- 'உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில் 25.09.2019 அன்று நடத்திய தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள் -
காலங்காலமாகத் தமிழரின் பெருமையினைப் பல்வேறு இலக்கியங்கள் பதிவுசெய்து வரினும், தமிழ் இலக்கிய,மொழி வளர்ச்சிக்குப் பக்தி இலக்கியங்களின் பங்கு அளப்பரிது. பக்தியின் மொழி தமிழ் என்னும் சிறப்புப் பெயருக்கேற்றவாறு சமயமும், இலக்கியமும் ஒரு சேர வளர்ந்தன. இறைவன் மீது தாம் கொண்ட அன்பினையும் அதனால் பெற்ற இறையனுபவத்தையும் கொண்டு பக்தி இலக்கியங்களைப் படைத்தனர். அவ்விலக்கியங்கள் மக்களின் உள்ளத்து உணர்வுகளை எடுத்தியம்பியதோடு தமிழினத்தின் அடையாளங்களைப் பறைசாற்றும் சிறந்த கருவியாக விளங்கியது என்பதில் ஐயமில்லை.
பண்படுவது பண்பாடு. பண்படுதல், சீர்படுதல், திருந்துதல் என்ற பல பொருள்களில் வரும். பண்பாடு என்ற பொருளினைத் தரும் ஆங்கிலத்தில் (ஊரடவரசந) என்னும் பெயர்ச்சொல் நிலப் பண்பாட்டையும், உளப்பண்பாட்டையும் குறிக்கும். இவ்விருவகைப் பண்பாட்டுள்ளும் மக்களைத் தழுவிய உளப்பண்பாடு சிறப்பிற்குரியதாகும். பண்பாடு என்பது அறிவு, நம்பிக்கை, கலை, ஒழுக்கநெறிகள், சட்டம், வழக்கம் முதலானவையும், மனித சமுதாயத்தின் ஓர் உறுப்பினராக இருந்து கற்கும் பிற திறமைகளும், பழக்க வழக்கங்களும் அடங்கிய முழுமைத் தொகுதியாகும் என்று பக்தவத்சலபாரதி கூறுகிறார்.
பண்டைத் தமிழரின் சமூக அடையாளங்களாக விளங்கும் சடங்குகளும் நம்பிக்கைகளும் ஆகிய இவ்விரண்டு கூறுகளே அக்கால மக்களின் பண்பாட்டினைப் பிரதிபலிக்கும் தரவுகளாக அமைகின்றன. இத்தகு சீர்மிக்கத் தரவுகளை அக்கால மக்களின் வாழ்முறைகளோடு இணைத்துக்கூறும் பக்தி இலக்கியங்களுள் எட்டாம் திருமுறையில் இடம்பெறும் திருக்கோவையார் நூலில் கூறப்பட்டுள்ள தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளை ஆராயும் நோக்கில் இக்கட்டுரை அமைகிறது.
திருக்கோவையாரில் வேலன் வெறியாட்டு, மடலேறுதல், திருமணம், பலியிடுதல் முதலிய சடங்குமுறைகளும் குறிகேட்டல், நெல் தூவிப் பார்ப்பது, பிறை தொழுவது போன்ற நம்பிக்கைகளும் காணப்படுகின்றன.
தலைமக்களின் களவு வாழ்க்கை கற்பு வாழ்க்கையாக மாறுவதற்கான பயணத்தில் ஒரு மைல் கல்லாக விளங்குவது அறத்தோடு நிற்றல் என்னும் துறையாகும். தோழிக்கூற்றாகவும், செவிலிக் கூற்றாகவும் கூற்றுகள் நிகழும். வேலனைக் கொண்டு வெறியாடச் செய்து கழங்கு பார்ப்பது என்பது தமிழர் தம் வழக்காறுகளில் ஒன்றாகும். முருகனுக்குரிய வேலினைக் கையில் ஏந்தி குறி பார்ப்பதோடு மட்டுமின்றி முருகக்கடவுள் பொருட்டுப் பலியிட்டு அக்கடவுள் ஆவேசிக்க ஆடுங்கூத்தாகும். அணங்குற்ற பெண்களின் காரணமாக வேலன் வெறியாடிக் கூறும் செய்தி பழங்கால நூல்களில் மிகுதியாகப் பயின்று வந்துள்ளது.
