பாத்திமுத்து சித்தீக்கின் ‘இடி மின்னல் மழை’ சிறுகதைகள் வெளிப்படுத்தும் சமூக நிலைகள்இசுலாமியத் தமிழ்ப் பெண் எழுத்தாளர்களில் தனக்கென ஒரு தனி பாணியை அமைத்து கவிதை, கட்டுரை, புதினம், சிறுகதை எழுதுவதில் வல்லவராகத் திகழ்ந்து கொண்டிருப்பவர் பாத்திமுத்து சித்தீக் அவர்கள். இந்நூற்றாண்டின் தலை சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராகத் திகழ்கின்றார். இவருடைய எழுத்துக்கள் எளிமையானவை கருத்துக்கள் புதுமையானவை. இவருடைய எழுத்துக்களில் சமூகத்தில் நிலவும் அவலங்கள், முரண்பாடுகளை நன்றாக வெளிப்படுத்தியுள்ளார். பாத்திமுத்து சித்தீக்கின் ‘இடி மின்னல் மழை’ சிறுகதைகள் வழி அறியலாகும் சமூக நிலைகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சமூகவியல் என்பது சமூகத்தை அதாவது மக்கள் உறவையும் அதன் விளைவுகளையும் பற்றிய அறிவியல் ஆகும். இது சமூகத்தின் தோற்றம் வளர்ச்சி, அமைப்பு, செயல்கள் ஆகியவற்றிற்குத் தக்க விளக்கம் காண முற்படுகிறது.

பொருத்தமற்ற திருமணத்தைத் தடுக்கும் சமுதாயம்
பாத்திமுத்து சித்தீக் அவர்கள் இசுலாமியச் சமுதாயக் கோணல்களை நோகாது சாடியுள்ளார். பலதாரமுறை இசுலாத்தில் இருந்தாலும் கூட மனைவியை இழந்த ஒருவனுக்கு சிறுவயது பெண்ணைக் கட்டிக் கொடுப்பது அதுவும் தகப்பன் போன்றிருக்கும் ஒருவருக்கு கட்டிக் கொடுப்பது தவறானது என்பதை இடி மின்னல் மழை சிறுகதை வாயிலாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

தன் மனைவி மும்தாஜை இழந்த நிலையில் ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு இரண்டாவது திருமணம் செய்து கொள்ள சபூரின் தாயார் வற்புறுத்தியும் திருமணமே வேண்டாம் என்றிருந்த சபூர் பலரின் வற்புறுத்தலுக்காகச் சம்மதம் சொன்னான். பக்கத்து வீட்டிலிருக்கும் அப்துல் கரீம் அவர்களுடைய மகள் ஆயிஷாவையே திருமணம் செய்து கொள்ளலாம் என்ற நிலையில் அப்துல் கரீம் விட்டுக்குச் சென்றான்.

“ஆயிஷாவோட கல்யாணம் விஷயமா எதுவும் முடிவாச்சா” என்று சபூர் கேட்டான். அதற்கு அப்துல் கரீம் அவர்கள் “எனக்கு ஒண்ணுவிட்ட தங்கச்சி மகன் ஒருத்தன் தாலுக்கா ஆபிஸ்ல குமாஸ்தாவா இருக்கான். அவனுக்குப் பெண் எடுக்க தங்கச்சி ரொம்ப ரொம்ப பிரியப்பட்டு சொல்லி வுட்டுச்சி…வம்பு பண்ணுச்சு, அவனுக்குக் கொடுக்கலாம்னு நானும் முடிவு செஞ்ச சமயத்துல இந்தப் புள்ள ஆயிஷா “அந்த பெரிய மச்சானுக்கு முப்பத்தி அஞ்சு வயசுக்கு மேலேயே இருக்குமே கால் கிழவனாச்சே” அது…ன்னு பரிகாரம் பண்ணிக்கிட்டு முடியவே முடியாது’ன்னு அவனைக் கட்டிக்க மாட்டேன்னுச்சி”.1 என்ற கூற்றும்,

