முன்னுரை

மக்கள் குழுவாக ஒருங்கிணைந்து உருவாக்குவது சமூகமாகும். அத்தகைய சமூகத்தின் ஒவ்வொரு சிறப்பும் மனிதனின் சிறப்பாகவே கருதப்படுகிறது. தாம் வாழும் நிலத்தின் தன்மையைப் பொறுத்து மக்கள் பிரிக்கப்பட்டனர் என்பதையும், வயலும் வயல் சார்ந்த பகுதியில் வாழ்ந்த மருத நில மக்களின் சிறப்பையும், அவர்களின் தொழில் பெண்களின் நிலையையும் எடுத்துக் கூறுவதாக இக்கட்டுரை அமைகிறது.

மருதநில மக்கள்

ஆற்று நீரை வாய்க்கால்கள் மூலம் ஏரி குளங்களில் நிரப்பி நெல், கரும்பு, மஞ்சள் போன்றன பயிரிடும் வயல்களை உடைய நிலம் மருத நிலம் எனப்பட்டது. அங்கு வாழ்வோர் உழவர், உழத்தியர், கடையர், கடைச்சியர் ஆவர். இவர்கள் வாழ்விடத்தை ஊர், பேரூர் என வழங்கினர். வெண்ணெல் அரிசி, பால், பரும்பின் தீஞ்சாறு போன்றன இவர்கள் உணவில் அடங்கியிருந்தன. மருத நாட்டில் பண்டைய நாகரிகத்தின் வளர்ப்புப் பண்ணையாக இருந்தது என்பது வியக்கக் கூடியதாகும். வளமார்ந்த மருதநில மக்கள் ஏனைய திணை மக்களை விட நாகரிகத்தில் மேம்பட்டவர்களாக இருந்தமையைக் காணமுடிகிறது. சங்க காலத்திலிருந்தே தமிழகம் உழவுத் தொழிலில் சிறப்புற்றிருந்தமையும், மன்னரின் வெற்றி உழவரின் கலப்பையை நம்பியிருந்தனைப்

‘பொருபடை தரூஉம் கொற்றமும் உழவர்
ஊன்றுசால் மருங்கின், இன்றதன் பயனே’  (புறம் பா.எ.35 )

என்ற புறநானூற்று வரிகள் வாயிலாக அறியலாம். ‘திருவள்ளுவர் உழவுக்குத் தனிஅதிகாரம்’  (குறள் அதி.104) அமைத்தார். உழவுத்தொழிலால் உணவும், பிறவும் நிறையப் பெற்று வாழ்ந்தவர்கள் மருத நிலத்தினர். ‘உழுவார் உலகத்தார்க்கு ஆணியாவார்’  (குறள் 1032) மருத நிலத்தினர் காவிரியின் புதல்வரைப் போல் வாழ்ந்தமையைக் காணமுடிகிறது.

தொழில்

மருதநில மக்களின் முக்கியத் தொழில் உழவுத்தொழிலாகும். செந்நெற்கதிர், அறுகு, குவளை மலர் கலந்து தொடுத்த மாலையை மேழிக்குச் சூட்டி உழுதமையும்,. நெற்பயிர் அறுத்துப் போராக்க் குவிக்கும் போதும், கடாக்களைப் பிணைத்துக் கடாவிடும் போதும் பாட்டுப்பாடி வேலை செய்தமையைக் காணமுடிகிறது. வேலைப்பளு தெரியாமல் இருப்பதற்காகப் பாடல் பாடித் தொழில் செய்வது, தமிழகக் கிராமங்களில் இன்றும் வழக்கில் உள்ளதையும், அப்பாட்டு ‘முகவைப் பாட்டு’  (சி.தமிழகம் ப.231) என்றழைக்கப்பட்டது. உழத்தியர் நெற்பயிரின் நாற்றுக்களைப் பிரித்து நடும் போது,

படுநுகம் பூணாய் பகடே மன்னர்
அடித்தளை நீக்கும் வெள்ளணி யாமெனும்
தொடுப்பேர் உழவர்  (சிலம்பு 27.228-229)

ஏரில் காளையினைப் பூட்டி உழுவதற்கு மருதப் பண்ணைப்பாடியமையைக் காணமுடிகிறது.

ஏர்மங்கலப்பாடல்

புகாரிலிருந்து கோவலனும், கண்ணகியும், கவுந்தியடிகளும் மதுரையை நோக்கிச் செல்லும் வழியில் திருவரங்கத்தையும், சோணாட்டு உறையூரையும் கடந்து சென்றனர். அப்போது உழவர்களின் செயல்களை இளங்கோவடிகள் காட்சிப்படுத்துகிறார். அருகம்புல்லையும், குவளை மலர்களையும், நெற்கதிர்களையும் கலந்து கட்டிய மாலையை அணிந்து ஏரொடு நின்ற உழவர்கள், ஏர்மங்கலப் பாடலைப் பாடியுள்ளனர்.  (சிலம்பு 10.132-135)

