ஆய்வுக்கட்டுரை!

மனிதனின் பரிணாம வளர்ச்சியில் ஒன்றிணைந்திருந்த மொழி சமுதாய வளர்ச்சிக்கு அடிப்படை அமைக்கிறது. மொழியே கருத்துப்  பரிமாற்றக் கருவி. மொழியானது சமுதாய வளர்ச்சிக்கு உதவும் அதே நிலையில் மற்றொரு பணியையும் செய்கிறது. அதாவது சமுதாயத்தின் பண்பாட்டுக் கட்டுமானத்தைத் தக்கவைப்பது எவ்வாறெனில் மொழியின் வழியாகவே வணங்கும் பண்பு வெளிப்படுகிறது. அதே நிலையில் எதிராளியை ஏவுதலும் நிகழ்ந்தேறுகிறது. மொழியே அதிகாரப் படிநிலைகளை அதாவது, அரசன், குடிமகன், அதிகாரி, அலுவலர், ஆண், பெண் என்பனவற்றை நிறுவும் ஊடகமுமாகிறது.

ஔவையாரின் அகநானூற்றுப் பாடல்கள் பெண்ணின் மொழியாக வெளிப்படுத்தியிருக்கும் பெண்ணின் நிலைப்பாட்டையும் பெண்மொழியாகப் பெண்ணின் குரலில் முன்வைத்திருக்கும் உணர்வு நிலைகளையும் ஆய்வுக்குட்படுத்தும் வகையில் இக்கட்டுரை அமைகின்றது. எனவே மொழிகுறித்த சிந்தனையுடனேயே கட்டுரையைத் தொடங்க வேண்டியிருக்கிறது.

மொழி

மனிதர்களை இயக்கும் மொழியானது வளமான சமுதாயக்கருவியாக மாறுவது என்பது திடீரென நிகழ்ந்துவிடவில்லை. காலங்காலமான சமுதாயமாற்றங்களினூடாக அது நிகழ்ந்திருக்கிறது. சமூக மாற்றங்களை எதிர்கொண்ட மொழி மனித சமுதாயத்தையும் வளர்த்தெடுத்திருக்கிறது.

‘மொழியே மனிதவியல் பிரபஞ்சத்தை உருவாக்கியுள்ளது’ என்கிறார் ஜமாலன்1. ஸ்டாலின் என்பவர் மொழியானது சமூகம் முழுவதினாலும் எல்லா வர்க்கங்களாலும் பல நூற்றுக்கணக்கான தலைமுறைகளின் உழைப்பாலும் உருவாக்கப்பட்டது என்கிறார்2. மொழியின் செயல்பாட்டைப்பற்றி யு.அ.காரின், “உணர்வு நிலையின் சமுதாயப்பண்பு என்பது மொழியோடு கூடிய அதன் ஒருங்கிணைவில்தானிருக்கிறது. உணர்வுநிலையை நடைமுறைப்படுத்த உதவுகின்ற மொழி மனிதச்சிந்தனையின் பொருள்சார்ந்த வெளிப்பாடாக இருக்கின்றது” என்ற கருத்தை முன்வைக்கிறார்3.

எனவே மொழி என்பது சமுதாயத்தின் ஒட்டுமொத்தச்சிந்தனையின் வெளிப்பாடு என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. மேலும் மொழியானது பயன்பாட்டளவில் அதிகாரமைப்பைப் பிரதிபலிக்கிறது என்பது எல்.இராமமூர்த்தியின் கருத்து4. எனவே மொழி ஒரு அதிகார அமைப்பு என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது. இந்நிலையில் சமுதாயத்தில் பெண்ணுக்கான மொழி எவ்வாறிருந்தது என்பதையும் உள்வாங்க வேண்டியிருக்கிறது.

