கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியன்  [ஐக்கிய ராச்சியம் லிவர்ப்பூல் ஹோப் பல்கலைக் கழகத்தில் 2018ஜூன் 27,28,29 நாள்களில்  நடைபெற்ற இரண்டாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாட்டு ஆய்வரங்கில் வாசிக்கப் பட்ட ஆய்வுக்கட்டுரை. கட்டுரையாளர் :  கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியன்   ]

தோற்றுவாய்
தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தங்கள் பண்பாட்டம்சங்களைப் பேணிக் கொள்வதற்கு திருக்குறள் எவ்வகையில் துணபுரியக் கூடியது என்பதை எடுத்துப்பேசும் முயற்சியாக எனது இக்கட்டுரை அமைகிறது.

‘பண்பாடு’ என்பது தனிமனித அறஒழுக்கநெறிகள், குடும்ப-சமூக உறவு முறைகள் அவை தொடர்பினாலான சடங்கு சம்பிரதாயங்கள்–விழாக்கள், வாழ்வியல் முறைமைகள், கலைக் கோலங்கள் முதலான பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்கியதாகும். இவ்வாறான பண்பாட்டம் சங்களின் இயல்பு மற்றும் அவை காலம்தோறும் அடைந்துவந்த வளர்ச்சி மற்றும் மாற்றம் ஆகிய வற்றைப் பதிவுசெய்து பேணி நிற்கும் செயன்முறைகளில் ஒருவகையாகத் திகழ்பவை இலக்கிய ஆக்கங்கள் ஆகும். அவ்வகையில் தமிழரின் பண் பாட்டைப் பொறுத்தவகையில் முக்கியமான அற இலக்கியப் பதிவாக அமைந்த நூல் திருக்குறள் ஆகும்.

தமிழில் நாலடியார், நான்மணிக்கடிகை, ஆத்திசூடி முதலான பத்துக்கும் மேற்பட்ட அறநூல்கள் பண்டைய காலப்பகுதிகளில் எழுந்திருப்பினும் வாழ்க்கை தொடர்பான முழு நிலைப்பார்வையை முன்வைத்துள்ள ஆக்கம் என்ற வகையில் தலைமைத்தகுதியுடையதாகத் திகழ்ந்துவருவது திருக்குறளேயாகும். இவ்வாக்கம் பண்டைத்தமிழர் பேணிநின்ற உலகியல் வாழ்க்கை சார்ந்த பண்பாட்டம்சங்கள் பலவற்றைத் தொகுத்துரைப்பது. இவ்வாறான இந்நூலா னது, இன்றைய சூழலில் புலம்பெயர் தமிழரின் பண்பாட்டுக் கல்விக்கு எவ்வெவ்வகைகளில் பயன்படக்கூடியது என்பதைக் கவனத்திற்கு இட்டுவருவதே இவ்வாய்வுக் கட்டுரையின் குறிக்கோளாகும்.

இவ்வகையில் இக்கட்டுரையிலே முதலில், திருக்குறளின் பண்பாட்டுப் பார்வை தொடர்பான பொது விளக்கம் முன்வைக்கப்படவுள்ளது. குறிப்பாக, அந்நூல் இல்லறத்தார், துறவறத்தார், ஆட்சியாளர் மற்றும் நிர்வாகப்பணியாளர் முதலான அனைத்துவகை சமூக மாந்தர்க்குமுரிய அறங்களை எடுத்துக் கூறும் முறைமை இம்முதற்பகுதியிலே கவனத்துக்கு இட்டு வரப்படவுள்ளது. 

இக்கட்டுரையின் இரண்டாம் பகுதியானது, திருக்குறள் புலப்படுத்தி நிற்கும் மேற் சுட்டிய பண்பாட்டம்சங்களின் பரப்பிலே புலம்பெயர்தமிழ்ச் சமூகச்சூழலில் கல்விகற்கும் மாணவர் களுக்கு அழுத்திப் பேசப்படவேண்டிய அம்சங்கள் எவையெவை என்பதைச் சுட்டிக்காட்டும் செயற்பாடாக அமையவுள்ளது.

