இளவாலை அமுதுப் புலவர்' பேராசிரியர் கோபன் மகாதேவாஇந்த ஆய்வுக் கட்டுரையின் நாயகர் 2010 மாசியில் தனது 91வது வயதில் மறைந்த 'இளவாலை அமுதுப் புலவர்' என்று வழங்கப்பட்டு வந்த ஈழத்தின் பழுத்த நூலாசிரியராகிய (த.) சவரிமுத்து அமுதசாகரன் அடைக்கலமுத்து ஆவார். அவரின் 10-நூல்களுள் சிறந்த மூன்று வரலாற்று நூல்கள், இரண்டு கவிதை நூல்களை அடக்கி, 1200-பக்கங்களுடன் 2008இன் 'தொகுப்புநூல்' லண்டனில் 2010-தையில் வெளிவந்தது. எனது இச் சிற்றாய்வு பெருமளவில் அத் தொகுப்பு நூலையும் அவ்வாசிரியருடன் நான் கொண்டிருந்த 10-12 வருட இலக்கியத் தொடர்பையுமே தளமாகக் கொண்டு அத் தொகுப்பிலுள்ள ஐந்து நூல்களையும் அங்குள்ள வரிசையிலேயே திறனாய்வாக விவரிக்கின்றது.

1. அன்பின் கங்கை அன்னை தெரேசா (234-பக்கம்): இப் பகுதி-நூலுக்கு அருட்தந்தை எஸ்.ஜே. இம்மானுவேல், அன்று ஈழகேசரி ஆசிரியரான ஈ.கே. ராஜகோபால், கணக்காளர்-எழுத்தாளர் ஐ. பேதுருப்பிள்ளை, கலாநிதி அ.பி. ஜெயசேகரம் அடிகள் ஆகிய நால்வர் முன்னுரையும், ஆசிரியர், தன் வாசற்படி உரையையும் எழுதியுள்ளனர். கவிஞர் வைரமுத்து ஒரு வாழ்த்துக் கவிதை புனைந்துள்ளார். இந்நூல் 'பூங்கொடி மாதவன் சபைத்' துறவிகளுக்கும் தன் மனைவி ஆசிரியை திரேசம்மாவுக்கும் காணிக்கையாக 1997-2002-2005 இல் மூன்றுமுறை பதிப்பித்து வெளிவந்த, அமுதுவின் முதலாவது 'பஞ்சாமிர்தம்'.

அல்பேனியாவில் 26-08-1910இல் பிறந்து, 15-வயதில் ஒரு கத்தோலிக்கக் கன்னிப் பெண்ணாகவே வாழ முடிவெடுத்து, முறையே கல்வி கற்று, பயிற்சியும் பெற்று, மானிடத் தொண்டுக்கு எனவே துறவியாகி, தன் வாழ்நாளில் முக்கிய பகுதியை இந்தியக் 'கொல்கத்தா' மாநகரிலும் சுற்றாடலிலும், நோயாளிகளையும் அனாதைக் குழந்தைகளையும், சாவை நெருங்கி வாழ்வோரையும் சாதி, சமய, மொழி, பாலின, வயதுப் புறக்கணிப்புக்கள் எதுவும் இன்றிப் பராமரித்து, உலகப் பிரபல்யம் அடைந்து, நோபல் பரிசையும் பெற்று 05-09-1997 அன்று ஓர் இந்தியப் பிரஜையாக மறைந்தவர், அன்னை தெரேசா. அவரின் தன்னலமற்ற, அடக்கமான, சிரித்த-முக, அணைக்கும்-கர, ஆயுள்ச் சேவையைப் பள்ளிப் பிள்ளைகளுக்கும் பாமர மக்களுக்கும் சுட்டிக் காட்டி இந் நூலை மிகவும் பயபக்தியுடன் எழுதியிருக்கிறார், எம் ஆசிரியர் அமுது.

