முள்ளிவாய்க்கால் நினைவு நாள் கவிதை
வைத்தியர் சி.யமுனானந்தா
வைகாசி 18
முல்லைக்கொலைகள் - எம்
எல்லை விலைகள்
தொல்லை வலைகள் - இனி
இல்லை மலைகள்
நான் உனக்குப்பயங்கரவாதி
நீ எனக்குப் பயங்கரவாதி என்றில்லா
நாள் உனக்கு வரும் போது
நீ எனக்கு நண்பனாவாய்.
அப்பனைக்கொன்றவன் பயங்கரவாதி
அப்பனைக் கொன்றது பயங்கரவாதம்
அப்பன் கொன்றது பயங்கரவாதம்
உன்னை நீ உணர்ந்தால்
உலகை நீ உணர்வாய்
உலகை நீ உணர்ந்தால்
உவகையினை உவப்பாய்
வன்முறை வேண்டாம் இவ்வையகத்தில்
வன்முறை செய்தோர் வழிவிடுங்கள்
சமாதானமே எமக்கு சிறந்ததானம் - அதற்காக
ஏங்குகின்றோம் நாம் நயவஞ்சகர்களிடம்
சோரம் போய் அரசியலை நடத்துவதை விடுத்து
ஓரம் போய் இருந்திடுங்கள் எமக்காக என்றும்
நம்பிக்கை நமக்குண்டு நாளை நமதே என்றிட
சோர்ந்திடோம் சுறுசுறுப்பாய் மிடுக்கிடுவோம்.
மனிதநேயம் சயனிக்கும்போது
மௌனம் மௌனிக்கவேண்டும் - இதற்கு எம்
கணிதம் கவனிக்க வேண்டும்
புனிதம் அவனியில் அணிவகுக்க,
துள்ளித்திரியும் பள்ளிச் சிறார்கள் பச்சிளம் பாலகர்கள்
முள்ளிவாய்க்கால்தனில்
தாயை இழந்து தந்தையை இழந்து
உடன் உறவுகளையே இழந்து
தம்மையே இழந்து
ஆண்டுகள் ஒன்று இரண்டு உனப் பலவாயினும்
தாயில் தூவாக் குழவிபோல்
ஒயாது கூஉம் நம் தமிழ்நாடு
அடுநையாயினும் விடுநையாளினும்
அறனோ மற்று இது சிங்களத்திற்கு
அறமும் மறமும் அகன்றதுவே
உரமான எம்மினத்தின் சீர்வேரினை
கோரமான போர் அழித்ததுவே
நண்ணார் நாணுவர் நம் அழிப்பை உணரின்
நகுமின் நம்மை வஞ்சிக்கா நாளை.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
உறைந்துபோன கண்கள்
- துவாரகன் -
சொற்கள் செத்துப்போன கணங்களில்
கைகளும் கால்களும் உறைந்தன.
கண்கள் உயிரின் பாஷைகளாயின.
வெளிச்சத்தில் குறுகவும்
அதிசயத்தில் விரியவும்
பழக்கப்பட்ட கண்கள் அவை
பெருமரத்தின் கீற்றுத் துண்டுகள்
உயிர்கொண்ட கணத்தில்...
மண்ணும் கல்லும் சாந்தும்
குழைத்தெழுந்த சுவர்களுக்கு
ஈரத்தோடு உயிர்பிறந்தபோது,
மனிதர்களுக்காக கண்கள் பேசத் தொடங்கின.
எத்தனை ஜோடிக்கண்கள் பேசின
எத்தனை ஜோடிக் கண்கள் துடித்தன
எத்தனை ஜோடிக்கண்கள் இரந்தன
எத்தனை ஜோடிக் கண்கள் பார்த்துக்கொண்டேயிருந்தன.
வாழத்துடிக்கும் ஆசை அந்தக் கண்களில் இருந்தது.
கருணையை கையேந்தி இரந்துகொண்டே
பலிபீடத்தில் வெட்டுண்டு கிடக்கும்
ஆட்டின் குருதியென உறைந்திருந்தன.
சுருட்டுப்புகையோடு
ஆறுதலாய்க் கதைபேசிச் செல்லும்
'சொக்கன்அண்ணா'
ஒருநாள் மாலைக்கருக்கலில்
பனையால் விழுந்து செத்துக் கிடந்தபோது
கண்கள் மட்டும்
விழிந்தபடியே உறைந்திருந்தன.
