இரா.மூர்த்திமனிதனின் அழகியல் வெளிப்பாடு கலையாகும். கலை என்பது பார்ப்போர், கேட்போர் மனதில் அழகியல் உணர்வைத் தோற்றுவிக்கும் வகையில் அந்தந்தப் பயன்பாட்டுச் சூழலோடு வெளிப்படுத்து” ஆகுமென்று தற்காலத் தமிழகராதி கூறுகிறது. இக்கலை என்ற சொல்லிற்கு “செயல்திறன்,  ஆண்மான், ஒளி, சாத்திரம்,  மேகலை” எனவும் பொருள் கொள்ளப்படுகிறது. மனித வாழ்க்கையோடு தொடர்புடைய இக்கலை,  உணர்ச்சி கொள்ளக்கூடியது. உணர்வுகளைத் தூண்டக்கூடியது. மனித மரபு வகைப்பட்டது. மனிதனால் செயற்கையாக உணர்வுகளை இயங்கச் செய்யக்கூடியது. தனிமனிதனிலிருந்து சமூகத்தை இணைக்கக் கூடியது. இத்தகைய சிறப்பு பெற்ற கலை, கலைப்பண்பாடு காலங்காலமாக மக்களோடு ஒன்றிணைந்தே செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் இசை,  சிற்பம்,  ஓவியம்,  கட்டிடம், நாட்டியம்,  கூத்து,  ஒப்பனை உள்ளிட்ட கலைகளும் அடங்கும். இசை, நாட்டியம், கூத்து,  ஆடல், பாடல் ஆகிய நிகழ்த்துக்கலைகள் உடலோடு உணர்ச்சிகளை ஏற்படுத்தி பிறர் பார்த்து மகிழுவதற்கு உறுதுணையாக இருந்து வருகின்றன.  இக்கலைகளை நாட்டுப்புற நிகழ்த்துக்கலைகள் (Folk Performing Arts) என்று அழைக்கப்படுகிறது.

“நாட்டுப்புற நிகழ்த்துக்கலைகள் மண்ணில் மகிழ்ந்து,  மண்ணின் மனத்தோடு நாட்டுப்புற மக்களால், கலைஞர்களால் மரபு வழியாக நிகழ்த்திக் காட்டப்படும் கலைகள்” என்று ஓ.முத்தையா அவர்கள் கூறுகிறார். கலையின் வாயிலாக மனிதன் வெளிப்படுத்திக் கொள்வது தன் செய்திகளையோ,  நோக்கங்களையோ அல்ல. மனிதன் கலையின் வழியாகத் தன்னைத்தானே தானே வெளிப்படுத்திக் கொள்கிறான் என்று இரவிந்திரநாத் தாகூர் கூறுகிறார். இதில் தப்பாட்டம் என்ற பறையாட்டம், தென்மாவட்டங்களிலும்,  ஜமாப் (திடும்) என்ற ஆட்டம் கொங்கு நாட்டிலும்  நிகழ்த்தப்படும் கலைகள் இரண்டும் நாட்டுப்புறக் கலையில் முதன்மையாகக் கொள்ளப்பட்டாலும், தப்பாட்டத்திலிருந்தே திடுமெனும் ஜமாப்; ஆட்;டம் வளர்ச்சி கொண்டவையாகும். அத்தகைய சிறப்புபெற்ற தப்பு,  திடும் ஆகிய இரண்டு இசைக்கருவிகளின் அமைப்பு, பயன்பாடு,  இசைக்கும்முறை,  அதன் வகைகள், அதனை உருவாக்கும்முறை குறித்து ஒப்பிட்டு ஆராய்வதே இக்கட்டுரையின் மையமாகும்.

பறையாட்டம் / தப்பாட்டம்
பறை என்பது ஒரு தோல் இசைக்கருவியாகும். ஆடு, மாடு ஆகிய விலங்குகளின் தோலினை வட்ட வடிவமான மரக்கட்டையில் இறுகக்கட்டி இசைக்கிற ஒரு வகை தோல் இசைக்கருவியாகும். “இந்திய சங்கத்தில் அவநந்த வாத்தியங்கள் எனப் பறை அழைக்கப்படுகிறது. அவநந்தம் என்றால் மூடப்படுவது என்று பொருளாகையால் ஒரு பாத்திரமோ, மரத்தாலான கூடோ தோலினால் போர்த்தப்பட்டால் அது ‘அவநந்தம்’ என்றும், ‘புஸ்பகாம்’ எனவும் அழைக்கப்படுகிறது என்று டி.எஸ் பார்த்தசாரதி கூறுகிறார்.