பெண் மொழி – அறிஞர்களின் கருத்துக்கள்

மனிதர்களிடையே கருத்துப்பரிமாற்ற கருவியாகப் பயன்படும் ‘மொழி’ என்பது பண்பாட்டை வலியுறுத்துவதில் பெரும்பங்குவகிக்கிறது என்பது நாம் அறிந்ததே. மொழி ஒர் அதிகாரம்மிக்க கருவியும்கூட. உடன் உரையாற்றுபவரின் நிலையை மொழி தீர்மானிக்கிறது. மொழியில் ஆண்மொழியென்றும் பெண்மொழியென்றும் உண்டா என்ற வினா எழுவது இயல்பே. பெண் தன்னுடைய நிலைப்பாட்டை, உணர்வை, உடல்சார்ந்தும் மனம் சார்ந்தும் எவ்விதக் கட்டுப்பாடுகளற்றும் இயல்பாக வெளிப்படுத்துவதைப் பெண்மொழி எனலாம்.

பெண் எழுத்து குறித்துப் பிரேமா அவர்கள், “பெண் தன்னைப் பெண்ணாக அறிந்துகொள்வதும் தன்னைச் சுற்றியுள்ள பெண்களை அறிந்துகொள்வதும் அவர்களின் பிரச்சினைகளைத் தன் பிரச்சினைகளாக அறிந்து எழுதும் எழுத்து”57 என்று கூறுகிறார். பெண் எழுத்து அல்லது மொழிபற்றிய பல இன்றியமையாத கருத்துக்களைக் கூறிய ஹெலன்சிக்ஸஸ் என்ற பிரெஞ்சுப்பெண்ணியவாதி பெண்மொழியானது எவ்வாறிருக்க வேண்டுமென்பதை, “பெண் படைப்புலகிற்கு அவளை முழுமையாகக் கொண்டுவரவேண்டும். பெண் அவளையே எழுதவேண்டும். அவள் உடம்பைக் காரணம்காட்டி எவ்வளவுக்கெவ்வளவு சமுதாயத்தில் விரட்டியடிக்கப்பட்டோமோ அவ்வளவுக்கவ்வளவு வலிமையுடன் எழுதவேண்டும். உலகிலும் வரலாற்றிலும் இருக்கிற நிகழ்வுகளைப் பெண்கள் தங்கள் பிரதியில் கொண்டுவர வேண்டும். தம் சொந்த அனுபவங்களை எழுத வேண்டும்”58 என்று பதிவு செய்கிறார்.

மேற்குறித்த பெண்மொழி குறித்தான சிந்தனைகளுடன் ஔவையாரின் மொழி வெளிப்படுத்திய கருத்துக்களை அறிய அவர்தம் பாடல்களை அணுகவேண்டியுள்ளது.

ஔவையாரின் மொழி

அறிவுசார்ந்த பெண்ணாகப் போற்றப்படும் ஔவையாரின் பாடல்கள் நான்கு அகநானூற்றில் அமைந்துள்ளன. தலைவன் பொருள் காரணமாகப்பிரிந்த நிலையில் தலைவியின் கூற்றாயமையும் பாடலில் ஔவையார் தம் உணர்வு நிலைகளைத் தெளிவாகக் கூறுகிறார். “ஞாயிறு எரிக்கும் காட்டில் மலர்ந்துள்ள இலவம்பூக்கள் மகளிர் கூட்டம் மகிழ்ந்தெடுத்த கார்த்திகை விளக்கின் ஒழுங்குபோலத் தோன்ற வளம்தப்பிய காட்டில் தலைவன் நம்மை உடன்கொண்டு கழிந்தால் கச்சினைப் பரப்பிவைத்தாலன்ன மணல்மேட்டில் மெய்கள் ஒன்றின் ஒன்று புகுவதை ஒத்த கைவிரும்பும் முயக்கத்தினை அன்புதோன்ற அவரும் அடைவார்.எமது குற்றமற்ற கண்களும் நாளும் அழுதலைப் பொருந்தாவாகித் துயிலப்பெறும்”59 என்ற பாடல் பெண்குரலில் பெண்ணுணர்வாகவே ஒலிக்கிறது.