இந்நூல், எண்கள் இடாமல் தொடக்கத்தில் இரண்டு, முடிவில் நாலு கட்டுரைகளுடனும், நடுவில் 1-52 அத்தியாயங்களுடனும், மொத்தமாக 58- தலையங்கங்களுடன் சுவையான பல அம்சங்களை உள்ளடக்கி மிளிர்கிறது. அத்துடன் சில நிழற் படங்களும் இடையிடையே காணப்படுகின்றன. 1976-95 காலப்பகுதியில் 10-ஆங்கில நூல்கள், புதினப் பத்திரிகைகள், ஊடகங்கள், நேரடியான விசாரிப்புகள் மூலம் தகவல் சேகரித்து, புள்ளி விபரங்களுடன் இவ்வரலாற்று நாயகியின் வாழ்க்கையை ஒரு சுவை நிறைந்த கதையாக வடித்திருக்கிறார், அமுது. இது, துறவி அன்னை தெரேசாவைப் பற்றி வெளி வந்த முதல் தமிழ் நூலாகவும் இருக்கலாம். ஒரு கட்டத்தில் உலகின் மிகச் சக்தி வாய்ந்த பெண்ணெனக் கணிக்கப்பட்ட தெரேசா, தான் ஆரம்பித்த சேவை நிறுவனத்தை உலகின் 125-நாடுகளில் 1400-மருத்துவ மனைகள், 760- பணி மனைகள், 470-அறிவாலயங்கள், 160,000-ஆண்பெண் தொண்டர்களுடன் பிரமாண்ட இயக்கமாக விட்டுச் சென்றார், என ஆசிரியர் அமுது முடிக்கிறார்.

2. 'நெஞ்சே நினை'(தமிழ் வளர்த்த ஞானப்பிரகாசர்): இப் பகுதிநூல் 240-பக்கங்களும் 67-அத்தியாயங்களும் கொண்டு, ஆண்டகை தியோகுப்பிள்ளை எனும் யாழ். மறை மாவட்ட ஆயருக்குக் காணிக்கை ஆக்கப்பட்டு உள்ளது.  இந்நூலுக்கு இரு பேராசிரியர்களும் ஒரு கவிஞரும் முன்னுரை எழுதியுள்ளனர்.

அவர்கள், புலவர்மணி சோ. இளமுருகனாரும் பேராசிரியர்கள் சு. வித்தியானந்தனும் ஆ. சதாசிவமும் ஆவர். மேலும், மூன்று பிரபல கவிஞர்கள் பொன்னுரைகளும், எம்ஆசிரியரே ஒரு நெஞ்சுரையும் எழுதியுள்ளனர். இதற்கு ஞானப்பிரகாசரின் நூல்கள், பத்திரிகைகள், உட்பட எட்டு வகைத் தமிழ், ஆங்கில மூலங்களும், மூன்று வரலாற்றுக் குறிப்புகளும் உசாவு துணைகள் ஆகின. இந் நூலின் பொருளடக்கம்: 'இளமையும் துறவும்', 'சமயத் தொண்டு', 'தமிழ்த் தொண்டு', 'வரலாற்று ஆராய்ச்சி', 'சீவியவெள்ளத்தில்-சிலதுளிகள்', 'நூல்கள்' என ஆறு பிரிவுகளாகக் கணிசமான ஆராய்ச்சியுடன் எழுதப் பட்டிருக்கிறது.

நல்லூர் ஞானப்பிரகாசர் சுவாமி எனத் தன் பிற்காலத்தில் அறியப் பட்ட கத்தோலிக்க அறிஞரின், அதாவது இப் பகுதிநூலின் நாயகரின், பிறப்புப் பெயர் வைத்தியலிங்கம் என்பதே. அயலார் அவரைக் கனகரத்தினம் எனச் செல்லமாக அழைத்து வந்தனர். அவர் பிறந்தது தமிழீழத்தின் மானிப்பாயில். அவரின் தகப்பனார் சாமிநாதப்பிள்ளை, ஒரு சைவப் பழம். மானிப்பாய்க் கல்லூரியில் ஓர் ஆசிரியர். இவரின் மனையாள் பெயர் தங்கமுத்து. தங்கம், மானிப்பாயின் ஓர் ஆதிக் கல்விமானாகிய கார்டினர் சிற்றம்பலத்தின் மூத்த மகள். கார்டினரோ, மானிப்பாய், ஆனைப்பந்திப் பகுதிகளில் செல்வாக்குடன் மெத்தை வீடொன்றில் வாழ்ந்து வந்த விதானையார் வைரமுத்துவின் மகன்.

