உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில் 25.09.2019 அன்று நடத்திய தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள்
முன்னுரை:
சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள பண்டைத் தமிழர் தம் வாழ்வில், மொழியின் வாயிலாக வாழ்க்கை முறையினை எடுத்துக்காட்டும் இலக்கியக் கலையைக் கொண்டுள்ளனர். அதனை, இன்றைய வரையில் நம் முன்னோர் எண்ணங்களாகவும் உயரிய நோக்கங்களாகவும் அழியா செல்வமாகவும் போற்றுகின்றனர்.
மனிதனின் செயல்பாடுகள் செயற்பாடுகளுக்கான சிறப்புத் தன்மைகள், அதன் முக்கியத் துவத்தை கொடுக்கும் குறியீடாக அமைகிறது. ஒரு தனி மனிதனைச் சார்ந்தும், மக்களைச் சார்ந்தும் அறிய வேண்டிய பண்பாடு என்பது கற்கப்படுவது. குறியீட்டு நடத்தை முறையாக அமைவதுதான். சமூகத்தின் ஒரு உறுப்பினராக இருந்து நாம் கற்கும் பிற திறமைகளிலும், பழக்கவழக்கங்களிலும் அடங்கி இருக்கும் தொகுதியாகதான் நம் பண்பாடு உள்ளது. 'பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்' என்று கலித்தொகையும் கூறும். பரந்த பொருளுடன் பயன்படுத்தப்படும் ஒரு சொல். மேலும் பண்பாடு என்னும் அமைப்பு பல வடிவங்களில் மனித சமுதாயத்தில் செயல்டுகிறது. சமூகத்தில் உயர்ந்த பண்புகளை நிலைநிறுத்தி, அதன்மூலம் மக்களை நல்வழிபடுத்தவும் செய்கிறது. அத்தகைய பண்பாட்டுக் கூறுகள் எங்ஙனம் பாலைக்கலிப் பாடல்களில் பதிவாகியுள்ளது என ஆராய்வதே இவ்வாய்வின் நோக்கமாக உள்ளது.
பாலை ஒழுக்கம்:
ஐவகை ஒழுக்கங்களில் களவுக்குரிய ஒழுக்கமாக குறிஞ்சித்திணையும், கற்புக்குரிய ஒழுக்கங்களாக முல்லை, மருதம், நெய்தல் திணைகளும் சுட்டுவர். ஆனால், களவு, கற்பு என்ற இரண்டிற்குமே பாலைத்திணையை உரியதாக இருப்பதனை காணமுடிகிறது. பிரிதலும் பிரிதல் நிமித்தமும் என்ற பாலையொழுக்கத்திற்கு பிரிவு பொதுவொழுக்கமாகத் (களவு, கற்பு என இவ்விரண்டிற்கும் பொதுவாகத்) திகழ்வதால் இதனைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
தலைவியின் உள்ளப்பண்பு:
புணர்தல் போன்று பிரிதலும் அகவாழ்க்கையில் பிணைந்து வருகின்றது. களவு மற்றும் கற்பு காலங்களில் யாதேனும் ஒரு சூழலில், தலைவன் தலைவியை விட்டு பிரிந்து செல்லும் சூழல்கள் உருவாகும். அங்ஙனம் பொருளீட்டும் பொருட்டு தலைவியை விட்டு பிரிந்து செல்லும் தலைவனை எண்ணி வருந்தும் தலைவி,
'வலி முன்பின், வல்லென்ற யாக்கை, புலி நோக்கின்
கற்றமை வில்லர், சுரிவளர் பித்தையர்,
அற்றம் பார்த்து அல்கும் கடுங்கண் மறவர் தாம்
கொள்ளும் பொருள் இலர் ஆயினும், வம்பலர்'
(பாலைக்கலி 4: 1-5)
என்ற வரிகளில், பாலை நில சுரத்தில் மழவர்கள் வில்லைக் கருவியாக உடையோh.; அவர்களது தொழில் வழிப்பறிக் கொள்ளை. வுழிப்போக்கர்களிடம் உள்ள பொருளைக் கொள்ளை இடுதல். இரக்கமற்ற மனம் கொண்டவர்கள் என்பதும் வழிப் போக்கர்களிடம் பொருள் இல்லை எனில் அம்புபட்டுத் துடிதுடித்து இறப்பதைக் கண்டு மகிழும் எண்ணங் கொண்டவர்கள். இத்தகைய வழித்தடத்தே நீர் எம்மை பிரிந்து செல்லுதல் தகுமோ? தகாது. எனவே,
'துன்பம் துணையாக நாடின், அது அல்லது
இன்பமும் உண்டோ, எமக்கு?
