* 2020 தமிழ்ப் புத்தாண்டுச் சிறப்புக் கட்டுரை
அறிமுகம்
ஈழத்தில் வெளிவந்த உரைநூல்கள் தொடர்பான ஆய்வுகளை மீள்நோக்கும்போது, ‘ஈழத்தில் பாடநூல்சார் உரைமரபு’ ஒன்று வளமிக்கதாக இருந்துள்ளமை புலனாகின்றது. ஆனால், இம்மரபுமீது, ஆய்வுப்புலத்தின் கவனம் இதுவரை செல்லவில்லை. இதனை, ஈழத்து உரைமரபு தொடர்பாக ஆராய்ந்த, எஸ்.சிவலிங்கராஜா “ஈழத்துத் தமிழ் உரைமரபிலே பாடநூல் உரைமரபு இதுவரை கவனிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.” (2010:iv) எனக் குறிப்பிடுகிறார். ஈழத்து இலக்கியப் பரப்பில் வித்துவான் வேந்தனாரைக் கவிஞராக முன்னிறுத்தி வெளிவந்த எழுத்துக்கள் அதிகமானவை. அவரது நூற்றாண்டு நிறைவுற்ற இக்காலத்தில், அவரது தமிழ்ப் பணியைக் கௌரவிக்குமுகமாக, அவரின் புலமைத்துவம் அதிகம் வெளிப்படும் பாடநூல் உரைகளை மையப்படுத்தி, பாடநூல் உரைமரபுசார்ந்த, வரலாற்றுநிலைப்பட்ட ஆய்வுக் குறிப்பொன்றை எழுதுவது அவசியமானதெனத் தெரிகிறது.
ஈழத்தின் மரபார்ந்த தமிழ்க் கல்வி மரபில் பாட நூல்களாக, பழந்தமிழ் உரைநூல்களைக் கற்றல் மற்றும் பழந்தமிழ் நூலுக்கு உரை எழுதுதல் என்பனவும் முதன்மை பெற்றிருந்தன. பின்னர், காலனிய எதிர்ப்புக் காலத்திலும் தேசியவாத காலத்திலும் உருவான புதிய கல்வி முறைக்கேற்ற பாட விதானம் (curriculum), பாட நூல், பாட வேளை, பாடப் பரீட்சை, பாட வகுப்பறை முதலியவற்றை முன்னிறுத்தி உருவான பாட நூல் உரைகள், ஈழத்துப் புலமைச் சூழலில் முதன்மை பெறத் தொடங்கின. அந்த உரைகள் ஆழமானதும் விரிவானதுமான ஆய்வுக்குரியவை. அந்தவகையில், ஈழத்துத் தமிழ்க் கல்வி மரபில் பாட நூலின் முக்கியத்துவம், பாட நூலாக உரையைக் கொள்ளுதல், பாட நூல் உரையின் முக்கியமான வரலாற்றுக் கட்டங்கள் முதலாயவற்றைச் சுருக்கமாக நோக்கி, வேந்தனாரின் பாட நூல் உரைகள்பற்றியும் அவரின் உரைத்திறன்பற்றியும் விரிவாக ஆராய இக் கட்டுரை முயல்கிறது. ஈழத்துப் பாட நூல் உரைமரபுசார்ந்த இந்த ஆய்வுக் குறிப்பு, முன்னோடி முயற்சி என்பதால் அறிமுகமாகவும் சுருக்கமாகவும் விடுபடல்கள் கொண்டதாகவும்கூட இருக்கலாம். ஒரு முன்வரைபு எனும் நிலையில் இத்துறைசார்ந்து விரிவாக ஆராய்வதற்கு இச்சிந்திப்பு முயற்சி வழிகோலும்.
இலங்கையில் பாட விதானம் - வரலாற்றுச் சுருக்கம்
பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவான காலனியப் பொருளாதார முறைமை, காலனிய காலத்திலும் அதற்குப்பின்னான காலத்திலும் பாட விதான உருவாக்கத்தில் பெருஞ் செல்வாக்குச் செலுத்தியது. காலனியம் உருவாக்கிய ஆட்சி மற்றும் நிர்வாக அலுவல்களின் தேவையைப் பூர்த்தி செய்வது பாட விதானத்தின் முக்கிய நோக்கமாக அமைந்தது. நாட்டை நிர்வகிப்பவர்களை உருவாக்கம் செய்வதிலும் நாட்டை இயக்குவதில் அவர்களின் பாத்திரத்தைத் தீர்மானிப்பதிலும் பாட விதானம் முக்கிய அச்சாகத் தொழிற்பட்டது. இலங்கையின் இற்றைக் காலக் கல்விமுறையின் கால்கோள் காலம் பத்தொன்பதாம் நூற்றாண்டே ஆகும். 1900ஆம் ஆண்டில் இலங்கையில் பாட விதானம் ஒரு நியம அமைப்பைப் பெற்றதெனினும், காலனிய ஆட்சியின் நலன் பேணுதல் அதன் வெளித்தெரியா இலக்கு என்பது முக்கியமாக அவதானிக்கப்பட வேண்டிய ஒன்று. நிர்வாகம், பண்பாடு மற்றும் சமயத் துறைகளுடன் தொடர்பானதாகவும் ஆங்கிலேயச் சாயல் பெற்றதாகவும் நூற் படிப்புக் கல்வி மற்றும் இலக்கியம் முதலியவற்றோடு தொடர்பானதாகவும் நகர்வாழ் மக்கள் அல்லது மத்தியதர வர்க்கத்தினருக்குரியதாகவும் - மத்தியதர வர்க்கமே பாட அமைப்பில் செல்வாக்குச் செலுத்துவதாகவும் இலங்கைப் பாட விதான உருவாக்கத்தின் ஆரம்பம் இருந்தமை அவதானிக்கத்தக்கது.
1930இல் பத்தாண்டுக்கான பாட விதானமுறை அறிமுகமாகியது. வரலாற்று ஒழுங்கில் நோக்கும்போது, 1930 முதல் 1944 வரை சுயமொழிப் பாடசாலைகள் மற்றும் ஆங்கிலப் பாடசாலைகள் பெருமளவு மேலெழுதலும் 1945 முதல் 1956 வரை இலவசக் கல்வி மற்றும் தாய்மொழிமூலக் கல்வி முதலாய கல்வித் துறையில் உண்டான மாற்றங்களும் 1957 முதல் உருவான கல்வித் துறைசார்ந்த புரட்சிகர மாற்றங்களும் பாட விதானத்தை வடிவமைக்கும் காரணிகளாயின.
பாட நூல்கள் கல்விக்குரிய இன்றியமையாத துணைக்கருவி நூல்களாகின. இன்றைய நிலையிலிருந்து கடந்த காலப் பாட நூல்களை நோக்கும்போது, ஈழத்துத் தமிழ்க் கல்வி வரலாறு வெளிப்படுவது மட்டுமன்றி, பாட நூலானது கல்வியின் உயிர் மையமாகியதும் புலப்படும். சுயமொழிப் பாடசாலைகளில் கற்பிப்பதற்குப் போதியளவு பாட நூல்கள் இல்லாமையால் பண்டிதர்கள் ஆசிரிய நியமனம் பெறுவதுடன், பாட நூல் எழுதும் குழுவிலும் அவர்கள் உள்வாங்கப்பட்டனர்.
வரலாற்றில் முதன்முதலாக 1879ஆம் ஆண்டு பாட நூல்கள் முறையாக உற்பத்தி செய்யப்பட்டன. இதன்போதுதான் திணைக்களப் பணிப்பாளர்கள், வித்தியாதரிசிகள், மொழிபெயர்ப்பாளர்கள், புலமையாளர்கள் முதலியோர் பாட நூல் ஆசிரியராக அவதாரமெடுத்தனர். பாட நூல் ஆசிரியர்கள், கல்விப் பரப்பில் நட்சத்திர அந்தஸ்துடையவர்களாக வலம்வரத் தொடங்கும் காலம் இங்கிருந்துதான் ஆரம்பமானது. பாட நூல்கள் பல எழுதியும் மொழிபெயர்த்தும் வெளிவரத் தொடங்கிய சூழலில், பாட நூலாக்க மொழித் தகுதி பற்றிய பிரச்சினைகள் கிளம்பியதையும் மறந்து விடலாகாது. வாசிப்பு நூல், வினாவிடை நூல், சுருக்க நூல், உரை நூல், பயிற்சி நூல் முதலாய வகைகளில் பாட நூல்கள் தோன்றின.
1943இல், பருவப் பத்திரம் IV என வெளியிடப்பட்ட பாடப் புத்தக ஆணைக்குழு அறிக்கையின் பிரகாரம், “பாடப் புத்தகக் குழு” புதிதாக இயங்கத் தொடங்கியது. இதில் திணைக்கள உத்தியோகத்தர்கள் பலரும் அங்கத்தவரானார்கள். பாட நூல் ஆசிரியர்களும் பாட நூல் வெளியீட்டாளர்களும் வெளியிட்ட பாட நூல்களை, பாடசாலை மாணவர்களின் உபயோகம் கருதி, பணிப்பாளருக்கு விதப்புரை செய்யும் பணியை, இத்தகைய பாடப் புத்தகக் குழு மேற்கொண்டிருந்தது. தாய் மொழியில் பாடப் புத்தகங்கள் எழுதுவதற்கு, உள்ளூர் எழுத்தாளர்களுக்கு ஆதரவும் வழங்கப்பட்டது.
1950இல் கல்வி வெளியீட்டுச் சபை ஆரம்பமானதுடன், விதப்புரை செய்யும் பொறுப்பை அச்சபையே மேற்கொண்டது. 1955இல் சுயமொழிப் பாட உற்பத்தி அலகு ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. 1960இல் கல்வி வெளியீட்டுத் திணைக்களம் நிறுவப்பட்டது. அதன் பின்னர், அந்தத் திணைக்களமே பாட விதானத்திற்கு அமைவான பாட நூல் வெளியிடும் அதிகாரத்தைப் பெற்றது. எனினும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் புலமை விருத்தி கருதி, அரசின் பாட விதானத்துக்கு அமைவாகப் பாட நூல்களை ஆக்குவதில் தமிழ்ப் புலமையாளர்கள் முனைப்போடு ஈடுபட்டனர். தாய்மொழிக் கல்வி முதன்மை பெறத் தொடங்கிய சூழலில், தாய்மொழிக்கான பாடவேளைகள் ஏனைய பாட வேளைகளைவிடவும் அதிகமாயின. உதாரணமாக, 1967ஆம் ஆண்டின் 48ஆம் இலக்கச் சுற்றறிக்கையில். ஆறாம் வகுப்பில், தமிழ் மொழி ஒரு வாரத்தில் ஆறு பாட வேளைகளைக் கொண்டமைந்ததைக் குறிப்பிடலாம். இத்தகையதொரு வரலாற்றுப் புரிதல், ஈழத்துத் தமிழ்ப் பாடநூலாக்க மரபைப் புரிந்து கொள்ள அவசியமாகிறது.
