- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை , அறிவியல் கல்லூரி, கோவை. -நீலகிரி மாவட்டம் ஒரு பன்மயக் கலாச்சார மையம். உலகத் தொல்குடிகளுள் குறிப்பிடத்தகுந்தவர்களின் வாழ்விடம் இது. இவர்களுள் தோடர்கள் குறிப்பிடத் தகுந்தவர்கள். இதுவரை நடைபெற்றுள்ள நீலகிரிசார்ந்த பழங்குடிகள் ஆய்வுகளுள் அதிகமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட இனக்குழுச் சமூகமாக விளங்குகின்றது தோடர்கள் எனும் ஆயர்ச்சமூகம். சங்ககாலம் தொட்டு உற்பத்திப் பொருளாதாரத்தின் முக்கிய அங்கத்தினர் ஆயர்கள். முல்லை நிலத்தினை தம் வாழ்வியல் களமாகக் கொண்டு வாழ்ந்த ஆயர்கள் ‘இருத்தல்’ எனும் தம் நிலத்திற்குரிய உரிபொருள்சார் ஒழுக்கத்தினைத் தம் வாழ்வோடு உட்செறித்தவர்கள். ஆயன், ஆய்ச்சியர், இடையன், இடைச்சியர், கோவலர் என்ற பெயர்களை உடைய முல்லைநில மக்கள் தம் பெயரமைப்பினைக் கால்நடைகளை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டவர்களாகத் திகழ்கின்றனர். அஃறிணை உயிரிகளின் முக்கியவத்துவத்தினை உணர்ந்து, அதன்மீது தன் அன்பினையும், பண்பினையும் கட்டமைத்து, வாழ்வியல் மற்றும் பொருளாதார நிறைவினை அடைந்தவர்கள் ஆயர்கள். நீலகிரியில் வாழ்கின்ற தோடர்களும் மிகச்சிறந்த ஆயர் சமூகம் என்று அறுதியிட்டுக் கூறலாம்.

நில அமைப்பிற்கேற்பவும், தம் தொழில் மற்றும் வாழ்முறைச் சார்ந்து தத்தம் வாழிடத்தினைத் தகவமைத்துக் கொண்ட நீலகிரி மாவட்ட மக்களுள் மலையின் உச்சியில் தோடர்கள் வாழ்கின்றனர். உலகிலேயே 5500 அடிகள் உயர மலைப்பகுதியில் சைவ உணவை உண்டுவாழும் ஆயர்குடி தொதவர்கள் மட்டுமே (பக்தவச்சல பாரதி, தமிழகப் பழங்குடிகள், ப – 141). தோடர்கள் நீலகிரியில் வாழ்கின்ற மக்களால் ‘தொதவர்கள்’ என்று அழைக்கப்படுகின்றனர். இந்தப் பெயர்க்காரணம் குறித்து நோக்கும்போது மூன்று வகையான விளக்கங்கள் நமக்கு நீலகிரி மாவட்டத்தில் கிடைக்கின்றன. இதில் முதன்மையானதாக ‘பண்டையில் மன்னர்களால் தூதுவராக இங்கு அனுப்பப் பட்டவர்கள் நாங்கள். எனவே தூதுவா என்பது தொதவா என்று மருவி இன்று வழங்கப்பட்டு வருகின்றது’ என்கிறார் கோடநாடு மந்துவினைச் சார்ந்த  தோடர் கொட்டாட குட்டன்.

எருமைமாடுகளை அடைத்துவைக்கும் திறந்தநிலைத் தொழுவத்தினைத் தொதவர்களும், நிலகிரிவாழ் படுகர்களும் ‘தோ’ என்றழைக்கின்றனர். எனவே தோ – அமா (அவன்) தொழுவத்தில் வாழ்பவன் ‘தொதமன்’ என்றும், படுகர்களைவிட நல்ல உயரம் மற்றும் உடல்வாகு கொண்டவர்களாக விளங்கியமையால் படுகர்கள் ‘தொட்டமா’ (பெரியவன் - உயரத்தில் பெரியவன்) என்ற பொருள்பட உரைக்கும் சொல்லின் அடிப்படையில் ‘தொதமா’ என்றசொல் வழங்கப்படுவதாகவும் தகவலர்கள் அறிவிக்கின்றனர். நீலகிரியில் வாழ்கின்ற மக்களுள் நல்ல திடகாத்திரமான தோற்றம் கொண்டவர்களாக விளங்குபவர்கள் தோடர்கள். இவர்களின் சராசரி உயரமாக 169.8 செ.மீ யினையும், உச்சநிலையாக 186.8 செ.மீ அளவையும் தர்ஸ்டன் குறிப்பிடுகிறார் (தென்னிந்திய குலங்களும் குடிகளும், தர்ஸ்டன், தொகுதி – 7, ப – 129).

‘மந்து’ என்ற பெயரில் ஒரு வம்சாவழியினரைக் கொண்டதாக அமையப்பெற்ற தோடர்களின் வாழ்விடத்தில் பால்மடம், குடியிருப்புகள், இரவு மற்றும் மழைக்காலத்தில் எருமைக் கன்றுகளை அடைத்துவைக்கும் இடம், எருமைப்பட்டிகள் போன்றவை அடங்கியிருக்க வேண்டும் என்பது இவர்களது வாழ்விடக் கட்டமைப்பு. ‘ஒவ்வொரு மந்துவிலும் வழக்கமாக ஐந்து வீடுகள் இருக்கும்’ என்கிறார் தர்ஸ்டன் (தெ.கு.கு, தர்ஸ்டன்135). இந்த மரபுநிலை இன்றும் நிலவி வருவதை இந்தக் கட்டுரைக்கான கள ஆய்வின்போது காணமுடிந்தது. நீலகிரிமாவட்டத்தில் உதகை, கோத்தகிரி போன்ற இடங்களில் வாழ்கின்ற தோடரின மக்களின் தலைமை மந்துவாக உதகை தலைக்குந்தாவிற்கு அருகிலுள்ள ‘முத்தநாடு’ மந்து விளங்குகின்றது.
‘மந்தா’ என்ற சொல்வழக்கு நிலகிரியில் கூட்டம் என்பதை உணர்த்துவதற்காக வழங்கப்படுகின்றது. ஒரு குடும்பம் சார்ந்து கூட்டமாக வாழ்ந்ததால் தோடர்களின் வாழ்விடம் மந்து என்று பெயரிடப்பட்டதாக இருக்கலாம். தோடர்களின் வாழ்வியல்பற்றி பல ஆய்வுகள் வெளிவந்தவண்ணமே இருக்கின்றன. எனவே அவர்களைப் பற்றிய அறிமுகம் விரிவாக ஆய்வுலகத்திற்கு விளக்கவேண்டிய நிர்பந்தம் இல்லை என்று கருதுகின்றேன். எனவே  தோடரின மக்களின் வாய்மொழி வழக்காறு சார்ந்து தரவுகள் சேகரிக்கப்பட்ட கோடநாடு மந்துவில் அமைந்த ‘தேவில்தம்’, ‘தோர்தார்ஸ்’ என்ற இரு வம்சாவழியினரைச் சார்ந்தவர்களின் மந்துகளிலிருந்து சேகரித்த வாழ்மொழி வழக்காறுகளை மட்டும் ஆராய்வதாக இக்கட்டுரை விளங்கும்.
இவர்களிடம் தரவுகள் சேரிக்கும்போது அவர்களின் ஒலிக்குறிப்புடன் கூடிய இவர்களின் மொழியான ‘தோடா’ மொழியினை உள்வாங்குவதும், அதில் சிலவற்றை எழுதிக்கொள்வதும் ஒரு பெரும் சவலாக எனக்கு தோன்றியது. தென்திராவிட மொழிகளுள் ஒன்றாக அடையாளப்படுத்தப்படும் இவர்களின் மொழி வினைமுற்றுகளில் பாலறி கிளவி உள்ள திராவிட மொழியாக விளங்குகின்றது.  இத்தகுதியினைத் தமிழ் மொழியுடன் பகிர்ந்துக்கொள்கின்றது. மேலும் ‘எமனோ’ போன்ற வல்லுநர்களால் ஆராயப்பட்ட இம்மொழி திராவிட மொழிகளில் ர,ற ஒலி வேறுபாடுடைய மொழியாகவும் திகழ்கின்றது.