இப்பாடலில் ஔவையின் தனிமைத்துயர் உரத்து ஒலிக்கிறது என்றாலும்கூட அவர் தன் பாலியல் உணர்வை வெளிப்படையாகப்பேசுகிறார்.அதற்கான தீர்வையும் கூறுகிறார். தனிமைத்துயருக்குத் தன்மீது எந்தக்குற்றமும் இல்லை என்பதைக் குறிப்பாகக் கூறவும் செய்கிறார்.அவரது பாடலில் சுரத்தில் தலைவனுடன் செல்லல் என்ற மரபு மீறலும் காணப்படுகிறது.மேலும் அவரது உவமைகளில் பயன்படுத்தப்பட்ட மகளிர் கூடிஎடுத்த கார்த்திகை விளக்கு, கச்சினை விரித்துப் பரப்பிவைத்தாலன்ன மணல்போன்றவை பெண்ணின் அனுபவத்தைப் பேசுகின்றன.செலவுணர்த்திய தோழிக்குத் தலைவி கூறியதாயமையும் பாடலில், “தலைவன் பிரிந்ததால் மெலிந்து அழகுகெட தலைவனது நீக்கத்திற்கு இரங்கியிருந்தும் மருந்து பிரிதொன்றும் இல்லாமையால் வேறு செயலில்லேனாயினேனாகையால் உயர்ந்த மலைச்சாரலில்  செல்லத்தொலையாத காட்டில் கணவனைத்தேடிச்சென்ற வெள்ளிவீதியைப் போலச் செல்லுதலைப் பெரிதும் விரும்பியுள்ளேன்”60 என்று ஆண்பிரிவால் பெண்ணின் நிலை, தனிமைத்துயர்போக்கச் செய்யவேண்டுவன என இரு நிலைகளைப் பேசியிருக்கிறார்.

ஔவையின் மொழியில் தன் நிலைசெயலற்றது என்ற நிலை வெளிப்பட்டாலுங்கூட அவர் அதை உடைத்துவிடுவதையும் காணமுடிகிறது. ஏனெனில் தலைவனில்லாததால் வேறு செயலில்லேனாயினேன் எனத்தொடங்கும் அவர்பாடலில் செல்லத் தொலையாத வழியில் தலைவனைத் தேடிச்செல்ல விரும்புகிறேன் என்றும் கூறுகிறார். தந்தைவழிச் சமுதாயத்தில் பெண் தலைவனைத் தேடிச்செல்வதில்லை என்ற மரபை உடைக்கும் விதத்தில் அவரது மொழி அமைந்துவிடுகிறது. மேலும் மேற்குறித்த பாடலில் குட்டிகளை ஈன்ற பெண்புலியின் பசியைப் போக்க ஆண் புலி ஆண்மானின் குரலை உற்றுக்கேட்கும் என்ற காட்சியையும் பதிவுசெய்கிறார். இது அவரது நனவிலி மனப்பதிவாகிறது. பெண்குழந்தை வளர்ப்பில் ஈடுபட ஆண் பொருள் தேடல் என்ற கடமையை ஏற்றல் என்ற சமுதாயத்தின் பிரதிபலிப்பை அவர் இயற்கையிலும் கண்டதைக்காட்டுகிறது.

பிரிவின்கண் தலைவி அறிவுமயங்கிக் கூறியது என்ற துறையில் அமையும் மற்றொருபாடல், “மிகுந்து முடிவெல்லை இதுவென அறியப்படாத தன்மையொடு வருதலையுடைய வாடைக்காற்றொடு கூடி முலையின்கண்ணே தோன்றிய வேட்கை நோயாகிய வளரும் இளையமுளை தளர்ச்சியுடைய நெஞ்சினிடத்தே வருத்தமாகிய திரண்ட அடியாய் நீண்டு ஊரார் எழுப்பிய அம்பலாய அழகிய கிளைகளைக்கொண்டு அமையாத காதல் என்னும் விளங்கும் தளிர்களைப்பரப்பி புலவரால் புகழப்பெற்ற நாணமில்லாத பெரிய மரமாகி நிலத்தின் எல்லையெல்லாம் கவிந்து அலராகிய மலர்களைச் சொரியவும் வாராராயினராகலின் அங்ஙனம் வாராத நம் தலைவர், விளை நிலங்கள் கதிர்களை ஈன்ற அணிமை நீங்கிய புதிதாக வந்த பனிக்காலத்தே நமது அழகினைக்கவர்ந்த பசலை நம்மை வருத்தவும் அதனால் நாம் எய்தும் துன்பத்தை அறிந்திலரோ. அன்றி அறிந்திருப்பினும் நம் மனத்தின் மென்மை தம்மனத்தேயின்மையின் அவர் நம் பெண்டிர் உலகத்து இயல்பினை நினைந்திலரோ. யான் என்னென உணர்வேன்”61 என்று பல்வேறு சிந்தனைக்களங்களைக் கொண்டமைகின்றது.

