முன்னுரை
இடைக்கால நீதி இலக்கியங்களில் ஒன்று நன்னெறி.இந்நூலை இயற்றியவர் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்.எளிய இனிய நன்மை தரும் 40 வெண்பாக்களால் நன்னெறிகளைக் கொண்ட நூலை இயற்றியவர்.இவரின் காலம் 17 ஆம் நூற்றாண்டு ஆகும்.இவர் காஞ்சி புரத்தில் வாழ்ந்து வந்த லிங்காயதர் வகுப்பைச் சார்ந்தவர்.தம் தந்தையின் ஆசிரியரான குருதேவரிடம் திருவண்ணாமலையில் அவர் இளமைக் கல்வியைப் பயின்றார்.தக்கோர் பலரிடம் இலக்கணம் கற்றவர்.இறுதியில் நல்லாற்றூர் எனும் பதியில் வாழ்ந்திருந்த போது அவர் தம் 32 ஆம் வயதில் சிவனடி சேர்ந்தார்.அந்த நல்லாற்றுரே பின்னர் துறைமங்கலம் என்று பெயர் பெற்று விளங்கிய காரணத்தால் அவர் துறை மங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் என வழங்கப்படுகிறார்.இவர் பலப்பல நூல்களை இயற்றியுள்ளார்.அவற்றுள் புகழ்மிக்கவை பிரபுலிங்கலீலை,சித்தாந்த சிகாமணி, நால்வர் நான்மணிமாலை,சீகாளத்திப்புராணத்தின்ஒருபகுதி,சோணசைலமாலை,திருச்செந்திலந்தாதி,திருவெங்கைக் கலம்பகம்,வேதாந்த சூடாமணி,திருக் கூவப்புராணம் முதலியனவாகும.; இவர் பல நூல்கள் இயற்றியிருப்பினும் நன்னெறியில் இடம்பெறும் சமுதாய நெறிகளை அறிய முற்படுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
சமுதாயம் என்பதன் பொருள்
சமுதாயம் என்பதற்கு கௌரா தமிழ் அகராதி கூட்டம், சங்கம், பொதுவானது, மக்களின் திரள், பொருளின் திரள்,உடன்படிக்கை என்று பல்வேறு பொருள் விளக்கமளிக்கிறது.(ப.331)
அன்புடைமை
வள்ளுவர் அன்புடைமை என்ற அதிகாரத்தை தனி அதிகாரமாக வகுத்துள்ளார்.கிறித்துவ மதமும் உன்னை நீ அன்பு செய்வது போல பிறரையும் அன்பு செய் என்கிறது.இவ்வுலகில் அன்பு இல்லாதவனுக்கு இடம்,பொருள்,ஏவல் முதலான வசதிகள் இருந்தும் அவனுக்கு என்ன பயன் உண்டாக்கும் என்கிறது இந்நூல்.இதனை,
இல்லானுக்கு அன்புஇங்கு இடம்பொருள் ஏவல்மற்று
எல்லாம் இருந்தும் அவற்கு என் செய்யும் - நல்லாய்
மொழியிலார்க்கு ஏது முதுநூல் தெரியும்
விழியிலார்க்கு ஏது விளக்கு (நன்.15)
என்ற பாடலானது அன்புடையவராக இருக்க வேண்டும் என்ற கருத்தைப் புலப்படுகிறது.
இன்சொல்கூறல்
உலகத்தில் வாழும் எல்லா மக்களும் இனிய சொற்களையே பேச வேண்டும்.இன் சொல் பேசுவதே சிறந்தது .இனியவை கூறல் என்ற அதிகாரத்தை 10 ஆவது அதிகாரமாக வள்ளுவர் வகுத்திருப்பதற்கு காரணம் சமுதாயத்தில் வாழ்கின்ற மக்கள் இனிமையில்லாத சொற்களைப் பேசாமல் இருப்பதற்காகவே.இனிமையான சொல்லை கனிக்கும், இனிமையில்லாத சொல்லை காய்க்கும,; ஒப்பிட்டுக் கூறியிருப்பதை,
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று (100)
என்ற குறளின் வழி தெளிவுத்துள்ளார்.இக்கருத்துக்களுக்கு ஏற்ப நன்னெறியும் இனியசொற்களையே பேச வேண்டும் என்று கூறுகிறது.இதனை,
இன்சொலால் அன்றி இருநீர் வியன்உலகம்
வன்சொல் என்றும் மகிழாதே –பொன்செய்
அதிர்வளையாய் பொங்காது அழல்கதிரால் தண்என்
கதிர்வரவால் பொங்கும் கடல்
என்ற பாடலில் கடலானது குளிர்ச்சி பொருந்திய சந்திரனின் வருகையால் பொங்கும் வெப்பம் மிகுந்த கதிரவன் வருகையால் பொங்குமா ? அது போல பரந்த இவ்வுலகில் உள்ளோர் இனிமையான சொற்களால் மகிழ்வார்கள்; சுடு சொற்களால் எவரும் மகிழ்வதில்லை.ஆகவே சுடு சொற்களைப் பேசக் கூடாது என்ற கருத்தை வலியுறுத்துகிறார்.
