முன்னுரை:
தமிழ்க்கவிதை வரலாற்றில் சங்கக் கவிதைகளுக்குப் பிறகு புதுக் கவிதைகளில்தான் உணர்வுகளை முன்னிறுத்தி சமூகத்தை வெளிக்காட்டும் முயற்சி அழுத்தமாக இடம்பெறுகிறது எனலாம். புதுக்கவிதைகள் இன்றைய மனித மனத்தைப் படம் பிடித்துக் காட்டும் கண்ணாடி. மீராவின் “ஊசிகள்” கவிதை தொகுப்பில் இடம் பெற்றுள்ள அங்கதம் குறித்து ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
புதுக்கவிதையில் அங்கதம்:
அங்கதம்
தொல்காப்பியத்தில் அங்கதம்
அங்கதத்தின் தன்மை
அரசியல் அங்கதம்
சமுதாய அங்கதம்
தனி மனித அங்கதம்
என்ற பகுப்புகளின் கீழ் இக்கட்டுரையில் அங்கதம் குறித்த கருத்துக்களைக் காண்போம்.
அங்கதம் (Satire))
அங்கதம் என்பது ஒருவகை கேலியாகும். இது தீங்கையும், அறிவின்மையையும் கண்டணம் செய்வதாக அமையும். சமகால நடப்பில், நிகழ்வுகளில் எதிரிடைப் பதிவுகளாக இருக்கக் கூடியதாகும். குற்றங்களைக் கடிந்துரைக்காமல் நகைச்சுவையுடன் சுட்டித் திருத்தவல்ல திறனுடையது. தமிழ்ப்புதுக்கவிதை தனியொரு இலக்கிய வகையாக நிலைபெற்றமைக்குப் படிமம், குறியீடு, அங்கதம் போன்ற இலக்கிய உத்திகளைப் பயன்படுத்தி கருத்துச் செறிவும், கற்பனைச் செழுமையும் கூட்டிய கவிஞர்களின் முயற்சிகளே காரணமாகும். அங்கதம் சமுதாய உணர்வுடை கவிஞர்களால் பயன்படுத்தப்பட்டு புதுக்கவிதையைப் பொருட் சிறப்புடைய தாக்கியது என்பார் டாக்டர் சி.இ.மறைமலை.
தொல்காப்பியத்தில் அங்கதம்
அங்கதம் என்பது எண்வகை மெய்ப்பாடுகளில் ஒன்றாகிய “நகை” என்ற சுவையைக் குறிக்கும் நகை குறித்து தொல்பாப்பியர்,
“எள்ளல் இளமை பேதமை மடன்
என்று உள்ளப்பட்ட நகை நான்கென்ப” என்று கூறுகிறார்.
நகை என்றால் சிரிப்பு என்றும் பொருள்படும் அளவாகச் சிரித்தல், முறுவலித்தல், பெருக சிரித்தல் என்று சிரிப்பு மூவகைப்படும்.
அங்கதத்தின் தன்மை
கூர்மையாகக் குத்திக்காட்டிப் பேசுவது, அதேவேளை நகைச்சுவை மயமாக அமைவது கேலித் தன்மையைப் பூடகமாக, குறிப்பாக, உள்ளடக்கிச் சொல்வது, கேட்போரிடையே சிரிப்பையும், சிந்தனையையும் ஒருசேர உருவாக்குவது என்பது அங்கதத்தின் தன்மை.
ஊசிகள் என்னும் கவிதைத் தொகுதி வாயிலாக கவிஞர் மீரா வெளிப் படுத்தியுள்ள அங்கதம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
அரசியல் அங்கதம்
அரசியலைப் பற்றியே மிக அதிகமாக எள்ளி நகையாடுகிறார் மீரா. 11 கவிதைகளில் இன்றைய அரசியல் பற்றிக் கூறியுள்ளார். வேகம், வறுமையே வெளியேறு, மேயர் மகன் தோட்டி மகனுக்கு கூறியது, பழக்கம் பொல்லாததது, ஆனைமாதிரி, அடியேன் பறைவது, ஜனநாயக சோஷலிஸம், எதிரொலி, துண்டு விழுந்தது, கொடுத்து வைத்தவர், ஒன்றே செய்க- என்ற கவிதைகளில் அரசியல் பற்றிய எள்ளலைக் காண்கிறோம். இவற்றில் ஏழு கவிதைகளில் அரசியல்வாதிகளுக்கே ஊசி குத்துகிறார்.