“ஆயிஷா வாழ்க்கையில ஒங்களுக்கும் அம்மாவுக்கும் இல்லாத அக்கறையா சபூரு… நீ அதுக்கு ஒரு தகப்பன் மாதிரி, மேற்கொண்டு அப்துல் கரீம் பேசிய பேச்சுக்கள் எதுவுமே சபூரின் காதுகளுக்கு நுழைய விடாமல் ‘நீ அதுக்கு ஒரு தகப்பன் மாதிரி’ என்னும் வாக்கியம் தடுப்பு சுவர் போல விழுந்தது. ‘நீ அதுக்கு ஒரு தகப்பன் மாதிரி’ என்னும் வார்த்தைக் கங்குகள் பூதாகரமான தீக்கொழுந்துகளாகி அவன் நெஞ்சத்தை ‘சுருக், சுருக்’கென்று சுட்டன. அந்த வார்த்தைக் கம்புகள் செவிப்பறையில் அடித்தாற்போல அடிக்க அந்த சப்த அதிர்ச்சியில் அப்படியே சுருங்கி சுருண்டு போனான். அவன் மனசாட்சி குத்திய குத்தலில் அவமானம் பிடுங்கித்தின்ன ஆரம்பித்தது. அல்லா இந்த மட்டோடவாவது காப்பாற்றினானே..! அசிங்கப்பட்டு போகாமல் வாயில் உளறிக்கொட்டி, பிறகு ஊரோடு பேசிக் சிரிக்காமல் அல்லாஹ் காப்பாற்றினான். அல்ஹம்துலில்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்! என்று மனசுக்குள் பலமுறை சொல்ல ஆரம்பித்தான் சபூர்.”2 என்னும் கூற்றுகளின் வாயிலாக சிறுவயது பெண்ணை முதிய ஆடவனுக்குத் திருமணம் செய்வது சரியல்ல என்பதை ஆசிரியர் உணர்த்துகிறார்.

கணவனைத் திருத்தும் மனைவி
பொதுவாகவே ஆண்களுக்கு என்னதான் மனைவி அழகாக அமைந்தாலும் வேறொரு பெண்ணை நாடுவது இயல்பு. அதை போலத்தான் ‘ஆயிரத்தில் ஒருத்தி’ சிறுகதையில் வரும் அபூநவாஸ் தன் அலுவலகத்தில் வேலை செய்யும் வாஹிதா மீது காதல் கொள்கிறான். இதைப் பலவாறு உணர்ந்து கொண்ட அவனுடைய மனைவி பஷீரா கணவனைத் திருத்த வேண்டும் என நினைக்கிறாள்.

ஒரு நாள் வாஹிதாவை வீட்டுக்கு அழைத்து வந்தபோது அவளை நல்ல முறையில் வரவேற்றுப் பிள்ளைகளை அறிமுகம் செய்து இனிப்பு வழங்கி விருந்தோம்பி, வீடு முழுவதையும் சுற்றிக்காட்டி சிறுவயது முதலே கணவனுக்குத் தன்மீதும் தனக்கு கணவன் மீதும் இருந்த அன்பையும் காதலையும் சொல்லி, போகும்போது ஒரு புடவையையும் பரிசளித்தாள். வாஹிதாவுக்கும் தன் கணவனுக்கும் இருக்கும் உறவை எங்கும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் உள்;ர இருவரையும் அவ்வப்போது பழித்துக்கொண்டே இருந்தாள்.

பஷீராவின் வெகுளித்தனமான பேச்சிலும், விருந்தோம்பலிலும் மனதைப் பறிகொடுத்த வாஹிதா இவர்களுக்கு நாம் துரோகம் செய்யக்கூடாது. சந்தோஷமான குடும்பத்தை என் சுயநலத்திற்காக அழிக்கக்கூடாது என்று நினைக்கின்றாள். அதைப் பின்வரும் அவள் கூற்று உறுதிப்படுத்துகிறது.

“பஷீரா அக்கா ஒரு வெகுளி… வெளுத்ததெல்லாம் பாலுங்கிற அப்பாவி அவங்களைச் சுற்றிரெண்டு கண்ணுங்க மாதிரி புள்ளைங்க… அவங்க உங்கமேல வச்சிருந்த பாசம்… நம்பிக்கை… எல்லாத்தையும் கண்ணால் பாத்துட்ட பிறகு… தெரிஞ்சுக்கிட்ட பிறகு… என் மனசின் அடித்தளத்திலே நீங்க காட்டுன பரிவாலே முளைவிட்டிருந்த அந்த இழிவான ஆசையை… இன்னொருத்தியின் தெளிவான வாழ்க்கைக்குள் நுழைஞ்சி, பங்கு போட்டுக்கிடணும்னு தோனின சுயநலத்தைக் கிள்ளி எறிஞ்சுட்டேன்”3 என்னும் கூற்று இங்கு கருதத்தக்கது.