வாய்மொழி வழக்காறுகள் :
‘ஆறு’ என்ற தமிழ்ச்சொல் ஒழுங்கு என்று பொருள்படும். வழக்கு என்பது பண்பாட்டின் நிலையினூடே ஆக்கப்பட்ட வாழ்முறைகள் எனலாம். தமிழ் இலக்கண மரபில் கூட இயல்பு வழக்கு, தகுதி வழக்கு என்று வழக்கு இருவகைத்தானதாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஆகவே ஒர் இன மக்களின் இயங்குமொழியில் நிலவும் வழக்காறுகள் வாய்மொழி வழக்காறுகள் எனப்படும். நாட்டுப்புறவியல் சார்ந்த வழக்காறுகள் பலரால் பலவகையாகப் பிரிக்கப்பட்டாலும் அதற்கான நடுநிலையாக இலக்கிமானவை, இலக்கியமாகாதவை என்ற வகைப்பாடுத் திகழ்கின்றது. நட்டுப்புற வழக்காறுகள் மனிதனின் வாழ்க்கையைக் காட்டுவன. அவை மனிதனின் சமூக வாழ்வினை உட்செறித்தன. ஓரின மக்களின் அனுபவம், நம்பிக்கை, தொன்மநிலை, சடங்கியல், விழுமியம் போன்றவற்றின் நிலைகளனாக, தலைமுறைக்கடத்தியாக, வரலாற்றுப் பதிவுகளாக, படைப்பாளுமையின் கூறாக, மகிழ்ச்சி ஏற்பியாக, மகிழ்ச்சியூட்டியாகத் திகழ்வன.

ஆசிரியர் இல்லாத, இழைவுத் தன்மைக் கொண்டு, ஓரளவு மட்டுமே காலக்கணிப்புகளை யூகிக்கக் முடியும் நாட்டுப்புறக் கூறான வாய்மொழி வழக்காறுகள் இலக்கிமானவை என்ற வரையறைக்கு உட்பட்டு நிற்கின்றன. கதைகள், பாடல்கள், கதைப்பாடல்கள், விடுகதைகள், பழமொழிகள் போன்றவை நாட்டுப்புற மக்களின் வாய்மொழி வழக்காக் கருதப்படுவன.

தோடர்களின் வாய்மொழி வழக்காறுகள்:

கிடைக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் தோடர்களின் வாய்மொழி வழக்காறுகள் கதைகள், பாடல்கள், பழமொழிகள் என்ற மூன்று நிலைகளில் அடங்கும். இதை பொருண்மையடிப்படையில் தெய்வம் சார்ந்தவை, அன்றாட வாழ்க்கை சார்ந்தவை என்று இரு பிரிவுகளாகவும், அதில் வாழ்வியல் சார்ந்தவையைப் பொதுநிலை, சடங்குநிலை என்று மேலும் இருவகைகளாகவும் பகுக்கலாம். வாய்மொழி வழக்காறுகளைப் பகுத்துத் தொகுப்பது என்பது அதுசார்ந்த தெளிவிற்கும், பதிவிற்கும் சால துணைபுரிவன.

தோடரின மக்களிடையே காணப்படும் வாய்மொழி வழக்காறுகள் தம் முன்னோர்களால் கற்றுத்தரப்பட்ட கல்வியாகவும், தம் அனுபவத்தால் வெளிப்படும் அறிவாகவும் திகழ்கின்றன. இவர்கள் பெரும்பாலும் தம் குழுவுடன் ஒன்றாகக் கூடும்போதே அதிகமானளவு வாய்மொழி வழக்காறுகளை வெளிப்படுத்துகின்றனர். இது இவர்களின் மரபுத் தன்மையாகத் திகழ்கின்றது.

I. தோடர்களின் கதைகள்:

நாட்டுப்புற வாய்மொழி வழக்காறுகளுள் கதைப்பாடலுக்கு அடுத்த நீண்ட கட்டமைப்பினைக் கொண்டவைக் கதைகள். இலக்கியங்களிலிருந்து இலக்கணங்கள் வகுக்கப்பட்டதாக கருதப்படும் நிலையில் தொல்காப்பியர் சுட்டும் ‘பொருள் மரபில்லா பொய்மொழியானும், பொருளொடு புணர்ந்த நகைமொழியானும்’ (தொல்காப்பியம், செய்யுளியல், நூ – 173) என்ற கதைகளோடு தொடர்புடைய இலக்கண வழக்கிற்கு மூலமாக நாட்டுப்பறக்கதைகள் திகழ்ந்தன என்றால் அது வியப்பிற்குரியதல்ல.

அனுபவங்கள், அறிவுரைகள், பொழுது போக்கு, சொல்லாற்றல், கற்பனை வெளிப்பாடு, வரலாறுகள் என்ற பன்முகப் பரிமாணங்களைக் கொண்டதாக விளங்கும் நாட்டுப்புறக் கதைகளில் களஆய்வு மேற்கொள்ளப்பட்ட மந்துவில் கிடைத்த கதைகள் முழுவதும் தோற்றக்கதைகளாகவே விளங்குகின்றன. இதன் அடிப்படையில் எருமைகள், தெய்வம், இடம், இயற்கை போன்றவற்றின் தோற்றத்தைப் பற்றியதாக அக்கதைகள் விளங்குகின்றன.

எருமைகளுக்கும் தோடர்களுக்கும் மிகப்பெரும் தொடர்புண்டு. தோடர்களை மானுடவியலாளர்கள் எருமையின் குழந்தைகள் என்று அழைக்கின்றனர். எருமைகள் தோடர்களின் குலக்குறியாக, குலமரபுச் சின்னமாகத் திகழ்கின்றது. தோடர்களின் தெய்வமாகவும், உணவுசார் உற்பத்தியாளர்களாகவும், செல்வநிலையின் குறியீடாகவும் எருமைகள் திகழ்கின்றன. ஆநிரைகளைப் பெரும் செல்வமாகக் கருதும் போக்கு தமிழகத்தில் சங்கக் காலம் முதற்கொண்டு வழக்கில் இருப்பதை ‘வெட்சி’, ‘கரந்தை’ போன்ற புறத்திணைகளும் சான்று பகர்கின்றன.

