முனைவர் செல்வகுமார்முன்னுரை
‘பாவையும் பாவையும் என்னும் இருசொற்களும் எவற்றைக் குறிக்கின்றன? இரண்டு சொற்களும் சொல்லளவில் ஒன்றே. எனினும் இங்குப் பொருளளவில் வேறு வேறு ஆகும். ஆண்டாளும் திருப்பாவையும் என அடைப்புக் குறிக்குள் தந்திருப்பதால் முதலில் இருப்பது ஆண்டாளைக் குறிக்கும். அடுத்தது திருப்பாவை என்னும் நூலினைச் சுட்டும் எனலாம்.

‘பாவை’ என்னும் சொல்லுக்குப் பொருள் பொம்பை. பஞ்சாய்க்கோரையால் பொம்மை செய்து இளமகளிர் விளையாடுதல் பண்டைய வழக்கம். உவமையாகு பெயராய்ப் பெண்ணைக் குறிப்பதும் உண்டு. ‘இது என்பாவை, பாவை இது என’ எனவரும் ஐங்குறுநூற்றுப் பாடல் தொடரில் ‘பாவை’ என்பது பெண்ணையும், பொம்மையையும் முறையே சுட்டுதல் அறியத்தகும்.

சாதாரணமானவர்களைக்காட்டிலும் முனிவர்கள் உயர்ந்தவர்கள்; அவர்களை விட ஆழ்வார்கள் உயர்ந்தவர்கள்; அவர்களுள்ளும் பெரியாழ்வார் உயர்ந்தவர்; அவரையும் விஞ்சி உயர்ந்து நிற்பவர் ஆண்டாள் என்பது சுவாமி பெரியவாச்சான் பிள்ளை கருத்து.

1. பாவை (ஆண்டாள்) வரலாறு:
விஷ்ணுசித்தர் தமது நந்தவனத்தில் துளசிச்செடியின் கீழ்க் கண்டெடுக்கப்பெற்ற பெண் குழந்தைக்குக் கோதை எனப் பெயரிட்டு வளர்த்து வந்தார். அவரே பெரியாழ்வார். செல்வமாக வளர்ந்த குழந்தை திருமால் மீது மால் கொண்டு அவனையே மணாளனாக வரித்துக்கொண்டது. பெரியாழ்வார் மலர்மாலை கொடுத்துத் திருமாற்குச் சாத்தும் திருப்பணியை மேற்கொண்டவர். கோதையானவள் இறைவனுக்காகத் தொடுக்கப்பட்ட மாலையைத் தான் அணிந்து, பெருமானுக்குத் தானேற்றவள்தானோ என்று நோக்கிப்பின் அளிப்பது வழக்கம். இச்செய்தியாராய்ப் பெரியாழ்வார் அதனை இறைவற்குச் சூட்டிவந்தார். ஒருநாள், தன்மகளின் அடாத செயலைக் கண்டு வெகுண்டு, வேறு மாலை தொடுக்குமாறு செய்து, இறைவற்குப் புனைய, இறைவன் இரவில் அவரது கனவில் தோன்றி அவள் அணிந்து விடுத்த மாலையே தனக்கு மகிழ்ச்சி விளைப்பதாகக் கூறினான். பெரியாழ்வாரும் அவ்வாறே அம்மாலையையே அளித்து வந்தார். இது காரணமாக ஆண்டாளுக்குச் சூடிக்கொடுத்தவள் என்ற பெயர் எய்தியது. இவள் மணப்பருவம் அடைந்தவுடன் பிறர் எவரையும் மணக்க எண்ணம் இன்றித் திருவரங்கப் பெருமாற்கே தான் உரியவள் எனக் கூறிவந்தாள். இவ்வாறு அவள் கருதியதற்கு அவளது அருளிச் செயல்களிலேயே அகச்சான்றுகள் காணலாம். அவளுடைய தந்தை பலபட முயன்றும் அவட்கு மணமுடிக்கக் கூடவில்லை. திருவரங்கப் பெருமான் கட்டளையின் பேரில், ஆண்டாளம்மையைத் திருவரங்கத் தலத்திற் கொண்டு சேர்த்ததாகவும் அங்கே அவள் இறைவனை அடைந்ததாகவும் வரலாறு கூறும். ஆண்டாள் திருநட்சத்திரம் : ஆடிப்பூரம்.

2. ஆண்டாள் காலம்
திருப்பாவைப் பதின் மூன்றாம் பாசுரத்தில் ‘வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று’ என்று ஒரு தொடர் உள்ளது. அதிகாலை வேளையில் கிழக்கே வெள்ளி மேலெழுந்து மேற்கு வானில் வியாழன் மறைந்த நிகழ்ச்சியானது கணித நூற்கணக்கின்படி 7, 8, 9 ஆம் நூற்றாண்டுகளில் நான்குமுறை நிகழ்ந்ததாகவும் அவற்றுள் கி.பி.731இல் மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளில் (மார்கழிப் பௌர்ணமியன்று) வெள்ளி எழுச்சியும் வியாழன் வீழ்ச்சியும் நிகழ்ந்தன எனவும் வரையறை செய்யப்படுகிறது. எனவே ஆண்டாள்காலம் கி.பி.8ஆம் நூற்றாண்டின் முற்பகுதி எனலாம்.

