அறம் எனும் கூற்றின் தனிப்பெரும் பொருளாகக் காலந்தோறும் முன்மொழியப்படுவது ஈகை போர் செய்யாத நாள் மட்டும் வீண்அன்று, பொருள் ஈயாத ஒவ்வொரு நாளும் வீணே! (அ) வீணாகிய நாட்களே என்று வாழ்ந்து காட்டிய மூத்த இனம் தமிழ் இனமாகும். “ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதில் ஈயேன் என்பது அதனெனின் இழிந்தது கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று, அதனெதிர்கொள்ளேன் என்பது அதனின் உயர்ந்தது!” என்று ஈகை நெறியை வாழ்வியலின் வாகை நெறியாய் முன்நறுத்திய தனிப்பெரும் இனம் தமிழ் இனமாகும். கடையேழு வள்ளல்கள் பற்றியும் அவர்களின் கொடைத்திறமைப் பற்றியும் நல்லூர் நத்தத்தனாரின் சிறுபாணாற்றுபடையில் கூறுவதை காணலாம்.
பாரி
சங்க காலப் பாடல்களில் பாரியின் கொடைச் சிறப்புகள் அழகாக எடுத்துக் கூறப்பட்டுள்ளன என்றாலும் கூட சிறப்பாணாற்றுப்படையில் பாரி முல்லைக்குத் தேர் கொடுத்த கொடைச் சிறப்பு பெரிதும் போற்றப்பட்டுள்ளது.
“…………. தேருடன்
முல்லைக்கு ஈந்த செல்ல நல்லிசை”.
(புறம் 20)
“பாரி பாரி என்று பல ஏந்தி
ஒருவர்ப் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டு ஈண்டு உலகு புரக்கதுவே”
(புறம் 107)
“சறுவீ முல்லைக்குப் பெருந் தேர் நல்கிய
பிறக்கு வெள் அருவி விழும் சாரல்
பிறமம்பின் கோமான் பாரியும்”
(சீறு– 89 - 91)
இப்பாடலில் சுரம்புகள் உண்ணும்படி தேன் வழங்கும் சுரபுன்னை மரங்கள் நிறைந்த நெடிய வழியில், தனது தேரைத் தடுத்த முல்லைக்கொடி, அதனை விரும்பியதாக் கருதி, அதற்க்குத் தனது பெரிய தேரை அளித்த சிறப்புடைய வள்ளல் பாரி. முல்லைக்குத் தேர் ஈந்த பின்னர், தான் நடந்து செல்வதற்குரிய வழி நெடிதாக இருந்ததையும் எண்ணாது ஈந்த பாரியின் அருட்பெருமை இங்கு சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது.
மேலும் பாரியின் நாட்டிலுள்ள சுரபுன்னைகளும், தரும்புகள் உண்ண தேன் நல்கும் சிறப்புடையன என்றும், மலைவீழ் அருவியும் மக்களுக்கு நன்மை தரும் இயல்கினது என்று பாரியினுடைய நாட்டு வளமும் பாரியின் இயல்பும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பேகன்
சிறுபாணாற்றுப்படையில் பேகனின் சிறந்த கொடைச்சிறப்பு கூறப்பட்டுள்ளது.
கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய
அருந்ததீறல் அணங்கின் ஆவியர் பெருமகன்
பெருங்கல் நாடன் போகனும்
(சிறுபாண் - 85 – 87)
“உடாஅ போராவாருதல் அறி;ந்தும்
படாஅம் மஞ்ஞைக்கு ஈந்த எங்கே”
(புறம் 141 : 10 - 11)
“மடத்தகை மாமயில் பணிக்குமென்று அருளிப்
படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக்
கடாஅ யானைக் கலிமான் பேக”
(புறம் 145 : 1 – 3)
என்ற பாடலடிகளில் பேகன் என்பவன் ஆவியர் குடியில் பிறந்தவன். பெரிய மலை நாட்டை உடையவன் அவனது மலைநாடு பருவமழை தவறாது பெய்தலால் வளம் மிக்கது. அப்பேகன் மலைவளம் காணச் சென்றபோது, வளம் நிறைந்த அம்மலைச்சாரலில் மயில் ஒன்று அகவியதைக் கேட்டு அது குளிரால் அகவியதெனக் கருதி, அருள் மிகுதியால் அதன் மீது போர்வையைப் போர்த்தினான். இதனை,
“கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய
அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்
பெருங்கல் நாடன் பேகனும்”
எனும் பாடல் வரி விளக்குகிறது.