இந்து தர்மத்தில் பறை சக்தியின் பெயரென்றும் அவளே ஆதியென்றும்,  சிவனே பகவான் என்றும் பாரதியார் கூறுகிறார். இப்பறை சங்க காலத்திலிருந்து தமிழக நிலப்பரப்பில் குறிஞ்சியில் குறிஞ்சிப்பறையாகவும், முல்லைநிலத்தில்  முல்லைப்பறையாகவும், மருதநிலத்தில் மருதப்பறையாகவும், நெய்தல்நிலத்தில் நெய்தல்பறையாகவும், பாலைநிலத்தில் பாலைப்பறையாகவும் பெயரிடப்பட்டு மக்கள் மத்தியில் இசைக்கப்பட்டன.

பறையின் பயன்பாடு
மக்களின் வாழ்வியலோடு பரிணமித்துள்ள பறை வயல் வெளிகளில் உழைக்கின்ற உழுகுடிகளை முறசரைந்து அழைக்கவும்,  வயல்வெளிகளில் உழவு வேலை செய்வோர்க்கு ஊக்கம் அளிக்கவும், களைபறிக்கும்போது முன்னின்று கொட்டவும், தாணியங்களை விதைக்கும்போதும் அத்தானியங்களை அறுவடை செய்யும்போதும், களத்து மேட்டில் தானியங்களை உண்ணும் பறவை,  விலங்குளை விரட்டியடிக்கவும் பயன்படுத்தப்பட்டன.

போர்க்காலங்களில் போர்களத்தில் நின்று வீரர்களையும், படைகளையும் அணிதிரட்டுவதற்கும் மன்னர்கள் உரைக்கின்ற செய்தியைப் பறையறிந்து ஊர்கள் தோறும், வீதிதோறும் சென்று உரைக்கவும் இப்பறை பயன்பட்டன. மழை இல்லாகக் காலங்களில் வருண பகவானை அழைக்கப் பயன்படுத்தப்பட்டன. கோயில் திருவிழாக்காலங்களில் ஊர்சாட்டுதல், வரிசெய்தல்,  சாமிசாட்டுதல்,  காப்புக்கட்டுதல்,  திருவிழாவின்போது காவுகொடுத்தல்,  கரகம் எடுத்தல் எனப் பல்வேறு நிகழ்வுகளுக்குப் பறை பயன்படுத்தப்பட்டன.

பறை உருவாகும் விதம்
பறை என்கிற தப்பு எறுமை,  காளை அதன் இளங்கன்று ஆகியவற்றின் தோலினை எடுத்து அதிலுள்ள சவ்வினை மிருதுவாக வெயிலில் ஐந்து அல்லது ஏழு நாட்கள் சாம்பல் தடவி நான்கு புறமும் இழுத்து மூங்கில் ஆணியால் அடித்து காயவைக்கப்படுகிறது. நல்ல முறையில் தோல் காய்ந்தப்பிறகு அதனை இரவில் நீரில் ஊர வைத்து, காலையில் அத்தோலை இரும்பாலான வரட்டை, பலா, முந்திரி,  கொய்யா ஆகிய மரக்கட்டைகளில் ஏதேனும் ஒன்றினை வட்டமாக வளைத்து அதன்மீது அத்தோளினைப் போர்த்தப்படுகிறது. அதிலுள்ள ரோமங்களை சிறுகத்தியால் இளைத்து இறுகக் கட்டப்படுகிறது. பின்பு முறையாகக் காய்ந்த பிறகு அதன் தோலினை அருகி எடுக்கப்படுகிறது.

வட்டமாக உருவாகிய பின் கட்டையின் நடுவில் ஒரு ஓட்டையிட்டு அதில் தோலாலான வாரினைக் கயிறாகக்கட்டி தொங்கவிடப்படுகிறது. இவ்வாறு முறையாக உருவான தப்பினை இசைக்க இரண்டு குச்சிகள் தேவைப்படுகின்றன. அவை அடிக்குச்சி மற்றொன்று சிம்புக்குச்சி ஆகும். அடிக்குச்சி கொய்யா, கருவேல மரங்களிலும், சிம்புக்குச்சி மூங்கில், புரசை ஆகிய மரங்களிலிருந்து வெட்டி வந்து அடிப்பதற்கு ஏதுவாகச் செய்யப்படுகிறது.

