ஈழத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பெரும்புலவரான சிவசம்புப் புலவர் காலம் தொடர்பாக ஆராய்ச்சியாளர்களிடையே மாறுபாடான கருத்துகள் நிலவுகின்றன. புலவரது நூல்கள் அச்சாகி வெளிவரத் தொடங்கிய காலத்திலிருந்து, அச்சாகி வெளிவந்த நூல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதிய எழுத்துக்களில் புலவரது காலம் பற்றிய பல்வேறுபட்ட கணிப்புக்களை அவதானிக்க முடிகின்றது. புலவரின் செய்யுட்களை அவர் வாழ்ந்த காலப்பின்புலத்தில் வைத்து ஆராய்வதற்கு அவரது காலம் பற்றிய சரியான கணிப்பு அவசியமாகும். இத்தேவை கருதியே புலவரின் காலம் தொடர்பாக இச்சிறுகட்டுரை ஆராய முனைகிறது.

சிவசம்புப் புலவரின் காலம்பற்றிய சிக்கல் தொடர்பாக 1981 ஆம் ஆண்டு, பேராதனைப் பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கத்தால் வெளியிடப்பட்ட இளங்கதிரில், வெளியாகிய பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை அவர்களின் “உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர்” என்னும் கட்டுரையில் வரும் பின்வரும் பகுதி இங்கு நோக்கத்தக்கது.

“உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவரின் தமிழ்ப் பணியை மதிப்பிட முன்பு அவர் வாழ்ந்த காலத்தை வரையறுத்துக்கொள்ள வேண்டும். இருபதாம் நூற்றாண்டுத் தொடக்ககாலம் வரையில் வாழ்ந்த சிவசம்புப் புலவரின் காலமும் சுலபமாக அறிந்து கொள்ளமுடியாமல், வரையறுத்து அறியவேண்டிய சிக்கலை உடையதா எனச் சிலர் கேட்கலாம். ஆங்காங்கு காணப்படும் வெகுசில மைல்கற்கள்தவிர கால ஆராய்ச்சி பிரச்சனைக்குரியதாகவே காணப்படுகின்றது. சிவசம்புப் புலவர் காலம் பற்றி இத்தகைய பிரச்சினை தோன்றுகிறது." 1 எனவே, இச்சிக்கலைத் தீர்த்துவைப்பது ஆய்வுலகுக்குப் பயனளிக்கும்.

சிவசம்புப் புலவரின் காலம் தொடர்பாக ஆய்வாளர் பலர் குறிப்பிடும் பல்வேறுபட்ட காலவரையறைகளை அட்டவணையில் பின்வருமாறு நிரற்படுத்தலாம்.




மேற்படி அட்டவணையிலிருந்து சிவசம்புப் புலவர்  பிறந்த வருடத்தை 1829, 1830, 1852, 1853 என நான்கு விதமாகவும் மறைந்த வருடத்தை 1908, 1909, 1910 என மூன்று விதமாகவும் ஆய்வாளர் குறித்துள்ளதை அறியமுடிகிறது.

பிறந்த வருடத்தை இருவரும் மறைந்த வருடத்தை ஒருவரும் குறிக்காதுவிடுவதையும் காணமுடிகிறது. புலவரின் காலக்கணிப்புப் பற்றிய குழப்பமும் அதைத் தீர்ப்பதற்கான சான்றுகளைப் பெறுவதில் உள்ள சிரமமுமே இதற்கான காரணங்கள்.

ஆரிய திராவிட பண்டிதர் செவ்வந்திநாத தேசிகர் அவர்களால் திரட்டப்பெற்று ஈழகேசரி அதிபர் நா.பொன்னையா அவர்களால் 1939ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட, புரவலர் மற்றும் புலவர் சிலர்மீது சிவசம்புப் புலவர் பாடிய பிரபந்தங்கள் சிலவற்றின் தொகுதியான  “சிவசம்புப் புலவர் பிரபந்தத் திரட்டு – முதற்பாகம்” என்ற நூலில் வரும் “நூலாசிரியர் வரலாறு” என்னும் பகுதியில் புலவரது காலம் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


“இவர் சாலிவாகன சகாப்தம் கஎருஉ-ல் யாழ்ப்பாணத்துப் பருத்தித்துறையைச் சார்ந்த உடுப்பிட்டியிலே பெரும் பிரபுவாயிருந்த அருளம்பல முதலியாருக்குப் புதல்வராய் அவதரித்தார்.”2

“இப்புலவர் பெருந்தகை சாலிவாகன சகாப்தம் கஅஙக-க்குச் சமமான சாதாரண வரு~ம் புரட்டாதி மாதம் கங-ம் திகதி இவ்வுலக வாழ்வைத் துறந்தார்.”3

இக் கூற்றுக்களில் சிவசம்புப்புலவரின்  காலகட்டமாக சகாப்தம் 1752 – 1831 எனப் பதிவுபெற்றுள்ளது. சகாப்த வருடத்தோடு 78 அல்லது 79ஐக் கூட்டினால் கிறிஸ்தவ வருடம் வரும். ஆயினும் இங்கும் தவறு ஏற்படுகிறது.

