முன்னுரை
இந்த உலகத்தில் நிலைப்பெற்றுள்ள அனைத்து வளங்களையும் நுகரவும், உணரவும் தேவையான பிறிதொரு வளம் மனித வளமாகும். இம்மனித வளமானது மனிதனின் ஆக்கத்திறனை அல்லது தனித்திறனை அவனுடைய வாழ்க்கை மேம்பாட்டிற்கு மற்றம் சமுதாய மேம்பாட்டிற்குப் பயன்படுத்தும் நோக்கமாக அமைகின்றது. இதனை மனிதவள மேம்பாட்டுச் சிந்தனையாளர்கள் “ஒரு பொருளாதார முன்னேற்றம் என்பது அந்நாட்டு மக்களின் சக்தியைச் சார்ந்துள்ளது.”1 இவை கல்வி, அரசியல், தொழில் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வளர்ச்சியாக மதிக்கப்படுகிறது. எனவே ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது இயற்கை வளத்தை மட்டும் சார்ந்து அமையாது. மனிதவளத்தையும் சார்ந்தே அமைகின்றது. இதனை ஒளவையார்,
“நாடாக ஒன்றோ காடாக ஒன்றோ
அவலாக ஒன்றோ மிசையாக ஒன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே”2
என காட்டிச் செல்கிறார். இதன்வழி ஒரு நாட்டின் வளம் என்பது அந்நாட்டு மக்களின் மனவளம் சார்ந்த கருத்தியலாக அமைகின்றது. இவை ஒரு நாட்டின் அரசியல் செயல்பாடும் கல்வியியற் சிந்தனையும் சீராக அமையும்போது ‘மனநலம் மன்னுயிர்க் காக்கும்’ என்ற கருத்து வலிமைபெறும். இவ்விதக் கருத்து மனிதவள மேம்பாட்டில் ஊக்கம் அளிக்கும்விதமாக அமைந்துள்ள இடத்தினை, மனித வாழ்வின் அனுபவ உணர்வுகளின் வெளிப்பாடுகளை பிரதிபலிக்கும் இலக்கியத்தின் ஊடாகக் காண முற்படுவதாக இவ்வாய்வு அமைகிறது.
மனிதவள மேம்பாடு
ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு மனிதவள மேம்பாடு அவசியம் என்ற கருத்து தேவைப்படுகிறது. இது தனிமனிதனின் ஆற்றலை மையமாகக் கொண்டு இயங்குவதாகும். எனவே “தனிப் பட்ட மனிதனின் திறமை என்பது மக்கள் தொகையால் உருவாக்கப் பட்ட சமூக நடைமுறையைச் சார்ந்தே இருக்கிறது.”3 இவ்வகையில் மனிதன் அவன் வாழும் நாட்டின் இயற்கை வளங்களையும் கனிம வளங்களையும் தன்வயப்படுத்தி தன் கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்து பயன்படுத்துவதற்கான ஆக்கத்திறனை வளர்த்துக்கொள்வதாகிய செயல்பாட்டு நிலையே மனிதவள மேம்பாடாக அமைகின்றது. இவ்வகை ஆற்றல் அமைவதற்கான புறநிலைத் தன்மையை அவன் வாழும் சமூகத்திலிருந்தே பெறவேண்டியுள்ளது. இதனிலிருந்து ஏற்படுத்திக் கொள்ளும் வாழ்க்கையை“மனிதன் தனியாக அல்லது குழுவாக இயைந்து செயல்பட்டு தனது படைப்புத் திறனால் தானும் முன்னேறி தன்னைச் சேர்ந்தவர்களும் முன்னேறி உதவுதலாகிய செயல்பாடாக”4 அமைத்துக்கொள்கிறான். இவ்விதச் செயல்பாடு ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உந்துசக்தியாக அமைகின்றது. பொதுவாக மனித இனத்தின் நல்வாழ்வுக்கும் முன்னேற்றத்திற்கும் பல ஆக்க காரணிகள் காணப்படுகின்றன. இவற்றில் புறநானுற்றில் காணப்படும் ‘கல்வி’ குறித்த கருத்து நிலைகளும், மன்னுக்குப் புகட்டும் அறிவுரைகளும் மனிதவள மேம்பாடு குறித்த கருத்தியல் கூறாக அமைந்துள்ள விதத்தினை அறியப்படுவதாக இது அமைகிறது.
