முன்னுரை
தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க மருவிய காலம் நீதி நூல் காலம் ஆகும்.களப்பிரர் காலம் என அழைக்கப்பட்ட அக்காலம் கி.பி 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 6 ஆம் நூற்றாண்டுக்கு பின் நீதி இலக்கியங்கள் தோற்றம் பெறாமல் இருந்து கி.பி 12 ஆம் நூற்றாண்டில் நீதி இலக்கியங்கள் தோற்றம் பெற்றன.இடைக்கால ஒளவையார் வருகைக்கு பின்பே நீதி இலக்கியங்கள் தோற்றம் பெற்றன.தமிழ் இலக்கிய நூல் ஆசிரியர்களில் மிகவும் புகழ் பெற்றவர்.இவர் தமிழ் இலக்கியத்தை வளர்த்தவர்.இவர் பிற்காலச் சோழர் காலத்தின் இறுதியில் வாழ்ந்த பெண்பாற் புலவர்.இவர் சிறுவர்கள் மனதில் எளிமையாகப் பதியும்படி அறக்கருத்துக்களைப் பாடும் திறன் பெற்றவர்.இவர் விநாயகர் அகவல், அசதிக்கோவை, ஞானக்குறள், போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.மேலும் இவர் நீதி இலக்கிய படைப்புகளாக விளங்கும் ஆத்திசூடி,கொன்றை வேந்தன்,மூதுரை,நல்வழி போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.இந்நூலில் ஒன்றான மூதுரையில் இடம்பெறும் அறநெறிகளைக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
அறம் என்பதன் பொருள்
அறம் என்னும் சொல் அறு என்னும் முதனிலை அடியாகப் பிறந்து தீவினையை அறுப்பதெனப் பொருள்படும்.அம்மூலப் பொருளை உட்கொண்டே ஆசிரியர் ஈண்டு ‘மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன்’என்றார் .அறியாமையாள் விளைவது தீவினை .அறியாமையாவது இருள் அவ்விருளை அகற்றுவதே அறத்தின் பயன் என்பர் நாகை. சொ.தண்டபாணியார்.(திருக்குறள் அறத்துப்பால் தண்டபாணி விருத்தியுரை,ப.33) அறம் என்னும் சொல் ஒழுக்கம் என்ற பொருளில் பண்டையத் தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளமையை, ‘அறம்சாரான் முப்பேபோல்’(கலி.38;:19) ‘அறனி லாளன்’ (அகம்.207:13:219:10) என்னும் அடிகள் தெளிவுபடுத்துகின்றன.
மூதுரை கூறும் அறநெறிகள்
மூதுரை (வாக்குண்டாம்) என்னும் முப்பது செய்யுள் அடங்கிய நூல் ஆகும்.இந்நூல் நல்லிசைப் புலவர் ஓளவையாரால் இயற்றப்பெற்ற நூல் என்பது முன்பே அறிந்த ஒன்றாகும்.மூதுரை என்னும் இந்நூலில் உள்ள அட்டாலும் எனத் தொடங்கும் நான்காவது செய்யுள்,தொல்காப்பிய உரையாசிரியர்களில் ஒருவரான பேராசிரியராகிய நச்சினார்க்கினியரால் சவலை வெண்பாவிற்கு (தொல் பொருள்,செய்யுளியல் - வெண்பாட்டீற்றடி முச்சீர்த் தாகும);.எடுத்துக்காட்டாகச் சுட்டியிருப்பது ஒன்றே இந்நூலின் பெருமைக்குப் போதிய சான்றாகும்.தொல்காப்பிய உரையாசிரியர் இந்நூலை மூதுரை என்னும் பெயரால் வழங்கப்படுகின்றனர்.பிற்காலத்தவர் இந்நூலின் முதற்செய்யுளின் முதல் அடியில் உள்ள வாக்குண்டாம் என்பதையே நூலின் பெயராக வழங்கத் தொடங்கினார்.எனவே ,இவ்விரு பெயர்களும் வழங்கிவருகின்றன என்பது இந்நூலின் சிறப்பு.மூதுரை கடவுள் வாழ்த்து விநாயகக் கடவுளை வணங்கி தொடங்கப் பட்டுள்ளது.இக்கடவுள் வாழ்த்து கல்வியும்,செல்வமும்,நலமும் உண்டாகும் விநாயக கடவுளை வணங்கினால் என்று கூறுகிறது.இதனை,
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு (மூதுரை.கடவுள்.வாழ்த்து)
என்ற பாடலால் அறியலாம்.