3. பாவைபாடிய நூல்கள்
பாவையாகிய ஆண்டாள் பாடிய பாடல்கள் திருப்பாவை, நாச்சிய    hர் திருமொழி என இரண்டு நூல் தொகுதிகளாய் அமைந்துள்ளன. திருப்பாவையில் முப்பது பாசுரங்;கள் அமைந்துள்ளன. நாச்சியார் திருமொழி நூற்றுநாற்பத்து மூன்று பாடல்களின் தொகுப்பு. இக்கட்டுரையில் திருப்பாவை மட்டுமே ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.

4. பாவை
‘கோகுலத்து உள்ள ஆயர்கள் மழை பெய்யாக்குறையை நீக்க வேண்டிக் கண்ணனைத் தலைமையாக நியமித்துத் தங்கள் பெண்களை மார்கழி நோன்பு நோற்கச் சொல்ல, அவர்கள் அதற்கியைந்து பெருமானையும் தோழிமார்களையும் அதிகாலையில் துயிலுணர்த்தி அழைத்துக் கொண்டு, யமுனா நதியில் மார்கழி நீராடி நோற்று, கண்ணபிரானை நாயகனாகப் பெறும் தங்கள் மனோரதத்தை அடையப்பெற்றார்கள் என்பதே ஆண்டாள் அருளிய திருப்பாவையின் வரலாறு என்பார் வியாக்கியானச் சக்கரவர்த்தி பெரியவாச்சான்பிள்ளை. இளம்பெண்டிர் ஈர நுண்மணலால் தேவி வடிவம் செய்து அதை வைத்து வழிபடுவது நோன்புக்காலத்தில் காணக்கூடியதாகும். ‘நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்’, ‘பிள்ளைகளெல்லாம் பாவைக்களம் புக்கார்’ எனவரும் திருப்பாவைத் தொடர்கள் இக்கருத்துக்கு அரண்செய்வன. இந்நோன்பின் வரலாறு பரிபாடல் 11ஆம் பாடலில் சொல்லப்படுகிறது. ஆசிரியர் நல்லந்துவனார்.

கனைக்கு மதிர்குரல் கார்வான நீங்கப்
பனிப்படு பைதல் விதலைப் பருவத்து
ஞாயிறு காயா நளிமாரிப் பிற்குளத்து
மாயிருந் திங்கள் மறுநிறை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்கப்
புரிநூல் அந்தணர் பொலங்கலம் ஏற்ப
வெம்பா தாக வியனில வரைப்பென
அம்பா ஆடலின் ஆய்தொடிக் கன்னியர்
……………..

தாயருகா நின்று தவத்தைந் நீராடுதல்
நீயுரைத்தி வையைநதி

இப்பரிபாடற்பகுதியால், வையைக் கரையில் மார்கழி நீராடி நோற்கும் நோன்பு சங்க நாளிலே கன்னிப்பெண்களுக்குப் பெருவழக்காயிருந்தமை தெளிவாகும். இந்நோன்பை ‘அம்பா ஆடல்’ என்ற பெயரால் நல்லந்துவனார் கூறுகின்றார். தாயோடு ஆடப்படுவதால் இப்பெயர் பெற்றது எனப் பரிமேலழகர் குறிப்பிடுவார். ஐந்து முதல் ஒன்பது வயது வரையுள்ள சிறு கன்னியரே தைந்நீராடி நோற்றற்குரியர் எனப் பிங்கலந்தை வரையறை செய்கிறது. இவ்வாறாயினும் சங்ககாலத்துக்குப் பிற்பட்ட காலத்தே கன்னியர் எல்லாராலும் இந்நோன்பு கைக்கொள்ளப் பெற்றது என்பதைத் திருப்பாவை வழியே அறிகிறோம்.

இம்மைப் பயன் கருதிக் கன்னியரால் ஆதியில் நடத்தப்பெற்று வந்த மார்கழி நோன்பானது, மறுமை கருதி அடியார்களால் பாடப்பெறும் பெருமையை அடைந்தது. ஆனால், இந்நோன்பின் பழஞ்செய்திகள் மறக்கப்பட்டும் கன்னிப்பெண்களால் இது கைக்கொண்டு நடத்தப்படாமலும் போயின. இருபாலராலும் சமயசாரமாகக் கொள்ளப்பட்டுத் திருப்பாவை ஓதப்படுகிறது.

5. திருப்பாவை – நூலமைப்பு
திருப்பாவை நூலில் முப்பது பாசுரங்கள் உள்ளன. அவை, வெண்டளையால் அமைந்த எட்டடி நாற்சீர் ஒருவிகற்பக் கொச்சகக் கலிப்பா என்னும் யாப்பில் அடங்குவன. பழைய பதிப்புகளில் ஒவ்வொரு பாசுரத்திற்கும் ஒவ்வொரு ராகம் குறிப்பிடப்பட்டுள்ளது. முப்பது பாட்டுகளையும் ஆறு பகுதிகளாகப் பிரித்துப் பொருளமைதி கொள்வது மரபு.