“முன்பொருநாள் எங்களின் தலைமையிடமான முத்தநாடு மந்திற்கு அருகிலுள்ள மட்டத்தில் மண்ணைப் பிளந்து 300 க்கும் மேற்பட்ட எருமைகள் வெளியே வந்தன. அவ்வாறு வரும்போது அக்கூட்டத்திலிருந்த நல்ல கொழுத்த எருமை குனிந்து வருவதைக் கண்டு கடவுள் சிரித்தார். கடவுள் சிரித்ததைக் கண்டு அவ்வெருமையும் சிரித்தது” என்று எருமையின் தோற்றக் கதையினை இவர்கள் கூறுகின்றனர்.

எருமையினை ‘நாகூ’ என்றும் அழைக்கும் தோடர்களிடம் உள்ள எருமைகள் இந்தியாவில் உள்ள 12 எருமை இனங்களுள் தனித்தன்மை வாய்ந்தது. கடல் மட்டத்திலிருந்து 2500 மீட்டர் உயரத்தில் மட்டுமே இந்த இனம் உள்ளது என்று இணையச் செய்தி குறிப்பிடுகின்றது. ஒரு குடும்பத்தில் நூற்றிற்கு மேற்பட்ட எருமைகளைக் கொண்டிருந்த தோடர்களிடம் இன்று 10 க்கு மேற்பட்ட எருமைகள் வைத்திருப்பதே பெரும் செயலாகக் கருதுகின்ற போக்கினைக் காணமுடிகின்றது. எருமைகளைக் கடவுளாக நினைத்து வணங்கும் தோடர்களின் கோயில்களில் இவர்களின் மரபுசார் இறைவழிப்பாட்டு சின்னமாக எருமையின் தலைஉருவம் பதிக்கப்பட்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தோடர்கள் தம் வாழ்வியலில் இரண்டுவகையாக எருமைகளை வளர்க்கின்றனர். ஒருவகை கோயில் எருமைகள், மற்றொன்று வீட்டு எருமைகள். தோடர்களின் கோயில் எருமைகளை இவர்களின் மந்தில் பால்மனையில் வசிக்கும் தகுதிப்பெற்ற கோயில் பூசாரி மட்டுமே கவனித்து பால்கறக்க வேண்டும். அந்தப் பாலினைப் பால்மனைக்குள் கொண்டு சென்று அதை மூங்கில் மத்தினால் கடைந்து நெய், வெண்ணையை எடுத்துவிட்டு, மீதியுள்ள மோரினை இவர்களின் கோயிலிற்கு அருகில் அமைக்கப்பெற்ற ‘மோஸ்ஸித் கல்’ என்ற கல்லின் மீது கொண்டு வந்து கோயில் பூசாரி வைக்க, அதற்கென்று ஒதுக்கப்பட்ட வேளையில் ஊரின் பெண்கள் வந்து எடுத்துச் செல்வார். இந்த மோஸ்ஸித்  கல்லினைத் தாண்டிப் பெண்கள் உள்ளே செல்வதில்லை. இது கோயிலின் புனிதத் தன்மைச் சார்ந்து, பெண்சார்ந்த தீட்டு நிலையினைத் தவிர்க்க மரபார்ந்து கடைப்பிடித்துவரும் வழக்காகும்.

இவர்கள் பால்மனைகளையே கோயில்களாகக் கருதுகின்றனர். இவர்களின் கோயில்கள் கூம்புவடிவ கூரையினைக் கொண்டக் கோயில்கள், இவர்களின் குடியிறுப்புகளைப் போலவே அமைக்கப்பட்ட கோயில்கள் என்று இருவகைப்படும். இவர்களின் ஒவ்வொரு மந்துகளிலும் உள்ள கோயில்களுக்கும் ஒரு பெயர் உண்டு ‘ஒத்தெர்னெர்ஸ் கொத்தார்ட்ஹோ’ என்பது கோடநாட்டிலுள்ள ‘கோடு தேனிமந்துவில்’ அமைந்துள்ள கோயிலாகும். தோடர்களிடம் ‘திரியூர் எம்மெ’ என்ற ஒருவகை கோயில் எருமைகள் இருக்கின்றன. இந்தத் திரியூர் எருமைகள் ‘தீ’ என்ற கோயிலிற்குரியவை. தோடர்களுக்கு 6 தீ கோயில்கள் இருப்பதாக கோடநாடு மந்தினைச் சார்ந்த சம்பத் குட்டன் குறிப்பிடுகிறார். கோடநாடு மந்துவில் இருக்கும் திரியூர் எருமைக்குரிய தீ க்கு கோடநாட்டின் மேல்மந்தில் இருப்பவரே பூசாரியாக இருக்க வேண்டும். இந்த இடத்தில் இருக்கும் தீ கோயில் இன்று சிதிலமடைந்து மறைந்துபோனதாக கொட்டாட குட்டன் உரைக்கின்றார். இந்தத் திரியூர் எருமைகளுக்கு அருகில் பெண்கள் நெருங்குவதோ, அதன் சாணத்தினைக் கைகளால் தொட்டு எடுத்துப் பயன்படுத்துவதோ கூடாது என்ற விலக்குநிலைகளையும் இவர்கள் கட்டமைத்துள்ளனர்.

எருமைகள் ஒரு காலத்தில் பேசும் தன்மைக் கொண்டவையாக இருந்தன என்று இவர்களின் கதையொன்று உரைக்கின்றது. “முன்பெல்லாம் எருமைகள் பேசுமாம். அது பட்டியிலிருந்து தினமும் திறந்துவிடும் போது முதலில் என்னை திறந்துவிடு, இல்லை என்னைத் திறந்துவிடு என்று கூச்சலிட்டதால் அதன் பேசும் திறனை இறைவன் பறித்துவிட்டார்” என்ற கதை எருமைகளோடு இவர்கள் கொண்டிருந்த வாழ்வியல் இணக்கத்தை வெளிப்படுத்துகின்றது. இந்தக் கதையினை நோக்கும்போது எருமைகளின் பேச்சுத்திறனை இறைவன் பறித்துக்கொண்டார் என்று கூறப்படும் நிலையில் இவர்களின் தெய்வங்கள் யாரென்று வினவியபோது ‘தேக்ஸித் அம்மன்’, ‘பஞ்ச பாண்டவர்கள்’, ‘ஈஸ்வரன்’ என்ற மூன்று பதில்களைக் கோடநாடு மந்துவில் வழங்கப்படுகின்றன.