பயன் கருதாமல் அறம்செய்க
நற்குணமுடையவனுக்கு உதவி செய்தால் அவனும் சிறந்த உதவியை வணக்கத்தோடு விரைந்து செய்வான் என்பதை,
நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி
என்று தருங்கொ லெனவேண்டா - நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லே (மூது.1)
என்ற பாடலால் அறியமுடிகிறது.
நல்லவர்க்களுக்கு உதவி செய்ய வேண்டும்
நற்குணமுடைய ஒருவர்க்கு செய்த உதவியானது கருங்கல்லின்மேல் மேல் வெட்டப்பட்ட எழுத்தைப் போல அழியாது விளங்கும்.நல்லவரல்லாத அன்பில்லாத மனமுடையார்க்கு செய்த உதவியானது நீரின் மேல் எழுதப்பட்ட எழுத்திற்கு ஒப்பாக அழிந்துவிடும்.இதனை
நல்லா ரொருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மே லெழுத்துப்போற் காணுமே - அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர்மே லெழுத்திற்கு நேர் (மூது.2)
என்ற பாடல் புலப்படுத்துகிறது.இதன் மூலம் நல்லவர்க்கு செய்த உபகதரம் என்றும் நிலைபெற்று விளங்கும் என்றும் தீயவருக்கு செய்த உபகாரம் செய்த அப்பொழுதே அழிந்திவிடும் என்ற கருத்தைப் பதிவுச்செய்துள்ளார்.
மேலோருடன் தான் நட்பு கொள்ள வேண்டும்
பாலினை காய்ச்சினாலும் அஃது இனிய சுவையிற் குறையாது சங்கினை சுட்டு நீறாக்கினாலும் அது வெண்ணிறத்தையே கொடுக்கும் (அவை போல )மேலோர் வறுமையுற்றாலும் மேலோராகவே விளங்குவர் ஆனால் நட்பின் குணம் இல்லாத கீழோர் கலந்து நட்புச் செய்தாலும் நண்பராகர் இதனை,
அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவளாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளேசங்கு
சுட்டாலும் வெண்மை தரும் (மூது.4)
என்ற பாடல் ஆனது கீழோருடன் நட்பு கொள்ளக் கூடாது என்றும் மேலோருடன் தான் நட்பு கொள்ள வேண்டும் என்று கூறுகிறது.
காலமறிந்து நடக்க வேண்டும்
வள்ளுவரும் காலமறிதல் என்பதை 49 ஆவது அதிகாரமாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
அடுத்து முயன்றாலும் ஆகுநா ளன்றி
எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா (மூது.5)
என்ற பாடலில் விரிந்த வடிவத்தால் நீளமான மிக உயர்ந்த மரங்கள் யாவும் பழுக்க வேண்டிய காலத்தில் அல்லாமல் பழுக்கமாட்டா அதுபோல விடாது தொடர்ந்து முயற்சி செய்தாலும் கூடிவர வேண்டிய காலத்தில் அன்றி அல்லாமல் தொடங்கிய காரியங்கள் கூடிவராது.இதன் மூலம் ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்குவோர் அதைத் தகுந்த காலமறிந்து தொடங்க வேண்டும் என்று குறிப்பிடுகிறது.