அரசியல் வாதிகளின் வேகம் நாட்டை முன்னேற்றுவதில் இல்லை. வாழ்க்கை தரத்தை உயர்த்துவதில் இல்லை, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கோடு கட்சி மாறுகிறார்கள். வேகமாக கட்சி மாறுவதற்கு வசதியாக நாட்டில் இன்னும் அதிகமாக கட்சிகள் இல்லையே என்று கவலைப்படும் அரசியல் வாதிகளின் போக்கை கவிஞர் மீரா,
“எங்கள் ஊர் எம்.எல்.ஏ
ஏழு மாதத்தில்
எட்டுத்தடவை
கட்சி மாறினார்
மின்னல் வேகம்?
இன்னும் எழுபது
கட்சி இருந்தால்
இன்னும் வேகம்
காட்டி இருப்பார் ...
என்ன தேசம்
இந்தத் தேசம்!
மின்னல் வேகத்தில் ஏழு மாதத்தில் எட்டுத்தடவை கட்சிமாறும் அரசியல் வாதிகளைக் கொண்ட இந்த தேசம் என்ன தேசம் என்று அரசியல் வாதிகளைச் சாடுகிறார்.
வறுமையை வெளியேற்றுவோம் என முழங்கும் தலைவர்கள்,
“திருமணப் பந்தியில்
எதுவும் பேசாது
எங்கள் தலைவர்
எட்டி உதைத்தார் ...
வறுமை
மிகவேகமாய்
வெளியேறிற்று
பரட்டைத் தலையும்
எலும்பும் தோலும்
கிழிந்த கந்தையுமாக ...
என்கிறார். வறுமையை வெளியேற்றப் பேசுபவர், வறியவர்களை எட்டி உதைப்பதைப் பூடகமாக இறுதியில் வறிய தோற்றங்களை மட்டும் காட்டி ஓர் உணர்வுப் பூர்வமானகாட்சியாக நம்மனக்கண் முன் படைத்துக் காட்டுகிறார். நிர்வாகத் தன்மையையும் எள்ளி நகையாடுகிறார். ஒரு சான்று
“மூன்று வருடம் முன்னால் ...
அருப்புக்கோட்டை
அழகர்சாமி
காசநோயின்
காரணமாக
இருமி இருமி
எலும்பாய் மாறி
ஆஸ்டின்பட்டி
அரசினர்
மருத்துவமனைக்கு
மனுப்போட்டானாம்
வந்து தங்கி
வைத்தியம் பார்க்க
போன செவ்வாயோ
புதனோ
அவனுக்கு
அனுமதி வழங்கி
அஞ்சல் போனதாம்”
மூன்று வருடங்கழித்து போன அனுமதி அஞ்சலை வாங்க அழகர்சாமி உயிரோடு இருப்பானா?
நிர்வாகத்தில் கவனமின்மையும், கடமையுணர்ச்சியின்மையும் மட்டுமின்றி, ஊழலும் இலஞ்சமும் இணைந்தே செயல்படுகின்றன. இந்த இயல்பான தன்மையைத்தான் ஊழல் நிர்வாகம் பற்றிய பல கவிதைகளில் எள்ளி நகையாடுகிறார். சிவப்பு நாடா, கல்வி சிறந்த தமிழ்நாடு, கடமையைச் செய் போன்ற கவிதைகளில் இத்தன்மையை நன்கு காணலாம்.
சமுதாய அங்கதம்
மக்களிடம் பொதுவாகக் காணப்படும் மனநிலைகளையும் மீரா மிக நெருங்கிக் காட்டுகிறார். பெருங்காயம் என்ற கவிதையில் மக்களின் போக்கு எவ்வாறு உள்ளீடற்று வெறும் சினிமா மோகத்தில் உள்ளது என்பதை நையாண்டி செய்கிறார். மேக மலை விமான விபத்தில் மூன்று பேர்க்கு காயம், ஜெஸ்ஸ_ர் சண்டையிலோ முப்பது பேர்க்குத்தான் காயம் ஆனால்,
“சித்திர வீதியில்
சினிமா நடிகை
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீயை
திக்கு முக்காடச்
செய்த கும்பலில்
சிக்கிய அறுபது பேர்க்கு
முதுகில் முகத்தில்
நெஞ்சில் காயம்”
ஜெஸ்ஸ_ர் சண்டையில் காயம் பட்டவர்களைவிட சினிமா நடிகையைப் பார்த்த கூட்டத்தில் இருமடங்கு வீரர்கள்! மற்றும் முடிவெட்டுவோர் முணுமுணுப்பு, கடனைத்தேடி, சிவப்பு விளக்கு எரிகிறது பழம் நீ அப்பா, இளந்தமிழன் கண்டுபிடிப்பு போன்ற கவிதைகளின் பல்வேறுபட்ட பண்புகளை எள்ளி நகைக்கின்றனர். “கடவுளைத் தேடி” என்ற கவிதையைக் காணலாம்.