சாமிநாதபிள்ளையரின் குடும்பமும் ஒரு புகழ் அடைந்த குடும்பமே. அவர், யாழ்ப்பாண வைபவ கௌமுதி என்ற நூலை அச்சிட்ட மானிப்பாய்ப் புவிராச சிங்க முதலியின் மகன் குலசேகர முதலியாரின் மகன் கதிரிச் சட்டம்பியாரின் மகன் பொன்னம்பலத்தின் மகன் இராசசிங்கத்தின் மகன் ஆவார். இவ்வாறு ஞானப்பிரகாசர் தாய்பக்கம் கத்தோலிக்கச் சூழலுடனும் தந்தைபக்கம் சைவச் சூழலுடனும், வசதியுள்ள ஒரு குடும்பத்தின் வாரிசுவும் தனிப்பிள்ளையும் ஆவர். 1875ம் ஆண்டு ஆவணி மாதம் 30ம் திகதி பிறந்தவர். அடுத்த ஆண்டே, 18- வயதே நிரம்பிய தங்கமுத்துவின் தாயாரும் கணவனாரும் வாந்திபேதி நோயால் இறந்தவுடன், அவளின் ஒருவயதுப் பாலகனும் 40-நாள் சுர-நோயால் பாதிக் கப்பட்டு மெலிய, மகன் பிழைத்தால், அவனை ஒரு கத்தோலிக்கப் போதகர் ஆக்கித் தெய்வ சேவைக்கு அர்ப்பணிப்பது, எனப் பிரார்த்தித்தாள். அதன் பின், பல காரியங்கள்; கடு கெதியில் நடந்தன. கார்டினர் சிற்றம்பலம் தன் மகளின் வேண்டுகோளை ஏற்றுத் தன் மகளையும் பேரனையும் மதம்மாற்றி, அன்னமுத்து, ஞானப்பிரகாசர் என்று பெயர்களையும் மாற்றி, மகளைத் தனக்குச் சொந்தமான அச்சுவேலிச் சந்தியாபிள்ளை உடையாரின் மகன் தம்பிமுத்துப் பிள்ளைக்கு மறுமணம் செய்துவைத்துப் பேரனையும் அவர்களுடன் வாழ ஒழுங்கு செய்தார். ஞானப்பிரகாசரும் தன் எட்டு வயதுவரை, தம்பிமுத்தர் தனது சொந்தத் தகப்பனே என நம்பி வாழ்ந்து வர, தம்பிமுத்தரும் ஞானியரை அவ்வாறே மிக அன்புடன் நடத்தி வந்தார். இதுவே ஞானப்பிராகாசரின் சுருக்கமான பூர்வீகம்.

சிறியதந்தை தம்பிமுத்தர், கற்ற, துணிந்த, விடாமுயற்சிக் குணசீலர். ஓர் அச்சகம் நடாத்தி, பழைய ஏட்டுப்பிரதிகளையும், புதுநாடகங்கள், கவிதைகளை எழுதியும், நூலாக்கிய அறிஞர். தன்னைக் குருவாகவும் கருதிய 'மகன்' ஞானப் பிரகாசர் வளர்ந்துவந்து, தன் அச்சக வேலையிலும் சமய, சமூகப் பணிகளிலும் முன்நின்று உதவுவார் என நம்பினார். ஆனால் ஞானப்பிரகாசர், தாயின் விதிவச வாக்குப்படி தெய்வ-சமூகத் தொண்டாற்ற, மானிப்பாயில் ஆங்கிலம் கற்றார்.

பின்னர் பேரனார், செம்பத்தரிசியார் கல்லூரிக்கு இவரை அனுப்பி, அங்கு கற்றுமுடிய, அரசாங்க லிகிதர் சேவைக்கு ஊக்க, அவர் சில வருடங்களுள் அதைத் துறந்து போதகப்-பயிற்சியாளரானார். அதை அன்று எதிர்த்த பேரனார், தாயார், சிறியதந்தை எல்லாரும் பின்னர் இணங்க, 1901இல், 26வது வயதில் அவர் போதகரானார். முப் பகுதியினரும் இதன் பின்னர் ஒருவரையொருவர் போற்றிப் பேணினர். 1904இல் எம் 'ஞானி'யர் நல்லூரில் பங்குக் குருவானார்.