மானம் இழந்து வாழக் கூடாது
ஒருவன் தன்னிலையில் தாழாமல் இருப்பது மானம் ஆகும். மானம் பற்றிய கருத்து பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான இனியவை நாற்பதில் இரு இடங்களில் கூறப்படுகிறது. தன் மானத்தை இழக்க நேரும் போது உயிரைப் போக்கி கொள்வது நல்லது. இதனை,
மானம் படவரின் வாழாமை முன் இனிதே (இனி.நாற்.பா.27:2)
மானம் அழிந்தபின் வாழாமை முன் இனிதே (இனி.நாற்.பா.13:1)
என்ற பாடலடிகள் மானம் அழிந்த பின் வாழ்வது நல்லது அல்ல என்ற செய்தியை வலியுறுத்தி கூறியுள்ளதை அறிய முடிகிறது.இதன் மூலம் ஒவ்வொருவருக்கும் மானம் இன்றியமையாத ஒன்றாக விளங்குகிறது.மூதுரையும் மானத்தைப் பற்றி எடுத்துரைக்கிறது.இதனை,
உற்ற விடத்தில் உயிர்வழங்குந் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ - கற்றூண்
பிளந்திறுவ தல்லால் பெரும்பாரந் தாங்கின்
தளர்ந்து வளையுமோ தான் (மூது.6)
என்ற பாடலில் கல்லினாhற் செய்யப்பட்ட கம்பமானது பெரிய சுமையை சுமக்க நேர்ந்தால் வெடித்து ஒடிந்து விழுவது தவிர சோர்ந்து வளைந்து கொடுக்குமோ ? கொடுக்காது அதுபோல இழிவு உண்டான இடத்திலேயே உயிரை விடும் மானம் பொருந்திய குணமுள்ளவர்கள் தமது பகைவர்களை பார்த்தால் வணங்குவார்களோ ?வணங்க மாட்டார்கள்.இதன் கருத்து மானம் உள்ளவர்கள் பகைவர்களை வணங்க மாட்டார்கள் என்ற கருத்து புலப்படுகிறது.
நல்லோருடன் தொடர்பு கொள்
நல்லார் தொடர்பின் நலம்
நற்குணமுடையோரை பார்ப்பதும் நல்லதே நல்லவருடைய பயன் நிறைந்த சொல்லை கேட்பதும் நல்லதே நல்லவருடைய நற்குணங்களை பேசுதலும் நல்லதே அந்நல்லவருடன் கூடியிருத்தலும் நல்லது என்பதை,
நல்லாரைக் காண்பதும் நன்றே நலமிக்க
நல்லார்சொற் கேட்பதுவும் நன்றேஎ - நல்லார்
குணங்க ளுரைப்பதும் நன்றே அவரோ
டிணங்கி யிருப்பதும் நன்று (மூது.8)
என வரும் பாடலின் மூலம் அறியமுடிகிறது.இதன் மூலம் நல்லவருடன் தொடர்பு வைத்து கொள்ளுவதன் மூலம் நல்லொழுக்கம் உண்டாகும் என்பதை அறியலாம்.மற்றொரு பாடல் நல்லவர்களுடன் சேர்ந்தால் பயனடைவார்கள் என்ற கருத்தை கூறுகிறது இதனை,
நெல்லுக்கு கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம் - தொல்லுலகில்
நல்லா ரொருவர் உளரேல் அவர்பொருட்
டெல்லார்க்கும் பெய்யு மழை (மூது.10)
என்ற பாடல் நெற்பயிர்க்கு இறைக்கப்பட்ட தண்ணீரானது கால்வாய் வழியாகச் சென்று அவ்விடத்திலுள்ள புல்லுகளுக்கும் கசிந்தூறும் (அது போல ) பழைமையாகிய இவ்வுலகித்தில் நல்லவர் ஒருவர் இருப்பாராயின் அவர் நிமித்தமாக, அனைவருக்கும் மழை பெய்யா நிற்கும் என்று குறிப்பிடுகிறது.
தீயார் தொடர்பின் தீமை
தீக்குணம் உடையவரை பாhப்;பதும், தீயதே தீயவருடைய பயன் இல்லாத சொல்லைக் கேட்டலும் தீயதே தீய குணங்களை பேசுவதும் தீயதே அத்தீயவருடன் கூடியிருத்தலும் தீயதே என்று ஒளவையார் குறிப்பிடுகிறார் இதனை,
தீயாரை காண்பதுவுந் தீதே திருவற்ற
தீயார்சொற் கேட்பதுவுந் தீதே - தீயார்
குணங்க ளுரைப்பவுந் தீதே அவரோ
டிணங்கி யிருப்பதுவுந் தீது (மூது.9)
மேற்கூறப்பட்ட பாடலானது தீயோருடன் சேர்ந்தால் தீயொழுக்கம் தான் உண்டாகும் என்பதை குறிப்பிடுகிறது.இதன் மூலம் தீயோருடன் சேரக் கூடாது என்ற கருத்து புலப்படுத்துகிறது.