“சிவசம்புப் புலவர்  பிறந்த ஆண்டு சகாப்தம் 1752 என்பது என்று கண்டால் அது கி.பி 1830 என்பது சரியாகும். சகாப்தம் 1752 என்பது கிறிஸ்தவ ஆண்டாக மாற்றப்பெறாத நிலையிலேயே, நூல் அச்சுக்குப் போயிருக்கக்கூடும். அச்சுப்பிழை திருத்தியவர், புலவர் 158 ஆண்டுகள் வாழ்ந்திருக்கமாட்டார் என்பதை உணர்ந்;ததால், திருத்தம் செய்திருக்கிறார். பிழைதிருத்தம் பற்றி நுணுகி நோக்காது, அவசரத்திலே 1752 என்பதை 1852 என்று ஏழை எட்டாக மாற்றிவிட்டார். சிவசம்புப்புலவர் காலம் 1852 ஆம் ஆண்டுக்கு முன்பே தோன்றிவிட்டது என்பது இன்னொரு சான்றாலும் உறுதிப்படுகிறது. சிவசம்புப்புலவரின்  ஆசிரியரி நல்;;லூர்ச் சரவணமுத்துப் புலவரெனப் பேராசிரியர் சதாசிவம் குறிப்பிட்டுள்ளார்.”4

புலவரின் ஆசிரியர் சரவணமுத்துப்புலவர் 1845ல் தேகவியோகம் அடைந்தார்.5 எனவே 1852ஆம் ஆண்டு சிவசம்புப் புலவர் பிறந்திருந்தால் எவ்வாறு 1845ல் இறந்த தனது ஆசிரியர் சரவணமுத்துப் புலவரிடம் பாடம் கேட்டிருப்பார் என்ற வினாவும் எழும். தேசிகரது திரட்டுக் கூறும் தவறான காலத்தையே பலரும் பயன்படுத்தும்போக்கு உருவாகிவிட்டது.

சிவசம்புப் புலவர் காலம் தொடர்பான கணிப்பில் அவரது வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ஆராய்வது பயனளிக்கும்.

நாவலரும் சிவசம்புப் புலவரும் நல்லூர்ச் சரவணமுத்துப் புலவரிடம் ஒன்றாகக் கல்விகற்றவர்கள் என்ற செய்தியும் நாவலர் புலவரிலும் ஏழுவயது மூத்தவர் என்ற செய்தியும் பல இடங்களில் பதிவாகியுள்ளன. அவற்றுள் தேவைகருதி இங்கு இரு பதிவுகளை எடுத்துக்காட்டலாம்.

“ஆரம்பக் கல்வி நிறைவேறியதும் சிவசம்பு நல்லூர்ச் சரவணமுத்துப் புலவரிடம் ஒப்படைக்கப் பெற்றார். இவரிடம் கற்கப்போன காலத்தில் நாவலரும் அங்கே கற்றுக்கொன்டிருந்தார். நாவலர் சிவசம்புவிலும் பார்க்க ஏழு வயது மூத்தவர். நாவலர் பிறந்த ஆண்டு 1822. சிவசம்புப் புலவர் பிறந்த ஆண்டு 1829. இக்காலத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் அளந்து எடைபோட்டுக் கொண்டனர்.” 6

“நாவலர், புலவர் இருவரும் ஒரே காலத்தவர்கள். சகபாடிகள். நாவலரவர்கள் புலவரிலும் பார்க்க ஏழாண்டுகள் மூத்தவர். அவர்கள் பிறந்த ஆண்டு 1822. புலவர் பிறந்த ஆண்டு 1829. நாவலரவர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கே உரியவர்கள். அவர்கள் மறைந்த ஆண்டு 1879. புலவர் இருபதாம் நூற்றாண்டிலும் பத்து வருடங்கள் வாழ்ந்தவர்.”7

நாவலர் பிறந்த வருடத்தையும் அவர் புலவரிலும் ஏழுவயது மூத்தவர் என்பதையும் அடிப்படையாகக் கொண்டு புலவர் பிறந்த வருடத்தை 1829 எனக் கணிப்பதே சரியானது.