ஈழத்தில், காலனிய காலம் முதல் இற்றைக் காலம்வரை, தமிழ்ப் பாட நூலாக்கம் மற்றும் தமிழ்ப் பாட நூலாக்கத்தில் தமிழ் உரைநூல்களின் வகிபாகம்பற்றி நோக்கும்போது, சில முக்கியமான வரலாற்றுக் கட்டங்களை இனங்காண முடிகிறது. அவைபற்றித் தனித்தனியே சுருக்கமாக நோக்கலாம்.
முதலியார் பள்ளிக்கூடம் - பாடத் திட்ட ஆசிரியப்பா
நாவலருக்கு முந்தைய கால யாழ்ப்பாணக் கல்வி மரபில், கல்விசார் நிறுவனம் எனும் வகையில் முன்னோடியாக விளங்கியது, யாழ்ப்பாணத்து உடுப்பிட்டியில் ‘திண்ணைப் பள்ளிக்கூடம்’ எனும் நிலையில் இயங்கி, பின்னர் ‘தருமப் பள்ளிக்கூடம்’ எனப் பெயர் பெற்ற சிவசம்புப் புலவரின் தந்தையார் அருளம்பல முதலியார் நடாத்திய பாடசாலை ஆகும்.(சிவலிங்கராஜா,எஸ்.1984:29) அமெரிக்க மிஷனரிமார் வட்டுக்கோட்டைச் செமினறியை ஆரம்பித்த காலத்தில், இப்பாடசாலை ‘முதலியார் பாடசாலை’ என்ற புகழோடு, யாழ்ப்பாணத்தில் அறிவொளி பரப்பி, ஈழத்துப் புலமைப் பண்பாட்டில் ஆழ வேரூன்றி இருந்தது.(நீலகண்டன், கா.1999:4)
இப்பாடசாலையில் யாழ்ப்பாணம் மற்றும் தமிழ் நாட்டுப் புலமையாளர்கள் மாணவரோடு உடனுறைந்து கற்பித்தனர். ஈழத்துக் கல்வி மரபில் நிறுவனநிலைப்பட்ட சுதேசிகளின் பாடசாலை என்ற வகையில், வயதால் மிக மூத்த பாடசாலை, அருளம்பல முதலியாருடையதே என்பதை, மக்கள் கவிமணி மு.இராமலிங்கம்பிள்ளை எழுதிய, ‘நாவலருக்கு முந்திய கல்வி முயற்சிகள்’ போன்ற பிரசுரங்கள் மற்றும் உதயதாரகைப் பத்திரிகைச் செய்திகள், தெரிவிக்கின்றன.
இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து நிலவி வந்த பாடத் திட்டம் மிக நீண்ட காலமாக ஓலைச் சுவடியிலிருந்தது. அது, முதன்முதலாக 1844ஆம் ஆண்டு உதயதாரகைப் பத்திரிகையில் அச்சில் வெளியாகியது. இப்பாடத் திட்டம் ஓர் ஆசிரியப்பாவில் அமைந்துள்ளது. “திருவள ருடுவைவாழ் சீரரு ளம்பல மகிபன்றா பித்து மகிழுறச் சாலையி லாதி வகுப்பினில்…….” எனத் தொடங்கும் மிக நீண்ட அந்த ஆசிரியப்பா, “துவாதச வகுப்பருந் துவாத சம்மே அரிவரி யாகு மவர்கற் பதுவே” என நிறைவடைகிறது. இந்த ஆசிரியப்பாவின்மூலம், அருளம்பல முதலியாரின் தருமப் பாடசாலையில் வகுப்புவாரியான பாடத்திட்டம் இருந்ததை அறிய முடிகிறது. கல்வி நிறுவனத்தின் பாடத் திட்டத்தை விவரிப்பதால் இதனைப் ‘பாடத் திட்ட ஆசிரியப்பா’ எனச் சிறப்புக் கருதிக் குறிக்கலாம்.
அரிவரியிலிருந்து துவாதச வகுப்பாகிய பன்னிரண்டாம் வகுப்புவரைக்குமான பாடத் திட்டத்தில், தமிழ் மற்றும் வடமொழி இலக்கிய இலக்கணங்களும் உரைநூல்கள் மற்றும் நிகண்டுகளும் சைவசித்தாந்த சாத்திரங்களும் சங்கீதம், பரதம், சோதிடம், மருத்துவம் முதலிய நூல்களும் பூமிசாஸ்திரம் முதலியனவும் கற்பிக்கப்பட்டன.
மாணவரது வகுப்பு நிலைக்கேற்ப, நேர்த்தியான முறையில் கற்பித்தல் நிகழ்ந்ததை, இப்பாடசாலையின் பாடத் திட்டம் காட்டி நிற்கிறது. ஓலைச் சுவடிகளை முதன்மையாகக் கொண்ட இக்கல்வி நிலையத்தில் பாட நூல்களாகப் பழந்தமிழ் உரைகள் கற்பிக்கப்பட்டதையும் பழந்தமிழ் நூல்களுக்கான உரைகள் எழுதப்பட்டு, அவை அச்சேறத் தொடங்கிய காலத்தில், அவ்வுரை நூல்கள் பாடத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டதையும் அறிய முடிகிறது.(நீலகண்டன், கா.1999:4) எனவே, முதலியார் பள்ளிக்கூடத்தில் பழந்தமிழ் உரைகளும் பழந்தமிழ் நூல்களுக்கான புதிய உரைகளும் பாட நூல்களாக இருந்தமை புலப்படுகிறது.
-
முன்னோடிப் பாட நூல்கள் - பாலபோதமும் பாலபாடமும்
கூழங்கைத் தம்பிரானிலிருந்து உருவாகிய ஈழத்துக்கே உரித்தான தமிழ்ப் புலமை மரபு, பத்தொன்பதாம் நூற்றாண்டில் நாவலர் புலமை மரபு, சிவசம்புப் புலவர் புலமை மரபு என இருபெரும் மரபுகளாக வளர்ச்சி பெற்றது. இக்காலத்தில், மரபுவழிக் கல்வி மற்றும் நிறுவனரீதியான கல்வி ஆகிய இரண்டும் ஒன்றுடன் ஒன்று ஊடாடி வளரும் நிலைக்கு, யாழ்ப்பாணத்திலிருந்து தென்கிழக்காசியா வரையும் அறிவுக் கோலோச்சிய ஐரோப்பிய மிஷனரிகளும் அவற்றின் புலமைசார் செயற்பாடுகளும் காரணமாய் அமைந்தன.
இங்கு தமிழ் கற்கைக்கான பாடத் திட்டத்தில், உரைநூல்களை மூன்று நிலைகளில் அவதானிக்க முடிகிறது. அவற்றுள் முதலாவது, சுதேசிகளின் மரபுசார் புலமை நிறுவனங்களின் பாடத் திட்டம். இப்பாடத் திட்டத்தில் பழந்தமிழ் உரைகளே முதன்மை பெற்றன. எனினும், உரையெழுதி அச்சாகிய நீதி நூல்களும் கற்பிக்கப்பட்டதை அறிய முடிகிறது. சிவசம்புப் புலவரின் பாடசாலையை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். இதுபோன்ற பாடசாலைகள் நல்லூர், தெல்லிப்பளை, வட்டுக்கோட்டை, அராலி முதலிய இடங்களிலும் வடமராட்சியின் உடுப்பிட்டி, கரணவாய், பருத்தித்துறை, புலோலி, நவிண்டில், வல்வெட்டித்துறை, தும்பளை, மாதனை முதலிய இடங்களிலும் இருந்தன. இரண்டாவது, ஐரோப்பியப் பாணியை மையமாக வைத்து, சுதேசியத் தமிழ்ப் புலமையாளர் உருவாக்கிய பாடத் திட்டம். இப்பாடத் திட்டத்தில், மாணவரின் வயதுசார் அறிவுநிலை கருதி எழுதப்பட்ட உரைநூல்கள் முதன்மை பெறத் தொடங்கின. எனினும், அறிவு முதிர்ச்சியடைந்த மாணவர்களுக்குப் பழந்தமிழ் உரைகள் கற்பிக்கப்பட்டிருந்தன. நாவலர் மற்றும் அவரைப் பின்பற்றியோர் தமது பாடத் திட்டத்தில் இந்த முறையைக் கடைப்பிடித்தனர். மூன்றாவது, மிஷனரிகளின் பாடத் திட்டம். இப்பாடத் திட்டம் பெரும்பாலும் மேலைத்தேயப் பாட உள்ளடங்கல் முறையைக் கொண்டமைந்திருப்பினும், பழந்தமிழ் உரைநூல்களின் சில பகுதிகளையும், புதிதாக உரையெழுதப்பட்ட நீதி நூல் உரைகள் மற்றும் இலக்கண நூல் உரைகளையும் உள்ளடக்கியிருந்தது.