முதல் ஐந்து பாசுரங்களில் திருமாலின் பர, வியூக, விபவ, அந்தர்யாமி, அர்ச்சை என்ற ஐந்து நிலைகள் கூறப்படுகின்றன. மார்கழி நோன்பின் நோக்கம், நோற்றற்கு உரியவர், நோன்பின் வழிமுறைகள், நோன்பின் பயன் ஆகியவை சுட்டப்படுகின்றன.

6-10 வரை உள்ள பாசுரங்களின் செய்திகள், சற்றே புதிய ஐந்து சிறுமிகளை எழுப்புவது போல் உள்ளன.
அடுத்த ஐந்து பாசுரங்கள் வயதில் சற்றே பெரியவர்களையும் அநுபவத்தில் முன்னேறியவர்களையும் எழுப்பும் முறையின.

நான்காம் பகுதியில் (16-20) பெண்டிர் அனைவரும் நந்தகோபன் திருமாளிகைக்குச் சென்று, வாயில் காப்போனை வேண்டி, மணிக்கதவம் திறக்கச் செய்து உள்ளே புகுந்து, நந்தகோபன், யசோதை, நப்பின்னை, கண்ணன், பலதேவன் ஆகியவர்களை எழுப்புகிறார்கள்.

ஐந்தாம் பகுதியில் (21-25) நப்பின்னையோடு சேர்ந்து அவர்கள் அனைவரும் கண்ணனை எழுப்புகிறார்கள்; எம்பெருமான் துயிலெழுந்து விடுகிறான். தாங்கள் வந்த காரியத்தை ஆராய்ந்தருள வேண்டும் என, பகவானின் லீலைகளைப் போற்றிப் பாடுகிறார்கள்; கண்ணன் வந்து சிங்காதநத்தில் அமரவும் வேண்டுகின்றனர்.

இறுதிப்பகுதியில் (26-30) நோன்பை முடிப்பதற்கு வேண்டிய சாதனங்களைக் கூறித் தங்கட்கு வேண்டிய பரிசைப் பற்றியும் விண்ணப்பிக்கிறார்கள்; “உனக்கு என்றைக்கும் குற்றேவல் செய்யும் பேற்றைக் கொடு” என வேண்டுகிறார்கள். ‘பறை தருவான்’ என முதற்பாசுரத்தில் கூறிய பெண்டிர் முப்பதாம்பாசுரத்தில் ‘அங்கப்பறை கொண்ட ஆறு’ எனவும் பாடுகின்றனர். பறை என்பது உட்பொருளாக பகவத் கைங்கர்யத்தைக் குறிக்கிறது.

ஒவ்வொரு பாசுரத்தின் இறுதியும் ‘ஏலோர் எம்பாவாய்’ என முடிகிறது. (முப்பதாம் பாசுரம் மட்டும் இன்புறுவர் எம்பாவாய் என நிறைகிறது). ‘ஏலோர் எம்பாவாய்’ என்பது, பாவை நோன்பு நோற்பவர் அப்பாவையே விளித்து முன்னிலைப்படுத்திக் கூறுவதாகும். எம்முடைய பாவை போல்பவளே! இதனை ஏற்றுக்கொள்; ஆராய்ந்துபார்’ எனப் பொருள் கூறுவர். ஏல், ஓர் என்னும் சொற்கள் அசைச்சொற்கள் என்பார் பெரியவாச்சான்பிள்ளை.

6. சொற்சுவை
திருப்பாவைப் பாடல்களில் அமைந்திருக்கும் சொற்சுவையை முதலில் அனுபவிப்போம்.


6.1 பாசுரம் 2:‘ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி’.

ஐயம் என்பது தகுந்தவர்கட்கு மிகுதியாகக் கொடுப்பது; பிச்சை என்பது பிரம்மச்சாரிகட்கும் துறவிகட்கும் கொடுப்பது. ஐயம் என்பது ‘முகந்து இடுவது’; பிச்சை என்பது ‘பிடித்து இடுவது’ என்றும் உரை உண்டு. தம்மிடம் கேட்காதவர் ஆயினும் குறிப்பறிந்து கொடுப்பது ஐயம் எனவும் கேட்பவர்க்குத் தருவது பிச்சை எனவும் கூறுவர். ‘ஐயம் இட்டு உன்’ என்பது ஆத்திச்சூடி. ‘பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்பது வெற்றிவேற்கை. ஒருவர் தேடிச்சென்று கொடுப்பது ஐயம். பொருள் தேவைப்படுபவர் வந்து கேட்பது பிச்சை

6.2 பாசுரம் 3 :
ஐயம் பிச்சை என்னும் சொற்களுக்கு இப்படியும் பொருள் கூறுவர்.