நல்லூர் ஆசீர்வாதப்பர் கோவிலில் பங்குக் குருவாகி, அடுத்த 43-ஆண்டுகள் அதையே தன் தலமாக்கி, நல்லூர்ச்சுவாமி என அழைக்கப்பட்டார்.     சுவாமியாரின் சமய, தமிழ், வரலாற்று, ஆராய்ச்சித் தொண்டுகள் பற்றி அமுது மிகப் பிரமாதமாக எழுதியுள்ளார். அதற்கு இவர் செய்த ஆராய்ச்சியே கணிசமான, போற்ற வேண்டிய சேவையாகும். அமுதுவின் நூலே ஞானியரின் முதல் சம்பூரண 'எது-மொழி' வாழ்க்கை வரலாறாகவும் இருக்கலாம். சமயத் தொண்டாக, ஞானியர், சைவசமய நூல்கள்-முறைகள் பலவற்றையும் கூர்ந்து கற்ற பின், தன் புதிய சமயத்தைப் பரப்ப, ஐரோப்பிய, அமெரிக்கப் பாதிரிமார் செய்ததிலும் மிகக் கூடிய தொண்டை, ஈழத்தவரான ஞானியர் செய்துள்ளார் என்னும் முடிவு, அமுதுவின் நூலைப் படித்தவுடன் எனக்கு எழுந்தது. 'சுவாமி ஞானப்பிரகாசர் எழுதிய 84 நூல்கள்' என, (அவற்றின் மொத்தப் பக்க விபரங்களும், அவை பதிவு பெற்ற ஆண்டுகளும் இன்றி), அமுது 17-வரலாற்று நூல்களையும், 5-பிறமதங்கள் பற்றியவையையும், 5-வாழ்க்கை வரலாறுகளையும், 24-சமய சம்பந்தமான துண்டுப் பிரசுர நூல்களையும், 22-தர்க்கப் பிரசங்கப் பிரசுரங்களையும், 11-தமிழ்மொழி நூல்களையும் நிரல் செய்துள்ளார். மேற்கூறிய நான்காவது ரகமான, சைவத்தைப் பற்றியும் கிறிஸ்துவத்தைப் பற்றியும் ஞானியர் எழுதிய 24-60 பக்க, 24-துண்டுப் புத்தகங்களை அமுது திரும்பவும் நிரலிட்டு 'சமய வேறுபாடில்லாமல் வாசித்துப் பயன் பெறக் கூடியவை' என ஓரளவு விபரித்தும் இருக்கிறார். மேலும், ஞானியர் 1906-31 காலத்தில் பதிப்பித்த நூல்களென 11-உம், பதிப்பித்த வேறு நூல்கள் 8-உம் ஒரு நிரலில் கொடுக்கப் பட்டுள்ளன. தன் தமிழ் மொழித் தொண்டாக ஞானியர் தமிழ் அமைப்புற்ற வரலாறு (1927), சொற் பிறப்பு ஆராய்ச்சி (1932), சொற்பிறப்பு ஒப்பியல்-அகராதி (1937) எனும் நூல்களைப் பதிப்பித்ததுடன், தமிழே உலகின் தாய் மொழி எனவும் ஓதினார். வரலாற்று ஆராய்ச்சியில், ஞானியர் தமிழரின் பூர்வீகத்துக்கும் யாழ்ப்பாணச் சரித்திரத்துக்கும் ஊர்ப் பெயர்களுக்கும் பிரதானம் அளித்திருந்தார். 22-01-1947 அன்று ஞானப்பிரகாசர் காலமானார்.

முடிவில், அமுதுவின் இந்தப் பகுதி-நூலைப் பற்றி என் மனதில் நிற்கும் பதிவுகள் இவை: 1. ஞானியரின் மத்திய காலத்தில், ஈழத்தில், கத்தோலிக்கம், தமிழ், ஆகிய அதே துறைகளில் தொண்டாற்றி, அவரும் ஒரு பன்மொழிப் பண்டிதர் எனப் புகழ் பெற்ற ஏச். எஸ். டேவிட் (1907-1981) சுவாமியைப் பற்றி அமுது ஒரு வார்த்தையேனும் தன் இந்நூலில் எழுதாதது ஏன்?

2. ஞானியர், கிறிஸ்துநாதர், கோவைக்குரு சாங்கோபாங்கசுவாமியர்களை மட்டுமல்ல, வீரமா முனிவர் (1680-1747), ஆறுமுக நாவலர் (1822-1879) முதலியோரின் அடிச் சுவட்டுகளையும் விதந்து பின்பற்றிய ஒரு புதிய சின்னப்பர் ஆவார். இலங்கை அரசாங்கம், அன்றைய ஜேர்மன் அரசைப் பின்பற்றி, இனியாவது அவரின் நினைவில் ஒரு தபால் முத்திரையாவது வெளியிடல் முடியுமா? 3. ஞானியரின் இன்னும் அச்சேறாத, சிங்களமும்-தமிழும் உட்பட அமுது சுட்டிக்காட்டியுள்ள ஏழுநூல்களையும் யாழ்-பல்கலைக்கழகமோ வேறு தமிழ்அமைப்போ முன்வந்து பொறுப்பேற்று, தாமதியாமல் அச்சிட்டு வெளியிடுமா? 4. எம் ஞானப்பிரகாசரின் வாழ்வும் பணியும், ஈழத் தமிழருள் சாதி-சமய ஒற்றுமைக்கு உதவ முடியுமா? 