 

குறளின் பண்பாட்டுப் பார்வை தொடர்பான பொது விளக்கம்:

திருக்குறளின் அறத்துப்பால் எனப்படும் முதற்பகுதியில் இல்லறவியல் சார்ந்து 20அதிகாரங்களும்(5-24) துறவறவியல் சார்ந்து 13அதிகாரங்களும் (25-37) உள்ளன. இவை மேற்படி இருநிலை வாழ்வியல் நிலைகளிலும் பேணிக்கொள்ளப்படவேண்டிய அறங்கள் மற்றும் ஒழுக்கங்கள் சார்ந்த பல்வேறு அம்சங்களையும் தனித்தனியாக விரித்துரைப்பனவாகும். இல்லற வாழ்வியல் என்பது குடும்பம் மற்றும் சுற்றம் சார்ந்ததாகும். அவற்றுக்கிடையே பேணப்பட வேண்டிய உறவுகள் மற்றும் பண்பாட்டு நியமங்கள் சார்ந்த விடயங்களே இல்லறவியலில் விரித்துரைக்கப்பட்டுள்ளன. துறவறவியல் சார்ந்த அதிகாரங்கள் துறவு மேற்கொள்வோர் பேணிக்கொள்ள வேண்டிய அற-ஒழுக்க நியமங்களைப் பேசுவனவாகும்.

இரண்டாவதான பொருட்பாலானது பொதுவாகச் சமூக வாழ்வியல் சார்ந்த அறவியல் அம்சங்களை எடுத்துரைப்பதாகும். இப்பகுதியானது பொதுவாக, சமூகத்தின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களாகக் கருதப்படும் ஆட்சியாளர்கள்(அரசர்கள்) மற்றும் ஆட்சிநிர்வாகிகள் (அமைச்சர் கள்) முதலியவர்களுக்கு இருக்கவேண்டிய ஆளுமையம்சங்களையும் அவர்கள் பேணிக்கொள்ள வேண்டிய பல்வேறு பண்பாட்டம்சங்களையும் விரித்துரைப்பதாகும். பொருட்பாலின் பிற்பகுதி யில் அமைந்துள்ள நட்பியல் சார்ந்து 17அதிகாரங்களும்(79-95) குடியியல் சார்ந்து 13அதிகாரங் களும்(96-108) சிறப்பாகச் சமூகத்தில் பேணிக்கொள்ள வேண்டிய உயர் குணாம்சங்களைப் பேசுவன. இவை ஆட்சியாளர்களுக்கும் நிர்வாகிகளுக்கும்கூடப் பயன்படக்கூடியவைகளாகும்.

நட்பியலின் பின்பகுதியிலுள்ள சில அதிகாரங்கள் நல்லொழுக்கம் சார்ந்தகுணாம் சங்களான பெரியாரை மதித்தல், கள்ளுண்ணாமை, என்பவற்றுடன் காமம்மிகுந்து மனைவிக்கு அடங்கி நடத்தலால்வரும் தீமைகள், பொதுமகளிர் இயல்பு, சூதாட்டத்தினால் விளையும் தீங்குகள் என்பவற்றையும் உடல்நலம்பேணும் முறைமைகளையும் எடுத்துக்கூறுவன. 

பொருட்பாலின் இறுதியாக அமைந்த பகுதி திருக்குறளில் அத்தியாவசியமான தனிப்பகுதியாகும். மனித வாழ்க்கையில் பின்பற்றப்பட வேண்டிய குடிமைப் பண்புகள் சார்ந்த மானம்(97), பெருமை(98), சான்றாண்மை(99), பண்புடைமை(100), நாண் உடைமை (102) ஆகியவற்றைத் தனித்தனியான அதிகாரங்களில் எடுத்துரைக்கும் பகுதி, இது.

இறுதி இயலான காமத்துப்பால் குடும்ப வாழ்வின் ஒருகூறாகிய ஆண் பெண் உறவு நிலை –அதாவது திருமணத்திற்கு முன் பின்னான காதலுறவு - பற்றிப்பேசுவதாகும்.