‘வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்’

பசுக்கள் பால் சொரிந்து கொண்டேயிருக்கும். ஆயர்கள் குடங்களை இட்டு, நிறைந்தபின் வாங்கி வாங்கி வைக்கும்படியாய்ப் பால் சுரக்கும் பசுக்கள். வாங்குவோர்க்குக் கைசலிக்கும் வள்ளல் தன்மை உடைய பசுக்கள், கைம்மாறு கருதாமல் வழங்கும் பசுக்கள். ‘ஏற்றகலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்’ எனப் பின்னரும் கூறப்படும். (பாசுரம் 21)

6.3 பாசுரம் 5:‘தூய பெருநீர் யமுனைத் துறைவனை’

யமுனையாற்றின் நீர் ‘தூய பெருநீர்’ எனப் போற்றப்படுகிறது. ‘தூய்மை’ என்பது நீரின் தன்மையையும் தெளிவையும் சுட்டுவது. கிருஷ்ணனும் பெண்களும் மாறி மாறிக் கொப்பளிக்கையாலே வந்த தூய்மையாகவும் அமையும் என்பார் உரைகாரர். ‘பெருநீர்’ ஆவது பத்துக் கடல் போல் பரந்துபட்ட வெள்ளம் உடையது.

6.4 பாசுரம் : 9‘துயில் அணை’

உறங்குவதற்குத் தகுந்த படுக்கை. ‘மெத்தென்ற பஞ்ச சயனம்’ எனப் பத்தொன்பதாம் பாடலிலும் படுக்கையின் தன்மை கூறப்படும். படுக்கையானது ஐந்து விதமான தன்மைகள் உடையதாய் இருத்தல் வேண்டும். அவையாவன, அழகு, தன்மை, மென்மை, வெண்மை, நறுமணம் என்பன. இலவம்பஞ்சு, செம்பஞ்சு, வெண்பஞ்சு, மயில்தூவி, அன்னத்தூவி ஆகியவற்றால் அமைந்த படுக்கை எனவும் கூறுவர். எந்தப் படுக்கையாயினும் அதில் உறங்கி எழுந்துவிட்டால் அதைவிட்டு நீங்கிச் சென்றுவிடுதல் இயல்பு. ஆனால் ஆயர் சிறுமியர் உறங்கும் படுக்கை ‘துயில் அணை’. அதாவது ஒருமுறை படுத்தவுடன் உறக்கத்தைத் தருவதோடு, உறங்கி எழுந்து உடனே மறுபடியும் படுத்தாலும் துயிலைத் தருகின்ற படுக்கை என்பர்.

6.5 பாசுரம் 26 : ‘பால் அன்ன வண்ணத்துப் பாஞ்ச சன்னியம்’

திருமாலின் கையில் உள்ள சங்கு, பால் போன்ற (மாசற்ற) வெண்மை நிறம் உடையது. அது பாஞ்ச சன்னியம் எனப்படுவது. ஆயிரம் சிப்பிகள் சூழ நடுவில் இருக்கும் தன்மையது இடம்புரிச் சங்கு; இடம்புரி ஆயிரம் தன்னைச் சூழ நடுவில் இருக்கும் தன்மையது வலம்புரி; வலம்புரி ஆயிரம் சூழ நடுவில் இருக்கும் தன்மையது சலஞ்சலம்; சலஞ்சலம் ஆயிரம் சூழ நடுவில் இருக்கும் தன்மையது பாஞ்ச சன்னியம் என்னும் சங்கு. நாலாம் திருப்பாசுரத்தில் ‘வலம்புரிபோல் நின்றதிர்ந்து’ எனச் சொல்லப்பட்டது. இங்குப் பாஞ்சசன்னியம் எனப்படுகிறது. எது சரி? எம்பெருமான் வலம்புரிச் சங்கத்தை எப்பொழுதும் தனது இடது திருக்கையில் தாங்கியிருப்பான். ஆனால், வெற்றியைக் கொண்டாடும் பொழுது – பகைவரைப் போரில் அஞ்சியோடும்படி செய்யும் பொழுது, பாஞ்சசன்னியத்தைத் தனது வலத்திருக்கரத்தில் வாங்கி முழக்குவான் என்க.

6.6 பாசுரம் 30 : ‘சங்கத் தமிழ் மாலை’

சங்கத் தமிழ் மாலை திரள் திரளாக அநுபவிக்க வேண்டிய தமிழ்மாலை என்று பொருள்செய்யும் மரபு உண்டு. ‘தீந்தமிழ், செந்தமிழ், முத்தமிழ் என்று கூறுவது போலச் ‘சங்கத்தமிழ்’ என்ற தொடர்ச் சொல் பண்டைத் தமிழ்ச் சங்கங்களைக் குறிக்கிறது. ‘சங்கத்தமிழ் மூன்றும் தா’ என்பார் ஒளவையார். தமிழிலக்கிய வரலாற்றில் கடவுள்மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த துறைக்கு ஒரேயொரு எடுத்துக்காட்டுத்தான் உண்டு. அஃது ஆண்டாள் காதலாம். திருப்பாவையை நல்லுருத்திரன் பாடிய முல்லைக் கலியோடும் சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவையோடும் ஒப்பீடு செய்தால் திருப்பாவை சங்கத்தமிழ்மை கொண்டது தெளிவாகும்’ என்கிறார் டாக்டர் வ.சுப.மா.