3. இந்த வேலிக்கு கதியால் போட்டவர்கள்: (2006): அமுதுவின் 2008-தொகுப்பு நூலின் மத்தியில் வரும் இப் பகுதிநூல் மற்றைய நான்கையும் விட மிக மிக வித்தியாசமானது. இதைப் பற்றி யதார்த்தமாகக் கருத்துக் கூறுவதும் மிகச் சிக்கலானது. எனினும், சிரமமான வேலை என்பதால் அதைச் செய்யாது விட முடியுமா?  எனவே, அதையும், பாரபட்சமின்றித் துணிந்து தொடர்கிறேன்.    இந்நூல், லண்டன் புதினம் ஆசிரியர், அமுதுவின் சுயசரிதையை எழுதுமாறு கேட்க, இவ்வாறே மறைமுக உருவில் பிறந்தது. வேலிக்கதியாலின் உருவகம், மண் வாசனையுடன், சிரிப்பையும் சிந்தனையையும் தூண்டுகிறது.  உருவகங்களை ஓரளவே பாவிக்கலாம். அளவுக்கு மிஞ்சி இழுத்தால் உருவகங்கள் உடைந்தும் விடும்; உருமாறி, குழப்பத்தையும் உண்டாக்கலாம். இவற்றை மனதில் வைத்துக் கொண்டு, மேலே சென்று உள்ளே பார்ப்போம்.  ஆசிரியர், தன் நீண்டவாழ்க்கையில் கணிசமாக அவருக்கு உதவிசெய்து, அவரை நிமிர்ந்து நிற்கச் செய்த 61-நபர்களைத் தெரிவு செய்து, தமது கூட்டுப் பணிகளை மட்டும், நன்றி உணர்வுடனும் நிழற் படங்களுடனும் எழுதியுள்ளார். அப் பிரமுகர்களின் வாழ்க்கை வரலாற்றையோ தனது வரலாற்றையோ எழுத அவர் முயற்சிக்கவில்லை. எனவே இந்தவேலியில், பல பொட்டுகளும் உண்டு. புதினம் பத்திரிகை, தனது இருவார இதழ்களில் வெளியிட்டு முடிய, 2006இல், பத்தாவது புதினம் ஆண்டு நிறைவு வெளியீடாக இந்நூல் வரும் போது 213- பக்கங்களுடன் இருந்தது. ஆனால் 2008இல் மணிமேகலை, தன் தொகுப்பு நூலாக வெளியிடும் போது, உயரம், அகலம், 'கதியால்'களின் எண்ணிக்கை ஒன்றுமேகூடாமல், 243-பக்கங்களாக நூல் கொழுத்துக் காணப்படுகிறது. இது 'மணிமேகலைப் பிரசுர ஆசிரியர்குழு'வின் மாந்திரீகச் சாதனைச் செயலெனலாம்.

இந்நூல், அமுதுவின் பிரிய-குரு'மகனார்' சந்திரகாந்தன் அடிகளாருக்கு காணிக்கை செய்யப்பட்டுள்ளது. ஆசிரியரே முதலில் 'படலை வாசலில் நின்று' சில வார்த்தைகள் சொல்லி, பின்னர் புதினம் ஆசிரியர் ஈ.கே. ராஜகோபாலின் பதிப்புரை, பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜாவின் 'சந்தன மாலை', கவிஞர் க. இராஜமனோகரனின் கவிதை, பேராசிரியர் மணிமாறன், கவிமாமணி க.த. ஞானப்பிரகாசத்தின் 'சந்திர பிம்பங்கள்' முடிந்தவுடன், அமுது தன் 'அந்தி மந்தாரை'யுடன், 'வேலி'யாகிய தனக்கு கதியால் இட்டவர்களைத் தனித் தனியாகவும், மூன்று இடங்களில் 2-3 பேரைச் சேர்த்தும், முடியுந் தறுவாயில் 16- பேரைச் சேர்த்து 'ஏந்திய விளக்கில் எண்ணெய்யாய் வந்தோர்' எனும் தலைப்பு அளித்தும், 44-அத்தியாயங்களில் இந்நூலை அன்புத் தமிழில் ஆக்கியுள்ளார்.

