எழுத்தாளர் க.நவம்ஆய்வு: ‘கறுப்பு உயிர்களும் உயிர்களே!’ மெல்ல அவல் தேடும் மேற்குலக ஊடகங்களின் வாய்களுக்குள் அகப்பட்டு, அல்லல் பட்டுக்கொண்டிருக்கிறது, வெர்மான்ற் (Vermont) பல்கலைக்கழகம்! அமெரிக்காவின் வடகிழக்கே, இயற்கையழகு கொஞ்சும் வெர்மான்ற் மாநிலத்துப் பல்கலைக்கழக வளாகத்தின் மத்தியில் பறந்துகொண்டிருந்த கொடி ஒன்று, இந்தவார இறுதியில் (செப்ரெம்பர் 24-25) களவாடப்பட்டமையே அதற்கான காரணம். அது ‘Black lives Matter’ என அழைக்கப்படும் ‘கறுப்பு உயிர்களும் உயிர்களே’ இயக்கத்தின் கொடி. கடந்த வாரம் சார்லெற் (Charlotte) நகரிலும், அதற்கு முன்னர் வேறுபல நகர்களிலும் கறுப்பு இனத்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதன் எதிரொலியாக ஏற்றப்பட்ட கொடி. ஒற்றுமை, சமத்துவம், சகோதரத்துவம், நீதியின் தேடல், வன்முறைக்கெதிரான போராட்டம் போன்ற இலட்சியங்களின் அடையாளச் சின்னமாகப் பறக்க விடப்பட்ட கொடி. பல்கலைக்கழக நிர்வாகத்தின் பூரண அங்கீகாரத்துடன், தேசியக் கொடியுடனும் மாநிலக் கொடியுடனும் சம உயரத்தில், சமாந்தரமாகப் பறக்க விடப்பட்ட கொடி. இனவாதிகள் அதனை இரவோடிரவாகக் களவாடியமை, எரிகின்ற இனவெறுப்புச் சூளையினுள் எண்ணெயை ஊற்றிவிட்டிருக்கின்றது!

அமெரிக்கக் காவற் துறையினரின் கடும் போக்கும், அதன் விளைவாக  இனவுறவில் ஏற்பட்டு வரும் விரிசல்களும் சமூகத்தில் ஆழ ஊடுருவியுள்ள இத்தருணத்தில் இடம்பெற்றுள்ள, வெர்மான்ற் பல்கலைகழகக் கொடியகற்றற் சம்பவம், இனப் பதற்றத்திற்கு மென்மேலும் ஊட்டம் அளித்துள்ளது. ‘கறுப்பு உயிர்களும் உயிர்களே’ இயக்கம் குறித்த புதிய சர்ச்சைகளுக்கும், வாதப் பிரதிவாதங்களுக்கும் வழி திறந்துள்ளது. நல்ல நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட ஒரு இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளை, வெவ்வேறானோர் வெவ்வேறு விதங்களில் அர்த்தம் கொள்ள வகைசெய்துள்ளது.

‘கறுப்பு உயிர்களும் உயிர்களே’ இயக்கம் (BLM) வன்முறையை ஊக்குவிப்பதாகவும், அதுவே ஒரு இனவெறுப்பு இயக்கமென்றும், வெர்மான்ற் பல்கலைகழக நிர்வாகம் இவ்வியக்கத்தின் கெடுபிடிகளுக்கு அடிபணிந்துவிட்டதாகவும், பண்பாட்டு மோதலொன்றின்போது பல்கலைகழகம் பக்கச்சார்புநிலை எடுத்துவிட்டதாகவும், இனிவருங் காலங்களில் தீவிரவாதக் குழுவொன்றின் கொடியையும் ஏற்றிவைக்கப் பல்கலைகழக நிர்வாகம் சம்மதிக்கக் கூடும் என்பதாகவும் வெள்ளையின அடிப்படைவாதிகளும் பழமைவாதிகளும் குற்றம் சாட்டத் துவங்கியுள்ளனர். இக்குற்றச் சாட்டுகளுக்கு மறுப்புத் தெரிவித்திருக்கும் BLM இயக்கத்தின் மூலகர்த்தாக்களோ, இதற்கு முற்றிலும் முரணான வாதத்தை முன்வைத்துள்ளனர். கறுப்பின மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் பாகுபாடுகளையும் கொடுமைகளையும் ஒடுக்குமுறைகளையும் உணர்ந்தவர்கள் இவ்வாறான குற்றச் சாட்டுகளைச் சொல்லத் துணிய மாட்டார்கள் எனவும், BLM பற்றி இத்தகைய தவறான பரப்புரையை அவர்கள் ஒருபோதும் மேற்கொள்ள மாட்டார்கள் எனவும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