நட்பு
நட்பில் வேற்றுமை காட்டக் கூடாது
நட்பு என்பதற்கு அகராதிகள் பல சொற்களை வகைப்படுத்திக் கூறியுள்ளன. நண்பன்-தோழன்,கணவன் என்று கழகத் தமிழ் அகராதி (ப.592) சுட்டுகின்றது
தமிழ் - தமிழ் அகர முதலி நட்பு என்பதற்கு சிநேகம் உறவு, சுற்றம்,நண்பன், யாழின் நாலாம் நரம்பு, காதல், அரசாங்கம் ஆறனுள் ஒன்றாகிய நட்பரசர், கையூட்டு, மாற்றரசரோடு நட்புச்செய்கை என்று விளக்கம் அளிக்கிறது.
இத்தகைய நட்பு பற்றிய செய்திகளை இந்நூல் எடுத்துரைக்கிறது. நெல்லின் உமியானது சிறிது விலகி, மீண்டும் இணைத்தாலும் முளைக்கக்கூடிய வலிமை குன்றி விடும்.நெருங்கிய நண்பர்கள் வலிமை குன்றி விடுவார்கள்.நெருங்கிய நண்பர்கள் இருவருக்குள் வேற்றுமை உண்டாகிப் பிரிந்து மறுபடியும் கூடிய போதிலும் அவர்களுடைய நட்பானது முன் போல் நெருக்கமாக இருக்காது.இதனை,
நீக்கம் அறும்இருவர் நீங்கிப் புணர்ந்தாலும்
நோக்கின் அவர் பெருமை நொய்தாலும் - பூக்குழலாய்
நெல்லின் உமிசிறிது நீங்கிப் பழமைபோல்
புல்லினும் திண்மைநிலை போம் (நன்.5)
என்ற பாடலின் மூலம் விளக்கியுள்ளார். மேலும் மற்றொரு பாடல் நல்லவருடன் நட்பு கொள் என்கிறது.காயானது பழுத்தால் தின்பதற்கு இனிய பழம் ஆகும்.இளம் தளிரானது நாள் சென்று முற்றினால் என்ன பயன் ?(அதுபோல) நல்லவருடன் கொள்ளும் நட்பானது.நாள்தோறும் நன்மையாகி வளரும் பொல்லாதவருடன் கொள்ளும் நட்பானது அவ்வாறு ஆகாது என்பதை,
நல்லார் செயுங் கேண்மை நாள்தோறும் நன்று ஆகும்
அல்லார் செயுங்கேண்மை ஆகாதே – நல்லாய்கேள்
காய்முற்றின் தின்தீங் கனியாம் இளம்தளிர்நாள்
போய்முற்றின் என் ஆகிப் போம் (நன்.38)
என்ற பாடலால் அறியலாம்.நட்பு தன்னலமில்லாதது அளவிடமுடியாது இதனை நல்லவருடன் தான் கொள்ள வேண்டும் என்பதை எடுத்துரைத்துள்ளார் சிவப்பிரகாசர்.இக்கருத்தை இக்கால மக்கள் ஏற்பது சிறந்தது.
கல்வி
கல்வியில் ஆணவம் கொள்ளக் கூடாது
கல்வியைக் குறிக்கும் ஆங்கிலச்சொல்லான “எஜிகேஸன்” என்பதற்குத் தேர்ச்சி,படிப்பு,கல்விப்பயிற்சி, வித்தை,சிட்சை,பழக்கம் என ~வின்சுலோவின் தமிழ் ஆங்கில அகராதி’ விளக்கமளிக்கிறது.(ப.420)
சென்னைப்பல்கலைக்கழகதமிழ்ப்பேரகராதிகல்விஎன்பதற்குகற்கைஇகல்வியறிவு, வித்தைஇ பயிற்சி, நூல், என்று பொருள் விளக்கம் தருகிறது.
சென்னைப்பல்கலைக்கழகஆங்கில தமிழ் அகராதி “எஜிகேஸன்” என்பதற்கு கல்விப் பயிற்சியளித்தல்,கல்விப்பயிற்சி,மனப்பண்புப்பயிற்சி, விலங்குகளின் பயிற்றுவிப்பு,பழக்குவிப்பு என்று பொருள் கூறுகிறது.