இவ்வாறு அமுது நன்றி கூறியிருக்கும் 61-நல்லோர்களில் 54-பேர் ஈழத் தமிழர்கள், ஐவர் இந்தியத் தமிழர், இருவர் சர்வலோக சமயத் தொண்டர்; 54-ஆண்கள், ஏழு பெண்கள்;  32-கத்தோலிக்கர், 28-இந்துக்கள், இஸ்லாமியர் ஒருவர். கத்தோலிக்கர்களுள் 10-பேர் குருக்களாகி, ஐவர், மேல்-உயர்ந்தோர். மற்றையோர் அறிஞர், கவிஞர், குடும்ப-இனத்தார், அரசியல் தலைவர்கள், நடிகர்கள், பாடகர்கள், நண்பர்கள், ஆக்கங்கள் வெளியிட உதவியோர், ஆவர்.

4. மரிய மடுமாதா காவிய மல்லிகை: (2006): ஆசிரியரின் அன்னையார் சேதுப் பிள்ளைக்கும் அண்ணனார் அதிபர் சின்னப்புநாயகத்துக்கும் காணிக்கை ஆகிய இந்நூல், 162-பக்கங்களுடன் தொகுப்பு நூலில் அடுத்து வருகிறது. 56-அத்தியாயங்களாகப் பிரிக்கப் பட்டிருக்கும் மடுமாதாவின் கதைக் கவிதைகள் வரு முன்னர், ஆசிரியரே, முற் பக்கங்களில், மருதமடு மரியமலர், காலடியில் காவியம், காணிக்கை, இறை வணக்கம், ஆயர்மணி யோசேப்புக்கு அஞ்சலி, அவை அடக்கம், குருவணக்கம், காப்பு, பாசுரம், எனும் கவிகளை எழுதியுளார்.

இடையே கவிமணி க.த. ஞானப்பிரகாசம், புலவர் ந. சிவநாதனின் இரு வாழ்த்துப் பாக்களும், ஆசிரியரின் உரை நடைப் பூக்கூடையும் மடுமாதாவின் சில படங்களும் இடம்பெறுகின்றன. நூலின் 56-அத்தியாயங்களும் நாலு பாகங்களாக அமைந்து உள்ளன. முதலாம் பாகம்: தங்கத் தாமரை (அத். 1-22); இரண்டாம் பாகம்: நெஞ்சும் நினைவும் (அத். 23-35); மூன்றாம் பாகம்: மாமரி மடியில் பூமகன் (அத். 36-42); நான்காம் பாகம்: ஈழத்து இராணி (அத். 43-56).  நூலின் உள்ளடக்கத்தில் 50 அத்தியாயங்களே இலக்கம் இட்டுத் தலை யங்கங்களுடன் உள்ளன என்பதையும், நூலின் முடிவில் இலக்கமிட்டு 51ம், 52ம் அத்தியாயங்களும், இலக்கமிடல் இன்றி ஆனால் தலையங்கங்களுடன் 53ம்-56ம் அத்தியாயங்களும் உள்ளன எனவும் கவனித்தேன்.

ஆசிரியர் அமுது, 'புலி நானூறு' எனும் ஒரு கவிதை நூலைத் தன் அடுத்த (11வது நூலாக) வெளியிடுவது எனச் சில இடங்களில் அறிவித்து இருந்தார். அந்த எண்ணத்தைத் தன் கடைசிக் காலத்தில் (நேரக் குறைவு, அரசியல் காரணங்களால் ) கைவிட்டு, அந்த நூலையும் இந் நூலுடன் சேர்க்க முடிவெடுத்து, இந்நூலின் கடைசிப் பாகங்களை (அத். 51-56) எழுதினாரோ என எண்ணுகிறேன். இதற்குரிய தடயத்தை மேலே குறிப்புணர்த்தி உள்ளேன்.

இந்நூலின் கதை, உலகின் மத்திய கிழக்குப் பிரதேசத்தில், பழைய யூதேயா நாட்டில் கன்னி மரியாவுடன், விவிலியம் நூலை (BIBLE) அண்டித் தொடங்குகிறது. பின், அவளின் நாடு ஒளியிழந்ததையும், குறைகள் பெருகி வந்ததையும், அழகான குணவதி மரியாவுக்குத் திருமணப் பேச்சு நடக்கும் நேரம் கனவில் அவளுக்கும், இன்னும் சிலருக்கும், நாட்டின் பிரச்சினைகள் தீர்ப்பதற்கு யேசுநாதர், இரட்சகராகக் கன்னி மரியாவின் வயிற்றில் பிறக்க இருக்கும் தெய்வ சங்கற்பத்தை வான தூதர்கள் வந்து அறிவிப்பதையும், பின் மரியாவுக்கும் சூசை நாதனுக்கும் மணம் நடந்து, அவர்கள் காம இச்சையைத் துறந்த தம்பதிகளாக வாழ்ந்தே, யேசுவைப் பெற்று வளர்ப்பது எனும் முடிவுடன் இன்னல்கள் பலவற்றைத் தாங்கித் தம் பாலகன் பிறந்தவுடன் கவனமாக வளர்த்தார்கள் என்ற பாரம்பரியக் கதை, சில கற்பனைத் திருப்பங்களுடன், மிகச் சுவையான மரபுக் கவிதைகளாக எழுதப்பட்டு, இந்நூலில் தொடர்கிறது.