நாட்டுப்புற குலதெய்வ வழிப்பாடுகளில் தெய்வத்தை அழைத்து அருளாடுவது என்பது முக்கியமான கூறாகும். தோடரின ஆடவர்களுக்கு மட்டுமின்றி எருமைக்கு இறையருள் வந்தது என்பதை “முன்பு இங்கிருந்த ஒரு கோயில் எருமைக்கு தெய்வம் ஏறும். அது சத்தியமங்கலத்திற்கு அருகில் இருக்கு ஒரு மலைக்கு அருள்வரும் நேரத்தில் தனியாகச் சென்று, அங்கு 2 நாள்கள் தங்கிவிட்டு 3 வாது நாள் இங்கே வந்துவிடுமாம்” என்ற கதையொன்று வெளிப்படுத்துகின்றது. இது இவர்களது இறைநிலையில் எருமைக்கு அளிக்கின்ற முக்கித்துவத்தைச் சுட்டுகின்றது.

தந்தையோடு பிறந்த சகோதரியின் மகளை திருமணம் செய்யும் மணமரபினை உடைய இவர்கள் தம் மந்துகளைத் தவிர்த்து வேறு மந்துகளிலிருந்தும் திருமணம் செய்கின்றனர். இன்றைய நிலையில் திருமண வயதினை அடைந்ததும் ஏற்ற பெண்தேடிச் சென்று நிச்சயம் செய்து திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் முன்பு ஒரு பெண்குழந்தைப் பிறக்கும்போதே அப்பெண்ணின் இல்லத்திற்குச் சென்று, அக்குடும்பத்தின் பெரியவர்களிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று தம் இல்லத்திலுள்ள ஆண்குழந்தைக்கு நிச்சயம் செய்யும் மரபு இவர்களிடம் இருந்தது. அப்பெண் திருமண வயதினை அடைந்ததும் மாப்பிள்ளை தம் குடும்பத்தாருடன் பெண்வீட்டிற்குச் சென்று பெண்ணின் உற்றாரில் தன் வயதிற்கு முத்தவர்களின் முன்னிலையில் கீழே விழுந்து வணங்கி பெண்ணை தம் இல்லத்திற்கு அழைத்துவருவான். இது இவ்வினத்தில் நிலவும் பெண்குழந்தைகளின் தட்டுப்பாட்டினை வெளிக்காட்டுகின்றது.

கோடநாடு மந்து தோடர்களின் மரபின்படி கீழ் மந்தில் உள்ள ‘கோடி தேன் மந்து’ ஆடவன் ஒருவனுக்குப் மணப்பெண்ணை நிச்சயித்து கொண்டுவர செல்லும்போது மேல்மந்திலுள்ள ‘சுவாச்சி’ என்ற மந்துத் தலைவரையும் அழைத்துச் செல்லவேண்டுமாம். அதேபோல மேல் மந்திலுள்ள ஆடவனுக்கு நிச்சயம் செய்ய செல்லும்போது கீழ் மந்துவினைச் சார்ந்த நபரை அழைத்துச் செல்லவேண்டும். இது இவர்களின் மரபு. முன்பிருந்த பிறக்கும்போதே பெண்குழந்தையை நிச்சயிக்கும் முறையில் ஒரு ஆடவனுக்கு நிச்சயத்த பெண்ணை சூழலின் காரணமாக வேறொரு தோடன் திருமணம் செய்ய நேர்ந்தால் மந்தின் தலைவனான ‘சுவாச்சியின்’ தலைமையில் கூட்டப்படும் ‘தெரஸ்ட் கூட்’ என்ற பஞ்சாயத்தில் அப்பெண்ணைக் குழவிப்பருவத்தில் நிச்சயம்செய்த தோடன் கேட்கும் எருமைகளை அப்பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட தோடன் அளிக்கவேண்டும். பாதிப்படைந்தவன் 15 எருமைகள் வேண்டுமென்றுக் கேட்டால் அதை ‘சுவாச்சி’ இருவருக்கும் பாதகம் வராதுவாறு பேரம் பேசி சரி 12 எருமைகளை கொடுத்துவிடு என்று வழக்கினை முடித்து வைப்பாராம். இது எருமைகளை மிகப்பெரிய சொத்தாக இவர்கள் கருதுவதைச் சுட்டிக்காட்டுகின்றது.

நீலகிரியில் வாழ்கின்ற மக்கள் தன் இருப்பிடத்தைவிட்டு விலகியுள்ள வேளாண்நிலத்தை  ‘ஒலா’ என்றழைக்கின்றனர். ஒலா என்றால் தொலைவு என்று பொருள். வாழ்விடத்திலிருந்து சற்றுத் தொலைவிலுள்ள வேளாண்மை நிலத்தினை இவர்கள் இப்பெயரிட்டு அழைக்கின்றனர். தோடர்கள் நீலகிரிக்கு சொந்தமில்லாத வேற்றாள்களை ‘ஒலெயா’ என்று அழைக்கின்றனர். ஒலெயா என்பதற்கு சம்பந்தமில்லாதவன், வேறு இடத்திலிருந்து வந்தவன் என்று பொருள்படும். “ஒரு காலத்தில் கோடநாட்டிலுள்ள ‘ப்பேர்டுகர்ஸ் மந்துவில்’ (பெடகல்மந்து) கையில் வில்லுடன் வந்த ஒலெயர்களை அக்கோயிலுள்ள நல்ல விரிந்த கொம்புகளைக் கொண்ட திண்ணமான எருமையொன்று விரட்டியடிக்க, அந்த ஒலெயர்கள் அந்த எருமையின் மீது அம்பினை ஏய்து தாக்கினர். அதனால் வயிற்றுக் பகுதியில் பலத்த காயமுற்று அந்த எருமை இறந்துபோனது. அதைக்கண்ட அந்த கோயிலின் பூசாரி கோயிலிற்குள், கோயில் எருமையின் பாலைக்கொண்டு தாம் உருவாக்கிய வெண்ணெயை வலது கையில் கொண்டுவந்து தம் குலதெய்வத்தை நினைத்து ‘ப்பேர்டு கர்ஸ்ஸாமோ’, ‘குவார்ட் நேர்ரம்மோ’ என்று அவ்வெண்ணெயைத் தெளித்து சபித்தார். அப்போது உடனே அங்கு வந்த ஒலெயர்கள் அனைவரும் கல்லாக மாறிவிட்டனர். கோயில் பூசாரி சபித்த ப்பேர்டு கர்ஸ்ஸாமோ என்பதற்கு இங்குவந்து கோயில் எருமையினைக் கொன்று, கோயிலின் புனிதம் கெடுத்த ஒலெயர்கள் கல்லாகட்டும் என்று பொருள். ‘கர்ஸ்’ என்ற தோட மொழிக்கு கல் என்று பொருள். ‘குவிர்ட் நேர்ரம்மோ’ என்றால் மழைப்பெய்து ஓய்ந்த நேரம் போன்று காணப்படும் மப்பும் மந்தாரமான நிலைத் தெளிந்து பிரகாசமாகட்டும் என்று பொருள். இந்தக் கதையின் அடிப்படையிலேயே ‘ப்பேர்டு கர்ஸ்’ மந்து என்ற பெயரினைப் பெற்று இம்மந்து விளங்குகின்றது.

