முன்னுரை
கவிஞர் சிற்பியின் சிந்தனைகள் பரந்த அனுபவமும் மனித வாழ்க்கை குறித்த காலத்திற்கேற்ற மதிப்பீடுகளும் கொண்டவை. தனிமனித வாழ்க்கையில் உள்ள பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வுகாணும் போக்கில் அவருடைய கவிதைகள் அமைந்துள்ளன. இவை சமூகம் சார்ந்த பல்வேறு சிந்தனைகள், வரலாறுகள், மரபுகள், தொன்மங்கள், சமயம், சமயமறுப்பு, அரசியல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு மனிதனின் தற்கால வாழ்க்கைக்கும் எதிர்கால சமூக நலனுக்கும் ஒரு தீர்வு சொல்கின்ற வகையில் அமைந்துள்ளன. அவருடைய கவிதைகளில் அவர் சார்ந்திருந்த சில இயங்கங்களின் செயல்பாடுகளும், கொள்கைகளும், தத்துவங்களும் எதிரொலிக்கின்றன. இவ்வகையில் அவ்வியக்கம் சார்;ந்து, இவர் கவிதைகளை ஆராய்வது இங்கு பொருத்தமுடையதாகிறது.
தத்துவம் - விளக்கம்
“தத்துவம் என்ற சொல் நெடுங்காலமாகவே ஆன்மீக வாதிகளால் பிரம்மத்தைச் சுட்டப் பயன்படுத்தப்பட்டு வந்தள்ளது. சாமவோ சாந்தோக்கிய உபநிடதத்தில் வேதாந்த மகாவாக்கியமான தத்துவம்சி (தத் - இறைவன், துவம் - நீ, ஆசி – ஆகிறாய்) இறைவன் ஒருவன் உள்ளான் என்பதை வலியுறுத்துகிறது”1 மாணிக்கவாசகரும், “தாயிற் சிறந்த தயாவண தத்துவனே என்ற பிரமத்தைச் சுட்ட தத்துவம் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்”.2
பழங்காலத்தில் ‘மெய்’ என்னும் சொல், உட்பொருளை உணர்த்திற்று, உட்பொருள் என்பது உண்மைப்பொருள் என்று பொருள் தருகிறது. இந்த அடிப்படையில் தத்துவம் என்ற வடசொல்லை விடுத்துத் தமிழ்ச் சொல்லான ‘மெய்ப்பொருளியல்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இதனை ‘மெய்யியல்’ என்றும் வழங்குவர்.
மேலும் 'Philosophy’ என்னும் ஆங்கிலச் சொல் ‘பிலாஸ்’, ‘சோமியா’ என்னும் இரு கிரேக்கச் சொற்களாலானது. இதன் தமிழாக்கம் ‘பேரறிவுக்காதல்’ என்பதாகும். ‘ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள அளப்படும் கரணங்கள் நான்கும் சிந்தையே ஆக’ என்ற பெரிய புராணச் சொற்றொடரில் பேரறிவு என்னும் சொல் ஏறத்தாழ இதே பொருளைத் தாங்கி வந்துள்ளது”3.
'Philosophy’ என்னும் சொல் தத்துவம் என்றும் மொழியாக்கம் செய்யப்படுகிறது. தத்துவம் என்பது ‘தத்வ’ என்ற வடசொல்லின் தற்பவம் ஆகும். ‘நீயே அது’ என்பது இச்சொல்லின் உண்மைப் பொருளாகும்.
கவிதையும் மெய்யியலும்
தமிழ்க்கவிதை வரலாற்றில் மெய்யியல் கூறுகள் சங்ககாலம் முதலே ஆழமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. புறநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை என்று தொடங்கி தமிழலக்கியங்கள் அனைத்தி;லும் மெய்யியல் கூறுகளைக் காண முடிகின்றன. தேவாரம், திருவாசகம், பெரிய புராணம், கம்பராமாயணம் முதலியவற்றினுள்ளும் சமயம் சார்ந்த மெய்யியல் கூறுகளைக் கூடுதலாகக் காணமுடிகிறது. தமிழர்களின் சிந்தனைச் செழுமைக்குச் சித்தர் பாடல்கள் சிறந்த சான்றுகளாய்த் திகழ்கின்றன.