சொற்கள் செத்துப்போன கணங்கள் அவை.
குப்பையில் தூக்கிவீசப்பட்ட
ஒரு பொம்மையைப் போலவே!
04/2012
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
ஈரக் கனாக்கள்
- எம்.ரிஷான் ஷெரீப் -
ஈரம் கசியும் புல்வெளியெங்கிலும்
நீர்ப்பாம்புகளசையும்
தூறல் மழையிரவில்
நிலவு ஒரு பாடலைத் தேடும்
வௌவால்களின் மெல்லிய கீச்சிடலில்
மூங்கில்கள் இசையமைக்கும்
அப் பாடலின் வரிகளை
முகில்கள் மொழிபெயர்க்கக் கூடும்
ஆல விருட்சத்தின்
பரந்த கிளைக் கூடுகளுக்குள்
எந்தப் பட்சிகளின் உறக்கமோ
கூரையின் விரிசல்கள் வழியே
ஒழுகி வழிகின்றன கனாக்கள்
நீர்ப்பாம்புகள் வௌவால்கள்
இன்னபிறவற்றை
வீட்டுக்குள் எடுத்துவரும் கனாக்கள்
தூறல் மழையாகிச் சிதறுகின்றன
ஆவியாகி பறவைகளோடு
சகலமும் மௌனித்த இரவில்
வெளியெங்கும்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
பயணம் தொலைத்தல்.
-சத்யஜீவா -
நிழலாடும் கதவருகில் நெடுநேரம்
கால்கடுக்க நின்றிருந்தேன்.
வியாபாரக்கூடை குடைபிடிக்க
உஷ்ணப் பெருமூச்சுடன்
வியர்வை பிசுபிசுக்க வந்து நின்றாள்.
தலைச்சுமை இறக்குகையில்
இத்தனை நேரமாயென கடிந்து பார்க்க
சும்மாட்டுத் துணியில் முகம் துடைத்தவாறே
வெறும் நமட்டுச் சிரிப்பினால் வாயடைத்தாள்.
வழிநெடுக என் இரவுக்கூத்தை ரசித்தபடி வந்தளாம்.
கலக்கியெடுத்த கடைசி கருவாட்டுத் துண்டை பறிமாறுகையில்
உதிர்த்த கள்ளப்பார்வையில்
கமகமத்தாள்.
வெகுதூரப் பயணம்சொல்லி புறப்படுகையில்
கசிந்துயென் காதருகில்
விட்டுபோவதற்கா இப்படி காத்திருந்தாயென
கைபிடித்துழுத்து மடிமீதுயெனை கிடத்திக்கொண்டு
ஒரு நிமிடம் ஒரு நிமிடமென
அறைநாளினை கடக்கச் செய்து
நொடிக்கொரு முத்தமிட்டாள்.
கைகோர்த்து விழிநோக்கி
வியர்வைதுளிகள் மிணுமிணுக்க
இருவரும் விண்மீண்கள் திரியும் வீதியில்
நிலவின் மடியில்
பயணம் தொலைத்தோம்..
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
ஜுமானா ஜுனைட் (இலங்கை) கவிதைகள்!
1. ஏய் குழந்தாய்...!
பூவில் ஒருபூவாய்
அழகிற்கோரணியாய்
அடியோ தாமரையிதழாய்
அகம்பாவம் அறியாதவளாய்
குணம் வெள்ளை நிறமாய்
குறுநகையால் வெல்வாய்
மகிழ்ந்தால்
மங்கலப்புன்னகையாய்...
மதியால்
மாநிலம்
காப்பவளாய்...
அழுதால்
ஆற்றிடை ஆம்பல் மலராய்...
அதிர்ந்தால்
நாற்றிடை நாதஸ்வரமாய்...
அயர்ந்தால்
தென்னங்கீற்றிடைப் பூவாய்
உறைவாய்.
நெற்றிப்பவளங்கள்
வியர் நீராய்...
ஓரவிழிசிந்தும் முத்துக்கள்
கண்ணீராய்...
நுரையீரல் பூங்கா தரும் இளந்தென்றல்
சிறுமூச்சாய்...
குரல் வளையில் எழுத்தாளர் தரும் கவி
ஒரு பேச்சாய்...