'வெறியறி சிறப்பின் வௌ;வாய் வேலன்
வெறியாட் டயர்ந்த காந்தளும்'
(தொல்.பொருள்.புறம். நூ.எ.5)
என்னும் தொல்காப்பிய நூற்பாவால் அறியலாம்.
'வேலவன் புகுந்து வெறியா டுகவெண் மறியறுக்க
காலன் புகுந்தவி யக்கழல் வைத்தொழிற் றில்லை' (திருக். பா.எ.286)
என வரும் பாடலில் வெறியாடுதலில் ஆட்டினைப்பலிக் கொடுத்தல் ஒரு பகுதியாய் இடம்பெறுவதை அறியமுடிகிறது.
தலைவியின் நிலையினை அறிய விரும்பும் செவிலி கட்டுவிச்சியை அழைத்து குறிப்பார்க்கும் வழக்கமும் பண்டைக்காலத்தில் இருந்து வந்துள்ளது.
'கட்டினும் கழங்கினும் வெறியென இருவரும்
ஒட்டிய திறத்தால் செய்திக் கண்ணும்'
(தொல்.பொருள்.களவு நூ.எ.25)
கட்டுவிச்சிக்குக் கட்டுதலும், வேலற்குக் கழங்கு பார்த்தலும் உரியவை என்பது புலப்படும். மலை நாட்டுக் குறத்தியர் நெல்லினைத் தூவி விட பிறர் எண்ணிய எண்ணம் ஒரு உருவமகாகத் தோன்றி செய்தியை உரைக்கும்.
'மயிலிதன் றேகொடி வாரணங் காண்கவன் சூர்தடிந்த
அயிலிதன் றேயிதன் றேநெல்லிற் றோன்றும் அவன் வடிவே'
(திருக்.பா.எ.285)
என்பதை அறிய முடிகிறது. தலைவியை அடைய விரும்பும் தலைவன் அதற்குத் தக்க துணையாவாள் தோழி எனக் கருதி பலமுறை சென்று அவளிடம் குறையிரந்து நிற்பான். தலைவியிடம் தான் கொண்ட காதலைக் குறிப்பாகவும் வெளிப்படையாகவும் கூறித் தோழியின் உதவியை நாடுகிறான். தோழியோ அவன் காதலுக்குச் செவிசாய்க்காது போகவே தன் காதலை நிலைநாட்ட தான் மடலேறப் போவதாகத் தலைவன் கூறுவான். தலைவியை அடைய முடியாத நிலையில் 'மடலூர்ந்தாயினும் அவளைப் பெறுவேன்' என்றும் சூளுரைப்பான். பனை மடல்களால் குதிரை போன்று செய்து அதன் மேல் ஏறிப் பக்தன் போல் ஊர் நடுவே தோன்றி தன் காதலை வெளிப்படுத்துவதே இச்செயலின் நோக்கமாகும். திருக்கோவையாரின் தலைவனும்
'ஈசன சாந்தும் எருக்கும் அணிந்தோர் கிழிபிடித்துப்
பாய்சின மாவென ஏறவர் சீறூர்ப் பனைமடலே'
(திருக். பா.எ.174)
என எருக்கம்பூ மாலையினைத் தலையில் சூடித் தலைவியின் உருவத்தை படமாக வரைந்து பனைக் கருக்குளால் செய்யப்பட்ட குதிரை ஏறி மடலேறுவேன் என்று கூறிகிறான். தோழியோ மடலேறுவது தகாது என விலக்கி களவு வாழ்க்கைக்குத் தலைவியை உடன்படிசெய்து தலைவனின் விருப்பத்தை நிறைவேற்றுவாள்.
ஒருபுறம் களவு வாழ்க்கையில் தலைவனும் தலைவியும் பயணித்திருக்க, மறுபுறம் பருவமடைந்த தலைவியின் தன்மையைக் கண்ட பெற்றோர் திருமணத்திற்கான முயற்சியை மேற்கொள்வார்கள், இதனை அறிந்த தோழி தலைவனிடம்,
'எம்முடைய ஐயன்மார் தலைவியின்
பெருமையும், இடையின் சிறுமையும் கண்டு,
எம் ஊரின் ஏறின் மருப்பனைத் திருத்திவிட்டிருக்கிறார்' என்கிறாள். ஏறினைத் தழுவுவோருக்கே தலைவியை மணம் முடித்துக் கொடுப்பர் என்று தலைவனுக்கு உணர்த்தப்படுகிறது.