இம்மேற்கண்ட கதையினை கோடநாடு மேல்மந்தினைச் சார்ந்த பிரசாந் குட்டன் ‘ஒலெயர்களா’ வந்தது துப்பாக்கி ஏந்திய வெள்ளைக்காரர்கள் என்றும், அவர்களே கோயில் எருமையைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர் என்றும் கூறுகின்றார். இக்குழப்பத்தினைக் கீழ் மந்தான ‘கோடு தேனி மந்துவினைச்’ சார்ந்த வயதில் மூத்த கொட்டாட குட்டன் அவர்களிடம் அறிவித்தபோது இந்த நிகழ்வு வெள்ளையர்கள் வருவதற்கு முன்னரே நிகழ்ந்தது என்று கூறி தெளிவுப்படுத்தினார். கோத்தகிரி கோடநாடு காட்சிமுனைக்கு செல்கின்ற வழியில் அமைந்துள்ள இம்மந்துவில் கோயிலொன்று அமைந்துள்ளது. இவ்விடத்தில் கல்லாகக் கிடந்த ஒலெயர்களின் கற்கள் சிறிது காலத்திற்கு முன்புவரை இருந்தது என்று இவ்விடவாழ் தோடர்கள் கூறுகின்றனர். இந்த பால்மனெ கோயிலிலுள்ள பூசாரி 20 வயதிற்கு மேல், திருமணத்திற்கான தகுதிப்பெறும் போது அங்கிருந்து வெளியேற்றப்படுவான். அதுவரை அவன் இந்தக் கோயிலில் மட்டும் தங்கவேண்டும். அவனுக்குத் தேவையான உணவுப்பொருள் ஒவ்வொரு நாளும் மந்திலுள்ள ஒவ்வொரு இல்லத்தவர்கள் அளிக்கின்றனர். முன்பு சாமையும், இன்று அரிசியையும் அளிக்கின்றனர். அத்துடன் காரத்திற்கான மிளகாய் பொடியினை அரைத்து வெள்ளைத் துணியில் முடிந்தும் அளிக்கின்றனர். பால்மனை பூசாரி அந்த அரிசியை வேகவைத்து, தான் தயாரிக்கும் வெண்ணெயை ஊற்றி அதில் அந்த மிளகாய்ப் பொடியைக் கலந்து உண்பான்.

கால்நடைப் பராமறிப்பு மட்டுமின்றி மூங்கில் மத்துக்களைச் செய்தல், தேனெடுத்தல், புத்குளி என்ற மேற்போர்வையினைத் தயாரிப்பது போன்ற செயல்களையும் தோடர்கள் மேற்கொள்கின்றனர். தேனடைகள் நிறைந்திருந்ததால் கோடநாட்டில் உள்ள கீழ்மந்திற்கு ‘கோடு தேனி மந்து’ என்ற பெயர்வந்ததாக அம்மந்தினைச் சார்ந்த சம்பத் குட்டன் கூறுகிறார். தேன்கூட்டினை ஊதி தேன்எடுக்கும் இவர்கள் தேனிக்கடிப்பதை உடலிற்கு எதிர்ப்புச் சக்தியூட்டுதாகக் கொள்கின்றனர். தேனிக்கடித்து உடல் வீங்கும்போது வீங்கிய இடத்தில் வெயிலில் காய்ச்சிய அருவாளினை வைத்தால் அந்த வீக்கம் விரைந்து சமனாகி, இயல்புநிலைக்கு வந்துவிடும் என்கின்றனர்.

தேனெடுப்பதோடு தொடர்புடைய இவர்களின் கதையொன்று சூரிய கிரகணம் உருவானதற்கான தோற்றக் கதையாக விளங்குகின்றது. “முன்பொருநாள் மாப்பிள்ளையும் மச்சானும் தேனெடுக்க கையில் ‘ஒண்ணெ’ என்ற மூங்கிலை எடுத்துச் சென்றனர். அப்போது இருவரும் தேன்தேடும்போது அதில் ஒருவன் தான் கொண்டு இரண்டு ஒணெகள் நிறைய தேனினை நிறைத்து மற்றொருவனுக்குத் தெரியாமல் அங்கிருந்த மரத்தில் கட்டி ஒளித்துவைத்தான். பின்பு தான் கண்டதாகச் சிறியளவிலான தேனினைக் கொண்டுச்சென்று மற்றொருவனுக்குப் பகிர்ந்தளித்தான். பின்பு அவன் ஒளித்துவைத்த தேனினை எடுப்பதற்காக அக்காட்டிற்ச் சென்றபோது மரத்தில் கட்டிவைத்த தேன்நிரப்பிய ஒணெ கீழே விழுந்து பாம்புகளாகமாறி அவனைத் துரத்தியது அப்போது தப்பித்து ஓடிய அவன் பின்தொடரும் பாம்பினை ஏமாற்ற அவ்வழியில் வந்த ‘மொசுலின்மீது’ (முயல்) தான் அணிந்துள்ள ஆடையினை வீசிவிட்டு தப்பினான். அப்போது துரத்திவந்த பாம்புகள் அவனது சட்டைப் போர்த்தப்பட்ட முயலினை அவனென்று நினைத்து தூரத்திச்செல்ல அம்முயல் சூரியனை அடைந்தது. அப்பாம்புகளும் விடாமல் சென்று சூரியனைப் படையெடுத்து மறைத்தது. இதனால் தான் சூரியகிரகணம் ஏற்படுகின்றது என்று கூறுகிறார் சம்பத் குட்டன்.
தர்ஸ்டனும் இக்கதையினைத் தன் நூலில் பதிவுசெய்துள்ளார். இந்த கதையில் மரத்தில் கட்டி மறைத்து வைத்தாகக் கூறப்படும் தேனினைப் பாறை இடுக்கிற்குள் ஒளித்து வைத்ததாக தர்ஸ்டன் பதிவுச்செய்கிறார். இந்த மூங்கில் கண்டியிலிருந்து வழிந்த தேனே ‘பைக்காரா’ ஆறாகப் பெருக்கெடுக்கலாயிற்று என்றும் பதிகிறார். இதேக்கதையைப் ‘பேடுகல்’ மந்திலுள்ள ஒருவர் முயல் சந்திரனாக மாறியதாகவும், அதை அந்த பாம்பு விழுங்க சந்திர கிரகணம் ஏற்பட்டதென்றும் கூறுகின்றனர். இதே வழக்காறில் படுகரின மக்களிடையே ‘சந்திரன ஆவு நுங்கோனே நித்திரெ மாடிதது பாபா’ என்ற பாவமன்னிப்பு சார்ந்த வாய்மொழி வழக்கொன்று வழங்கப்படுகின்றது. அதாவது சந்திரனைப் பாம்பு விழுங்கும்போது வீட்டில் நிம்மதியாக உறங்கியது பாவம் என்கிறது அந்த வழக்காறு. இன்றும் தோடர்கள் தம் பால்மனையிலும், படுகர்கள் தம் இல்லத்திலிருக்கும் பால்மனையிலும் பால் கறக்க இந்த ஒணெ என்ற மூங்கில் கண்டியினை மட்டுமே பயன்படுத்துகின்றனர்.