மேற்குறித்த மூன்று நிலைகளிலும் உரைநூல்களைப் பாட நூலாகக் கற்பிப்பதில் மூன்றுவிதமான எல்லைப்படுத்தல்கள் இருந்ததமையை அவதானிக்க முடிகிறது. அவற்றுள் ஒன்று, வகுப்பறையில் அமுலாகிய வரையறையான நேரக் கட்டுப்பாடு. குறித்த நேரக் கட்டுப்பாட்டிற்குள் கற்பிக்க வேண்டிய தேவை, உரைநூல்களை முழுமையாகக் கற்பிக்க முடியாதநிலையை உருவாக்கியது. எஸ்.சிவலிங்கராஜா முதலியோர் கூறுவதுபோல் தலைமை மற்றும் உதவி ஆசிரிய மரபினருக்கு ஏற்பட்ட “உத்தியோக நிர்ப்பந்தம்”(2008:59) இந்த எல்லைப்பாட்டிற்குக் காரணமாகியது. இரண்டாவது, பரீட்சை முறையின் அறிமுகம். நிறுவன வழிவரும் பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்பட்ட பரீட்சை முறைமைகள், மரபுசார் பாடசாலைகளிலும் பின்பற்றப்பட்டன. பரீட்சையை மையப்படுத்தி, பாடத்திட்டத்தில் அமைந்த நூற் பகுதிக்கான உரையைக் கற்பிக்கும் அம்சம் இங்கு முதன்மை பெற்றது. இதன் காரணமாகப் பாடத்திட்டத்தில் அமைந்த உரைப் பகுதிகளை, மாணவரின் வாய்மொழி மற்றும் எழுத்துப் பரீட்சைக்கு ஏற்ற கால அளவினைக் கருத்திற்கொண்டு கற்பிக்கும்நிலை உருவாகியது. மூன்றாவது, ஒழுங்குறவும் ஆழமாகவும் குறித்த பகுதியைக் கற்பிக்கும் முறை. இது மிகவும் முக்கியமானது. ‘பாடத்தை ஒழுங்குறப் பயிற்றும் முறையே பாடத் திட்டம்’ என்பதற்கமைய, புதியதொரு வகுப்பறைச் சூழலில், குறித்த நேரத்திற்குள், பாட நூல் உரைப் பகுதிகளைக் கற்பிக்க வேண்டியநிலை, உரைநூல்களைக் கற்கும் மரபில் மாற்றத்தை ஏற்படுத்தியது. இதன்போதுதான், மாணவரது வகுப்புத் தரங்களுக்கேற்பவும் நேர சூசிக்கேற்பவும், பாடத் திடத்தில் அமைந்த உரைநூல்கள் அல்லது உரைநூற் பகுதிகளைக் கையாளுதல் இடம்பெற்றது. முக்கியமாக, பாடத் திட்டத்தில் அமைந்த நூல்களுக்கான உரைகளை, வகுப்புகளின் தரங்களை மனங்கொண்டு எழுதுதல் முதன்மை பெறத் தொடங்கியது.
ஈழத்துத் தமிழ்ப் பாட நூல் வரலாற்றிலே, மாணவரின் அறிவுநிலையை மனங்கொண்டு, நவீன கல்வி முறைக்கேற்பத் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் பாட நூல்கள், நாவலரின் பாலபாடங்களே.(சிவலிங்கராஜா,எஸ்.,சரஸ்வதி,சி.2008:41) அதுபோல, நீதி நூல்களுக்கான நாவலரது உரைகள், மாணவரை மையமாகக் கொண்டிருத்தலால், பாட நூலாக்க உரைகளுக்கு முன்னோடியாகவும் அமைந்தன. ஆயினும், அமெரிக்கன் சிலோன் மிஷன் வெளியிட்ட ‘பாலபோதம்’ எனும் பெயரிலான பாட நூல்கள், பாட நூலாக்கத் துறையில் ஆறுமுகநாவலருக்கு முன்னோடியாக அமைந்ததோ எனும் ஐயம் தெளியப்பட வேண்டிய ஒன்று.
பாட நூலாக்க முன்னோடி - போதனாசிரியரான பதிப்பாசிரியர்
ஈழத்துப் பாட நூலாக்க மரபில், பதிப்பாசிரியர்கள் மிகுந்த கரிசனையோடு செயற்பட்டுள்ளதை அவர்களின் எழுத்துக்கள் காட்டி நிற்கின்றன. தனியே பதிப்புத் துறையோடு நின்று விடாமல், பதிப்பித்த நூல்களை, காலத் தேவைக்கு ஏற்றவாறு, கல்வி முறைக்குள் புகுத்திப் பயன்படுத்துவதிலும் அவர்கள் முன்னோடிகளாக இருந்தனர். நவீன வகுப்பறைக்கு ஏற்ற விதத்தில், அச்சிடப்பட்ட உரைநூல்களின் பகுதிகளை, பாடப் புத்தகங்களாகக் கொண்டுவருவதற்கும் அவர்கள் உழைத்தனர். அந்தவகையில், ஏட்டு வடிவில் கற்ற தமிழ் நூல்களை, தமிழ் கற்பித்தலின் தொடர்ச்சியறாதவாறு, நவீன வகுப்பறைக் கல்விக்கு மடை மாற்றிய பெருமை பதிப்பாசிரியர்களைச் சாரும்.
தமிழ்ப் பதிப்புலகின் தலைமகனாகிய ஈழத்துப் பதிப்பாசிரியர் சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்கள், பதிப்புத் துறையில் மட்டுமல்லாது பாட நூலாக்கத் துறையிலும் தமிழ் நாட்டவருக்கு முன்னோடியாக விளங்கினார். காலனிய காலச் சென்னை அரசின் கல்வித் துறை அதிகாரியாகிய மார்ஸ்டென் என்பவரோடு இணைந்து பாட நூல்களைப் பிள்ளையவர்கள் எழுதுவதில் மிகுந்த அக்கறை காட்டினார். பல விதங்களில் உ.வே.சாமிநாதையருக்கு ஓர் இலட்சிய புருஷராகத் திகழ்ந்த சி.வை.தாமோதரம்பிள்ளை, 10.01.1899, 20.11.1899 ஆகிய இரு திகதிகளில், ஐயருக்கு எழுதிய கடிதங்கள், பாட நூலாக்கத்திலும் ‘சி.வை.தா.வே ஐயருக்கு உபதேசி’யாக இருந்தார் என்பதைப் புலப்படுத்துகின்றன. சி.வை.தா.வுக்கு மிகவும் இளையவராக, நவீன கல்வி மரபு பற்றியே சிந்திக்காத, மரபுவழிக் கல்வி மட்டுமே அறிந்தவராக ஐயர் இருந்தபோதிலும், ஐயரிடமும் ஆலோசனை பெறச் சி.வை.தா. முயன்றமையானது காலத்தோடு ஒட்டிய கல்வித் தேவையை நிறைவேற்றுவதிலும் அதற்குத் தக்கவாறு தமிழைத் தகுதிப்படுத்துவதிலும் அவருக்கு இருந்த அக்கறையைப் புலப்படுத்துகின்றன. சி.வை.தா. எழுதிய கடிதங்களின் பின்வரும் பகுதிகள் குறிப்பிடத்தக்கவை.
“1902 இல் பீ.ஏ பரீட்சைக்குப் புறநானூற்றில் ஒரு பாகமும் வைத்திருக்க வேண்டுமென்று பேசியிருக்கிறேன். தங்கள் காலிஜின் அபிப்பிராய நிருபத்திலும் புறநானூறு கண்டிருப்பது மட்டுமன்றி, அதற்குத் துணையாக இலக்கண விளக்கத்துப் புறத்திணையியலும் நியமிக்கும்படி தாங்களும் எழுதுவித்தால் உத்தமம். 1901 இத்து எம்.ஏ.க்குச் சூளாமணி பிற்பாகம் நியமிக்கும்படி தங்கள் அபிப்பிராயம் சொல்லும்படி வேண்டுகின்றேன். இலக்கியத்தில் சிந்தாமணி அல்லது சிலப்பதிகாரமும் இதிகாசத்தில் ஆழிய நுண்பொருள் நோக்கமாக இராமாயணமும் செம்பாகமாக வசன நடைப் பயிற்சிக்காகக் கந்தபுராணமும் நீதி நூலிற் குறளும் எப்போதும் பீ.ஏ. பரீட்சையில் இருக்க வேண்டுமென்று வற்புறுத்தி நான் பேசியும் 1901 வருடத்திற்குக் கந்தபுராணத்தைத் தள்ளிவிட்டார்கள். … பஞ்சலக்கியத்தில் ஒன்றும், இராமாயணம், கந்தபுராணம் திருக்குறளும் எப்போதுமிருக்க வேண்டுமென்று அதிகம் வற்புறுத்தி இவ்வருடம் எழுதியிருக்கின்றேன். ..” (10.01.1899)
“இன்றைத் தபாலில் ஆறாமேழாம் வாசக புத்தகங்கள் தங்கள் பார்வைக்கு அனுப்புகின்றேன். அவைகளின் குணாகுணங்களைக் குறித்தும் மிஷன் ஸ்கூல் மேல் வகுப்பினர்க்கு அவைகளின் பாஷை நடைத் தகுதியைக் குறித்தும் தங்கள் அபிப்பிராயத்தை நவெம்பர் மாதம் முடியுமுன் தெரிவிக்கும்படி வேண்டுகின்றேன். அபிப்பிராயத்தை எனக்கு எழுதும் கடிதத்தில் ஒரு பாகமாய் வரையாது தனியே ஒரு துண்டில் அனுப்புக. வேறாகப் பதிற் கடிதமெழுதினால் அதற்குள்ளே வைத்தனுப்பலாம்.”(20.11.1899)
நூலாசிரியர், உரையாசிரியர், போதனாசிரியர் என வரும் தமிழ் மரபில் பரிசோதனாசிரிய மரபை உருவாக்கிய பதிப்பாசியரான சி.வை.தா., பாட நூலாக்க மரபிற்கும் பங்களிப்புச் செய்துள்ளமை, மேற்படி கடிதப் பகுதிகளின்வழி தெளிவாகிறது.
உரைநூலும் பாட நூல் உரையும் - கல்வித் தேவை
ஈழத்தில் உரைநூல்களின் தோற்றத்துக்கான காரணிகள் பல உண்டெனினும் அவற்றுள் கல்வித் தேவை(சிவலிங்கராஜா,எஸ்.,2004:12-26) முதன்மையானது. ஈழத்தில் பெருமளவு உரைகள், கல்வித் தேவை கருதியே எழுந்தன. மூலநூலை மட்டும் அல்லாது உரையினைக் கற்றலையும் “பாடங் கேட்டல்” எனும் தொடரால் குறிக்கும் வழக்கம் இருந்தது. உரைநூல் ஆசிரியர், தமது ஆசிரியரிடம் கற்றபோது குறித்து வைத்த குறிப்புக்களையும் தமது மாணவர்களுக்குக் கற்பிக்கும்போது தயாரித்த குறிப்புக்களையும் துணைக்கொண்டு, உரை விளக்க நூல் எழுதும் பண்பு ஈழத்தில் நிலவியது. இதற்குச் சான்றாகக் கணேசையர் தமது தொல்காப்பியப் பதிப்பில் எழுதும் முகவுரையின் ஒரு பகுதியைக் குறிப்பிடலாம்.