சமூக ஒற்றுமை சமய நல்லிணக்கம்
இன்றைய பெற்றோர்கள் பணம் சம்பாதிக்கின்ற வழியைக் கற்றுக் கொண்டார்கள் ஆனால், வாழ்க்கையை எப்படி வாழ்வது? பிள்ளைகளை எப்படி வளர்ப்பது? என்று தெரியாமலேயே பணத்திற்குப் பின்னால் அலைந்து கொண்டிருக்கின்றார்கள், சமூக ஒற்றுமை பற்றிப் பேசவோ சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்துவதற்கோ இங்கு யாருக்கும் நேரமில்லை. தொலைக்காட்சியின் உதவியால் இன்று ஜாதி, மதம், இனம் ஆகியவைப்பற்றிப் பேசவும் பார்க்கவும் இன்றைய தலைமுறையினர் நன்றாகக் கற்றுக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு குடும்பத்தின் வசதி வாய்ப்புகள் இன்னொரு குடும்பத்தை எப்படித் தாக்குகிறது என்பதை தன்னுடைய ‘கடைசி ஆசை’ என்னும் கதையில் ஆசிரியர் மிக அழகாக எடுத்துரைத்துள்ளார்.

பாரூக், ஸல்மா இவர்களுக்கு ஒரே மகன் ரிஸ்வான்;. அவர்கள் வசிக்கும் குடியிருப்பில்; சாய் பிரசாத் என்பவனுடைய அப்பா இரண்டாம் தர ‘பியட்’ கார் ஒன்றை வாங்க, அதை சாய் பிரசாத்தின் பெரிய அண்ணன் ஓட்டிப் பழக, மற்ற எல்லோரையும் காருக்குள் ஏற்றுபவர்கள் ரிஸ்வானை மட்டும் ஏற்றவில்லை. மேலும் கிண்டல் செய்ய அது அவன் மனதில் ஆறாத வடுவாக மாறிவிட்டது. மேலும் இது மனநோயாகவும் மாறி அவனை நோயாளியாகவும் மாற்றியது. டாக்டர்கள் எவ்வளவோ பரிசோதித்தும் உடல்நிலை தேறவில்லை.

“ஏம்மா… நம்ப அத்தாவுக்கு சாயிபிரசாத்தோட டாடியை விட சம்பளம் அதிகந்தானே…? அவங்களே கார் வாங்கிட்டபோது நாம மட்டும் ஏன் மம்மி இப்படி? அவங்க மாதிரி கார் வாங்க முடியாட்டியும் ஜீப் கூடவா வாங்க முடியாது?, செகண்ட ஹேண்ட் ஜீப்பாவது வாங்கி என்னை மட்டும் அதுல ஏற்றிவச்சு அந்த யூஸ்லெஸ் பசங்க முன்னாடி ஒரு ரவுண்டு போய்க்காட்டணும் மம்மி… இது என்னோட லாஸ்ட்விஷ் அவ்வளவுதான்”4 என்ற ரிஸ்வானின் கூற்று உற்று நோக்கத்தக்கது.

“அந்த பிஞ்சு மனசுக்குள் எவ்வளவு பெரிய பாரத்தை சுமந்துகிட்டிருந்தா இப்படியெல்லாம் சொல்லத் தோன்றியிருக்கும்? நம்ப தலைமுறையிலே இல்லாத அளவு இந்த காலத்து நண்டு சுண்டெல்லாம் ஜாதி, மதம், இனம்ன்னு பேதம் பார்க்கவும், பேசவும் நல்லாக் கத்துக்கிட்டிருக்குதுக… எல்லாம் டி.வி. சினிமாவோட கைங்கர்யம்தான் ஸல்மா… சில சமயம் யோசித்துப் பார்த்தா நாம எங்கே போய்க் கொண்டிருக்கோம்னே தெரியல.. முன்னேறிக்கிட்டிருக்கோமா? பின்னேறிக்கிட்டிருக்கோமா?”5 என்ற கூற்று ஆசிரியரின் சமுதாயப் பார்வையைப் புலப்படுத்துகிறது.