திருக்குறளின் பண்பாட்டுப்பார்வைபற்றிய பொதுவானதும் சுருக்கமானதுமான அறிமுகம், இது. இவ்வாறான பண்பாட்டுக்கூறுகள் பலவும் தமிழ்ச்சூழலுக்கு மட்டுமல்லாமல் அனைத் துலகத்துக்கும் பொருந்துபவை. அதனாலேயே இவ்வாக்கத்தை ’உலகப் பொதுமறை’ என அறிஞர்கள் கணித்து வந்துள்ளனர். இவ்வாறு இவ்வாக்கம் முன்வைக்கும் பண்பாடுசார் கூறுகளில் எவையெவை புலம்பெயர் தமிழ்ச் சமூகச் சூழலில் அழுத்திப் பேசப்படவேண்டிய முக்கியத்துவமுடையன என்பதைத் தனித்தலைப்பில் அடுத்து நோக்குவோம். 

புலம்பெயர் மாணவர்களின் பண்பாட்டுக்கல்வியில் அழுத்திப்பேசப்பட வேண்டியன:

இவற்றைப் பின்வரும் மூன்று வகைகளாகப் பிரித்து நோக்குவது பொருத்தமானதாகும். 

அ. முதல் வகையின, குடும்பம்(கணவன் - மனைவி - பிள்ளைகள்) மற்றும் சுற்றம் ஆகியவற்றுக்கிடையே பேணிக்கொள்ளப்பட வேண்டிய பண்பாட்டு நியதிகள் பற்றியனவாகும். 
ஆ. இரண்டாவது வகையின, சமூகத்தில் பின்பற்றப்படவேண்டிய பண்பாட்டு நியதிகள் பற்றியது. அதாவது, அனைத்து மானிடத்தையும் தழுவுவதான ‘உலக நோக்கு’ என்ற அம்சம் பற்றியும் அவற்றின் மூலம் உருவான ‘சான்றோர்’ சமுதாயம் பற்றியுமான விளக்கங்களாகும்.
இ. மூன்றாவது வகையின,  நிர்வாகப்பணியளர்கள், கல்வியாளர்கள் முதலிய பல நிலையினரும் பேணிக் கொள்ளவேண்டிய பண்பாட்டு நியதிகள்பற்றியதாகும்.  

இவ்வம்சங்கள் பற்றி விளக்கமாக அடுத்து நோக்குவோம்.

அ. குடும்பம் மற்றும் சுற்றம் சார்ந்த பண்பாட்டுப் பேணுகை: 

திருக்குறளின் அறத்துப்பால் எனப்படும் முதற்பகுதியில் இல்லறவியல் சார்ந்த 20அதிகாரங்கள் பெற்றோர், பிள்ளைகள் மற்றும் மாணவர்கள் பின்பற்றக்கூடியவைகளாகும். இவை தமிழர்க்குரிய அடையாளங்களாகவும் கொள்ளப்பட வேண்டியவை. கணவன் – மனைவி உறவு பேணுதல், பெற்றோர் – பிள்ளைகள் உறவுமுறைமை(பெற்றாரியம்) மற்றும் சுற்றம் தழுவி வாழும் முறைமைகள் என்பவற்றை இவை கூறுகின்றன. மேலும் இவ் உறவு பேணும் முறைமைகளில் இனிய வார்த்தை பேசுதல், அன்பாகப்பழகுதல், நன்றியறிதலுடன் இருத்தல், விருந்தோம்பல் பண்பு ஆகியவை இவற்றில் விரித்து உரைக்கப்படுகின்றன. உதாரணத்துக்கு, இல்வாழ்க்கை(5), வாழ்க்கைத் துணைநலம்(6), மக்கள் பேறு(7), அன்புடைமை(8), அடக்கம் உடைமை(13), ஒழுக்கம் உடைமை(14), விருந்தோம்பல்(9), இனியவை கூறல்(10), செய்நன்றியறிதல்(11), பிறன் இல் விழையாமை(15) ஆகிய அதிகாரங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இவை புலம்பெயர்சூழலில் வாழும் மாணவர்களுக்கு அழுத்தமாக அறிவுறுத்தப்பட வேண்டியவைகளாகும். உதாரணத்திற்கு, மக்கள்பேறு(7) என்ற அதிகாரத்தில் தந்தை, தாய், மகன் ஆகிய மூவரின் கடமைகள் கூறப்படுகின்றன. அக்குறள்கள் வருமாறு:

“தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து 
முந்தி இருப்பச் செயல்” (67)
(சான்றோர் அவையில் கல்வியில் முந்தியிருக்குமாறு செய்தலே தந்தையின் கடன்)

“ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன்மகன 
சான்றோன் எனக்கேட்ட தாய்” (69) 
(தன்மகனைச் சான்றோன் எனப்பிறர் புகழ்வதைக் கேட்ட தாய், தான் அவனைப் பெற்றபொழுதில் அடைந்த மகிழ்வைவிட கூடுதலாக மகிழ்வாள்.) 

“மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை 
என்நோற்றான் கொல் எனும் சொல்” (70) 
(மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி என்னவெனில் ‘இவனைப்பெற இவன் தந்தை என்னதவம் செய்தான்’ எனப்பிறர் வியக்கும்படி இருத்தலேயாகும்.) 

அடுத்து, பொருட்பாலில் இடம்பெற்றவற்றுள் மாணவர்களுக்கு அழுத்திக்கற்பிக்கக் கூடிய சில அதிகாரங்கள் வருமாறு. கற்றலின் முக்கியத்துவத்தை அறிவுறுத்தும் கல்வி(40), கல்லாமை(41), கேள்வி(42), அறிவுடைமை(43) போன்ற அதிகாரங்களும் சுற்றத்தவர்களுடனும் பெரியவர்களுடனும் பழகும் முறைமைகளைக் கூறும் சுற்றம்தழால்(53), பெரியாரைப்பிழை யாமை(90), குற்றங்கடிதல்(44), பெரியாரைத்துணைக்கோடல்(45), சிற்றினம் சேராமை(46) ஆகிய அதிகாரங்களும் முக்கியத்துவமுடையனவாகும். இவை கற்றலின் முக்கியத்துவத்தையும் ஒருவன் தனது மனக்குற்றங்களைக்களைந்து ஆன்றோரைத் துணையாகக்கொண்டு இழிந்தோர் கூட்டத்தில் சேராது வாழ்தலுக்குரிய வழிவகைகளையும் விளக்குவன. இவை புலம்பெயர்ந்த மாணவர்களுக்கு அத்தியாவசியமானவைகளாகும்.

இவற்றில் முக்கியமான சில அதிகாரங்கள் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ச்சமூகம் சார்ந்த மாணவர்களுக்குத் தமது பண்பாட்டு அடையாளங்களைப் பேணிப்பாதுகாத்துக் கொள்ளவும் உதவுவன. அவற்றினைப் பெற்றோர்கள் தமது பிள்ளைச் செல்வங்களுக்கு அவர்களின் வயதுக் கேற்ப விளக்கியுரைப்பதுடன் தமிழ், சமயம் மற்றும் கலைக் கல்வி போன்றவை கற்பிக்கும் நிறுவனங்களின் பாடத்திட்டங்களில் மாணவர்களின் வயதுக்கேற்றதான முக்கிய குறள்களையும் இணைத்துக் கற்பிக்க ஆவன செய்தல்வேண்டும். அவற்றுடன் அவற்றைப் பின்பற்றுவதற்குரிய சந்தர்ப்பங்களை அம் மாணவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கவும் வேண்டும். 

ஆ. சமூகம் சார்ந்த பண்பாட்டுப்பேணுகை:

