முன்னுரை
சங்கப் பாக்களைத் தொகுத்தார் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற பிரிப்பை அமைத்தனர். பத்துப்பாட்டில் இடம்பெறும் பாடல்கள் நூல்களில் தொகுப்பாக அமையும். எட்டுத்தொகைப் பாடல்கள் தனிநூலாக இல்லாது உதிரிப்பாடல்களின் தொகுப்பாக அமையும்.
“நற்றிணை நல்லகுறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்குபரிபாடல்- கற்றறிந்தார்
ஏத்தும் கலியொடு அகம்புறம் என்ற
இத்திறந்த எட்டுத்தொகை” என்பதோர் நுற்பா.
அகமும், புறமுமாய் அமைகின்ற நூல்கள் இவை. இந்த எட்டு நூல்களில் முருகனைப் பற்றிய செய்திகள் பலவகைகளில் இடம்பெற்றுள்ளன. அவற்றை உட்தலைப்பிட்டுப் பகுத்துப் பார்த்தல் பயன்பலதரும். அதனையே இக்கட்டுரை மேற்கொள்கிறது.
சங்ககாலம் முதலே முருகன் பற்றிய செய்திகள் இலக்கியங்களில் பரவலாக இடம்பெற்றுள்ளன. தமிழில் கிடைத்த முதல் இலக்கண நூலாக விளங்கும் தொல்காப்பியம் முருகனைச் “சேயோன்” என்ற சொல்லால் குறிப்பிட்டுள்ளது. இதனை முருகனைப் பற்றிய முதற்பதிவாகக் கொள்ளலாம். சங்கப் பாக்களில் முருகப்பெருமானின் பிறப்புமுறை, தோற்றப்பொலிவு, பெயரீடுகள், ஊர்திகள், கொடிகள், ஆயுதங்கள் மற்றும் தொன்மச் செய்திகள் போன்றவை இலக்கியங்களில் எடுத்தாளப்பெற்றுள்ளமை பற்றியும், முருகனின் ஆறுபடை வீடுகளின் சிறப்புகள் பற்றியும் இக்கட்டுரை ஆராய முற்படுகிறது.
பெயரீடுகள்
சங்க இலக்கியங்களில் முருகனைக் குறித்து வழங்கும் பெயர்கள் மிகுதி. இப்பெயர்கள் அனைத்தும் அவற்றின் சூழல்களின் அடிப்படையில் வெவ்வேறாக அமைகின்றன. முருகனைக் குறித்து (முருகனுக்குரிய) பெயர்களாகச் சேவலங்கொடியோன், சேய், முதிர்கடவுள், நெடுவேள், தெய்வம், முருகு, அணங்கு, கடவுள், மலைவான், விறல்வேள், மலைஉறைக்கடவுள், முருகன், சூர்செல்வன், நெடியோன், மால்மருகன் போன்றவை சுட்டப்படுகின்றன. பதிவுகள் சில வருமாறு:
(1) குறுந்தொகை
சேவலங் கொடியோன் (கடவுள் வாழ்த்து), சேய் (பாடல் -1), முதிர்கடவுள்(87), நெடுவேள்(111), தெய்வம் (263), முருகு (362).
(2) நற்றிணை
முருகு(47,82,225), நெடுவேள்(173), கடவுள்(251), தெய்வம்(351), அணங்கு(376).
(3) ஐங்குறுநாறு
அணங்கு (28), சேய் (242), கடவுள் (243, 257), முருகு (245,247,249,308), மலைவான் (248), மலைஉறைக் கடவுள் (259), விறல்வேள் (250).
•அணங்கு – முருகவேள் என்று உரையில் குறிப்பிட்டுள்ளது.
(4) அகநானூறு
முருகன் (1,59,98), கடவுள்(13,156), நெடுவேள்(22,98,120,232,382), முருகு (11,28,118,158,181,232,288) நெடியோன்(149).
(5) கலித்தொகை
தெய்வம் (39), சேய் (39,104) கடவுள் (93).
(6) பரிபாடல்
சேய் (5, 21) , செவ்வேள் (5), முருகு (5,8), முருகன் (21), கடம்பமர் செல்வன் (8), குன்றமர்ந்தாண்டான் (17), செல்வன் (18,21), மாஅல் மருகன் (19), நெடுவேள் (21).
(7) பதிற்றுப்பத்து
முருகு (26)
(8) புறநானூறு
சேய் (14,120,125), முருகன் (16,23,299), நெடுவேள் (55), முருகு (56,259), கடவுள் (158).