தப்பு சத்தமாகவும்,  கணீரென்று கேட்பதற்காக வைக்கோலில் தீ மூட்டி அதனை சூடேற்றி வாட்டி சூடேறிய பின்பு உடனே அடிக்காமல் அதன் மீது துண்டு,  வைக்கோல்,  துணி கொண்டு கைகளால் சூடுபறக்கத் தேய்த்த பின்பு தட்டிப்பார்க்கப்படுகிறது. தேய்க்காமல் குச்சி கொண்டு தட்டும்போது தப்பு கிழிந்து விடும். அவ்வாறு உருவான தப்பு மங்களம் மற்றும் அமங்களம் என்று இரண்டு காரியங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

பறை இசைக்கும்முறை
தொடக்க காலத்தில் வெறுமனே தப்புகளைக்கொண்டு மட்டுமே இசைத்து வந்தனர். இதில் குறித்த எண்ணிக்கை என்று காட்டுவதில்லை. ஆனால் இன்று வெறுமனே தப்பினைக் கொண்டு மட்டுமே இசைப்பதில்லை. இரண்டு புறமும் பேரிசை ஒலியோடு இசைக்கக் கூடிய பெரிய கடாம் போன்ற தப்பு இசைக்கப்படுகிறது. இவை இரண்டு புறமும் இசைக்கக்கூடியது. அதீத சத்தத்தை ஏற்படுத்தக் கூடியது. இதனை ஒருவர் மட்டுமே இசைக்க முடியும். இதற்கு பயன்படும் குச்சிகள் இரண்டும் அடிக்குச்சிகள் மட்டுமே. அதன் முனைப்பகுதி துணியாலோ அல்லது உருண்டையாகவோ செய்யப்பட்டிருக்கும்.

அத்தோடு அரை வட்ட வடிவ நிலையில் இரண்டு புறமும் சிம்புக்குச்சியை மட்டும் வைத்து இசைக்ககூடிய சிறிய தப்பும் இசைக்கப்படுகிறது. அதனைத் தப்பட்டை என்றழைப்பர். அத்தோடு முத்துக்கள் நிரப்பட்ட கிழுகடி கருவியும் இணைத்து ஒலிக்கப்படுகிறது. இக்கிழுகடி கருவி, தட்டை இரண்டும் சங்க காலத்தில் குறிஞ்சி நிலத்தில் இளமகளிர்கள் கிளி, மயில், குருவி முதலிய பறவைகள் தினைப் பயிர்களை உண்ணும் காலத்தில் அவைகளை விரட்ட பெண்கள் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் இன்று ஆண்கள் மட்டும் இதனைப் பயன்படுத்துகின்றனர். தப்பு இசைக்கருவியை ஆண், பெண் இருவரும் உடலிலுள்ள தோல் பகுதியில் மாட்டிக்கொண்டு இசைக்கப்படக் கூடியதாகும்.

தப்பாட்டத்திற்கு குறைந்தது நான்கு நபர்கள் முதல் அதிகப்படியான ஏழுபேர்கள் வரை தேவைப்படுகிறது. அனைவரும் ஒன்றினைந்து சேர்ந்து இசைக்கும் தருணத்தில் உடல்அசைவோடு உணர்வுகளையும் சேர்த்து இசைக்கும்போது பார்ப்பவர்கள் சேர்ந்து ஆடக்கூடிய உணர்வுகளை ஏற்படுத்தக்கூடியது. இத்தாப்பட்டம் கொங்கு நாட்டில் கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியான குறிச்சி,  குனியமுத்தூர்,  பாப்பநாயக்கன் புதூர்,  காரமடை போன்ற பகுதிகளில் பறையர் (ஆதிதிராவிடர்) இனமக்கள் இசைக்கின்றனர். இத்தொழில் இவர்களின் குடித்தொழிலாகக் கொள்ளப்படுகிறது. தென்தமிழக்கத்தில் பல்வேறு ஊர்களான மதுரை,  விருதுநகர்,  தேனி,  திண்டுக்கல்,  ராமநாதபுரம்,  தூத்துக்குடி,  கன்னியாகுமரி எனப் பரந்து பட்ட நிலையில் இத்தப்பாட்டம் இசைக்கப்படுகிறது.