(பாலைக்கலி 6: 10-11)
எனத் தலைவி கூறினமையின் வழியில் ஏற்படும் துன்பத்தை எண்ணாமல் தலைவனுடன் இணைந்து செல்லும் இன்பத்தையே விரும்புவதால் தலைவியின் உள்ளப்பண்பு புலனாகின்றது. தலைவியின் இத்தகைய வருத்தத்தைப் போக்க தலைவன் பொருளீட்டச் செல்லாமல் காலம் தாழ்த்துகிறான். எனவே எச்சமூகத்தில் குடும்பத்தில் பெண்களுக்கு இடம் இல்லையோ அங்கே அவர்கள் துயரத்தில் வாழ்கிறார்களோ, அச்சமூகம் உயர்வடைவதற்கான நம்பிக்கையே இல்லை. இந்தக் காரணங்களால் அவர்கள் முதலில் உயர்வு பெறவேண்டும். அவர்களின் எண்ணங்களுக்கும் முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
தலைவனின் மனத்திடம்:
ஒரு சமூகத்தின் நடத்தை முறைகளும் எல்லாம் வெளிப்பாடுகளையும் கொண்டதே பண்பாடு. தன்னை ஒருவன் தாக்க நேரும் தருவாயில் தான் முன்னின்று தாக்குதல் சிறப்பு. இதனைதான்,
'செய்வினை மருங்கில் செலவு அயர்ந்து, யாழநின்,
கையுனை வலிவில் ஞான் உளர்தீயே'
(பாலைக்கலி 7:5-6, 9-10, 13-14)
என்ற வரிகளில் தலைவன் கையால் வரிந்து கட்டப்பெற்ற வில்லின் நாணைத் தடவாமல் நின்றாய், மேலும், கைச் சாட்டை இறுகக் கட்டிப் புனைந்தாற் சிறப்புடைய அம்புகளைத் தேர்ந்துதெடுத்து கொண்டாய், மற்றும் வெற்றியைத் தரும் சக்கரத்தின் வாயைத் துகள் போகத் துடைத்து நின்றாய். பொருளீட்டச் செல்லும் அக்காலத் தலைவன் பொருள் தேடச் செல்லும் காலத்தில் வில், அம்பு, திகிரி போன்ற பொருட்களை உடன் கொண்டு சென்றுள்ளனர். பகைவர்களிடம் இருந்தும், விலங்குகளிடம் இருந்தும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள எடுத்துச் செல்லுதலை அக்காலங்களில் இருந்தே வழக்கமாக கொண்டுள்ளனர்.
நம் முற்சமூகத்தில் தொழில் பொருட்டுச் செல்லும் மக்கள் அதற்கு ஆயத்தமாக பொருட்களை தன்னுடன் கொண்டு செல்லுதல் இயல்பு. எனவேதான் அக்காலந்தொட்டு இக்காலம் வரை தொழில் நுட்ப பொருட்கள் பேசப்பட்டு வருகின்றது.
சுற்றம் சூழும் பண்பு:
நம் சமூகம் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் வாழ்வை கொண்டது. நம்மை சுற்றியுள்ளவர்களின் நலனைப் பேணுதல், அவர்களையும் தன்னுடன் அரவணைத்து செல்லுதலும் நம் சமூகத்தின் அடிப்படை அடையாளம். தலைவியை விட்டு பொருளீட்டச் செல்லும் தலைவனிடம் நிலையானப்பொருள் என்றும் கூடிபெரும் இன்பமே. ஆகையால் மனைவியுடன் தன்னை நம்பிய மக்களுடனும் கூடியிருக்கும் இன்பமே நிலைபெற்ற இன்பம் என்பதை, இல்லறத்தின் சிறப்பாக உணர்த்தும் பாடல்கள் உள்ளன.