துணைவலிமைக் கொள்
உமிநீங்குதற்கு முன்பும் முளைக்கக்கூடியதாயிருந்து அரிசியாகவேயிருந்து அப்படியிருந்தாலும்,அவ்வரிசியைச் சேர்ந்த உமியானது நீங்கி போய்விட்டால் அவ்வரிசி முளைக்காது அமைந்த பெரிய வலிமை,உடையவர்களுக்கும்,துணை (வலிமை)இல்லாமல் எடுத்துக் கொண்ட,காரியங்களை செய்வது முடியாதது ஆகும்.இதனை,
பண்டு முளைப்ப தரிசியே யானாலும்
விண்டுமி போனால் முளையாதாம் - கொண்டபேர்
ஆற்றல் உடையார்க்கும் ஆகா தளவின்றி
ஏற்ற கருமஞ் செயல் (மூது.11)
என்ற பாடலால் அறியமுடிகிறது.இதன் மூலம் எவ்வளவு வலிமையிருந்தாலும் ஒருவர்க்கு ஒரு செயலைச் செய்து முடிக்கத் துணைவலிமை வேண்டும் என்று எடுத்துரைக்கிறது.
கல்வியறிவு உடையவனாக இருக்க வேண்டும்
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி கல்வி என்பதற்கு, கற்கை (STUDYING) படித்துப் பெறும் அறிவு (LEARNINGERUDITION)பயிற்சி (PRACTICE) நூல் (SCIENTIFIC WORK) என்று பொருள் கூறுகிறது (ப.525)
மூதுரை என்ற நூலும் கல்வி கற்காமல் இருப்பதானால் ஏற்படும் அறிவற்றவனின் இழிநிலையை எடுத்துரைக்கிறது.இதனை மூதுரை 13 ஆம் பாடல் குறிப்பிடுகிறது.இதனை,
சுவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் - சவைநடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டா தவன்நல் மரம்
என்ற பாடல் கிளைகளை உடையவனவாகியும், காட்டினுள்ளே நிற்கின்ற அந்த மரங்கள் நல்ல மரங்கள் ஆகா கற்றோர் சபையின் நடுவே கையில் கொடுத்த ஏட்டை படிக்க முடியாமல் நின்றவனும் ஒருவன் கருத்தின் அடையாளத்தை தெரிந்துகொள்ள முடியாதவனும் (ஆகிய இவர்களே ) சிறந்த மரங்களுக்குச் சமம் ஆவார்.இதன் மூலம் கல்வியறிவில்லாதவனும்,பிறர் கருத்தின் குறிப்பை உணரமுடியாதவனும் மரங்களுக்கு சமமாக மதிக்கப் பட்டதை அறியமுடிகிறது.இக்கருத்துக்களை அறிந்த பிறகாவது சமுதாயத்தில் உள்ள மக்கள் படிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றனர்.மேலும் மற்றொரு பாடலிலும் கற்றறிதவர் பற்றிய செய்தி இடம்பெறுகிறது.இதனை,
சாந்துணையும் தீயனவே செய்திடினும் தாமவரை
ஆந்துணையும் காப்பர் அறிவுடையோர் -மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர்நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம் (மூது.30)
என்ற பாடலில் மரமானது மக்கள் தன்னை அடியோடு வெட்டும் வரையிலும் குளிர்ந்த நிழலினை அவர்களுக்குக் கொடுத்து வெய்யிலைத் தடுக்கும் (அது போல)அறிவுடைய நல்லோர் கெடுதிகளையே( பிறர் தமக்குச்) செய்தாலும் சாகும் வரையிலும் (தங்களால் )ஆனமட்டிலும்,காப்பர் (துன்பத்திலிருந்து) காப்பாற்றுவர் என்று குறிப்பிடுகிறார்.கல்வியறிவுடைய நல்லோர் தங்களுக்கு துன்பம் செய்பவர்களுக்கும் நன்மையே செய்வார்கள் என்ற கருத்தை சொல்லியிருக்கிறார் என்பது இங்கு நோக்கத்தக்கது ஆகும்.