2012 பெப்ரவரி 26ஆம் திகதி ஃப்ளோரிடாவில் Trayvon Martin என்ற பெயருடைய 17 வயது ஆபிரிக்க-அமெரிக்க வாலிபனை George Zimmerman எனும் வெள்ளையரான சுற்றுப்புறக் காவற்பணித் தன்னார்வ ஊழியர் ஒருவர் சுட்டுக் கொலை செய்திருந்தார். வழக்கு விசாரணையின் பின்னர், ஜூலை 2013இல் அவர் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டிருந்தார். இந்தச் சம்பவம்தான் ‘கறுப்பு உயிர்களும் உயிர்களே’ எனும் இயக்கம் கருக்கட்டக் காரணமாயிற்று. தொடர்ந்து, 2014இல், Michael Brown, Eric Garner எனும் இரு கறுப்பின இளைஞர்கள் காவல் துறையினரால் கொல்லப்பட்டதனைத் தொடர்ந்தே, இவ்வியக்கம் அமெரிக்காவெங்கும் பரவி, ஒரு தேசிய இயக்கமாக வடிவெடுத்தது. சிறுபான்மையினர் பெருந்தொகையில் சிறைவைக்கப்படுதல், சிறுபான்மையினருக்கு எதிராகக் காவற் துறையினர் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளல், நிறுவன மயப்படுத்தப்பட்ட இனத்துவேஷத்தைக் கடைப்பிடித்தல் போன்ற கெடுபிடிகள் மீளாய்வு செய்யப்பட வேண்டுமென்ற கோரிக்கைகளுடன் இவ்வியக்கம் தோற்றுவிக்கப்பட்டது. காவல் துறையினர் தொடர்ந்து நிகழ்த்தி வரும் துப்பாக்கிச் சூட்டுக் கொலைகளும், அவர்களது கொடூர நடவடிக்கைகளும் அமெரிக்காவில் மட்டுமன்றி, அண்டை நாடான கனடாவிலும் BLM இயக்கத்தின் பரம்பலுக்கு வழிகோலியது. இவ்விரு நாடுகளிலும் சுமார் 30 கிளைகளைக் கொண்ட ஒரு இயக்கமாக BLM வியாபித்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

இவ்வாறாக, BLM தனது வலையமைப்பை விரிவாக்கி, ஆர்ப்பாட்டங்களையும் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தி வருகின்ற அதே சமயம், ஆயுதம் தரிக்காத அப்பாவிக் கறுப்பின மக்களுக்கெதிரான காவற் துறையினரின் அட்டகாசங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன. கடந்த ஜூலை மாதம் டிற்றோயிற் நகரில் BLM இயக்கத்தை விமர்சித்தமைக்காக காவற் துறை அதிகாரி ஒருவர் பதவியிறக்கம் செய்யப்பட்டார். அதேமாதம் ஒஹையோவில் BLM அடையாளச் சின்னத்தைச் சட்டையில் குத்திக்கொண்டு நீதிமன்றம் சென்ற சட்டத்தரணி ஒருவருக்கு, நீதிபதி 5 மணித்தியாலச் சிறைத்தண்டனை வழங்கினார். காவற் துறை அதிகாரிகள் பலர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேலும் பல ஆபிரிக்க-அமெரிக்கர்களைத் துப்பாக்கிக்கு இரையாக்கி உள்ளனர். பதிலாக 6 காவற் துறையினர் டலஸ் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இம்மாதம் சார்லெற் நகரில் Keith Lamon என்பவரும் ருல்ஸாவில் Terence Crutcher என்பவரும் காவற் துறையினரால் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறாக, பழிக்குப் பழி, இரத்தத்திற்கு இரத்தம் என்ற பரமவைரி மனோபாவத்துடனான மல்லுக் கட்டல்களினால் நாடு கொதிநிலை அடைந்துள்ளது!