இதில் பேகனின் செங்கோன்மைச் சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளது காரணம் பேகனின் ஆட்சி மழை போல, காலம் மாறி பெய்யாது என்றும், அவனின் ஆட்சி என்றும் மாறாமல் இருக்கும் செங்கோல ஆட்சி என்றும் பேகனின் ஆட்சி சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் காட்டிலுள்ள மயில் அகவியதைக் கேட்டவுடன் அது குளிரினால் தான் வருந்தியது என்று நினைத்துத் தனது போர்வையை அதற்கு ஈந்தான் பேகன்.
மயில் போர்வையைப் பயன்படுத்தி கொள்ளுமா? கொள்ளாதா? என சிறுpதும் நினையாமல், அருள் உணர்ச்சி பெருகி அஃறினை உயிருக்கு அவன் செய்த செய்கை சான்றோர்கள் கொடை மடம் என்று போற்றிக்கூறுகின்றனர்.
காரி
“வால் உளைப் புரவியொடு வையகம் மருள
ஈர நல்மொழி இரவலர்க்கு ஈந்த
(சிறுபாண் - 92 - 95)
இப்பாடலில் இவ்வள்ளலைப் பற்றிய செய்தி புதிரையுடன் நாட்டைக் கொடையாகத் தந்தோன் என்றும் கூறுவர்.
“கடல் கொளப் படாது உடலுநர் ஊக்கார்
சுழல்புனை திருந்தடிக் காரி நின்னாடே”
புறம் 122 (அடி 1 – 3)
“மூவருள் ஒருவன் துப்பாகியர் என
ஏத்தினர் தருஉங் கூழே”
(புறம் 122, அடி 5 – 6)
இப்பாடலில் திருக்கோவிலூரைத் தலைநகராகக் கொண்டு மலையமான் நாட்டை ஆண்டவன் மலையமான் திருமுடிக்காரி என்னும் மன்னன். இவன் தனது குதிரையையும், தன் நாடடையும் அனைவரும் வியக்கும் வண்ணம் இரவலருக்குக் கொடையாக வழங்கினான் என்று சிறுபாணன் கூறுகின்றான்.
மணியையும், தலையாட்டத்தினையும் உடைய குதிரையோடு, அருள் நிறைந்த சொற்களையும் உலகத்தவர்கேட்டு வியக்குமாறு இரவலர்க்கும் கொடுத்த வேலையும் தொடியணிந்த கையினையும் உடையவன் காரி.
உலகத்துச் சான்றோர் வியக்கும்படி கொடை அளித்த காரியின் சிறப்பும், இரவலரிடத்து இனிமையாகப் பேசும் அவனின் குணநலச் சிறப்பும் சிறுபாணாற்றுப்படையில் புகழ்ந்து கூறப்பட்டுள்ளது.
ஆய் வேள்ஆய் (அ) ஆய் அண்டிரன்
பொதிகை மலைச்சாரலில் உள்ள ஆய் குடியைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தவன் ஆய், இவ்வள்ளலை, வேள்ஆய், ஆய் அண்டிரன் என்றும் வழங்குவர். இவனுடைய கொடைச்சிறப்பையும், வீரச் சிறப்பையும் சங்க கால நல்லிசைப் புலவர்கள் புகழ்ந்து பாடியுள்ளனர். ஆய் தனக்கு இறைவன்பால் இருந்த அன்பை.
“………………நிழல்திகழ்
நீல நாகம் நல்கிய கலிங்கம்
ஆலமலர் செல்வற் காமர்ந்தனன் கொடுத்த”
(சிறுபாண் - 98 -100)
இப்பாடலில் ஒளிமிக்க நீல மணியினையும், நாகம் நல்கிய கலிங்கத்தையும் பெற்றிருந்த ஆய், இறைவனிடம் தனக்கிருந்த பேரன்பால் அவற்றை அவ்விறைவனுக்குக் கொடுத்து மகிழ்ந்தான். இதில் ஆய்யின் பற்றற்ற கொடைத்தன்மை சுட்டப்பட்டுள்ளது. ஆய்அண்பிரன் தன்னிடம் வரும் இரவலர்களிடம் ஆர்வமிக்க மொழிகளைப் பேசும் இயல்பினை உடையவன். “ஆல்ஃஅமர் செல்வதற்கு அமர்ந்தனன் கொடுத்த” இவ்வாயின் மூலம் ஆய்யின் சிறந்த கொடைத் தன்மையை நம்மால் உணர்ந்து கொள்ளமுடிகின்றது.