“இவ்விளக்கவுரைக் குறிப்புக்கள், யாம் படிக்குங் காலத்தில் எமது ஆசிரியர்களாகிய வித்துவ சிரோமணி ந.ச.பொன்னம்பலபிள்ளை, சுன்னாகம் அ.குமாரசாமிப் புலவர் என்பவர்களிடம் கேட்டுக் குறித்தனவும், யாம் படிப்பிக்குங் காலத்தில் பலமுறை யாராய்ந்து குறித்து வைத்தனவுமாகும்.” (தொல்-எழுத்து-முகவுரை 1937:xiv)
பாடம் சொல்லல் மற்றும் கேட்டல் மரபில், உரைநூல்களைச் சொல்லலும் கேட்டலும் முக்கிய இடம் பெற்றிருந்ததையும் உரைநூல்கள் அம்மரபினடியாகவே உருப்பெற்றதையும் கணேசையரின் மேற்படி கூற்றுத் தெளிவுபடுத்துகிறது..
பழந்தமிழ் உரையும் பாட நூல் உரையும் கல்வித் தேவை கருதியதே எனினும், பாட நூல் உரை மரபு முற்குறிப்பிட்ட பழந்தமிழ் உரைநூல் எழுத்து மரபிலிருந்து பெரிதும் மாறுபட்டது. பாட விதானத்தில் இடம்பெறும் நூற்பகுதி ஒன்றிற்கு, மாணவனின் வகுப்புநிலையை மனங்கொண்டும், பாடவேளை மற்றும் பரீட்சைத் தேவையை மனங்கொண்டும் எழுதுவது பாட நூல் உரையாகும். அதாவது, உரைநூல்கள் பாடத் திட்டத்தில் அமைந்த நிலையிலிருந்து மாறி, பாடத் திட்டத்தில் அமைந்த நூற் பகுதிக்கு உரையெழுதுதல் என இது நிலைபெற்றது.
1950இல், கல்வி வெள்ளை அறிக்கையின் பிரகாரம், கல்வியானது ஆரம்ப நிலை, இடைநிலை மற்றும் உயர்கல்வி எனத் தரம் பிரிக்கப்பட்டது. இலவசக் கல்வியின் வருகையுடன் பாட நூல்களின் தேவை பெரிதும் அதிகரிக்கத் தொடங்கியபோதுதான், பாட நூல் உரைகளும் பெருகி, பாட நூல் உரைமரபு எனும் தனித்துவமான போக்கொன்று ஈழத்தில் உருவாகியதை அடையாளங் காண முடிகிறது. இந்த உருவாக்கம் நவீன கல்விச்சூழல் சார்ந்து நிகழ்ந்தமையால் அச்சூழலுக்கே உரிய போதனை மற்றும் விளக்க முறைகளையும் எளிமைத் தன்மையையும் பெற்றிருந்ததுடன், பரீட்சை மதிப்பீடுசார் அம்சங்களையும் பெற்றிருந்தது. சுதந்திர இலங்கையில் பாட நூல் உரைமரபின் தொடக்க காலமாக 1950களைக் குறிக்கலாம். பொதுப் பரீட்சை முக்கியத்துவம் பெற்றதும் பாட நூல் உரைகள் பெருஞ் செல்வாக்குப் பெற்றன. 1950, 1960 களில் வெளிவந்த க.பொ.த (சாதாரண), க.பொ.த. (உயர்தர) வகுப்புக்களுக்கான பாட நூல்களில், பெரும் எண்ணிக்கைக்குரியவை உரைநூல்களே என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாடநூல் உரையாசியர்கள் ஆழமான இலக்கிய, இலக்கணப் புலமையாளராக விளங்கினர். பழந்தமிழ் உரைகளை எளிமையாக்கி எழுதுதல் என்பதற்கும் அப்பால், எழுதுபவர் பண்டிதராகவும் புலவராகவும் வித்துவானாகவும் அறிஞராகவும் இருந்தமையால், தமது புலமைத் திறனை வெளிப்படுத்தும் விதத்திலும் உரைநூல்களை எழுதினர்.
சுன்னாகம் அ.குமாரசுவாமிப் புலவர், வித்துவசிரோமணி சி.கணேசையர், பண்டிதர் க.பே.முத்தையா, புலமையாளர் நாவலர் கோட்டம் ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை, பண்டிதர் ம.வே. திருஞானசம்பந்தபிள்ளை, பண்டிதர் மு. நல்லதம்பி, பண்டிதர் எஸ்.பி. சாமிநாதன், கவிஞர் மு. செல்லையா, அ.சே. சுந்தரராஜன், வித்துவான் க.வேந்தனார், வித்துவான் பொன்.முத்துக்குமாரன், பண்டிதர் சு.வேலுப்பிள்ளை, பண்டிதர் க.வீரகத்தி, வித்துவான் க.கி.நடராசா, இரசிகமணி கனக. செந்திநாதன், சைவப் புலவர் வே.சிவக்கொழுந்து, வித்துவான் க. சொக்கலிங்கம் முதலியோர் பாட நூல்களையும் பாட நூல் உரைகளையும் எழுதினர்.
தமிழ் மலர் மாலை(1950), தமிழ் அமுதம்(1956), தமிழ் மஞ்சரி(1958) முதலாய பல பாட நூல்கள், செய்யுட்களுக்கான உரைப் பகுதிகளையும் தாங்கி வெளிவந்தன. நல்லூர் த.கைலாசபிள்ளை எழுதிய ‘வசனத் தொடை - முதற் புத்தகம்’, நாவலர் கோட்டம் ஆ.முத்துத்தம்பிப்பிள்ளையின் ‘பாரதச் சுருக்கம்’(1903), பண்டிதர் மு. நல்லதம்பி, பண்டிதர் எஸ். பி. சாமிநாதன் ஆகியோர் ஆக்கிய ‘செந்தமிழ் இலக்கியக் கோவை – தமிழ் வியாசங்கள் என்பவற்றின் உரைகள்’(1933), பண்டிதர் ம.வே. திருஞானசம்பந்தப் பிள்ளை தொகுத்தளித்த ‘செந்தமிழ் மொழி வளம்’(1954), அ. சே. சுந்தரராஜன் எழுதிய ‘தமிழ் அமுதம்’ (1933). க.பே. முத்தையா அவர்கள் தொகுத்தளித்த ‘தமிழ் அறிவு’(1955), கவிஞர் மு. செல்லையா எழுதிய ‘பரீட்சைச் சித்திற்கேற்ற பாஷைப் பயிற்சி’(1953) முதலாய பல நூல்கள் முன்னோடிப் பாட நூல்களாய் அமைந்தன எனினும் அவற்றில் சிலவற்றில் மாத்திரமே உரைப் பகுதிகள் வெளிவந்தன. (இப்பட்டியல் இன்னும் நீளும். கட்டுரையின் விரிவஞ்சித் தவிர்க்கப்படுகிறது.)
இன்று பிரபலமாக அறியப்படும், நாவலர் கோட்டம் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளையின் பாரதச் சுருக்கம், 1903இல் வெளியாகி, வெளிவந்த காலத்தின் கல்வித் தேவைக்கும் பிற்காலக் கல்வித் தேவைக்கும் பெரிதும் பயன்படுத்தப்பட்டது. அரசினரின் கல்வித் தேவை கருதியே இது எழுதி அச்சிடப்பட்டு, அனுமதி பெறப்பட்டது என்பதை, நூலில் வரும் “Approved for use in Schools by the Educational Publications Board of Ceylon on 31-12-1958”எனும் தொடர் காட்டி நிற்கிறது.
அறிஞர்களின் அபிப்பிராயம் பெற்று வெளியிடலும் வெளிவந்தவுடன் அறிஞர்கள் பத்திரிகைகளில் அபிப்பிராயம் எழுதுதலும் பாட நூலுக்கான புலமைசார் அங்கீகாரமாகக் கருதப்பட்டன. பேரறிஞர் வண.சேவியர் தனிநாயக அடிகள், பண்டிமணி சி.கணபதிப்பிள்ளை, தமிழறிஞர் செ.வே. ஜம்புலிங்கம்பிள்ளை, வித்துவான் ந.சுப்பையாபிள்ளை, அகில இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கத் தலைவராயிருந்த அறிஞர் நா. தம்பிரத்தினம், பண்டிதர் வீ.ஏ. யோன்பிள்ளை, பண்டிதர் பொன். கிருஷ்ணபிள்ளை முதலியோர் பாட நூல்களைப் பற்றிய அபிப்பிராயங்களைப் பத்திரிகைகளில் எழுதினர். இவர்களது இக்குறிப்புகள் பாட நூல்கள் தொடர்பான மதிப்பீடுசார் குறிப்புக்களாகவும் அமைந்தன. சிறந்ததாகக் கருதப்படும் பாட நூல் ஒன்றைக் கல்விச் சமூகத்திற்கு அடையாளங் காட்டியதில், பத்திரிகைகளின் பங்கு அளப்பரியதாயிருந்தது. உதாரணமாக, ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளையின் செந்தமிழ் மொழிவளம்’ எனும் பாட நூலுக்கு, இந்து சாதனம் (25.06.1954), சத்திய வேத பாதுகாவலன் (01.07.1954), ஈழகேசரி (18.07.1954), வீரகேசரி (15.08.1954), ஆனந்தன் (1954 யூலை), Hindu Organ (30.07.1954) ஆகியவற்றில் வெளியான மதிப்பீட்டுக் குறிப்புக்கள் நோக்கத்தக்கவை.
தமிழ்த்தூது தனிநாயக அடிகள், அறிஞர் க.பே. முத்தையா எழுதிய தமிழ் அறிவு(1955) எனும் பாட நூலுக்கான வாழ்த்துரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
“குடியாட்சியில் மக்கள் இன்புற வாழ வேண்டுமாயின் அவர் தம்மொழியைப் பிழையின்றிப் பேசவும் எழுதவும் பயின்று, தம் கருத்துக்களைப் பிழையின்றி வெளிப்படுத்தல் வேண்டும். இந்நோக்கங்களை நிறைவேற்றும் பொருட்டு இலங்கையின் புதுக் கல்வித் திட்டத்தையும் அரசியலமைப்பையுங் கருதி, சில துணைநூல்கள் வெளிவந்துள்ளன. ஆசிரியர் முத்தையா தொகுத்துள்ள ‘தமிழ் அறிவு’ என்னும் நூல் உயர்நிலை வகுப்பு ஆசிரியர்க்கும் மாணவர்க்கும் பெரிதும் பயன்படும்.”(1955:3)
இதிலிருந்து, பாட நூல் மற்றும் பாட நூல் உரை முதலியன புலமைச் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்விசார் செயற்பாடுகள் என்பது தெளிவாகிறது.
