தமிழ் மொழி காலத்தால் பழமையுடையது. இத்தகு சிறப்புப் பெற்ற மொழிக்கு கூடுதலாகச் சிறப்புச் சேர்ப்பது தொல்காப்பியம் என்று சொன்னால் மிகையாகாது. தமிழ் இலக்கணிகளும், உரையாசிரியர்களும் சிறந்த மொழியறிஞர்கள் என்பதனை அவரவர் உரையின் வாயிலாக விளங்க முடியும். மேலைநாடுகளில் 17-ஆம் நூற்றாண்டில் தொடங்கி வளர்ச்சி பெற்ற துறையாக விளங்குகிறது மொழியியல். இத்துறையானது மொழியினைப் புரிந்து கொள்வதில் பெரிதும் பங்காற்றுகின்றது. மேலை நாடுகளில் வளர்ச்சி பெற்ற துறை குறித்தான அறிவினை தமிழர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பெற்றிருந்தனர் என்பதைத் தொல்காப்பியத்தின் வாயிலாக அறியலாம். இத்தகு, தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய தெய்வச்சிலையாரின் உரையில் பெயரியலில் இடம் பெற்றுள்ள தொடரியல் குறித்தான சிந்தனையைப் பதிவு செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகுமாக அமைகிறது.
பெயரியல்
“மொழியியலார் சொற்களை வகைப்படுத்தும் பொழுது Form Class என்ற கலைச்சொல்லை அறிமுகப்படுத்துகின்றனர். தமிழில் இதனை வடிவவகை என்று கூறலாம். வடிவம் என்பது சொல்வடிவத்தையே குறிக்கிறது. ஒரு வகைப்பாட்டில் அடங்கும் சொற்கள் எல்லாம் ஒரு பேச்சுக்கூறு என்றே மொழியியலார் கருதுகின்றனர்”என்று (தூ.சேதுபாண்டியன்:2013:23) ‘தொல்காப்பிய ஆய்வில் மொழியியல் அணுகுமுறைகள்’ என்ற நூலினுள் கூறுகிறார். இந்த ‘Form Class’ என்னும் கலைச்சொல்லை ஹாக்கெட் என்னும் மொழியியல் அறிஞர் தமது நூலில் பின்வருமாறு வரையறை செய்கிறார். “A Class of forms which have similar privileges of occurrence in building larger forms is a Form Class” (Hockett:1958:162). இத்தகைய Form Class இல் பெயர்ச்சொல்லும் ஒன்றாகும். இத்தகைய பெயரினைக் குறித்து ச.அகத்தியலிங்கம் குறிப்பிடும் பொழுது, “பெயர்ச்சொற்கள் எல்லா மொழிகளுக்கும் உரியனவாகும். எல்லா மொழிகளிலும் பெயர்ச்சொற்களைக் காணமுடியும்” (அகத்தியலிங்கம்:1986:145) என்று குறிப்பிடுகிறார்.
பெயரியல் - வேற்றுமையியல் உறவு
தொல்காப்பியர் வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் குறித்த இலக்கணத்தினை அதனதன் இயல்களிலே கூறியுள்ளார். ஆனால் பெயரியலில் பெயரின் வகைகள் குறித்தும்; அவற்றின் நிலைகள் குறித்தும் குறிப்பிட்டுள்ளார். பெயருக்கான இலக்கணத்தினைக் கூறவில்லை. இருப்பினும் பெயரின் இலக்கணத்தினை வேற்றுமையியலில் தெளிவாகக் கூறியுள்ளார். எனவே, பெயரியலினை வேற்றுமையியலுடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும் என்பது தெளிவாகின்றது. இதனை,
“பெயர்நிலைக் கிளவி காலம் தோன்றா
தொழில்நிலை ஒட்டும் ஒன்றலங் கடையே” (தொல்.தெய்வ.67)
என்ற நூற்பாவின் உரையில் “பெயர்நிலையையுடைய சொல் காலந் தோன்றா; தொழில் நிலையோடு ஒட்டி நிற்கும் பெயரும் ஒருவகையல்லன காலம் தோன்றா” (தெய்வச்சிலையார்:1984:56) என்று கூறியுள்ளார். மேலும்,
“வேற்றுமை வழிய பெயர்புணர் நிலையே” (தொல்.இளம்.எழுத்து.116) எனவும்,
“கூறிய முறையின் உருபுநிலை திரியாது
ஈறுபெயர்க் காகும் இயற்கைய வென்ப” (தொல்.தெய்வ.66)
என்ற நூற்பாவிற்கு விளக்கமளிக்கும் பொழுது, “சொல்லப்பட்ட உருபு முறையானே நின்ற நிலையைத் திரியாது பெயர்க்கு ஈறாகும் இயல்பினையுடைய” (தெய்வச்சிலையார்:1984:55) குறிப்பிட்டுள்ளார். எனவே, பெயரியலுடன் வேற்றுமையியல் மிகுந்த தொடர்பினைப் பெற்றுள்ளது. பெயரியலை மட்டும் படித்தோம் என்றால் பெயரின் முழுமையான இலக்கணத் தன்மையை அறியமுடியாது. ஏனென்றால் வேற்றுமையியலோடு மிக நெருங்கியத் தொடர்பினைப் பெற்றுள்ளது.