இந்நூலும் கல்வி பற்றிய செய்திகளை (பா. 7,25,26,27,29,35) அதிகமாக எடுத்துரைக்கிறது.முனிவர்களிலே பெரியவரான அகத்திய முனிவர்,கடலை கையால் மொண்டு பருகிவிட்டார்.(ஆதலால்)நாம் கல்வியால் கடலுக்கு நிகர் ஆவோம் ஆதலால் வலிமையுள்ள ஆண் சிங்கம் என்ற கர்வத்தில் ஆழ்ந்து விடாதீர்கள் என்று கூறுகிறார் ஆசிரியர் இதனை,
கடலே அனையம்யாம் கல்வியால் என்னும்
அடலேறு அனைய செருக்கு ஆழ்த்தி – விடவே
முனிக்குஅரசு கையால் முகந்து முழங்கும்
பனிக்கடலும் உண்ணப் படும் (நன்.7)
கல்வி என்பது அளவிட முடியாது இதனைக் கொண்டு ஒவ்வொருவரும் ஆணவச் செருக்கு கொள்ளக் கூடாது என்பதை மேற்கண்ட பாடல் புலப்படுத்திகிறது.இக்கால மக்களும் கல்வியின் மூலம் ஆணவத்தை கற்றுக் கொள்ளாமல் இருப்பது சிறந்தது.
கல்வியறிவில்லாதவரிடம் கற்றவர் சேரக் கூடாது
கனம் இல்லாத தெப்பத்திலே சேர்ந்த கனமான பொருளும் இலகுவாகிவிடும்.அது போல கல்வி அறிவில்லாத கயவரிடம் கற்று உணர்ந்த நல்லோர் சேர்ந்தால் அவர் தம்முடைய அறிவை இழந்து விடுவார் என்பதை,
கல்லா அறிவின் கயவர்பால் கற்றுஉணர்ந்து
நல்லார் தமதுகனம் நண்ணாரே – வில்லார்
கணையில் பொலியும் கருங்கண்ணாய் நொய்தாம்
புணையில் புகும் ஒண் பொருள் (நன்.25)
என்ற பாடலின் வழி அறியலாம்.
புலமைமிக்கவரை அலட்சியப்படுத்த கூடாது.
உடலின் சிறுமைகண்டு ஒண்புலவர் கல்விக்
கடலின் பெருமை கடவார் - மடவரால்
கண்ணளவாய் நின்னதோ காணும் கதிர்ஒளிதான்
விண்ணளவா யிற்றோ விளம்பு (நன்.26)
என்ற பாடலின் சூரிய ஒளியானது அதைப் பார்க்கின்ற கண்அளவில்அடங்கிவிட்டதா?ஆகாயத்தின் அளவில் விரிந்திருக்கின்றதா ?அதுபோல மிக்கவருடைய உடலின் சிறுமையைக் கண்டு அவருடைய அறிவுக் கடலின் பெருமையை எவரும் அலட்சியம் செய்ய மாட்டார்.புலமை மிக்கவரின் அறிவை பாராட்ட வேண்டுமே தவிர அவர்களை அலட்சியப் படுத்தக் கூடாது என்பது புலப்படுகிறது.
கற்றறிந்தவர் பிறருக்கு உதவி செய்ய வேண்டும்
பற்கள் கடினமான தின்பண்டங்களைத் தாமே மென்று கொடுத்து நாவுக்கு மிகுந்த சுவையை ஊட்டும்.(அது போல)கற்றறிந்த பெரியோர் எதிர் உதவி கருதாமல் உடல் வருந்தி இயன்ற எதிர் உதவி கருதாமல் உடல் வருந்தி இயன்ற உதவியைப் பிறர்க்குச் செய்வர்.இதனை,
கைம்மா றுகவாமல் கற்று அறிந்தோர் மெய்வருந்தித்
தம்மால் இயல்உதவி தாம்செய்வர் - அம்மா
முளைக்கும் எயிறு முதிர்சுவை நாவிற்கு
விளைக்கும் வலியனதாம் மென்று (நன் .27)
என்ற பாடலால் அறியமுடிகிறது.
அறிவுடையோர் கொடுத்து வழங்கும் இயல்புடையோர்
முதிர்ந்த அறிவுடையோர் கோபமாக இருந்த போதிலும் கொடுத்து உதவுவார்.கயவர் மனமகிழ்ச்சி உள்ள காலத்திலும் கொடுக்க மாட்டார்.வாழையானது முற்றாத காயானாலும் பயன்படும் எட்டியானது பழுத்தாழும் பயன்படுமோ?இதனை,
உடற்கு வரும் இடர்நெஞ்சு ஓங்குபரத்து உற்றோர்
அடுக்கும் ஒரு கோடி யாக - நடுக்கமுறார்
பண்ணில் புகலும் பனிமொழியாய் அஞ்சுமோ
மண்ணில் புலியைமதி மான் (நன்.29)
என்ற பாடலால் அறியலாம்.இப்பாடலில் சிவப்பிரகாசர் கற்றவர்களை வாழையுடன் ஒப்பிட்டு காட்டியுள்ளார்.