கதிர்க்கணைக்கு
மலர்வதனக்குடைபிடிப்பாய்...!
சிரித்தால்
ஒளிரும் திருவிளக்காய்...
திகைத்தால்
'திங்களில்' சிறுவடுவாய்...
சினந்தால்
செவ்விய ஓர் உதிப்பாய்...
சிந்தைத் தளபதி நீயானாய்..!
பணிந்தால்
அழகிய வில்லாய்...
பசிய இலைகளில்
பனியாய்...
இசைத்தால்
சுந்தரத் தமிழாய்...
ஈழத்தீவினில் தவழ்வாய்..
பூசும் நறுமண சந்தனமாய்
பூவிதழ் செதுக்கிய சித்திரமாய்
நடையில் தனிரக இலட்சணமாய்
நகைவிழியோ மின்னும் நட்சத்திரமாய்..!
முத்துப் பல் சிணுங்கும் வளையோசையாய்..!
சீருடைச் சிப்பிக்குள்
முத்தாய்...
தேரிடைப் பூவுக்குள்
தேனாய்...
நேர்த்தியாய்
பாடசாலையில் பயில்வாய்
சீரிய குழந்தாய்
சுறுசுறுப்பாய்...!
2. காலம் ஒரு கணந்தான்….! பகுதி(6)
இன்று நீ சிரித்தாய்
நேற்று ஏனழுதாய்
நாளை ஏதென்பாய்…
அதை யாரும் அறிவதில்லையே…
ஆயுள் நீண்டிருக்கும்
அதிலே குறைவிருக்கும்
நேற்று கசந்நிருக்கும்
நாளை இனிப்பிருக்கும்
யாரும் அறிவதில்லையே…
எல்லாம் முடிந்த பின்தான்
முழுமை தெரியவரும்.…,
அப்போதும் முழுதாய் அறிந்தவர் யார்
எவருமில்லையே…!
கவலை கடலளவு
மகிழ்வோ மலையளவு
செல்வம் லட்ச அளவு
சொந்தம் அதிகபட்ச அளவு
காலம் “இம்”மென்றசைந்தால்
எல்லாம் எவ்வளவு..?,
வெறும் எள்ளளவே…!
வாழும்போது வாழ்க்கை
நூற்றாண்டுகள்
போலத்தோன்றுமே
எல்லாம் முடிந்தால்
வாழ்ந்த காலங்கள்
எங்கே என்றெண்ணத் தோன்றுமே…
யுகமாய்த் தோன்றும்
கணமாய்த் தாண்டும்
இந்தக் காலங்கள் -
வாழ்க்கை நிலையே அல்ல நிஜமேயல்ல
என்று சொல்லிப் போகுமே…
நிலையாய் இருக்கும்
நிஜமாயிருக்கும்
வாழ்க்கை எங்கேயென்று
மண்ணில் வாழ்வு முடியும் போது
உண்மை தெரியுமே…!!
3. கால இயந்திரம்
“கி.பி.2012 .05.01” –
நேரம் நான்கு மணி –
அழகான பொன்வெயில் நேரம் –
புறப்படுகிறாள் அவள்
கால இயந்திரத்தில் ஏறி…
“கி.பி.1512.05.01” காலையில்
வந்து சேர்கிறாள் திரும்பி…!!
வீடதன் பக்கம் செல்கிறாள்…
வீடெங்கே தேடுகிறாள்…
தாய்தந்தை எங்கேயெங்கே…
ஆளரவம் எதுவுமில்லை…
ஆலமரம் மட்டும்
சின்னதாய் சிரித்துக் கொண்டு…!
அயல் வீடுகளும் காணவில்லை…
பக்கத்து தெருவையும் காணவில்லை…
அவள் வளர்த்த கிளிகளையும்
காணவில்லை கூண்டுடனே…!
அவள் வீட்டு முற்றத்திலே
நாட்டி வைத்த ரோஜா எங்கே
ஆவலுடன் தேடுகிறாள் –
காணவில்லை…
தோற்றுப்போய்
ஆங்கிருந்த மரநிழலில்
ஒதுங்குகிறாள் கவலையுடன்…
வேடுவர் சத்தம் தூரத்திலே
வேறு பாஷை கேட்கிறதே…
விளிப்புடன் திரும்பிப் பார்க்கிறாள் –
வீடருகே ஒலித்தோடிய அதே ஆறு…!