'................சூழின், பழி இன்று
மன்னவன் புறந்தர வருவிருந்து ஓம்பி,
தன் நகர் விழையக் கூடின்,
இன்உறல் வியன் மார்ப!'
(பாலைக்கலி 8: 20-24)
அரசன், தம்மை நாடிவருகின்ற, விருந்தினர்களைப் பேணிப் பாதுகாத்து, தன் மனைவி விரும்பிய வண்ணம் அவளுடன் இருந்து இனிய இன்பத்தைப் பெறுவதே நிலையானதொரு பொருள் என்கிறான். ஒரு சிறந்த இல்லறத்தின் சிறப்பு இதுதான். எனவேதான் விருந்தோம்பலுக்கு சிறப்புபெற்ற நம் முன்னோர் வருவிருந்து ஓம்பல் இல்லறத்தான் கடன் என்றனர். எனவேதான் அரசன் எவ்வழி, குடிகள் அவ்வழி என்றது முதுமொழியும். இதன்மூலம் அறிவது யாதெனில் நம்முன்னோர்கள் இந்தியரின் விருந்தோம்பல் பண்பாட்டைப் பற்றி விளக்கியுள்ளனர். இல்லறத்தின் சிறப்பு விருந்தோம்பல் ஆகும். இல்லறத்தின் கடனும், சுற்றம் சூழும் நிலையும் அதுவே. எனவேதான்,
'வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று'
(குறள். 83)
என்கிறார் வள்ளுவரும். விருந்து போற்றுதல் தமிழர்களின் பண்பு. இளவேனிலே தூதாக வந்துள்ளது. வா அதற்கும் விருந்து சமைப்போம் என்று கூறி அழைக்கும் தோழியின் பாடல் பண்பாட்டின் அடிப்படைதான்.
நிலையாமைப் பண்பு:
இவ்வுலகில் நிலையாமை என்பது எல்லா காலங்களிலும் நிலையானதுதான். பாலைக்கலி பாடல்களில் செல்வம், இளமை, யாக்கை நிலையாமையை சுட்டுகின்றது. நிலையில்லாத பொருளை நிலையானது என அறியும் சிற்றறிவு கீழ்மையானது. மனிதன் செல்வம், இளமை, யாக்கை முதலியவற்றை மட்டுமே பெரும் பொருள் எனக் கருதி வாழ்கின்றனர். இம்மூன்றின் நிலையாமையை மனிதனுக்கு விளக்குதற்குப் பொருட்டு உவமைகளின் வாயிலாகவும், நிகழ்ச்சிகளின் வாயிலாகவும் செல்வம் நிலையானது எனக் கருதும் மனிதனுக்கு அறிவுரை கூறும் பொருட்டும் பாலைக்கலி பாடல்கள் விளக்குகின்றது. நீ புதிதாகத் திரட்டும் பெருத்த செல்வத்தால் இழந்த இவளது இளமை எழில் மீண்டும் வருதல் கூடுமோ? என்றும், இவளுடைய இளமை கழிந்த பின்னர், நீ கற்ற கல்வி, இவ்விளமையை மீட்டுத் தருதற்கு கூடுமோ? கூடாது தானே! எனவேதான் புற வாழ்க்கையில் பெறும், கல்வி, பொருள் முதலியவற்றைக் காட்டிலும் அக வாழ்க்கை சிறப்புடையது என்பர். ஏனெனில் எவ்வளவு உழைத்துச் செல்வத்தைச் சேர்த்தாலும் அது பிறரிடம் சென்றுவிடும். ஆச்செல்வத்தைக் கட்டிப்புரண்டாலும் சுகமேதும் கிடைப்பதில்லை. அது நிலையானதும் இல்லை. அதேப் போன்று இளமையும் நிலை என்று கருதி வாழ்வோர் அது நீண்டகாலம் நிலைத்திருக்காது விட்டில் பூச்சிப் போலத் தோன்றி மறையும் ஒரு பருவம் என்பதையும் உணரவேண்டும். எனவே பிறந்த உயிர்களுக்கு மரணம் என்பது நிச்சயம். ஆகையால் இறப்பு நம்மை அடைவதற்குள் இச்சமூகத்திற்கு ஏதேனும் ஒரு நல்லதை செய்து விட்டுச் செல்லவேண்டும் என்ற ஓர் உயரிய பண்பு உணர்த்தப்படுகின்றது.