இருபதாம் நூற்றாண்டில் தத்துவச்சிந்தனைகள்
இருபதாம் நூற்றாண்டுச் சூழலில் பாரதி கவிதையில் மெய்யியலின் தாக்கத்தைக் கூடுதலாகப் பார்க்க முடிகிறது. ‘காக்கைக் குருவி எங்கள் ஜாதி – நீள கடலும் மலையும் எங்கள் கூட்டம்’ என்ற பாரதி வரிகளில் இயற்கையோடு வாழ்க்கை இணைந்து இருக்கின்றது என்பதை காணமுடிகின்றது. இவ்வாறு தமிழ்க் கவிதைகளின் வரலாற்றில், மெய்யியலும் கவிதையும் இணைந்து கிடப்பதைப் பார்க்க முடிகின்றது. பாரதிதான் கவிஞர் சிற்பியின் தத்துவ, ஆன்மீக உலகின் ஊற்றுக்கண். இந்தத் தாக்கத்தைக் கவிஞர் சிற்பியின் கவிதைகளிலும் பரவலாகத் தரிசிக்க முடிகிறது.
இயக்கம் சார்ந்த தத்துவச்சிந்தனைகள்
பெரியாரது இயக்கம் காரணமாக கடவுள், ஆன்மா முதலியவை கேள்விக்குள்ளாக்கப்பட்டன. எனவே புறவடிவத்தில் கடவுள் இல்லை என்றும் அகத்தினுள்ளே தான்; கடவுள் இருக்;கின்றார் என்றும் சிலர் கருதுகின்றனர். காலாதீதம், நிதர்சனம், உள்காட்சி போன்ற பெயர்களில் இடம் பெறுவது இந்த உணர்வுதான் எனலாம். “மேற்கிலிருந்து வந்தது என்று அறியப்படுகின்ற ‘இருத்தலியலி’ன் முக்கியக் கூறு, வாழ்வுக்குப் பொருள் என்ன என்பதாகும். இந்தியத் தத்துவச் சிந்தனையின் மைய இழையாகிய ‘நான் யார்..?’ என்ற கேள்வியும், வாழ்வின் அர்த்தமிழந்த இருத்தலியல் கேள்விகளும் அடிப்படையில் ஒன்றுபடுகின்றன. விவேகானந்தர் பாரதி மூலம் அத்வைத உணர்வு சமதர்ம உணர்வாய்ப் பொருள் பெற்றது. மனித வாழ்வின் அடிப்படை அறம் என்று ‘சமதர்ம உணர்வை’த் தான் சொல்ல முடியும். இதற்குக் காரணம் மார்க்சியத்தின் வருகையே எனலாம். இவ்வகையில் “வள்ளலாரின் ஆன்ம ஒருமைப்பாடு என்பதைச் சமதர்மத்திற்கு நெருக்கமாக வைத்துப் பொருள் படுத்த முடியும்”4 என்று ம.மதுசூதணன் கூறுகிறார் இந்தப் பின்புலத்தில் கவிஞர் சிற்பியின் கவிதைப் பயணம் தத்துவச் செறிவையும், ஆன்மீக உயிர்ப்பையும் ஆரோக்கியமாக உள்வாங்கி மார்க்சிய நோக்கோடு முன்னேறுவதைக் காண முடிகிறது.
வானம்பாடியின் மார்க்சியப் பார்வை
வானம்பாடிக் கவிஞர்களிடையே இருந்த மார்க்சிய உணர்விற்கான பின்புலத்தை மதுசூதனன் பின்வருமாறு கூறுகிறார். கவிஞர் சிற்பி வானம்பாடி கவிஞர்களுள் ஒருவர் என்பது இங்கு எண்ணுதற்குரியது.
