கோவில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம் என்றார்கள் நம் முன்னோர்கள். மக்களை வாழ்விப்பதற்காக ஊருக்கொரு கோவில் கொண்டு அம்சமாய் காட்சி அளிக்கிறாள் அன்னை மாரியம்மன். காவிரிச் சமவெளியில் ஓர் பேறுபெற்ற அம்மன் கோயிலாக விளங்குவது சமயபுர மாரியம்மன் கோயில். தற்போது, சமயபுரம் மாரியம்மன் கோயில் இருக்குமிடம் கண்ணனூர் என அழைக்கப்படுகிறது. இவ்விடம் கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. பக்தர்கள் மாரியம்மனை மாரியாத்தா, கருமாரி, முத்துமாரி, அகிலாண்ட நாயகி, சாம்பிராணி, வாசகி, கவுமாரி, காரண சவுந்தரி, மகமாயி, ஆயிரம் கண்ணுடையாள், கண்ணபுரதேவி, மகாகாளி, மகாமாரியம்மன், திரிசூலி, அம்மா எனப் பலவாறு அழைத்து வணங்கி மகிழ்கின்றனர்.
சமயபுரம் அருள்மிகு மாரியம்மனை இப்பகுதியில் காணப்படும் பிற அம்மன் கோயில்களான அன்பில், நார்த்தமலை, தென்னலூர், கொன்னையூர், புன்னை நல்லூர், வீரசிங்கம்பேட்டை மற்றும் வைத்திகோயில் ஆகிய திருக்கோயில்களில் எழுந்தருளியிருக்கும் தெய்வங்களோடு சகோதரி முறையாகக் தொடர்புபடுத்திக்கூறும் முறையும் மக்களிடம் உண்டு. தஞ்சை வளம்பக்குடி மாரியம்மனும் ஒர் சகோதரியாகக் கூறுவதும் வழக்கில் உள்ளது. இன்னும் சிலர் மாறுபட்ட சகோதரி வரிசையைக் குறிப்பிடுகின்றனர். எவ்வாறு இருப்பினும் தமிழக அம்மன் கோயில்களில் பெரும்பேறும் தலைமைப் பண்பும் கொண்டு அருளாட்சி நடத்தும் பெருமை சமயபுரம் அம்பாளுக்கு மட்டுமே உண்டு எனபதை உணரலாம். இத்தகைய நிலையில் பெருமக்கள் வழக்கின்படி சமயபுர மாரியம்மனும் ஏழு சகோதரிகளும் பற்றிச் சுருக்கமாக ஆராய்வோம்.
மாரியம்மன் விளக்கம்
பொதுவாகக் கோடை காலங்களில் ஏற்படும் வெப்பத்தால் மனிதர்களுக்கு அம்மை போன்ற வெப்பக்கால நோய்கள் ஏற்படுவது வழக்கம். இந்த வெப்ப நோய்கள் வராமல் தடுக்கக் கோடை காலத்தில் மழை பெய்து குளிர்ச்சி அடைய வேண்டும் என்று நினைத்து மழை தர வேண்டினர். இந்த தெய்வம் மாரி(மழை) அம்மன் என்று அழைக்கப்பட்டது. இந்த மாரியம்மன் பல நோய்களைப் போக்கும் கசப்பு சுவையுடைய வேம்பு மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட சக்தியின் மற்றொரு நிலை என்றும் சொல்கிறார்கள். இதனால் இந்த மாரியம்மனுக்குத் தல விருட்சமாக வேம்பு மரமே இருக்கிறது. இந்த மாரியம்மன் இடத்திற்குத் தகுந்தபடி பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார். மாரியம்மன் ஆதிசக்தியின் வடிவமாகக் கருதுகின்றனர். தமிழர் வாழும் அனைத்து ஊர்களிலும் நாடுகளிலும் மாரியம்மனுக்கு ஓர் தனிச்சிறப்பு உண்டு. கோடை காலத்தில் மழையாய் பொழிந்து மக்களின் பஞ்சம் தீர்க்கும் மாரியம்மனை வழிபடுவோருக்கு நோய்கள் எதுவும் அண்டாது. வேம்பினை விரிச்சமாய் கொண்டு எங்கும் நிறைந்திருக்கிறாள்.
1.சமயபுரம் முத்துமாரியம்மன்
திருச்சி மாவட்டம் சமயபுரம் ஒரு சோழ மன்னர் தன் தங்கைக்கு சீதனமாக ஒரு நகரையும் கோட்டையையும் உண்டாக்கிக் கொடுத்த இடமாகக் கருதப்படுகிறது. பிற்காலத்தில் பாண்டிய மன்னர்களின் படையெடுப்பால் அவை அழிந்து வேம்புக்காடாக மாறியதாகவும் தொடர்ந்து அங்கு அம்மன் கோயில் உருவானதாகவும் கூறப்படுகிறது. வைணவி என்ற மாரியம்மன் சிலை திருவரங்கத்தில் இருந்தது. அதன் உக்கிரம் தாங்க முடியாமல் போனதால் அங்கிருந்த ஜீயர் சுவாமிகள், அச்சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்த ஆணையிட்டார். அவருடைய ஆணைப்படி வைணவியின் சிலையை அப்புறப்படுத்த வந்தவர்கள் வடக்கு நோக்கிச் சென்று சற்று தூரத்தில் தற்போதுள்ள இனாம் சமயபுரம் என்னுமிடத்தில் இளைப்பாறினார்கள். பிறகு அதனை எடுத்துக்கொண்டு தென்மேற்காக வந்து தற்போதுள்ள மாரியம்மன் கோயில் அமைந்துள்ள கண்ணனூர் அரண்மனை மேட்டில் வைத்துவிட்டுச் சென்றனர். அப்போது, காட்டு வழியாகச் சென்ற வழிப்போக்கர்கள் அச்சிலையைப் பார்த்து அதிசயப்பட்டு அக்கம்பக்கத்தில் இருந்த கிராம மக்களைக் கூட்டிவந்து அதற்கு ”கண்ணனூர் மாரியம்மன்” என்று பெயரிட்டு வழிபடத்தொடங்கினர். அக்காலகட்டத்தில் விசயநகர மன்னன் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்து, கண்ணனூரில் முகாமிட்டார்கள். அப்போது மாரியம்மனை வழிபட்டு, தாங்கள் தென்னாட்டில் வெற்றி பெற்றால் அம்மனுக்குக் கோயில் கட்டி வழிபடுவதாகச் சபதம் செய்தார்கள். அதன்படியே வெற்றி பெறவே, கோயிலைக் கட்டினார்கள். விசயரெங்க சொக்கநாத நாயக்கர் காலத்தில் கி.பி. 1706இல் அம்மனுக்குத் தனியாகக் கோயில் அமைத்தார்கள் என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட கண்ணனூர் மாரியம்மன் கோயில் இன்று”சமயபுரம் மாரியம்மன்” கோயிலாக மாறி புகழ்பெற்று விளங்குகிறது.