“அடுத்த மதத்தை மதிக்கணும்… மனிதர்கள்லே உயர்வு தாழ்வு இல்லேங்கறதையெல்லாம் பிஞ்சு மனசுல பதியவைக்க நேரமில்லாம பெத்தவங்க படுபிஸியாப் போனதும் ஒரு காரணம் தான் ஸல்மா… பணம் தேடுவதற்கு நாம் கொடுக்குற முக்கியத்துவத்துலே ஒரு சிறு பங்குகூட சமூக ஒற்றுமைக்கோ சமய நல்லிணக்கத்திற்கோ கொடுக்கறதில்லே…”6 என்ற கூற்றின் வழியாக இன்றைய சமுதாயத்தை ஆசிரியர் சாடுகின்றார்.

சமய நல்லிணக்கம் அரிதாகிக் கொண்டிருக்கும் இன்றைய உலகில் குழந்தைகளின் மனதில் ஆழப்பதிந்துவிடும் ஏக்கத்தால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு மருத்துவத்தைவிட மனவியல் பரிகாரமே தீர்வாகிறது என்னும் உண்மையை ‘கடைசி ஆசை’ சிறுகதை வாயிலாக உணர்த்தியுள்ளார் ஆசிரியர்.

நீதியைக் காப்பாற்றும் சமுதாயம்
பெற்ற பாசத்தைவிட வளர்த்த பாசம் வலுமிக்கது என்றாலும் இறைவனின் கட்டைளையை மீறாமல், அதே சமயம் அநீதி ஏற்பட்டு விடாமலும் சாதுர்யமாக, பரம்பரைச் சொத்துப் பிரிவினையில் கரீமா நடந்து கொண்டவிதம் ‘தாய்ப்பறவை’  சிறுகதையில் மிக அழகாக காட்டியிருக்கின்றார் ஆசிரியர்.

கரீமாவுக்கு இரண்டு ஆண்பிள்ளைகள், பெரியவன் பெயர் கமாலுதீன், சிறியவன் பெயர் அப்துல்லா, பெரியவன் தாய்ச் சொல்லைக்கேட்டு அடக்கமாக நடந்து நன்றாக கல்விகற்று நல்ல வேலையிலும் சேர்ந்துவிட்டான். திருமணமும் ஆகிவிட்டது. சிறியவன் அதிகம் செல்லம் கொடுத்து வளர்த்ததால் அடாவடித்தனமாக வாழ்ந்து கல்வியும் கற்காமல் இருந்தான். அவனுக்கும் திருமணம் ஆகிவிட்டது. கணவன் வழியாக வந்த சொத்துகள் அனைத்தையும் சின்ன மகனுக்கே எழுதி வைத்துவிட்டாள். பெரியமகனுக்குச் சின்னம்மா தனக்குக் கொடுத்த நகை மற்றும் நிலங்களைக் கொடுத்துவிட்டாள் கரீமா. காரணம் பெரியவன் வளர்ப்புப்பிள்ளை என்பது பின்னாளில் சின்னம்மா வாயிலாகத் தெரிந்து கொள்ளுகிற கரீமா இறைக்கட்டளையின்படி இவ்வாறு செய்ததாகச் கூறுகிறாள்.

“வயித்தைக் கீறி புள்ளையெ வெளியே எடுத்தப்போ ஆம்புளப் புள்ளை வயித்தலயே மவுத்தாப் போயிருச்சு… எந்தப் பிள்ளைக்காக இவ்வளவு பக்குமா இருந்து இந்தப் பாடுபட்டோமோ அது ‘இல்லை’ன்னு போனதை பலகீனமாயிருந்த உன்னால தாங்கிக்க முடியாது…நீ உசிரு வச்சிருக்க மாட்டே… உன் புருஷனுக்கும், மாமியாளுக்கும் இரை குடுக்க முடியாதுன்னு, அதே சமயத்துலே அடுத்த வார்டிலே பிறந்த பிள்ளை ஒன்னு அனாதையா போச்சுன்னு டாக்டரம்மா சொன்னதும் நானும் உன் சச்சாவும் டாக்டரம்மாவைக் கலந்துகிட்டு, அந்தப் புள்ளையை உனக்கு மயக்கம் தெளியறதுக்குள்ளே மாத்தி வச்சிட்டோம் கரீமா”7 என்னும் கூற்றும்,