மேற்சுட்டப்பட்ட பெயர்களில் உரைகள் வாயிலாகத் தெய்வம், கடவுள், அணங்கு போன்றவை அனைத்தும் முருகனுக்குரிய பெயரீடுகளாக கொள்ளப்பெற்றிருப்பதனைக் காணவியலுகின்றது.
தோற்றப்பொலிவு
முருகப்பெருமான் ஒப்பற்ற ஆறு தலைகளையும், பன்னிரண்டு தோள்களையும் தன்னகத்தே ஒருங்கே பெற்றுள்ளதைப் பரிபாடல் விளக்குகிறது. (பரி.5) மேலும் மறியும், மயிலும், சேவலும், வில்லும், மரனும், வாளும், ஈட்டியும், கோடரியும், மழுவும், கனலியும், மாலையும், மணியும் ஆகியவற்றைத் தன் பன்னிரண்டுத் திருக்கைகளிலும் கொண்டவன் என்பதை நூல்கள் பேசும். இனி இவனே நம் படைக்குத் தலைவன் என எண்ணி முருகனுக்குத் தீக்கடவுள் கோழியையும், இந்திரன் மயிலையும் தந்தனர். இயமன் வெள்ளாட்டு மறியை ஈந்தான். பிற தேவர்கள் தந்த மறியும், மயிலும், சேவலும், வில்லும், மரனும், வாளும், ஈட்டியும், கோடரியும், மழுவும், கனலியும், மாலையும், மணியும் ஆகிய இவற்றைப் பன்னிரண்டுத் திருக்கைகளிலும் கொண்டு அமரப்படைக்குச் செவ்வேள் தலைவனான செய்தியை எடுத்தியம்புகிறது சங்க இலக்கியம்.
உவமை
முருகனின் தோற்றப் பொலிவினைச் சங்கப் பாக்கள் முன்னிறுத்துகின்றன. குறுந்தொகையில் முருகன் திருவடியின் நிறத்திற்கும், அழகிற்கும் தாமரை மலர் உவமையாகச் சுட்டப்படுகிறது. முருகப்பெருமான் அணிந்துள்ள ஆடையானது சிவப்பு நிறம் பொருந்திய குன்றிமணியினை ஒத்ததாய் அமைந்துள்ளது. மேலும், அகநானூற்றில் நெடுவேளின் செம்மேனிக்குச் செவ்வானமும், அவ்வானத்தையொட்டி வரிசையாகப் பறந்து செல்லும் கொக்கிற்கு முருகனது மார்பிலணிந்த முத்தாரமும் உவமையாகச் சொல்லப்பட்டுள்ளன. அகம்120) பரிபாடலில் “மூவிரு கயந்தலை முந்நான்கு முழவுத்தோள்” என்னும் வரியில் ‘சேய்’ மத்தளம் போன்ற பன்னிரண்டுத் தோள்களை உடையவன் (பரி.5) என்றும், “ஞாயிற்றேர் நிறத்தகை” (ஞாயிறு எழுச்சிக்கண் உண்டாகும் நிறத்தைப்) பெற்றவன் என்றும் பொருள்படும் சொற்கள் உள. முருகப்பெருமானின் உடையும், மாலையும் சிவந்த நிறமுடையன. வேற்படையும் பவழக்கொடியினது நிறத்தை ஒத்துள்ளதைப் பரிபாடலின் 18 -ஆம் பாடல் “உடையும் ஒலியலுஞ் செய்யை மற்றாங்கே”, “படையும் பவழக் கொடிநிறம் கொள்ளும்” என்ற பாடல் வரிகள் தெளிவுபடுத்தும். செந்தீயைப் போன்றதொரு நிறத்தையும், ஞாயிற்றினது மண்டிலத்தையும் ஒத்த நிறமுடையவன் என்பதை “உருவும் உருவத்தீ ஒத்தி முகனும்”, “விரிகதிர் முற்றா விரிசுடர் ஏத்தி” என்ற பாடல் வரிகள் விளக்குகின்றன.