அதியமான்
அதிகன் பெரிய மலையில் மலர்கள் மணம் கமழும் மலைச்சரிவில் அழகுடன் விளங்கும் கருநெல்லி மரத்தில் கனிந்திருந்த ஒரு இனிய நெல்லிக்கனியைத் தன் உயிரையும் பொருட்படுத்தாது பறித்து, அமிழ்தின் தன்மையைக் கொண்ட அவ்வினிய கனியைத் தான் உண்டு நீண்ட நாள்வாழ விரும்பாமல் ஒளவைக்கும் கொடுத்து உண்ணச்செய்தான், தன் வாழ்நாளை ஒளவைக்குக் கொடுத்தான் என்ற சிறப்பினை சிறுபாணாற்றுப்பரட விளக்குகிறது.
அதியர் குடியில் தோன்றி தன்னுடைய வள்ளல் தன்மையால் சங்க நூல்களில் என்றும் அழியாத இடம் பெற்றவன் அதியமான், அதியமானின் கொடைச் சிறப்பை சிறுபாணாற்றுப்படை,
“கமழ் பூஞசாரல் கவினிய நெல்லி
அமிழ்து வளை நீம் கனி ஒளவைக்கு ஈந்த
(சிறு– 100 – 103)
இவ்வாறு விளக்குகின்றது.
இதில் அதியமானின் களங்கமில்லா கொடைச் சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. தனக்குக் கிடைத்த நெல்லிக்கனியை உண்டால் நரை, திர, மூப்பு இன்றி நீண்ட நாள் உடலுறுதி பெற்று வாழலாம் எனும் செய்தியைச் சான்றோர் மூலம் அறிந்த அதியமான் அதை தான் உண்ணாமல், எந்நாளும் தமிழுக்குத் தொண்டு செய்யும் புலவராகிய ஒளவையிடம் கொடுத்தான். இத்தகைய சிறப்புடைய நெல்லிக்கனியை பெற்ற ஒளவை அதியமானின் கொடைச் சிறப்பைப் புகழ்ந்து போற்றிப் பாடினர். இதில் புலவர்களின் மீது அதியமான் கொண்டுள்ள மதிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.
நள்ளி
கேட்கக் கொடுப்பார் சிலர் கேட்டும் மறுப்பார் பலர், கேட்கும் முன்னரே அவர்தம் குறிப்பறிந்து உள்ளம் குளிரவாரி வழங்குபவன் ஒருவனே அவனே வள்ளல் நள்ளி என்பதைச் சிறுபாணாற்றுப்படையில்,
“நட்ஆடார் உவப்ப நடைப்பரிகாரம்
முட்டாது கொடுத்த”………….
(சிறுபாண் 104 – 105)
தன்னை நாடி வந்த வறியவர்களது குறிப்பறிந்து அவர்கள் கேட்டும் முன்னரே அவர்தம் மனம்மகிழ அவர் இல்லறம் நடத்துவதற்கு வேண்டிய பொருள்களை வாரி வழங்கியவன் வள்ளல் பெருந்தகை நள்ளி என்பதை ஆசிரியர் நல்லூர் நத்தத்தனார் கூறியுள்ளார். நள்ளிமலை வளஞ்செறிந்த கண்பீர நாடடைச் சேர்;ந்தவன் நள்ளி. சிறுபாணாற்றுப்படையில் நள்ளியின் ‘அறங்கொடை’ சிறுப்பித்துக் கூறப்பட்டுள்ளது.
“முட்டாது கொடுத்த முனை விளங்கு தடக்கை
துளிமழை பொழியும் வளி துஞ்சு நெடுங்கோட்டு
நளிமழை நாடன் நள்ளியும்”
(சிறுபாண் - 105 -107)
இப்பாடலில் தன்னை நாடிவரும் இரவலர்களுக்கு அவர்களின் இல்லறத்திற்குத் தேவையான பொருட்களைக் குறிப்பறிந்து வழங்கியவனும் தன்னிடம் பொருள் பெற்றுவிட்டு பின் வேறொருவரிடம் சென்று இரவாதவாறு நிரம்பப் பொருள் கொடுக்கும் இயல்பினை உடையவன் நள்ளி.
தன் வலக்கை கொடுப்பதை இடக்கை அறியாது வழக்கிய நள்ளியின் வள்ளல் தன்மையை சான்றோர்கள் அறக்கொடை என்று போற்றுகின்றனர்.