ஆங்கிலேயத் தளபதி இராபர்ட் கிளைவ், பிரெஞ்ச்காரர் சேனைகளைச் சமயபுரத்தில் தோல்வியுறச் செய்து ஆங்கிலேயர் ஆட்சியை நிறுவினார். இதனால் அவர் அம்மனிடத்தில் தான் வேண்டிக் கொண்டபடி திருப்பணிகள் செய்ததாகத் தெரிகிறது. கிபி 18ஆம் நூற்றாண்டில் நடந்த இந்த சம்பவத்தால் சமயபுரம் பிரசித்தி பெற்றது. அது முதற்கொண்டு ஆங்கிலேயருக்கு இந்த அம்மனிடம் மிகுந்த பக்தி இருந்து வந்தது. 1959இல் கண்பார்வை பாதிப்படைந்த தியாகராச பாகவதர் திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் பிரகாரத்தில் தொடர்ந்து 48 நாட்கள் தங்கியிருந்து மீண்டும் இழந்த தன் கண் பார்வையைப் பெற்றார். பிரபல சரித்திர நாவலாசிரியர் கோவி.மணிசேகரனுக்கு பார்வை குறைந்த போது, அம்மனை வேண்டி பூரணகுணம் பெற்றதால் அம்மனை புகழ்ந்து பாடி உள்ளார். அதே போன்று சிவந்திலிங்க சுவாமிகளுக்கும் பார்வை திரும்பியதால் அம்மனை புகழ்ந்து பாடி உள்ளார். சமயபுரம் மாரியம்மனை வணங்கினால் மருத்துவரால் கைவிடப்பட்ட வியாதிகள் கூட நீங்கும்.
தைப்பூசத் திருநாளின்போது திருவரங்கம் கொள்ளிடம் ஆற்றின் உள்ளே எழுந்தருள்கிறாள் சமயபுரம் மாரியம்மன். திருவரங்கம் பெருமாளும் அங்கு எழுந்தருள்கிறார். தன் தங்கை மாரியம்மனுக்கு சீர் வரிசைப் பொருட்கள் தந்து அனுப்புகிறார் அண்ணன் நம்பெருமாள்.
இக்கோயிலின் மூலவரான மாரியம்மன் எட்டு கைகளுடன், தலை மாலை கழுத்தில், சர்ப்பக் கொடையுடன், ஐந்து அசுரர்களின் தலைகளைத் தன் காலால் மிதித்து தனது சிம்மாசனத்தில் வீற்றிருக்கும்படி இருக்கிறார். பெருவளை வாய்க்கால் மற்றும் மேற்கே உள்ள மாரி தீர்த்தம் (தெப்பக்குளம்)இக்கோயிலின் தீர்த்தங்களாகும். இக்கோயிலின் தல மரம் வேப்ப மரமாகும். அம்மனை வழிபட தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலத்தவரும் பிற நாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருகின்றனர். செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் சித்திரைத் தேர்த்திருவிழா, ஆடி வெள்ளி, பூச்சொரிதல் விழா போன்ற விழாக்காலங்களிலும் கூட்டம் அதிகமாகிறது. ஆடி மாதத்தில் எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் இருக்கும். குறிப்பாக ஆடி கடைசி வெள்ளிக்கிழமை(கடை வெள்ளி) மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் முதன்மையானது என்ற பெருமைக்குரியது இந்த ஆலயம். தமிழகத்தில் உள்ள கோவில்களில் பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு அடுத்த படியாக அதிக உண்டியல் வருமானம் வருகிற ஆலயமாகவும் சமயபுரம் மாரியம்மன் கோவில் திகழ்கிறது
2.அன்பில் முத்துமாரியம்மன்
திருச்சி மாவட்டம் இலால்குடியை அடுத்த அன்பில் கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு உட்பட்ட உபகோவில் ஆகும். மகா மாரியம்மன் சுமார் 700 ஆண்டுகள் பழமையான கோவிலாக விளங்குகிறது. இத்திருகோவிலில் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் வரும்பொழுது வேப்பமரத்தடியில் அம்மன் தங்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர் இத்திருக்கோவிலை முதலாங்க சக்கரவர்த்தி கட்டியதாகக் கூறப்படுகிறது. சமயபுரம், நார்த்தான் மலை, வீரசிங்க பேட்டை, கண்ணனூர், புன்ணை நல்லூர், திருவேற்காடு, அன்பில் மாரியம்மன் ஆகிய சிறப்பு மிக்க அம்மன் தலங்களில் அன்பில் மாரியம்மன் மற்ற அனைத்து அம்மனுக்கும் மூத்தவள் என்ற கருத்தும் உண்டு. அன்பில் மாரியம்மனுக்கு ஏழு குழந்தைகள் உள்ளன. மற்ற திருக்கோவில்களில் அம்மனுக்கு குழந்தை கிடையாது. நண்பகல் 12.00 மணியளவில் கண் குறைபாடு உள்ளவர்களுக்கு பூசாரியால் பச்சிலை மூலிகைகளால் ஆன சாறு கண்களில் பிழிந்து விடப்படுகிறது. இதனால் ஏராளமான பக்தர்கள் கண் நோயில் இருந்து குணமடைவதாக நம்பப்படுகிறது.
சமயபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாக்களைத் தொடர்ந்து இக்கோவிலிலும் விழாக்கள் நடைபெறும். இதன்படி இக்கோவிலின் மாசிப்பெருந்திருவிழா பூச்சொரிதலுடன் தொடங்குகிறது. இதையொட்டி திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து பூக்கள் காணிக்கையாகக் கொண்டு வரப்பட்டு அன்பில் சுந்தரராசப்பெருமாள் கோவில் நிர்வாகம் சார்பில் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு அன்பில் மாரியம்மனுக்குக் காணிக்கையாகச் செலுத்தப்படுகிறது.