பெயர் - வினை உறவு
பெயர் என்றால் என்ன என்பதனை அறிந்து கொள்வதற்கு பெயரியலின் துணையை மட்டும் வைத்துக்கொண்டால் முழுமையான விளக்கத்தினை அறியமுடியாது. ஏனெனில், வினையியலின் இயல் இயைபினைச் சுட்டுகின்ற பொழுது, “இவ்வோத்து என்ன பெயர்த்ததோ எனின், வினையியல் என்னும் பெயர்த்து; வினைச்சொல் உணர்த்தினமையால் பெற்ற பெயர். நிறுத்த முறையானே பெயர் இலக்கணங்கூறி, அதன்பின் வினையிலக்கணங் கூறவேண்டுதலின் அதன்பிற் கூறப்பட்டது.” என்று (தெய்வச்சிலையார்:1984:130) குறிப்பிடுகிறார். மேலும்,
“வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது
நினையுங் காலை காலமொடு தோன்றும்” (தொல்.தெய்வ.191)
என்ற நூற்பாவின் விளக்கம் கூறுகின்ற பொழுது, “வினை என்று சொல்லப்படுவது வேற்றுமை உருபு ஏலாது; காலமொடு தோன்றும் ஆராயுங்காலத்து” (தெய்வச்சிலையார்:1984:130) என்று வினைச்சொல்லின் இலக்கணம் கூறுகிறார். இதனிலிருந்து வினை என்பது வேற்றுமை கொள்ளாது என்பதால் பெயர் என்பது வேற்றுமை கொள்ளும்; வினை என்பது காலம் காட்டும் என்பதால்; பெயர் காலம் காட்டாது என்பதனைப் பொருத்திப் பார்க்குமிடத்து பெயருக்கும் வினைக்குமான வேறுபாட்டினை அறியதுணையாக நிற்கும். தொழில்நிலை ஒட்டுவாகிய வினையாலணையும் பெயர் காலம் காட்டும் என்று கூறி, செய்தமை, உண்டமை போன்ற காலங்காட்டும் தொழிற்பெயரும் இதனுள் அடங்கும் எனக் கருதுவாரும் உளர். (இசரயேல் மோ:1976:16) என்று குறிப்பிடுகிறார்.
இயல் விளக்கமும் தொடரியல் உறவும்
தெய்வச்சிலையார் பெயரியலுக்கு இயல் விளக்கம் தருகின்ற பொழுது, தொடரியல் சார்ந்த விளக்கத்தினையே அளிக்கின்றார். “இவ்வோத்து என்ன பெயர்த்ததோ எனின், பெயரியல் என்னும் பெயர்த்து. பெயரியல் உணர்த்தினமையாற் பெற்றபெயர். கிளவியாக்க முதலாக விளிமரபு ஈறாகத் தொடர்மொழி இலக்கணங்கூறி, இனி, அத்தொடர் மொழிக்கு உறுப்பாகிய தனிமொழி இலக்கணம் கூறுகின்றார். அத்தனிமொழி நான்கினும் பெயர்ச்சொல் சிறந்ததாகலின், முற்கூறப்பட்டது” (தெய்வச்சிலையார்:1984:107) என்று தெய்வச்சிலையார் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கண்ட தெய்வச்சிலையாரின், கிளவியாக்க முதலாக விளிமரபு ஈறாகத் தொடர்மொழி இலக்கணங்கூறி, இனி அத்தொடர் மொழிக்கு உறுப்பாகிய தனிமொழி இலக்கணம் கூறுகின்றார் என்ற விளக்கத்தின் வாயிலாக சொல்லதிகாரத்தினைத் தொடரியல் சார்ந்தே ஆராய்ந்துள்ளார். மேலும், தனிமொழி என்பது தொடர்மொழியில் ஒரு உறுப்பாக அமைகின்றது என்று குறிப்பிட்டுள்ளதன் மூலம் சொல்லதிகாரம் முழுவதும் தொடரியல் சார்ந்தே அணுகி உரையமைத்துள்ளார் என்பதைத் தெளிந்துகொள்ளலாம்.
பெயரியலும் தொடரியலும்
தொல்காப்பியரின் சொற்பாகுபாட்டில் சொற்களை நான்கு வகையாகப் பகுக்கிறார். அவற்றினை, பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்பதாகும்.
“எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே”(தொல்.சொல்.தெய்வ.150)
என்ற நூற்பாவிற்கு உரை வழங்குகின்ற பொழுது, இவற்றில் உலகத்தாரான் வழங்கப்பட்ட எல்லாச் சொல்லும் பெயர் குறித்தன என்று குறிப்புரை கூறி, “பொருளின்றி வழங்குஞ் சொல் இல என்னும் மரபு என்னை, முயற்கோடு எனச் சொல் நிகழுமன்றே, அதனாற் குறிக்கப்பட்ட பொருள் யாங்கது? எனின், அறியாது கடாவினாய், முயல் என்பதற்குப் பொருண்மை காண்டி, கோடு என்பதற்குப் பொருண்மை காண்டி, இவை இரண்டு பொருளும் தனித்தனி உளவாதலின், இவை தனிமொழிக்கண் பொருள் குறித்து நின்றவை; தொடர்மொழியாயுழி, உள்ள பொருளோடு அதன்கண் இல்லாத பொருளை அடுத்தமையான் ஆண்டு இன்றாயிற்று அல்லது, இல்பொருள்மேல் வழக்கின்று என்று கொள்க.” (தெய்வச்சிலையார்:1984:107) என்று தெய்வச்சிலையார் கிளவியாக்கத்தின் முன்னுரைப் பகுதியில் குறிப்பிட்டது போல, மொழியினைத் தனிமொழி, தொடர்மொழி என்ற பகுப்பில் காண்பதனைக் காணமுடிகிறது.
பாலறி கிளவியும் தொடரியல் உறவும்
தமிழ் இலக்கண நூலார் பெயர்ச்சொல்லுக்குத் தெளிவான இலக்கணம் கூறியுள்ளனர். தொல்காப்பியர்,
“பெயர்நிலைக் கிளவி காலம் தோன்றா
தொழில்நிலை ஒட்டும் ஒன்றலங் கடையே” (தொல்.தெய்வ.67)
என்ற நூற்பாவினால் அறியலாம். பெயரிலக்கணம் கூறுகின்ற பொழுது பெயர் வேற்றுமை ஏற்கும் என்பதனைக் குறிப்பாகவும். காலங்காட்டாது என்பதனை வெளிப்படையாகவும் கூறுகிறார். இங்குப் பெயர் என்னும் சொல்வகை ஏற்கும் ஒட்டுக்கள் பற்றியும் ஏற்காத ஒட்டுக்கள் பற்றியும் விளக்குவது அச்சொல் வகை ஏற்கும் ஒட்டுக்கள் பற்றிக் கூறுவதாக அமைகிறது. எழுவாயாக வருவது என்பது அச்சொல் தொடரில் இடம்பெறும் முறையைப் பற்றிப் பேசுவதாக அமைகிறது. இதனை அடுத்துப் பெயர்ச்சொற்களின் வகையைக் குறிக்கிறார்.
தொல்காப்பியர் இருதிணைக்கும் உரிய பதினொரு வகையான ஈறுகள் குறித்து கிளவியாக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இவ்வீறுகளை வழுப்படாமற் எழுதுவதற்கென்று பெயரியலில் பொருத்திக் காட்டியுள்ளார். இதனை,
“வினையிற் றோன்றும் பாலறி கிளவியும்
பெயரில் றோன்றும் பாலறி கிளவியும்
மயங்கல் கூடா தம்மர பினவே” (தொல்.தெய்வ.11)
என்ற நூற்பாவின் மூலம் பாலறி கிளவிகள் பெயரினையும் வினையினையும் அடிப்படையாகக் கொண்டமையும் என்பதனை அறியலாம். இத்தகு பாலறிகிளவியினை மொழியியலாளர்கள் பாலெண் இயைபுவிதி என்பர். இப்பாலறிகிளவியின் தொடர்ச்சியினைப் பெயரியலில் காணலாம். இதனை,
“அவற்றுள்,
பெயரெனப் படுபவை தெரியுங் காலை
உயர்திணைக் குரிமையும் அஃறிணைக்குரிமையும்
ஆயிருதிணைக்கு மோரன்ன வுரிமையும்
ஆம்மூ வுருபின தோன்ற லாறே” (தொல்.தெய்வ.155)
இங்கு உயர்திணைப் பெயர், அஃறிணைப் பெயர், ஆயிரு திணைக்கும் ஓரன்ன உரிமையுடைய இருதிணைப் பொதுப்பெயராகிய விரவுப்பெயர் பற்றிப் பேசுகிறார். இத்திணைப் பாகுபாடு என்பது தொடரியல் அடிப்படையில் அமைந்ததே ஆகும். தனியாக ஒரு சொல்லை வைத்துக்கொண்டு உயர்திணைச் சொல்லா? அஃறிணைச் சொல்லா? என்று முடிவுசெய்தல் இயலாது. உதாரணமாக, நிலா என்ற சொல்லை என்ன திணை என்று கூறமுடியாது.