ஆனால் வேடுவர் கூட்டம் மட்டும்
புதிதாய் ஆங்கு…!!
சற்று மனம் தெளிந்தவளாய்
சூழலை உற்று நோக்குகிறாள் –
ஆலமர அடித்தண்டில்
முன்பிருந்த அதே பொந்து….,
பக்கத்தில் புற்றொன்றும்
சிறிதாக தெரிகிறதே…,
“தன்வீட்டு முற்றத்திலே
அமைந்திருந்த பெரும்புற்று
ஆலமரம் அஃதுடனே இவ்வாறு தெரிகிறதோ…!?”
மனம் குளிர்கிறாள்…
களி கொள்கிறாள்…
பல்லாண்டுகள் காலத்தில் பின்னோக்கி
தான் வந்துள்ளதை உணர்கிறாள் –
காலப் பயணம் செய்த சந்தோஷத்தில்
விரைகிறாள்
கால இயந்திரத்தை நோக்கி –
மறுபடியும்
நிகழ்காலத்தை அடைவதற்காய்…!!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
கலைமகள் ஹிதாயா றிஸ்வி கவிதைகள்!
1. தோழி
உன் அன்பு சொற்களின்
வார்த்தைகளால் நான் வாடி துடித்தபோது
நீ அடைந்த வலியை விட
நான் துடித்த வலி அதிகம் தோழி
இதயத்தில் இருப்பவளின்
வாயில் இருந்து இடறி விழும்
ஒரு வார்த்தையும்,
எரியும் நெருப்பை விட
உஷ்ணம் கொண்டது என
நான் இதயம் வெந்து
அழுதபோது புரிந்தது தோழி
உள்ளத்தில் வாழும் என்னுயிரே
புரிதலின் சிறு பிழையால்,
என் இதயத்தில் நுழைந்த
உன் வார்த்தையால்
நான் துடித்த துடிப்பை நினைத்து
கண் கலங்கி, உயிர் துடிக்க அழுகின்றேன் தோழி
மன்னிப்பு என்ற வார்தையால்
எனக்கு மருந்திட உன்னால் முடியாது
என்று தெரிந்தாலும்
மனம் நொந்து கேட்கிறேன்
மனதினை நொந்திடச் செய்திடாதே தோழி ...!
2. அறியும் கலை
ஓதும் திருமறை கூறும்
நல்ல பயன்கள் பெறு ..!
சூழும் வறுமை நீங்கும்
தாழ்வு மனப்பான்மை மாறும் ...!
மனம் எனும் சுவாசம்
உன்னிடம் தூய்மை நாடும்
அடித்தாலும் பிடித்தாலும் நட்பு
நடித்தாலும் நகைத்தாலும் நட்பு
வெட்டினாலும் துளித்து வளரும் மரமே நட்பு
அள்ளினாலும் குறையாத் ஊற்றே நட்பு
அன்பு எனும் ஒளிச்சுடரும்
பல்விதமாய் எங்கும் படரும்
ஒருவர் பின் ஒருவராய் தொடரும்
தொடர் சங்கிலி போல் நீளும்
உறவை பாசத்தை , தூய மனதைப்
பெற்றதை ஒப்பித்தல்!
உள்ளம் எனும் பூஞ்சோலை
எழில் கூட்டிடும் உன்நேசம்
பற்றும் பாசமும் ; அன்புக்கு
அமுதாய்த் தேவை
உறவை தேடும் உன்னை
இதயம் தேடி வருவாள் முன்னே
உள்ளத்தின் ஒளி அறியும் கலை
பள்ளத்தினின்றும் வெளிவரும் நிலை..!
3. உன் எழுத்துக்கள்
உன் எழுத்துக்கள்
மனிதனை சிந்திக்க வைகின்றது
எழுத்தாளர்களை ஞானியாக்குகிறது...
பின்னர் கவிஞராகவும் ...
எழுத்தாளராகவும் ...
என் எழுத்துக்கள்
விமர்சிக்கப்பபடுகின்ற விமர்சனங்களில்
நீ
வாழ்ந்து கொண்டிருக்கிறாய்...