பொருட்பாலின் பிற்பகுதியில் குடிமக்கள்(சமூகம்) பேணிக்கொள்ள வேண்டிய உயர் குணாம்சங்களாவன, 13க்கு மேற்பட்ட அதிகாரங்களில் விரித்துரைக்க்கப்படுகின்றன. அவற்றுள் மணவர்கள் அறிந்திருக்கவேண்டிய அத்தியாவசியமான சில அதிகாரங்கள் வருமாறு. குடிமை(96), மானம்(97), பெருமை(98), சான்றாண்மை(99), பண்புடைமை(100), நாண் உடைமை(102), குடிசெயல்வகை(103) ஆகியவைகளாகும். மேலும் பொருட்பாலில் நட்பு சார்ந்து அமைந்த 17அதிகாரங்களும் புலம்பெயர் சமுதாயத்திலுள்ள மாணவர்கள் அறிந்திருக்கவேண்டிய முக்கியத்துவமுடையவைகளாகும். ஒரு சிறந்த நண்பரை சமூகத்தில் எவ்வாறு தேர்ந்தெடுப்பது பற்றி நட்பு, நட்பு ஆராய்தல், பழைமை ஆகிய அதிகாரங்களிலும் தீய நட்பு, கூடாநட்பு, பகை மற்றும் உட்பகை ஆகிய தலைப்புகள் கொண்ட அதிகாரங்களில் நட்பின் பல்வேறு தன்மைகளும் விளக்கியுரைக்கப்படுகின்றன. உதாரணத்திற்குச் சில குறள்கள்:

நட்பு(79)

“உடுக்கை இழந்தவன் கைபோலா ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு” (788)
(ஆடை களைந்தபோது அதனைச் சரி செய்தற்குக் கை எவ்வாறு விரைந்து செல்கிறதோ அது போல் நண்பனுக்குத் துன்பம் வரும் போது விரைந்து சென்று உதவுவதே நட்பபாகும்.) 

“முகம்நக நட்பது நட்பு அன்று நெஞ்சத்து 
அகம்நக நட்பது நட்பு”(786)
(முகம் மட்டும் மலர்வது நட்பாகாது அன்பால் நெஞ்சம் மலரும்படி நட்புச்செய்வதே உண்மையான நட்பபாகும்.)

நட்பு ஆராய்தல்(80)

குடிப்பிறந்தது தன்கண் பழிநாணுவானைக்
கொடுத்தும்கொளல்வேண்டும் நட்பு” (794)
(நற்குடியில் பிறந்து பழிக்கு அஞ்சும் ஒருவனை விட்டுக் கொடுத்தாகிலும் நண்பனாக்குக.)

இவற்றுடன் பொருட்பாலில் அவை அறிதல்(72), பெரியாரைப் பிழையாமை(90) ஆகிய அதிகாரங்கள் கற்றோர் நிறைந்த அவையில் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பது பற்றியும் பெரியவர்களை மதித்து நடத்தல் பற்றியும் கூறுவன. இவ்வதிகாரங்களில் உள்ள குறள்பாக்கள் புலம்பெயர் மாணவர்களுக்கு மிகுந்த பயனை விளைவிப்பனவாகும். உதரணத்திற்கு:

அவையறிதல்(72)

“அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர்”(711)

(சொற்களின் தகுதியறிந்தவர்கள் ஒரு அவைக்களத்தி ல் அதன் தகுதியினை அறிந்து அதற்குத்தக சொல்லினை ஆராய்ந்து சொல்வர்)

“இடைதெரிந்து நன்கு உணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர்”(712)
(சொற்களின் தகுதியறிந்தவர்கள் சபையின் சூழலை அறிந்து உணர்ந்து பேசவேண்டும் )

“நன்றுஎன்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு” (715) 
(தம்மை விட அறிவு மிக்கவர் கூட்டத்தில் தாமே வலியச் சென்று பேசாதிருத்தல் சிறப்புடையது.)

புலம்பெயர் சூழலில் எமது பண்பாட்டுக்கல்வியில் முக்கியமானதும் அடிப்படையானது மான ஒன்று, ‘உலக நோக்கு’ என்ற அம்சமாகும். உலகம் பற்றியும் சமூகம் பற்றியும் வாழ்வியல் பற்றியும் ஒருவர் கொண்டிருக்கக் கூடிய எண்ணப்பாங்குகளே ‘உலக நோக்கு’ எனப்படுகிறது. இவையே நம்பிக்கைகள், கலைக்கோலங்கள், சடங்குசம்பிரதாயங்கள் அனைத்தையும் தீர்மானிப்பவையுமாகும். இவ்வாறான உலக நோக்கு சார்ந்த முக்கிய அம்சமொன்றை திருக்குறளின் ‘ஒப்புரவு அறிதல்’(22) என்ற அதிகாரத்தில் நாம் கண்டுதெளியலாம். ஒப்புரவு என்ற சொல்லானது ‘உலக நடை அறிந்து பிறர்க்குதவுதல்’ என்னும் பொருள் தருவது. இத்தொடர்பிலே பல செய்திகளை இவ்வதிகாரம் எடுத்துப் பேசியுள்ளது. இவ்வாறான உயர் பண்புகளுடன் வாழ்ந்தவர்களைச் ‘சான்றோர்’ எனக்கூறுகிறார் திருவள்ளுவர். சமூகத்தில், இவர்கள் எத்தகைய பண்புகளுடன் வாழ்ந்து மக்களுக்கு வழிகாட்டி வந்தார்கள் என்பன போன்ற விடயங்கள் பொருட்பாலில் ‘சான்றாண்மை’ (99) என்ற தனி அதிகாரத்தில் திருவள்ளுவர் எடுத்துரைக்கிறார். அவ்வதிகாரத்திலிருந்து ஒரு குறள் வருமாறு:  

“அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்து சால்பு ஊன்றிய தூண்”(983) 
(சான்றாண்மை என்ற மண்டபத்தைத்தாங்கும் ஐந்து தூண்களான பண்புகள் அன்புடைமை, நாணம், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை ஆகும்.)

சன்றோர் சமூகம் சார்ந்த உயர் குணங்களாக, உயிர்களிடத்தில் அன்பு செலுத்தும் பண்பு, தகாத செயலைச் செய்ய நாணும்(அஞ்சும்) பண்பு, எல்லோருக்கும் உதவும் பண்பு(ஒப்புரவு), இரக்க குணம் காட்டும் பண்பு(கண்ணோட்டம்), மனத்தூய்மையுடன் உண்மை பேசும் பண்பு (வாய்மை) ஆகிய 5பண்புகள் பற்றி திருக்குறளில் விரிவாகவே எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இவ் வைந்து பண்புகளுக்கும் தனித்தனி அதிகாரங்கள் திருக்குறளில் காணப்படுவது இவற்றின் சிறப்பி னையும் முக்கியத்துவத்தினையும் உணர்த்துவது. அவ்வதிகாரங்களாவன, அன்புடைமை(8), நாண்உடைமை(102), ஒப்புரவு(22), கண்ணோட்டம்(58), வாய்மை(30) என்பனவாகும். உதரணத்திற்கு ஒப்புரவு அறிதலிலிருந்து சில குறள்கள் வருமாறு:

“கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு 
என்னாற்றும் கொல்லோ உலகு”(211)

(பெய்யும் மழை உலகத்தாரிடமிருந்து கைமாறு எதனையும் எதிர்பார்க்காதது போல் நல்லவர்களும் கைமாறு கருதாமலேயே உதவி செய்கின்றனர்.) 

“பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனன் உடை யான்கண் படின்”(216)

(நல்ல பண்புகளையுடைய ஒப்புரவாளனிடம் செல்வம் சேர்ந்தால் அது ஊர்நடுவேயுள்ள பயனுள்ள மரம் பழம் நிறைந்திருந்தால் அது எவ்வாறு பயன்படுமோ அது போல் இச்செல்வமும் பயன்படும்)

“ஊருணி நீர்நிறைந்து அற்றே உலகு அவாம்
பேரறி வாளன் திரு”(215)

(ஊர்மக்களைப்பெரிதும் விரும்பும் பேரறிவு படைத்தவனுடைய செல்வம் ஊர்மக்களுக்குக் குடிநீர்தரும் குளம் குடிநீரால் நிறைந்தது போன்றது.)

தமிழர் பண்பாட்டின் உலக நோக்குக்கான அடிப்படைகளைக் கொண்டதான ஆழ்ந்தகன்ற கல்வியும் புலனடக்கப் பண்பும் வாழ்வியல் பற்றிய தெளிவான கொள்கைப்பிடிப்பும் கொண்டதொரு சான்றோர் சமுதாயம் உருவாதற்கு மேற்படி திருக்குறள் வழிக்கல்வியே உதவக் கூடியது. அதாவது அனைத்து மானிடத்தையும் தழுவுவதற்கான விரிந்த பார்வைக்கான அடித்தளம் இங்கேயே உருவாகிறது எனலாம். இவ்வகையான எமது பண்பாட்டம்சங்களைச் சரியான முறையில் எடுத்துச் சொல்லக்கூடிய திருக்குறள் வழியான கல்வி மற்றும் கலைப்பாடத்திட்டங்கள் போதனை முறைகளில் அமைந்தால் பல தலைமுறையினர் சிறந்த பண்பாட்டம்சங்கள் பொருந்தியவர்களாக வாழ்வர். 