ஜமாப் (திடும்)
கொங்கு நாட்டில் கோயம்புத்தூர்,  ஈரோடு,  திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் திருவிழா, கோயில்நோம்பி,  அரசியல் நிகழ்வுகள்,  கோயில் நேத்திக்கடன்,  குடமுழக்கு,  இறப்பு போன்ற நிகழ்ச்சிகளில் விமரிசையாக நிகழ்த்தப்படக்கூடியது ஜமாப் எனும் பேரோசைக் கருவியாகும். இசைக்கருவியில் தப்பாட்டம் தோலில் மாட்டிக்கொண்டு இசைக்கப்படுகிறது. ஆனால் அதற்கு நேர்மாறாக இடுப்பில், தொடையில்,  இரண்டு கால்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டு அடிக்கக் கூடியது ஜமாப் எனும் ஆட்டமாகும். இக்கருவிகள் கொங்கு நாட்டிற்கே உரித்தான இசைக்கருவியாகக் கொள்ளப்படுகிறது.

ஜமாப் ஆட்டத்தை இசைப்பதற்கு என்று நேரம் காலம் பார்ப்பதில்லை. சூழலை மட்டுமே உள்வாங்கிக்கொண்டு அந்தந்த நிகழ்வுகளுக்குத் தக்கவாறு இசைக்கப்படுகிறது. சான்றாகக் கோயில் குடமுழக்கு, தைப்பூசம், நேற்றிக்கடன் ஆகிய நிகழ்ச்சிகளில் இரவு, பகல் என்று பார்க்காமல் வேண்டும்போது இசைத்து மகிழ்கின்றனர். அதிகாலையில் கடவுளுக்கு நேற்றிக்கடன் நிறைவேற்றும்போது அத்தகைய சூழலிலும் இசைக்கப்படுகிறது.
அரசியல் தலைவர்கள் வருகை,  மாநாடு பேரணி போன்ற நேரங்களில் குறிப்பிட்ட மணிநேரமே இசைக்கப்படுகிறது. தொடர்ச்சியாக நீண்ட நேரம் ஜமாப் இசைக்கருவியை இசைக்கப்படுவதில்லை. அவ்வாறு தொடர்ந்து அடிக்க முற்படும்போது உடலளவில் சோர்வு ஏற்படுவதோடு அடியும் ஏற்ற இறக்கத்தில் இலயம் குறைந்து வெளிப்படுகிறது.

இத்தகைய ஜமாப் எனும் இசைக்கருவி அதிகச் சத்த உணர்வுகளை ஏற்படுத்தக் கூடியது. அதனால் திடும் என்றழைக்கப்படுகிறது. இடி இடித்தாற்போன்று உலகையே அதிரச்செய்யும். இதனை  “பாடு உலர்ந்தன்றே பறைக் குரல் எழிலி” (அகம்.23:1-2) என்று அழைக்கப்படுகிறது. கோயில் திருவிழாவின்போது தேரின் பின்பகுதியில் ஜமாப் போன்ற கும்பா மாட்டப்பட்டு இரண்டு நபர்கள் இசைத்துக்கொண்டே வரவார். போரினைத் தொடங்குவதற்கு முன்பாக ஜமாப் போன்ற பெரிய இசைஇசைத்து வீரர்களை உற்சகாப்படுத்தி தொடங்கி வைக்கவும் செய்துள்ளனர். ஜமாப்பை இசைக்க குறைந்தது ஐந்து நபர்களிலிருந்து அதிகமாகப் பத்து நபர்கள் தேவையானதாகிறது. ஓவ்வொருவரும் தனித்தனியே ஒரே ஜமாப்பை மட்டுமே இசைக்க முடியும். மற்றவர்கள் இதில் சேர்ந்து இசைக்க முடியாது. அவ்வாறு சேர்ந்து இசைக்கும் பட்சத்தில் இலயம் மாறும். அதே நேரத்தில் ஒருவர் பிடித்துக் கொள்ள மற்றொருவர் அடிக்கலாம்.