“இருக்கிறார் கடவுள்
இல்லை கடவுள்
வாதம் பிறந்ததது
மோதல் வளர்ந்ததது
இப்போது
இல்லை ஒருவர் இங்கே
இருக்கிறார் ஒருவர் தலைவறைவாக
போத்தனூhக் காவலர்
புலனாய்கின்றார்.
இப்பாடலில் நகைச்சுவை, எள்ளல் ஆகியன பேசிச்செல்லும் பாணியில் குறிப்பாக ஆனால் மிக ஆழமாகவும், கூர்மையாகவும் வெளிப்படுகின்றன. பிற கவிதைகளிலும் இதுபோலக் காணலாம், பொதுப்பட இவ்வாறு கூறும் மீரா, சில தனிவகை மனிதர்களையும் சாடுகிறார்.
தனிமனித அங்கதம்
முதலுக்கே “மோசம்” என்ற பாடலில் யோகியரைப்பற்றிக் கூறுகின்றார். தண்ணீரில் நடக்கப் போவதாக விளம்பரம் செய்தார், ஒரு யோகியார்,
“பிறகு
குறித்த நாளில்
குறித்த நேரத்தல்
நீரில் யோகியார் நிசமாய் விழுந்தார்
விழுந்தெழுந்து
எழுந்து விழுந்து
பிறகு
தலையில் நடக்கவும்
முடியாது போனார்”
போலியோகிகள,; ஏமாற்றுக்காரர்கள் என்றெல்லாம் நேரடியாக வசைபடும் மனத்தை உருவாக்காமல், படித்து முடித்தும் சிரித்துக் கேலி செய்யும் மனத்தை ஏற்படுத்தி விடுகிறார். இது போலவே “நாங்கள் நினைத்தால் என்ற கவிதையில் மாணவர்களைப் பற்றிக் கூறுகின்றார்.
“பஞ்சப்படி என்ற கவிதையில் பணியாளரின் வறுமையை நகைச்சுவைபடக் கூறுகின்றார். இக்கவிதையில்
“ஓ ...
பாலைவனத்தில்
பயணம் போகும்
ஒட்டகமே!”
என்று முடிக்கும் போது, துன்பத்தினை நகைச்சுவையாகக் காட்டுவதைக் காண்கிறோம்.
“ஒரே ஒரு துரும்பை
எடுத்துப்போட்டதும்”
என்ற வரிகள் மூலம் பணியாளர்க்கு அளிக்கப்படும் சிறுபஞ்சப்படியை எள்ளி நகையாடுகிறார் எனலாம்.பொறாமை என்ற கவிதையில்
“ஓ!ஓ! செல்வம்
உடைய பெரியீர்
உங்களால் தாம்
பாரி ஆக
முடிய வில்லையே
அதுகளேனும்
நக்ஸல்
பாரி ஆகிப்
போனால் என்ன?
புழுங்கி ஏன் நீர்
பொறமைப் படுகிறீர்”
என்று கூறும் பொழுது செல்வந்தர்களைக் கிண்டலாகவும், விமர்சிக்கும் தன்மையைக் காண்கிறோம்.
தொகுப்புரை:
இவையாவும் ஊசிகள் தொகுதியில் காணப்படும் அங்கதக் குறிப்புகளின் முழுமையை வெளிப்;படுத்துவன. இவற்றுடன், இக்க்விதைகளின் தலைப்பையும், இணைத்துப் பொருளைப் புரிந்து கொள்ள வேண்டும். நூல் முழுவதும், நகைச் சுவையும், கேலியும் கூறுகின்ற முறையில் அமைந்து கிடப்பதைக் காணலாம். ஆனால் கவிதைகளின் அகப்பரப்பில் நியாயத்துக்கு மாறான இயற்கைக்கு மாறான நிலைகளைக் குத்திக்காட்டிச் சுட்டிக்காட்டும் அங்கதப்பண்பு இழையோடுவதையும் காணலாம்.இங்ஙனம் சமுதாய, அரசியல,; தனி மனித, அங்கதங்களை மீராவின் ஊசிகள் கவிதை தொகுப்பின் வழி அறிய முடிகிறது.
உசாத்துணை நூல்கள்
1. தொல்காப்பியம்
2. ஊசிகள் - மீரா
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.