ஜுலியாகிறிஸ்தெவா பெண்ணின் பாலியல் உணர்வுப்பெருக்கைக் கவிதை உற்பத்தியுடன்  தொடர்புபடுத்துகிறார், “கவிதைதான் பெண்ணைப் பெண்ணின் நனவிலி மன உணர்வுகளைப் பகுத்து ஆராய ஒரு சிறந்த களமாக அமைந்துள்ளது. ஏனெனில் கவிதைதான் உணர்வுகளுக்கு அப்பாலும் இழுத்துச்செல்லும் ஆற்றல் கொண்டது. ஆசை, பயம் என்ற எண்ணற்ற உணர்வுகள் குவிவதற்குரிய இடமாகக் களமாகக் கவிதை உள்ளது”62என்கிறார்.

ஹெலன்சீக்சு பெண் தன் உடலை எழுதவேண்டுமென்கிறார். பெண்ணுடலை எழுதுவதை ‘‘L’ecriture Feminine’ என்ற சொல்லால் குறிப்பிடும் ஹெலன்சீக்சு, “பெண்ணுடலையும் பெண் வித்தியாசங்களையும் பிரதியில் எழுதுவதுதான் பெண்ணுடலை எழுதலாகும் என்றும் பெண்கள் தம் படைப்பில் பெண்ணுடலையும் பெண்விருப்பங்களையும் மறைக்காது எழுதவேண்டும்” என்று63கூறுகிறார்.

மேற்குறித்த கருத்துகள் ஔவையின் பாடலுக்குப் பொருந்தும். முடிவெல்லையில்லாது தோன்றிய வேட்கை முலையிலிருந்து நெஞ்சினிடத்தில் மரமாகி அம்பலாகிய கிளைகளைப்பரப்பிப் புலவர் புகழும் நாணமற்ற மரமானது என்கிறார். பெண்ணின் பாலுணர்வை விருட்சமென பிரமாண்டமாக்குகிறார். அம்பலாகிய கிளைகளைப் பரப்புதல், புலவர் புகழும் நாணமற்ற நிலை போன்ற சொல்லாடல்கள் சமுதாயத்தின் மீதான எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துவதாகின்றன. மேலும் ஔவை பெண்ணுலகத்தின் இயல்பினை நினைந்திலரோ என்ற வினாவை முன்வைப்பதன் வழி தனக்கான அனுபவத்தையே பேசுகிறார். ஆண்வழிச்சமுதாயத்தின் கற்பிதத்தை உடைத்தலை ஔவையின் மொழியில் காணமுடிகிறது. எதிர்ப்பாலினத்தை நோக்கி எம் நிலையை உணரவில்லையோ என்ற வினாவைத்தொடுக்கிறார். தனக்கான ஒரு மொழியையே அவர் கைக்கொண்டிருக்கிறார். கையாண்டுமிருக்கிறார்.

குறிப்புகள்

1. பெண்மொழி இயங்கியல் – மகராசன் ப.30.

2. மேலது ப.45.

3. மேலது ப.45.

4. மொழியும் அதிகாரமும் - இராமமூர்த்தி.எல் ப.54

5. அகநானூறு பா.எ.11.

6. மேலது பா.எ.147.

7. மேலது பா.எ.273.

8. பெண்ணிய உளப்பகுப்பாய்வும்

பெண்ணெழுத்துக்களும் - சாரதாம்பாள்.செ ப.33.

9. மேலது ப.29.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R