அவ்வாறு பல நிலைகளில் அடித்து மகிழக்கூடிய இந்த ஜமாப்பை கொங்கு நாட்டில் பெரும்பாலான இடங்களில் அருந்ததியர் இன மக்கள் கொட்டுகின்றனர். ஒரு சில ஊர்களில் ஆதிதிராவிட இனமக்கள் அடிக்கிறார்கள். ஆனால் தொடக்க காலத்தில் திடும் எனும் இசைக்கருவி விலங்குகளை விரட்டுவதற்காகவும், ஆடல், பாடல் ஆடி மகிழ்வதற்காகவும் கோவில் திருவிழாவில் பலியிடவுமே முன்னின்று கொட்டப்பட்டன.

சங்க இலக்கியத்தில் திடும் எனும் பறை இசைக்கருவியை குறிஞ்சி,  பாலை நிலத்தில் பொது மன்றங்களில் இசைக்கபட்டன. அந்த இசைக்குத் தகுத்தாற்போன்று கூத்தர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்துள்ளனர். அவ்வாறு ஆடிப்பாடி மகிழ உறுதுனையாக இருந்த பறையை “ஆடுகளப்பறை” (அகம்.பாலை.45:2) என்று அழைக்கப்பட்டன. முல்லை நிலத்தில் உழவர்கள் கொல்லையில் விதைத்து முளைத்து அதில் வளர்ந்துள்ள களைக்கொள்ளிகளை கழைத்து எடுப்பதற்கு முன்பாகக் கொல்லை புனத்தில் பறையை முழக்கி ஒலி எழுப்பிய பின்பே அக்களையைக் கழைந்துள்ளனர். இதனை,

“கறங்குபறைச் சீரின் இரங்க வாங்கி
களைகால் கழீஇய பெரும்புன வரகின்” (அகம்.194:8-9)

என்ற அகநானூற்றுப் பாடல் கூறுகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற ஒலியெழுப்பக்கூடிய இசைக்கருவியை இன்று பல பெயர்களில் பெயரிட்டு அழைக்கின்றனர்.

ஜமாப்பின் வகைகள்
ஜமாப்; இசைக்கருவியைப் பல்வேறு பெயர்களில் வடிவத்திற்கு தக்கவாறு பெயர்கள் வைத்து அழைக்கப்பட்டுள்ளன. அதில்

1. ஐமாப் அல்லது கும்பா, லகாரி
2. தாஸ்ரா (அரைவட்ட சட்டி)
3. உருட்டு (சிறிய கும்பா)
4. அரளிக் குச்சி இவைகள் அனைத்தும் ஜமாப்பிற்கு முதன்மையாகத் தேவைப்படக்கூடிய இசைக்கருவிகளாகும்.

கும்பா / லகாரி
ஜமாப் இது பொதுப்பெயராகும். இதனை காரணப்பெயர்கொண்டு கும்பா,  லகாரி என்றும் அழைக்கப்படுவதுண்டு. கும்பா அரை வட்டத்தில் பெரிய அகலமான வடிவத்தில் இருக்கக் கூடியது. இன்றும் கிராமப்புறங்களில் ராகி,  கம்பு சோளம் ஆகியவற்றின் கூலினைக் கரைத்துக் குடிப்பதற்குப் பயன்படுத்தும் கருவி கும்பாவாகும். திருமணமாகும் பெண்களுக்குத் தாய்வீட்டு சீதனமாக கும்பா, சங்கு கொடுக்கப்படுகிறது. அதனால் இவையனைத்தும் தாய்வழிச் சமூகத்தோடு தொடர்புடையது. தாய்வழி சமூகத்தில் முதலில் பயன்படுத்திய  இசைக்கருவி கும்பாவாகும்.

கிராமப் புறங்களில் கோழியின் குஞ்சு தண்ணீரில் விழுந்து இறக்கும் தருணத்தில் அக்குஞ்சியை கும்பாவிற்குள் போட்டு சிறுகுச்சியைக் கொண்டு தட்டும்போது அவை பிழைத்து விடும். தன்மையுள்ளது. அத்தகைய உயிர் அழிவிலிருந்து காத்து உயிர் கொடுக்கக் கூடியது கும்பாவாகும். பின்பு குறிஞ்சி நிலத்தில் ஆண்கள் விலங்களை விரட்டியடிக்க இக்கும்பா போன்ற இசைக்கருவியைப் பயன்படுத்தியுள்ளனர். அதனால் இதற்கு கும்பா என்று பெயர் பெற்று பண்பாட்டோடு தொடர்பு பெற்று வருகிறது. அதிகமான சத்தத்தை எழுப்பக் கூடியது. இதனை இசைப்பதற்கு உடல் திரகாத்திரமானவர்களே தேவையாகிறார்கள். தோற்றத்திலும் வடிவத்திலும் அரைவட்ட நிலையில் பெரிய அமைப்புடன் காணப்படக்கூடியது. ஐமாப் ஆட்டத்தில் குறைந்தது மூன்று அல்லது இரண்டு பெரிய கும்பா பயன்படுத்தப்படுகிறது. ஒருவர் மட்டுமே இதனை இசைக்க முடியும். இசைப்பதற்கு அடிக்குச்சியான அரளிக்குச்சியைப் பயன்படுத்துகின்றனர்.