கற்றறிந்தவரை மேலோர் விரும்புவர்
கற்ற அறிவினரைக் காமுறுவர் மேன்மக்கள்
மற்றையர்தாம் என்றும் மதியாரே - வெற்றிநெடும்
வேல்வேண்டும் வாள்விழியாய் வேண்டா புளிங்காடி
பால்வேண்டும் வாழைப் பழம் (நன்.35)
என்ற கல்வி கற்றறிந்தால் மற்றவர் விரும்புவர்.கல்வி அறிவில்லாத கீழோரை யாரும் விரும்ப மாட்டார்கள் என்ற கருத்து புலப்படுகிறது.இதன் மூலம் கற்றவராக இருப்பதே சிறந்தது என்பதை வலியுறுத்துகிறார்.
பெரியோர் பண்புகளைப் பார்த்தாவது மக்கள் திருந்த வேண்டும்
அறிவு,ஒழுக்கம்,மன்னிக்கும் குணம் போன்றவற்றில் சிறந்தவர்கள் பெரியோர் ஆவார். நன்னெறி முதல் பாடல் ஆனது பெரியோர் பண்பைக் கூறி அவர்களைப் போல் இருக்க வேண்டும் என்று எடுத்துரைக்கிறது.இதனை,
என்றும் முகமன் இயம்பாதவர் கண்ணும்
சென்று பொருள்கொடுப்பர் தீங்கு அற்றோர் - துன்று சுவை
பூவில் பொலிகுழலாய் பூங்கை புகழவோ
நாவிற்கு உதவும் நயந்து (நன்.1)
என்ற பாடலில் அழகான கைகள் நாவுக்குச் சுவையான உணவுப் பொருள்களைப் புகழ்ச்சி கருதியா விரும்பிக் கொடுக்கின்றன.அதுபோல தூய்மையான உள்ளத்தைக் கொண்ட பெரியோர் எந்நாளிலும் தம்மை வரவேற்று உபசரியாதவர்களிடத்தில் தாமே வலியச் சென்று பொருள் கொடுத்து உதவி புரிவர்.தன்னை அலட்சியப்படுத்தும் பண்பு உள்ளவர்களைக் கூட அலட்சியப்படுத்தாமல் உபசரிக்கும் தன்மை படைத்தவர்கள் பெரியோர்கள் என்பது புலப்படுகிறது.
உளதூய்மையினரின் கடுமையான சொல்லும் நல்லது
தூய உள்ளத்தினர் கூறும் கடுமையான சொற்கள் இன்பம் தரும்.ஆகவே அதை எல்லாம் பொறுமையாக கேட்டு அதன் படி கேட்க வேண்டும் இதனை,
மாசற்ற நெஞ்சுடையார் வன்சொல் இனிது ஏனையவர் (நன்.2)
என்ற பாடல் அடியின் மூலம் அறியலாம்.இதன் மூலம் ஒவ்வொருவரும் உள்ளத் தூய்மையுடையவராக வாழ வேண்டும் என்பதை எடுத்துரைக்கிறார் ஆசிரியர்.
கணவனும் மனைவியும் மாறுபாடின்றி வாழ வேண்டும்
ஒற்றுமையே பலம் என்பார்கள் இந்த ஒற்றுமையைப் பற்றி தம்பதிகளிடம் சிவப்பிரகாசர் எடுத்துரைக்கிறார்.பதினாறு கலைகளும் பொருந்திய மதி முகத்தவளே,இரண்டு கண்களும் இணைந்து ஒரு பொருளைப் பார்ப்பது போல் அன்புடைய மனைவியும் அவள் கணவனும் உள்ளத்தில் மாறுபாடு இல்லாமல் குற்றமற்ற ஒரு காரியத்தைச் செய்வார்கள்.இதனை,
காதல் மனையாளும் காதலனும் மாறுஇன்றித்
தீதில் ஒரு கருமம் செய்பவே - ஒரு கலை
எண்ணிரண்டு ஒன்றுமதி என்முகத்தாய் நோக்குமால்
கண்இரண்டும் ஒன்றையே காண் (நன்.6)
என்ற பாடலில் கணவனும் மனைவியும் மாறுபாடு இன்றி மனம் ஒத்து வாழ வேண்டும் என்ற கருத்தைப் பதிவுச்செய்துள்ளார்.இக்கால மக்களும் இதனை உணர்ந்து செயல்பட வேண்டும்.