புராண மரபு சார்ந்த தகவல்:
புராண மரபு சார்ந்த தகவல்கள் பெரும்பாலும் வாய்மொழிப் பண்புகளில் ஒன்றாகவே கொள்ளலாம். இவை மக்களிடம் பெரும் வழக்காகவே உள்ளன. பொய்ச்சாட்சி சொல்லக்கூடிய ஒருவன் பசும் மரத்தின் கீழ் நின்றால் அம்மரம் பட்டுக் கருகிப்போகும் என்ற நம்பிக்கை
'கரி பொய்த்தான் கீழ் இருந்த மரம் போலக்'
(பாலைக்கலி 34: 10)
சங்க காலத்தில் இருந்தே நம்பப்பட்டு வந்துள்ளது. இவை இன்றும் நிலவும். தெய்வம், கடவுள் பற்றிய கோட்பாடு தொல்காப்பியர் காலத்தில் இருந்தே தொன்று தொட்டு வருகின்றது. இதில் நிலத்தைச் சுட்டும் போதெல்லாம் தெய்வத்தை இணைத்தே சுட்டியுள்ளனர். சங்க காலத்திலும் கடவுள் வழிபாட்டிற்குகும் மேலாக கற்பறமே சிறந்ததாகப் பேசப்பட்டுள்ளது.
'இன் இசை எழிலியை இரப்பவும் இயைவதோ?
(பாலைக்கலி 16: 8, 11-12, 15-16)
என்ற வரிகளில் கற்பின் பெருமை பேசப்படுகின்றது. காதலன் நலன் வேண்டி, மழையையும், கனலினையும், காற்றையும் வழிபட விரும்பிய தலைவிக்கு அறக்கடவுள் உதவுவது இங்கு குறிப்பிடத்தக்கது. இதில் தலைவன் செல்லும் வழியில் துன்பமடையாமல் திரும்பும வண்ணம் தலைவி தெய்வத்தை நாடினாள் அதனால் தலைவன் தீதின்று திரும்பினான் என்ற கருத்து விளக்கம் பெறுகின்றது. எனவே கடவுளை வழிபட்டால் நன்மை கிடைக்கும் என்ற நிலை அக்காலந்தொட்டு இக்காலம் வரை நிலவி வரும் ஒரு உண்மைதான். எனவேதான் காலத்தை வென்ற மரபு மனித வாழ்க்கை முறைகளையும், தன்னம்பிக்கையும் நிகழ்கால மதிப்பையும், எதிர்காலத்தை நோக்கி பண்பாட்டு நம்பிக்கையாக நடத்திச் செல்கின்றது.
முடிவுரை:
பாலைக்கலி பாடல்கள் பண்பட்ட வாழ்க்கையை முறையாக நம் சந்ததியனருக்கு பின்பற்ற, அவை கூறுகின்ற தலைவியின் உள்ளப் பண்பும், தலைவனின் மனத்திடமும், சுற்றம் சூழும் பண்பும், நிலையாமைப் பண்பும், புராண மரபுச் சார்ந்த தகவல்களும், பண்பாட்டு அடையாளங்களாக இங்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
துணைநூற்பட்டியல்:
1. க. ஜெயசீலன். எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும், மணிமொழி பதிப்பகம்.
2. முனைவர். அ. விசுவநாதன், கலித்தொகை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை – 600 098.
3. கலித்தொகை மூலமும் உரையும், அ. மாணிக்கனார், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை,1999.
*கட்டுரையாளர்: முனைவர் நா.ஹேமமாலதி, தமிழ்த்துறைத் தலைவர், உதவிப் பேராசிரியர், சாரதா கங்காதரன் கல்லூரி,
புதுச்சேரி – 605 004;
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.