கொடிகள்
குறுந்தொகையில் இடம்பெறும் கடவுள் வாழ்த்துப் பாடலில் சேவலங் கொடியோன் என்று கூறப்படும். சேவற் கொடியே மட்டுமன்றி,மயிலையும் கொடியாக உடையவன் என்பதை அகநானூறு (பாடல். 149) குறிப்பிடுகின்றது. “பல்பொறி மஞ்ஞை வெல்கொடி உயரிய” என்ற வரியில் இதனைக் காணலாம். 8 ஆம் பரிபாடலில் முருகப்பெருமானின் கொடி சேவற்கொடி என்று விளக்கப்பெறுகிறது. மயிலையும், கோழியையும் செவ்வேள் ஒருசேரக் கொடியாகக் கொண்ட செய்தியை (பரி.17) பாடலால் அறிய முடிகிறது. பரிபாடல் 18, 21 -ஆம் பாடல்களில் மயிற்கொடியினை உடையவன் என்று வரும் செய்தியும் தெளிவுதரும்.
ஊர்திகள்
உலகில் உள்ள ஒவ்வொரு இறைவனும் தனக்கென ஓர் ஊர்தியினைச் சிறப்பாகக் கொண்டு தன் தொழிலினைச் செய்வர். அவ்வகையில் முருகப்பெருமானின் ஊர்திகளாகப் ‘பிணிமுகம்’ என்னும் யானையும், மயிலும் அமைகின்றன.
அகநானூற்றில் முருகப்பெருமான் களிற்றைத் தன் ஊர்தியாகக் கொண்ட செய்தியை,
“கடம்புங் களிறும் பாடித் தொடங்குபு” (138)
என்ற பாடல் வரி உணர்த்துகின்றது. மேலும் களிற்றைத் தன் ஊர்தியாகக் கொண்டுள்ள செய்தியை (புறம்.56) பாடலால் அறியமுடிகிறது. 5 -ஆம் பரிபாடல் பிணிமுகம் என்னும் யானையை ஊர்தியாகக் கொண்டதையும், மயிலை ஊர்தியாகக் கொண்டதையும் விளக்குகிறது. (பரி. 8 ) ஊர்தி - யானை, (பரி.17) ஊர்தி - யானை, (பரி.18) ஊர்தி - மயில், (பரி.19) ஊர்தி-யானை (பரி.21) ஊர்தி-யானை என்றவாறு செய்திகளமையக் காணலாம்.
மாலை
முருகனுக்குரிய மாலையாகக் கடம்ப மாலையானது சிறப்பிடம் பெறுகிறது. முருகன் கடம்ப மாலையைச் சூடியவன் என்பதைக் குறுந்தொகை (பாடல்.87) மொழியும். முருகப்பெருமான் கடம்பின்கண் உறைகின்ற செய்தியை மேற்சுட்டப்பட்ட பாடலானது எடுத்துரைக்கிறது. மேலும் அகநானூறு (பாடல்.138) வரியில் கடம்ப மாலை பற்றிய குறிப்புகள் இடம்பெறுகின்றன. புறம்.23 ஆம் பாடலில் கடம்ப மாலை செவ்வேளுக்குரியது என்ற செய்தி உள்ளது. 18,21 ஆகிய பரிபாடல்களில் கடம்பினது சிறப்பினை எடுத்துரைக்கின்றன.
ஆயுதம்
முருகனுக்குரிய ஆயுதமாக வேல் விளங்கியதைப் பரிபாடல் (5 ஆம் பாடலில்) மொழியும், “விறல்வெய்யோனூர் மயில் வேனிழனோக்கி” (பரிபாடல் - 21) என்ற வரியில் செவ்வேள் பகைவரைக் கொன்ற வேலினை உடையவன் என்று சுட்டப்பெறுகிறது. வேல் பற்றிய செய்திகள் குறுந்தொகை (கடவுள் வாழ்த்து), அகம் – 10, (கலி. 27,93,104), (பரி. 19,26) போன்றவற்றில் இடம்பெறும்.
தொன்மம்
புராணம் என்பது பழையது, பழங்கதை என்ற பொருளுடையது. தொன்மம் என்பதன் பொருளாகத் தொல்காப்பியர்,
“தொன்மை தானே உரையொடு புணர்ந்த
பழமை மேற்றே”
எனக் குறிப்பிட்டுள்ளார். தொன்மத்தினை அவற்றின் பாடுபொருளின் அடிப்படையில் சடங்கு சார்ந்த தொன்மம், சமயம், மெய்யியல், பழக்க வழக்கம் சார்ந்த தொன்மங்கள் என வகைப்படுத்துவதுண்டு. முருகப்பெருமானின் பிறப்புமுறை, உறவுமுறை மற்றும் புராணச் செய்திகள் அனைத்தும் தொன்மத்தின் பாற்படும்.