'படையார் கருங்கண்ணி வண்ணப் பயோதரப் பாரமும் நுண்
விடையார் மருப்புத் திருத்திவிட்டார்வியன் தென்புலியூர்'
(திருக். பா.எ.136)
ஏறுதழுவுதல் மூலம் தலைவியின் மணாளினைத் தேர்ந்தெடுக்கும் மரபு பதிவு செய்யப்பட்டுள்ளது.
களவு நெறியில் அன்பு கொண்ட தலைமக்கள் அவர்; தம் பெற்றோர். கொடுப்பப் பலரறிய மணம் செய்து வாழும் மணவாழ்க்கை கற்பெனப்பெறும்.
'கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குறி மரபினோர் கொடுப்பது கொள்வதுவே'
(தொல்.பொருள்.கற்பு நூ.எ.1)
என்று கற்பு வாழ்க்கையை எடுத்துரைக்கிறார் தொல்காப்பியர். பறையும் சங்கும் மங்கல நாளில் முழங்கும் வழக்கம் பழங்காலத்தில் இருந்து வந்துள்ளதைக் குறுந்தொகை பதிவு செய்கிறது.
'பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு
தொன்மூ தாலத்துப் பொதியில் தோன்றிய'
(குறுந். பா.எ.15)
இதனையே 'மணமுரசு கூறல்' என்னும் துறையாக மாணிக்கவாசகரும் கையாண்டுள்ளார்.
'பிரசம் திகழும் வரைபுரை யானையின் மீடழிந்தார்
முரசம் திகழும் முருகியம் நீங்கும் எவர்க்கும் முன்னாம்:'
(திருக். பா.எ.299)
என்று திருமணத்திற்காக முரசு ஒலித்து நிற்பதைத் தோழி தலைவியிடம் எடுத்துரைக்கும் விதமாக அமைகிறது.
கற்பு நெறியில் தலைவன் தலைவியை விட்டுப் பரத்தையிற் பிரிவு மேற்கொள்வான். அக்காலத்தில் தலைவி பூப்பெய்தினால் என்றால் அச்செய்தியைத் தலைவனுக்குத் தெரிவிக்கும் வழக்கமும் அக்காலத்தில் இருந்துள்ளது. இதனை
'தலைமகன் பரத்தையிற் பிரிந்த காலத்துத் தலைமகட்குப் பூப்புத் தோன்றிற்று, தோன்றத் தலைமகன் உணரும். எங்ஙனம் உணருமோ எனின், வாயில்கள் உணர்த்த உணரும். என்ன வாயில்கள்; உணர்த்துமாறு எனின் தலைமகள் வாயில்களும் தலைமகன் மாட்டு உளவாம்;: ஆகலான் அவர்கள் உணர்த்த உணரும்' என்று விளக்கம் தருகிறார் இறையனார் களவியல் உரையாசிரியர்.
தலைவிக்குப் பூப்பு நிகழ்ந்த நாளில் தோழிக்கு செவ்வாடை அணிவித்து, செம்பினால் ஆகிய பாத்திரத்தில் செம்பூவையும் நீரையும் கொண்டு சென்று தலைவனை வலம் வருவர். பின் கொண்டு வந்த பூவையும் நீரையும் தலைவனின் காலில் ஊற்றிவிட தலைவன் தலைவிக்குப் பூப்பு நிகழ்ந்ததை உணர்ந்து கொள்வான்.
'சிவந்தனபம் போதுமஞ் செம்மலர்ப் பட்டுங்கட் டார்முலைமேற்
சிவந்தவஞ் சாந்தமுந் தோன்றின வந்து திருமனைக்கே'
(திருக். பா.எ. 361)
சிவந்த பூவும் செம்மலர்ப்பட்டும் உடுத்து, செந்சந்தனமும் ஏந்த வீட்டின் முன்பு தோன்றியதால் அறத்திற்கு எந்தவொரு குறைபாடும் வராமல் தலைவன் பரத்தையிற் வீட்டிலிருந்து தன் இல்லத்திற்குச் செல்ல வேண்டும் என்பதை மாணிக்கவாசகர் உணர்த்துகிறார்.