7. பொருட்சுவை

திருப்பாவையின் பொருட்சுவையை இனிச் சிந்திக்கலாம்.

7.1 பாசுரம் 3 : ‘தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரிபெய்து’

உலகத்தார்க்கு ‘நோன்பு’ என்ற ஒரு காரணத்தைக் கூறிவிட்டுப் பெண்டிர் நீராட்டத்தில் இறங்கினால் பலநன்மைகள் உலகத்துக்கு ஏற்படும் என்பது இத்தொடரின் பொருள்.

மாதம் மும்முறை மழைபொழிய வேண்டும் என்று ஆன்றோர் கூறுவர்; ஆண்டவனை வேண்டுவர். ஏன்?

வேதம் ஓதிய வேதியர்க்கு ஓர்மழை
நீதிமன்னர் நெறியினுக்கு ஓர்மழை
மாதர் கற்புடை மங்கையர்க்கு ஓர்மழை
மாதம் மூன்று மழைஎனப் பெய்யு மே.
- விவேகசிந்தாமணி

செந்தீ முதல்வர் அறம் நினைந்து வாழ்தலும்
வெஞ்சின வேந்தன் முறை நெறியில் சேர்தலும்
பெண்பால் கொழுநன் வழிச் செலவும் இம்மூன்றும்
திங்கள் மும் மாரிக்கு வித்து
- திரிகடுகம்

இங்ஙனம் வேதியர்க்காகவும் வேந்தர்க்காகவும் மாதர்களுக்காகவும் மூன்று மழை பெய்யும் என்கின்றனரே, அது எப்படிப் பெய்யும்? மாதத் தொடக்கத்தின் மூன்று நாட்களிலா? திங்களின் இறுதி மூன்று நாள்களிலா? இடைமூன்று நாள்களிலா? நூல் விரிவுரையாளராகிய பெரியவாச்சான் பிள்ளை அழகுபடச் சொல்வதாவது; பத்து நாள்களுக்கு ஒரு முறை என ஆண்டு முழுவதும் மழை’. வறட்சியையும் தவிர்த்து, வெள்ளக் கேடும் இல்லாமல் அளவோடு பொழியும் மழை! ஊறெண்ணெய் விட்டாற்போல் மழை பொழியும். அதாவது குழந்தைகட்குத் தலையிலே ஊற ஊற எண்ணெய் தேய்ப்பது போல அளவாக விட்டு விட்டு, ஒன்பதுநாள் வெயிலும் ஒரு நாள் மழையும் எனப் பொழியும்! (தீங்கின்றி மாரி – அளவோடு பொழியும் மழை)

7.2 நோன்பு நிறைவேற்றம் : பாசுரம் 27

கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன்தன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம் பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம், அதன்பின்னே பாற்சோறு
மூட நெய்பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

தன் அடியிற் பணியாதவரை வெற்றி கொள்ளும் குணங்களை உடைய கோவிந்தனே! உன்னைப்பாடி, உன்னிடம் நாங்கள் வேண்டும் பேற்றினைப் பெற்று, மேலும் நாங்கள் பெறக்கூடிய பரிசில் உண்டு. அப்பரிசில் நாட்டார் புகழும்படி இருத்தல் வேண்டும். அவை சூடகம் (முன்கையில் அணியும் ஆபரணம்) தோள்வளை, தோடு (காதணி), செவிப்பூ (காதில் சூடும் பூ. இது பொன்னாற் செய்யப்பட்டும் இருக்கலாம் என்பர்). அந்த அணிகலன்கள் எல்லாமும் வேறுபலவும் உன்னாலும் நப்பின்னையாலும் அணிவிக்கப்பட நாங்கள் அணிவோம்; உங்களால் அணிவிக்கப்பட்ட ஆடைகளை உடுத்திக்கொள்வோம். அதன்பின்பு, பாலாலே சமைத்த சோற்றில் அது கண்ணுக்குத் தோன்றாமல் மறையும் படியாக அதன்மீத செய்து பெய்து அது தங்கி தேங்க இடமில்லாமல், முழங்கை மேல் வழிந்து வரும்படியாகக் கூடியிருந்து குளிர வேண்டும்.

நோன்பு தொடக்கிய காலத்தில், நெய் உண்ணோம்; பால் உண்ணோம்; நாட்காலே நீராடி மையிட்டு எழுதோம்; மலரிட்டு நாம் முடியோம் (பாசுரம் 2) என்றார்கள். அது நன்கு நிறைவேறியதைக் கொண்டாட இப்பாசுரத்தில் அணிகலன், ஆடை, உணவு முதலியவற்றை வேண்டுகிறார்கள்.