பாட நூல் உரையாசிரியர்கள் குறித்த பாடப் பகுதிகளுக்குத் தாமாகவே உரை எழுதி வெளியிட்டனர் எனினும், அச்சக உரிமையாளர் மற்றும் வெளியீட்டாளர் கேட்டுக் கொண்டபடி எழுதிய உரைகளே ஏராளம். ஈழத்தில் தமிழ்ப் பாட நூல் உரைகளின் பரம்பலில் நாவலர் அச்சுக்கூடம், ஸ்ரீ காந்தா அச்சகம், தனலக்குமி புத்தகசாலை, ஸ்ரீ லங்கா புத்தக சாலை, வட லங்கா புத்தகசாலை, சுப்பிரமணிய புத்தகசாலை முதலாய நிறுவனங்கள் அதிக அக்கறை காட்டின. “ஈழகேசரி நா.பொன்னையா அவர்கள் உத்தியோகப் பற்றற்ற முறையில் பாட நூல் எழுதும் குழுவொன்றை நியமித்துச் செயற்பட்டார்.”(சிவலிங்கராஜா,எஸ். 2010:iஎ) பொருளாதாரத் தடை அமுலில் இருந்த யுத்த காலத்தில், கோடிட்ட எழுது தாள்களில் பாட நூல் உரைகள் அச்சிட்டு வெளியாகின. பண்டிதர் சு.வேலுப்பிள்ளையின் தேர்ந்த செய்யுட்கோவை முதலிய நூல்களும் வித்துவான் சொக்கனின் சில நூல்களும் இவ்வாறு வெளிவந்தன.
உரைநூல்கள் பாடத் திட்டத்தில் அமைந்த நிலையிலிருந்து மாறிப் பாட விதான நூற் பகுதிகளுக்கு உரையெழுதும் 1950, 60களில், வித்துவான் க. வேந்தனார் வளம்மிக்க பாட நூல் உரையாசிரியராக அடையாளம் காணப்படுகிறார்.
வேந்தனார் - பாட நூல் உரையும் உரைத் திறனும்
வேந்தனார் பண்டிதர்(1941), சைவப்புலவர்(1942), வித்துவான்(1944), சித்தாந்த சிரோமணி(1964) முதலாய புலமைசார் தகுதிகளைப் பெற்றவர் என்பதனூடு அவர் ஈழத்தின் செம்மாந்த புலமை மரபிற்குரிய புலமையாளராகத் தன்னை நிலைநிறுத்தியவர் என்பது புலப்படுகிறது. 1943இல் பயிற்றப்பட்ட ஆசிரியராகி, 32 ஆண்டுகள் தமிழ் மற்றும் சைவாசிரியப் பணி புரிந்தவர். 1964இலிருந்து இலங்கை அரசாங்கப் புத்தக வெளியீட்டுச் சபையின் தமிழ்ப் பகுதி உறுப்பினராகக் கடமையாற்றியவர். எனவே புலமைவழி, தொழில்வழி, நிறுவனவழி வரும் இம்மூன்று அம்சங்களும் தேர்ந்த பாடநூல் உரையாசிரியராக வேந்தனாரை, ஈழத்துத் தமிழ்க் கல்விப் புலத்தில் நிலைநிறுத்தின.
பாட நூல் உரைகுறித்த அவரது கொள்கை பற்றிய பதிவுகள் கிடைத்தில எனினும் அவரது சமகாலப் பாட நூல் உரையாசிரியர்களுக்குரிய நோக்கத்தினையே குறித்த காலத்திற்குரிய பொதுவான கொள்கையாக வரித்துக் கொள்ள வேண்டும். அதேவேளை வேந்தனாரின் பாட நூல் உரைகளிலிருந்தும் அவரின் உரை நெறிமுறைகளை அறிய வேண்டும். அவ்வாறான அறிதல், அகச்சான்றுகளின் வழியான அறிதலாக அமையும். அதுவே வேந்தனாரின் உரை நெறிமுறைக் கொள்கையாக இருக்கும்.
மாணவர் வகுப்புநிலை, தமிழ்ப் புலமை, அறிவு விருத்தி, இலக்கிய ஆர்வத்தினைத் தூண்டுதல், இலக்கிய இரசனை விருத்தி, பரீட்சை நோக்கு முதலாயவற்றை அடிப்படையாக்கொண்டு உரையெழுதும் போக்கு, அக்காலப் பாடநூல் உரையாசிரியர்களிடம், ஒரு கொள்கையாகவே இருந்தது. இந்தப் பொதுவான அம்சம் வேந்தனாருக்கும் உரியது. எனினும் பாட நூல் உரை குறித்த அவரது பிரத்தியேக நெறிமுறைகளை அவர் எழுதிய உரைகளின் வாயிலாகவே அறியமுடியும்.
வேந்தனாரின் பாடநூல் உரைகள் என வரும்போது, தனியே பாடநூல் உரைகளாக வெளிவந்தவற்றை மாத்திரம் கருதக்கூடாது. இந்து சமய பாடம் என்னும் நூலில், பாடநூல்களாக இருந்த இலக்கியப் பகுதிகளுக்கு அவர் எழுதிய உரைகளையும் கவனத்திற் கொள்ளவேண்டும். அப்போதுதான் அவரது விரிந்து பரந்த உரையறிவு புலப்படும். அந்தவகையில், பாட விதானத்துக்கு வேந்தனார் எழுதிய உரைகளைப் பின்வருமாறு பகுத்துக் கொள்ளலாம்.
வேந்தனாரின் பாட நூல் உரைகளும் வகையும்
1. திருக்குறள் உரை
அறத்துப்பால் - துறவறவியல் - 25 தொடக்கம் 28 வரையான அதிகாரங்களுக்குரிய உரைகள். (இவை இந்து சமய பாடம் -1954 எனும் நூலில் உள்ளடங்கியவை)
2. தேவாரப் பதிக உரை
1. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் - திருப்பாசுரம் மூன்றாம் திருமுறை 54ஆம் பதிகம்,
திருகோணமலைத் திருப்பதிகம் ஆகியவற்றுக்கான உரைகள்.
2. திருநாவுக்கரசு நாயனார் – ஆறாம் திருமுறை 98ம் பதிகம் - மறுமாற்றுத் தாண்டகம்,
திருவாரூர்ப் பதிகம் ஆகியவற்றுக்கான உரைகள்.
3. சுந்தரமூர்த்தி நாயனர் - திருப்பாச்சிலாச்சிராமத் திருப்பதிகம்,
திருத்தினை நகர்ப் பதிகம், திருக்கேதீச்சரப் பதிகம் ஆகியவற்றுக்கான உரைகள்.
(இவை இந்து சமய பாடம் -1954 எனும் நூலில் உள்ளடங்கியவை)
திருவாசக உரை
போற்றித் திருவகவல் (1-87 அடிகள்), திருச்சாழல், பிடித்த பத்து, யாத்திரைப் பத்து ஆகியவற்றுக்கான உரைகள். (இவை இந்து சமய பாடம் -1954 எனும் நூலில் உள்ளடங்கியவை)
4) கம்பராமாயண உரை
1. கம்பராமாயணம் – சுந்தர காண்டம் – காட்சிப் படலமும் நிந்தனைப் படலமும்
(159 செய்யுட்கள்) - விளக்கவுரை - 1956
2. கம்பராமாயணம் – யுத்த காண்டம் - கும்பகருணன் வதைப் படலம்
(1 முதல் 170 செய்யுட்கள்) - விளக்கவுரை - 1959
3. கம்பராமாயணம் - அயோத்தியா காண்டம் - மந்தரை சூழ்ச்சிப் படலமும்
கைகேயி சூழ்வினைப் படலமும் (199 செய்யுட்கள்) - விளக்கவுரை - 1960
5) மெய்கண்ட சாஸ்திர உரை
உமாபதி சிவாச்சாரியாரின் திருவருட்பயன் முழுமைக்குமான உரை.
(இது இந்து சமய பாடம் - 1954 எனும் நூலில் உள்ளடங்கியது)
6) பாரதியார் பாடல்களுக்கான உரை
பாரத தேசம், நடிப்புச் சுதேசிகள், சுதந்திரப் பெருமை, சுதந்திரதேவியின் துதி, புதுமைப் பெண், தொழில், தமிழ்த்தாய், தமிழ், மூன்று காதல், வெண்ணிலாவே, முரசு ஆகிய பதினொரு பகுதிகளுக்கான விளக்கவுரைகள். - 1965.
வேந்தனாரின் உரைநூல்களை மேற்படி பகுத்து நோக்கும்போது பின்வரும் நான்கு அம்சங்கள் புலப்படுகின்றன.
அற நூல், பக்தி நூல், காப்பிய நூல், தத்துவ நூல், நவீன கவிதை முதலாய
எல்லைப் பரப்பில் அவரது உரைகள் எழுதப்பட்டுள்ளன.
சில நூல்களின் பகுதிகளுக்கு (துறவறவியல், காட்சிப் படலம்
முதலாயின) மட்டுமல்லாது நூல் முழுமைக்கும் (திருவருட் பயன்)
உரைகள் எழுதப்பட்டுள்ளன.
பழந்தமிழ் மற்றும் இடைக்கால இலக்கியங்களுக்கு மட்டுமல்லாது
மரபினின்றும் உதித்த நவீன கவிதைகளுக்கும் (பாரதியார் பாடல்கள்)
உரைகள் எழுதப்பட்டுள்ளன.
ஈழத்துத் தேவராத் திருப்பதிகங்களுக்கு (திருகோணமலைத் திருப்பதிகம் திருக்கேதீச்சரப் பதிகம்) முழுமையாக உரையெழுதப்பட்டுள்ளது.
வேந்தனாரின் உரைநூல் எழும் பின்னணி
வேந்தனாரின் உரைநூல் எழும் பின்னணியை அறிந்து கொள்வது, அவரது உரைத்திறனை அறிய வழி சமைக்கும். அந்த அடிப்படையில் கம்பராமாயணம் - கும்பகருணன் வதைப் படலத்திற்கு அவர் எழுதிய உரைநூலின் பதிப்புரையின் ஒரு பகுதியை இங்கு குறிப்பிட்டு, அவற்றிலிருந்து சில முடிவுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
“கம்பராமாயணம் - கும்பகர்ணன் வதைப்படலம் 1-170 பாக்களும் 1957 – 1960ம் ஆண்டுகளில் நிகழவிருக்கும் கல்விப் பொதுத் தராதரப் பத்திரத் (G.C.E)) தேர்வுக்குரிய இலக்கியப் பாடமாக இருக்கின்றன. இந்த இலக்கிய நூலுக்குச் புதிய முறையில் ஒரு சிறந்த விளக்கவுரை எழுதி, மாணவர் உள்ளத்தில் இலக்கிய உணர்ச்சியைப் பெருக்க வேண்டும் என்ற எண்ணம் எமக்குத் தோன்றியது. இந்த எண்ணத்தை ஏற்றுப் பரமேஸ்வராக் கல்லூரித் தமிழ் விரிவுரையாளர், வித்துவான், பண்டிதர், சைவப்புலவர், திரு.க. வேந்தனார் அவர்கள், நனி சிறந்த விளக்கவுரை ஒன்றினை எழுதி உதவினார்கள். இலக்கிய உணர்ச்சியும் கவிதை வளமும் நிரம்பிய வித்துவான் அவர்களின் உள்ளத்திலே நின்று சுந்தர விளக்கவுரையை, இலக்கிய உலகுக்கோர் புது விருந்தாக வெளியிட்டுள்ளோம்.