இவற்றின் பக்க விளவுகளாக, வெள்ளை இனத்தவர் மத்தியில் ‘வெள்ளை உயிர்களும் உயிர்களே’ என்றும், ‘நீல உயிர்களும் உயிர்களே’ என்றும், ‘எல்லா உயிர்களும் உயிர்களே’ என்றும் புதுப்புது இயக்கங்கள் புற்றீசல்கள் போலக் கிளம்பியுள்ளன. இவை அனைத்தும் BLM இயக்கத்திற்கு எதிரான இயக்கங்களாகத் தம்மை இனங்காட்டியுள்ளன. பெருந்தொகையில் வந்து சேரும் மூன்றாமுலக நாட்டுப் புதிய குடிவரவாளர்களையும், இனங்களுக்கிடையிலான பலவந்தமான ஒருங்கிணைப்பையும், 24/7 இனக்கலப்புப் பிரசாரத்தையும் இப்புதிய இயக்கங்கள் மூர்க்கமாக எதிர்க்கின்றன. இன, நிற வேறுபாடுகளைக் கண்ணாற் காணக்கூடாத ‘நிறக்குருடுகளாக’ வாழுமாறு தாம் நிர்ப்பந்திக்கப்படுவதாக வெள்ளை இனத்தவர் இயக்கங்கள் கூறுகின்றன. BLM இயக்கத்திற்கு எதிராகப் போர்க் கொடிகளும் பதாகைகளும் தாங்கியாவறு ஆர்ப்பாட்டம் செய்யவென இவை வீதிகளில் இறங்கியுள்ளன.

இவ்வாறு வெளிக்கிளம்பியுள்ள புதுப்புது இயக்கங்களை மிகுந்த துயரத்தோடும் எமாற்றத்தோடும் BLM இயக்கத்தின் பெரும்பாலானோர் உற்று நோக்குகின்றனர். உண்மையில் இப்புதிய இயக்கங்கள் மேலாண்மைக்கெனப் போராடுவதாகவும், தாம் சமத்துவத்துக்கெனப் போராடுவதாகவும் இவர்கள் கூறுகின்றனர். இதேவேளை, புதிதாக முளைத்த வெள்ளையர் இயக்கத்தினரை ‘போர்வைக்குள் படுத்துறங்கும் பன்றிக் குட்டிகள்’ என்றும், ‘பொரித்த பன்றி இறைச்சித் துண்டுகள்’ என்றும், ‘பன்றி இறைச்சித் துண்டுகளைப் பொரிப்பது போல இவர்களைப் பொரித்துத் தள்ளுங்கள்’ என்றும் BLM இயக்கத்தின் ஒருசில தீவிரப் போக்குடையோர் அவதூறு செய்கின்றனர்.

கனடாவுக்குள் ஏற்கனவே ஆழக் கால் பத்தித்துவிட்ட BLM பிரித்தானியா, ஜேர்மனி, நெதர்லாந்து, தென்னாபிரிக்கா, பலஸ்தீனம், இஸ்ரேல் (எத்தியோப்பிய இஸ்ரேலியர்கள்) போன்ற நாடுகளுக்குள்ளும் மெல்ல, மெல்ல ஊடுருவி வருகின்றது. தீண்டாமைக் கொடுமைகளுக்குப் பன்னெடுங்காலமாக இரையாகிவரும் இந்திய தலித்துக்களின் அனுதாபத்தையும் பெற்றுவருகின்றது. எங்கெல்லாம் கறுப்பு இனத்தவர்மீதும், ஒடுக்கப்பட்டவர்கள் மீதும் காவற்துறை தனது கைப்பிடியை நெரித்துப்பிடித்து நிஷ்டூரம் செய்துவருகின்றதோ, அங்கெல்லாம் BLM காட்டுத் தீயாகப் பரவி வருகின்றது. இனவெறுப்பை மறுதலிக்கும் மக்கள் – குறிப்பாகக் கறுப்பின மக்கள் - வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். ஆபிரிக்க-அமெரிக்கக் கறுப்பின மக்களுக்கு ஆதரவாக பிரித்தானியர்கள் “I do this for My Brother” என்றும், “No Racist Police” என்றும் சுலோகங்களைச் சுமந்தபடி தெருவிலிறங்கி ஊர்வலம் செல்கின்றனர். அமெரிக்காவில் சூல்கொண்ட BLM இயக்கம், இப்போது கடல் கடந்து, கண்டம் கடந்து உலகின் பலதிக்கும் பல்கிப்பெருகி வருகின்றது. இக்கொந்தளிப்பின் விளைவாக, ஆபிரிக்க வம்சாவழியினர் பற்றிய தமது ஆய்வினை ஐ.நா. நிபுணர்குழு ஒன்று துரிதப்படுத்திக்கொண்டது. ஆபிரிக்க வம்சாவழியினர்க்கு அமெரிக்கா இழப்புத் தொகை வழங்க வேண்டும் என்றும், அதற்கான ஆதரங்களை அடிமை வரலாறு கோடிட்டுக் காட்டுகின்றது என்றும், அமெரிக்க வரலாற்றின் இருளடைந்த அத்தியாயங்களுக்கும், இன்று அங்கு நிலவிவரும் இனத்துவ அநீதிகளுக்கும் தொடர்புண்டு என்றும் அந்த நிபுணர் குழு அண்மையில் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நிலமை கட்டுக்கடங்க வேண்டுமாயின், அமெரிக்காவிலும் ஏனைய பல நாடுகளிலும் இனத்துவேஷம் பல சமயங்களில் புலப்படா வகையிலும், சில சமயங்களில் பூதாகாரமாகவும் உயிர் வாழ்ந்து வருவதை வெள்ளையினத்தவர் ஒப்புக்கொள்ள வேண்டும். கறுப்பினதவர்களுடன் கூடிவாழ்ந்து, அவர்களது குறைகளை நேரில் கண்டறிய முன்வர வேண்டும். கறுப்பினதவர்களிடத்து காட்டப்பட்டு வரும் பாரபட்சத்திற்கு எதிராக ஒவ்வொருவரும் மனமறிய உழைக்க முன்வர வேண்டும். அமைப்பு முறையிலான நிறவாதத்தை – நிறுவனமயப்படுத்தப்பட்ட நிறவாதத்தை -முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். ஒருவரது இனம் அல்லது மதம் போன்ற அடையாளங்களை, அவர் குற்றம் செய்தார் எனச் சந்தேகிப்பதற்கான ஆதாரங்களாகக் கொள்ளும் Racial Profiling எனும் சமூகக் கொடுமையை நிறுத்திக் கொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, கறுப்பு இனத்தவர்கள் மீது கண்மூடித்தனமாகக் கட்டவிழ்த்து விடப்பட்டுவரும் காவற் துறையினரின் வன்மம் கைவிடப்பட வேண்டும்.