தாஸ்ரா (அரைவட்ட சட்டி)
தாஸ்ரா எனும் அரைவட்ட வடிவ இசைக்கருவி ஜமாப் ஆட்டத்தில் முக்கிய பங்கு வகிக்க கூடியது. ஆட்டத்தின் அடித்தொடக்கத்தை அமைத்துக் கொடுக்கக் கூடிய சிறிய அரைவட்ட வடிவ சாந்து சட்டியாகும். அரை வட்டவடிவ சட்டியில் தோலினைப் போர்த்தி அதனை இசைக்கின்றனர். இதில் பெரும்பாலும் மாட்டுத் தோலினைப் போர்த்துவது கிடையாது. அதற்குப் பதிலாகத் தோல்போன்ற லைலான் சவ்வினைப் பயன்படுத்துகின்றனர். தாஸ்ராவை இசைப்பதற்கு இரண்டு மேல்குச்சிகள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதன் ஓசை ஜமாப்பின் ஓசைபோன்று அதிரக்கூடியது அல்ல. மெல்லிய சத்தத்தையே ஏற்படுத்தக் கூடியது. இதனை ஒருவர் மட்டுமே இசைக்க முடியும். பறையை தோலில் மாட்டிக்கொண்டு இசைப்பதுபோல் இதனை கழுத்தில் மாட்டிக்கொண்டு கையை முன்புறமாக வைத்து இசைக்கக் கூடியது. ஜமாப் ஆட்டத்தில் குறைந்தது இரண்டு தாஸ்ராவாது பயன்படுத்தப்படுகிறது.

உருட்டு (சிறிய கும்பா)

ஐமாப், கும்பா, லகாரியின் சிறிய வடிவமே உருட்டு ஆகும். இதற்கு மற்றொரு பெயர் சிறிய கும்பாவாகும். சிறியவர் முதல் பெரியவர்கள் வரை இசைக்கக் கூடியது. தோற்றத்தில் சிறியதாக இருப்பதால் இதற்கு சிறுகும்பா என்று பெயர் வழங்கப்படுகிறது. இதனை இசைப்பதற்கு இரண்டு அரளி அடிக்குச்சிகள் தேவைப்படுகிறது. அரைவட்ட வடிவத் தோற்றத்தில் மாட்டின் தோலினைக்கொண்டு போர்த்தப்பட்டிருக்கக் கூடியது.

பறை - ஜமாப் பொருள்சார் ஒப்பீடு

பறை (தப்பு)
ஜமாப் (திடும்)

1.
பறை செய்வதற்கு மாட்டுத்தோல் (களை அதன் கன்று), ஆட்டுத்தோல் பயன்படுத்தப்படுகிறது. ஜமாப் செய்வதற்கு எறுமை, காளை மாடுகளின் தோல்கள் பயன்படுத்தப்படுகிறது.

2.
அரை வட்டத்தில குறுகிய வட்டம் உடையது. கும்பா போன்ற பாத்திரத்தில் போர்த்தப்பட்ட சற்று அகலமான வடிவமுடையது.

3.
பலா, கொய்ய மரங்கள் பயன்படுத்தப்படுகிறது. பலாக்கட்டை, இரும்பாலான கும்பா பயன்படுத்தப்படுகிறது.

4.
குறைந்தது நான்கு தப்பு அதனுடன் ஒரு பெரிய தப்பு (இரண்டு புறம் அடிக்கக் கூடியது), இரண்டு குச்சிகள்  (மூங்கில், புரசை) பயன்படுத்தப்படுகிறது.
பெரிய கும்பா, இரண்டு சிறிய கும்பா, அரைவடிவ சட்டி ஒவ்வென்றிற்கும் இரண்டு குச்சிகள் பயன்படுத்தப்படுகிறது.