புலவரின் இறப்பு வருடம் தொடர்பாகப் புலவரின் மாணவரும் கரணவாய் தெற்கு வேதாரணியக் குருக்கள் பகுதியைச் சேர்ந்தவருமான பண்டிதர் கை.திருஞானசம்பந்த தேசிகர் பாடிய “திதிநிர்ணயவெண்பா” புலவர் பற்றிய சரமகவி நூல் (கல்வெட்டு) மூலமும் மகாவித்துவான் சி.கணேசையர் அவர்களின் “ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம்”; எனும் நூல் மூலமும் கிடைத்துள்ளது. அவ் வெண்பா வருமாறு.

“சாதா ரணவனிதை சாந்தன்றேய் பிற்பக்க
மீதாரும் பன்மூன்றின் மேதினிவிட் - டாதார
மன்னு சிவசம்பு மாபுலவன் சங்கரனார்
துன்னுலகுற் றுற்றான் சுகம்”8




இவ் அட்டவணை கூறும் குறிப்புகளின் அடிப்படையில் 1910 (29.09.1910 நண்பகல்) என்பதே புலவரின் இறப்பு வருடமாகும். புலவர் இருபதாம் நூற்றாண்டின் முதல்பத்து ஆண்டுகள்வரை வாழ்ந்தவர் என்ற முற்குறிப்பிட்ட செய்தியும் இவ்வெண்பாவால் மேலும் உறுதிப்படுகிறது. இதன்படி

“பாரளையு மிசையருளம் பலமுதலியொடுநிறைசூற்
காரளையு மலர்க்கூந்தற் கதிராசிப் பிள்ளைசெய்த
சீரளையும் தவவடிவாஞ் சிவசம்புப்புலவர்”9

காலம் கி.பி. 1829 - 1910 என்று உறுதியாக முடிவு செய்யப்படுகிறது.10 புலவர் 81 வருடங்கள் உலகில் வாழ்ந்துள்ளார் என்பதையும் பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் அவர் வாழ்ந்துள்ளார் என்பதையும் தெளிவாக அறியமுடிகிறது.

அடிக்குறிப்புகள்
1.வேலுப்பிள்ளை,ஆ.(1981) இளங்கதிர்,  ‘உடுப்பிட்டிச் சிவசம்புப்புலவர்’, பேராதனைப் பல்கலைக் கழகம்: தமிழ்ச் சங்கம். ப.27.
2.செவ்வந்திநாத தேசிகர் (ப.ஆ).,(1939) சிவசம்புப்புலவர் பிரபந்தத் திரட்டு - முதற்பாகம், சுன்னாகம்: திருமகள் அழுத்தகம். ப.எii.
3.மேலது. ப.எiii.
4.வேலுப்பிள்ளை,ஆ. மு.கு.க. ப.28
5.சதாசிவம்,ஆ. (தொ.ஆ), (1966) ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம், கொழும்பு: சாகித்திய மண்டலம். ப.552
6.நீலகண்டன், புலவர்மணி., (2004) தேவகீயம் - பண்டிதை தேவகி நினைவு மலர், ‘சிவசம்புப் புலவர்’, உடுப்பிட்டி: புலவரில்லம்.ப.45.
7.வேந்தன், வேல்., (1976) செவ்வந்தி, ‘கம்பனுக்குப் பின்பொரு சம்பனல்லோ’, யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம். ப.12.
8.(01)திருஞானசம்பந்த தேசிகர்,கை. (1910) யாழ்ப்பாணத்து உடுப்பிட்டி வாசரும் சுப்பிரமணியசுவாமி தொண்டருமாகிய ஸ்ரீமத் அ.சிவசம்புப் புலவர் அவர்களின் தேகவியோகத்தைக் குறித்துச் சொல்லிய சரமகவிகள். ப.2          
(02)கணேசையர்,சி. (2006) ஈழ நாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம், கொழும்பு: இந்துசமய கலாசார  அலுவல்கள் திணைக்களம். ப.85
9.திருஞானசம்பந்த தேசிகர்,கை. (1930) மு.கு நூ. ப.3.
…இக் காலக்கணிப்பை மேற்குறிப்பிட்ட சான்றுகள் மட்டுமின்றிப் புலவரது மாணாக்கரும் மருகருமான (புலவரின் சகோதரியின் மகன் - புலவரின் மகளை மணம்முடித்தவர்) ஆறுமுக உபாத்தியார் உறுதிப்படுத்தியதாக அவரின் மாணவரும் புலவரின் பூட்டருமாகிய புலவர்மணி கா.நீலகண்டன் அவர்கள் ஆய்வாளருக்குக் கூறினார்.(5-5-2013).

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R