ஊரில் ஆண்கள் இறக்கும்போது இவர்கள் தம்கோயிலைத் திறப்பார்கள். இறந்தவரை கோயிலின் முன்னிருத்தி அவருக்கு கோயில் எருமையிலிருந்து கறந்து, கோயிலில் வைத்திருக்கும் பாலினைக் கோயில் பூசாரி அளிப்பார். ஆனால் பெண்களின் இறப்பின்போது இவர்கள் கோயிலினைத் திறப்பதில்லை. இவர்களின் குலதெய்வமான ‘தேக்கீஸ்’ அம்மனின் மகனான ‘கொட்டேன்’ என்பவர்பற்றிய கதையொன்று பழங்குடி தெய்வமரபிற்குரிய ‘மாயமாதல்’ (மறைதல்) என்பதன் அடிப்படையில் அமைந்துள்ளது. “அக்காள் தங்கை இரண்டுபேர். அக்காவின் பெயர் ‘தேக்கீஸ்’ , தங்கையின் பெயர் ‘பூவிஸ்’ தேக்கிஸியின் மகன் ‘கொட்டேன்’. அவன் ஒருநாள் ஆற்று நீரின் வழியே ஈட்டியை வைத்துக்கொண்டு வேட்டைக்குச் செல்லும்போது அவனது கால் கட்டைவிரலின் இடுக்கில் ‘மிரு’ (தலைமயிர்) ஒன்று சிக்கியது. அதை அவன் வெளியே எடுத்துப் பார்க்கும்போது தன் உயரத்திற்கு நீண்டிருந்தது. ஆக அந்த அழகிய கூந்தலுக்குரிய பெண்ணைக் காணவேண்டிய ஆவலில் அவன் தொடர்ந்து அந்த ஆற்றின் பாதையில் செல்லும்போது அங்கே ஐந்தாறு பெண்கள் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது கொட்டேன் தனக்குக் கிடைத்த மயிரிற்குரிய பெண்ணின் ஆடையின்மீது அமர்ந்தான். அதைக்கண்ட மற்ற பெண்கள் அங்கிருந்து ஓடினர். அப்போது ஆடையை எடுக்கமுடியாமல் தவித்த அப்பெண்ணிடம் கொட்டேன் நான் உன்னைத்தான் திருமணம் செய்வேன் என்று கூறி ‘அட்டப்பாடிக்கு’ அருகிலுள்ள ‘இரங்கசாமி மலைக்குச்’ அழைத்துச் சென்றான். அப்பொழுது ஒருநாள் கொட்டேன் தனக்கு எடுப்பிடியாக அங்கிருந்தவனை அழைத்து நான் இதற்குமேல் இங்கு இருப்பதில்லை. நீதான் இங்குள்ளவற்றைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறி தன் கையில் அணிந்திருந்த மோதிரத்தை அவனுக்கு அளித்தான். அடுத்தநாள் எழுந்து பார்க்கும்போது அவன் தங்கிய அவ்விடத்தில் அவனது ஈட்டி, அவன் படுத்துறங்கிய புலித்தோல், அவனின் துணி ஆகியவை இருந்தது ஆனால் கொட்டேன் மாயமாகி இருந்தான்.” என்று கோடுதேனி மந்துவிலுள்ள சம்பத்குட்டனால் வழங்கப்படும் இக்கதையில் வரும் ‘கொட்டேன்’ என்ற கொட்டனெர்ஸ்சை சிவபெருமான் என்று சம்பத்குட்டன் உரைக்கின்றார். தாயுமிலி தந்தையுமிலி என்ற சிவபெருமானின் தோற்றத்தை விமர்சிக்கும் விதத்தில் அமைந்துள்ள இக்கதையில் வழங்கப்படும் கொட்டேன் யார் என்பது ஆராய்விற்குரியது. இக்கதை வழங்கப்படும் வெவ்வேறு இடங்களில் இக்கதையினைச் சேகரித்து ஒப்பிட்டு பார்க்கும்போது இதன் உண்மைநிலைப் புலப்படலாம். இக்கதையில் சிவப்பெருமானின் இருக்கையான புலித்தோல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சைவ உணவுவகையினரான தோடர்களின் இறைவன் வேட்டையாடச் செல்வதற்கான காரணமும் நோக்கர்பாலது.

II. தோடர்களின் பாடல்கள்:
மனித சமூகத்தில் பேச்சு வழக்கிற்கு முன்னதாகவே பாட்டு தோன்றியது எனலாம். மனிதனின் மொழி வளர்ச்சிநிலையில் ஒலிகுறிப்பு நிலையின் அடுத்தநிலையாகப் பாடலைக் கருதலாம். மனிதனின் “பாடல்கள் விண்ணையும் மண்ணையும் மலைகளையும் பொழில்களையும் நதிகளையும் மாறுபடும் பருங்களையும் வர்ணிப்பதோடு மனித உள்ளத்தெழுகின்ற வெவ்வேறான உணர்ச்சி பாவங்களையும் வெளியிடுகின்றன” (மேற்கோள்,நாட்டுப்பறவியல்,சண்முகசுந்தரம், ப.107) என்ற எட்வினின் கருத்தோடு தோடர்களின் பாடல்கள் முழுவதுமாக ஒத்துபோகின்றன.

இயற்கையோடு வாழ்கின்ற தோடர்கள் தம் வாழ்வில் மகிழ்ச்சிக்காகவே அதிகமாக பாடல்களைப் பாடுகின்றனர். குறிப்பாக விழாக்களில் பாடல்களைப் பாடி  இவர்கள் ஆடுகின்றனர். தொழில்சார்ந்து எருமைகளை 6 மாதத்திற்கு ஒருமுறை காலநிலை, உணவுநிலை சார்ந்து வேறு இடத்திற்கு ஓட்டிச்செல்லும் போதும், திருமணத்தின்போதும், இறப்பின்போதும், பொழுதுபோக்கிற்காகவும், போட்டிக்காகவும் இவர்கள் பாடல்களைப் பாடுகின்றனர். தரவுகளாகக் கிடைக்கப்பெற்ற பாடல்கள் இடத்திற்கும், சூழலிற்கும் ஏற்றதாக அமைந்துள்ளன. இதில் அவர்களது முந்தைய வாழ்க்கை முறை, அனுபவம், இவர்களின் சூழல் சார்ந்த முதற்பொருள், கருப்பொருள் பதிவுகள் போன்றவைகள் பதியப்பட்டுள்ளன.

ஆ.. ஆ.. ஆ.., ஹாவ் ஹாவ் போன்ற ஒலிகளை அம் பாடலில் இசைச்சொற்களாகப் பயன்படுத்துகின்றனர். இந்த ஹாவ் ஹாவ் என்ற ஓலியினை இவர்கள் ‘ஆத்திக்கோது’ என்ற செயல்பாட்டிற்கான வாய்மொழி வழக்காறாகப் பயன்படுத்துகின்றனர். பாடலை இவர்களின் மொழியில் பாடுகின்றபோது தகவலர்களுக்கிருக்கும் ஒன்றுதல் அதற்கான விளக்கத்தினை அளிக்கும்போது அவர்களிடம் இல்லை. மிகச் சுருக்கமாகவே தாம் பாடிய பாடலுக்கான விளக்கத்தினை தகவலர்கள் அளித்தனர். தோடர்களின் பாடல்களை அவர்களது மொழியில் பதிவு செய்வதற்கான முயற்சி கையளிக்கவில்லை. எனவே அவர்கள் அப்பாடல்களுக்கு அளித்த விளக்கங்களின் அடிப்படையில் ஓரளவிற்கு இங்கே அப்பாடல்கருத்துக்களைப் பதிவுசெய்கின்றேன்.