7.3 சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே: பாசுரம் 28

குறைவொன்றும் இல்லாத கோந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழக்க ஒழியாது!
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே

திருமாலுக்கு உரிய, திருநாமங்கள் பன்னிரண்டு. அவை, இருடீசேசன,; கேசவன், கோவிந்தன், தாமோதரன், திரிவிக்கிரமன், நாராயணன், பத்மநாபன், மதுசூதனன், மாதவன், வாமனன், விஷ்ணு, ஸ்ரீதரன் என்பன. எண்ணற்ற வேறு திருநாமங்களும் பெருமாளுக்கு உண்டு. திருப்பாவையில் முதற்பாசுரம் முதலாக இருபத்தாறாம் முடிய உள்ளவற்றில் பெருமான் திருநாமங்களாய்க் கூறப்படுவன நாராயணன்(1), திர்pவிக்கிரமன் (3), கிருஷ்ணன் (4), பத்மநாபன் (4), தாமோதரன் (5), ஹரி(6), கேசவன் (7), மாதவன் (9) என்பன. இருபத்தேழாம் பாசுரத்தில் ‘கோவிந்தன்’ என்னும் திருநாமம் சொல்லப்படுகிறது. இருபத்தெட்டாம் பாசுரத்தில் பாவைப்பெண்கள் பெருமானைப் பார்த்துக்; கூறும்போது”, பெருமானே! உனக்கு மிகவும் விருப்பமான பெயர் கோவிந்தன் என்பதனை அறிவோம் ஏன்? பசுக்களை வளர்ப்பவன் என்பது அன்றோ இதன்பொருள்!

எனவே, வேறுபெயர்களை இட்டு இதுவரை அழைத்ததைக் கருதி எங்கள் மீது சினம் கொள்ளாதே என்கின்றனர். ‘சிறுபேர்’ என்பது முதற்பாசுரத்தில் சொல்லிய நாராயணன் என்பதைக்குறிப்பதாக உரை கூறுவர் பெரியோர். இதுவே உயர்ந்த திருநாமம்; பெருமாள் உகந்த திருநாமம். அதனாலேயே திரௌபதி, ‘கோவிந்தா’ என விளிந்து முறையிட்டாள்.

ஆறாகி இருதடங்கள் அஞ்சன வெம்புனல் சோர அளகம் சோர
வேறான துகில் தகைந்த கைசோர மெய்சோர வேறோர் சொல்லும்
கூறாமல் கோவிந்தா கோவிந்தா என்று அரற்றிக் குளிர்ந்து நாவில்
ஊறாத அமிழ்து ஊற உடல்புளகித்து உள்ளமெலாம் உருகினாளே.
- வில்லிபாரதம் 2:2:247

ஆபத்தில் அவளுக்குப் புடைவை சுரந்தது’ கோவிந்த நாமத்தால் அல்லவா? அப்படி அவளைக் காப்பாற்றிய போதிலும், கோவிந்தா என அவள் அழைத்ததற்கு, எவ்வளவு அருள் பாலிக்க வேண்டுமோ அவ்வளவு செய்யவில்லை. அவளுக்கு நான் கடன்பட்டுள்ளேன். வட்டியுடன் பெருகிய கடன் வளர்ந்ததுபோல் என் நெஞ்சைவிட்டு அகலவில்லை’ என்று கிருஷ்ணன் ஆதங்கப்பட்டான் என்றால் கோவிந்த நாமத்தின் பெருமையை என்னென்பது!

8. பொருட்சுவையில் பிற இலக்கிய ஒப்பீடு

8.1 மழைப்பாட்டு : பாசுரம் 4

ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி
ஊழிமுதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்
பாழியந் தோளுடைப் பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தே லோர் எம்பாவாய்

‘மழைக்கண்ணா’ என மழைக்கடவுளை விளித்துக் கூறுவதாய் இப்பாசுரம் அமைந்துள்ளது.

….ஒன்று நீ கை கரவேல்

மழைக்கடவுளே! நீ உனது கொடைத்தன்மையில் எதையும் மறைத்து வைத்துக் கொள்ளக்கூடாது என்று தொடங்குகின்றனர். கை-கொடை நாட்டார் சிறுமை நோக்காமல் உனது பெருமைக்குத்தக்கபடி பொழிக என்பது கருத்து.

ஆழியுள் புக்குமுகந்து கொடு
கடலின் உள்ளே இறங்கி, நீரை முகந்துகொண்டு வரவேண்டும் அங்கு மணல்தான் மீதம் உள்ளது என்று சொல்லும் அளவுக்கு, நீரையெல்லாம் கொண்டு வரவேண்டும்.