உன் பார்வை வரை வந்து
உன்னால்
வாசிக்கப்படாமலேயே
என் கவிதை
காணாமல் போகின்றது
உன் அன்பை பின்பற்றுவோர் நண்பர்கள் ..
உன் பாசத்தைத்
தொட்டுணர்வோர் தோழிகள் ...
நேசித்தது நான் ....
ஆனால்
நேசிக்கப் பட்டது நீ ..!
இதயத்தை நேசித்தவளுக்கு
பிரிவினைக் கொடுப்பதற்கு
உனக்கென்ன தகுதி...?
மனதின் துயரம்
நேசித்தவளுக்கு தெரிவதில்லை
பின்னர்
உனக்கு எப்படிக் புரியும் ??
அன்பான உறவினை
உரிமையாக்க முன்னரே
தூரப்படுத்தி விடுகிறது
உன் உறவு..!
சுழலும் வாழ்க்கைச் சக்கரத்தில்
சுற்றிச்சுற்றி வந்தாலும்
உன் தூய பாசத்தை
முழுமையாக அடைய முடியவில்லை - என்றாலும்
உன்னைத் தவிர வேறொருவரை
நேசிக்கவும் மனம் ஒப்பவில்லை...
உன்னை
நேசித்துவாழ முயன்று
தோற்றுப்போன
அன்பான வார்த்தைதான்
இந்தக் கவிதை வரிகளும் ...!..
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
சாவிலிருந்து.....
மெய்யன் நடராஜ் (இலங்கை)
வார்த்தை எரிகணையை
வாழ்வில் வீசிவிட்டு
பாசாங்கு அம்புலன்ஸில்
பாசத்தோடு ஏற்றி
அனுதாப ஆஸ்பத்திரியில்
அனுமதித்துவிட்டு
அவசரமாய் போனவளே...
இதயத்தை மூடிவிட்டு
இதழ்களின் வழியாய்
வெளியேறிய உன் வார்த்தை
நாய் கடித்த காயம் மாறலாம்
அதன் வடு மாறுமோ...?
வாக்கை வாங்கி
வாக்குறுதி மாற்றி
வாக்காளன் கண்ணுக்குள்
வாழும் காலனாய்
குண்டு துளைக்காத
வாகனத்தில் செல்லும்
அரசியல்வாதிக்குப்போல்
உன் வார்த்தை
குண்டுகளிடமிருந்து
இதயம் காக்க ஒரு
கவசம் இருந்திருந்தால்
நிகழ்ந்திருக்காது
இந்த விபதது.
இப்போதுதான் புரிகின்றது
ஊமைகளை விடவும்
குருடர்களை விடவும்
செவி புலன்
படைத்தவர்களை விடவும்
செவிடர்கள்
புண்ணியம் செய்தவர்கலென்று
மனசை கொல்ல
வார்த்தை குண்டு வீசியளே...
உயிரைக் கொல்ல
கொஞ்சம் விஷம்
கொடுத்திருந்தால் போதுமடி
நான் பிழைத்திருப்பேன்
அணுவணுவாய் சாவதிலிருந்து
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
******************************************
போர்த்திய கற்பனை….
( கிழமையில் ஒரு நாள் அதிகாலை 6.30 மணிக்குப் பாலர் நிலையம் திறக்கும் நாளின் காட்சி, – கருவாக.)
வேதா. இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்.
அதிகாலை அழகு, இனிய மோனத்தில்
குதிநடையோடு வரும் தளிர் வதனங்கள்.
வெள்ளைநிறத் தளிரொன்று நீல விழிகளில்
கொள்ளையிடு மொன்று பசிய விழிகளில்.
கருமை நிறத் தளிரொன்று கரிய விழிகளில்
மஞ்சள் நிறத் தளிரொன்று மண்ணிற விழிகளில்
விழிகளின் அழகிற் பல வேறுபாடு
மொழிகளிலும் எத்தனை பல மாறுபாடு.
நிறங்களிலும் கூட இல்லை ஒருமைப்பாடு
குணங்களிலோ எல்லோரும் ஒன்று – பிள்ளைகள்
பிணங்கிப் பெற்றவரைப் பிரிகிறார் – தாக்கம்
இணங்கியும் பிரியாவிடையிறுக்கிறார் ஊக்கம்.
கோல விழிகளாற் கற்பனையிலென் கேள்விகள்
நீலவிழிகளிற்கு வனப்பு நீல மையிலா!