ஓரி
கொல்லி மலையின் காவலனாய் வீரத்தின் தலைமகனாய் ஈகையின் தவமாய் அவதரித்தவன் வல்வில் ஓரி, வீரத்திற்குச் சான்றோய் ஒரே அம்மைக் கொண்டு ஏழு விலங்குகளை வீழ்த்தியவன் கொல்லியின் அரசன் ஓரி.
வீரத்திற்கு மட்டுமின்றி கருணை ஈரத்திற்கும் வித்தானவன் வள்ளல் ஓரி, ஓரியின் கருணை, அன்பு, அவனது அம்பென ஏழு பிறவிக்குமான வறுமையை அணடாது விலக்கும் என்பதை நத்தத்தனார் சிறுபாணாற்றுப்படையில் பின்வருமாறு
“நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகத்துக்
குறும்பொறை நன்னாடு கோடியர்க்கு ஈந்த
சிறுபாண் - (108 – 109)
இப்பாடலில் கடையயேழு வள்ளல்களில் ஒருவனான ஓரி பரிசில் பெற வருபவர்களுக்குப் பொன், பொருள் மட்டுமின்றி, நறிய பூக்கள் மிக்க சுரபுனைகளையும்,குறும்பொறைகளையும் உடைய நல்ல நாடுகளையே பரிசிலாகக் கொடுத்தான் என்பதைச் சிறுபாணாற்றுப்படையின் வழி அறியலாகிறது.
பூக்கள் நிறைந்த சுனைகளையும், குறிய மலைகளையும் உடைய நல்லநாடுகளைக் கூத்தாடுபவர்களுக்குக் கொடுத்தவன் ஓரி, இதில் ஓரியின் இரக்கக் குணம் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. மேலும் தன்மை நாடி வந்தவர்கள் எந்நாளும் இன்புற்று வாழ வேண்டும் என்பதற்காக நல்ல நாடுகளையும் அவர்களுக்குப் பரிசாகக் கொடுக்கின்றான். இதில் ஓரியின் சிறந்த கொடைத் திறம் குறிப்பிடப்பட்டுள்ளது.
நல்லியக்கோடனின் வள்ளல் தன்மை
எழுசமம் கடந்த ஏழு உறழ்திணிதோள்
எழுவர் பூண்ட ஈகைச் செந்நுகம்
(சிறுபாண் - 112 – 113)
இப்பாடலில் பேகன் முதலிய தமிழ் வள்ளல்கள் ஏழு பேர் நடத்திய ஈகைத் (கொடை) தன்மையை நல்லியக்கோடனின் வள்ளல் சிறப்பும் கொடைச் சிறப்பும் சிறுபாணாற்றுப்படையில் புகழ்ந்து கூறப்பட்டுள்ளது.
முடிவுரை
சங்க இலக்கியத்தின் சிறப்புத் தன்மையாக பலவற்றைக் குறிப்பிடலாம். அவற்றுள் புறப்பாடல்களின் சிறப்புத்தன்மையாக வீரத்தையும், கொடையையும் கூறலாம். அவற்றுள் குறிப்பாக ஆற்றுப்படை நூல்கள் அரசர்களின், வள்ளல்களின் கொடைச் சிறப்பை விரிவாக எடுத்துரைக்கின்றன.
அவற்றுள் சிறுபாணாற்றுப்படை கடையேழு வள்ளல்களின் கொடைச் சிறப்பை ; எடுத்துரைக்கின்றன. கடையேழு வள்ளல்கள் உலக மக்களிடம் மட்டுமன்றி அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு காட்டியுள்ளனர். இவர்களது கொடைத்தன்மையைச் சான்றோர்கள் மடக்கொடை, அறக்கொடை என்றெல்லாம் பாராட்டியுள்ளனர். இவர்களுடைய இயல்புகள் அனைத்தையும் ஒருங்கே பெற்றவனாக நல்லியக்கோடனைச் சிறுபாணாற்றுப்படை விளக்குகிறது.
துணை நூல்கள்
1) சிறுபாணாற்றுப்படை இரா. ருக்மணி காவ்யா பதிப்பகம், சென்னை
2) புறநானூறு மூலமும் எளிய உரையும் – இர. பிரபாகரன் – காவ்யா பதிப்பகம், சென்னை
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
* கட்டுரையாளர் - - சு. வெண்மதி, ஆய்வியல் நிறைஞர், பெரியார் பல்கலைக்கழகம் சேலம் 11 -