கதையைச்சுருக்கி, எமக்கு அதிமுக்கியமான, அமுதுவின் நூதனத்-திருப்பு என்ன எனப் பார்ப்போம். யேசு வளர்ந்து, விதியின் படி வீட்டை விட்டு வெளிச் சென்று அலைந்து திரிந்து ஞானம் பெற்று, போதித்து, நோய்தீர்த்து, துரோகத்தால் பிடிபட்டுச் சிலுவையில் இறந்து, தாயின் புலம்பலால் உயிர்த்தெழுந்து அன்னை மடியில் பிரிய, அன்னைமேரி, ஈழத்து வன்னியில் மருதநிலமடுவுக்குச் சென்று, நிரந்தரமான மடு-மாதாவாகி, ஈழத்து இராணியுமாகி, இலங்கையைப் பிரிந்து தனியாட்சி நடாத்தும் தமிழீழத்துக்குக் காவற் தெய்வம் ஆகிறாள்.

நிலம், வளம், ஆணழகு, பெண்ணழகு, பல்வேறு மனித உணர்ச்சிகள், சுபாவங்கள், கொடுமைகள், அவலங்கள், அற்புதங்களை எல்லாம், ஜெருசேலத்திலும் தமிழீழத்திலும் மிகவும் அழகாக, சுவையாக, நாடக பாணியில் ஆசிரியர், பெரும்பாலும் நாலடிக்கவிதைகளிலும், சில இரட்டைவரிக் குறள்கள் கலந்தும், இலகுதமிழில், கற்பனையுடன் ஆக்கி, நாங்கள் சுவைப்பதற்குப் படைத்துள்ளார்.

'மனிதர்கள் தெய்வம் ஆகில் மாதாவின் அடியர் ஆவோம் - இனியொரு குறையும் இன்றி ஈழத்தை அவளே காப்பாள் - தனியொரு நாடே எங்கள் தாயகம் என்று வாழ்வோம் - கனியுதிர் சோலை வாழும் கண்மணி கருணை செய்வாய்! . . . ' என்ற மங்கல வாழ்த்துடன் இப் பகுதிநூல் முற்றாகிறது.
5. அமுதுவின் கவிதைகள்: இப் பகுதிநூல், முதலில் 1991இல் வெளியாகி, 20ம் நூற்றாண்டின் முடிவில் ஒன்றும், 2008இன் தொகுப்பு நூலில் ஒன்றுமாக, மூன்று பிரசுரங்கள் வெளி வந்துள்ளன. இதன் பொருளடக்கப் பக்கங்களுக்கு 'தீபத்தின் ஒளி' எனும் தலையங்கம் கொடுக்கப் பட்டுள்ளது. மொத்தம் 240- பக்கங்கள் கொண்ட இந்நூலில் (25-240 ஆகிய) 216-பக்கங்களில் அமுதரின் 113-கவிதைகள், சுமார் 400-செய்யுள்களில் அமைகின்றன. முற்பக்கங்களில் கலாநிதி சுகந்தன் இன்னாசித்தம்பியின் பதிப்புரை, 'என் நெஞ்சில் இருந்து...' எனும் தலைப்பில் ஆசிரியரின் முதற்பதிப்பு முன்னுரை, 'போய் வருகிறேன்' என்ற (இத் தலைப்பை உற்று நோக்கவும்!) 2008-பதிப்பின் ஆசிரியர் உரை, பேராசிரியர் சி. தில்லைநாதனின் 'நல்லுரை முல்லை' (விமர்சன உரை), கடைசியில் (கவிதைக் கோவை தொடங்கு முன்) ஆசிரியரின் 'துரோகிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட'  தம்பியார், கணக்காய்வாளர் ச.அ. செபரத்தினத்துக்கு நூலின் காணிக்கை, முதலியன இடம் பெறுகின்றன. 'அப்பன்', 'அன்னைத் தமிழே', 'தமிழ்த் தாய் வாழ்த்து' எனும் தொடக்கக் கவிதைகளுடன், 110-கவிதைகள் தொடர்கின்றன.