குழந்தை வேண்டி அம்மனை வழிபட்டால் பலன் கிடைக்கும். கண் சம்பந்தமான நோய்கள் தீர இந்த அம்மனை வழிபடலாம். அம்மை இருக்கும் காலத்தில் இந்த கோவிலில் வந்து தங்கி பூசை செய்தால் பூரண குணமாகும். வைகாசி 5ஆம் நாள் பஞ்சப்பிரகார உற்சவம், 6 ஆம் நாள் விடையாற்றி நடைபெறும். ஆனியில் மகாசண்டி யாகம் நடைபெறும். பங்குனியில் முதல் ஞாயிறு பூச்சொரிதல் நடைபெறும் பின்னர் 15 நாள் அம்மன் விரதம், இந்நாட்களில் அம்மனுக்கு நெய்வேத்தியமாகத் துள்ளுமாவு, இளநீர், பானகம் ஆகியவை மட்டுமே படைக்கப்படும். பங்குனியில் இரண்டாம்ஞாயிறு அக்னிசட்டி ஏந்தி பக்தர்கள் கோவிலை வலம் வருவர். பங்குனியில் மூன்றாவது ஞாயிறு குடியேறுதல் பின்னர் அடுத்தப் பத்து நாட்கள் திருவிழா, கண்ணாடிபல்லக்கு திருத்தேர் நடைபெறும்.
3.புன்னை நல்லூர் முத்துமாரியம்மன்
தஞ்சைக்குக் கிழக்கே உள்ள இத்தலத்தில் அம்மன் புற்று வடிவில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மூலவர் புற்று மண்ணால் ஆனதால் மூலர்வரான அம்பாளுக்கு திருமுழுக்கு செய்யப்படுவதில்லை தைலக்காப்பு சாற்றப்படுகிறது. அம்பாளுக்கு 5 வருடத்திற்கு ஒரு முறை ஒரு மண்டலம் தைலக்காப்பு திருமுழுக்கு நடைபெறும். அம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் பிராத்தனைக்காக இங்குத் தங்கியிருந்து குணமடைந்து செல்கின்றனர்.
தஞ்சை ஆண்ட சோழ பேரரசர்கள் தஞ்சையை சுற்றிலும் எட்டுத் திக்குகளிலும் எண்வகைச் சக்திகளைக் காவல் தெய்வமாக அமைத்தார்கள். அவ்வாறு தஞ்சைக்குக் கீழ்ப்புறத்தில் அமையப் பெற்ற சக்தியே புன்னைநல்லூர் மாரியம்மன் என்று “சோழசம்பு” என்னும் நூல் கூறுகிறது. இக்கோவில் உருவானதற்குப் பல காரண கதைகள் சொல்லப்படுகின்றன அவற்றில் சில! தஞ்சையை ஆண்ட வெங்கோஜி மகாராஜா 1680இல் திருத்தல யாத்திரை செய்து கண்ணபுரம் என்னும் சமயபுரத்தில் தங்கி வழிபாடு செய்தார். அன்றிரவு அம்பிகை அரசனின் கனவில் தோன்றி, தஞ்சைக்குக் கிழக்கே 5கி.மீ. தொலைவில் உள்ள புன்னைக்காட்டில் புற்று உருவாய் உள்ள தன்னை வந்து சேவிக்கும்படி கூறவே அவ்வரசன் தலைநகராகிய தஞ்சைக்கு வந்து புன்னைக்காட்டிற்கு வழியமைத்து அம்பிகை இருப்பிடத்தைக் கண்டு சிறிய ஊர் அமைத்துப் புன்னைநல்லூர் என்று பெயரிட்டு அக்கிராமத்தை ஆலயத்திற்கு வழங்கினான்.
துளசேந்திரராசாவின் புதல்விக்குக் கண்பார்வை வந்த கதை:- மராட்டிய மன்னன் துளசேந்திரராசாவின் புதல்விக்குக் கண்பார்வை அம்மை நோயினால் போய்விட்டதாகவும் அவன் அன்னையை மனமுருக வேண்டி அவள் சந்நிதியில் மன்றாடியபோது, அந்தப் பெண்ணுக்குக் கண்பார்வை வந்துவிட்டதாகவும் ஒரு வரலாறு உண்டு. மன்னன் துளஜேந்திர ராஜா அன்னைக்கு அழகிய கோயிலை எழுப்பினான். புன்னை வனத்தில் மறைந்திருந்ததால் அவள் புன்னைநல்லூராள் என்றே அழைக்கப்பட்டாள். தஞ்சையில் மராட்டிய மன்னர்கள் காலத்தில் ஒரு ஆங்கிலேய அதிகாரிக்கும் இந்த அம்மன் தனது சக்தியைக் காட்டியதாகவும் அதுமுதல் அந்த ஆங்கிலேயனும் அன்னையின் அடிபணிந்து பக்தனாக இருந்ததாகவும் தெரிகிறது. மராட்டிய மன்னர்களே இக்கோவிலைப் பெரிய கோவிலாகக் கட்டி இருப்பதாக வரலாறு கூறுகிறது. இந்த வரலாறுகளைப் பார்க்கும் போது அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் என்பது புரிந்திருக்கும். சரபோஜி மன்னர் தஞ்சையை ஆண்ட காலத்தில், மகா மண்டபம், நர்த்தன மண்டபம், கோபுரம் மற்றும் இரண்டாவது பெரிய சுற்றுச்சுவர் கட்டி பெரும் திருப்பணி செய்யப்பட்டது. மேலும் சிவாஜி இக்கோயிலுக்கு 3வது திருச்சுற்றும், ராணி காமாட்சியம்பா பாயி சாகேப் உணவுக் கூடம் மற்றும் வெளிமண்டபமும் கட்டி கொடுத்துள்ளனர்
4.நார்த்தமலை முத்துமாரியம்மன்
அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நார்த்தமலை என்கிற ஊரில் அமைந்துள்ளது. நார்த்தமலை கோயில் மேலமலை, கோட்டை மலை, கடம்பர் மலை, பறையர் மலை, உவக்கர் மலை, ஆளுருட்டி மலை, பொம்மாடி மலை, மண் மலை, பொன் மலை என 9 மலைகள் சூழ அமைந்துள்ளது. இந்த நார்த்தமலை முத்துமாரியம்மன் சந்நிதியில் வடக்கு புறம் அமைக்கப்பட்டிருக்கும் முருகன் யந்திரம் மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பங்குனி மாதத்தில் இக்கோயிலில் நடக்கும் பங்குனி திருவிழாவில் பல இலட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபடுகின்றனர். நீண்ட காலமாகப் பல உடலில் பல வியாதிகள் ஏற்பட்டு அவதிபடுபவர்கள் இக்கோயிலில் “அக்னி” காவடி எடுத்து வழிபட நோய்கள் தீருவதாகப் பக்தர்கள் கூறுகின்றனர். மேலும் திருமணம் ஆகி ஆண்டுகள் கழிந்தும் குழந்தை பேறில்லாதவர்கள் இக்கோயிளுக்கு வந்து கரும்பு கொண்டு தொட்டில் செய்து வைத்து அம்பாளை வழிபடுவதால் நிச்சயம் குழந்தைப் பாக்கியம் கிடைப்பதாகக் கூறுகின்றனர்.