புறநானூற்றில் கல்வி குறித்த மதிப்பு
கல்வி என்ற சொல் பழமையானது. இன்றளவும் நிலைபெற்றிருக்கும் ஒன்று. தமிழ் இலக்கியங்கள் எவ்வளவு தொன்மையானவையோ, அவ்வளவு கல்வியும் தொன்மையானது. ஒரு நாட்டின் கலை பண்பாடு,நாகரிகம், அரசியல், அறிவியல், பொருளியல் முதலியவற்றை வளர்ச்சியடைச் செய்யும் கருவியாகக் கல்வி அமைகின்றது. இக்கல்வி தனிமனிதனிடம் அமையும்போது ‘மயக்கத்தைத் தரும் அறிவில், குற்றமில்லாத அறிவு தோன்றுவதற்கு’ வழியினை ஏற்படுத்தித் தருகிறது. இக்கல்வியினை அறியாதவன் ‘சொல்லின் பொருள் அறியா மூடர்’ என்ற புறந்தள்ளப்படுகிறார். ஆகையால் கல்வியானது மனிதனை நல்வழிப்படுத்துவது மட்டுமின்றி ‘ஏழு பிறப்புக்கும்’ பயனைத் தரும் என்ற தத்துவம் மரபு சார்ந்த கருத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது. இதனை தொல்காப்பியர்,
“வேண்டிய கல்வி யாண்டு மூன்றிறவாது”5
ஏன்ற நூற்பாவின்மூலம் வேண்டிய கல்வியென்பது மனித வாழ்க்கைக்கு மிகவும் தேவைப்படுகின்ற கல்வியாகும் என்ற கருத்தினைப் புலப்படுத்துகிறார். பண்டைக் காலத்தில் மக்கள் கல்வி கற்பதற்காகவே அயல்நாடுகளுக்குச் சென்றும் பணிந்தும் பொருள் கொடுத்தும் கல்வி கற்றனர் என்பதனை இலக்கியங்களின் வாயிலாக அறிய முடிகிறது. இதனை புறநானூற்றுப் பாண்டியன் நெடுஞ்செழியன்,
“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே”6
என்ற வரிகளின் வாயிலாகக் கல்வியைப் பொருள் கொடுத்தும் பணிந்தும் கற்பது மட்டுமின்றி, துன்பம் ஏதும் நேரினும் அதனைப் பொறுந்துக்கொண்டும் கற்பதே நன்மையாகும் என்று புலப்படுத்தியுள்ளார். மேலும், இவ்விதக் கல்வியானது அரச மரபை மாற்றும் தன்மையுடையது என்பதனை புறநானூற்று, பாடல் வரிகள் சுட்டுகின்றன.
ஒரு காலகட்டத்தில் அரசப் பதவியென்பது மூத்தவனுக்கு முதல் கொடுப்பது மரபுவழியான வழக்கமாகும். இம்மரபானது காலம் காலமாக கடைப்பிக்கப் பட்டசெயல்பாடாகும்.இவ்விதச் செயல்பாடு மன்னன் பாண்டியன் நெடுஞ்செழியனிடம் குற்றவுணர்வை எற்படுத்தியமையால் ‘மூத்தோன் என்று என்னாது அறிவுடையோன்’ என்ற சொல் கல்வியறிவைச் சுட்டுகிறதா? என்ற ஐயப்பாடு எழுகிறது. காரணம் யாதெனில் உலகப்பேரரசர் வரிசையில் போற்றப்படும் அக்பர் கல்வியறிவில்லாதவர் என்பது யாவரும் மறுக்க முடியாதது. இத்தகு உயர்நிலையை அடைவதற்கு’அறிவு இன்றியமையாததாகும் என்பதனை உணர்ந்த நம்மில் பலருக்கு அறிவு என்பதனைக் குறித்த ஐயம் எழக்கூடும். இங்கு அறிவு என்பது,‘தம் குடியின்கீழ் வாழும் அனைத்திற்கும் நன்மை பயக்கும் செயல்களைச் செயல்படுத்தும் ஆற்றல்’ என்பது விடையாக அமைகின்றது. ஆகையால் பாண்டியன் நெடுஞ்செழியன் சுட்டும் அறிவுடையோன் என்பதற்கு இவ்விதக் கருத்து பொருந்திப் போகும் முகமாக அமைகின்றது. மேலும், கல்வியறிவு பெற்றோர் உயர்வு தாழ்வு பார்க்காது வாழ்ந்தனர் என்பதனை புறநானூறு,
“வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன் கண்படுமே”7
என்ற பாடல் வரிகளின் வாயிலாகப் பண்டைக் காலத்துச் சமுதாயத்தில் அரசர்,அந்தணர், வணிகர், வேளாளர் ஆகிய நாற்குலங்கள் முதன்மைப்படுத்தப்பட்டன. இவர்கள் தங்களுக்குள் கல்வி கற்றவரை பாரபட்சம் பார்க்காது அணுகினர் என்ற செய்தியை அறிய முடிகிறது. இச்சிந்தனை மனித ஆற்றலை மேம்படுத்துகின்றன என்பதை இப்பாடலின் கல்வி குறித்த மதிப்பீடு வாயலாக அறிய முடிகிறது.