சினத்தைக் காத்துக் கொள்ளுதல்
வள்ளுவர் சினத்தை காத்தல் வேண்டி தனியே ஒரு அதிகாரமாக வெகுளாமை என்பதை தனியே வகுத்துள்ளார்.பொங்கி வரும் வெள்ளத்தை விடுவது அரிதா அல்லது கரையை உடைத்து வெள்ளத்தை விடுவது அரிதா?(ஆதலால்) உள்ளத்திலிருந்து சீறி எழுகின்ற சினத்தைக் காத்துக் கொள்ளும் குணமே சிறந்த குணமாகும்.இதனை,
உள்ளம் கவர்ந்து எழுந்து ஓங்கு சினம்காத்துக்
கொள்ளும் குணமே குணம் என்க - வெள்ளம்
தடுத்தல் அரிதோ தடம் கரைதான் பேர்த்து
விடுத்தல் அரிதோ விளம்பு (நன்.8)
என்ற நன்னெறி பாடல் மூலம் அறியப்படுகிறது. இக்கால மக்களும் பல் துறை வேலையின் காரணமாக பிறரிடம் கோபக் கொள்ளும் சூழல் ஏற்படுகிறது. இதனைத் தவிர்ப்பதற்கு தியான மையங்களுக்கு செல்வது சிறந்தது.
பலம் குறைந்தவர் பலம் உடையவருடன் சேர்ந்து கொள்ள வேண்டும்
பகைவர்களைக் கண்டு அஞ்சாமல் இருக்க வலிமையுடையவர்களுடன் சேர்ந்து கொள்ள வேண்டும் என்று நன்னெறி 9 ஆம் பாடல் எடுத்துரைக்கிறது.இதனை,
மேலியோர் வலிய விரவலரை அஞ்சார்
வலியோர் தமைத்தாம் மருவில் - பலியேல்
கடவுள் அவிர்சடை மேல் கட்செவிஅஞ் சாதே
படர்சிறைய புள்அரசைப் பார்த்து
என்ற பாடல் குறிப்பிடுகிறது. இதன் மூலம் பலம் குறைந்தவராக இருக்க கூடாது என்ற கருத்தையும் பலம் உடையவராக இருப்பதால் மட்டுமே ஒருவருக்கு மதிப்பு வருகிறது என்ற கருத்தையும் மறைமுகமாக பதிவுசெய்கிறார் சிவப்பிரகாசர்.
பிறர் துன்பத்தை நீக்க வேண்டும்
பிறர் துன்பத்தை தன் துன்பமாக எண்ணுபவரே மேலோர். இந்நூலில் 11 ஆம் பாடல் இக்கருத்தை எடுத்துரைக்கிறது.சந்திரன் தன்னுடைய களங்கமாகிய இருளை நீக்கிக் கொள்ள நினையாமல் வானத்தில் நின்று உலகின் இருளைப் போக்குவது போல் மேலோர் தம்முடைய குறை நீங்குவதை நினையாமல்,பிறருக்கு நேரிட்ட துன்பத்தை மனம் இரங்கி நீக்குவார் இதனை,
பொய்ப் புலன்கள் ஐந்துநோய் புல்லியர்பால் அன்றியே
மெய்ப்புலவர் தம்பால் விளையாவாம் - துப்பின்
சுழற்றும்கொல் கல்தூணைச் சூறா வளிபோய்
சுழற்றும் சிறுபுன் துரும்பு (நன்.11)
என்ற பாடலால் அறியலாம்.இதன் மூலம் இக்கால சமுதாய மக்களும் பிறரின் துன்பத்தை தன் துன்பமாக எண்ண வேண்டும் என்ற கருத்தைப் பதிவுசெய்துள்ளார்.
செல்வர் கொடுக்கும் இயல்புடையவர்களாக இருக்க வேண்டும்
மேலோர் தம் செல்வ நிலையினை பொறுத்து கொடுக்கும் இயல்புடையவராக இருக்க வேண்டும் என்பதை சிவப்பிரகாசர்,மதியின் ஒளியானது வளர்வதையும் தேய்வதையும் பொறுத்தது போல் மேலோர் தம்முடைய செல்வ நிலையின் ஏற்ற இறக்கத்தைக் கருதி அன்போடு கொடுப்பர் இதனை,
பெருக்க மொடுசுருக்கம் பெற்ற பொருட்கு ஏற்ப
விருப்ப மொடுகொடுப்பர் மேலோர் - சுரக்கும்
மலையளவு நின்ற முலைமாதே மதியின்
கலையளவு நின்ற கதிர் (நன்.13)
என்ற பாடலின் மூலம் செல்வர் கொடுக்கும் தன்மை உடையவர்களாக இருக்கின்றனர். அது போல ஒவ்வொரு செல்வரும் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற கருத்தை தெளிவுப்படுத்தியுள்ளார் என்பது புலப்படுகிறது.இக்காலத்தில் பலர் வறுமையில் வாடுவதற்கு காரணம் கொடுக்கும் இயல்பு படைத்த செல்வர்கள் கொடுக்காத நிலையே.