‘நிலா ஆடினாள்’- என்ற தொடரில் உயர்திணைப் பெண்பால் எனலாம்.
நிலா மறைந்தது -என்ற தொடரில் அஃறிணை ஒன்றன் பாற்சொல்லாகும்.
ஒரு சொல்லை வைத்துக் கொண்டு என்ன திணை என்று குறிக்க முடியாதது போன்றே ஒரு சொல்லை வைத்துக் கொண்டு என்ன பால் என்று குறிக்க முடியாது. சான்றாக வைரம் என்ற சொல்லை எடுத்துக் கொண்டு என்ன பால் என்று கூறமுடியாது. மாறாக,
வைரம் ஆடினான் - என்ற தொடரில் வைரம் ஆண்பால் சொல் என்பதனை அறியலாம்.
வைரம் ஆடினாள் - என்ற தொடரில் வைரம் பெண்பால் சொல் என்பதனை அறியலாம்.
வைரம் விலை குறைந்தது - என்ற தொடரில் வைரம் ஒன்றன்பால் சொல் என்பதனை அறியலாம்.
எனவே, சொல்லினை வகைப்படுத்துவதில் சொல்லின் பொருளும், அச்சொல்ல் வழங்கப்படுகின்ற இடமும் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. இதன் வாயிலாக சொல்லின் பொருளை அறிவிப்பதில் தொடர் முக்கிய இடம்பெறுகின்றது.
பெயரியலில் சொல்லை வகைப்படுத்துதலில் சொல்லின் பொருளும், அச்சொல்லின் வழங்குகின்ற இடமும் முக்கிய இடத்தினைப் பெறுகின்றன. இதன் பின்னர்ப் பெயரைச் சுட்டுப்பெயர், வினாப்பெயர், தொழிற்பெயர், வினையாலணையும் பெயர், ஆகுபெயர், இயற்பெயர், சினைப்பெயர், முறைப்பெயர், நாட்பெயர், திங்கட் பெயர், மரப்பெயர், எண்ணுப்பெயர் என்று பல பெயர்களைக் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். நிறைவாக, பெயரியல் குறித்தான முழுமையான செய்தியினை அறிந்து கொள்வதற்கு அரிமா நோக்கு கொண்டு முன் பின் சென்று பார்ப்பதைப் போன்று வேற்றுமையியல், வினையியலுடன் தொடர்பு படுத்திப் பார்க்கவேண்டும். பெயரியல் இயல் விளக்கத்தினை தொடர்மொழி சார்ந்தே விளக்கியுள்ளார். பெயரியலில் தெய்வச்சிலையார் ஒரு சொல்லை வைத்துக் கொண்டு இன்ன வகைச் சொல் என்று கூறமுடியாது. அதனை வாக்கியத்தில் அமையும் பொழுது அது எவ்வகையான பால் என்று அறியமுடியும். இதன் வாயிலாக எல்லாப் பெயர்ச் சொற்களும் பால் காட்டாது என்பது புலனாகின்றது. சில பெயர்ச்சொற்கள் பொதுப் பெயர்ச்சொற்களாகவே அமைந்துள்ளன. தொல்காப்பியம் சொல்லதிகாரத்தின் அதிகார விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளது போல பரக்க பலவிடங்களில் தெய்வச்சிலையார் தொடரியல் சார்ந்தே முழுமையாக அணுகியுள்ளார் என்பது தெளிவுபெறுகின்றது.
துணைநின்றவை
அகத்தியலிங்கம் ச - திராவிட மொழிகள், மு.ப.1986, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.
அழகேசன் சு - இலக்கணப் பார்வைகளும் பதிவுகளும்,
சேகர் பதிப்பகம், மு.ப.2007, 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர். நகர், சென்னை-600 078.
இசரயேல் மோ - இலக்கண ஆய்வு பெயர்ச்சொல், 1976,
சிந்தாமணி வெளியீடு, மதுரை - 625 019.
இளம்பூரணர் (உ.ஆ) - தொல்காப்பியம் (எழுத்ததிகாரம்),
முல்லைநிலையம், சென்னை.
கணேசன் மா (ப.ஆ) - தொல்காப்பிய ஆய்வில் மொழியியல்
அணுகுமுறைகள், 2013,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்.
தெய்வச்சிலையார் (உ.ஆ) - தொல்காப்பியம் (சொல்லதிகாரம்),
நிழற்படப்பதிப்பு, 1984,
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
Hockett, Charles F - A Course in Modern Linguistics, The Macmillan Company,
New York,1958
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.