தல புராணங்களின்படி இலங்கையில் இராவணனுடனான யுத்தத்தின் போது ராம - லட்சுமணர் மற்றும் காயம்பட்ட வானர வீரர்களைக் குணமாக்கும் பொருட்டு, இமயத்திலிருந்து ஆகாய மார்க்கமாக சஞ்சீவி மலையை ஆஞ்சநேயர் தூக்கி வந்து கொண்டிருந்த போது, அதிலிருந்து கீழே விழுந்த பாறைகளே இங்கிருக்கும் மலைகள் எனக் கருதப்படுகிறது. சஞ்சீவி மலை போலவே இங்கிருக்கும் மலை குன்றுகளில் மருத்துவ மூலிகைகள் பல நிறைந்துள்ளன. இந்த கோயிலின் மூலவரான முத்துமாரியம்மன் பல வருடங்களுக்கு முன்பு ஒரு வயல்வெளியில் கண்டெடுக்கப்பட்டு, ஒரு கோயில் அர்ச்சகரால் இங்கு புனிதப்படுத்தி வழிபட்டு வந்த காலத்தில், திருவண்ணாமலை சமீன்தார் வம்சத்தில் வந்த மலையம்மாள் என்பவர் அம்பாளின் அருளினாலும் தனது சொந்த முயற்சியாலும் தற்போதுள்ள கோயிலைக் கட்டியதாகக் கூறப்படுகிறது. இங்கு மாவிளக்குப் போடுதல் மற்றும் பறவைக் காவடி எடுத்தும் பக்தர்கள் வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அம்பாளுக்கு புடவை சாற்றி, கோயிலில் அன்னதானம் செய்து தங்களின் நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.
5.தென்னலூர் முத்துமாரியம்மன்
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமே "திருநல்லூர்" என அழைக்கப்படும் "தென்னலூர்" ஆகும். இந்த கிராமத்தின் அதிதேவதை "அருள்மிகு முத்துமாரியம்மன்" ஆகும். இந்த அம்மன் தானாகஉதித்த சுயம்புவடிவான காவல்தெய்வம் ஆகும். மிக எளிமையாக கூரையிலே குடிகொண்ட குலதெய்வம் இந்த "முத்துமாரியம்மன்" ஆகும். தென்னலூர் முத்துமாரியம்மன் தலவரலாறு கர்ணபரம்பரை கதைகளாக(செவிவழிக் கதைகள்) அறியப்படுகின்றது. இதற்கென கல்வெட்டு குறிப்புகளோ, ஓலைசுவடிக் குறிப்புகளோ, பட்டயங்களோ இல்லை எனலாம்.
கி.பி 10ஆம் நூற்றாண்டில் பிரசித்தி பெற்ற சிவன் திருத்தலம் ஒன்று இருந்ததாகவும் கல்தேர் ஒன்று திருவிழாக் காலங்களில் வயல்வழிகளில் ஊரைச்சுற்றி வந்ததாகவும் அறியபடுகிறது.சிவன் ஆலயம் நாளடைவில் பொலிவிழந்து, வழிபாடு இன்றி அழிந்துவிட்டதாகக் கூறபடுகிறது. அதிகபடியாக மக்கள் நடமாட்டம் இல்லாமல் காட்டுப்பகுதி ஆகிவிட்டது. (சிவன் கோவில் இருந்ததற்கு சாட்சியாய் கி.பி 10ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சோழ அரசனான முதலாம் குலோத்துங்கன் காலத்தைச் சார்ந்த 4 கல்வெட்டுகள், சிவன் பார்வதி, தட்சிணாமூர்த்தி, பைரவர், சண்டிகேசர், ஆவுடையார் போன்ற தெய்வக்கற்சிலைகள் அண்மையில் களஆய்வில் கண்டறியப்பட்டு கல்வெட்டுகள் தொல்லியல் துறை மாணவர்களால் (22-03-2017)இல் படியெடுக்கப்பட்டுள்ளது)
சிலஆண்டுகள் கழித்து சிவன் ஆலயம் இருந்த இடத்திற்கு அருகில் உலகநன்மைக்காக ஸ்ரீ முத்துமாரியம்மன் சுயம்பாக உதித்த அற்புதம் நிகழ்ந்தது. ஒரு ஆடிவெள்ளி நன்னாளில் சுயம்பு பாணமாக அன்னை உதித்தாள். மக்கள் நடமாட்டம் இல்லாததால் அம்மனின் பிறப்பு வெகுகாலம் அறியபடாமல் இருந்தது. ஒரு நாள் அம்மன் தன்னை வெளிபடுத்தும் காலம் வந்தது. பால் கறந்து விற்பனைக்காகக் கொண்டுசெல்லும்போது அம்மன் பாணம் இடறி அந்த பால் அங்கேயே கொட்டிவிட்டது. தற்செயலாக நடந்த இந்தநிகழ்வு தினமும் நடைபெற்றதால் இடைஞ்சலாக இருந்த கல்லை( அம்மன் பாணத்தை) அகற்றுவதற்காகக் கடப்பாரைக் கொண்டு குத்திய உடனே பாணத்தில் இருந்து இரத்தம் பீறிட்டது, அம்மன் தன்னிருப்பை உணர்த்திவிட்டாள். அம்மன் உருவானது சங்கம்புதர் இடையே ஆகும். சுயம்புருவில் தன்னை வெளிபடுதியதால் எவ்விதம் வணகுவது என அங்கிருந்த மக்களுக்கு தெரியவில்லை.