உயர்ந்தோர் தாழ்ந்தவர் துன்பத்தை போக்க வேண்டும்
தம்மையும் தங்கள் தலைமையும் பார்த்து உயர்ந்தோர்
தம்மை மதியார் தமைஅடைந்தார் - தம்மின்
இழியினும் செல்வர் இடர்தீர்ப்பர் அல்கு
கழியினும் செல்லாதோ கடல் (நன்.16)
என்ற பாடலானது பெரிய கடலானது தன்னை அடுத்துள்ள உப்பங்கழியிலும் சென்று பாய்வது போல உயர்ந்தோர்,தம்மைச் சார்ந்தோர் தங்களைக் காட்டிலும்,தாழ்ந்தவர்களாயினும்,தங்களுடைய மதிப்பைக் கருதாமல் அவர்கள் இருப்பிடம் சென்று அவர்களுடைய துன்பத்தைத் தீர்ப்பர் என்று மேற்கூறப்பட்ட பாடல் எடுத்துரைக்கிறது.இதன் மூலம் சமுதாயத்தில் ஒவ்வொருவரும் பிறரின் துன்பத்தைப் போக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
யாசிப்பவர்களுக்கு கொடுக்க வேண்டும்
தன் தந்தை கொடுத்து கெட்டான் என்பதற்காக தானும் கொடுக்காமல் இருக்க கூடாது என்ற கருத்தை 17 ஆம் பாடல் எடுத்துரைக்கிறது.இதனை,
எந்தைநல் கூர்ந்தான் இரப்hவர்க்குஈந்து என்றவன்
மைந்தர்தம் ஈகை மறுப்பரோ – பைந்தொடி
நின்று பயன்உதவி நில்லா அரம்பையின்கீழ்க்
கன்றும் உதவும் கனி (நன்)
என்ற பாடல் வெளிப்படுத்துகிறது.இதன் மூலம் முன்னோர்கள் கொடுத்து கெட்டார்கள் என்பதற்காக நாம் கொடுக்காமல் இருக்க கூடாது என்பதைப் பதிவுசெய்துள்ளார் சிவப்பிரகாசர்.
தெரிந்தவர் உதவியை பெற்று கொள்ள வேண்டும்
தனக்கு உதவி செய்யாதவரிடத்திலிருந்து ஒரு உதவியைப் பெற விரும்பினால் கன்றைக் காட்டிப் பசுவின் பாலைக் கறப்பது போல் அவருக்கு வேண்டியவரைக் கொண்டு அந்த உதவியைப் பெற்றுக் கொள்க என்கிறார் சிவப்பிரகாசர் இதனை,
தங்கட்கு உதவிலர்கைத் தாம் ஒன்று கொள்ளின்அவர்
தங்கட்கு உரியவரால் தாம்கொள்க – தங்கநெடும்
குன்றினால் செய்தனைய கொங்கையாய் ஆவின்பால்
கன்றினால் கொள்ப கறந்து (நன்.3)
என்ற பாடலானது தெரிந்தவரின் உதவியால் உதவியைப் பெற்றுக் கொள்ளலாம் என்று பொருள் உரைக்கிறது.மேலும் மற்றொரு பாடலில் கடல் நீரை மேகம் கொண்டு சென்று மழையாக பொழிவது போல் பிறருக்கு உதவாதவருடை பெருஞ்செல்வம் வேறான போதிலும் (அதை) பிறருக்கு உபகாரம் செய்வோருடைய செல்வமாகும் என்பதையும் கூறுகிறது.
பிறர்க்கு வரும் துன்பத்தை தன் துன்பமாக எண்ண வேண்டும்
பெரியவர்தம் நோய் போல் பிறர்நோய்கண்டு உள்ளம்
எரியின் இழுதாவர் என்க - தெரிஇழாய்
மண்டு பிணியால் வருந்தும் பிறஉறுப்பைக்
கண்டு கலுழுமே கண் (நன்.20)
என்ற பாடலில் முற்றிய நோயின் காரணமாக வேதனையுறும் இதர உறுப்புகளைப் பார்த்துக் கண் அழும்.அது போல் உயர் குணத்தோர் மற்றவர்களுக்கு உண்டான நோயைப் பார்த்துத் தமக்கு வந்த நோயாக எண்ணி அனலில் இட்ட நெய்போல உருகுவார் என்று மேற்கூறப்பட்ட பாடலின் வழி அறிய முடிகிறது.மேற்கூறப்பட்ட பாடலின் வழி பிறரின் துன்பத்தை தன் துன்பமாக ஒவ்வொருவரும் எண்ண வேண்டும் என்பதை அறியமுடிகிறது.