அமெரிக்காவில் காவற்துறையினரால் வெள்ளையர்கள் கொல்லப்படுவதைவிட, 2.5 மடங்கு அதிகமான கறுப்பினத்தவர்கள் கொல்லப்படுகின்றனர் எனக் கணக்கெடுப்பு ஒன்று கூறுகின்றது. சுமார் ஒரு வருடத்துக்கு மேலாகச் சூடு பிடித்துள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் ஆரவாரங்களை, BLM இயக்கத்தின் ஆர்ப்பாட்டங்கள் ஓரங்கட்டிவிட்டதாகச் செய்தி ஒன்று கூறுகின்றது. 1989ஆம் ஆண்டு சீனத் தலைநகரான ப்பீஜிங்கில் உள்ள ரியனன்மென் சதுக்கத்தில், பீரங்கித் தாங்கி முன்னால் தனித்து நெஞ்சு நிமிர்த்தி நின்ற போராளி ஒருவனின் வீரியத்துடன் BLM இயக்கத்தினரது தீரத்தை ஒப்பிட்டு இன்னொரு தகவற் தளம் தலையங்கம் தீட்டியிருக்கின்றது. ‘BLM is a Cry for Help’ என்பதுதான் உண்மையே தவிர, வெறுப்பை விதைக்கும் ஒரு வன்முறை இயக்கமல்ல என்று சமூக ஊடகங்கள் வழியாக BLM மீண்டும் மீண்டும் வலியுவருகின்றது.

மனித உரிமை இயக்கத்தின் தந்தையான மார்ட்ட்டின் லூதர் கிங் ஜூனியர் மறைந்து 40 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அவர் உயிரோடிருந்து சமவுரிமைப் போராட்டத்தை முன்னெடுத்தபோது பெரும்பான்மையான வெள்ளை இனத்தவர்கள் அவரை வெறுத்தனர். அவரது போராட்டத்தை எதிர்த்தனர். அவர் மறைந்த பின்னர், வரலாற்றின் சரியான பக்கத்தில் நிற்கத் தவறிவிட்டோம் என அதே வெள்ளை இனத்தவர்கள் வெட்கித் தலை குனிந்தனர். ஆனால் இன்றோ அவரைப் போற்றிப் புகழ்கின்றனர். இந்நிலையில், மார்ட்டின் லூதர் கிங் அன்று முன்னெடுத்த மனித உரிமைகள் இயக்கத்தின் இன்னொரு வடிவமான ‘கறுப்பு உயிர்களும் உயிர்களே’ இயக்கத்தை ஏற்க மறுத்து, அதே வரலாற்றுத் தவறினை மீண்டும் செய்யத்தான் வேண்டுமா? என்பதை ஒவ்வொரு வெள்ளை இனத்தவரும் சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய காலம் வீணே கரைந்துகொண்டிருக்கின்றது!

சான்றாதாரங்கள்:
Derek Hawkins, The Washington Post, ‘This is what happens when a Black Lives  …’  - Sept 26, 2016 
Katie Mettler, The Washington Post, ‘Why SPLC says White Lives Matter is… ‘  - Aug. 31, 2016
John Halstead, The Huffington Post, ‘The Real Reason White People Say … ‘  - Jul 28, 2016

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R