ஆர்த்து ஏறி
மின்னி, முழங்கி, வில்லிட்டுக் கொண்டு பெரிய ஆர்ப்பாட்டத்தோடு வரவேண்டும். மழை பெய்யும்போது தோன்றும் மின்னலையும் இடியையும் பின்னர்க் குறிப்பிடுவதால், ‘ஆர்த்து ஏறி’ என இங்கே சொல்வது, தொலைவில் அடிவானத்தில் மேகம் எழும்போதே ஆரவாரத்தோடு வருவதைக் குறிக்கும். விண்ணீல மேலாப்பு விரித்தாற்போல், மதயானைபோல் என்றெல்லாம் கூறும்படி உச்சிவானம் ஏறவேண்டுமாம். நிறைமாதக் கருக்கொண்ட மகளிர், மெல்ல மெல்ல மலை ஏறினாற்போல் தொடு வானத்தினின்றும் உச்சிவானத்துக்கு ஏறிவரவேண்டும்.

ஊழிமுதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
காலம் முதலான அனைத்துக்கும் காரணனான திருமாலின் உருவம் போல் மேகத்தின் உடல் கருமைநிறம் அடைய வேண்டுமாம். ‘மழைமுகிலோ, ஐயோ! இவன் வடிவென்பதோர் அழியா அழகு உடையான் என்பது கம்பர் வாக்கு. கவிஞர்கள் தங்களது சமயச் சார்புக்குத் தக்கவாறு இக்காட்சியைக் காட்டுவர். ‘முன்னிக் கடலைக் சுருக்கி எழுந்து உடையாள் என்னத் திகழ்ந்து’ என்பார் மாணிக்கவாசகர். ‘நீறு அணிந்த கடவுள் நிறத்தவான் ஆறணிந்து சென்று, ஆஆர்கலி மேய்ந்து அகிற் சேறு அளிந்த முலைத் திருமங்கைதன் வீறணிந்தவன் மேனியின் மீண்டவே’ என்பார் கம்பர், ‘தெய்வ நாயகன் நீறணிமேனிபோற் சென்று பௌவம் மேய்ந்து உமை மேனிபோற் பசந்து’ என்பார் பரஞ்சோதியார்.

பற்பநாபன் கையில் ஆழிபோல் மின்னி

எம்பெருமான் கையில் உள்ள சுதர்சனம் போல் (சக்கரம்போல்) மின்னுதல் வேண்டும். ‘எம்மை ஆள் உடையாள் இட்டிடையின் மின்னி’ (உமாதேவியின் சிற்றிடைபோல் மின்னல் தோற்றுவித்து) திருவெம்பாவை.

வலம்புரிபோல் நின்றதிர்ந்து
பெருமான் கையில் இருக்கும் வலம்புரிச்சங்கம் போல் (பாஞ்ச சன்னியம் போல்) முழங்க வேண்டும். உமாதேவியின் திருவடிவில் உள்ள சிலம்பைப் போல் ஒலிக்க வேண்டும் என்பது மாணிக்கவாசகரது சைவ நோக்கு.

சார்ங்கம் உதைத்த சரமழை போல்
சார்ங்கம் - சாரங்கம் : திருமால் கையில் உள்ள வில்லின் பெயர். இரைபெறாத பாம்பு போல முன்பு அடங்கிக் கிடந்த சாரங்கம் என்கிற வில்லால் தள்ளப்பட்ட அம்பு மழை போல், வானத்திலிருந்து மழை பொழிய வேண்டுமாம். உமாதேவியின் அருளைப் போல் மழை பொழிய வேண்டுகிறது திருவெம்பாவை.

8.2 எருமைகளின் தாயன்பு : பாசுரம் 12
கனைத்திளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்று பால்சோர
நனைத்தில்லம் சேறாக்கும்

இளங்கன்றுகளை உடைய எருமைகள், கறப்பார் இல்லாமையால் கதறிக்கொண்டு, ‘கன்று பசியால் என்ன பாடுபகிறதோ’ என்று இரங்கின; தொலைவிலே கட்டப்பட்டிருக்கும் கன்றை நினைத்த அளவிலே பாலைச் சொரிந்தன. ‘மேகங்களைப் போல் விட்டுவிட்டுப் பொழியாமல், இடைவிடாமல் பொழிகின்றன. மேகங்கள் கடலில் முகந்தல்லவோ மழை பொழியவேண்டும்? இங்கு அப்படியில்லை. ஒரே இடத்தில் நின்று, பால் சொரிந்து, கால் மாற்றி மாற்றி நிற்பதால் இல்லம் சேறாகியது. இது பாற்சேறு!

ஒப்பு

1. சேல் உண்ட ஒண்கனாரின் திரிகின்ற செங்கால் அன்னம்
மால் உண்ட நளினப்பள்ளி வளர்த்திய மழலைப் பிள்ளை
காலுண்ட சேற்று மேதி கன்று உள்ளிக் கனைப்பச் சோர்ந்த
பாலுண்டு துயிலப் பச்சைத் தேரை தாலாட்டும் பண்ணை.
- கம்பர் .பால.1:2:13

2. மோட்டெருமை வாவிபுக முட்டுவரால் கன்றென்று
வீட்டளவும் பால்சொரியும் வெண்ணெயே – நாட்டில்
அடையா நெடுங்கதவும் அஞ்சல் என்ற சொல்லும்
உடையான் சடையப்பன் ஊர்
- கம்பர் (தனிப்பாடல்)

9. கண்கள் இரண்டும் : பாசுரம் 22

திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டு

பெருமானுடைய கண்கள் இரண்டும் சந்திரனையும் சூரியனையும் போன்று விளங்குகின்றன என்பது கருத்து. அடியார்கட்குத் சந்திரனாகவும் தீயவர்களுக்குச் சூரியனைப் போன்றும் விளங்கும் கண்கள்.