இ. நிர்வாகம் சார்ந்த பண்பாட்டுப்பேணுகை:
ஆட்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் முதலிய நிர்வாகப்பணியளர்கள் பேணிக் கொள்ளவேண்டிய பண்பாட்டு நியதிகள்பற்றி அதாவது ‘மேலாண்மை’ பற்றி பல அதிகாரங்களில் திருக்குறள் கூறுயிருப்பதை இம்மூன்றாம் பகுதியில் நோக்கலாம். இவைபற்றி புலம்பெயர்ந்த மாணவர்கள் அறிந்திருத்தல் அவசியமான தொன்றாகும். பணத்தை முதலிட்டுத் தொழில்கள் புரியும் நிர்வாகிகள் மற்றும் கல்விசார் நிறுவனங்களை நிர்வாகம் செய்பவர்கள் ஆகியோருக்கு இவை பயன்படக்கூடியன.(management) குறிப்பாக, தெரிந்து செயல் வகை(47), வலி அறிதல்(48), காலம் அறிதல்(49), இடன் அறிதல்(50), தெரிந்து தெளிதல்(51), தெரிந்து வினையாடல்(52) ஆகிய ஆறு அதிகாரங்கள் ஒரு செயல் தொடங்குவதற்கு எவ்வாறான அணுகுமுறைகளைப் படிப்படியாகக் கைக்கொள்ள வேண்டும் என்பதை விளக்குவன. இவற்றில் முதற்கண் செயல் தொடங்குவதற்கு ஏற்றதான சூழ்நிலை உளதோவென ஆராய வேண்டும் எனவும் பின்னர் தனது வலிமை, அதன் பின்னர் அச்செயல் செய்தற்குரிய காலம், இடம் என்பவற்றைத் தேர்ந்தெடுத்தல் பற்றியும் அதன்பின்னர் அச்செயலை முன்னெடுப்பதற்குரிய வர்களைத் தெரிந்து தெளிதல் வேண்டும் எனவும் கூறப்படுகிறது. அதாவது தக்கவர்களை அதற்குத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் பின்னர் இறுதியாக அமைந்த தெரிந்து வினையாடல் என்ற அதிகாரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைச் செயல்புரிய வைத்தல் கூறப்படுகிறது. இவ்வாறு, நிர்வாகத்தோடு தொடர்புடைய அனைத்து விடயங்களும் மேற்கூறப்பட்ட அதிகாரங் களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. இவை மாணவர்களுக்குப் பாடசாலைகள், பல்கலைக் கழகங்கள், நிர்வாகப்பணியிடங்கள் போன்றவற்றில் சிறப்புடன் செயலாற்றுதற்குரிய வழிவகை களை அறிவதற்குத் துணைபுரியக்கூடியவைகளாகும்.

நிறைவாக.....
தமிழரின் பண்பாட்டம்சங்களைப் பேணிப்பாதுகாக்கும் முக்கியமான அறஇலக்கியப் பதிவாக அமைந்த ஆக்கம் திருக்குறள் எனக்கண்டோம். தமிழர்கள் தாங்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தங்களது பண்பாட்டம்சங்களைப் பேணிப்பாதுகாப்பதற்குத் திருக்குறளி லிருந்து அழுத்திப் பேசப்படவேண்டிய அம்சங்கள் இக்கட்டுரையில் சுட்டிக்காட்டிக் காட்டப்பட்டன. இவை உரியவாறு புரிந்து கொள்ளப்படும் நிலையில் புலம்பெயர் சூழலின் தமிழ்ச்சமுதாயமானது உலகநேயம் மிக்க சான்றோர் சமுதாயமாக உருவாகும் என்பது எனது திடமான நம்பிக்கையாகும்.

மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R