புலவர் அரசர்க்கு உணர்த்தும் அறிவுரை
சங்க காலத்தில் புலவர்களின் அறிவுரைக்கும். அறவுரைக்கும் மன்னர்கள் செவிகொடுத்துப் பணிந்திருக்கிறார்கள் என்பதனைச் சங்கப் பாடல்கள் தமக்குப் புலப்படுத்துகின்றன. புலவர் தம் இலக்கியப் படைப்புகளில் மன்னர்க்குச் சிறப்பிடம் கொடுத்தனர் என்பதனை,
“நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்”8
என்ற புறநானூற்றுப் பாடல் வரிகளின் வாயிலாக, ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றம், அந்நாட்டில் காணப்படும் இயற்கை வளங்களைப் பயன்படுத்தும் முறையில் ஏற்படுவதாகும். இவ்வியற்கை வளங்களுக்கும் மேலாக மன்னனே முதன்மையானவன் என்ற கருத்து பண்டைக் காலத்தில் காணப்பட்டது. ஆகையால் வளங்களை மக்களின் வாழ்வியல் முறைக்கு ஏற்ப செம்மைப்படுத்தியும் நெறிப்படுத்தியும் தரவேண்டியது மன்னனின் கடமையாக இருந்தது. இவ்வளங்களை உணரவும் நுகரவும் என்று மனிதன் அறிந்தானோ அன்றே வறுமை என்ற கருத்தும் வளரத் தொடங்கியது. இவ்வறுமையிலிருந்து மனித இனத்தைக் காப்பது மன்னனின் கடமையாகக் கருதப்பட்டது. பண்டைக்காலம் முதல் நடப்புக்காலம் வரை மனித ஆற்றலைப் பாதிக்கும் காரணியாக வறுமை என்ற கருத்து தொடர்ந்து வருகிறது. இதனை புறநூனூறு
“வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும்
வருந்தி வந்தோர் மருங்கி நோக்கி
அருள் வல்லை ஆகுமதி9
என்ற பாடல் வரிகளின்,‘எத்தகைய ஆற்றல் படைத்தவருக்கும் துன்பம் வருதல் இயற்கை, அத்தகைய துன்பத்துடன் வருத்தி வருவோரைக் காத்து நிற்பது மன்னனின் கடமையாகும்’ என்று புலவர் அரசனுக்கு உணர்த்துகிறார். இதற்கு அடுத்த நிலையில், பெரும் பேரரசுகள் அனைத்தும் போரின் அழிவிலே தோன்றியதாகும். இதனை வரலாற்றுக் குறிப்புகள் உணர்த்தி நிற்கின்றன. இங்கு உருவாகும் அழிவு, ஆக்கம் என்ற இரு கருத்து நிலைகள் மனிதனை மையமிட்டு நிகழ்த்தப்பட்டன. இவ்வித அழிவு, ஆக்கம் ஆகியன மனிதன் மற்றொரு மனிதன்மீது செலுத்தம் அதிகாரமாகும். இவ்வதிகாரத்தில் பெறும் வெற்றி பண்டைய சமுதாயத்தில் பெருமைக்குரியதாக மதிக்கப்பட்டது.
“பொருபடை தரூஉம் கொற்றமும் உழுபடை
ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே”10
என்ற புறநானூற்றுப் பாடல் வரிகளின் வாயிலாக,‘மன்னா நீ பெறும் வெற்றிகள் உன் போர் வீரர்களால் வந்ததல்ல, உன் நாட்டில் உணவு உற்பத்தி செய்கின்ற உழவர்களால் தோன்றியதாகும். ஆகையால் அவர்களைப் காப்பது உன் கடமையாகும். இல்லையெனில் ‘யானை புகுந்த வயல்போல்’ இந்நாடும் மக்களும் அழிவார்கள் என்ற கருத்தினை சங்கச் சான்றோர் உணர்த்தி நிற்கின்றனர்.
சமூக சேவை
உலகின்கண் மக்களிடையே உடைமை, இன்மை என்ற ஏற்றத்தாழ்வும் அதன் காரணமாகத் துன்பமும் வறுமையும் தோன்றின. அவற்றைத் துடைக்க மக்களுள்ளத்தில் இரக்கமும் ஈகையும் மலர்ந்து மக்கள் தொண்டு அல்லது சமூக சேவை செய்யப்பட்டு வருகிறது. வழிபோக்கர் வசதிகளுக்காக நெடுஞ்சாலைக்கும், பூஞ்சோலைகளும், ஊர்ப்பொது மன்றங்களும் மன்றங்களிடத்துப் பயன்தரு விளா, பலா முதலிய மரங்களும் பொய்கைகளும் ஆங்காங்கு அமைக்கப் பெற்றன. விருந்தோம்பல் வீடுதோறும் சிறந்த அறமாகச் செய்யப்பெற்றது. அறச்சாலைகள் நிறுவப்பெற்றன. மருத்துவ முறைகள் பலவற்றைப் பற்பல மக்களும் செய்து வந்தனர். இத்தகைய தொண்டுகளைப் புறநானூற்றில் காண முடிகிறது.