“பாரதியின் ஊழி இன்னும் தொடர்கிறது என்பதற்கு வானம்பாடி இயக்கம் தகுதிமிக்க ஒரு சான்று. மரபுக் கவிதை முறையை மறுத்து புதுக்கவிதையை வளர்த்தவர்கள் கவிதையின் புற வடிவமாகிய எதுகை, மோனை, யாப்பு, இசை முதலியவற்றை மறுப்பதையே முதன்மையாகக் கொண்டிருந்தார்கள். இந்திய மரபு அல்லது தமிழ் மரபின் வழியே செயல்பட்ட அற உணர்வு என்பது மரபின் முக்கியக்கூறு என்பதை இவர்கள் புரிந்து கொள்ளவில்லை. மார்க்சியத்தின் வழியே வந்த சமதர்ம உணர்வும் இந்தியாவின் நெடுங்கால மரபுக்குள் செயல்பட்ட அற உணர்வும் பாரதி வழியே மீண்டும் வானம்பாடி இயக்கத்தினுள் இணைந்தன. புதுக்கவிதை மீண்டும் மக்களுக்கு நெருக்கமாயிற்று எல்லா மனிதர்களுக்கு உள்ளும் செயல்படும் கவித்துவம் என்பதை வானம்பாடி இயக்கம் தான் கண்டு கொண்டது”5 என்று கூறுகிறார். கவிஞர் சிற்பியின் கவிதைகளும் மார்க்சிய அடிப்படை கொண்டவை என்பதை இவரது கூற்று அறிவிக்கின்றது.
மார்க்சிய மெய்யியல்
இருபதாம் நூற்றாண்டின் நகரச் சூழலில் பொருளுக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்டு மனிதன், குணம் மாறுவது குறித்தும் வாழ்வின் அர்த்தம் அழிவது குறித்தும் இவருடைய கவிதைகள் சொல்லுகின்றன.
நான்யார்? என்பது காலம் காலமாக சமயம் எழுப்பும் ஒரு கேள்வியாகும். கவிஞரும் இந்தக் கேள்வியைத்தான் தனக்குள் கேட்டுக் கொள்கிறார். அக்கவிதை வருமாறு:
“உன்னிலிருந்து
உன்னை விலக்கும்
உபாயம் கை வந்தால்
உலகம் உன்னை
பிரியாதிருக்கும்
ஒரு வரம் சாத்தியமே!
……………………..
போதனை செய்ய
நான் யார்? நீ யார்?
பொறிகள் கலங்கிடுமுன்
சோதனை செய்ய
இது தான் தருணம்
உன்னை பிரித்துப் பார்!”5 (சி.க. ப.1178)
இக்கவிதையில் உலகப் பொருட்களின் மீது எந்தப் பற்றும் இல்லாமல் இருக்கும் ஒரு பேருண்மை விளக்கம் பெறுகின்றது.
சமபாவ மனப்பான்மை
சமபாவம் என்பது பிரபஞ்சப் பார்வையின் ஒர் அம்சமாகும். அனைத்தையும் சமமாகப் பாவித்தல் என்ற தத்துவக் கருத்தைத் தனது கவிதை வரிகளின் மூலம் விளக்குகிறார். முதலில் மழைத்துளி ஞானியின்மேல் விழுகிறது. பின்பு பறந்து செல்லும் கொக்கின் எச்சம் விழுகிறது. இதனை ஞானி,
“அது ….. கொக்கு உதிர்த்த
மழைத்துளி
இது முகில் கிழித்த
எச்சம் ….
கவலையின்றிப் பறந்தது
கொக்கு”6 (பூ.ச., ப. )
என்று சமபாவ மனப்பான்மையோடு கூறுகிறார். இந்த வரிகள் அனைவரையும் சமமாகப் பாவிக்கும்; மார்க்சியப் பார்வையைக் குறிக்கிறது.