கல்லாதவன் கற்றவனைப் போல் நடிக்க கூடாது
நூல்களைப் படிக்காதவன் மற்றவர் படிக்கும் போது பார்த்து அரை குறையாகக் கற்றுக்கொண்டு பாட்டை மற்றவர் முன் சொல்லி மகிழ்தல் காட்டிலே மயிலானது தனது அழகிய தோகையை விரித்து ஆடிக்கொண்டிருக்க அதைப் பார்த்து கொண்டு பக்கத்திலேயிருந்த வான்கோழியானது தன்னையும் அம்மயில் என நினைத்து அவ் வான்கோழியும் தன்னுடைய விகாரமான இறக்கைகளைப் பரப்பி ஆடினதை ஓக்கும் என்கிறார் ஒளவையார் இதனை,
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானுந்தன்
பொல்லாச் சிறகைவிரித் தாடினாற் போலும்
கல்லாதான் கற்ற கவி (மூது.14)
என்ற பாடலில் தெளிவுப்படுத்தியுள்ளார்.இதன் மூலம் கல்லாதவன் கற்றவனைப் போல் நடிக்க கூடாது என்று குறிப்பிடுகிறார்.மேலும் மற்றொரு பாடலில் கல்லாதவர்க்கு கற்றறிந்தவரின் சொல் துன்பமானது எமன் போன்றது என்பதை,
கல்லாத மாந்தருக்குக் கற்றுணர்ந்தார் சொற்கூற்றம் (மூது.27:1 )
தெளிவுப்படுத்தியுள்ளார்.இதன் மூலம எமன் தன்னிடம் வராமல் இருக்க வேண்டுமானால் கல்வியறிவுடன் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தீயவர்களுக்கு உதவி செய்யக் கூடாது
உடலில் கீற்றுகளையுடைய வேங்கையென்னும் புலியினது நோயை போக்கிய விஷவைத்தியன் அவ்விடத்திலேயே அப்புலிக்கு உணவாக ஆனதைப் போல (புலியால் கொல்லப்பட்டதைப் போல)நன்மையை உணர முடியாத அற்பமான அறிவினையுடையவர்க்கு ஒருவனால் செய்யப்பட்ட உதவியும் கல்லின் மீது போடப்பட்ட மண்ணாற் செய்த பாண்டம் போல் அழிந்துவிடும் என்பதை,
வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி
ஆங்கதனுக் காகார மானாற்போல் -பாங்கறியாப்
புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம்
கல்லின்மேல் இட்ட கலம் (மூது.15)
என வரும் பாடலில் தீயவர்களுக்கு உதவி செய்யக்கூடாது என்ற கருத்து புலப்படுகிறது.
சுற்றத்தினருடன் இருக்க வேண்டும்
சுற்றத்தினருடன் சேர்ந்து வாழ்வது சிறந்தது ஆகும்.ஒருவரின் இன்ப துன்ப நிலைகளில் கூடியிருப்பவர்கள் சுற்றத்தினரே என்று குறிப்பிடுகிறார் ஒளவையார் இதனை,
அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வா ருறவல்லர் -அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி யுறுவார் உறவு (மூது.17)
என்ற பாடலானது நீர் வற்றிய குளத்திலிருந்து நீங்கி விடும் நீரில் வாழும் பறவைகளைப் போல துன்பம் வந்த போது நீங்கிவிடுவவோர் சுற்றத்தார் ஆகமாட்டார் அந்தக் குளத்தில் உள்ள கொட்டியும்,அல்லியும்,நெய்தலும், போல நீங்காது சேர்ந்திருந்து வருத்தத்தை அனுபவிப்போரே உறவினராவர் என்று குறிப்பிடுகிறார்.
நல்ல மனைவியாக இருக்க வேண்டும்
மனையறத்திற்கு உரிமையுடையவளாக மனைவி விளங்கினாள்.ஒத்த அன்புடைய கணவனும் மனைவியும் இல்வாழ்க்கை முறைப்படி நடத்தினால் அதைக் காட்டிலும் இனிய வாழ்வு வேறு இல்லை என்பதைப் பண்டையத் தமிழர் உணர்ந்திருந்தினர்.இல்லறச் சிறப்பினை,
மனையுறை வாழ்க்கை வல்லி யாங்கு
மருவி னினியவு முளவோ (குறுந்.322:5-6) என்று குறுந்தொகை சுட்டுகிறது.