5.
உடலிலுள்ள தோலில் மாட்டிக்கொண்டு இசைக்கப்படுகிறது. உடலிலுள்ள கழுத்து, இடுப்பு, தொடைப்பகுதி, கால் ஆகியவற்றில் மாட்டிக்கொண்டு இசைக்கப்படுகிறது.

6.
சிறியவர் முதல் பெரியவர்வரை பயன்படுத்தப்படுகிறது.    பெரிய கும்பாவிற்கு பெரியவர்களும், சிறிய கும்பாவிற்கு சிறியவர்களும் பயன்படுத்தப்படுகிறது.

முடிவுகள்
ஜமாப் அனைத்தும் கும்பா வடிவத்தில் காணப்படுவதால் தமிழ்ச் சமுதாயப் பண்பாட்டில் கும்பா முக்கிய பங்கு வகிக்கிறது. பெரும்பாலும் கும்பா மங்களம் மற்றும் அமங்களம் ஆகிய இரண்டு காரியங்களுக்கும் பயன்படுத்துவதால் அதன் பெயரைத் தாங்கிய ஜமாப் ஆகிய கும்பாவும் மங்களம் மற்றும் அமங்களம் ஆகிய இரண்டு காரியங்களுக்கும் பண்பாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பறையும் பண்பாட்டில் தொடக்க காலத்திலிருந்து இன்று வரை தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் காணப்பட்டாலும் அதன் ஒலி தன்மை அடையாளம் மட்டும் மாறாமல் தொடர்ந்து இயங்கிக்கொண்டே வருகிறது. இதனால் ஒரு பண்பாட்டின் அடையாளம் அது சார்ந்த மக்கள் தொடர்ந்து அடையாளப்படுத்தப்பட்டு வருவதுடன், தமிழக நிலப்பரப்பில் இருக்கக்கூடிய நிகழ்த்துக் கலைகள் அழியாமல் காக்கப்பட்டு வருகின்றன. இன்றைய நவீன இயங்கு தளத்தில் மக்களின் மனம் சார்ந்த, உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு ஆறுதல் அளிக்கக் கூடிய வகையில் புத்துனர்வை ஏற்படுத்தக்கூடியவையாகப் பறை என்கிற தப்பு, ஜமாப் இசைக்கருவியாக இப்பறை இருந்து வருகிறது. கொங்கு நாட்டில் மாற்றுப் பெயருடன் இசைத்து வரும் இவ்விசைக்கருவி இதுசார்ந்து தொடக்க காலத்தில் இசைத்து வந்த மக்களின் அடையாளத்திலிருந்து மாறி புதுமையான வடிவுடன் வேறொருவர் இசைக்கும் தன்மைக்கு மாறியுள்ளது. மாற்று மக்கள் இவ்விசைக்கருவியை இசைப்பதன் தேவை என்ன? தொடக்க காலத்தில் இசைத்து வந்த மக்கள் இதிலிருந்து விலகிச் செல்வதற்கானக் காரணம் என்ன? என்பதை கொங்நாட்டு மக்களுடன் ஒப்பிட்டு ஆராய முற்பட்டால் பறையின் பயன்பாடு அதன் தேவை முழுமையாக வெளிப்படும்.

பார்வை நூல்கள்
1.    கிரியா தமிழ் அகராதி - க்ரியா,    க்ரியா  நூற்பதிப்பு ,சென்னை-01 -1992
2.    ஓ.முத்தையா  - நாட்டுப்புறவியல் மரபுகள், கிராமியப் பல்கலைக்கழகம், காந்தி கிராமம் , திண்டுக்கல் -624202 -2006
3.    நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் (உரை) - அகநானூறு மூலமும் உரையும்,      சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,  சென்னை-01, - 1970
4.    தகவலாளர்கள் பட்டியல் ஊர்கள் கோவை மாவட்ட ஊர்கள்
குறிச்சி - மாரியப்பன்
துடியலூர் – கண்ணன்
இராமசாமி - பெரியநாயக்கன் பாளையம்
இருளப்பன் - பாப்பநாயக்கன் புதூர்
சின்னத்தம்பி, கந்தப்பன் – குனியமுத்தூர், வடுகபாளையம்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

*கட்டுரையாளர் - - திரு. இரா. மூர்த்தி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,  ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் - 641020. -


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R