மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை பயின்று கொண்டிருந்த காலத்தில் எமக்குக் கற்பித்த பேராசிரியர்களில் எப்பொழுதும் என் நினைவில் முதலில் வருபவர் பேராசிரியர் நிமால் டி சில்வா அவர்கள். இவர் சொந்தமாகக் கட்டடக்கலைஞராகத் தொழில் பார்த்து வந்த அதே சமயம் எமக்கு 'பாரம்பர்யக் கட்டடக்கலை' என்னும் பாடத்தினையும் எடுத்து வந்தார்.
இலங்கையின் பாரம்பரியக் கட்டடக்கலை எவ்வாறு சூழல்களுக்கேற்ற வகையில் வேறுபடுகின்றது, குறிப்பாகத்தென்னிலங்கையின் பாரம்பரியக் கட்டடக்கலை பற்றியெல்லாம் விரிவாகக் கற்பித்த அதே சமயம், மாணவர்களை அவர்கள் வாழும் பகுதிகளுக்குரிய கட்டடக்கலை பற்றிய கட்டுரைகளை எழுதும்படி ஊக்குவிப்பார். நான் யாழ்ப்பாணத்துக்குரிய பாரம்பரியக் கட்டடக்கலை பற்றி, குறிப்பாக நாற்சார வீடுகள் பற்றி, பாவிக்கப்படும் கட்டடப்பொருள்கள் பற்றி எழுதிய கட்டுரையைப் பாராட்டியது இன்னும் பசுமையாக ஞாபகத்திலுள்ளது.
எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காணப்படும் இவர் மூலம் தாம் முதல் முறையாக ரோலன் டி சில்வாவின் பண்டைய அநுராதபுர நகரின் நகர அமைப்பு பற்றிய ஆய்வுக் கட்டுரையினை வாசிக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. பெளத்தர்களின் கட்டடக்கலை, நகர அமைப்பில் எவ்விதம் வட்ட வடிவம் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது என்பதைப் புரிய வைத்த கட்டுரை அது. பண்டைய அநுராதபுர நகர அமைப்பைப்பொறுத்த வரையில் நகரின் மத்தியில் சந்தையினையும், நகரைச் சுற்றி வட்ட ஒழுங்கில் ஆங்காங்கே தாதுகோபுரங்களையும் கொண்டிருந்த நகர அமைப்பாக இருந்தது என்பதைத் தனது ஆய்வின் மூலம் எடுத்துரைத்திருப்பார் அந்தக் கட்டுரையில் ரோலன் டி சில்வா.
இந்த விடயத்தில் இந்துக்களின் நகர அமைப்பு, கட்டடக்கலை ஆகியவற்றில் சதுரம் (அல்லது செவ்வகம்) வகித்த பங்கு முக்கியமானது.
பெளத்தர்கள் வட்ட வடிவத்தையும், இந்துக்கள் சதுரத்தையும் தேர்தெடுத்ததற்கு அவர்களது சமயத்தத்துவங்கள் காரணமாக அமைந்திருந்தன. வட்ட வடிவம் இயக்கத்தை உணர்த்தும். தோற்றமும், அழிவும், இரவும், பகலும் இவ்விதமாக ஒருவித வட்ட ஒழுக்கில் நகரும் காலத்தை மேற்படி வட்டவடிவம் உணர்த்தும். மேலும் இவ்வட்ட வடிவம் நாம் வாழும் பூமிக்குரிய வடிவ இயல்பையும் குறிக்கும். பொருள் முதல்வாதக் கோட்பாட்டினை அதிகம் நம்பும் பெளத்தர்கள் வட்டவடிவத்தைத் தேர்ந்தெடுத்தது ஆச்சரியமானதொன்றல்ல.
மாறாக சதுரவடிவம் ஓர் இறுதியான, தெளிவான வடிவம். வட்டத்தைப்போல் இது இயக்கத்தைப் புலப்படுத்துவதில்லை. இந்துக்கள் இப்பிரஞ்சத்தை வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு போன்ற திசைகளால் உருவான சதுர வடிவான வெளியாகவும், அவ்வெளியில் நேரத்தின் பாதிப்பை இராசிகளாலும் உருவகித்தார்கள். நவீன பெளதிகம் கூறுவதைப் போல இந்துக்களும் இப்பிரஞ்சத்தை ஒருவித வெளி-நேர (Space- Time) அமைப்பாகத்தான் விளங்கி வைத்திருந்தார்களென்பது இதிலிருந்து புலனாகின்றது. இவ்விதம் இப்பிரஞ்சத்தைச் சதுர வடிவாக உருவகித்த இந்த்துக்கள் இவ்விதிகளுக்கமைய உருவாக்கப்பட்ட கட்டடங்கள், நகரங்கள் என்பவற்றையும் சதுர வடிவாகவே (அல்லது செவ்வக) அமைத்தார்களென்பது ஆச்சரியமானதொன்றல்லதான். இவ்விதம் சதுரவடிவில் அமைக்கப்பட்ட 'வாஸ்து' புருஷமண்டலத்திற்கேற்ப நகரங்கள் அல்லது கட்டடங்கள் அமைக்கப்பட்டன..