அக வாழ்வில் தலைவனைப் பிரிந்த தலைவி, தலைவனின் வருகையினை எதிர்நோக்கியிருப்பாள். தன் தலைவனைக் காணும் காலத்தினை அறிய நிமித்தக் குறிகளின் மூலம் தலைவி கணிப்பாள். இம்மரபுச் செயலைச் சங்க இலக்கியம் முதல் பல இலக்கியங்களும் கூடலிழைத்தல் கூடல், ஆழி என்னும் சொற்களால் பதிவு செய்துள்ளன.
'கோடுவாய் கூடப்பிறையைப் பிறிதொன்று
நாடுவேன் கண்டனென் சிற்றிலுட் கண்டாங்கே'
(கலி. பா.எ. 142)
என்ற கலித்தொகைப் பாடலிலும்,
'கூடப் பெருவனேற் கூடென்று கூடலிழைப்பாள்'
(முத்தொள். பா.எ.82)
என்று முத்தொள்ளாயிரம் பாடலிலும் இடம்பெறுவதை அறிய முடிகிறது. தமிழ்ப் பேரகராதி, 'தலைவனைப் பிரிந்த மகளிர் அவன் வரும் நிமித்தம் அறிய தரையில் சுழிக்கும் சுழிக்குறி' என கூடலிழைத்தலுக்குப் பொருள் கூறுகின்றது.
'ஆழி திருத்தும் புலியூர் உடையான் அருளின் அளித்து
ஆழி திருத்தும் மணற்குன்றின் நீத்தகன்றார் வருகவென்று
ஆழி திருத்திச் சுழிக்கணக்கு ஓதினமையால் ஐய'
(திருக். பா.எ. 186)
என்னும் திருக்கோiயார் பாடலில் ஆழி என்ற சொல்லைக் கூடலிழைத்தல் என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது. பெரிய வட்டமாக ஒரு கோடு போட்டு, அந்த கோட்டிலே சிறு சுழிகளை சுழித்து வந்து முடியும் போது இரட்டைப்படை எண்ணில் வருகிறதா எனத் தலைவிப் பார்ப்பாள். அவ்வாறு வருமாயின் தலைவன் விரைவில் வருவான் என்றும் ஒற்றைப் படையில் வருமாயின் தலைவன் வரமாட்;டான் என்றும் கணிக்கும் தலைவியின் நிலை எடுத்துரைக்கப்படுகிறது. இவற்றையெல்லாம் நோக்கும்போது பண்டைத்தமிழர்கள் தங்களின் வாழ்க்கைச் சூழலுக்கேற்ப பல்வேறு நம்பிக்கைகளையும் சடங்குளையும் கொண்டு வாழ்ந்து வந்தனர் என்பதை அறியமுடிகிறது. அக்காலம் சமூக இயங்கியலின் மக்கள் பின்பற்றிய பல்வேறு நம்பிக்கைகளும் சடங்குகளும் ஒரு பண்பட்ட இனத்தின் பண்பாட்டுப் பதிவுகளை அடையாளம் காட்டுவதாக அமைகின்றன என்பதில் சிறிதளவும் ஐயமில்லை என்பது புலனாகிறது.
பார்வை நூல்கள் :
1.இறையனார் அகப்பொருள், நக்கீரர் உரை – சாரதா பதிப்பகம், சென்னை 14. மு.ப.2010
2. கலித்தொகை, நியு செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை 98 – மு. ப 2004
3. குறுந்தொகை. நியு செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை 98 – மு. ப 2004
4. தமிழ் பேரகராதி, தொகுதி 2, பகுதி – 1
5. திருக்கோவையார், தண்டபாணித் தேசிகர் உரை, சாரதா பதிப்பகம், சென்னை . மு.ப.2011
6. தொல்காப்பியம், இளம்பூரனர் உரை, திருநெல்வேலி தென்னிந்திய
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. 1969
* கட்டுரையாளர்: - முனைவர்.இரா.வரலெஷ்மி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, திருவள்ளுவர் கல்லூரி, பாபநாசம் - 627 425 ,திருநெல்வேலி மாவட்டம் -