ஒவ்வொரு செய்யுளுக்கும் கொண்டுகூட்டு, பொருள், பொழிப்பு, விளக்கம், குறிப்பு எனும் உறுப்புக்கள் அமைய உரை எழுதப்பட்டுள்ளது. விளக்கத்தில் செய்யுள் நயம் விரிக்கப்படுகின்றது. செய்யுள்களை, நுகர்ந்து நுகர்ந்து தீட்டிய செய்யுள் நயம் மாணவர்க்கு இலக்கிய நயப்பை அளிக்கும் இனிய விருந்தாகும். உவமான, உவமேய விளக்கம் மாணவர் உள்ளத்தில் பதியக் கூடிய முறையில் தரப்பட்டுள்ளது. குறிப்பில் இலக்கண முடிவுகள் கூறப்படுகின்றன. இவற்றுடன், 170 பாக்களையும் அவற்றின் பொருள் நிலைக்கேற்பப் பத்தொன்பது பிரிவுகளாக வகுத்து. அப்பிரிவுகள் ஒவ்வொன்றிற்கும் தனித் தனி தலையங்கங்கள் கொடுத்துப் பின் ஒவ்வொரு பிரிவுகளின்கீழ் உள்ள பாக்களின் பொருளையும் தொகுத்துத் தெளிவான உரைநடையில் எழுதப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மிக எளிதாகப் பாட்டின் பொருளை விளங்கிக் கொள்வார்கள். இப்புதிய விளக்க உரையினை, ஆசிரியர்களும் மாணவர்களும் மிக ஆர்வத்துடன் வரவேற்று, எம்மை ஆதரித்து ஊக்குவார்கள் என எதிர்பார்க்கின்றோம். தேர்வு வினாக்களும் ஈற்றில் சேர்க்கப்பட்டுள்ளன.”(1956:2)
மேற்படி பதிப்புரைப் பகுதியிலிருந்து வேந்தனாரின் உரைநூல் தொடர்பாகப் பின்வரும் அம்சங்களைக் குறித்துக் கொள்ளலாம்.
வெளியீட்டாளர்கள் கேட்டுக் கொண்டதன் பிரகாரம்
பாட நூல் உரைகள் எழுதப்பட்டுள்ளன.
க.பொ.த. சாதாரண மற்றும் உயர்தரக் கல்வித் தேவையைப்
பூர்த்தி செய்யும் நோக்கோடு அவை எழுதப்பட்டுள்ளன.
உரைகள், இலக்கு வாசகர்களாக மாணவர்களையும் அவர்களுக்குக்
கற்பிக்கும் ஆசிரியர்களையும் கொண்டிருந்தன.
செய்யுட்களுக்கான உரைகள், கொண்டுகூட்டு, பொருள், பொழிப்பு, விளக்கம்,
குறிப்பு முதலிய அடிப்படையில் எழுதப்பட்டுள்ளன.
நூற்பகுதியைப் பொருள்நிலைக்கேற்ப பகுதிகளாகப்
பிரித்து உரையெழுதப்பட்டுள்ளது.
கல்வியுடன் இணைந்த பரீட்சைத் தேவையும் உரை எழுதும் நோக்கமாதலால் தேர்வு வினாக்களும் அநுபந்தமாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
வேந்தனாரின் உரைக்கான பாடத் தெரிவு
பாடநூற் பகுதிக்கு உரை எழுதுதல் என்பதை மனங்கொள்ளாது, குறித்த இலக்கியத்தின் செய்யுட் பகுதிக்கு உரை எழுதுவது எனக் கருதி, செய்யுள் நிலையிலும் பொருள் நிலையிலும் நலிவுற்ற பாட நூல்கள் வரும் இக்காலத்தில், வேந்தனார் உரை எழுதுவதற்கான தமது பாடத் தெரிவை மேற்கொண்ட தன்மை வியப்புக்குரியது. வேந்தனாரிடம், ஒரு செய்யுளுக்கே பல பாட பேதங்கள் உள்ளபோது அவற்றில் எதைத் தெரிவு செய்து உரை எழுதுவது என்ற புலமைசார் வினாவின் அடிப்படையிலான தேடல் நிகழ்ந்ததை அவதானிக்க முடிகிறது. அத்தேடலால், பலரும் ஏற்கும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட பாடமொன்றிற்கு உரையெழுதும் முடிவிற்கு அவர் வந்திருப்பதையும் அறிய முடிகிறது. இது தேர்ந்த உரையாசியனுக்குரிய பண்புகளுள் ஒன்றாகும். இவ்விடத்தில், ‘கம்பராமாயணம் - அயோத்தியா காண்டம் - மந்தரை சூழ்ச்சிப் படலமும் கைகேயி சூழ்வினைப் படலமும்’ எனும் நூலில் வரும் பதிப்புரையின் பின்வரும் பகுதியைக் குறிப்பிடுவது பொருத்தமானது.
“இந்நூலில் உள்ள மந்தரை சூழ்ச்சிப் படலம், கைகேயி சூழ்வினைப் படலம் என்னும் இரு பகுதிகளிலும் இடம் பெற்றிருக்கும் செய்யுள்கள், பல வேறுபட்ட பாட பேதங்களுடன் காணப்பட்டபடியால், மாணவர் உள்ளத்தில் மலைவு தோன்றாவண்ணம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தால் 1959ஆம் ஆண்டு பல பிரதிகளை ஒப்பு நோக்கி ஆராய்ந்து வெளியிட்ட அயோத்தியா காண்டத்தில் உள்ள பாடல்களையே மூலபாடமாக வைத்து உரையெழுதப்பட்டுள்ளது. ஆங்கு, பிற பாட பேதங்களும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.” (1960:பதிப்புரை)
வேந்தனாரின் பாட நூல் உரையின் அமைப்பு
வேந்தனாரின் பாட நூல் உரைகள், பின்வரும் ஐந்து படிமுறைகளைக் கொண்ட அமைப்பினை உடையது. அவை பற்றிச் சுருக்கமாக நோக்கலாம்.
1. செய்யுளைப் பதம் பிரித்துக் கொண்டுகூட்டல்
பாடலைப் பதம் பிரித்து, பொருள் விளக்கம் ஏற்படும் வகையில் கொண்டு கூட்டுவது அவர் மேற்கொள்ளும் முதற்படியாகும். செய்யுளில் அமைவு பெற்றிருக்கும் சொற்களை, அவை செய்யுளில் அமைந்தவாறு பொருள் கொண்டால், எல்லாச் செய்யுள்களுக்கும் சரியான பொருள் கிடைக்காது. யாப்புநிலைக்கேற்ப சொற்களும் தொடர்களும் செய்யுளில் மாறுபட்ட நிலையில் அமைந்திருக்கும். எனவே, பாடலில் அமைவு பெற்றிருக்கும் வாக்கிய அமைதியை பொருள் இலகுவில் புரியும் வகையில் கொண்டு கூட்டுகிறார். பொருள்நிலை கருதிப் பதம் பிரித்துக் கொண்டு கூட்டுவதன்மூலம், மாணவர்களுக்குச் செய்யுளிலில் வரும் சொற்கள் மற்றும் தொடர்களின் பொருளை அண்மைப்படுத்துகிறார்.
2. செய்யுளின் பொருளை எழுதுதல்
பதம் பிரித்துக் கொண்டு கூட்டியதை வைத்தும் கதையோட்டத்தை மனதிற் கொண்டும் செய்யுளுக்கான பொருளை எழுதுவது அவரது இரண்டாவது படிமுறையாகும். கதையோட்டத்தை மனங்கொண்டு பொருள் கொள்ள வேண்டும் என்பதற்காக, குறித்த செய்யுளில் இடம்பெறாத, வருவித்துப் பொருள் கொள்ளும் இடங்களை அடைப்புக்குறியுள் இட்டு, பொருளை எழுதுகிறார். முன்னைக் கதையோட்டம் புரியும் வகையிலும் கதைச் சூழமைவில் கவனம் குவியும் வகையிலும் மாணவருக்குச் செய்யுட் பொருளை தெளிவுபடுத்தி விடுகிறார்.
3. செய்யுளின் பொருளுக்குப் பொழிப்பு எழுதுதல்
பொருளுக்கு அடுத்த படிமுறையில் பொழிப்பை எழுதுகிறார். முன்னர் கூறிய பொருளைத் திரட்டிக் கூறும் பகுதியாகப் பொழிப்பு அமைகிறது. இப்பகுதி செறிவானதாகவும் எளிமையான மொழி நடையிலும் அமைந்துள்ளது. இதன்மூலம், மாணவர்களுக்குச் செய்யுளின் சாராம்சத்தைப் புகட்டி விடுகிறார்.
4.செய்யுளைக் குறித்த விளக்கம் எழுதுதல்
பொழிப்புக்கு அடுத்த படிமுறையில் விளக்கம் எழுதுகிறார். இதில், குறித்த செய்யுளின் கூற்று முறை, பாத்திர உணர்ச்சி, குறித்த தொடர்கள் மற்றும் சொற்களை, செய்யுளை எழுதிய புலவர் அமைத்ததன் நோக்கம், அணிநயம் முதலியவற்றையும் குறித்த செய்யுளுடன் தொடர்பான கதை நிகழ்ச்சிகளையும் குறித்த செய்யுளில் வரும் தொடர்களுடன் ஒப்புமையாகி வரும் பிற இலக்கியங்களின் தொடர்களையும் எழுதுகிறார். இதன்மூலம் தான் எழுதிய உரையை வலிமையாக்குகிறார். எந்த ஒரு கோட்பாட்டையும் பின்பற்றாமல், தன் கோட்பாட்டை நிலைநாட்டும் இந்த முறையை இலக்கண நூலார் ‘தன் மதம் கொளல்’ எனக் குறிப்பிடுவர். தன்மதம் கொள்ளலோடு நின்று விடாது, மாணவருக்கும் குறித்த செய்யுளை ஆழமாக நோக்கும் முறைக்கு வழிகாட்டுகிறார். மாணவர் நயக்கத்தக்க வகையிலும் அவர்களது இலக்கிய இரசனை மேம்பாடு அடையும் வகையிலும் விளக்கம் அமைந்திருப்பது சிறப்பிற்குரியது.