எருமைகளை ஒரு சீமெயைவிட்டு (சீமெ – பெரிய வாழ்விடப்பரப்பு), மற்றொரு சீமைக்கு அழைத்துசெல்லும் போது இரண்டு நண்பர்கள் தம் முந்தைய அனுபவங்களைப் பாடுவதாக அமையும் பாடலொன்றிற்கு,

“என் நண்பனுடன் (தன்கோலட்) செல்கிறேன் எருமையுடன் செல்கிறேன்
இடம் விட்டு இடம் (நோடிவுட்நோடு) செல்கிறோம்
சீமெ (நாடு) விட்டு சீமெ செல்கிறோம்
தேனெடுக்கச் செல்வோம் கோயிலிற்கு மூங்கில் எடுக்கச் செல்வோம்
தேனை உண்டால் மயக்கம்வரும் தண்ணீர் தேவைப்படும்
மூங்கிலை உடைக்கும்போது வரும் நீரினைக் குடிப்போம்”


என்று எனக்குத்தெரிந்த படுகமொழியில் சம்பத்குட்டன் அளித்த விளக்கம் அவர்களது கால்நடைசார்ந்த வாழ்வினையும், தொழில்களையும், அதுசார்ந்த அனுபவத்தையும் வெளிப்படுத்துகின்றது. காட்டிலுள்ள தேனினை எடுத்து உண்ணும்போது ஒருவித மயக்கமான நிலை உருவாதையும், அதனைப் போக்குவதற்காக மூங்கிலினை உடைத்து அதிலிருந்து வடியும் நீரினைக் குடிக்கும் அனுபவத்தையும் சுட்டுகின்றது இப்பாடல். பொதுவாக ஜனவரி போன்ற வெயில்காலத்தில் எருமைகளுடனான இடப்பெயர்வு நடைபெறும். இவர்கள் காட்டிலிருந்து கொண்டுவந்த ‘பெத்து’ என்ற மூங்கிலினைக் கொண்டு தம் கைத்தடியினையும், தயிர்க்கடையும் மத்துகளையும் தயாரிக்கின்றனர். நீலகிரிவாழ் மற்ற மக்களுக்கும் இவர்கள் இந்த மத்தினை தாயாரித்தளிக்கின்றனர்.

திருமணத்தின்போது இவர்கள் பாடுவதாக கிடைத்த பாடலொன்றில்

“நாம் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்போம்
குழந்தைகள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்
மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்
நாம் மகிழ்ச்சியாக இருப்போம்
பத்துபோர் இணைந்து ஆடுவோம்”

என்று விளக்கம் தருகிறார் வனராஜன். இது இவர்களின் விழாசாhந்த மன மகிழ்ச்சியினை வெளிக்காட்டும் விதமாக அமைந்துள்ளது. பெண் கருவுற்ற 5 முதல் 7 மாதத்திற்குள்ளாக நிகழ்த்தப்படும் இவர்களது திருமணத்தில் ஆண், பெண் இருவரும் தம் மந்துக்கு அருகில் இருக்கும் இவர்களின் புனிதமரமான ‘நேரி மரத்தின்’ மீது மண்விளக்கினை வைத்து, மணமகன் வீட்டிலிருந்து கொண்டுசென்ற நெய்யினை ஊற்றி, திருமணப் பெண்ணை ஏற்றச்செய்து, மணமகன் ‘பிஸ்க்தூர்’ செடியினை வெட்டி செய்த வில், அம்பினை செய்துகொண்டுவந்து ‘பிஸ்க் எடுக்கானா’, ‘பிஸ்க் எடுக்கானா’ (வில்லை கொடுக்கலாமா) என்று மூன்றுமுறை பெண்ணின் தந்தையிடம் கேட்டு, ‘ப்ரெட்’ (கொடுக்கலாம்) என்ற ஒப்புதல் பெற்று வில்அம்பினை அளிப்பார். பின்னர் அங்கு வருகைத்தந்திருக்கும் தம் இனத்தவரிடம் ஆசிர்வாதம் பெற்று, ஆண் பெண்ணுக்கும், பெண் ஆணுக்கும் தேனினை ஊட்டிவிடுவார். பின் மணப்பெண் தான் ஏற்றிய எரியும் விளக்கினை அரைமணிநேரம் கண்இமைக்காமல் நோக்கவேண்டுமாம். அப்போது மணப்பெண்ணின் கண்களிலிருந்து கண்ணீர் வரக்கூடாது. அவ்வாறு வந்தால் அப்பெண் தீட்டுடையவள் என்றுபொருள் என்றும், அவ்வாறுவரின் அப்பெண்ணினை மூத்தோர்கள் வாழ்த்தி அப்பெண்ணின் தீட்டினைக் கழிப்பார்கள் என்றும் கூறுகிறார் சம்பத்குட்டன். இவர்களின் இந்த நிகழ்வு முடியும்வரை நேரிமரத்தில் ஏற்றிய விளக்கு அணையக்கூடாது என்றும் உரைக்கிறார். இவர்களின் திருமணத்தினைப் பற்றி பல்வேறு கருத்துகளை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இவர்களின் கோயிலுக்குள்ளும் விளக்குவழிப்பாட்டினையே இவர்கள் நிகழ்த்துகின்ளனர்.

மேலும் வனராஜன் அவர்கள் திருமணத்தின்போது பாடுவதாக கூறிய மற்றொரு பாடலில் ‘நம் இன குழந்தைகள் நலமாக இருக்கவேண்டும். குழந்தைகள் இரண்டு எருமைகளை வளர்க்கவேண்டும். ஒரு வீடு கட்டவேண்டும் என்ற பொருள் அமையப்பெற்றுள்ளது. மேலும் இப்பாடலில் பல மந்துக்களின் பெயர்களும் இடம்பெறுகின்றது. தோடரின் மக்களின் ஆண்கள் இறப்பின்போது, மேல்மந்தில் இறப்பு ஏற்பட்டால் கீழ்மந்திலிருந்து சென்று சடலத்தினை எரிப்பதற்காக சிறிய நேரி என்ற நகா மரத்தினை வெட்டித்தருவது இவர்களது மரபாகும். இதேபோல கீழ்மந்தில் இறப்பேற்படின் மேல்மந்திலிருந்து வந்து மரத்தை வெட்டித்தருவார். மேலும் மேல்மந்தில் இறந்தவரின் இல்லத்திற்கு முன்பு இறந்தவரின் பிறப்பையும், பெருமைகளையும் குழுப்பாடலாகப் பாடுவார். இதில் ஒருவர் ஹாவ் ஹாவ் என்று எடுத்துக்கொடுக்க மற்றொருவர் இறந்தவரைப்பற்றி பாடுவார். இது இவர்களிடம் கணப்படும் தனித்த வாய்மொழி வழக்காறாகும். தம் அண்டைய மந்தில் ஏற்பட்ட இழப்பில் பங்கேற்பதும், அவர்களது துக்க நிலையினை உணர்ந்து இறப்பு நிகழ்வின் முக்கியமான பணிகளில் உதவுவதும், இறந்தவரைப்பற்றிய பாடலைப்பாடி தம் துக்கப் பங்களிப்பையும், இறந்தவரை பெருமைப்படுத்தி இழப்பு வீட்டாருக்கு ஆறுதலையும் அளிக்கும் வண்ணம் அமைந்த இந்த வாய்மொழி வழக்காற்றின் மரபுமுறை தனித்தன்மை வாய்ந்தது. இவர்களின் இறப்புப்பாடலை ஆண்கள் மட்டும் பாடுவார்கள். பெண்கள் பாடுவதில்லை. பெண்கள் இறந்தால் இந்தப் பாட்டினைப் பாடுவதில்லை என்று பிரசாந்த் குட்டன் கூறுகிறார்.