எனவே முதலில் தீபாராதனை காட்டி வணங்கி இருக்கிறார்கள். பின்பு சிறிய ஓலைகுடிசை அமைத்து இரண்டுகால பூசைகள் நடைபெற்றதாக அறியப்படுகிறது. இந்து, கிறித்து, முசுலீம் மதத்தைச் சார்ந்தவர்கள் ஒற்றுமையுடன் திருவிழா கொண்டாடுகின்றனர். சமத்துவம், சகோதரத்துவம் இந்த விழாக்கள் மூலம் பேணப்படுகின்றது. தென்னலூர் கிராமத்துக்கு உட்பட்ட கிராம மக்கள் தங்களின் முதல் விளைச்சலை அம்மனுக்குக் காணிக்கைச் செலுத்திவிட்டே தங்களுக்கு மீத அறுவடையைச் செய்கின்றனர். தங்களது வீட்டில் எந்தச் சுபகாரியங்கள் செய்வதாக இருந்தாலும் இங்குவந்து அம்மனின் உத்தரவை கேட்டபின்பே செய்வது வழக்கம்.
6.கொன்னையூர் முத்துமாரியம்மன்
தற்போதைய புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதிக்கு அருகில் உள்ள கிராமம் கொன்னையூர். இவ்வூர் புதுக்கோட்டை யில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவிலும் பொன்னமராவதியில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவிலும் உள்ளது இவ்வூர். ஊரின் மையப்பகுதியில் கோயில்கொண்டு, நாலாத் திசையிலும் உள்ள மக்களையும், காடு கரைகளையும் கால்நடைகளையும் காத்து வருகிறாள் முத்து மாரியம்மன்.
இந்தப் பகுதி பழங்காலத்தில் கொன்றை மரங்களும் கற்றாழைச் செடிகளும் சூழ்ந்த வனமாகத் திகழ்ந்ததாம். யாதவ இனத்தைச் சேர்ந்த பெரியவர் ஒருவர் அதிகாலையில் எழுந்து, பால் கறந்து, தலையில் தூக்கிச் சென்று ஊருக்குள் விற்று வருவது வழக்கம். அந்தக் கால கட்டத்தில் ஊர்மக்களைத் திடீர் திடீரென விசித்திர நோய்கள் தாக்கின. சிலர் தோல் நோயால் அவதிப்பட்டனர்; சிலர் வாந்திபேதியால் சுருண்டனர். இதனால், நிலத்தில் வேலை செய்ய ஆளே இல்லாமல் போனது. விதைத்தவையெல்லாம், நீர்ப் பாய்ச்ச ஆளின்றி, வாடின; கருகின. மழையும் தப்பிவிட குடிப்பதற்குக்கூட தண்ணீர் பஞ்சம் எனும் அளவுக்கு அடுத்தடுத்து பிரச்னைகள். போதாக்குறைக்கு நோயால் தாக்குண்டு, வாழவே வழியில்லை என்னும் நிலையில் திருமணம் செய்வதும் பிள்ளை பெற்றுக்கொள்வதும் மெள்ள மெள்ளக் குறைந்தது. 'இப்படியே போனா, நம்ம பூமியும் வம்சமும் அழிஞ்சிடுமே’ எனக் கலங்கினார்கள். அவர்களின் ஓலக்குரல் உலகாளும் நாயகியை உசுப்பியது. அவர்களின் நோய்கள் யாவும் குணமாகவேண்டும்; மனமெல்லாம் குளிர்ந்து பூரிக்க வேண்டும்;
பூமி செழித்து அனைவருக்கும் வயிறார உணவுக் கிடைக்கவேண்டும் என யோசித்தவள் பூமிக்குள் புகுந்துகொண்டாள். பாலை எடுத்துக்கொண்டு வழக்கம்போல் அந்தப் பெரியவர் வரும்போது, கொன்றை மரத்தின் வேர்களில் அவரது கால்கள் பட, தடுமாறினார். பால் மொத்தமும் கொட்டியது. மண்ணெல்லாம் பாலாயிற்று. எத்தனை கவனமாக நடந்துபோனாலும் இப்படித் தடுமாறுவதும் பால் கீழே மண்ணில் கொட்டி வீணாவதும் தினமும் தொடர்ந்தது. பெரியவர் கவலை யானார். ஒருநாள், கோடரியால் அந்தக் கொன்றை மரத்தின் வேரை வெட்டினார். அங்கிருந்து குபுக்கென்று ரத்தமும் பாலுமாக வெளிப்பட அதிர்ந்துபோனார் பெரியவர். செய்தி தெரிந்து, ஊரே கூடியது. இன்னும் இன்னும் தோண்டிப் பார்க்க... அழகிய விக்கிரகத் திருமேனியில் வெளிப்பட்டாள், தேவி! பள்ளத்தில் இருந்து வெளியே எடுத்து, மேடான பகுதியில் வைத்ததுதான் தாமதம். கன மழை உடலையே துளைத்தெடுப்பது போல் பெய்தது. கிணறுகளும் குளங்களும் ஊரணிகளும் நிரம்பின. பிறகு வரப்பு வழியே, வாய்க்கால் வழியே வயல்களுக்குச் சென்று விதைகளைக் குளிரச் செய்தன. தேகத்தைத் துளைத்த மழையால் மக்களின் தோல் நோய்கள் யாவும் நீங்கின.
