் ஆண்டு குளிர் காலம். எங்கும் பதற்றம். அலறல்கள், கதறல்கள். மனிதர்கள் எல்லோரும் தமது உடலை முற்றுமுழுதாக மூடி கவசம் அணிந்திருந்தார்கள். இந்தத் தடவை காற்றின் மூலமாகவும் தொற்று பரவிக்கொண்டிருந்தது. நாடுகள், கண்டங்கள் என ஒன்றையும் விட்டு வைக்கவில்லை. வீட்டைப் பூட்டிக்கொண்டு மனிதர்கள் ஒளிந்திருந்தபோதிலும், காற்று நோய்க்கிருமிகளைத் தூக்கிச் சென்று அடுத்தவரிடம் கொடுத்தது. வயது பேதமின்றி மனிதர்கள் துடிதுடித்து மாண்டு கொண்டிருந்தார்கள். இதுவரை 2020 இல் இறந்தவர்களை விட ஐந்து மடங்கு மக்கள் இறந்துவிட்டார்கள். இந்தத் தடவை சகல உயிரினங்களுக்கும் தொற்று ஏற்பட்டதால் வீதியெங்கும் விலங்கினங்களும் பறவைகளும் செத்துக் கிடந்தன. வைரஸ் தினமும் தன்னைத்தானே உருமாற்றிக்கொண்டு கோரத்தாண்டவமாடியது.’

முழுவதையும் படிப்பதற்குள் அக்சரா விழித்துக் கொண்டாள்.

“அக்சராக் குட்டி… போய் பெட்டிலை படும்மா…” சொல்லியபடி கொப்பியை அருகேயிருந்த மேசையில் வைத்தான்.

“அப்பா… அந்த டேவிட்டுக்கு என்னவாயிற்று?” பாதித் தூக்கத்தில், கால்கள் நிலத்தில் இழுபட்டவாறே முனகினாள் அக்சரா. அக்சரா அதிகம் பயப்படுகின்றாள் என்பதைப் புரிந்துகொண்டான் அகிலன். அவளுக்கு உண்மையைச் சொன்னால் பதறிப்போவாள் என நினைத்த அகிலன், “ஒன்றும் இல்லையம்மா” என்றான். படுக்கையில் அக்சரா சரிந்ததும் போர்வையினால் அவளை மூடிவிட்டு, டைனிங் ரேபிளுக்குப் போனான். அங்கே பெற்றோர் அவனுக்காகக் காத்திருந்தார்கள். அவர்கள் முகத்தில் கவலையும் கலவரமும் குடிகொண்டிருந்ததை அகிலன் அவதானித்தான். அவர்கள் எதையோ கேட்பதற்கு தயக்கப்படுவது அகிலனுக்குத் தெரிந்தது.

“சித்திரா ரெலிபோன் எடுத்தாளா?” கேட்டான் அகிலன். அவர்கள் ஆமாப் போடும் விதத்திலிருந்து, சித்திரா எல்லாவற்றையும் உளறிவிட்டாள் என்பதைப் புரிந்து கொண்டான்.

வரும் திங்களில் இருந்து பெற்றோர்களுடனும் அக்சராவுடனும் ஒன்றாக இருக்க முடியாது என்பதைச் சொல்லவேண்டிய தருணம் வந்துவிட்டது. கொரோனா உவார்ட்டில் வேலை செய்பவர்கள், நோய்க்காவியாக மாறக்கூடும் என்ற காரணத்தால் வைத்தியசாலையிலேயே தங்க வேண்டும். அக்சரா பாவம். அப்பா, அம்மாவை விட்டு சிறிது காலம் பிரிந்திருக்கப் போகின்றாள். அதைப்பற்றி நினைத்தபடி உறக்கத்திற்குப் போனான் அகிலன்.

உறக்கத்தில் பல லட்சம் ஆவிகள் வந்து அகிலனைப் பார்த்துப் பரிகசித்தன. `நீங்கள் எல்லாம் தோற்றுப் போய்விட்டீர்கள்!’ செவ்வாய்கிரகத்திற்குப் போகின்றீர்கள். சூரியமண்டலத்தையும் தாண்டி உயிரினங்கள் இருக்கின்றனவா என்று ஆராய்ச்சி செய்கின்றீர்கள். நம் அருகில் வந்திருக்கும் இந்த வைரஸ் கிருமிகளைக் கண்டுகொள்ள உங்களால் முடியவில்லையே! வெந்து தணிந்த காடுகள் எல்லாம் துளிர்க்கும் என்றால், இயற்கை தான் இதையும் சரி செய்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் உங்கள் வேலைதான் என்ன?’ குற்ற உணர்ச்சி மனதை வாட்ட உருண்டு புரண்டான்.

அதிகாலை ஐந்துமணியளவில் அக்சரா விழித்துக் கொண்டாள். யாரோ தொடர்ந்து இருமும் சத்தம் கேட்டு துயில் கலைந்தாள். தூக்கக் கலக்கத்தில், காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டே எழுந்து நடந்தாள் அவள். அப்பாவின் அறைக்கு முன்னால் வந்து நின்றாள். கதவைத் தட்டினாள்.

“அப்பா தொடர்ந்து இருமிக் கொண்டிருந்தீர்கள். அதுதான் பார்க்க வந்தேன்.”

“அப்படியா? எனக்குத் தெரியவில்லையே!”

தொடர்ந்த வேலைக் களைப்பினால், தான் இருமுவதையே அறியாமல் இருந்தான் அகிலன்.

“மூச்செடுக்கக் கூடக் கஸ்டப்படுகிறீர்கள் அப்பா!”

“நேற்றுத்தான் கொரோனா ரெஸ்ற் செய்திருந்தேன். ஒன்றும் இல்லை என்று பதில் வந்திருந்ததே! எந்தவித அறிகுறிகளும் காட்டவில்லையே!” அக்சரா வீணாகப் பயப்படுகின்றாள் என நினைத்தபடி, நெற்றியில் கையை வைத்துப் பார்த்தான் அகிலன்.

மறுகணம் ஒலிவர் ஒரு நோய்க்காவியாக இருந்திருக்கின்றான் என்ற உண்மை உறைத்தது.

“அக்சராக்குட்டி….. உள்ளே வரவேண்டாம்!” அகிலனின் வாய் உளறியது.



கொரோனா உவார்ட்டில் டாக்டராக வேலை செய்ய இருந்த அகிலன், அதே தினத்தில் ஒரு கொரோனா நோயாளியாகத் தஞ்சமடைந்தான். அகிலனும் ஒலிவரும் டேவிட்டும் எலிசபெத்தும் ஒரே உவார்ட்டில் பேதமின்றி நோயாளியாகிப் போனார்கள். சில தினங்களில் ஒலிவர், தனது பூர்வீகத் தொடர்புகளை முறித்துக்கொண்டு அந்த உவார்டைவிட்டு விடைபெற்றுக் கொண்டார்.

°

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R