5.செய்யுள் பற்றிய மேலதிக குறிப்புகள் தருதல்
இறுதியாக, குறிப்பு எனும் பகுதியில் செய்யுளில் வரும் சொற்கள் மற்றும் தொடர்களுக்கு இலக்கணக் குறிப்புகளை எழுதுகிறார். மாணவரின் இலக்கண அறிவை, அவர்கள் விரும்பிக் கற்ற செய்யுட் பகுதியின் வாயிலாக விருத்தி செய்ய முயன்றுள்ளார். குறிப்பு எனும் பகுதியிலேயே அரும்பதச் சொற்களையும் குறித்து விடுகிறார்.
மேற்படி படிமுறையில் உரையெழுதுதலை, கம்பராமாயணம் சார்ந்த பாட நூல்களுக்கான உரைகளில் மேற்கொண்டுள்ளார். திருக்குறள், தேவாரம், திருவாசகம், திருவருட்பயன் ஆகியவற்றுக்கான பாட நூல் உரைகள், சமயப் பாடத் தேவை கருதி எழுதப்பட்டமையால், நயம் மற்றும் இலக்கண, இலக்கிய விளக்கங்களைத் தவிர்த்துள்ளார். அவற்றுக்கு, சமயச் செய்திகளுக்கு முதன்மை வழங்கும் வகையில், பொருளையும் பொழிப்பையும் மாத்திரமே எழுதுகிறார். ஆனால், பாரதியார் பாடல்களுக்கான விளக்கவுரையில், குறித்த கவிதையின் தோற்றப் பின்னணியையும், அக்கவிதை எழுந்த காலச் சூழலையும் சுருக்கமாக அறிமுகப்படுத்திய பின்னர், பாடலுக்கான பொருளையும் விளக்கத்தையும் எழுதும் முறையைக் கையாள்கிறார்.
வேந்தனார் உரையில் வரும் குறிப்புக்கள் பொருளாலும் நயத்தாலும் மேம்பட்டவை. அவரது சிந்திக்கும் பாங்கைப் புலப்படுத்துபவை. உதாரணத்திற்கு பாடல் ஒன்றிற்கு அவர் எழுதும் குறிப்புப் பகுதியின் மேன்மையை இங்கு காட்டலாம்.
கும்பகருணன் வதைப் படலத்தில், இராவணன் கும்பகருணனை அழைத்து வருமாறு ஏவலாட்களை அனுப்புகிறான். அவர்கள் கும்பகருணன் அருகில் சென்று தண்டாலும் கையாலும் தாக்கியும் அவன் எழுந்திருக்காமை கண்டு, கோபங் கொண்ட ஏவலாட்கள் கூற்றில் அமைந்த பாடல் பிரசித்தமானது. அப்பாடல் வருமாறு.
“உறங்குகின்ற கும்ப கன்ன உங்கள் மாய வாழ்வெலாம்
இறங்கு கின்ற(து) இன்று காண் எழுந்திராய் எழுந்திராய்
கறங்கு போல விற்பிடித்த கால தூதர் கையிலே
உறங்குவாய் உறங்குவாய் இனிக் கிடந்து உறங்குவாய்” (கம்ப:1263)
உரையாசிரியர் வை.மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார் இப்பாடலுக்கு “கிங்கிரர் வெகுளியாற் கூறுவன” என்று தலைப்பிட, வேந்தனார் “கிங்கிரர் கூறும் வஞ்சின உரைகள்” என நயம்மிக்க தலைப்பிட்டுள்ளார். இப்பாடலுக்கு, பாடசாலை மாணாக்கருக்காக வேந்தனார் எழுதிய உரையின் அருகில்கூட வர முடியாதவாறு, கம்பராமாயணம் முழுமைக்கும் உரை கண்டு புகழ் பெற்ற, உரையாசிரியர் வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியாரின் உரை அமைந்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. கட்டுரையின் சுருக்கம் கருதி இப்பாடலுக்கான இருவரது உரை முழுவதையும் ஒப்பு நோக்குவதைத் தவிர்த்து, குறிப்பு எனும் ஒரு பகுதியை மட்டும் இங்கு ஒப்பு நோக்கலாம்.
ஏவலாட்கள் கும்பகருணனை எழுப்பும் மேற்படி பாடலில், ‘எழுந்திராய்’ என்பது இரு முறையும் ‘உறங்குவாய்’ என்பது மும்முறையும் வருகின்றன. இதற்கு, கோபாலகிருஷ்ணமாச்சாரியார் தமது குறிப்பில், “பணியாளராக அமைந்தவர் தேவராதலால் இராவணனில்லாத மறைவான இடத்திலே ‘உறங்குகின்ற….. எழுந்திராய்”(2011:633) என்ற என்பதோடு மாத்திரம் நின்று விடுகிறார். வேந்தனார் பின்வருமாறு நயம் மேம்படச் குறிப்பு வரைகிறார்.
“எழுந்திராய் எழுந்திராய் என இரண்டு சொற்கள் விரைவைக் காட்டுதற்காக அடுக்கி வந்தன. விரைவாக எழுந்திடல் வேண்டுமென்ற கட்டாயத்தைக் காட்டுகின்றன. உறங்குவாய், உறங்குவாய், உறங்குவாய் என்ற அடுக்கு மொழிகள், இனிமேல் நீ இப்படிக் கிடந்து உறங்க மாட்டாய்;;;;, விரைவில் அழியப் போகின்றாய் என எதிர்மறைப் பொருளில் வந்திருக்கின்றன. எனவே இந்த அடுக்கு மொழிகள் கும்பகருணன் தவறாமல் அழிவான் என்னும் துணிவுபற்றி மும்முறை அடுக்கி நின்றன. மாய வாழ்வு - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை அது. மாயையை உடைய வாழ்வு என விரியும். எழுந்திராய், உறங்குவாய் என்பன முன்னிலை ஒருமை எதிர்கால வினை முற்றுக்கள்.”(:93)
வேந்தனார் கம்பன் கவிதையின் சந்த அமைப்பைக் கவனத்திற் கொள்ளும் அதேவேளை கதைச் சூழமைவைக் கருத்திற் கொண்டும் குறிப்பு எழுதுவதை அவதானிக்க முடிகிறது.
வேந்தனாரின் பாரதியார் பாடல்களுக்கான விளக்கவுரை, அவருக்கு நவீன கவிதை பற்றிய புரிதல் நன்கிருந்ததைக் காட்டி நிற்கிறது. இன்றுவரையும் இலங்கையில் தமிழ்ப் பாடத் திட்டத்தில் பாரதியார் பாடல்கள் இடம்பெற்று வருகின்றன. ஆயினும், அவற்றை விளக்கும் வகையில் வரும் பாட நூல்கள், பாரதியார் பாடல்களின் நயத்தையும் பொருள் உயர்வையும் மாணவர் புரியும் விதத்தில், அவர்களிடம் கொண்டு சேர்ப்பதில்லை. 1961 - 1962காலப் பகுதியிலும், 1965-1966காலப் பகுதியிலும் க.பொ.த. சாதாரண தரத்திற்கான பாட விதானத்தில், பாரதியாரின் பாடல்களிருந்து தெரிவு செய்யப்பட்ட பதினொரு பகுதிகள் இடம்பெற்றன. இவற்றிற்கு, வேந்தனார் எழுதிய விளக்கம் பரவலான வரவேற்பைப் பெற்றிருந்தது. பின்னாளில், இப்பாரதியார் பாடற் பகுதியில் இருந்த புதுமைப் பெண், தொழில் கவிதைகள், மறுபடியும் 1996 முதல் 2009 வரை நடைமுறையிலிருந்த க.பொ.த. உயர்தரத்திற்குரிய பாடத் திட்டத்தில் இணைக்கப்பட்டன. அதற்குச் சிலர் உரை விளக்கம் எழுதினர். அவர்களில் பண்டிதர் சு.வேலுப்பிள்ளையும் முக்கியமானவர். இங்கே பாரதியின் புதுமைப் பெண் எனும் கவிதையில், முதலாவது பாடலில் வரும் ஒரு பகுதிக்கு, வேலுப்பிள்ளையும் வேந்தனாரும் உரை செய்யும் திறத்தைச் சிறிது நோக்கலாம்.
“சேற்றிலே புதிதாக முளைத்ததோர்
செய்ய தாமரைத் தேமலர் போலொளி
தோற்றி நின்றனை பாரத நாட்டிலே”(புதுமைப் பெண்: 3-5)
மேற்படி பகுதிக்கு, “சேற்றிலே புதிதாக முளைத்ததோர் செய்ய தாமரை போல் தோன்றிய புதுமைப் பெண்”(1996:33) என விளக்கவுரைக் குறிப்பு எழுதினார், வேலுப்பிள்ளை. ஆனால், வேந்தனார் பின்வருமாறு விளக்கவுரைக் குறிப்பு எழுதினார்.
“உரிமை வாழ்வைப் பறிகொடுத்து அடிமைப்பட்டு அல்லல் உற்றுச் சிதறிச் சிதைந்து கிடக்கும் பாரத நாட்டைச் சேறாகவும் அப்பாரத நாட்டின்கண் தோன்றிச் சுதந்திரக் குரலை எழுப்பும் புதுமைப் பெண்ணைச் சேற்றில் தோன்றிய செந்தாமரை மலராகவும் கூறும் பாரதியாரின் உவமைத்திறன் பாராட்டுக்குரியதாகும். சேறு – உவமானம். அடிமைப்பட்டுக் கிடக்கும் பாரத நாடு – உவமேயம். இழிவும் அருவருப்பும் மதிப்பின்மையும் - பொதுத்தன்மை. சேற்றிலே புதிதாகத் தோன்றிய செந்தாமரை மலர் - உவமானம். பாரத நாட்டில் தோன்றிய புதுமைப் பெண் - உவமேயம். இழிந்த இடத்தில் தோன்றியமையும் சிறப்பும் பொதுத் தன்மைகளாகும்.”(1965:61-62)
மேற்குறித்த பகுதிக்கு, 1996ஆம் ஆண்டில் வேலுப்பிள்ளையவர்கள் க.பொ.த. உயர் தரத்திற்கும் 1965ஆம் ஆண்டில் வேந்தனார் க.பொ.த. சாதாரண தரத்திற்கும் விளக்கவுரைக் குறிப்பு எழுதினர் என்பதை மனத்திருத்தி நோக்கும்போது, வேந்தனாரின் பாட நூல் உரைத் திறனின் மேன்மை புலப்படுகிறது.