ஒப்பு
1. பசுங்கதிர் மதியமொடு சுடர்கண்ணாக
இயன்ற எல்லாம் பயின்றகத் தடக்கிய
வேதமுதல்வன் என்ப
தீதறவிளங்கிய திகிரியோனே    - நற்றிணைக் கடவுள் வாழ்த்து

2. திங்களும் செங்கதிரும் கண்களாக    - தண்டபாணிசுவாமிகள்

3. சுட்டும் விழிச் சுடர்தான் கண்ணம்மா
சூரிய சந்திரரோ    - பாரதியார்

முடிவுரை
திருப்பாவை, தமிழ் இலக்கியத்திற்கும் பக்தி உலகத்திற்கும் ஆண்டாள் வழங்கிய புதுமைப்படைப்பு. இந்நூல் தோன்றிய பின்னரே திருவெம்பாவை பிறந்தது எனலாம். திருப்பாவையில் மிக்க ஈடுபாடு கொண்டவர் உடையவர் ஆகிய இராமாநுசர். ‘திருப்பாவை ஜீயர்’ என்று அவர் அழைக்கப்பட்டார். 18ம் பாசுரம் ‘உந்து மதக்களிற்றன்’ எனத் தொடங்குவது. எம்பெருமானார் மிகவும் விரும்பிய பாசுரம் அது. ஒருநாள் இதனைப் பாடியவாறே அவர் பெரிய நம்பியின் திருமாளிகையின் முன்னர் நின்றார். ‘சீரார்வளை ஒலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்’ என இவர் நிறைவு செய்யவும் பெரிய நம்பியின் திருமகள் அத்துழாய் வந்து திறக்கவும் இராமநுசர் அப்பெண்ணை நட்பின்னையாகவே கருதி தியானித்து மோகித்தார். இந்நிகழ்வை அத்துழாய் தம் தந்தையிடம் கூறினார். ‘உந்து மதகளிற்றன் அநுஸந்தானமோ?’ என்றாராம் அவர். திருப்பாவை மார்கழி மாதத்தில் மட்டுமே சொல்வதற்குரிய நூலெனக் கருதுதல் பிழை என்பதற்கு இந்நிகழ்ச்சி சான்றாகும். எனவே என்றும் திருப்பாவையை வாசிப்போம்; அதனைத் தந்த திருப்பாவையை (ஆண்டாளை) பூசிப்போம்.

துணைநூற்பட்டியல்
1. ஐங்குறுநூறு - ஒளவை.துரைசாமிப்பிள்ளை(உ.ஆ.), முதற்பதிப்பு1957, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்.
2. திருப்பாவை - அ.மாணிக்கம் (உ.ஆ), ஒன்பதாம் பதிப்பு.2015, மணிவாசகர் பதிப்பகம், சென்னை - 108.
3. பரிபாடல் - தமிழண்ணல் (ப.ஆ.), கோவிலூர் மடாலயம், கோவிலூர் - 630 307.
4. தொல்காப்பியம் - தமிழண்ணல் (உ.ஆ.), முதற்பதிப்பு.2008, மீனாட்சி புத்தகநிலையம், மதுரை -01.
5. கம்பராமாயணம் - இராஜகோபாலச்சாரி, நாற்பத்தெட்டாம் பதிப்பு.2015, வானதிப் பதிப்பகம், சென்னை – 17.
6. திருவெம்பாவை – அ.மாணிக்கம் (உ.ஆ.)ஏழாம் பதிப்பு.2015, மணிவாசகர் பதிப்பகம், சென்னை – 108.
7. திருவிளையாடற்புராணம் – வ.ஜோதி(உ.ஆ.),இரண்டாம் பதிப்பு.1998, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை -17.
8. தனிப்பாடல் திரட்டு – அ.மாணிக்கம்(உ.ஆ.), முதற்பதிப்பு.1998, பூம்புகார் பதிப்பகம், சென்னை – 108.
9. நற்றிணை - ஒளவை.துரைசாமிப்பிள்ளை(உ.ஆ.), முதற்பதிப்பு.2008, தமிழ்மண் அறக்கட்டளை, சென்னை -17.
10. பாரதியார் கவிதைகள் – இ.சுந்தரமூர்த்தி(ப.ஆ.), ஐந்தாம் பதிப்பு.2003, பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை -14.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

* கட்டுரையாளர் - - முனைவர். மு.செல்வக்குமார், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை-09. -


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R