இங்கு ஊர்மக்கள் ஓலைக்குடிசை அமைத்து, அங்கே அம்மனை வைத்து வழிபடத் தொடங்கினர். ஆரம்பத்தில் ஊரில் இருந்து காட்டுக்கு நடந்து வந்து, அம்மனை வணங்கியவர்கள் பிறகுக் காட்டையே ஊராக்கிக் குடிபுகுந்தனர். கொன்றை மரங்கள் அடர்ந்த வனம், கொன்றையூர் என்றானது; பின்னாளில் அது, கொன்னையூர் என மருவியது. அதேபோல், ஓலைக்குடிசையாக இருந்த ஆலயமும் மிகப் பிரமாண்டமான கோயிலாகத் திருப்பணி செய்யப்பட்டது. அன்று தொடங்கி இன்றளவும் கொன்றையூர் மாரியம்மன்தான், இந்தப் பகுதி மக்களுக்கு விருப்பத் தெய்வம், கண்கண்ட தெய்வம், குலதெய்வம் எல்லாமே! மனதில் என்ன குறை இருந்தாலும், வீட்டில் என்ன பிரச்சினை ஏற்பட்டாலும் ஊருக்குள் எந்த அநீதி நடந்தாலும் விறுவிறுவென இங்கு வந்து, அம்மனின் சந்நிதியில் தங்கள் கண்ணீரைக் காணிக்கையாக்கி மனமுருக வேண்டிச் செல்கின்றனர். நினைத்தது நிறைவேறியதும் கண்மலர், உருவபொம்மை, உப்பு, மிளகு, அமோகமாக விளைந்த நெல் என நேர்த்திக் கடனைச் செலுத்தி வணங்குகின்றனர். இன்னும் சிலர், சந்தனம் மற்றும் பாலபிஷேகம் செய்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் படைத்து தரிசிக்கின்றனர். நோயால் வாடும் குழந்தைகள் குணம் பெறுவதற்காக வேண்டிக் கொள்பவர்கள், இங்கு வந்து முடிக்காணிக்கை செலுத்தி மாவிளக்கேற்றுகின்றனர். கோயிலின் சனி மூலையில் உள்ளது நெல்லிமரம். இந்த மரத்தில் தொட்டில் கட்டினால் பிள்ளைப் பாக்கியம் கிடைக்கும், மஞ்சள் கயிறு அணிவித்தால் திருமண வரம் பெறலாம். தொட்டிலும் வளையலும் கட்டிப் பிரார்த்தித்தால் சுகப்பிரசவம் நிகழும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
அம்மனின் ஆலயத்தில் பூச்சொரிதல் விழாப் பங்குனி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை, கோலாகலமாக நடைபெறுகிறது. மறுநாள், அக்னிக் காவடி வழிபாடு. 2ஆவது ஞாயிற்றுக்கிழமையில் காப்புக் கட்டி, மறுநாளில் இருந்து நடைபெறுகிறது 15 நாள் மண்டகப்படி. இந்த 15 நாட்களும் தினமும் பால் திருமுழுக்கு, மாவிளக்கேற்றுதல், பொன்னமராவதி, செவனூர், ஆல வயல் மற்றும் செம்பூதி என நான்கு நாட்டைச் சேர்ந்தவர்களும் திரளாக வந்து அம்மனைத் தரிசித்தல், வெள்ளி ரதத்தில் அம்மன் வீதியுலா எனக் கொன்னையூர் முழுவதும் விழா மகிழ்ச்சியைக் காணலாம்.
7.வீரசிங்கம்பேட்டை முத்துமாரியம்மன் மற்றும் வைத்திகோயில் மாரியம்மன்
சமயபுர மாரியம்மனின் ஆறு சகோதரிகரிகளில் (மொத்தம் ஏழுபேர்) இருதல மாரியம்மன்கள் அந்தந்த பகுதி மக்கள் வழக்கில் கடைக்குட்டியாகப் பேசப்படுகின்றன. அவ்விருதல முத்துமாரியைப் பற்றியும் கீழே காண்போம்.
வீரசிங்கம்பேட்டை முத்துமாரியம்மன்
திருவையாற்றிற்கு அருகில் குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் அமைந்திருக்கும் கிராமம் வீரசிங்கம்பேட்டை. வீர சோழன் என்னும் மன்னனால் ஆளப்பட்ட வீரணன்சோலை என்ற இடமே நாளடைவில் வீரசிங்கம்பேட்டை ஆகியுள்ளது. சுற்றிலும் திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருப்பழனம் ஆகிய பாடல் பெற்ற தலங்கள் உள்ளன. பொதுவாக மாரியம்மனின் அக்காள், தங்கை, ஏழு பேர் என்பர். அவர்களில் கடைசி தங்கை வீரசிங்கம்பேட்டையில் வீற்றிருப்பவள் இந்த இள மாரியம்மன் என்பது தல வரலாறு.
இத்திருக்கோயில் அன்பில், புன்னைநல்லூர் போன்ற மாரியம்மன் திருக்கோயில்களுக்கு காலத்தால் முந்தியது என்பதும் வழி வழி வரும் வரலாறு. இங்கு பல்லவர் காலம் தொட்டு அரண்மனையும், ஆயிரத்தளி எனும் கோவிலும் திகழ்ந்ததை வரலாற்று அறிஞர் குடவாயில் பாலசுப்பிரமணியம் தனது நந்திபுரம் என்னும் நூலில் தெரிவித்துள்ளார். கி.பி.750இல் பல்லவர் காலம் தொடங்கி கி.பி.1218இல் வரை ஆட்சி செய்த மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலம் வரை கிட்டத்தட்ட 450 ஆண்டுக்கு மேலாகப் பல்லவர், சோழர் மற்றும் பாண்டியர் வரலாற்றில் மிகச் சிறந்த பெருநகராக விளங்கியது நந்திபுரம் என்றழைக்கப்பட்ட இன்றைய வீரசிங்கம் பேட்டை. இவ்வூரில் ஆயிரம் லிங்கங்களுடன் கூடிய பெருங்கோவில் மன்னர்களின் அரண்மனையும் இருந்தது. பிற்காலத்தில் மாலிக்காபூர் படையெடுப்பால் (கி.பி.1311) தாக்குதலுக்கு ஆளாகி அழிந்து போயிற்று.
இரண்டாம் நந்திவர்மன் காலத்தில்(கி.பி.731-795) பின் பற்றப்பட்ட சிவமரபுகளில் ஒன்று லகுலீசபாசுபதம் என்பதும் ஒன்றாகும். தமிழகத்தில் இச்சித்தாந்தத்தைப் பின்பற்றிய பகுதி இப்பகுதியாகும். இச்சித்தாந்தத்தின் சிறந்த வழிபாடாக வணங்கப்பட்ட கடவுள் வாகீச சிவன் என்ற வடிவமாகும். கி.பி.8, 9ஆம் நூற்றாண்டுகளின் வரலாற்றுப் பெருமையைப் பறைசாற்றும் வாகீசர் சிற்பம் வீரசிங்கம் பேட்டையின் இளமாரியம்மன் கோவில் தெருவில் உள்ள பள்ளர்குளத்திற்கு அருகேயுள்ள தென்னந்தோப்பில் தென்னங்கன்றுகளைப் பதியமிடுவதற்காகக் குழிதோண்டிய போது கண்டு எடுக்கப்பட்டது. இச்சிற்பம் நான்கு முகங்கள், நாற்கரங்களுடன் தாமரை பீடத்தின்மீது ஒரு காலை மடித்து அமர்ந்த நிலையில் அணிகலன்கள் திகழ அழகே வடிவாக ஐந்தடி உயரத்தில்பல்லவ சிற்பிகளின் உயிரோட்டமான சிற்ப நுட்பத்தை பறைசாற்றும் விதத்தில் காணப்படுகிறது.