மார்க்சியப் பார்வை
கதவருகே காத்துக்கிடப்பதே வாழ்க்கையாகிவிட்டது என்கிறார். மேலும் தொட்டால் திறக்குமெனத் தோன்றினாலும் தட்டித்திறக்க மனதில் தைரியமில்லை என்றும் கூறுகிறார்.
“கதவுக்கு அருகில்
காத்துக் கிடப்பதே
வாழ்க்கையாகி விட்டது
தொட்டால் திறக்குமெனத்
தோன்றுகிறது
தைரியம் வரவில்லை”7
மேற்கண்ட கவிதையில் கதவு என்பது ஒரு குறியீடாகும். அவருக்குள் ஏதோ ஒன்று அடைத்துக் கொண்டிருக்கிறது. அதைத் திறக்க வேண்டும். எத்தனையோ தடைகள் இருந்தாலும் அதனையும் மீறிய தைரியம் வேண்டும். தன்னைத்தானே தோண்டிப்பார்க்க வேண்டும். வரலாற்றுக்குள் பயணம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் ‘நான் யார்’ என்பது தெரியும். தன்னுடைய குறை நிறைகள் தெரியும் என்று பதிவு செய்கிறார். இப்படி வரலாற்றை ஆய்வது மார்க்சிய மெய்யியல் ஆகும்.
அரசியல் பார்வை
‘சர்ப்பயாகம்’ தொகுப்பில் கவிஞரின் அரசியல் பார்வை வெளிப்படையாக இடம் பெறுகிறது. முதலாளிய சக்திகள் அனைத்தையும் ஒட்டு மொத்தமாக நெருப்பில் போட்டு எரிக்கிற சர்ப்பயாகம் தேவை என்பதைப் பின்வரும் கவிதையின் மூலம் கூறுகிறார். இதனை,
“பரம பதத்துச்
சோபான படம்
எங்கள் தேசம்
அதில்
கட்டங்கள் தோறும்
நச்சுப் பாம்புகள்
காத்துக் கிடக்கின்றன
…………………….
அந்த
எரிதழற் சாம்பலில்
ஒரு
பரம பதத்தை
எங்கள்
சிரம பதத்தால்
சிரு#;;டித்துக் கொடுப்போம்
ஏனெனில் இது
‘ஜனமே ஜய’
யுகம்!”8
என்ற வரிகள் மூலம் விளக்குகிறார். அணு வெடிப்புச் சோதனைகளை “நாய்க்குடைக் காளான்கள்” என்று வர்ணிக்கும் கவிஞர், அணுவின் அழிவுச் சக்திக்கு எதிராகப் பேசுகிறார். தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளையும், உயிர்களையும் அழிக்கிற நில உடைமைச் சக்திகளுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தால் ‘சிகரங்கள் பொடியாகும்’ என்கிறார். உலகில் தனி உடைமை ஒழிய வேண்டும். சுரண்டலுக்கும் ஒடுக்கு முறைக்கும் உலகில் இடம் இல்லாதிருக்க வேண்டும். மனிதர்களில் தாழ்ந்தவர், உயர்ந்தவர் என்ற பாகுபாடு தேவை இல்லை என்ற மார்க்சியக் கருத்தைக் கொண்ட அக ஒளியைக் கவிஞரின் கவிதைகள் புலப்படுத்துகின்றன.