உடல் நிலையாமை எண்ணி தருமம் செய்
கொடுமையான எமன் வந்து உயிரைக் கொண்டு செல்லு முன்னே மனம் உவந்து தருமம் செய்ய வேண்டுமென்பதை,
கொள்ளும் கொடுங் கூற்றம் கொள்வான் குறுகுதன்முன்
உள்ளங் கனிந்தறம் செய் துய்தவே - வெள்ளம்
வருவதற்கு முன்னர் அணைகோலி வையார்
பெருகுதற்கண் என்செய்வார் பேசு (நன்.29)
என்ற பாடலால் அறியலாம்.இதன் மூலம் அறம் செய்ய விரும்பு என்ற கருத்தை ஆசிரியர் பதிவுசெய்துள்ளார்.
அறிஞர்கள் பிறர் வருத்தைப் போக்குவார்கள்
உடலின் போய் தாக்கும் பெரிய கொம்பின் அடியை கையானது விரைவாகப் போய்த் தன் மீது தாங்கிக் கொள்ளும் அதுபோல பிறரை வருத்தும் துன்பங்களை பேரறிஞர் வீரத்தோடு தாங்கள் ஏற்றுக் கொண்டு காப்பாற்றுவதற்கு முற்படுவார் என்பதை,
பேரறிஞர் தாக்கும் பிறர்துயரம் தாங்கியே
வீரமொடு காக்க விரைகுவார் - நேர்இழாய்
மெய்சென்று தாக்கும் வியன்கோல் அடிதன்மேல்
கைசென்று தாங்கும் கடிது (நன் .30)
என்ற பாடல் கல்வி கற்கனும்,அறிவுடையவனாக இருக்கனும்,பிறரின் துன்பத்தை போக்க வேண்டும் என்ற கருத்துக்களை முன் மொழிகின்றன.
பயனுள்ள நூல்களின் பொருளை அறிந்து தருமம் செய்ய வேண்டும்
வயிரம் பொருந்திய உறுதியான கதவுக்கு தாழ்ப்பாள் இல்லாவிடில் உறுதி உண்டாகுவது இல்லை.அதுபோல பயனள்ள நூல்களின் பொருளை அறிந்து கொள்ளும் விவேகம் இல்லாதவர் செய்யக் கூடிய தருமங்கள் உறுதி இல்லாதவை ஆகும். என்பதை,
பன்னும் பனுவல் பயன்தேர் அறிவுஇலார்
மன்னும் அறங்கள் வலியிலவே – நல்நுதால்
தாழ்ஒன்று உயர்திண் கதவு வலியுடைத்தோர்
தாழ்ஒன்று இலதுஆயின் தான் (நன்.32)
என்ற பாடலின் வழி பயனள்ள நூல்களின் பொருளை அறிய வேண்டும் என்றும்,விவேகம் உடையவராகவும்,தருமங்கள் செய்ய கூடியவராகவும் இருக்க வேண்டும் என்றும் எடுத்துரைக்கிறார்.
தகுதியுடையோர்க்கே கொடுக்க வேண்டும்
பெரியோர் தகுதி அறிந்தே மற்றவர்க்கு கொடுப்பார்கள் என்று 36 ஆம் பாடல் எடுத்துரைக்கிறது. இதனை,
தக்கார்க்கே ஈவர் தகார்க்குஅளிப்பார் இல்என்று
மிக்கார்க்கு உதவார் விழுமியோர் - எக்காலும்
நெல்லுக்கு இறைப்பதே நீர்அன்றிக் காட்டுமுளி
புல்லுக்கு இறைப்பரோ போய் (நன்.36)
என்ற பாடல் எப்பொழுதும் நெற்பயிருக்கே நீரை இறைப்பர்.காட்டிலே உலர்ந்து கிடக்கும் புல்லுக்கு இறைப்பாரோ ?அதுபோல தகுதியுடையோர்க்கே பெரியோர் கொடுப்பர்,தகுதியில்லாதவர்க்குக் கொடுக்க மாட்டார் என்ற கருத்தைப் புலப்படுத்தியுள்ளார்.இதன் மூலம் சமுதாயத்தில் தகுதி உடையவராக வாழ வேண்டும் என்பதை உணர்த்திகிறார்.