வேந்தனார் எழுதிய பாட நூல் உரைகளின் முக்கியத்துவத்தினை அமுதுப் புலவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
“ஈழநாட்டின் இணையற்ற உரையாசிரியர் ஒருவர், எங்கள் காலத்தில் இருந்தார் என்றால், அவர் வித்துவான் வேந்தனார்தான்…. அவரை உரையாசிரியர் என்பதே முற்றும் பொருந்தும். பொதுத் தராதரப் பரீட்சைக்கு எனக் குறிப்பிட்டிருந்த இலக்கியப் பகுதிக்குப் பல ஆண்டுகளாக உரை எழுதி வந்தவர் வித்துவான் வேந்தனார். வேறு சிலரும் இந்தத் துறையில் முயன்றனராயினும், வேந்தனாரின் உரை ஆற்றலுக்கு ஈடு கொடுக்க இயலாமற் போய்விட்டனர். அரும்பத உரை, பொழிப்புரை, தெளிவுரை, இலக்கணக் குறிப்பு, எடுத்துக் காட்டு, வரலாறு, நயம் உரைத்தல் என்பனவாக அவர் குறிப்பிட்டு எழுதிய திரவியங்கள் தேடக் கிடைக்காதவை.”(2010:40)
முடிவுரை
இதுவரை நோக்கியவற்றின் அடிப்படையில், ஈழத்துப் பாட நூல் உரைமரபை எழுதும்போது 1. உடுப்பிட்டி முதலியார் பள்ளிக்கூட உரைநூற் கல்வி, 2. ஆறுமுகநாவலர், சிவசம்புப் புலவர் ஆகியோர் உருவாக்கிய உரைநூற் கல்வி, 3.மிஷனரிகளின் கல்விச் செயற்பாட்டில் உரைநூற் கல்வி, 4. நவீன கல்வி நிறுவனங்களில் உரைநூற் கல்வியைப் பாட நூலாக்கும் சி.வை.தாமோதரம்பிள்ளையின் செயற்பாடு, 5. இலங்கையின் பாட விதானத்துக்கு அமைவாக எழுந்த பாட நூல் உரைகளும் உரையாசிரியர்களும் எனும் ஐவகை அம்சங்களை அதிகம் கவனத்தில் எடுக்க வேண்டும். இவை, ஈழத்துப் உரை வரலாற்றில் முக்கியமான கட்டங்கள். இத்தகையதொரு வரலாற்றுப் பின்புலத்தில் வேந்தனார் முக்கியத்துவமிக்க பாட நூல் உரையாசிரியராக அடையாளம் காணப்படுகிறார். அவரது பாட நூல் உரைகள், அவற்றின் வகைப்பாடு, உரைநூல்கள் எழும் பின்னணி, உரைக்கான பாடத் தெரிவு, உரையின் கட்டமைப்பு, உரைத் திறன் முதலாய பல்வேறு அம்சங்களை அவதானிக்கும்போது, அவரளவுக்குப் பிறர் அதிக கரிசனையுடன் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. ஈழத்துப் பாட நூல் உரைமரபில் வேந்தனார் தனித்து நோக்கப்பட வேண்டியவர். ஈழத்து இரசனை முறைத் திறனாய்வு வரலாறு ஒன்று எழுதப்படுமானால், அதில் வேந்தனாரின் பாட நூல் உரைகள் அதிக கவனிப்புப் பெறும். பாட நூல் உரையை, கல்வி மற்றும் பரீட்சைத் தேவைக்குரியதாக மட்டும் கருதாது, வித்துவத் திறன் நிரம்பிய புலமை ஆக்கமாகவும் வேந்தனார் கருதிச் செயற்பட்டமை, அவரின் உரைகளின்வழி அறிய முடிகிறது. ஈழத்துப் பாட நூல் உரையாசிரிய மரபை, வரலாற்று நிலைநின்று நோக்கும்போது, நவீன இலங்கையின் பாட நூல் உரைமரபில் அவர் வீற்றிருந்த சிம்மாசனநிலை புலப்படுகிறது. வேந்தனாரின் உரை மழையை, “விரிவுரை யமுதப் பெருமழை பொழியும்தெரிதமிழ்க் கொண்டல்” (1964:6) எனச் சோ. இளமுருகனார் பாராட்டுகிறார். திருவருட்பயன் முழுமைக்கும் வேந்தனார் எழுதிய உரை, இந்து சமய பாடம் எனும் நூலுள் அமிழ்ந்து, வெளித் தெரியாதிருக்கிறது. அதனைத் தனி நூலாக்கி, வெளிக்கொணர்வது தக்கோர் பணி.
உசாத்துணைகள்
நூல்கள்
இளஞ்சேய், வேந்தனார். (தொ.ஆ.) (2010) வித்துவான் வேந்தனார், இலண்டன்: ஜே.ஆர். அச்சகம்.
கோபலகிருஸ்ணமாச்சாரியார், வை.மு. (2006) கம்பராமாயணம் – யுத்த காண்டம் - மூலமும் உரையும், சென்னை: உமா பதிப்பகம்.
சிவலிங்கராஜா, எஸ். (2004) ஈழத்துத் தமிழ் உரைமரபு – தமிழ் இலக்கியங்களுக்கு ஈழத்து அறிஞர்கள் எழுதிய உரைகள் பற்றிய நுண்ணாய்வு, கொழும்பு – சென்னை: குமரன் புத்தக இல்லம்.
சிவலிங்கராஜா, எஸ்., சரஸ்வதி, சி. (2008) பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்துத் தமிழ்க் கல்வி, கொழும்பு – சென்னை: குமரன் புத்தக இல்லம்.
சிவத்தம்பி, கார்த்திகேசு. (2006) தமிழ் கற்பித்தல், சென்னை – கொழும்பு: குமரன் புத்தக இல்லம்.
சுந்தரராஜன், அ.சே. (ப.ஆ.) (1956) தமிழ் அமுதம், கும்பகோணம்: சாரதா விலாச பிரஸ்.
செல்லையா, மு. (1963) பரீட்சைச் சித்திக்கேற்ற பாஷைப் பயிற்சி, யாழ்ப்பாணம்: அன்பு வெளியீடு.
தாமோதரன், அ. (ப.ஆ.) (2010) நன்னூல் மூலமும் கூழங்கைத் தம்பிரான் உரையும், சென்னை: க்ரியா.
திருஞானசம்பந்தப்பிள்ளை, ம.வே. (1954) செந்தமிழ் மொழி வளம், யாழ்ப்பாணம்: ஸ்ரீ காந்தா அச்சகம்.
நீலகண்டன், கா., சுதர்சன், செ. (ப.ஆ.) (2014) உடுப்பிட்டி சிவசம்புப் புலவர் பிரபந்தப் பெருந்திரட்டு – தேவ பாகமும் மானுட பாகமும், உடுப்பிட்டி: புலவர் இல்லம்.
மாதையன், பெ. (2014) உரையியல், சென்னை: பாவை பப்ளிகேஷன்ஸ்.
முத்துத்தம்பிப்பிள்ளை, ஆ. (1966) பாரதச் சுருக்கம், யாழ்ப்பாணம்: நாவலர் அச்சுக் கூடம்.
முத்தையா, க.பே. (1955) தமிழ் அறிவு, யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா புத்தகசாலை.
பொன்னையா, நா. (1958) தமிழ் மஞ்சரி, சுன்னாகம்: வட - இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம்.
வேங்கடாசலபதி, ஆ.இரா. (ப.ஆ.) (2018) உ.வே. சாமிநாதையர் கடிதக் கருவூலம் - தொகுதி 1, 1877-1900, சென்னை: டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம்.
வேந்தனார், க. (1959) கம்பராமாயணம் - யுத்தகாண்டம் - கும்பகருணன் வதைப் படலம் (1 முதல் 170 செய்யுட்கள்) - விளக்கவுரை, யாழ்ப்பாணம்: சைவ பரிபாலன சபை.
வேந்தனார், க. (1960) கம்பராமாயணம் - அயோத்தியா காண்டம் - மந்தரை சூழ்ச்சிப் படலமும் கைகேயி சூழ்வினைப் படலமும் (199 செய்யுட்கள்) - விளக்கவுரை, யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா புத்தகசாலை.
வேந்தனார், க. (1961) பாரதியார் பாடல்கள் - விளக்கவுரை, யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா புத்தகசாலை வெளியீடு.
வேந்தனார், க. (1961) கம்பராமாயணம் - சுந்தரகாண்டம் - காட்சிப் படலமும் நிந்தனைப் படலமும் (159 செய்யுட்கள்) - விளக்கவுரை, யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா புத்தகசாலை வெளியீடு.
வேந்தனார், க. (1960) இந்து சமய பாடம் – பாடத் திட்டம் முற்றும் அடங்கிய முழுநூல், யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா புத்தகசாலை.
வேலுப்பிள்ளை, சு. (1996) பாரதியார் பாடல்கள் - பத்துக் கவிதைகளின் தொகுப்பு, யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை.
ஜெபநேசன், எஸ். (2007) இலங்கையில் தமிழ் வளர்ச்சியும் அமெரிக்கன் மிஷனும், கொழும்பு – சென்னை: குமரன் புத்தக இல்லம்.
மலர்கள்
1. இலங்கையிற் கல்வி – கி.மு ஆறாம் நூற்றாண்டு முதல் இற்றைவரை, நூற்றாண்டு விழா மலர், (1969) இலங்கை: கல்வி கலாசார அமைச்சு.
2. நமசிவாயம் சோமசுந்தரம் நினைவு மலர், (1999) உடுப்பிட்டி.
குறிப்பு: (வித்துவான் க. வேந்தனார் நூற்றாண்டு விழா மலரில் வெளியான கட்டுரையின் விரித்துச் செம்மையாக்கிய வடிவமே இக்கட்டுரை. கட்டுரையாக்கத்தில் பலவகையிலும் உதவிய இ. பத்மநாப ஐயர், மு. நித்தியானந்தன், எஸ். சிவலிங்கராஜா, பா. அகிலன், சு. குணேஸ்வரன் ஆகியோருக்கு நன்றி உரித்து – கட்டுரை ஆசிரியர்)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.