களையெடுத்தல், நாற்று நடுதல், விளை நிலங்களைக் காவல் செய்தல் போன்றன மருத நிலப் பெண்களின் தொழில்களாகும். தினைப் புனங்களில் பரண்கட்டித் தட்டை என்னும் கருவியினால் ஒலியுண்டாக்கிக் கிளியை விரட்டினர் எனக் ‘குறிஞ்சிப்பாட்டு’ இவர்களின் தொழிலைக் குறிப்பிடுகின்றது.  (கு.பாட்டு 40-44) நடவுநடும் பெண்கள் கள்ளுண்டு களித்துப் பாடிய குறிப்பு சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது. (சிலம்பு.10.130-131)சங்க காலத்தில் மகளிர் கள்ளுண்ட நிலை, பிற்காலத்தில் தொடர்ந்தது என்பதை இதன் வாயிலாக அறியமுடிகிறது.

கணிகையர்

சங்க இலக்கியங்களில் கணிகையர் பற்றிய செய்தியோ சொல்லோ இடம்பெறவில்லை. பரிபாடல் ‘மாயப்பொய் கூட்டி மயக்கும் விலைக்கணிகை’ (பரி.பா20.49) என்று கூறுகிறது. ஆடல் பாடல்களில் சிறந்தவள் கணிகை எனப்பட்டாள். சிலம்பில் கணிகையர (5.4) காவற்கணிகையர்(5.50) ஆடல் மகள் (8.109) ஆடற்கூத்தியர் (5.50) பூவிலை மடந்தையர் (22.139) என்று கணிகையர் குறிக்கப் பெற்றுள்ளனர். இவ்விடங்களில் எல்லாம் மாதவியைப் பரத்தை என்ற பொருளில் கூறவில்லை என்பது கவனிக்கத்தக்கதாக அமைகிறது.

பரத்தையர் இருந்த வீதி ‘இரும்பெரும் வீதி’  (சிலம்பு.14.167) எனப்பட்டது. தவம் மேற்கொள்பவராயினும், வண்டினைப் போன்ற காமுகராயினும், காம வயப்பட்ட புதியவராயினுமாக இருந்தாலும் கணிகையர் வீதியைக் கண்ணுற்றால் அங்கேயே தங்கிச் செல்லும் வன்மையுடையவர் ‘பரத்தையர் பிறரைக் கவர்ந்திழுக்கும் தன்மையர்’  (சிலம்பு.14.160-165) என்பது வெளிப்படுகிறது. ‘நகர நம்பியர் திருதரு மறுகை நாடி நிற்பவர்கள்’  (சிலம்பு.3.165)இக்கணிகையர் சமுதாயத்தில் உயர் நிலையில் இருந்த ஆண்கள் கணிகையரை நாடியதற்குக் காரணம் அப்பெண்களின் அழகு, ஆடல், பாடல் போன்ற கலைகளுமேயாகும். கோவலனும் மாதவியை நாடி வாழ்வதற்கு முதற்காரணமாக இருந்தது கலையே என்ற மு.வ வின் கருத்து இங்கு நினைவு கொள்ளக் கூடியதாகும். கணிகையர் சமுதாயத்தில் ஒழுக்கம் போற்றப்படவில்லை ஆயினும் வெறுக்கத் தக்கதாகவோ, தீவினையாகவோ அக்காலச் சமுதாயம் கருதவில்லை என்கிறார் கா.மீனாட்சி சுந்தரனார்.

இசையிலும் கூத்திலும் சிறந்த மகளிர் நாளடைவில் கணிகையர் என்ற பதவி பெற்றனர். அவர்கள் பொருளைப் பெற்று இன்பத்தையும், துன்பத்தையும் அளித்துள்ளனர் என்பதும், மதுரை வளமிக்கதாக இருந்தமையால் ஆடவர் கணிகையரை நாடி இன்பமாகப் பொழுது போக்கினர் என்பதை,

‘காவற் கணிகையர் ஆடற் கூத்தியர்
பூவிலை மடந்தையர் ஏவற் சிலதியர்’  (சிலம்பு.5.50-51)

போன்றோர் புகாரின் பட்டினப்பாக்கத்தில் வாழ்ந்துள்ளனர். அரசர், வணிகர் போன்ற பெருமக்கள் வாழ்விடங்களிலும் கணிகையர் வீதி அமைந்துள்ளது. ‘காவற் கணிகைகள் களத்தாடும் கூத்திகள் என்றும் ஆடற் கூத்திகள் அக்கூத்தாடும் பதியிலார் என்றும், பூவிலை மடந்தையர் அற்றைப் பரிசும் கொள்வார் என்றும், ஏவற் சிலதியர் குற்றேவல் செய்வார் என்று பொருள் வேறுபடுவதால் இவர்களை நால்வகையினராகக் கொள்வதே ஏற்றது’ (சிந்தனை சிலம்பு ப.68)என்கிறார் இ.ரா.இராஜசேகரன்.