சான்றோர்களால் விரும்பப் படுவோர் நல்லவர்களே
சான்றோர்களால் விரும்பப்படுவோர் நல்லவர்கள், தீயவர்களை அவர்கள் விரும்ப மாட்டார்கள்.இதனை,
நல்லோர் வரவால் நகைமுகம்கொண் டின்புறீஇ
அல்லோர் வரவால் அழுங்குவர் - வல்லோர்
திருந்தும் தளிர்காட்டித் தென்றல்வரத் தேமா
வருந்தும் சுழற்கால் வர (நன்.19)
என்ற பாடலின் வழி நற்குணங்களால் சூழப்பட்ட நல்லவர்களாக இருக்க வேண்டும் என்றும் தீயவர்களாக இருக்க கூடாது என்றும் நவில்கிறது.
இகழாமை
ஒருவரை இகழாமல் இருப்பது அறப்பண்பு ஆகும்.அறிவுடையவர்களுக்கு இகழ்தல் ஏற்படாது.ஒவ்வொருவரும் பிறர் இகழாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று நன்னெறி ஆசிரியர் எடுத்துரைக்கிறார்.இதனை,
அறிவுடையார் அன்றி அதுபெறார் தம்பால்
செறிபழியை அஞ்சார் சிறிதும் - பிறைநுதால்
வண்ணம்செய் வாள்விழியே அன்றி மறைகுருட்டுக்
கண்அஞ்சு மோஇருளைக் கண்டு (நன்.34)
என்ற பாடலின் வழி அறியமுடிகிறது.
பழிசொல்லுக்கு அஞ்ச வேண்டும்
ஒளிமிகுந்த விழிகள் இருளைக் கண்டு பயப்படும் ஓளி மறைந்த குருட்டுக் கண்கள் பயப்படுமோ? அது போல அறிவுடையோர் தமக்கு வரும் பழிச் சொல்லைக் கண்டு அஞ்சுவர்.அறிவற்றவர் அஞ்சமாட்டார்.இதனை,
அறிவுடையார் அன்றி அதுபெறார் தம்பால்
செறிபழியை அஞ்சார் சிறுதும் - பிறைநுதால்
வண்ணம்செய் வாள்விழியே அன்றி மறைகுருட்டுக்
கண்அஞ்சு மோஇருளைக் கண்டு (நன்.34)
என்ற பாடலின் வழி சமுதாயத்தில் பிறந்த ஒவ்வொருவரும் பழிக்கு அஞ்ச வேண்டும் என்பது தெளிவாகிறது.
ஆணவம் கொள்ளக் கூடாது
ஒருவன் தற்புகழ்ச்சி கொள்ளாமல் இருப்பதே சிறந்தது ஆகும்.இதனை 37 ஆம் பாடல் எடுத்துரைக்கிறது.
பெரியோர்முன் தன்னைப் புகழ்ந்து உரைத்த பேதை
தரியாது உயர்வுஅகன்று தாழும் - தெரியாய் விந்தயமலை
பொன்உயர்வு தீர்த்த புணர்முலையாய் விந்தமலை
தன்உயர்வு தீர்ந்தன்று தாழ்ந்து (நன்.37)
என்ற பாடலானது அகத்திய முனிவர் முன்னே தற்பெருமை பேசிய விந்தியமலையானது அவர் அழுத்தியதால் தாழ்ந்து தன்னுடைய உயர்வு நீங்கியது.அதுபோல பெரியோர் முன்னே தன்னைப் புகழ்ந்து கூறிய மூடன் உயர்வு நிலைபெறாமல் தாழ்வு அடைவான் என்பதை தெளிவுப்படுத்துகிறது.
முடிவுரை
சிவப்பிரகாசர் இயற்றிய இந்நன்னெறி நூலானது சமுதாயத்தில் வாழ்கின்ற மக்கள் அன்புடையவராக,இன்சொல் கூறுபவராக,நல்லவர்களுடன் நட்பு கொள்பவராக,கல்வி கற்று கற்றறிந்தவருடன் இருப்பவராக,மற்றவர்களுக்கு கொடுக்கும் ஈகை குணம் உடையவராக,ஆணவம் கொள்ளாதவராக,பழிசொல்லுக்கு அஞ்சுபவராக,இகழாமைப் பண்பு இல்லாதவராக இருக்க வேண்டும் என்பதை இக்கட்டுரையின் வாயிலாக எடுத்துரைக்கிறது.
துணைநூற்பட்டியல்
1 .பூவை அமுதன் நீதி நூற்களஞ்சியம்
கவிதா பப்ளிகேஷன்
சென்னை – 600017
முதற்பதிப்பு -1996 ,இரண்டாம்பதிப்பு2000
2.பத்மதேவன்,தமிழ்ப்பிரியன் (உ.ஆ) நீதி நூல் களஞ்சியம்
கொற்றவை வெளியீடு
சென்னை -600017
முதற்பதிப்பு -2014
*கட்டுரையாளர் - சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி - 24 -
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.