சிறுகுடி என்று ஊர்த் தலைவனால் பாணன் பசியெனும் நோய் போக்க உணவெனும் மருந்து வழங்கியதைப் பார்த்து, பெருமன்னனான கிள்ளிவளவன் “பசிப்பிணி மருத்துவன்”11 என்று பட்டம் கொடுத்து பாராட்டி உள்ளான். உணவுடன் உடை அளித்த வள்ளல்களும் உண்டு. பாசிபோன்று, அழுக்கேறி, நைந்துபோன இரவலர்தம் ஆடைகளைத் தம் கையால் அகற்றி, புதிய ஆடைகள் அணிவித்து மகிழ்ந்தனர் - மகிழ்வித்தனர். இதனை,
“முதுநீர்ப் பாசியன்ன உடைகளைந்து
திருமல ரன்னபுதுமடிக் கொளீஇ”12
என்ற வரிகளால் அறிய முடிகிறது. :”நீரின்றியமையாது உலகு” என்ற அடிப்படையை உணர்ந்த மன்னர்கள் பெய்யும் மழைநீர் வீணே கடலிற் கலந்து வறிதே போகாது. ஆணைகட்டியும் ஏரி, குளங்களிற் சேர்த்தும் பெருந் தொண்டாற்றியுள்ளனர். இதனைக் கடமையாய்ச் செய்யத் தவறியவர்களுக்குக் குடபுலவியனார் “உண்டி கொடுத்தேர் உயிர் கொடுத்தோரே”13 என்ற பாடல் வழி அறவுரை கூறியுள்ளளார்.
பொது நலத்தல் மனித உலகம் இருக்கிறது. அதில் உள்ள உயிர்களெல்லாம் தாம் செயலுக்கு ஏற்ப இன்பம், துன்பம், உயர்வு, தாழ்வு, செல்வம், வறுமை ஆகியவற்றை அடைகிறது. கடமை, பாசம் கொண்ட உறவுகளால் வாழ்வு மேன்மை பெறுகிறது. உணவு, உடை, இருப்பிடம் கொடுத்து மக்களின் துன்பநிலை நீக்கப்படுகிறது. அறத்தொண்டுகளால் சமூக சேவை ஆற்றப்படுகிறது. இத்தகைய மனித உலகத்தைப் புறநானூறு படம் பிடத்துக் காட்டுகிறது.
அடிக்குறிப்புகள்
1. பி.நெல்சன், மனிதவள மேம்பாடு படிப்புக்கருவி கொள்கைகளும், செயல்முறையும், ப.1
2. முனைவர் அ.மா. பரிமணம், புறநானூறு மூலமும் உரையும், பா.187
3. கோ. கேசவன், மண்ணும் மனித உறவுகளும், ப. 154
4. ம.திருமலை, ஒப்பிலக்கியம் கொள்கைகளும் பயில்முறையும், ப.212
5. புலியூர்க்கேசிகன், தொல்காப்பியம், பா.186
6. முனைவர் அ.மா. பரிமணம், புறநானூறு மூலமும் உரையும், பா.183 (1-2 வரிகள்)
7. மேலது,பா.183 (9-10 வரிகள்)
8. மேலது, பா.186
9. மேலது, பா.27 (15-17 வரிகள்)
10. மேலது,, பா.35 (25 – 26 வரிகள்)
11. மேலது, பா.173
12. மேலது, பா. 390
13. மேலது, பா.18
துணை நூற் பட்டியல்
1. ம.திருமலை - ஒப்பிலக்கியம் கொள்கைகளும் பயில்முறையும், மீனாட்சி புத்தக நிலையம், மயூரா வளாகம், 48, தானப்ப முதலி தெரு , மதுரை 625 001
2. கேசவன்,கோ. - மண்ணும் மனித உறவுகளும், சரவண பாலு பதிப்பகம், விழுப்புரம், 2001 ஜுன்
3. முனைவர் அ.மா. பரிமணம் - புறநானூறு மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், ஆம்பத்தூர், சென்னை – 600 098
*கட்டுரையாளர் - - முனைவர் பெ.கி.கோவிந்தராஐ, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இசுலாமியாக் கல்லூரி(தன்னாட்சி), வாணியம்பாடி 635 752 -