நீலவிழிகளிற்கு வனப்பு கரிய மையிலா!
கருவிழிகளிற்கு வனப்பு நீல மையிலா!
கருவிழிகளிற்கு வனப்பு கரிய மையிலா!
மண்ணிறவிழிகளிற்கு வனப்பு மண்ணிற மையிலா!
குற்றால அருவியாகக் காலையிசை முன்னணியில்
கற்பனை வளர்ந்தது வனப்பு விழிகளால்.
வெள்ளை நுதலின் புருவ இடையில்
வெண்ணிலாத் திலகம் ஒன்று இட்டு
வட்ட விழிகளிற்கு வடிவாக மையிட்டுக்
கத்தரித்த கூந்தலிணைத்துக் கருநாகப் பின்னலிடலாம்.
பின்னலிற்குப் பூச்சூடி இடையில் ஒரு
வண்ணச் சேலை அணிந்திட்டால் அவள்
பண்டைத் தமிழ் வாலைக் குமரியே!
ஈர்க்கும் வெள்ளைப் பெண்களை முன்பு
போர்த்திக் கற்பனையால் அலங்கரித்து ரசித்தேன்.
பொற்சிலையாய்! அச்சாயொரு தமிழ்ப் பெண்ணாய்!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
முனைவென்றி நா சுரேஷ்குமார், துளிப்பாக்கள்!
நாத்திகன்கூட
வழிபடும் கடவுள்
அம்மா
வானமங்கை இரவினிலிடும்
வெண்ணிற நெற்றிப்பொட்டு
வெண்ணிலாத் தட்டு
வானமங்கை பகலினிலிடும
மஞ்சள்நிறப் நெற்றிப்பொட்டு
சூரியன்
குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும் (துளிப்பாக்கள்)
புதுமொழி பேசும்
பொக்கைவாய்ப் புலவன்
குழந்தை
கவலைகள் இல்லாக்
கலியுகக் கடவுள்
குழந்தை
தூங்கிப்போனது குழந்தை
அழத் தயராகிவிட்டன
பொம்மைகள்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
கொத்துக்கொத்தாய்....
- பட்டுக்கோட்டை தமிழ்மதி (சிங்கப்பூர்) -
வெடிக்க வெடிக்க
வீழ்ந்தார்கள்
வீழுந்து
துடிப்பவர்களைத் தொட்டுத்தூக்க
ஓடினார்கள்
கேட்பாரற்றவர்களை
காப்பாற்ற வருபவர்களென்று
காத்திருந்து காத்திருந்து
வெடிக்கிறது வெடிக்கிறது
வெடித்ததே வெடிக்கிறது
குருதியில் சதசதக்க
சதை சகதியில்
கொத்தணிக்குண்டு விதை
விதைக்கயிலேயே அறுவடை
உயிர் உயிராய்
அறுவடைக்குப் பின்னும்
அறுவடை
அந்த கொத்துக்குண்டின் மிச்சம்
தன் கூட்டத்தை இழந்த
ஒரு குழ்ந்தையை
கொன்றுப்போட்டிருகிறது
இன்று.
இருந்தவரை கொன்று
இடம் பிடிக்க
நாளை
விதைத்தவனுக்கா அறுவடை?
எவரும்
வெடிக்க வெடிக்க
விழ வேண்டம்.
போருக்கு பின்
அமைதியில்
சத்தமாய் வெடிக்கும்
இந்தக்
கொத்துக்குண்டின்
கூட்டல் பெருக்கல் கணக்கில்
குழந்தைகள்கூட
சுழியனாய் சுழிக்கப்பட்டு
அழிக்கப்பட்டு.
காலில் பாய்ந்த குண்டு
வெடிப்பதற்குள்
காலை
வெட்டி வீசும் மருத்துவர்கள்
கண்ணெதிரே
காலை இழந்து
காப்பாற்றிக் கொண்டதாய்
கதறும் நெஞ்சம்
கொத்து கொத்தாய்
குண்டடிபடும் குழந்தைகளை
அள்ள
கையிருந்தும்
ஓட
காலில்லாமல்
கதறும் நெஞ்சம்
எல்லாம்
இக்காலதில்தான்
எமக்கு
கையிருந்தும்
காலிருந்தும்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.