எதிர்த்துப் பேசாத நல்ல மனைவி வீட்டில் அமைந்திருந்தால் ஒருவனுக்கு இல்லையென்று சொல்லத்தக்கது, வேறு ஒரு பொருள் கிடையாது மனைவியானவள் கடுமை பொருந்திய பேச்சை பேசுவாளானால் அந்த வீடானது புலியானது தங்கியுள்ள புதராக ஆகும் என்பதை,
இல்லாள் அகத்திருக்க இல்லாததொன்றில்லை
இல்லாளும் இல்லாளே யாமாயின் - இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்கும் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடம் (மூது.21)
என்ற பாடலின் வழி நல்ல குணமுடைய மனைவியுள்ள வீடு எல்லாச் சிறப்புமுடையதாயிருக்கும் என்ற கருத்தைப் புலப்படுத்தியுள்ளார்.மேலும் கொடிய மனைவியுள்ள வீடு புலியின் புதரைப் போல எல்லாருக்கும் பயத்தைக் கொடுக்கும் என்று கூறியுள்ள செய்தி நல்ல மனைவியாக இருக்க வேண்டும் என்ற கருத்தை எடுத்துரைத்துள்ளார்.மேலும் பெண் என்பவள் அடக்கம் உடையவளாக இருக்க வேண்டும் என்று சிறுபஞ்சமூலம் என்ற நூல் எடுத்துரைக்கிறது.இதனை,
பேண் அடக்கம் பேணாப் பெருந்தகைமை பீடுமை (சிறுபஞ்.45:1) என்ற பாடலடி எடுத்துரைக்கிறது.இக்கருத்தில் அடக்கம் என்னும் பண்பை வலியுறுத்தி ஒரு பெண் என்பவள் வீட்டிற்கு அடக்கம் உடையவளாக இருக்க வேண்டும் என்கிறார் ஒளவையார் இதனை
……………………........................கூற்றமே
இல்லிற்கிசைந் தொழுகாப் பெண் (மூது.27)
என்ற பாடலடி துன்பம் செய்யும் குணம் படைத்தவளே வீட்டிற்கு அடக்கம் இல்லாத பெண்ணாக இருப்பாள் என்ற கருத்தை இயம்பியுள்ளது.
முடிவுரை
அறம் என்பதன் பொருள், பயன் கருதாமல் அறம்செய்ய வேண்டும் என்றும், நல்லவர்க்களுக்கு உதவி செய்ய வேண்டும், மேலோருடன் தான் நட்பு கொள்ள வேண்டும், காலமறிந்து நடக்க வேண்டும், மானம் இழந்து வாழக் கூடாது,நல்லவருடன் தொடர்பு கொள் என்றும்,தீயோருடன் தொடர்பு கொள்ளாதே என்றும், கல்வியறிவு உடையவனாக இருக்க வேண்டும், கல்லாதவன் கற்றவனைப் போல் நடிக்க கூடாது, தீயவர்களுக்கு உதவி செய்யக் கூடாது, நல்ல மனைவியாக இருக்க வேண்டும் என்ற அறநெறிக் கருத்துக்கள் இக்கட்டுரையின் வாயிலாக அறியமுடிகிறது.
வாழும் காலம் சிலகாலம் என்றாலும் அக்காலங்களில் நெறிமுறைகளுடன் வாழ்வது நல்லது என்பதை மூதுரை வழி அறியமுடிகிறது. சமுதாயத்தில் ஒவ்வொரு மனிதரும் நல்ல பண்புகளுடன் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளன
துணைநூற்பட்டியல்
1.தண்டபாணி .துரை (உ.ஆ) நீதி நூல்கள்( மூலம்-பதவுரை-கருத்துரை) உமா பதிப்பகம் சென்னை -600001 16 –ஆம் பதிப்பு 2013
2.திருநாவுக்கரசு .க.த திருக்குறள் நீதி இலக்கியம் சென்னைப் பல்கலைக்கழகம் சென்னை மறுபதிப்பு - 1977
3.பூவை அமுதன் நீதி நூற்களஞ்சியம் கவிதா பப்ளிகேஷன் சென்னை – 60001 முதற்பதிப்பு -1996 ,இரண்டாம்பதிப்பு - 2000
4 .மெய்யப்பன் .ச (ப.ஆ) நீதி நூல் தெளிவுரை மணிவாசகர் பதிப்பகம் சென்னை -600108 முதற்பதிப்ப-2006
5 சுப்பிரமணியன் ச.வே தொல்காப்பியம் தெளிவுரை மணிவாசகர் பதிப்பகம் சென்னை -600018 முதற்பதிப்பு - 1998
6. பத்மதேவன்,தமிழ்ப்பிரியன் (உ.ஆ) நீதி நூல் களஞ்சியம் கொற்றவை வெளியீடு சென்னை -600017 முதற்பதிப்பு -2014
7. பாலசுந்தரம் ,ச திருக்குறள் தெளிவுரை மணிவாசகர் பதிப்பகம் சென்னை -600017 பதிப்பு -2000
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
*கட்டுரையாளர்: - சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி - 24 -