கடைகழி மகளிராகிய கணிகையர் காதல் செய்வாரோடு சுற்றித் திரியும் இயல்பினர். ‘விலைமகளிர் மதுவருந்தும் வழக்கமுடையவர்’  (சிலம்பு.14.131-134) கணிகையர் வாழ்க்கை, சமூக மதிப்பீட்டில் கீழானது என்பதனை,

மேலோ ராயினும் நூலோ ராயினும்
பால்வகை தெரிந்த பகுதியோ ராயினும்
பணியெனக் கொண்டு பிறக்கிட் டொழியும்
கணிகையர் வாழ்க்கை கடையே போன்ம்  (சிலம்பு.11.180-183)

என்பார் இளங்கோவடிகள். கணிகையர் ஒருவரிடத்தில் தங்காதார் என்ற கூற்றினைப் பொய்ப்பிப்பவளாக மாதவி சிலம்பில் படைக்கப்பட்டுள்ளமையையும், மாதவியோடு பல்லாண்டுகள் சேர்ந்து வாழ்ந்த கோவலனே அவளை “மாயப்பொய் பல கூட்டும் மாயத்தாள் (7.52) என்றும் “சலம்புணர் கொள்கைச் சலதியொடுஆடி“(9.69)என்றும் கூறியதினால் பரத்தையரின் இழிவான வாழ்வுநிலை வெளிப்படுகிறது. இது பரத்தையர் சமூகத்தின் நிலையினையும், அவர்களின் அவல வாழ்க்கையினையும் எடுத்துக்காட்டுவதாக அமைகின்றது.

பரத்தர்

குடும்ப அமைப்பில் ஓர் ஆணைக் கைப்பிடித்து வாழ்நாழ் முழுவதும் அவனை மட்டும் சார்ந்து வாழும் நிலை குடும்பப் பெண்ணின் இலக்கணமாகக் கருதப்படுகிறது. அவ்வாறின்றிப் பல்வேறு ஆண்களுடன் உறவு கொண்டுள்ள பெண்களைக் குறிக்கப் ‘பரத்தை’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பரத்தமைக் குற்றமிழைத்த ஆடவனை ‘நண்ணேன் பரத்த நின் மார்பு’  (குறள்.1311) எனத் திருவள்ளுவரும் ‘வம்பர் பரத்தர்’ என இளங்கோவடிகளும் ‘பரத்தர்’ என்ற சொல்லால் குறிப்பிடுகின்றார்.

பரத்தமை ஒழிப்பு

‘ஒருத்தனுக்கு ஒருத்தி’ என்பது குடும்ப ஒழுக்கமாக வலியுறுத்தப்பட்டது. ஆண்களின் பரத்தமை பெரிய குற்றமாகக் கருதப்படவில்லை. ஆனால் பரத்தையர் வாழ்க்கை சமுதாய நலனுக்குத் தீங்கு விளைக்கக் கூடியது.இஃது,

‘மணிமேகலையை வான்துயர் உறுக்குங்
கணிகையர் கோலங் காணா தொழிக’  (சிலம்பு.16.63)

என மொழிந்த மாதவியின் கூற்றால் தெளிவுப்படுத்துகிறார் இளங்கோ. இதற்கு வலுசேர்க்கும் சான்றாக பல காப்பியப் போக்கில் இடம் பெற்றுள்ளன. மாதவியிடம் வாழ்ந்து மீண்டுவந்த கோவலனிடம் ‘போற்றா ஒழுக்கம் புரிந்தீர்’ 20 என்ற கண்ணகியின் கூற்று மூலமும் இதனை அறியமுடிகிறது. கலை மகளிர் வாழ்க்கை மனித நேயத்திற்கு மாறுபாடாகவும், குலமகளிராக வாழும் மனைக்கிழத்திக்கு அறை கூவலாகவும் விளங்குகிறது. சமுதாயத்தைச் சீரமைக்கவே இளங்கோவடிகள் பரத்தைமைப் பண்பை ஒழித்து காப்பியத்தை அமைத்ததன் திறமானது புலப்படுகிறது.

முடிவுரை

வயல் சார்ந்த நில அமைப்புடைய மருதம் பண்டைய நாகரிகத்தின் வளர்ப்புப் பண்ணையாக இருந்ததமையும், அந்நிலத்தில் முக்கியத் தொழிலாக உழவுத்தொழில் விளங்கியமையும், களையெடுத்தல், நாற்று நடுதல், விளை நிலங்களைக் காவல் செய்தல் போன்ற தொழில்களில் மருத நிலப் பெண்கள் ஈடுபட்டிருந்தமையையும்,பெண்கள் கள்ளுண்ட செய்தியையும், பரத்தையர் என்போர் ஆண்களைக் கவரக் கூடியவர்களாகவும், இசையிலும், கூத்திலும் அவர்கள் சிறந்து விளங்கியமையையும், பரத்தையர் வாழ்க்கை சமூகத்தின் நிலைக்கு ஊறுவிளைக்கக் கூடியதாக இருப்பதையும் அறிய முடிகிறது.

துணை நின்றவை

1.இரா.இராஜசேகரன் சிந்தனைச் சிலம்பு
2.குறிஞ்சிப்பாட்டு
3. சாமி சிதம்பரனார் சிலப்பதிகாரத் தமிழகம்
4. திருக்குறள்
5. புறநானூறு

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R