அந்த 110 கவிதைகளும், 'தேசிய பானம்' (17), 'சிந்தனைச் சந்தனம்' (35), 'முல்லையில் கிள்ளிய மொட்டுக்கள்' (20), 'நெஞ்சில் தோன்றிய நினைவுச் சுடர்கள்' (27), 'கதிரொளியில் சில ஒளிகள்' (11) என ஐந்து பகுதிகளாக, தம் கூட்டுத் தலையங்கங்களுடன் படைத்து, எமக்கு அளிக்கப் பட்டுள்ளன.
தனிக் கவிதைகளையோ கட்டுரைகளையோ விமர்சிப்பது இச்சிற்றாய்வின் நோக்கு அன்று. அமுதுவின் இலக்கியப்பணியையும் வாழ்வையும் ஒட்டுமொத்தமாகப் பார்த்து மெச்சி, முடிவில் ஏதேனும் மனதில் பதியும் சிந்தனைகளை ஆக்கப் பூர்வமாக எடுத்து உரைப்பதே, நாம் தொடங்கிய பணி. இந் நூலில் ஓர் உண்மை வெளிப்படையாகின்றது. அதாவது: காசி-ஆனந்தன், புதுவையர், யுகசாரதி போன்றோர் போல, அமுதுவும் 1990-2010 காலத்தில், தன் கவிதைகளால் ஒளிவு மறைவின்றித் தமிழீழ உரிமைப் போரை உணர்ச்சியுடன் ஊக்கும் தொண்டினைத் தானும் ஆற்றியுள்ளார் என்பதே. இந் நூலின் கவிதைகள் பல, முன்னர் பத்திரிகைகளிலும் வேறு ஏடுகளிலும் வெளிவந்தும் மேடைகளில் கேட்டும் மெச்சப்பட்டவை. சிலவற்றில் அமுதுவின் பெயர்பெற்ற, பலரறிந்து மெச்சிய விகடத் திறன் மிளிர்கிறது. மரபுக் கவிதையின் விசுவாசக் காதலனான அமுது, ஓரிரண்டு இடங்களில் 'புதுக்கவிதைக் குமரியையும்' தடவியே இருக்கிறார்.

முடிவுரை: அமுது, முறையாகத் தமிழ் கற்ற வித்துவான். தமிழாசிரியராகவும் தலைமை ஆசிரியராகவும் 40-ஆண்டுகள் சேவைசெய்து, அதற்கும் மேலாகச் சமூகத்துடன் ஈடுபட்டு, எழுதும் கலையைச் சக-முன்னோடிகளுடன் பயின்று, பத்திரிகைகள், பட்டி மன்றக் கவியரங்குகள், பொதுக் கூட்டங்கள், ஒலி-ஒளி பரப்புக்கள் மூலம் பிரபல்யமாகி, தன் காலத்து அறிஞர்கள், அரசியலாளர், கவிஞர், எழுத்தாருடன் விடாது தொடர்பைப்பேணி, 20-பட்டங்களுள் கௌரவ கலாநிதிப் பட்டமும், சமயம்சார்ந்த செவாலியர் பட்டமும் பெற்று, 2011 மாசியில், 91-வயதில் மறைந்த மூதறிஞர். ஓர் எடுத்துக் காட்டான குடும்ப-சமூகத் தலைவர். அவரின் இனிய பண்பும் விடாமுயற்சியும் அடக்கமும் விகடமும் எவரையும் கவர வல்லன. என்னையும், காந்தம் இரும்பை இழுப்பதுபோல் ஈர்த்தன.

அமுதுவின் எழுத்தாக்க எச்சங்களின் பகுத்தறிவு-அனுபவ ரீதியான என் நடுநிலை-மதிப்பீட்டில், அவரின் ஞானப்பிரகாசர் நூலும், அடுத்ததாக தெரேசா அன்னையார் நூலும், அடுத்து மடு மாதாவின் காவியமும், அடுத்தே கவிதைக் கோவையும் கால வெள்ளத்தை வென்று, தப்பி வாழும் என்பது என் ஒட்டு மொத்த, தாழ்மையான அபிப்பிராயம். வாழ்க எம் அமுதுப் புலவரின் நாமம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R