பிறப்புமுறை
செவ்வேள் சரவணப் பொய்கையில் பிறந்து, அறுவகைக் கார்த்திகை மகளிர்பால் வளர்க்கப்பெற்றவன் என்பதையும், உலகத்தை அழிக்கும் தொழிலை உடைய சிவபெருமானுடைய திருமகன் என்பதையும் 5 ஆம் பரிபாடலின் பாடலின்வழி அறியமுடிகிறது. பரிபாடலின் 8ஆம் பாடலானது முருகனது பிறப்பினை “மணமிடற்றண்ணற்கு மதியாரற் பிறந்தோய் நீ” என்னும் அடியில் விளக்கியமைகிறது. மேலும் முருகப்பெருமான் தோன்றிய பொழுதே இந்திரன் முதலிய தேவர்கள் அப்பெருமானை ஆற்றாது அஞ்சிய செய்தியினைப் பரிபாடலின் 14 ஆம் பாடலானது சுட்டுகிறது. கலித்தொகையில் (பாடல் 83) முருகன் “ஆல்அமர் செல்வன் அணிசால் மகன்” என்ற கருத்தும் ஈங்குச் சட்டப்படுகிறது.
நம்பிக்கைத் தொன்மம்
நம்பிக்கை சார்ந்த தொன்மங்களும் பண்டைய இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளதை அறியமுடிகிறது. அவ்வகையில் குறுந்தொகையில் முருகன் பற்றிய தொன்மக் குறிப்புகள் காணப்பெறுகின்றன. முருகப்பெருமான் இவ்வுலகைக் காத்தலானே இவ்வுலக உயிர்கள் நிலைபெற்றன என்னும் செய்தியைக் குறுந்தொகையின் கடவுள் வாழ்த்துப் பாடலில் காணமுடிகிறது.
பண்டைத் தமிழர்கள் மரத்தின்கண் தெய்வம் உறைகின்றது என்ற நம்பிக்கை உரையோராய் விளங்கியதை இலக்கியங்கள் கூறும். அவ்வகையில் குறுந்தொகையின் 87 ஆம் பாடலில் “மன்ற மராஅத்த பேஎமுதிர்க் கடவுள்” எனும் அடியில் முருகப் பெருமான் கடம்ப மரத்தின்கண் உறையும் செய்தியை அறிய இயலுகிறது.
சடங்கு சார்ந்த தொன்மம்
சங்க இலக்கியங்களில் சடங்கு சார்ந்த தொன்மங்களும் ஒருசேர இடம்பெற்றுள்ளன. வேலன் வெறியயர்தல் என்னும் பகுதியில் தலைமகள் உடல் மெலிவுற்றமை தெய்வத்தால் வந்தது என எண்ணி, உறவினர் முருகவேளுக்கு வெறியாட்டு நிகழ்த்திய செய்தி,
“உண்துறை அணங்கு இவள் உறைநோய் ஆயின்” எனும் ஐங்குறுநூறு நூலில் (பாடல் – 28) இடம்பெற்றுள்ளதை அறியலாம். மேலும்,
“சேய் மலைநாடன்’ செய்த நோயே” (ஐங். 242)
“கறிவளர் சிலம்பிற் கடவுட் பேணி” (ஐங். 243)
“முருகு என மொழியும் ஆயின்” (ஐங். 245)
“அணங்கும் அணங்கும் போலும் அணங்கி” (நற். 376)
“அன்னை அயரும் முருகுநின்” (நற். 376)
“முருகு அயர்ந்து வந்த முதுவாய் வேல” (குறுந். 362)
“நெடுவேள் பேணத் தணிகுவள் இவளென” (அகம். 22)
“முருகாற்றுப் படுத்த உருகெழு நடுநாள்” (அகம். 22)
“செல்வன் பெரும் பெயர் ஏத்தி வேலன்” (அகம். 98)
போன்ற அடிகள் சடங்கு சார்ந்த தொன்மத்திற்குச் சான்றாகத் திகழ்கின்றன.
புராணச் செய்தி
புராணம் என்பதற்குப் பழங்கதை என்பது பொருளாகும். முருகனைக் குறித்த புராணச் செய்திகள் சங்க இலக்கியத்தில் மிகுதியாக இடம்பெற்றுள்ளன.