எனக்குப் பொதுவாக நகர அமைப்புகள் மீது மிகுந்த ஆர்வமுண்டு. பேராசிரியர் நிமால் டி சில்வாவின் மேற்படி பண்டைய அநுராதபுர நகர அமைப்பு பற்றிய அறிமுகம் பண்டைத்தமிழ் நகர அமைப்புகள் பற்றியும் ஆராய வேண்டுமென்ற ஆர்வத்தை மேலும் கனன்றெரிய வைத்தன. சிறு வயதிலிருந்தே தமிழக வெகுசனப் படைப்பாளிகளான கல்கி, நா.பார்த்தசாரதி, அகிலன், ஜெகசிற்பியன், சாண்டில்யன் ஆகியோரின் வரலாற்றுப்புனைகதைகளில் விபரிக்கப்படும் நகரங்கள் பிரமிப்பினையேற்படுத்தின. இலங்கைத்தமிழர்களின் நகர அமைப்புகள் பற்றி அறிய வேண்டிய ஆவலை அவ்வப்போது ஏற்படுத்தின.
இவ்விதமானதொரு சூழலில் 'கட்டடக்கலையின் வரலாறு' என்னும் பாடத்துக்காக, இறுதியாண்டில் ஓர் ஆய்வுக் கட்டுரையினை எழுத வேண்டிய தேவை ஏற்பட்டது. அச்சமயத்தில் அதற்காக எந்தத்தலையினைத் தேர்வு செய்யலாம் என்று எண்ணியிருந்த சமயத்தில் ஒருநாள் நண்பரும் , என்னிலும் ஒரு வருடம் 'சீனிய'ருமான தனபாலசிங்கம் (தற்போது கட்டடக்கலைஞராக ஐக்கிய அரபுக் குடியரசில் பணிபுரிபவர்) அவர்களுடன் உரையாடியபோது தான் அந்த ஆய்வுக்காக நல்லூர் நகர அமைப்பு பற்றிய ஆராய விழைந்ததாகவும், ஆனால் போதிய தகவல்கள் இல்லாததால் அதனைப்பற்றி ஆராயும் திட்டத்தைக் கைவிட்டதாகவும் தெரிவித்திருந்தது என் கவனத்தை ஈர்த்தது. ஏற்கனவே இலங்கைத்தமிழர்களின் பண்டைய இராஜதானிகளைப்பற்றி, அவற்றின நகர அமைப்பு பற்றி அறிய வேண்டுமென்ற அவாவினைப் பேராசிரியர் நிமால் டி சில்வா அவர்களின் 'பாரம்பரியக் கட்டடக்கலை' ஏற்படுத்தியிருந்தது. நண்பர் தனபாலசிங்கத்தின் மேற்படி கருத்து ஏன் நல்லூர் நகர அமைப்பு பற்றி ஆராயக்கூடாது என்ற எண்ணத்தைத்தோற்றுவித்தது. அதன் விளைவாக 'கட்டடக்கலையின் வரலாறு' என்னும் பாடத்துக்காக, இறுதியாண்டில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆய்வுக்காக நான் 'நல்லூர் இராஜதானியின் நகர அமைப்'பினைத்தேர்ந்தெடுத்தேன்.
கிடைக்கப்பெற்ற வரலாற்றுத்தகவல்கள், வெளிக்கள ஆய்வுத்தகவல்கள், பண்டைய நகர அமைப்புகள் பற்றிய தகவல்களுடன் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்ற்ய ஆய்வுக்கட்டுரையினைச் சமர்ப்பித்தேன். அதே சமயம் ஈழநாடு (யாழ்ப்பாணம்) பத்திரிகையின் வாரமலரில் அது பற்றிச் சில கட்டுரைகளையும் எழுதினேன். ஈழநாடும் அவற்றைப்பிரசுரித்து ஆதரவளித்தது.
அதன் பின்னர் கனடாவில் அந்த ஆய்வு கையில் இல்லாத காரணத்தால், வைத்திருந்த தகவல்களின் அடிப்படையில், மேலும் சிறிது விரிவாக தாயகம் (கனடா)வில் நல்லூர் இராஜதானி நகர அமைப்பு பற்றித் தொடராக எழுதினேன். அதுவே பின்னர் ஸ்நேகா பதிப்பகம் (தமிழகம்)/ மங்கை பதிப்பகம் (கனடா) வெளியீடாக வெளிவந்தது. இது மேலும் சிறிது விரிவு படுத்தப்பட்டு பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் தொடராக வெளியாகியுள்ளது. எதிர்காலத்தில் நூலுருப்பெறும் வாய்ப்புள்ளது.
நல்லூர் இராஜதானி பற்றி நினைத்தால் உடனடியாக ஞாபகத்து வருபவர் பேராசிரியர் நிமால் டி சில்வா அவர்கள். ஏனெனில் இந்த ஆய்வு உருவாவதற்கு அவருமொரு காரணகர்த்தாவாக இருந்திருக்கின்றார்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.