இவர்களின் பாடல்சாhந்த வழக்காற்றில் மற்றொரு முறையாக போட்டிக்காக பாடும் ‘போர்ட்’ என்ற பாட்டுமுறை விளங்குகின்றது. ஆல் ஹாவ் ஹாவ் என்ற ஒலிகளை நீண்ட நேரம் விடாது பாடுதல் என்ற கட்டமைப்பில் இந்த ‘போர்ட்’ பாடல் அமைந்திருக்கும். நீண்டநேரம் விடாமல் யார் பாடுகின்றனரோ அவர்கள் மூத்தோர்காளால் பாராட்டப்படுவார். கூட்டமாக கூடும் இடத்தில் இந்நிகழ்வினை நிகழ்த்துவதாக கொட்டாட குட்டன் உரைக்கிறார். இந்த முறைக்கு ‘பாராட்டியாரா’ (தெதவர்கள் கதை கூறுகிறார்கள்) என்ற பெயர்வழக்கொன்றும் நீலகிரியில் நிலவுவதாகவும் அவர் உரைக்கிறார். மேற்கண்ட கதையோடு கூடியபாடல், ஒலிக்குறிப்புடன் கூடிய பாடல், தனிநபர்பாடல், குழுப்பாடல் என்ற கட்டமைப்பு அடிப்படையில் வகைப்படும் தோடர்களின் பாடல்களை ஆண்களே அதிகமாகப் பாடுகின்றனர்.

பழமொழிகள்:
பழமொழி என்பது வாய்மொழி வழக்காறுகளுள் சுருக்கமானதும், பொருள் நிறைந்ததுமாக திகழ்கின்றது. அறிவுரை உரைப்பதற்காக பெரும்பாலும் பழமொழிகள் வழங்கப்படுகின்றன. இது வாழ்வியல் அனுபவம் கொண்டவர்களால் மட்டுமே சத்தியப்படும் ஒன்று. கள ஆய்வின்போது 80 வயதான கொட்டாட குட்டன் அவர்களிடம் இரண்டு பழமொழிகளை மட்டுமே சேகரிக்கமுடிந்தது. அதில் ‘நா ஏஸ்த்தேனா நீ ஏஸ்த்தேனா’ என்ற பழமொழி நான் சொல்வதென்னா நீ கேட்பதென்னா என்பதைச் சுட்டுகின்றது. இதை விளக்கும் விதமாக அவர் “‘சொன்னது வாய். கேட்டது உன் காது’ எவ்வாறு வாய்க்கும் காதுக்கும் இடைவெளியுண்டோ அதுபோலதான் ஒருவரின் கூற்றுக்கு செவிமடுக்காதபோது ஏற்படும்’ என்கிறார். இது இன்றைய சூழலில் கிறித்துவமதத்திற்கு மாறிய தோடர்களையும், அவர்களை மதமாற்றத்திற்கு வற்புறுத்தியவர்களையும் பற்றிக்கூறி இன்றைய சூழலினை அவர் வருந்தியுரைக்கும்போது இந்தப் பழமொழியை அவர் கூறினார். பழமொழிகள் என்றும் சூழலோடு தொடர்புடையன என்பதை இது தெளிவுறுத்துகின்றது.

இன்றைய தோடர்களின் வாழ்வியல் சிக்கல்களுக்கு அவர்களுடனே இருப்பவர்கள்தான் காரணம் என்று அவர் ஆதங்கப்பட்டபோது ‘உடுகல் கத்தி பீசிரா’ என்ற பழமொழியொன்றினை உரைத்தார். இதில் உடுகலு என்பது எருமையினை குறிப்பது. அது தன் வாலினை வீசுவதைபோல நம்முடன் இருப்பவர்களே நம்மை வீசி, சிக்கலினை உருவாக்கிவிடுவார்கள் என்ற பொருள் பொதிந்துள்ளது. இந்தப் பழமொழிகளும் அவர்களது வாழ்வியலை சிறப்பாக சித்தரிக்கும் விதமாக அமைந்துள்ளது.
வாய்மொழி வழக்காறுகள் என்பவை ஒரு இனக்குழு மக்களின் அனுபவ அறிவினை தக்கவைத்திருக்கும் சிறந்த ஆவணங்களாகவும், மரபுநிலை, வரலாறு, வாழ்முறை போன்ற பல்வேறு கூறுகளை மீட்கொணரும், தலைமுறைக்கடத்தும் நிலைகளானகவும் விளங்குவதை நீலகிரி தோடர்களின் வாய்மொழி வழக்காறுகள் காட்டுகின்றன.

படம் 1 - தோடர்களின் கோவில் மற்றும் வீடமைப்பு

தோடர்களின் கோவில் மற்றும் வீடமைப்பு

படம் 2 - தோடர்களின் குடியிருப்பான மந்து
தோடர்களின் குடியிருப்பான மந்து
படம் 3 - தோடர்களும் அவர்களின் ஆசி வழங்கும் முறையும்

தோடர்களும் அவர்களின் ஆசி வழங்கும் முறையும்

துணைநின்றவை -

1. தென்னிந்திய குலங்களும் குடிகளும், எட்கர்ட் தர்ஸ்டன்.
2. தமிழகப் பழங்குடிகள், சீ.பக்தவத்சல பாரதி.
3. தமிழக மானுடவியல், சீ.பக்தவத்சல பாரதி.
4. நீலகிரி படகரின மக்களின் மரபுசார் பண்பாட்டுப் புழங்குபொருட்கள், முனைவர் பட்ட ஆய்வேடு, முனைவர். கோ.சுனில்ஜோகி, பாரதியார் பல்கலைக்கழகம், 2015.
5. நேர்காணல் - திரு. கொட்டாட குட்டன், வயது 89, கோடநாடு மந்து.
6. நேர்காணல் - திருமதி வாசமல்லி, வயது 60, தமிழகம் மந்து.
7. நேர்காணல் - திரு. வுனராஜன், வயது 65, கோடநாடு மேல் மந்து.
8. நேர்காணல் - பிரசாந்த் குட்டன், கோடுதேனு மந்து.

* கட்டுரையாளர்: முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல், கல்லூரி கோவை.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R