முருகன் அவுணர்களுக்குத் தலைவனாக விளங்கப்பெற்ற சூரபதுமனையும், அவனது சுற்றத்தாரையும் அழித்த செய்தியை இலக்கியங்களால் புனையப்பெறும். அவ்வகையில் குறுந்தொகை (பாடல். 1) “செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த” செய்தியும், கடலின்கண் நடுவே மாமர வடிவாய் நின்ற சூரபதுமனை முருகவேள் அழித்தச் செய்தியும் கருதத்தக்கன. 59 ஆம் அகநானூற்றுப் பாடலில் “சூர்மருங் கறுத்த சுடரிலை நெடுவேல்” என்ற குறிப்பும் காணக்கிடக்கிறது.
“ஒன்னாதார்க் கடந்து அடூஉம் – உரவுநீர் மாகொன்ற” (கலி. 27)
“மாகடல் கலக்குற மாகொன்ற மடங்காப்போர்” (கலி. 104)
“சூர்கொன்ற செவ்வேலாற்பாடி பலநாளும்” (கலி. 93)
“சுருடை முழுமுதல் தடிந்த பேர் இசை” (பதிற். 11)
“முருகு உடன்று கறுத்த கலி அழி மூதூர்” (பதிற். 26)
“சூர்நவை முருகன் சுற்றத்து அன்ன” (புறம். 23)
“நோயுடை நுடங்குசூர் மாமுதல் தடிந்து” (பரி. 5)
போன்றவரிகள் கவனத்துக்குரியவை.
மேலும் (பரி. 18), (பரி. 21) போன்ற பாடல்களும் சூரபதுமனை முருகன் வெற்றி கொண்ட சிறப்பினை எடுத்துரைக்கின்றன.
கிரௌஞ்ச மலையைப் பிளந்தமை
முருகப்பெருமான் குருகுபெயர்க்குன்றம் என அழைக்கப்படும் ஒரு மலையைத் தன் வேல் கொண்டு அழித்ததை “நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேல்” (குறுந். கட.வாழ்) பாடலால் அறியமுடிகிறது. (பரி. 5), (பரி. 19) பாடல்களும் இவ்வாறு மலையைப் பிளந்த செய்தியினைக் குறிப்பிடுகின்றன. குருகுபெயர்க் குன்றம் என்பது கிரௌஞ்ச மலையென்பது உரைச்செய்தி.
திருமண உறவு முறை
முருகவேள் வள்ளியுடன் கூடிச் சென்றதைக் குறிப்பால் “முருகு புணர்ந்து இயன்ற வள்ளி போல” எனும் நற்றிணை 82 ஆம் பாடலானது சுட்டுகிறது. வள்ளியை முருகக் கடவுள் மணந்த செய்தியை 9 ஆம் பரிபாடலானது எடுத்துரைக்கிறது.
அதற்கான சான்று வருமாறு,
“மையிரு நூற்றிமையுண் கண்மான்மறி தோண்மணந்த ஞான்று”
முருகன் – வள்ளி ஆகிய இருவருக்கும் இடையே ஆன உறவு முறையானது இலக்கியங்களில் தெளிவுறச் சுட்டப்படும். ஆனால் முருகக் கடவுள் தேவசேனையை மணந்த செய்தியானது குறிப்பால் மட்டுமே (பரி. 9ஆம் பாடலில் காணப்படுகிறது. இவை தவிர வேறு எந்த எட்டுத்தொகை இலக்கியத்தின் கண்ணும் தெய்வானை பற்றிய குறிப்புகள் இல்லை. சங்க இலக்கியங்களில் தெய்வானை என்ற சொல் இடம்பெறவே இல்லை என்பதை அறியமுடிகிறது.
படைவீடுகளின் சிறப்புகள்
முருகனுக்குரிய படைவீடுகள் ஆறென்ப. சங்ககாலத்தில் ‘படைவீடு’ என்ற கருத்தாக்கம் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் பின்னர்வந்த படைவீடுகளின் செய்திகள் சங்க நூல்களில் பொருத்திப் பார்த்திருப்பதாகச் சிலர் கருதுவர். அவற்றை நிரல்படுத்துவது தேவை. முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளுள் முதலாவதாக அமையும் திருப்பரங்குன்றத்தின் சிறப்புகள் மிகுதியாக இடம்பெற்றுள்ளன.