“யா அல்லாஹ்.. மறைவானவைகளை அறிபவனே அறியாமல் நேர்ந்த தவறை மன்னித்துவிடு… உண்மை தெரிஞ்ச நாளிலிருந்து என் மனம் படும்பாடு உனக்கு மட்டும் தெரியும். “தான் பெறாத பிள்ளை தன் பிள்ளையாகாது” என்று அறுதியிட்டுக் கூறியுள்ள உன் வசனத்தை மீற என் மனம் இடங் கொடுக்கவில்லை, உண்மை எனக்குத் தெரிந்த பிறகும் தகப்பன் வழி பரம்பரைச் சொத்தில் கமாலுதீனுக்கு சமபங்கு கொடுத்து உன் ஆணையை மீறாமல் என்னைக் காத்துக் கொண்டாய். உண்மை தெரியாத ஊரும் உலகும் அவனுக்கு நான் ஓர வஞ்சகம் செய்து விட்டதாகப் பேசுகிறது.. பெரியவனை ஏமாற்றிவிட்டதாக ஏசுகிறது… சின்னம்மா எனக்குத் தந்த நகைகளையும் நிலத்தையும் என் கண்ணுக்குப் பிறகு கமாலுக்குச் சேர உயில் எழுதி என் நன்றிக் கடனை, வளர்த்தப்பாசத்தைத் தீர்த்துவிட்டேன்”8 என்ற கூற்றின் வழி இறைக்கட்டளையின்படி நீதியை நிலை நாட்டுகின்ற சமுதாயம் என்பது தெரியவருகிறது.

பிள்ளைப் பெறாதவளை மலடு என்று சாடுதல்
ரங்கோன் உஸ்மானுக்கும் கரீமாவுக்கும் திருமணமாகி ஐந்து வருடங்களாகியும் குழந்தை பிறக்கவில்லை. மாமியார் மைதீன் பாத்து மருமகளை மலடு என்று திட்டுவதும் ‘தலாக்’ கூறிவிட்டு வேறு பெண்ணைத் தம் மகனுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பதை ஆசிரியர் தாய்ப்பறவை சிறுகதையில் அழகாக வெளிப்படுத்தியிருக்கின்றார்.

“கல்யாணம் பண்ணி அஞ்சு வருசமாச்சு.. புள்ளையையுங் காணோம், குட்டியையுங் காணோம்… சரியான மலட்டு வம்சம் அவளை ‘வார்த்தை’ (தலாக்) சொல்லி விரட்டிவிட்டு வேற பொண்ணு பார்க்க வேண்டியது தான்”9 என்னும் கூற்றின் வழியாக பிள்ளையை பெற்றெடுக்காதப் பெண்களை மலடி என்று சாடுவது இக்கதையின் வழியாகப் புலப்படுத்தப்படுகிறது.

பிள்ளைகளைக் கவனிக்காத பெற்றோர்கள்
இன்றைய அறிவியல் உலகில் பெற்ற பிள்ளைகளைக் கவனிக்கப் பொழுதின்றி, ஆயாவின் வளர்ப்பில் விட்டுவிட்டு பொது வாழ்வில் ஈடுபடும் தாயின் சுயநலத்தையும், குழந்தை மன ஏக்கத்தைப் புரிந்து கொள்ளாத பெற்றோர்களின் திருமண முறிவால் பாதிக்கப்படும் குழந்தைகளின் நிலை, அன்போடும் பண்போடும் வளர்க்காத பிள்ளைகளின் நிலை, ஆகியவற்றை சமுதாயத்தின் வழி நின்று “சூழ்நிலை அனாதை”யாக மாறும் குழந்தைகளின் மன ஓட்டத்தைப் பின்வரும் கூற்றுகளிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது.