மதத்தின் மூலம் மார்க்சியம்
கவிஞர் சிற்பி மதங்களைக் காட்டி மார்க்சியக் கருத்தைப் பதிவு செய்கிறார். அவர்,
“எல்லா உயிரையும்
உயிரிலாப் பொருளையும்
நேசித்திருப்பதே
அணுக்கள் சொல்லும்
அர்த்தமுள்ள மதம்”9
என்று கூறுகிறார். இங்கு மதங்களின் பெயரால் சண்டையிட்டுக் கொள்ளாமல் அம்மதத்தின் உண்மை நிலையை ஆராய்ந்து செயல்பட வேண்டும். அனைத்தையும் சமமாகப் பாவித்து நேசித்திருப்பதே மதங்களின் அடிப்படைக் கொள்கையாகும். இதுவே மார்க்சியத்தின் அடிப்படையும் ஆகும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மார்க்சியக் கருத்து
மனிதன்தான், உலகிற்கு அழகு தருகிறான். அர்த்தம் தருகிறான். சாயங்களுக்கு எதிராக, துயரங்களுக்கு எதிராக இவன் வாளுயர்த்திப் போராடும் போதுதான் தனக்கான அழகை, உயிர்ப்பைப் பெறுகிறான். மனிதன்தான் பூரண சௌந்தர்யத் தாரகை என்கிறார். இதனையே,
“‘அவன் விழிதிறக்கும் போது
வாள் எடுக்கும் போது
இந்த அழகுக் களஞ்சிய
பூமியில் அவன்தான்
பூரண எழிலின்
பொக்கிஷம்!
சத்திய சௌந்தர்ய
லட்சியம்!”10
என்று பாடுகிறார். ‘மனிதன் மகத்தானவன்’ என்று மார்க்ஸிம் கார்க்கி கூறுகிறார். மனிதனின் மகத்துவத்தைத் தான் மார்க்சியம் சொல்லுகிறது. கவிஞரும் இந்தப் பொருளில்தான் மனிதனைப் போற்றுகிறார். போராடும் மனிதனுக்குள் தான் உயிரின் தத்துவம் முழுமை பெறுகிறது.
மனிதர்கள் இன்னும் கனவுகளில் வாழ்கிறார்கள். கனவுகளுக்கு அடியில் புதைந்திருப்பது எதார்த்தமாகும். கனவுகளைக் கலைத்துக் கொள்வதன் மூலமே எதார்த்தத்தை அறிய முடியும். ‘கனவு வாங்கலையோ கனவு’ என்ற கவிதையில் கனவுகளின் சில வகைகளைக் குறிப்பிடுகிறார் கவிஞர். பச்சைக் கனவென்றும், சிவப்புக் கனவென்றும் குறிப்பிடுகிறார். பச்சை என்பது சமாதானத்தைக் குறிக்கும். சிவப்பென்பது புரட்சியைக் குறிக்கும். கனவென்ற நிலையில் புரட்சி இருக்க முடியாது. எதார்த்தத்தை ஆழமாகப் புரிந்து கொள்வதன் மூலமே புரட்சிக்கான வழிதிறக்கும் என்பதே இவரின் கருத்தாக உள்ளது.
முடிவுரை
மனித வாழ்க்கைச் சிக்கல்களுக்கு, மார்க்சியத்தில் விடை தேடுவது கவிஞர் சிற்பியை ஒரு மார்க்சீயவாதியாக அடையாளம் காட்டுகின்றது. ஒவ்வொரு மனிதனும் தனக்கு ஏற்படும் தடைகளைத் தாண்டிச் செல்ல வேண்டும் என்ற தைரியம் வரவேண்டும் என்றும், தன்னைத் தோண்டி தனக்குள் பயணம் செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார். இது ‘உன்னை நீ அறி’ என்ற சாக்ரட்டீஸின் தத்துவச் சிந்தனையை நினைவுப்படுத்துகின்றது.
சான்றெண் விளக்கம்
1. தமிழ்ப் புதுக்கவிதைகளும் மெய்யியற்சிந்தனைகளும் ப.23
2. சிவபுராணம் ப.5
3. இந்தியத் தத்துவஞானம் ப.8
4. தமிழ்ப் புதுக்கவிதைகளும் மெய்யியற்சிந்தனைகளும் ப.24
5. சிற்பியின் கவிதைத் தொகுதி., ப.1178
6. மேலது., ப.1028
7. சிற்பியின் கவிதை வானம்., ப.561
8. சிற்பியின் கவிதைத் தொகுதி., ப.386
9. மேலது., ப.1083
10. மேலது., ப.320
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
* கட்டுரையாளர்: - வி.செந்தமிழ்ச்செல்வி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம்.-