மண்ணில் புதைந்து கிடந்த வாகீசரை அப்பகுதி மக்கள் மண்ணில் இருந்துமீட்டு அமர்த்தியுள்ளனர். இதே போன்ற பல்லவர் காலத்து வாகீசர் வடிவங்கள் தஞ்சை அரண்மனை கலைக்கூடத்திலும் மாவட்ட பழைய ஆட்சியர் அலுவலகம் முன்னரும் நிறுவப்பட்டுள்ளன. வாகீச சிற்பங்கள் இப்பகுதியைத் தவிர தமிழகத்தின் வேறெந்த பகுதியிலும் காண முடியாது. தமிழகத்தில் லகுலீச பாசுபதத்தின் மையமாகத் திகழ்ந்த இவ்வூரில் இன்னும் எத்தனை வாகீசரும் வாகீஸ்வரியும் பூமிக்குள் புதைந்திருப்பார்கள் என்பது தெரியவில்லை. வரலாற்றில் நந்திபுரம் என்றழைக்கப்பட்ட இவ்வூர் பின்னர் வீரசிங்கம்பேட்டை என்று பெயர்மாற்றம் பெற்றதைத் திருப்பூந்துருத்தி கல்வெட்டால் அறிய முடிகிறது. பங்குனி மாதத்திலும், ஆவணி மாதத்திலும் இக்கோயிலில் விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.
குறிப்பாக "அம்மை நோய்' என்பது கோடைக் கால வெப்பத்தால் ஏற்படும் நோய் என்றாலும் எளிய மக்கள் இதை மாரியம்மனின் திருவிளையாடல் என்றே கருதுகிறார்கள். இப்பகுதியில் இந்நோய் கண்டவர்கள், மருத்துவரிடம் செல்வதில்லை. இந்தக் கோயிலுக்கு வந்து ஒரு சில நாட்கள் தங்கி அம்மன் பிரசாதத்தை உண்டு, நோய் நீங்கி திரும்பச் செல்வது இன்றும் வழக்கமாக உள்ளது.
வைத்திகோயில் மாரியம்மன்
புதுக்கோட்டையில் இருந்து அண்டகுளம் எனும் ஊருக்குச் செல்லும் வழியில் சுமார் 17 கி.மீ. தொலைவில், வைத்திகோவில் என்ற இடத்தில் அழகுறக் கோயில் கொண்டிருக்கிறாள் அருள்மிகு முத்துமாரியம்மன். மக்களின் வழக்கில் 'கொன்னையூர் அம்மன், விராடபுரம் அம்மன், கண்ணப்புரம் அம்மன், சமயபுரம் மாரியம்மன், நார்த்தாமலை அம்மன், தென்னக்குடி அம்மன், முத்துமாரி அம்மன் ஆகிய ஏழு பேரும் சகோதரிகள் என்கிறார்கள். இவர்களில் கடைக்குட்டி வைத்திகோவில் முத்துமாரியம்மன்.
வைத்திகோவிலுக்கு அருகில் உள்ள ஆச்சூரணி எனும் இடத்தில் சகோதரிகள் ஏழு பேரும் தங்கியிருந்தனர். ஒருநாள், மற்ற சகோதரிகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து சமைத்துக்கொண்டிருக்க வைத்திகோவில் முத்துமாரி மட்டும் வேலை எதுவும் செய்யாமல் சும்மா இருந்தாளாம். சகோதரிகளில் ஒருத்தி இவளிடம், ''நீ மட்டும் ஏன் எதுவும் செய்யாமல் சும்மா இருக்கே?'' என்று கேட்க, முத்துமாரிக்குக் கோபம் வந்துவிட்டது. அவர்கள் சமைப்பதற்கு முன்னதாகவே தன் பங்கிற்கு உரிய அரிசி, வெல்லம் ஆகியவற்றை வாங்கிக்கொண்டு இங்கே தனியாகக் கோயில்கொண்டதாக உள்ளூர் பக்தர்கள் சிறுகதை ஒன்றைச் சொல்கிறார்கள். பின்னர் மற்ற சகோதரிகளும் வெவ்வேறு இடங்களுக்குச் சென்று கோயில் கொண்டதாகவும் விவரிக்கிறார்கள்.
வைத்திகோவில் முத்துமாரியம்மன் காளிதேவி சொரூபத்துடன், பஞ்சபூதங்களின்மீது அமர்ந்திருப்பது சிறப்பு அம்சம் என்கிறார்கள். மேலும், இந்த அம்மன் கன்னிப் பருவத்துடன் திகழ்வதாக ஐதீகம். குழந்தைப்பேறு இல்லாதவர்கள் முத்துமாரியின் சந்நிதிக்கு வந்து அர்ச்சனை செய்து, கரும்புத் தொட்டில் எடுப்பதாக வேண்டிக்கொண்டால், விரைவில் குழந்தை வரம் கிடைக்குமாம். திருமணத்தடை உள்ளவர்கள் அம்மனுக்குக் காப்பரிசி, பால், பட்டுப்பாவாடை மற்றும் தங்கத்திலோ வெள்ளியிலோ 'பொட்டு’ செய்து சமர்ப்பித்து வழிபட்டால் விரைவில் கல்யாணம் கைகூடும் என்பது நம்பிக்கை. இந்தக் கோயிலின் பங்குனித் திருவிழாவும், பூச்சொரிதல் வைபவமும் வெகு பிரசித்தம்! விழாவின் 13 நாட்களும் அரிசியும் வெல்லமும் சேர்ந்த காப்பரிசிதான் அம்மனுக்கு நைவேத்தியம். மேலும் விழாவையட்டி, பழைமை மாறாமல் மண்சட்டியில் பக்தர்கள் மாவிளக்கு ஏற்றுவது இந்தக் கோயிலின் சிறப்பம்சம்.
ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளும் மஞ்சள்- குங்குமம் கொண்டு அம்மனுக்கு திருமுழுக்குச் செய்ய, மாங்கல்ய பலம் பெருகும் என்று சிலிர்ப்புடன் விவரிக்கிறார்கள் பக்தர்கள். மேலும், ஆடி மாதம் 2ஆவது வெள்ளி மற்றும் கடைசி வெள்ளிக் கிழமைகளில் இந்தக் கோயிலில் நடைபெறும் திருவிளக்குப் பூசை மற்றும் சிறப்பு திருமுழுக்கு ஆராதனைகளில் கலந்துகொண்டு அம்மனைத் தரிசிக்க, அவளருளால் சகல நன்மைகளும் கைகூடும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
பிற முக்கிய மாரியம்மன் கோயில்கள்
தமிழகத்தில் பிற முக்கிய மாரியம்மன் கோயில்களாகப் பண்ணாரி மாரியம்மன் கோயில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில், வண்டியூர் மாரியம்மன் திருக்கோயில், திருமங்கலம் பத்திரகாளி மாரியம்மன் கோவில், நத்தம் மாரியம்மன் திருக்கோயில், வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில், சேலம் கோட்டை மாரியம்மன் கோயில், கணவாய் மாரியம்மன் திருக்கோயில், வேதாளை-வலையர்வாடி சக்தி மாரியம்மன் கோவில், ஓட்டங்காடு மாரியம்மன் திருக்கோயில் போன்றவை சிறப்பு வாய்ந்தவை. அயல்நாட்டில் மாத்தளை முத்துமாரியம்மன் கோயில்(இலங்கை), சிங்கப்பூர் மகா மாரியம்மன் கோயில் (சிங்கப்பூர்), பாங்காக் மாரியம்மன் கோயில் (தாய்லாந்து), பிரிட்டோரியா மாரியம்மன் கோயில் (தென்னாப்பிரிக்கா), ஹோ சி மின் நகர மாரியம்மன் கோயில் (வியட்நாம்), அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் ரோடன் டங்கல் ராப் பகாங்(மலேசியா), மகா மாரியம்மன் ஆலயம், மிட்லண்ட்ஸ், கோலாலம்பூர் (மலேசியா), அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில், குயின் ஸ்ட்ரீட், பினாங்கு (மலேசியா) ஆகியவை பேறுபெற்று விளங்குகின்றன.
முடிவுரை
மேற்குறிப்பிட்ட செய்திகளால் மாரியம்மன் வழிபாட்டில் தமிழ்மக்கள் ஒன்றியிருப்பதும் அருளாட்சியால் ஈர்க்கப்பட்டு பக்தி பரவசத்தில் இருப்பதும் அம்மன் மீது மக்கள் கொண்டுள்ள ஈடுபாடும் மாரியம்மனின் அருஞ்செயல்களும் வெளிப்பட்டு நிற்கின்றன. அந்தந்த பகுதி மாரியம்மன் பூச்சொரிதல் விழாவின் போதும் திருவிழாக்காலங்களில் இலட்சக்கணக்காண மக்கள் திரண்டு வழிபட்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தியும் காவடிதூக்கியும் அலகு குத்தியும் பெருமை செய்கின்றனர்.
மேற்குறிப்பிட்ட தமிழகக் கோயில்கள் அனைத்திலும் பூச்சொரிதல் விழாவன்று மழைபெய்து நாடு செழிக்கவும் மக்கள் இன்புற்று வாழவும் மாரியம்மன் வாசலில் வாடிவாசல் அமைத்து ஏறுதழுவலை நடத்துகின்றனர். அப்போது காணவரும் அயலூர் மக்களுக்கு வீடுதோறும் அன்னதானம் கொடுப்பர். தற்போது நீதிமன்ற நடவடிக்கைகளால் ஏறுதழுவல் பல ஊர்களில் தடைபட்டு நிற்கிறது. மாரியம்மனை பல பெயர்களிலும் வழிபடுகிறார்கள். வழிபாட்டு முறைகள் ஊருக்கு ஊர் வேறுபடுகிறது.
தமிழகத்தில் அம்மன், அம்பாள் என்று சொல்வதைக் கர்நாடகத்தில் சாமுண்டி, கேரளாவில் பகவதி, வங்காளத்தில் காளி, உத்தரபிரதேசத்தில் விந்தியாவாகினி, அசாமில் காமாக்யா, காஷ்மீரில் ஷீர்பவானி, மராட்டியத்தில் துலஜா பவானி, பஞ்சாப்பில் ஜவாலாமுகி, குஜராத்தில் அம்பாஜி என்று அழைக்கின்றனர்.
மாரியம்மன் திருவிழாவிற்குச் செல்லும் முன் ஞாயிறன்று அம்மனுக்கு வீட்டில் படையிலிட்டு வழிபடுவர். அப்போது வீட்டில் விளைந்த தானியங்கள், காதாலைக்கருகமணி, கொழுக்கட்டை, அரிசிமாவு போன்றவற்றைப் படைத்திடுவர். மாரியம்மன் படையலுக்கு வைத்த தானியங்களை அம்மன் திருவிழா அல்லது பஞ்சபிரகாரம் அன்று கோயிலில் வறியோருக்குப் போட்டுவிடுவர். உலகம் எங்கும் உள்ள அனைத்து உயிரினங்கள், மரம் செடி கொடிகள் என்று எல்லாவற்றுக்கும் தண்ணீரை வாரி வழங்குவது மழை. வேறுபாடுகள், பேதங்கள் ஏதுமின்றி மழை தனது தண்ணீரை அளிப்பதுபோல, மக்களின் மனங்களில் வேறுபாடுகள் இருந்தாலும் அவற்றை எல்லாம் கருதாது வரங்களை அள்ளித்தரும் தாயாக இருப்பவர் முத்துமாரியம்மன். அதனால் நாமும் எங்கெங்கும் பரவிக்கிடக்கும் முத்துமாரியம்மனை தொழுது வேண்டிய வளங்களைப் பெறுவோம்.
“மகமாயி சமயபுரத் தாயே உன் மகள் எனக்கு எல்லாமும் நீயே
கொள்ளிடத்தின் கரைமேலே உன் கோவில்”
“வேப்பமரம் நிழல் கொடுக்கும் வீடு
அது வினை தீர்க்க நீ அமைத்தக் கூடு
திருநீரே அம்மா உன் மருந்து
அதை அணிந்தாலே நோய் ஓடும் பறந்து”
துணைநூற்கள்
1, கோயில் தலபுராணங்கள்
2. மாரியம்மன் கோயில்கள் தலவரலாறு
3. தமிழ்வாணன், ம.,செந்தமிழ்க் காவிரியின் வளம், வெற்றிப்பதிப்பகம், சென்னை. 2015
4. ஜெயசெந்தில்நாதன்,பு.மா., திருமுறைத்தலங்கள்,வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 5ஆம் பதிப்பு, 2009
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
* கட்டுரையாளர் - - முனைவர் த. மகாலெட்சுமி, முனைவர் பட்ட மேலாய்வாளர்(யு.ஜி.சி.) , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை – 113 -