“கோபு சுரேஷ், அந்தோணி, ஸமீர், ஆஸாத் எல்லோரும் அவங்க பேரண்ட்ஸ் கூட ஜாலியா இருக்காங்களே! அவங்களப் பார்த்தா ரொம்ப ஜாலியா இருக்கும் எனக்கு. ஒரு பிள்ளை வளர நல்ல சாப்பாடு, நல்ல ஸ்கூல், டிரஸ், ஆயா…ன்னு ஏற்பாடு பண்ணிட்டா போதும்னு, என்னெப் பெத்தவங்க நெனச்சிருந்தாங்கங்கற விஷயம் நான் பெரியவனா வளர வளர மனசைப் போட்டு வண்டா துளைக்க ஆரம்பிச்சுது.”10 என்னும் கூற்று என்னதான் எல்லாம் இருந்தாலும் பெற்றோர் அரவணைப்பு இல்லையென்றால் வெறுமையே மிஞ்சும் என்பது புலப்படுத்தப்படுகிறது.

கடமையையும் இறையச்சத்தையும் உணர்த்தும் சமுதாயம்
மனைவி இறந்துவிட்ட நிலையில் அதைத் தாங்கிக் கொள்ளக்கூடிய மனநிலை இல்லாதவனாய் பெற்றெடுத்த நான்கு குழந்தைகளை விட்டு விட்டு வீட்டை விட்டு வெளியேறி நாடோடியாகத் திகழும் ஒருவனுக்கு, வேறொரு கஷ்டப்படும் குடும்பத்தின் நிலையைக் காட்டி, உலகக் கடமையிலிருந்து தப்பிக்க, சொந்த சோகத்தைத் துணையாக்கிக்கொள்ளும் கோழைத்தனத்தை பின்வரும் கூற்றுகளின் வாயிலாக ஆசிரியர் கூறுவது கருதத்தக்கது.

“உலக வாழ்க்கையிலே அவுங்கவுங்களோட கடமைகளைச் செய்யறது, இறைவணக்கத்துக்குச் சமம்ன்னு சொல்லுவாங்க.. உலக இழப்புகளுக்காக சதா அழுது தவித்து சோம்பியிருக்கிறவனை அல்லாஹ் கூட மன்னிக்க மாட்டான். மனைவி, மக்கள், சொத்து, சுகம், சொகுசு… எல்லாமே தற்காலிகமாக அலங்காரப் பொருள்கள் தான். அவை எல்லாவற்றையும் என்றைக்கோ ஒருநாள், விட்டு விட்டுத்தானே போகனும்? இதுவே சதம்ன்னு வேதனைப்பட்டு எண்ணிக் கொண்டிருந்தால் படைச்சவனை மறந்ததா அர்த்தமாகிறது. வல்லவனுக்குத்தான் தெரியும் மறைவான விஷயங்கள். அந்தப் படைச்சவனுக்குப் பயந்து நடக்குறதுலேதான் மனித வாழ்க்கை பூர்த்தியாகும்.”11என்பதை “கண்மணியே கண்ணுறங்கு நெஞ்சமே நீயுறங்கு” என்ற கதையின் வழி ஆசிரியர் கூறுவது கருதத்தக்கது.

இதுகாறும் கூறியவற்றான் பாத்திமுத்து சித்தீக்கின் இடி மின்னல் மழை சிறுகதைகள் வாயிலாக பொருத்தமற்ற திருமணத்தைத் தடுக்கும் சமுதாயத்தையும் சமூக ஒற்றுமை மற்றும் சமய நல்லிணக்கத்தை வற்புறுத்தும் சமுதாயத்தையும் நீதியை நிலைநாட்டும் சமுதாயத்தையும் கடமை மற்றும் இறையச்சத்தை உணர்த்தும்  சமுதாயத்தையும் அறியமுடிகின்றது.

 

1.    பாத்திமுத்து சித்தீக், இடி மின்னல் மழை ப.33
2.    மேலது, ப.35
3.    மேலது, ப.59
4.    மேலது, ப.78
5.    மேலது, ப.79
6.    மேலது, ப.79
7.    மேலது, ப.100
8.    மேலது, ப.104
9.    மேலது, ப.88
10.    மேலது, ப.108
11.    மேலது, பக்.141, 142

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

* - முனைவர் கோ. வெங்கடகிருஷ்ணன், தமிழ்த்துறை, இசுலாமியாக்கல்லூரி(தன்னாட்சி) வாணியம்பாடி. -


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R