“ஒன்னாதார்க் கடந்து அடூஉம். உரவுநீர் மா கொன்ற” (கலி-27) ஆம் பாடலில் திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் சூரபதுமனை அழித்தச் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளதென்பர்.
•திருமால், சிவன், பிரம்மன், பன்னிரு ஆதித்தர், அசுவனிமருத்துவர், வசுக்கள் எண்மரும், உருத்திரர், திக்குப் பாலகர், தேவர், அசுரர், முனிவர் ஆகிய அனைவரும் திருப்பரங்குன்றத்தின்கண் வந்து உறைவதால் குன்றம் இமய மலைக்கு நிகராகச் சுட்டப்பட்டுள்ளதைப் பரிபாடல் – (8) விளக்குகிறது.
•இமயக் குன்றினில் உள்ள ஏனைச் சுனைகளினும் சிறந்தது திருப்பரங்குன்றத்துச் சுனை என்பதும், அவை என்றும் வற்றாமல் ஒரே நிலையில் இருப்பது சிறப்பாகும் என்பதும் கூறப்பட்டுள்ளன.
•குன்றின்கண் இசைக்கருவிகள், நறுமணப் புகைகள், வானளாவி நிற்பதைப் பரி. 17ஆம் பாடலானது விளக்குகிறது.
•ஐந்து வகையான மலைப் பொருள்களைக் குன்று பெற்றுத் திகழ்வதைப் பரிபாடலின் 18ஆம் பாடலால் அறிய முடிகிறது.
முருகப்பெருமானின் படை வீடுகளுள் திருப்பரங்குன்றச் சிறப்புகளே எட்டுத்தொகையில் மிகுதியாக இடம்பெறுகின்றன. ஏனைய படைவீடுகளாக விளங்கப்பெறும் பழனி மற்றும் திருச்செந்தூர் ஆகியவைக் குறிப்பால் மட்டுமே சுட்டப்பட்டுள்ளன.
படைவீடு (பழனி)
முருகக் கடவுளின் ஆறுபடை வீடுகளுள் ஒன்றாக அமையும் பழனிமலை பற்றிய குறிப்புகள் (புறம். 158) ஆம் பாடலில்) காணப்படுகின்றன. கடையெழு மலையில் முருகன் கோயில் கொண்டுள்ளதைக் குறிப்பால் உணர்த்துவதாகச் சில பகுதிகள் அமைகின்றன.
படைவீடு (திருச்செந்தூர்)
முருகனது ஆறுபடை வீடுகளுள் இரண்டாம் படை வீடாக அமையும் திருச்சீரலைவாய் எனப் பெயர்பெறும் திருச்செந்தூரின் சிறப்பைப் புறநானூற்றுப் பாடலில் காணமுடிகிறது.
“வெண் தலைப் புணரி அலைக்கும் செந்தில்” (புறம். 55)
வெண்மையான மேற்பரப்பினையுடைய அலைகள் திரியும் திருச்செந்தூர் எனச் சிறப்பிக்கப்படுகிறது. இப்பாடலில் இடம்பெறும் செந்தில் என்ற பெயர் முருகனது உறையும் திருச்செந்தூரையும், முருகனையும் குறித்த சொல்லாய் அமைந்துள்ளது.
நிறைவுரை
தமிழரின் அக வாழ்விலும், புற வாழ்விலும் முருகக் கடவுள் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததை இலக்கியங்கள் நமக்குப் பகர்கின்றன. அவ்வகையில் முருக வழிபாடு தமிழ் மக்களின் சமய வாழ்க்கையில் தனித்ததொரு இடத்தைப் பெற்றுள்ளதை அறியமுடிகின்றது.
பயன் நல்கிய நூல்கள்
1.அண்ணாமலை, வே., (2000), சங்க இலக்கியத்தில் தொன்மக்களஞ்சியம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம்.
2.இராசமாணிக்கம், தி., (1984), தமிழர்தம் தனிப்பெருங்கடவுள், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
3.சாமி, பி.எல்., (1990), சங்க நூல்களில் முருகன், சேகர் பதிப்பகம், சென்னை.
4.ஞானம், ப., (2001), தமிழ் இலக்கயித்தில் முருகன், மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
5.பாலசுப்பிரமணியன், சி., (1972), முருகன் காட்சி, பாரி நிலையம், சென்னை.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
* கட்டுரையாளர்: - க. விஜய்ஆனந்த், முனைவர்பட்ட ஆய்வாளர், சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலம், புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி-14 -